Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாதல் என்பது...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சாதல் என்பது...  
பொ. கருணாகரமூர்த்தி
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி

kathai-3.jpgபெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் வெளியே உலாவரும் பன்றிகள், நரிகள், முயல்கள், கீரிகள், முள்ளெலிகள் வளவினுள் நுழைந்து கிளறாதிருக்க ஏனைய வளவுக்காரர்களைப்போல நாமும் எம் வேலியின் கீழ்ப்பகுதியை நெருக்கமான உலோகவலையால் அடைத்திருக்கிறோம்.

முப்பது வருஷங்களுக்கு முன்னர் இந்த வீட்டை வாங்கியது இன்னும் ஒரு கனவைப்போல இருக்கிறது. ஒரு ஜெர்மன்காரக் கட்டிடக் கலைஞர், தனக்காக உருவமைத்தும், பார்த்துப்பார்த்தும் கட்டியவீடு, அதில் ஆறுமாதங்கள்கூட அவர் வாழ்ந்திருக்கவில்லை, காலகதியாகிவிட்டார். அவரின் மறைவுக்குப் பின்னால் அவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேற விரும்பி இவ்வீட்டை விற்கமுயன்றபோது நாங்கள் வாங்க முயற்சி செய்தோம். வங்கிகள் அவ்வீட்டின் பெறுமதியான இரண்டு இலக்ஷம் மார்க்குகள் எமது வருமானத்துக்கு மிக அதிகம் என்றும், சொந்த முதலீடு மேலும் போடவேண்டும், அன்றேல் அத்தனை கடன் தரமுடியாதென்றும் உதட்டைப் பிதுக்கியபோது, அவுஸ்ரேலியாவிலிருந்த ஒரு பெரியம்மாவின் மகள் 50,000 டொலர்களைத் தந்து உதவினார். இன்னும் ஊரிலிருந்த இரண்டொரு காணிகளையும் விற்றதில் வீட்டை வாங்க முடிந்தது. வாழ ஆசைப்பட்டு ஒருவன் கட்டிய வீடு எமக்கானது. அவனது நஷ்டம் எமக்கு வரவானது, இதைத் தர்க்கத்தில் எப்படி வகையிடுவது. சரி நாம் யாரிடமும் அபகரிக்கவில்லையே, அதற்குண்டான கிரயத்தைச் செலுத்தித்தானே வாங்கினோமென்று சமாதானமடைந்தாலும் அப்பப்போ சிறுநெருடல் வந்து மனதை முட்டும்.

முப்பதுவருட ஜெர்மன் வாழ்க்கையில், 23 வருடங்கள் வாங்கிய வீட்டின் கடனைத் தீர்ப்பதற்காகவே உழைத் தோம் என்பது பச்சை முட்டாள்தனம் என்பது புரிகிறது. சராசரிமனிதன் அப்படித்தான் வாழ்ந்து தொலைக்கிறான்.

மாதினி வயசோடு சேர்த்து ஊளைச் சதைகளையும் ஏற்றிக் கொள்ளாததாலோ என்னவோ, சற்று இளைப்பிருந்தாலும் இந்த வயதிலும் சுழன்று சுழன்று மொத்தவீட்டோடு சேர்த்து என் அறையையும் படுக்கைகளையும் துப்புரவாக வைத்திருக்கிறாள். மகள் வாங்கித்தந்த, ஆஸ்பத்தரிகளில் இருப்பதுபோன்ற வேண்டியபடி சரிக்கவும் மடக்கவும்கூடிய கட்டிலில் படுத்திருக்கிறேன். செவிலி ஒருவர் தினசரி மாலையில் வந்து வேண்டிய ஊசி மருந்துகளை எனக்கு ஏற்றிச்செல்கிறார்.

Your problem is you think you have time. ஆனால் காலம் அதற்குள் விரைந்தோடி முடிந்துவிடும். ஒரு சுடரொன்று தள்ளாடுகிறது, அது நானாகிய தயாநிதி. எந்நேரமும் ‘அது’ இல்லாது கடந்துவிடும். என்னை நானே துரத்திக்கொண்டிருக்கிறேன். காலகதியடைதல் இப்போ எனது முறை. அதைப் பார்ப்பதற்காகவே பலர் காத்திருக்கின்றனர்.

மாதினி ஒன்றும் நான் ஒரேநாளில் கண்டெடுத்தவள் இல்லை, ஒரே ஊர்க்காரி, ஒன்றாகப் படித்தோம், காலத்தில் கல்லூரி வட்டகையில் இருந்த பல அழகிகளில் ஒருத்தி. எப்போதாவது எதிர்ப்படும் வேளைகளில் மெலிதான ஒரு மென்நகையை உதிர்ப்பாள். அவ்வளவுதான், அதோடு சரி, நின்று அவளுடன் பேச்சை வளர்த்துவதெல்லாம் இல்லை. காரணம் நான் வேறு சிறுக்கிகளின் அழகுகளையும் ஆராய்வதில் துடியாக ஈடுபட்டிருந்தேன். அழகியல் இரசனை எனக்கு அளவுக்கதிகமாக அமைந்துவிட்டது வரமா சாபமாவென இன்றுவரை உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

காதலிப்பது, அந்தக் காதலுக்காகப் போராடுவது... வாழ்வின் சிலிர்ப்பான அந்த அவத்தைகள் அனுபவித்தற்குரியவைதான். கல்லூரி வட்டகையில் மாதினியும் அழகுதான், சிவமலரும் அழகுதான், மானஸியும் அழகுதான். சதா மனம் கோதிக்கொண்டிருந்தன இந்தச் சிறுக்கிகளின் நினைவுகள். மாதினியின் முகவமைப்பு நீளவாகிலானது, போதாததுக்கு அவள் கண்கள், நாசி, நாடி எல்லாமே அநியாயத்துக்கு நீண்டிருக்கும். பரதம் பயின்றவள், ஒரு கொடியைப்போலத் தழையத்தழைய நடந்துவருவது மறக்கவொண்ணாது. மாதினி என் தங்கையின் வகுப்பில் இருந்தாள், நான் அங்கே அதிகம் வினைக்கெட்டால் விஷயம் நொடியில் அம்பலமாகிவிடும் என்பதால் முதலில் அவளை நெருங்கப் பயந்தேன்.

துடிப்புடன் கூடிய அழகான இளமைக்காலம், உடல் நிரம்பிய சக்தி, எதைப்பற்றியும் கவலைகள் இல்லை, ஒரு குழந்தையைப்போல எதைப் பார்த்தாலும் பரவசம், குதூகலம். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இல்லை. ஒரு காலம் பதிவுசெய்ய வேதியியல் பதிவுகள், நினைவில் மீட்டெடுக்கப் பல சேர்வைகளின் நிறங்கள் வேதிக்குணங்கள், மனனம் செய்யக் கொள்ளை கொள்ளையாகத் தாவரவியலில் பூச்சூத்திரங்கள் என நெடிய குவியல்கள் இருக்கும், அவற்றை மறந்துவிட்டு ஏதோ எனக்காகவே வானும் நிலவும் நட்ஷத்திரங்களும் வருவது போலவும், தென்றல் தவழ்வது போலவும், மழை தூறுவது போலவும், தரவை வெளிகளிலிருந்து இடையர்கள் மாடுகளை ஓட்டிச்செல்வது இசையாகவும், செல்லம் மாமி மீன் கழுவி ஊற்றும் பாடாவதிக் கோடிகூட உலகின் சௌந்தர்யமான முடுக்குகளில் ஒன்றைப் போலவும் ஒரு பிரமைக்குள் தோய்ந்திருந்தேன்.

திவ்யா என்று இன்னொரு அழகி, அவளின் அழகு வேறொரு தினுசு. லட்டு மாதிரி எந்தப்பக்கத்தாலும் கடிக்கலாம் போலிருக்கும். இவளா அவளா என்பதில் பலகாலம் எந்த முடிவுக்கும் வரமுடியாதவனாக நிச்சயமின்மையுடன் உலைந்தேன். மனம் பஞ்சாகத் திசைக்கெட்டும் முயற்குட்டிகள் அனைத்தின் மீதும் அலைந்து ஆய்வுகள் நடத்திக்கொண்டிருந்தது. எனக்கான விசேஷகுதிகள் எதுவும் கிடையாது, என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் ஊரில் உள்ள எந்தவொரு பயலைவிடவும் தகுதிகள் அனைத்தும் வாய்த்தவொரு பிரபுவைப்போலும், எவரையும் கண்டுக்காது எல்லோரையும் அலட்சியம் செய்வது போலொரு பாவனையுடனும் நடித்துக்கொண்டிருந்தேன்.

மாதினி சிநேகிதிகள் சேர்ந்துகொண்டால் நடந்தே வீட்டுக்குப் போய்விடுவாள். தனியேவாயின் பேருந்துக்காகக் காத்துநிற்பாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் விழவேண்டுமென்பதற்காக ஏதோ முக்கியமான பல அலுவல்களைச் சுமந்துகொண்டு ஓடியாடித் திரிபவனைப்போலக் குறுக்கும் மறுக்கும் ஒரு மிதியுந்தில் அவள் காத்திருக்கும் பேருந்து நிழற்குடையைக் குறுக்கறுப்பேன்.

அம்பலவியா, அல்போன்ஸா, கறுத்தக் கொழும்பானா, மால்கோவாவாவென்று தடுமாறியவன் கடைசியாகச் செய்ததும் ஒரு தேர்வுதான். அதையெல்லாம் இன்று அமரக்காதல் என்பது அபத்தம். அரிந்துவைத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் மாதிரி என்னை ஈர்த்துக்கொண்டிருந்த மாதினியின் கண்கள் கல்லூரியில் மதியவுணவு மண்டபத்திலிருந்து திரும்பும் வேளைகளிலும், மாணவர்கள் ஒன்றியக்கூட்டங்களின் போதுமான நுண்ணிய சந்தர்ப்பங்களிலும் என்மீது படிந்து மீள்வதைப் பலமுறை அவதானித்திருந்தேன்.

இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு அலைவானேன். இன்னும் அதைநோக்கி முன்னேறவேண்டும், சிறுமுயற்சி செய்துதான் பார்த்துவிடுவோமே, ஒருநாள் வேதியியல் ஆய்வுசாலையில் தனியாக உட்கார்ந்து ஏதோ அன்றைய பரிசோதனை ஒன்றைப் பதிவு செய்துகொண்டு இருக்கையில் போய் அமுக்கினேன்.

“இனிமேலும் எனக்குத் தாங்காது மாதினி”

“என்ன தாங்காது... ஏன் என்னாச்சு.”

ஒன்றும் புரியாதவள் மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

“நீ இல்லாமல் இனித் தாங்காது. நேரடியாய் ஒரு பதிலைச் சொல்லிடு”

“ஓ... பாஸ்கெட்போல் கோர்ட்டுக்கு சார் அநாவசியமாய் வந்து சொட்டிக்கொண்டு நிற்கும்போதே நினைச்சன்... வினை ஒன்று மெள்ள உருவாகுதென்று”

“ஒருவினையும் இல்லை. நான் நல்லாய்த்தான் இருக்கிறன்”

முன்னெப்போதை விடவும் அணுக்கத்தில் அவளது ஈச்சங்கொட்டைப் பற்களும், கண்களின் கிறக்கமும், ஈரஉதடுகளும் என்னைக் கிளர்த்தின.

“வீட்டில அறிஞ்சால் கொண்டுபோடுவினம்... போய் உங்கட அலுவலைப் பாருங்கோ” என்றாள். நிறைவான சமிக்ஞை அது. ‘அதெல்லாம் முடியாது’ என்றோ ‘சீ... போவன்றோ’ எகிறவில்லை, அந்த அளவில் திருப்தி. இப்போ முட்டுக்கட்டை ‘அவள் அம்மா அப்பாதான்’ என்றானது.

இருவருக்கும் பொதுவிதியொன்று இருந்தது, இருவருக்குமே பல்கலைக்கழக வாசல்கள் திறக்கப்படவில்லை. பல்கலைக்கழகங்களுள் நுழைவதாயின் என்ன வகையில் படித்திருக்க வேண்டும், அதற்கான பரீட்சைகளை என்ன வகையில் எதிர்கொண்டிருக்க வேண்டுமென்று இப்போது நன்கு புரிகிறது, அந்த அறிவு இனிப் பிரயோசனப்படாது. இப்போதும் கனவுகளில் ‘மருத்துவ பீடத்துள் நுழைய முடியவில்லையே’ என்கிற தவிப்பும் நிராசையும் வந்துவந்து கடைவிழிகளை ஈரமாக்குகின்றன.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

காற்றிலே மிதந்த கதைகள் என் செவியையும் வந்தடைந்தன. மாதினிக்கு சாதகங்களும் வரத் தொடங்கியிருக்காம். விஷயத்தை ஆக ஆறப்போட்டால் கனிகை மாறிவிடும், உஷாரானேன்.

நெவிஞ்சர் செல்லத்துரையர் இப்போ கல்யாணத் தரகு வேலைகளும் பார்க்கிறாரென்று இடைச்சத்தம். நேராய்ப்போய் ஆளிடம் சரணடைந்தேன்.

“ஏது லவ்வுகிவ்வென்று நீங்களும் உங்கள் பாட்டுக்குத் தொடங்கிவிட்டியளோ தம்பி... ”

“சாய்ச்சாய் அப்படியொன்றுமில்லை.”

“அப்ப பெடிச்சிக்கும் இதில சம்மதந்தானென்று அறிஞ்சிட்டீரோ... ஓமெண்டால் எப்பிடி அறிஞ்சீர்”

அனுபவஸ்தர் என் கண்களுக்குள் துழாவினார்.

“ஒன்றாய்ப் படிச்சனாங்கள்... அவவை எனக்குத் தெரியும்... ஓரளவுக்கு அவ மனதை அப்பிடி அறிஞ்சிருக்க மாட்டனே.... என்னண்ணை சொல்றியள்.”

“பிறகு என்மேல பழியொன்றும் வந்திடப்படாது... கண்டீரோ”

நெவிஞ்சர் இரண்டு பக்கமும் புகுந்து விளையாடவும் விஷயத்தைச் சூழ்ந்து பிடித்துக்கொண்ட அப்பா நேரடியாகக் கேட்கிறார்: “பெடியா... இஞ்சை வா நீயும் அந்தப் பெட்டைக்கு முதல்லயே நூல்விட்டுப் பார்த்தனியோ...”

“இல்லை, அப்பா ஏன் அப்படிச் சொல்றியள்.....”

“இல்லை ஒரு ஊகந்தான்... அவை தாங்கள் உடையார் கோத்திரமென்று கொஞ்சம் கெப்பரான ஆட்கள்... தாங்களாய் எங்க பக்கம் சாயவோ, லேசில எங்க வீடுகள்ல கை நனைக்கவோ மாட்டினம். அதுதான் யோசிச்சன்.”

kathai-4.jpg‘பெடியன் வேலைவெட்டி ஒன்றுமில்லாமல் இருக்கிறான்’ என்று முனகல் அங்கிருந்து கிளம்பவும் யாழ் மக்கள் வங்கியில் உதவிக் காசாளரானேன். முயன்றால் கிராம சேவகராவதற்கான வாய்ப்பொன்றும் வந்தது; பட்டதாரியாக இருந்தாலன்றி அதிலிருந்து மேலே வரமுடியாது. ஆயுள் முழுவதும் உழைத்தும் கிராம சேவகராகத்தான் ஓய்வுபெற வேண்டியிருக்கும். வங்கியைத் தேர்வு செய்தேன். என் மாமன் நிதிமந்திரிக்கு இருபத்தையாயிரம் தள்ளித்தான் அந்த நியமனம் கிடைத்ததென்று ஊரில் பேசிக்கொண்டார்கள். ஒருவாறு திருமணம் ஒன்றுகூடியது. விசையுந்தொன்றை வாங்கி யாழ்ப்பாணத்துக்கு வேலைக்குப்போய் வந்துகொண்டிருந்தேன். அடுத்து இரண்டு குழந்தைகள் பிறக்கவும் காசாளர் சம்பளத்தில் வாழ்க்கை வண்டியைத் தள்ளுவது சிரமமாயிருக்கவும் 1983 இனக்கலவரத்தை அடுத்துக்கிளம்பிய வெள்ளத்துடன் வெள்ளமாக ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்தோம்.

முப்பது ஆண்டுகள் கடுகிக் கடந்துவிட்டன. அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் பிறந்தன. மகனுக்குக் கனடிய அரசாங்கம் வழங்கிய புலமைப்பரிசிலால் அங்கே சென்றவன் அங்கேயே வசதியான ஒரு குஜராத்தி வணிகக் குடும்பத்துக்கு மருமகனாகிவிட்டான். நடுவில் மகள் ஐக்கிய ராச்சியத்தில் கணவனுடன் சேர்ந்து கண்ணாடிகள் அணிந்துகொண்டு முடிவில்லாத கல்வியிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறாள். என்று அவை தீருமோ, அவர்களுக்கு சமீபத்தில் பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொள்ளும் உத்தேசங்களும் இல்லை.

கடைக்குட்டி மகளுக்குப் பன்னாட்டு அரசுசாரா நிறுவனம் ஒன்றில் பணி, அவள் முழுக்கவனமும் மனித உரிமைகள், மாதர் உரிமைகள், ஏதிலியர் பிரச்சினைகள், மூன்றாம் உலகத்தின் குடிதண்ணீர்த் தட்டுப்பாடு, தானியங்கள் ரொட்டி / பாணுக்கான பஞ்சம், மருத்துவ வசதியின்மை அன்ன பிரச்சினைகளில்தான் குவிந்திருக்கின்றது. தன் சொந்த வாழ்க்கை, திருமணம் என்பவற்றில் கொஞ்சமும் கவனமோ அக்கறையோ இல்லை. அவை மனிஷருக்கு வேண்டாத சங்கதிகள் என்றிருக்கிறாள். அந்தப் பேச்செடுத்தாலே எம்சுவாதீனத்தைச் சந்தேகித்தும் வேற்றுக்கிரக

சஞ்சாரிகளைப்போலவும் எம்மைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறாள். ‘எந்தப் பசுதான் கன்றுகளுக்குப் புல்லைச் செருக்கி வைத்திட்டுச் சாகுது’ என்று மனதை ஆற்றிக்கொள்கிறோம்.

சராசரி மனிதனைவிடவும் நெடிய சீரானதொரு வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று. முதுமையின் நிலைப்படியை அண்மித்தானதும் எதுவெதுக்காக வெல்லாம் ஓடினோம் உழன்றோம் என்பதை நினைக்க சிரிப்பாக வருகின்றது. நான் சம்பாதித்துக்கொண்ட இந்த வீடு, மாதினி, எம் குழந்தைகள் இவையெல்லாம் இலாபமா நஷ்டமா சாதனையா என்னவென்று புரியவில்லை. ஒருவேளை பல்கலைக்கழகக் கல்வியோ அல்லது துறைபோந்த உயர்கல்வியோ ஏதாவது கிடைத்திருந்தால் பிரபஞ்ச சூத்திரத்தை இன்னும் மாறுபட்ட பரிமாணங்களில் நோக்கிப் புரிந்துகொண்டிருப்பேனோ என்னவோ.

வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டும் பற்றிக்கொண்டும் வாழ்ந்தோமா, பதவீசாக வாழ்கிறோமென்பதைப் பகட்டுக்காட்டி மற்றவர்களைத் திரும்பிப்பார்க்க வைத்து வாழ்ந்தோமா தெரியவில்லை. வாழ்வியக்கத்தின் வேகத்தோடு ஓடுகையில் கழன்றுவிழும் லாடங்களை நின்று நிதானமாகப் பொருத்திக்கொள்ளக் காலம் என்னை அனுமதிக்கவில்லை. வாழப்போகும் ஒவ்வொருநாளையும் முன் ஜாக்கிரதையாகத் திட்டமிட்டு வாழ மனிதனுக்கு முடிவதில்லை. அதேபோல் சாவகாசமாகப் பத்துவருஷங்கள் முன்னோக்கிப் பார்வையை எறிந்து அப்போ என்னவாகப் போவோம் என்பதையும் மனிதன் சிந்திப்பதில்லை.

பிரக்ஞையும் விழிப்புமுளபோதெல்லாம் மீட்டெடுத்தலின் நினைவு முகில்கள் மன வானில் அனைத்துத் திசைகளிலும் அலைகின்றன, நினைவுள்ளபோதெல்லாம் காமமுண்டு. காமமுளபோதெல்லாம் காதல்கள், காரிகையர் நினைப்பில்லாத நாள் ஒன்றில்லை. அழகா இளசா எவள் எதிர்ப்படினும் மனசு இன்னும் ‘ஜிவ்’வென்று குதித்தே ஓய்கிறது.

எதிரில் றிம்லெஸ் கண்ணாடி அணிந்த நாரியர் வந்தால் உடனே என்றோ கல்லூரி நாட்களில் லேனார்ட் ராஜேந்திரன் சொன்ன ‘றிம்லெஸ் கண்ணாடி அணிந்தவர்கள் எப்போதும் வளப்பமாய்த்தான் இருப்பார்கள்’ என்கிற பிரவசனம் நினைவில் பாய்ந்தோடி வருகிறது. அறிவு தாமதித்து வந்து ‘எட முட்டாள்ப் பயலே உனக்கிதிப்போ ரொம்பத் தேவைதானா’ என்கிறது.

பழைய நினைவு முகில்கள் சற்று விலகுகையில் இந்திரியங்களின் ஓய்தல் பற்றி, சாதல் பற்றி மனது அனுபவிக்க விழைகிறது. வாழ்வை நிஜமாக வீணடித் தோமா, பயன் செய்தோமா அல்லது எல்லாம் பிரமையேதானா இப்படி. காமம் இரத்தத்துக்கும் சதைக்குமுரிய இயல்பென்று ஜென், பௌத்த துறவிகள் சொல்லியிருக்கிறார்கள். காமம் கலந்தான நினைவுகள் இன்னும் துளிர்ப்பதால் இரத்தமும் சதையும் இன்னும் கெட்டிப்படவில்லையோ.

காமம் மரணத்தின் அடையாளமென்றும் ஒருத்தன் சொல்லியிருக்கிறான். பருவம்கண்ட விடலையோ செடியோ தன்னினத்தைப் பெருக்க முயல்வது உயிரியல் நியமம். காமம் மண்ணில் இனங்கள் அழியாதிருக்க இயற்கை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் சூக்ஷுமமான பொறிமுறை. மனிதன்தான் பின்னால் அதைக் காதல் கத்தரிக்காய் வசந்தம் வாழைக்காயென்று வியாக்கியானித்து மெருகுபடுத்தப் பார்க்கிறான்.

பழைய சில நினைவுகள் வந்து தொடர்பற்று அறுந்தன, காமம் பூசிய கவிதை வரிகளெனில் அநேகமாக அவை இன்னும் ஞாபகத்தில் அழியாதிருக்கின்றன.

‘முன்னர் முலையிருக்கும் காம்பிருக்காது

பின்னர் காம்பிருக்கும் முலையிருக்காது’

யாரது விக்ரமாதித்தனா, இப்போதும் சிரிக்கவேணும் போலிருக்கிறது. முயற்சித்தபோது வாய் இன்னொருதரமும் கோணுகிறது. கொடுமையாய்த்தான் இருக்கும், ஒண்ணும் பண்ணமுடியாது.

எமது வீட்டோடுசேர்த்து யாழ்ப்பாணத்தில் ஒன்பது பத்துப்பரப்புக் காணி இன்னும் மிச்சம் இருக்கிறது. சகோதரி அகல்யா, குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லாத ஒரு இடத்தில் திருமணம் செய்து கொண்டாள். அதனால் அப்பா அவளுக்குக் காணிகள் எதுவும் எழுதி வைக்கவில்லை. யாழ்ப்பாணத் தேசவழமைச் சட்டத்தின்படி பெண் பிள்ளைகளுக்குச் சீதனமாக அளிக்கப்பட்டவை போக மீதியுள்ள அசையும் அசையாச் சொத்துகள் எல்லாம் ஆண்பிள்ளைகளையே சேரும். லண்டனில் இருந்து வந்திருக்கிற அகல்யா தன்னைப் பார்க்க ஆசையாக வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் அவர் படுத்திருக்கிறார். அவளோ அந்த வீட்டையும் நிலத்தையும் தனக்கு எழுதி வாங்கிவிடும் உபாயத்தோடு விருப்பாவணம் (உயில்) ஒன்றைத் தயாரித்துக் கொண்டுவந்து எப்போ அண்ணா கண் திறப்பார், கையெழுத்தை வாங்கிவிடலாம் என்று வளைய வந்து கொண்டிருக்கிறாள். தனக்கேதோ ‘மரணமிலாப் பெருவாழ்வு’ வாய்த்திருப்பதாக நினைக்கிறாளோ ஒருவேளை.

அந்தச் சிறுவன் யாருடைய பிள்ளையோ தத்துவார்த்தமாகப் போட்ட மறக்க முடியாத விடுகதை ஞாபகத்துக்கு வருகிறது: “ஒரு பொருள் இருக்கு தாத்தா, அதை நீங்க யாருக்கும் பரிசளித்தாலும் வாங்கமாட்டாங்க, பதிலுக்கு உங்களைத் திட்டித் தீர்ப்பாங்க. கடைக்காரர் சிறப்புத் தள்ளுபடி விலையில் போட்டாலும் கஸ்டமர்கள் எவரும் ஒன்றுக்கு மூன்றாக வாங்கி வைத்துக்கொள்ள மாட்டாங்க. அது இருக்கும் கடையையே திறந்து போட்டாலும் எதுவும் திருட்டுப் போகாது. எல்லாமும் அப்படியே இருக்கும். அது என்ன தாத்தா?” புரிந்தது.

சரி, எனக்கும் 6 அடிநீளமான அந்தப் பொருளுக்குள் முகத்தை வலிக்காமல் சுழிக்காமல் ஒரு சாதுவைப்போல விகசித்துப் படுத்திருக்கத்தான் விருப்பம், நான் கோணிக்கொண்டு படுத்திருந்தவர்களை மீண்டும் பார்க்காமல் தவிர்த்திருக்கிறேன். மரணத்தைப் பற்றி மனிதன் ஒருவன் மட்டுந்தான் சிந்திக்கிறான். சுனாமியில் அள்ளுப்படவிருக்கும் விலங்குகளுக்கும் மற்றப் பிராணிகளுக்கும் அப்படியொரு விஷயம் இருப்பதே தெரிவதில்லை. இப்படி முனைந்து முனைந்து சிந்தனைகளை முன்னோக்கிச் செலுத்திக் குவிப்பதில் சமகால உபாதைகளிலிருந்து அமய விடுதலை கிடைக்கிறது. பின் மீளவும் ஒருவிசையிலிருந்து விடுபடுதல்போலும் நிகழ்வுக்கே திரும்புகிறது மனம்.

கனடாவிலிருந்து வந்த என் புத்திரனுக்கு அவனது பணியில் நிறைய பொறுப்புகள் குவிந்துள்ளனவாம், ஆதலால் முன்னைக்கு மாதிரி இப்போ விடுப்பு எடுப்பதில் கஸ்டமாம். ‘அப்பா சாகவில்லை’ என்ற ஏமாற்றத்தோடு மறுவிமானம் ஏறிவிட்டான். அப்பாவின் சிரம அவத்தையில் அவர் அருகில் இருப்பதைவிடவும் தன் குழுமத்தின் ஆதாயத்துக்காக உழைக்கவேண்டியது அவனுக்கு அவசியமாகிறது. எவ்வளவுக்குத்தான் கெடுபிடி கள் நிறைந்த குழுமமாயினும் உயர்நிலை அலுவலர் ஒருவரின் தேவையைக் கருத்தில்கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கத் தயங்காது. எவ்வளவு முயன்றும் அவன்மேல் எனக்குக் கோபம் வரவேயில்லை, எனில் ஆரம்பமுதலே அவனுக்கு எவ்விடயத்திலும் திடமான அபிப்பிராயமோ, முடிவெடுக்கும் திறனோ கிடையாது.

மனித உரிமைகளோடும், பசுமைப் புரட்சியோடும் மாயும் மகளின் குரல் அப்பப்ப அணுக்கத்தில கேட்கிற மாதிரியும் தூரத்தில் கேட்கிற மாதிரியும் இருக்கு, அதுவும் பிரமையோ என்னவோ.

தான்சானியா போவதும் எர்னஸ்ட் ஹெமிங்வே சித்திரித்த பனிபடிந்த கிளிமஞ்சரோ மலை முகடுகளில் ஏறுவதும், அதன் முடியில் சமதரையில் நெடுந்தூரம் நடப்பதுவுமான விருப்பங்கள் இன்னும் விருப்பங்களாகவே இருக்கின்றன. ஹெமிங்வே கண்ட அந்த மரங்களுடன் நான் இனிப் பேசவோ புன்னகைக்கவோ முடியாதில்லையல்லவா. நான் என்ன விண்வெளியில் பறக்கவா ஆசைப்பட்டேன்? புறப்படாமல் இருக்கிறேன். ஆனாலும் பயணம் எவ்வேளையிலும் ஆரம்பித்துவிடுவதான அவத்தைதான் இது. சுற்றம், அயலவர், தெரிந்தவர் என நிறையப் பேர் வந்திருக்கிறார்கள் இதை மின்சார தகனக் காட்டிடை சுட்டு நீரினில் மூழ்கித் தாம் வாழப் புறப்படப்போகும் நாளும் எதிர்நோக்கி. ஊர்வலம் மயானம் கிரியைகள் தகனம் எதுவும் வேண்டாமென்றுதான் உடலை மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தலாமென்று எழுதிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள்போய் அவரவர் கனவுகளைப் போர்த்திப் படுக்கட்டுமே, எதற்கு இவனுடன் சும்மா வினைக்கெடுகிறார்கள். சம்பிரதாயத்துக்காக வந்திருப்பவர்கள், வேடிக்கைக்காக வந்திருப்பவர்கள், பொழுதுபோக்க வந்திருப்பவர்கள், வந்திருந்தவர்களில் பெண்களுக்கு எப்போதும் வேறு விஷயங்களுண்டு அலச, ஆண்கள் தத்தமக்குத் தெரிந்த அரசியலைத் தமக்கு வாய்ப்பான கோணங்களில் எடுத்து வைத்து அலசிக்கொண்டிருக்கிறார்கள்.

“மாதனி ஈழம் ஒன்றும் சாத்தியமே இல்லை என்றது எனக்கு அப்பைக்கே தெரியும்... வெளியில சொன்னால் அடிப்பாங்களெண்டு மூடிக்கொண்டிருந்தனான்.” என்கிறார் ஒருவர்.

“ராஜீவ் வாங்கித் தந்ததைப் பிடிச்சுவைச்சுக்கொண்டு அதிலயிருந்து மீதி விஷயங்களுக்காகப் போராடியிருக்க வேணும்.”

“ஆயுதங்களைப் போடவேணுமென்று சொல்லிப் போட்டாங்கள், அவங்களின் தீர்ப்பை ஒத்துக்கொண்டால் ஆயுதங்களை முழுக்க ஒப்படைத்திருக்கவேணும். பிறகு யாற்றை அணியத்தைப் பிடிச்சுப் போராடுறது.”

“இயலாமல் கிழக்கை முழுக்கக் கைவிட்டம், பிறகு நாச்சிக்குடாவைத் தாக்குப் பிடிக்கேலாமல் போனதோடையாவது தலைவருக்கு எங்களுடைய பலமும் பலவீனமும் தெரிந்திருக்க வேணும். அப்போவாவது ஆயுதங்களைப் போட்டிருந்தால் இத்தனை உயிரழிவு ஏற்பட்டிருக்காது.”

“இத்தனை இழப்புகளைத் தாங்கிக் களத்தில நின்று பிடிச்சவன் லேசில அப்பிடிப்ப பணிவானோவுங்காணும்.”

“மாவிலாறை மறிச்சதிலிருந்து இவன் வம்புச் சண்டையை வலிக்கிறான், சமாதானத்துக்குத் தயாரில்லை என்கிற சமிக்ஞையைத்தான் தருகிறான் என்று அரசு சொன்னதே... கேட்டானா.”

“பாலே சிந்திப்போச்சாம்... இனி அது இருந்த பாத்திரத்தின் பவிசைப் பறைஞ்சென்ன வந்ததோய்.”

எதுவும் ஒருநாள் வேண்டாமென்றாகும் என்பதை தயாநிதி முன்னரே தெரிந்து வைத்திருந்தார். அந்தப் பிணத்தைவைத்து தன் வண்டியில் ஓயாது காடுமேடெல்லாம் இழுத்துக்கொண்டு திரிவானே அந்த மனப்பிறழ்வுற்ற மனிதன். கழன்றுவிடுவனவற்றை எல்லாம் வீணே நாம் சுமந்து திரிகிறோம் என்பதுதானே அதன் உருவகம்.

தலையில் முதலாவது நரைமுடியைக் கண்டபோது திகைத்தேன், ஆனால் முதலாவது பல் தானாக விடைபெற்றபோது திகைப்பேதும் ஏற்படவில்லை. வயதோடு சிறுபக்குவம் வந்துவிடுகிறதோ. மனதிலிருந்தும் விடுதலை விரும்பும் மனம் பிறிதொரு கணம் மனதோடும் அறம்சேர்ந்த வாழ்வோடும் துய்த்திருக்க விரும்புகிறது.

படுக்கையில் இருக்கும்போது நேரம் வேகமாக நகர்வதுபோலத் தெரியுது. மீண்டும் ஒருமாதம் ஒருவாரம் ஒருநாளென முடிவடைகிறது. மரணத்துக்கு இன்னும் அணுக்கமாகின்றோம். விடாது துரத்துகிறது மரணம். ஒரு ரமணரைப்போல மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் வாய்த்துவிடுமா. நான் எதுக்குத்தான் மரணத்துக்கு பயந்து ஒளிக்க வேண்டும். இங்கே இப்போது இந்தக் கணங்கள் என்ன ரசித்துச் சுகிப்பதுக்குரியனவா. எதுக்குத்தான் இந்த உயிர் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறதோ. நானும் ரமணரைப்போல மரணத்தைத் தைரியத்துடன்தான் எதிர்கொண்டிருக்கிறேன், ஒருகால் கோமாவுக்குப் போவேனென்றால் உடனே அனைத்து விநியோகங்களையும் துண்டித்துவிட வேண்டுமென்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறேன். அப்போ நான் இன்னும் கோமா வுக்குப் போகவில்லையா.

அஸ்தமனமும் பூத்திருக்கும்

அந்திவானத் தாரகைகளும்

என்னை அழைக்கின்றன

திரும்பி வராத கடல் பயணத்துக்கு நான் ஆயத்தமாகிறேன்

கடற்கரையில் அலைகள் ஓசை எழுப்பாதிருக்க

அமைதியில் நான் கடந்து போவேன்- Alfred Lord Tennyson

“ஒவ்வொருநாளும் போய் - வாறதும் உங்களுக்கு அலைச்சல்தான்... அவங்கள் சொன்னாலும் நீங்கள் கதைச்சு அவரை ஆஸ்பத்தரியிலேயே வைச்சிருந்திருக்கலாம்.” கருத்துக் கந்தசாமி யாரோ கருத்து அவிழ்க்கிறார்.

ஊரில் எங்கே மேளம் கேட்டாலும் ஆர் பேர் ஊரென்று விசாரிக்க முதலே ஒப்பாரி சொல்லத் தொடங்கிவிடும் பொன்னாத்தைப் பாட்டி நினைவுக்கு வருகிறார். அவரை அப்படி அழவைப்பதுதான் என்ன? செத்ததும் இரண்டு நாளைக்குக் குளறிவிட்டு மூன்றாம் நாள் எதுவும் நடக்காத மாதிரி இருக்கத்தான் போகினம். சாப்பிடுவதை, குடிப்பதை, காதல் செய்வதை, முயங்குவதை எதைத்தான் நிறுத்தப் போகினம்.

kathai-5.jpgஇனி இந்த உலகத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை எனும்போது அல்லது சேதன இந்திரியங்களினாலான இந்த உடம்பினால் எதுவுமே ஆகாது என்பதை உணரும்போது விடைபெற விரும்புவதே இயல்பு. ஆக புறப்படுவதையிட்டு வருத்தமில்லை. என்ன உயிர் தீயால் உத்தரியாது நீரால் திணறாது, பிராணாவஸ்த்தைகளின்றி ஒரு தூக்கத்தைப்போலும் ஆழ்ந்துவிடவேணும்.

“ஏதும் சொத்துகள் சுவடுகள் கையெழுத்து வைக்க கிடக்கோ”வென்று சிலர் விசாரிக்கினம். அகல்யா என்னை இன்னும் நெருங்கி வந்து நிற்கிறாள்.

பத்து வருஷங்களின் முன் 12000 யூரோக்களைக் கைமாற்றாக வாங்கி இன்னும் திருப்பாத ரகோத்தமன்கூட ஏதோ அவன் பெண்சாதி சாகப்போவதைப்போல முகத்தைக் கடுஞ்சோகமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.

பெட்டிக்குள் முறுவலித்துக்கொண்டு ஆனந்த சயனம் கொள்ளும் கோலம் நினைவுக்கு வருகிறது.

இலங்கையில் 30 வருஷங்கள் ஆட்சியில் இல்லாத வெளிநாட்டில இருக்கிற சனங்களின் காணிகளை அரசு கையகப்படுத்தக்கூடிய அபாயம் இருக்கின்றது என்கிற புரளி எழுந்தபோது சட்டென ஒன்றையும் யோசிக்காமல் என் ஒன்றிவிட்ட சகோதரர் ஒருவரின் பிள்ளையின் பேரில் எழுதிவைத்துவிட்டு வந்துதான் மாதினிக்கே தெரியப்படுத்தினேன். முதலில் எகிறி எழுந்தாள், பின் அடங்கினாள். உண்மைதான்; அவனுடைய பெயரில் அது அங்கே இருப்பதுதான் நல்லது.

“என்ன பேய் வேலையப்பா பார்த்திட்டு வந்திருக்கிறியள், பிறகு அவன் திருப்பித் தருவானென்று என்ன நிச்சயம்.”

“அவனும் எமக்கொரு பிள்ளைதானேயப்பா, இயன்றவரையில் அனுபவிக்கட்டன்.”

அவள் வெறுப்புப் பார்வை ‘எனக்கு மரை கழன்று போச்சு’ என்பதை வார்த்தைகள் இன்றிச் சொன்னது.

நினைவுகள் அனுராதபுரத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற காலத்துக்குப் போகின்றன. அனுராதபுரம் ‘பொல’வில் (சந்தை) கவிழ்த்துப் போட்ட ஒரு ஓலைப்பெட்டியில் மூன்று எலுமிச்சங்காய்களையும், ஒரு பிடி கறிவேப்பிலையையும் மட்டும் வைத்துக்கொண்டு அதை விற்பதற்காகக் காத்திருந்த கிழவியைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. கிழவியின் அத்தனை சரக்கையும் வாங்கி அவருக்கு உதவவேணும் போலிருக்கிறது இவனுக்கு. அண்ணியாரின் இழுப்புக்குச் சும்மா தேங்காய்க்கூடை தூக்கப் போனவனிடம் 50 சதம் எடுக்கக்கூடிய வசதியே இல்லை. அவருக்கு உதவ முடியவில்லையே என்கிற ஏக்கம் பல காலம் தொடர்ந்தது. முகத்தில் அத்தனை சுருக்கங்களோடும் களைப்போடும் இரக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருந்த அந்த முகம் மீண்டும் மீண்டும் வருகிறது இப்போது. வாடகை வீட்டுக்கு மின் சுற்றுகளை அமைக்க வந்த சிங்கள இளைஞன் ‘கூரைக்குள்ளே குருவி கூடு கட்டிக்கொண்டிருக்குது கூட்டை எடுத்தால்தான் மின் வயரை முகட்டுக்குள்ளால் இழுக்கலாம். அது என்னால் இயலாது, வேணுமென்றால் குருவிகள் அந்தக் கூட்டை விட்டுப்போன பின்னால சொல்லியனுப்புங்கோ வந்து செய்து தருகிறேன்’ என்று விட்டுப் போகிறான்.

மாதினி மாய்ந்து மாய்ந்து மீண்டும் வீட்டைத் துப்புரவு பண்ணுகிறாள். யார் யாரோவெல்லாம் வருகிறார்கள் போகிறார்கள், நேரம் இருப்பவர்கள் நிதானமாய் அமர்ந்து காப்பியைக் குடித்துக்கொண்டு வந்திருக்கும் மற்றையவர்களுடன் அரட்டையடிக்கிறார்கள். தும்மலைப்போல எப்போ வரும் போகுமென்று சொல்லமுடியாத அண்டை வீட்டு அரசண்ணை செமையாய்க் கீறிக்கொண்டு வந்து இவ்வளவும் மென்னிருக்கைக்குள் புதைந்து மொய்த்துக் கொண்டிருந்து விட்டு ‘அடைமழையாய்க் கிடக்கு கொஞ்சம் தணிஞ்சாப்போல போறன் என்கிறார். மழை அவருக்கு மட்டுந்தான் பெய்யுதோ, எல்லோருக்கும் சேர்த்துப் பெய்யுதோ தெரியவில்லை.

சிவமலர் என்றொரு வகுப்புத்தோழி, அக்கால நடிகை சுபாவின் சாயலில் இருப்பாள், அதனால் பையன்கள் நமக்குள் ‘சுபா’ என்கிற சங்கேதத்தாலேயே அவளைச் சுட்டுவோம். பாவம் இப்போ சிவமலரின் குழந்தைகளில் ஒன்றுக்கு இளம்பிள்ளை வாதமாம், அது விந்திவிந்தி நடப்பதை ஆயுளுக்கும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய வாதனை அவளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம். நான் சிவமலரைக் கட்டியிருந்தால் ஒருவேளை அந்தக் குழந்தை பிறக்காமல் போயிருக்கும். இப்படியாகவும் நினைவுகள் மீண்டும் உந்தின, பெண்ணே இல்லாமல் ஒரு சினிமா எடுத்துப் பாருங்கள் எவன் உட்கார்ந்து பார்ப்பான். அவள் அசைவதும் நலுங்குவதும் நளினந்தான்; அடிமுதல் முடிவரை சுகந்தரும் அதிசயத்தைக் கண்டுள்ளே அதிராத மனமும் உண்டோ. எல்லோருக்கும் பெண்தான் கண்களில் ஒற்றிக்கொள்ளத் தேவையாக இருக்கிறாள். அவளைச் ‘சீ’ என்பதுவும் தூவென்பதுவும் நடிப்பின் வகையன்றி வேறென்ன.

மனித இயக்கத்தின் எத்தனங்களெல்லாம் பொருள் சேர்ப்பது, சுகபோகங்களைத் தேடுவது பெண்களைநாடி ஓடுவது மட்டுந்தானே, அவற்றுக்கப்பால் என்னதான் உள்ளது.

மாதினியின் குடும்பத்துக்கு இருந்த செல்வாக்குக்கும் ஆதனங்களுக்கும் அவளுக்கு என்னைவிட உசத்தியான மாப்பிள்ளைகள் கிடைத்திருக்க வாய்ப்புகள் இருந்தன. நான் தனக்கேதோ வாழ்வளித்துவிட்ட நினைப்பிலிருப்பதாக மாதினி எண்ணுகிறாளோ. ஆனால் விரும்பிய ஒருவரையே கைபிடித்து வாழ ஆரம்பிப்பதுவும் ஒருவகையில் துணிச்சல்தான். எவரது விரலையும் பிடிக்காமல் தன் இஷ்டத்துக்கு ஓடும் குழந்தைகள் தடுக்கி விழுந்தாலும் அழுவதில்லை. ஒரு சினிமா பிடிக்கவில்லையென்றால் பாதியில் எழுந்துபோய்விடலாம். இது கொஞ்சம் கஷ்டமான விடயம். மணவாழ்வில் பிரிவென்பதும் முறிவென்பதும் அபத்தம். ஆனால் பெண்களில் வைக்கும் நேசம் என்பதுவும் பொய்தான், அதுக்கு தேர்வு இருக்கு. மறுக்கமுடியுமா. அல்லவெனில் அது ஏன் எல்லோரிடமும் சம அளவில் பிறப்பதில்லை. நோக்கத்துடனான நேசமே காதல். அதை அவளும் புத்திபூர்வமாக உணர்ந்துகொண்டு என்னை நிராகரித்திருந்தால்கூட கொஞ்சக்காலம் சோர்ந்திருந்துவிட்டு மனம் அடுத்துவிரும்பும் இன்னொருத்தியுடன் என் தாம்பத்யப் பயணம் தொடர்ந்திருக்கும். எதையும் நினைத்தபடி செயற்படுத்த முடிவதில்லை. இந்திரியங்களில் ஸ்மரணை வற்றுகிறது. அவையும் மெல்ல உறையத் தொடங்குகின்றனவோ... பிராணன் உறையும் வரையில் நினைவுகள் இப்படித்தான் அலையுமோ... அலையட்டும். எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.

“பழைய கூத்திக்கு அப்பப்ப மணியோடர் அனுப்பினதும் போதாதெண்டு சொத்தில ஒரு பகுதியை தானம் கொடுத்த தர்மப்பிரபு, இன்னொரு பகுதியை அசுக்கிடாமல் உறவுகொண்டாடினவைக்கு வார்த்துவிட்டவர், மிச்சமிருக்கிறதை உருவிப்போக நோட்டும் கையுமாய் நிக்கிறா ஒரு உடன்பிறப்பு.” மாதினி அதை யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியவில்லை.

கூத்தி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் எனக்கு உவப்பாயிராது, என்னை நோகடிக்கும் என்பது மாதினிக்குத் தெரியும்.

சாதுரியமாக எப்படியாவது காணியையும் வீட்டையும் எழுதுவித்துவிட வேண்டுமென்ற முனைப்பில் கையில் (உயில்) விருப்பாவணத்துடன் நிற்கும் அகல்யாவைக் கொட்டுவதற்காய் நீ எய்யும் வார்த்தைகள்தான் என்மேலும் சிந்தியதா? என் காரியம் யாவினுக்கும் கைகொடுத்தவளே, ஒரு முத்தத்தைக்கூட உன்னிடம் நான் வலிந்து பெற்றதில்லையே. இதுதானா என்மீதான உன் புரிதல். ஆரணி என்னைக் காலத்தில் அலைக்கழித்த சிறுக்கிகளில் ஒருத்தி என்பது நிஜம். ‘பணக்காரிகளின் படாடோபங்களுடன் போட்டி போடுறவள் நானில்லைப்பா’ என்பதைப்போல எளிமையாக அவள் இருந்தாலும் மினுமினுப்பான சதைப்பிடிப்புடன் சும்மா ‘கும்’மென்று இருப்பாள். என்னைக் கடக்க நேரும்போதெல்லாம் மேற்கண்ணால் அளப்பதுபோலொரு தினுசான பார்வையுடன்தான் மேற்செல்வாள். மாதினியின் சௌந்தர்யம் வேறுவகை. மாதினி பிறந்தேயிராவிட்டால் நான் ஆரணியை நெருங்கியிருப்பேனோ என்னவோ, ஆரணிக்கு என்னிடம் எதிர்வினைகள் எதுவுமிருக்கவில்லை.

ஆரணியின் அயல்வீட்டுக்காரனும் உறவினனுமான ஒருத்தன் ஜெர்மனிக்கு வந்து எங்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தபோது ஆரணிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றான், வியப்பாக இருந்தது.

வெகு இயல்பாக இரண்டொரு வியூகார்ட்களையும் எங்கள் குழந்தைகளின் படங்களையும் வைத்து அவளுக்கொரு இலிகிதம் வரைந்தேன். அவளும் அதைப் படித்துவிட்டு இயல்பாகவே பதில் எழுதியிருந்தாள். கடைசி வரியாகவும் பின்குறிப்புப் போலவும் அவள் எழுதியிருந்த வரிகள் என்னை உலுப்பிப் போட்டன: ‘மகர நக்ஷத்திரத்துக்கு பொருந்துகிற மாதிரி, பிக்கல் பிடுங்கல் இல்லாத 32 வயதுக்கு மேற்பட்ட ஆட்கள் யாரும் ஜெர்மனியில் இருந்தால் அப்பாவுக்கு விபரம் எழுதுங்கள், நன்றி.

அன்புடன் ஆரணி.’

அவளது, சற்றே வசதி குறைவான குடும்பம். ஒரு வகைக்கு இரக்கம் காருண்யம் என்று பார்த்தால் நான் ஆரணியையே மணந்திருக்க வேண்டும். என்னை அலைத்து உலைப்பதில் இவர்கள் எல்லோரைவிடவும் மாதினி முன்னணியில் நின்றாளே... நான் அதுக்கு என்ன செய்யலாம்.

“உங்கடை சாதகந்தான் தோஷமில்லாதது அசலாய்ப் பொருந்தும் அனுப்புங்கோ... அய்யாவுக்கும் ஏதோ இருதாரயோகம் பேசுதாக்கும். ”

“பாவம்டி... கிண்டல் பண்ணாதை.”

“அப்போ அவளையும் கூப்பிட்டு சைட் பிட்டா வைச்சிருக்கிறது.”

ஆரணிபற்றி மாதினி பிறகெதுவும் பேசியதே இல்லை.

அடுத்த வருடத்தில் தண்ணீரூற்றில் விவசாயி ஒருவருடன் அவளுக்குத் திருமணமாகியது. கல்யாணச்செலவுக்கு ஆயிரம் மார்க்குகள் அனுப்பிவைத்தேன்.

முப்பது ஆண்டுகள் கழித்து ஊருக்குப்போனபோது ஷெல்வீச்சொன்றில் அவனையும் பறிகொடுத்துவிட்டு நின்றாள். அரசுகொடுத்த குறைந்தபட்ச கட்டுமானப் பொருட்களில் தகரக் கூரைபோட்டு ஒரு கொட்டிலைக்கட்டிக் கொண்டு, ஊர்ப்பிள்ளைகளுக்கு டியூஷன் நடத்தி வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்தாள். அதற்கு அணித்தாக இருந்த எமது காணியில் சீமெந்தினால் 2 வகுப்பறைகளைக் கட்டி, அந்நிலத்தையும் அவர்களுக்கே நிந்தமாக எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன்.

நான் மனதறிந்து மாதினியை எதற்காகவும் அலட்சியம் செய்ததில்லை. இன்னும் ஒருவேளை அவள் சுற்றத்தை எதிர்த்து அவளைக் கவர்ந்து வந்திருந்தால் ‘என்னிடம் அடைக்கலம் வந்தவள்’ என இன்னும் மென்மையாய்த் தாங்கியிருப்பேனோ என்னவோ.

நான் ஆகிய தயாநிதி இயல்பில் பொருள், பண்டம், ஆஸ்திகளுடன் தூங்கவல்ல உலோகாயதவாதி அல்ல என்பது மாதினிக்கு நன்கு தெரியும்.

ஒரு விருந்திலோ, தொடருந்திலோ ‘அங்கே பார் ஒரு அழகியை’ என்று இன்னொருத்தியைக் காட்டினால் மற்றப் பெண்களைப் போலவே அது மாதினிக்கும் பிடிக்காது, ஆனால் அவளைக் குளிர்விக்க ‘நீயே பிரபஞ்ச அழகு ரூபிணி’ என்று அவளைப் புகழ வேண்டியதுமில்லை. என் ஒழுக்கத்தைப் பரீட்சிக்க அவள் என்றைக்கும் முயன்றதில்லை.

என்னிடம் அவளுக்குப் பிடிக்காத விடயங்கள். சற்றே முனைப்பான என் அழகியல் இரசனைகள் மற்றும் ஆய்வுகள், நான் படிக்கும் நூல்களும் (அனைத்தும் வேண்டாத கிரந்தங்கள்) மாத்திரந்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அடடா... இன்னும் நமக்குள் ஸ்ருதி சேராத விஷயங்கள் ஏதும் மீதி இருந்திருக்கின்றனவா, சொல்லு மாதினி, மனதில் எதை வைத்து இந்த வார்த்தைகளைக் கொட்டினாய்.

பிரக்ஞையோடிருந்த காலை ஒரு முணுமுணுப்போ, உதட்டுச் சுழிப்போ இல்லாதிருந்த நீயா அவ் வார்த்தைகளைச் சிந்தியது. சாதா ஸ்திரீகளைப்போலும் உலோகாயத வாஞ்சை உன்னையும் தியக்கத்தில் ஆழ்த்திவிட்டதா.

இந்திரியங்களின் ஸ்மரணை உறைய உறைய மாதினியின் குரலின் அலைகள் ஆழக் கிணற்றிருந்து வருவதுபோல் ஒன்றிலொன்று மோதி எதிரொலித்து பின்னி நொய்து தேய்ந்து தீய்கின்றன.

அப்போதுதான் நான் சாகத்தொடங்கினேன்.

http://www.kalachuvadu.com/issue-187/page64.asp

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.