Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

Featured Replies

ஒற்றுமைக்கு ஒரு உதாரணம்
--------------------------------------------

நடைமுறையில் ஒற்றுமை என்றால் என்ன என்பதை உதாரண ங்கள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றோம். சேர்ந்து வாழுதல், ஒன்று சேர்ந்து செயற்படுதல், ஒருவொருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல் , பகிர்ந்துண்ணல் என சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு ஒற்றுமைக்கு உதாரணங்களைக் கொடுக்கிறோம்.  ஒற்றுமைக்கு சிறந்த  உதாரணம் ஒன்றை  முன் வைப்பதே இக் கட்டுரையின்  நோக்கம். 

ஒன்றுகூடி வாழுதல் அல்லது சேர்ந்து வாழுதல் ஒற்றுமை எனப் பெரும்பாலானவர்கள் கருதிக்கொள்கிரார்கள். சேர்ந்து வாழுதல் அல்லது கூடி வாழுதல்  ஒற்றுமை அல்ல.   நாம் எல்லோருமே சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சேர்ந்து வாழ்தலானது குடும்பம், சமூகம், சமுதாயம், நாடு  எனப பல்வேறு படிகளில் அமைந்துள்ளது. 

இவ்வாறு சேர்ந்து வாழுதல் தவிர்க்க முடியாததாகவும் அமைந்துள்ளது. தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிடுவதற்கான காரணம் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்து வாழும் சமூகத்தில் தனது அடையாளங்களாக, கலை, கலாச்சாரம், பண்பாடு, மதம், மொழி என  எவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டானோ அவற்றைத் தொடர்ச்சியாக  நிலைப்படுத்துவதற்கு  சேர்ந்து வாழுதல் தவிர்க்க முடியாததாக அமைகின்றது.  ஆனால் எமது அடையாளங்களை நிலைப்படுத்துவதற்கு நாம் சேர்ந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறோமா? நிச்சயமாக இல்லை.  ஒரே அடையாளங்களை நாம் கொண்டிருந்தாலும் அந்த அடையாளங்களுக்குள்ளே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முரண்பாடுகளை உருவாக்கியுள்ளோம். 

சில சந்தர்ப்பங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுதல் ஒற்றுமை எனக் கருதப்படுகின்றது. ஒன்று சேர்ந்து வாழ்தலைப் போல் ஒன்று சேர்ந்து செயற்படுதலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. குடும்பம், சமூகம் என்பவற்றின் இயக்கத்திற்கு அவற்றின் அங்கத்தவர்களது முரண்பாடுகளுக்கு அப்பால் அவர்களது செயற்பாட்டின் பெறுபேறுகள் அவசியமாகின்றன. 

ஒரு குடும்பத்தின்  அல்லது சமூகத்தின்  சிறப்பு  என அளவிடப்படுவது  அதன் ஒட்டுமொத்த அங்கத்தவர்களது செயற்பாட்டின் பெறுபேறுகள்  மட்டுமே.  ஆனால், குறிக்கோளை அடைவதற்குத் தேவைப்படும் செயற்பாட்டைப் பெறுவதற்கு வெவ்வேறு அளவிலான அதிகாரம் பயன்படுத்தப் படுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் அதிகாரம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சூழலும் தனித்துவம் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.. ஒற்றுமையின் அடித்தளமே தனித்துவங்களின் சேர்க்கை தான். ஏனெனில் தனித்துவம் ஒப்பீட்டுக்கு இடமளிக்காதது. 

ஒற்றுமையின் அடித்தளமாக அமைவது ஒப்பீட்டுக்கு வாய்ப்பு இல்லாதவற்றின் இணைப்புத்தான்.  இந்த இணைப்பில் ஒப்பீடு இன்மையால் போட்டி இல்லை, பொறாமை இல்லை, முரண்பாடுகளும் இல்லை, இந்த இணைப்பின் செயற்பாட்டுக்கு தமது பங்களிப்பு   பெரியதோ அல்லது சிறியதோ என்ற அளவீடுகளும் இல்லை. இணைப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனியாக இயங்கினாலும்  சரி அல்லது கூட்டாக இயங்கினாலும் சரி ஒவ்வொரு இயக்கமும் அந்த இணைப்பின் அடிப்படை நோக்கத்திற்கான  இயக்கமாகவே அமையும்.  இத்தனை சிறப்புக்களையும் உள்ளடக்கிய உதாரணம் ஒன்று ஒற்றுமை என்பதற்கு இருக்கின்றதா என்று ஆச்சரியப் படாதீர்கள்.

எமது உடம்பு தான் ஒற்றுமைக்கு  அதி சிறந்த உதாரணம். ஒரு உடம்பு, பல்வேறு உறுப்புக்கள், உறுப்புக்களுக்கு இடையில் ஒப்பீடு இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை, சண்டை இல்லை. ஒவ்வொரு உறுப்பும் தனித்துவம் ஆனவை. அதே நேரத்தில்  உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒவ்வொரு உறுப்பினது பங்களிப்பும் அளவீட்டிற்கு அப்பாற்பட்டவை.  ஒற்றுமையின் அத்தனை அர்த்தங்களையும், சிறப்புக்களையும் கொண்டிருப்பது எமது உடம்பு தான். உடம்பே ஒற்றுமைக்கு அதி சிறந்த உதாரணம்!   
 -  
(நன்றியுடன்: KG Master)
கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள் 

தவறான கண்டுபிடிப்பு
----------------------------------

மனிதனின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் இயற்கையில் உள்ளதை உருமாற்றம் செய்வது மட்டுமே. இயற்கையால் படைக்கப்பட்டவற்றை தனது தேவைக்கேற்ப மாற்றி அமைப்பது தான் மனிதனின் செயற்பாடு. இந்த மாற்றி அமைத்தலுக்குப் பெயர் 'கண்டுபிடிப்பு' என்கிறோம். இங்கே தான் மனிதனின் திறமையின் எல்லை எது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. இயற்கையின் படைப்பில் மனிதப் படைப்பு மகத்துவமானது. மனிதப் படைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடிய படைப்பு என்று ஒன்று இல்லை.

மிகவும் தனித்துவமான படைப்பாகிய மனிதப்படைப்பு தனக்கென்றே சில தன்மைகளைப் பெற்றுள்ளது வெளிப்படையானதுதான். இருப்பினும் இந்தத் தன்மைகள் வெளிப்படுத்தப்படாமல், அல்லது வெளிப்படுத்த விரும்பினாலும் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதற்கும் மனிதனே காரணமாகின்றான். இவற்றிற்கு அடிப்படையாக அமைவது அவனது தவறான கண்டுபிடிப்புக்களே. அதிசயிக்கத்தக்க பல கண்டுபிடிப்புக்களைத் தந்துதவிய மனிதன் ஒரு சில தவறான, அசிங்கமான அறிவியலுக்கு ஒவ்வாதவற்றையும் கண்டுபிடித்துவிட்டான்.

ஆனால் உணர்வும், மூளையும், விழிப்புணர்வும் கொண்ட ஒரேயொரு இனமான மனித இனம் இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டு பிடித்ததாலோ என்னவோ அது தன்னைத் தானே கொல்லும் ஒன்றாக அமைந்துவிட்டது. அது மட்டுமல்ல ஒவ்வொருவரும் தாமாகவே அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதைப் பயன் படுத்துபவர் தன்னைத் தானே கொன்று கொண்டிருப்பதை அறியமுடியாத அளவுக்கு தனது கண்டுபிடிப்புக்குள் அகப்பட்டு அல்லற்படுபடுகின்றனர். அந்தக் கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ஒப்பீடு செய்தல் (Comparison) .

உண்மையில் மனித அறிவீனத்தின் உச்ச நிலைக் கண்டுபிடிப்புத்தான் தான் ஒப்பீடு செய்தல். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஒன்றைப்போல் இன்னொன்று படைக்கப்படுவதில்லை. கல்லாகட்டும், மண்ணாகட்டும், மரமாகட்டும், பூவாகட்டும், காயாகட்டும், விலங்குகளாகட்டும், அல்லது மனிதர்களாகட்டும். ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது. அப்படியிருக்கும்போது எதற்காக மனிதன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதைக் கண்டுபிடித்தான். நமது வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளித்தாலும் அவை எந்த விதத்திலும் எமது தனித்துவத்தைப் பாதிப்பதாக இருப்பதில்லையே. ஏனெனில் தனித்துவம் என்பது எல்லாவற்றையும் விட உயர்ந்ததல்லவா.

ஒரு மனிதனைப் போல் இன்னொரு மனிதன் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்பது எம்மால் அறியப்பட்ட ஒன்றாக இருந்தும் கூட ஏனிந்த ஒப்பீடு?. யாருடன் யாரை ஒப்பிடுகிறோம்? எப்படி இது புத்திசாலித்னமானதாக அமையும்? என்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது கோழைத்தனம் அல்லவா. அப்படியிருக்கும் போது கணவனையோ, மனைவியையோ, குழந்தைகளையோ மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யலாமா? உங்களையோ, உங்கள் கணவன் அல்லது மனைவியையோ, குழந்தைகளையோ அல்லது இன்னொரு மனித உயிரையோ உயர்வாக அல்லது தாழ்வாக ஒப்பீடு செய்து பொருத்தமாக்குவதற்கு இதுவரையில் எவரும் பிறந்ததில்லை. வாழ்ந்து கொண்டிருப் பவர்களில் எவருமில்லை. இனிமேல் பிறக்கப்போவதுமில்லை. ஒப்பீடு என்பது நாமாகக் கண்டுபிடித்துக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். நாமாகக் கைவிட்டால் அது தானாகப் போய்விடும்.

நன்றியுடன் - கேஜி மாஸ்டர்
கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

குடும்பம்- ஒரு இருபக்க நாணயம்
-------------------------------------------------

குடும்பம் ஒன்றின் உருவாக்கத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும் உறவுகளுக்கும் அடிப்படையாக அமைவது நட்பு. குடும்பம் ஒன்றின் ஆரம்ப அங்கத்தவர்களாக அமைகின்ற கணவன் என்ற ஆணும், மனைவி எனும் பெண்ணும் நட்பின் இணைப்பாக குடும்பம் எனும் அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த அமைப்பையும் அதன் ஆரம்ப அங்கத்தவர்களாகிய கணவன் மனைவியையும் நாணயம் ஒன்றின் இயல்பு மூலமாகப் பார்ப்போம்.


நாணயமானது ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக இருப்பது போல், குடும்பம் என்பது அது சார்ந்த சமூக அமைப்பின் அடையாளச் சின்னமாக அமைகின்றது. ஒரு நாணயத்தின் உட்பொருள் உலோகம். நாணயத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. குடும்பத்தின் உட்பொருள் நட்பு. கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான நட்பு. இந்த நட்பானது ஒரு குடும்பத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. உறுதியான நட்பை எந்தவிதமான இடர்களோ, அழுத்தங்களோ, எதிர்மறை விளைவுகளோ ஒன்றும் செய்து விட முடியாது. நட்பின் உறுதி குடும்பத்தின் உறுதியாகும்.


நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டது. இந்தப் பக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட, தமக்கெனத் தனித் தனியான தன்மைகளைக் கொண்ட, ஆனால் ஒன்றில் ஒன்று சார்ந்து இருக்கும் இயல்புகளைக் கொண்டவை. உதாரணமாக ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் பூவாகவும் மறு பக்கம் தலையாகவும் இருக்கும். இங்கே 'பூ' தனக்கான தனித்தன்மையையும் 'தலை' அதற்கான தனித் தன்மையையும் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. ஆனாலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும். இதே போன்றே கணவனும் மனைவியும் குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவரும் தனித்துவமானவர்கள். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாறுபட்ட தன்மைகளை உடையவர்கள். ஆனாலும் ஒருவரில் ஒருவர் சார்ந்து இருப்பார்.


மிகவும் முக்கியமான இன்னுமொரு இரகசியமும் இங்கே புதைந்து கிடக்கின்றது. அதாவது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இதன் பொருள் எந்தப் பக்கத்தைப் பார்க்கிறோமோ அந்தப் பக்கமாகிவிடு என்பது தான். அதாவது குடும்பம் என்ற நாணயத்தில் ஒருவர் மறு பக்கத்தைப் பார்க்கும் போது தனது பக்கம் முற்றாக மறைந்து விடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தூய்மையான நட்பின் அடிப்படையே தன்னை மறைத்து, மறந்து, மற்றவரை முழுமையாகப் புரிந்துகொள்வது தான்.


நாணயத்தின் பெறுமதியை நிலைநாட்டுவதற்கு இந்த இரண்டு பக்கங்களின் பங்களிப்பைப் பற்றிப் பார்ப்போம். தனித்துவம், முரண்பாடு, வெவ்வேறு பக்கங்கள் எனப் பல்வேறு இயல்புகள் இந்த இரண்டு பக்கங்களில் இருந்தாலும் நாணயத்தின் பிரதிநிதித்துவம், அதன் பெறுமதி என்பவற்றை இரண்டு பக்கங்களுமே ஒன்று சேர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கின்றன. எப்பொழுது நாணயத்தின் ஒரு பக்கம் தனது தனித்தன்மையை இழக்கிறதோ அல்லது மறு பக்கத்தை இழக்க அனுமதிக்கிறதோ அப்போது அதன் பெறுமதி இழக்கப்பட்டு 'செல்லாக் காசாக' புறக்கணிக்கப்படுகிறது. 


இவ்வாறே குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களான கணவனும் மனைவியும் அந்தக் குடும்பத்தின் பெறுமதியை நிலையாக உறுதிப்படுத்துவதற்கு தமது தனித்தன்மையையும் இழக்காமல் அதே நேரத்தில் மற்றவரது தனித் தன்மைக்கும் இழப்பு ஏற்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். ஏனெனில் ஒரு நாணயத்தின் எந்தப் பக்ககம் பெறுமதி இழந்தாலும் அது அந்த நாணயத்தின் ஒட்டு மொத்தமான பெறுமதி இழப்பாகி விடுவது போல் குடும்பம் ஒன்றில் கணவன் மனைவி இருவரில் எவர் தனது பெறுமதியை இழந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரது பெறுமதியை இழக்கச் செய்தாலும் அது குடும்பத்தின் ஒட்டுமொத்தமான பெறுமதி இழப்பாகவே அமைந்துவிடுகின்றது. 

நன்றியுடன் - கே.ஜி. மாஸ்டர்
(கனடா )

  • தொடங்கியவர்

குடும்பம் ஒரு தளம்- களம் அல்ல
-------------------------------------------------

குடும்பம் என்பது புரிந்துணர்வுக்கான தளம். போராட்டத்துக்கான களம் அல்ல. குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தவர்களான கணவன் மனைவி எனும் இரண்டு ஜீவன்களுக்கிடையே எண்ணில் அடங்காத வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அமைந்துள்ளன. இதனால் தான் தரமான குடும்ப வாழ்க்கை என்பது இந்த வேறுபாடுகளைக் கவனத்தில் கொள்ளாத வாழ்க்கைதான்.

எப்போது நாம் ஒருவரை எம்மிலிருந்து வேறுபட்டவர் என எண்ணுகிறோமோ அப்போது அவரிலிருந்து எம்மை நாம் விலக்கிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. ஏனெனில் இந்த வேறுபாடும் விலக்கலும் தான் பகைமை உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தப் பகைமை உணர்வு நாளடைவில் போராட்டத்துக்கு வழி அமைத்து விடுகின்றது. ஒரு போராடத்தின் ஆரம்ப கர்த்தா எப்போதுமே ஒரு தனி மனிதன் தான்.

ஒரு மனிதனுக்குள் ஏற்படும் பகைமை உணர்வின் விளைவு தான் போராட்டத்திற்கு விதையாகின்றது. இந்த விதை மரமாவதோ அல்லது இன்னொரு விதைக்கு உரமாவதோ தவிர்க்க முடியாததாகும். விதை மரமாகுமானால் போராட்ட வடிவத்தை அடைந்ததுவிடுகிறது. உரமானால் இன்னொரு போராட்ட விதை மரமாவதற்கு உறுதுணையாக அமைந்துவிடுகின்றது.

இதனால் தான் பகைமை உணர்வு என்ற விதை என்ன வடிவத்தை எடுத்தாலும் ஆபத்தானதே. குடும்பத்தின் தளம் நட்பு. நட்பின் தளம் புரிந்துணர்வு. புரிந்துணர்வின் தளம் நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல். நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல் என்பது உள்ளதை உள்ளபடி உள்வாங்குதல். இந்தச் சிறப்பம்சங்களை பயில்வதற்குத் தரப்பட்டுள்ள அதி சிறந்த தளம் தான் குடும்பம்.

நன்றியுடன் - கே.ஜி  மாஸ்டர்.
(கனடா )

  • தொடங்கியவர்

மனிதனின் உணவு எது?:

நாம் உண்ணும் உணவு பற்றி பல்வேறு கருத்துக்கள் எம்மிடம் உண்டு. அசைவ உணவை உண்பவர்கள் உயிர்களைக் கொல்கிறார்கள் அல்லது கொல்வதற்கு ஊக்கமளிக்கிறார்கள், இது தவிர்க்கப்படல் வேண்டும் என்று ஒருசாராரும், ‘உணவுக்காக உயிர்களைக் கொன்றுதான் ஆக வேண்டும், உயிருள்ளவற்றை உண்டு தானே உயிர் வாழ முடியும், தாவரங்களும் உயிருள்ளவை தானே, அப்படியானால் அதுவும் கொலை தானே என்று இன்னொரு சாராரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். 

ஒவ்வொரு உயிரினமும் அதன் வாழ்தலுக்காக, உயிருள்ளவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, உயிர்த் தன்மையை இழப்பதற்கு முன் உண்டு தான் வாழவேண்டும். இயற்கையானது ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் உணவாக அமைய வேண்டியதை மிகத் தாராளமாகப் படைத்திருக்கிறது. இந்தப் படைப்பின் சிறப்பைக் கூறுவதாயின் உணவாக அமைய வேண்டியதன் அளவு அதை உண்பதை விடப் பலமடங்கு அதிகமாக இருப்பது தான். அதாவது, தாவரங்களை உண்ணும் விலங்குகளை விட தாவரங்கள் மிக அதிகமாகவும், தாவர விலங்குகள் எண்ணிக்கை, அவற்றை உண்ணும் மாமிச விலங்குகளை விட மிக அதிகமாகவும் படைக்கப் பட்டிருக்கிறன. உணவுத் தட்டுப்பாடு என்பது இயற்கையில் அறவே கிடையாது.

ஒவ்வொரு உயிருக்கும் அதன் உணவை இனங்கண்டு கொள்ளும் இயல்பை இயற்கை கொடுத்திருக்கிறது. ஒரு சிங்கத்தின் உணவானது மாமிசமாகும். ஒரு மானின் உணவு தாவரமாகும். மனிதனின் உணவு?

இயற்கையின் படைப்பில் இரண்டு வகையான உயிரினங்களே இருக்கின்றன. வாழ்வதற்காக (Living nature) பிறப்பவை ஒரு வகை, வழங்குவதற்காக (Giving nature) பிறப்பவை மறு வகை. இந்த வேறுபாட்டை ஒவ்வொரு மனிதனாலும் புரிந்துகொள்ள முடியம். வழங்குவதற்காகப் பிறப்பவை அனைத்தும் தாம் வாழ்ந்து கொண்டே வழங்குபவையாகும். 

மனிதனின் தெரிவு செய்யும் தகுதியானது ஏனைய உயிரினங்களில் இருந்து அவனை வேறுபடுத்துகின்றது. இந்தத் தகுதியால் மனித இனம் உயர்ந்த உயிரினம் என்றும் கருதப்படுகின்றது. உணவின் தெரிவில் உயர்ந்த உயிரினமாகக் கருதப்படுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்? சைவ உணவு, அசைவ உணவு என்ற வேறுபாட்டை விடுத்து தனது உணவாக அமைவது வாழ்வதற்காகப் பிறந்துள்ளதா அல்லது வழங்குவதற்காகப் பிறந்துள்ளதா என்பதில் தெளிவிருந்தால் போதும். 

நன்றியுடன் KG Master.

புத்திசாலித்தனம்

ஒவ்வொரு உயிருக்கும் அதன் வாழ்வை நல்ல முறையில் வாழ்வதற்குத் தேவையான புத்திசாலித்தனம் இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதன் உள்ளடங்கலாக உயிருள்ள அனைத்திற்கும் இந்தக் கொடை கிடைத்திருக்கிறது. மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இந்தப் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வாழ்வை நல்ல முறையில் வாழ்ந்து பூர்த்தி செய்கின்றன. 

மனிதன் மட்டும் இயற்கையால் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தனத்தைப் புறக்கணித்து குழப்பமாக வாழ்கிறானே, எதனால்?

வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்கு அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவது தான் காரணம். குழந்தை பிறந்தவுடனேயே அதன் புத்திசாலித்தனம் மறைக்கப்பட்டு, மறுக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப குழந்தையை மாற்றிவிடுகிறார்கள். பெற்றோர்களும் இவ்வாறு தான் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களும் இரவல் புத்தியில் தான் வாழ்வை ஆரம்பித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தான் அதற்கான காரணமாகும்.

இயற்கை கொடுத்துள்ள புத்திசாலித்தனமானது, தனிப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவமானது. மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் ஒவ்வொன்றும் தமது இனத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமக்கென, தனித்துவமாக இயற்கையால் தரப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப வாழ்க்கையை நகர்த்துகின்றன. உதாரணமாக, ஒவ்வொரு விலங்கும் அதன் இனத்தின் பகுதியாக இருந்துகொண்டு அதற்கென கொடுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப வாழ்கிறது.

மனித இனத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் அதே வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தாலும், சாதி, சமயம், மொழி, கலாச்சாரம், பணப்பாடு, போன்ற பிரிவுகளையும் வரையறைகளையும் உருவாக்கி, வியாபாரியாகவும், வியாபாரப் பொருளாகவும் மாற்றமடைந்து, தனித்துவத்தையும். அந்தத் தனித்துவத்திற்கான புத்திசாலித் தனத்தையும் இழந்துவிட்டான்.

இருப்பினும், இயற்கை அளித்துள்ள தனித்துவத்தையும் அதற்கான புத்திசாலித்தனத்தையும் வாழ்தலின் நகர்வாகக் கொள்ளும் ஒரு மனிதன் எதற்கும் அடிமையாவதில்லை. அவனை அடிமைப்படுத்தவும் முடியாது.

நன்றியுடன் – கேஜீ மாஸ்டர்

வாழாமல் இறக்கும் உயிரினம்

மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்களுக்குக் ‘காலம்’ என்று ஒன்று இல்லை. இயற்கையின் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதால் அவை இயற்கை கொடுத்துள்ள வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றன. 

மனிதனோ இயற்கையின் அதி விசேட கொடையாகத் தனக்குத் தரப்பட்டிருக்கும் ‘தெரிவு செய்யும்’ ஆற்றலைத் தவறாகப் புரிந்து கொண்டு இயற்கையின் இயக்கத்தைக் ‘காலம்’ எனப் பெயரிட்டு நேற்றைய நினைவுகளிலும் நாளைய கனவுகளிலும் நகர்ந்து கொண்டு ‘இன்று’ என்ற அளப்பரிய கொடையை இழந்து விடுகிறான். 

‘இன்று’ வாழாத எந்த உயிரும் என்றுமே வாழ்வதில்லை. பாவம் மனிதன், இன்று வாழ்வதற்கான முழுமையான வாய்ப்பு இருந்தும் இயற்கையின் இயக்கத்துடன் இணையாமல் நினைவுகளிலும் கனவுகளிலும் சிக்குண்டு ‘இன்றை’ இழந்து வாழாமலே இறந்து போகிறான். 

- நன்றியுடன் - KG Master

  • தொடங்கியவர்

மனக்குழப்பம்

சாதாரணமாக நாம் எல்லோரும் 'மனக்குழப்பம்' என்றால் மனம் குழம்பிப்போய் இருப்பது எனக் கருதுகிறோம். எதனால் குழப்பம் ஏற்படுகிறது? மனத்தைக் குழப்புவது எது? மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்னென்ன சம்பவங்கள் அல்லது சந்தர்ப்பங்களில் மனம் குழம்புகிறது அல்லது குழப்பத்தை உண்டாக்குகிறது? ஒவ்வொரு முறையும் குழம்புவதற்கு அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சம்பவம் அல்லது சந்தர்ப்பம் காரணமா அல்லது எல்லாவகையான குழப்பத்துக்கும் ஒரே காரணமா? கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைக் குழப்புவதிலும் ஒரு காரணம் உண்டு. 


'மனக்குழப்பம்' என்பது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. தடுமாற்றம், திகைப்பு, வெட்கம், கலக்கம், அச்சம், ஆர்வமின்மை, பலவீனம், தெளிவின்மை, அமைதியின்மை எனப் பல வடிவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது. மனக்குழப்பம் என்பது வெவ்வேறான வடிவங்களைப் பெற்றிருந்தாலும் நாம் கவனத்திலும் கருத்திலும் வைத்திருக்க வேண்டிய விடயம் மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்பதுதான். இதை நாம் தெளிவாகப புரிந்து கொள்வதற்கு முதலில் 'மனம்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.


மனம் என்பது நினைவுகளின் பண்டகசாலை. நமது நாளாந்த நகர்வில் உள்வாங்கிக் கொண்ட அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் பண்டகசாலை. உதாரணமாகக் கூறுவதாயின் இது ஒரு கணணி (computer)போன்றது. ஒரு கணனியில் நாம் சேகரித்து வைக்கும் தரவுகள் போன்று எமது மனமும் தரவுகளைச் சேகரித்து வைக்கும்.

மனக்குழப்பத்தை மிகவும் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு எமது மனத்திற்கும் ஒரு கணனிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது நாம் ஒரு தரவை அல்லது பதிலை கணனியிடம் கேட்டால் அதற்குப் பொருத்தமான தரவு அல்லது பதில் ஏற்கனவே இருக்குமாயின் சரியான விடையைத் தரும். மாறாக பொருத்தமான பதில் இல்லாவிடில் 'பதில் இல்லை' என்று கூறும் அல்லது ‘கேள்வியைச் சரிபார்க்கவும்’ என்று எங்களைக் கேட்கும். உதாரணமாக, ஒரு கணனியில் ஐந்தும் எட்டும் சேர்ந்தால் பதின்மூன்று என்று பதிவு செய்திருப்போமாயின் ஏழும் ஆறும் எத்தனை என்று கேட்டால் பதில் கிடைக்காது. 

ஆனால் மனமானது தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விடயங்களில் இருந்து பல்வேறு தெரிவுகளைத் தந்து குழப்பிக்கொண்டிருக்கும். இதுவே மனக் குழப்பத்திற்கான அடிப்படையாகும். எப்படி?

மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணமாக அமைவது எமது மனம் எமது கேள்விக்கு இது தான் விடை என்பதைத் திட்டவட்டமாகத் தராதது தான். திட்டவட்டமான பதிலை மனத்தால் தரமுடியாமல் போவதற்கான காரணம் எமது கேள்விகள் ஏற்கனவே மனம் சேகரித்து வைத்திருக்கும் தகவலுடன் நேரடியான தொடர்பைப் பெறாதிருப்பது தான். வேறொருவகையில் கூறுவதாயின், கேள்விகள் புதிதாக இருக்கும் ஆனால் மனமோ பழைய தகவல்களிலிருந்து விடையைத் தேடும். இந்த நடவடிக்கையே மனக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. அதாவது நமது வாழ்க்கை புதிய கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் மனமோ பழைய தகவல்களில் விடையைத் தேடிக்கொண்டிருக்கும். 

இந்த முரண்பட்ட செயற்பாடே மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இந்தக் குழப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம் கருத்தி கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், நமது வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய கேள்வி என்பதுதான். அதாவது வாழ்க்கை ஒரு பொழுதும் ஒரு கேள்வியை ஒரு முறைக்கு மேல் முன்வைப்பதில்லை என்பது தான். கேள்விகள் புதிதாக இருப்பதால் பதில்களும் புதிதாக இருத்தல் வேண்டும். 

வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருப்பது தான் மனக் குழப்பத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும். 


நன்றியுடன் KG Master

  • தொடங்கியவர்

தொட்டில் முதல்
*************************

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற வாக்கியம் பழமையானதும் பழகிப் போனதுமான ஒன்றாகிவிட்டது. உண்மையில் இந்த வாக்கியத்தை முதல் முதல் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் என்பது எமக்குத் தெரியாவிட்டாலும் இன்று வரை இது சுமந்து செல்லப்படுகின்றது என்பது மட்டும் உண்மை. நாம் தொட்டிலில் எமது வாழ்க்கையைத் தொடங்கிய போது எந்தப் பழககத்துடனும் வரவில்லையே! யார் எமக்குப் பழக்கினார்கள்? எதைப் பழக்கினார்கள்? எப்படிப் பழக்கினார்கள்?

பழக்கியவர்கள் தாம் மறைந்த பின்னரும் அதை சுடுகாடு வரைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டார்களா? இல்லையே! அப்படியாயின் தொட்டிலில் பழகியது சுடுகாடுவரைக்கும் கொண்டு செல்லப்படுவது எப்படி? யாரால் கொண்டு செல்லப்படுகிறது? இவ்வாறான வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமல்ல எனது நோக்கம். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் பக்குவத்தை உடைய குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அவர்களை தொட்டிலில் இருந்து எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதயும் விளக்குவது தான் நோக்கம்.

முதலில், ஒரு குழந்தையின் ஆரம்பப் பழக்க வழக்கங்களின் போதகர்களாக, ஆசிரியர்களாக, வழிகாட்டிகளாக பெற்றோர்கள் அமைந்து விடுகிறார்கள். தாயின் மடியில் ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கை அதே அணைப்பின் உணர்வைக் கொடுக்கும் தொட்டிலுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. தாயின் மடியும் தொட்டிலுமாக மாறி மாறி அதன் வாழ்க்கை நகர்த்தப்படுகின்றது. இவ்வாறு நகர்த்தப்படும் காலப் பகுதியில் பல விடயங்களைக் குழந்தை கற்றுக்கொள்கிறது. கற்றலின் பெரும் பகுதி அதன் அவதானிப்பால் உள்வாங்கப்படுகின்றது. தன்னைச் சுற்றியுள்ள சக்தியின் அதிர்வலைகள் மூலம் அதன் தன்மையை உணர்கிறது. உள்வாங்குகிறது. உதாரணமாக, தாயின் குரலை அந்தக் குரல் உருவாக்கும் அதிர்வலைகள் மூலம் குழந்தை பதிவு செய்து விடுகிறது. 

பதிவு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் மீண்டும் அந்தக் குரலை கேட்கும் போது அந்தக் குரலை இனம் கண்டுகொள்கின்றது. இவ்வாறாக ஒவ்வொரு ஓசையும் முதலில் அதற்கு அதிர்ச்சி தருவதாக அமைந்தாலும் அந்த ஓசைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது குழந்தைக்கு அது பழக்கப்பட்ட ஒன்றாகி விடுகின்றது. இந்தக் கற்றலானது ஒலி சார்ந்த கற்றலாக அமைகின்றது. ஒலி அதிர்வு சார்ந்த கற்றலே குழந்தையின் ஆரம்பக்கற்றலின் ஒரு பகுதியாகும்.. குழந்தையின் அடுத்த கற்றல் நிலை ஒளி சார்ந்ததாக அமைகின்றது. இப்போது குழந்தையின் பார்வைக்கு உட்படுபவை எல்லாம் அதன் ஆழ்மனதில் படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் ஒலியையும் ஒளியையும் இணைத்துக் கொள்ளும் தகுதியும் குழந்தைக்கு ஏற்படுகின்றது. 

இப்போது அது பதிவு செய்துள்ள குரலையும் அதற்கு உரியவரது உருவத்தையும் இனங்கண்டுகொள்கின்றது. இங்கே ஒரு குழந்தையின் கற்றல் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளும் பெற்றோர்கள் ஒரு குழந்தை குறிப்பிட்ட வயதின் பின்னரே தனது கற்றலை ஆரம்பிக்கின்றது என்ற தவறான அபிப்பிராயத்தை அடியோடு அழித்துவிட்டு, குழந்தை அதன் முதலாவது மூச்சிலிருந்தே கற்க ஆரம்பிக்கின்றது என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

அடுத்ததாக, குழந்தையின் பழக்க வழக்கங்கள் பற்றிப் பார்ப்போம். ஒரு குழந்தையின் பழக்கங்கள் என்பன அந்தக் குழந்தைக்கு நாம் கொடுக்கும் பயிற்சிகள் தான். எமது ஒரு செயல் குழந்தைக்கு அது சார்ந்த ஒரு செயலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இந்த ஊக்கத்தின் வெளிப்பாடு குழந்தையின் குரல் (ஒலி) சார்ந்ததாகவும் அது உள்வாங்கிக் கொண்ட தன்மையைப் பொறுத்து தனது முகத்தின் பிரதிபலிப்பு (ஒளி) சார்ந்ததாகவும் அமையும். 

இங்கே நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் செயற்படுத்தும் போது அந்தச் செயற்பாட்டுக்கு தொடர்ச்சியாக தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டுவிடும். இது அக் குழந்தையின் பழக்கமாகி விடும். காலப் போக்கில் ஒரு குழந்தை தனக்குப் பழக்கமாக்கிக் கொண்ட ஒரு விடயத்தை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும். 

ஏனெனில் இப்போது குழந்தைக்கு அது வழக்கமாகிவிட்டது. எனவே ஒரு குழந்தை எதையெல்லாம் பழக்கமாக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதன் தொட்டில் காலத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பழக்க வழக்கங்கள் எதிகாலத்தை நிர்வகிப்பதில் எவ்வாறான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதிலும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளிடம் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் தகுதியை உருவாக்குவதில்லை. மாறாக ஏற்கனவே தாம் தொட்டிலில் நீண்ட காலம் இருந்து தமக்குப் பழக்கமாகிப் பின் வழக்கமாகி, எதிர் நீச்சல் போடுவதற்கான வலிமையை இழக்கவைத்து, தாம் அடிமைகளாக்கப்படுவதற்குக் காரணமான இரவல் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், மரபுகளையும், போலியான குடும்ப அந்தஷ்துக்களையும் தமது குழந்தைகளுக்கும் தொட்டிலிலே கற்றுக் கொடுத்து அறுபது எழுபது வருடங்களுக்குச் சுமக்கவிட்டு அப்படியே சுடுகாட்டுக்கு வழிகாட்டி விடுகிறார்கள்.

 தாம் உயிர் வாழும் காலம் வரை தமது குழந்தைகள் தொட்டிலை விட்டு இறங்குவதற்கு இந்தப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தொட்டிலிலே பழக்கப்பட்டது சுகமாகிப் போனதால் இந்தக் குழந்தைகளும் தொட்டிலைவிட்டு இறங்குவதற்கு முயற்சிப்பதுமில்லை. ஏனெனில், தொட்டிலை விட்டு இறங்கினால் எங்கே போவது, என்ன செய்வது என்ற அச்சம் இவர்களுக்கு. ஆனாலும், ஆனாலும்.... ஆனாலும், முற்றுமுழுதான உள்ளுணர்வோடு இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுவதற்குத் தகுதி பெற்றுள்ள பெற்றோர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் தான் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைச் சொந்தமாக்கித் தாமும் மற்றவர்களும் நற்பயன்களை அடைவதற்குத் தகுதி வாய்ந்த குழந்தைகளை இந்த உலகிற்குத் தருகிறார்கள்.

 இவர்கள் செய்வதெல்லாம் தமது குழந்தைகளைத் தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தி, அந்தத் தொட்டிக்குள் படிப்படியாக நீர் மட்டத்தை உயர்த்தி நீச்சலைக் கற்றுக் கொடுப்பதுதான். நீந்தப் பழகிவிட்ட குழந்தை குளத்திலும் நீந்தும் கடலிலும் நீந்தும். எதிர் நீச்சலும் போடும். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் இயல்பாகவே அமைந்துவிடும். நிகழ் காலத்தில் வாழப் பழகிவிடும். அதனால் எதிர் காலத்தைச் சொந்தமாக்கிவிடும். தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் தகுதியும் திறமையும் உருவாகும். இன்றும் நாளையும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

நன்றியுடன் - கே.ஜி  மாஸ்டர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.