Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழறின் ஓகமும் இன்றைய வணிக யோகாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாவில் கொள்கைத் தம்தொழில்

தமிழர் மரபில் ஓகம்

நாள்: 23.07.2015

     ‘அனைத்துலக யோகாதினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்வு கடந்த 21.06.2015 அன்று மேட்டுக்குடித் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஊரறிய, உலகறிய மேடை போட்டு ஊடக வெளிச்சத்தில் உடற்பயிற்சி செய்து காட்டிய ஆளுமைகள் பெருமைப் பட்டுக் கொண்டனர் ‘இது’ உலகிற்கு இந்தியாவின் கொடை என்று ! மகிழ்ச்சி !

     உலகிற்கு இந்தியாவின் கொடையாகிப் போன பல அடையாளங்கள் இந்தியாவிற்குத் தமிழர்களின் கொடை என்ற உண்மையை மட்டும் பலரும் பேச மாட்டார்கள். அது அவர்களது கரவான உள்ளம்.

     இதில் தமிழர்களுக்குத் தனித்த பார்வை இருக்கிறது. இதுவரை இல்லையென்றால் இனிமேல் தேவைப்படுகிறது. முதலில், தமிழர்கள் இதனை ‘யோகா’ என்று சொல்வது தவறு. சுருட்டுப் பிடிக்கிறவன் வாயைத் திறந்து புகை விடுவது போல ஒரு ஒலிப்பு! தொண்டைக் குழியில் மோவாய்க் கட்டையைப் பதித்துக் கொண்டு தாடை சிலிர்க்குமாறு ஒரு ‘க’ ஒலிப்பு, தொண்டைக்கட்டுக்கு உப்புத் தண்ணீர் கொப்பளிப்பதைப் போல இன்னொரு ஒலிப்பு! இவ்வாறு யோகா யோகா என்று சொல்லும் போதே மூச்சும் மூச்சு முறையும் பாழ்பட்டு விடும்.

     ‘யோகா’ என்பது இன்று வரை 1½ லட்சம் கோடி உரூபாய் புரளும் உலகளாவிய வணிகத்தின் சந்தைப் பெயராக உள்ளது. வேதாத்திரி கூட யோகா என்று தான் விளம்பரப்படுத்தினார். ‘அம்’ என்று முடித்தால் ஒன்றும் வாய் வெந்து விடாது. ஆனால் வயிறு நிறையாது. ‘ஆ’ போட்டுக் கொள்ள முடியாது. ஒருவனும் டாலரில் ஊட்ட மாட்டான்.

     உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் ஒருங்கிணையும் நுட்பத்தை ஆசான் மாணாக்கன் முறையில் நெடுங்காலமாகக் காப்பாற்றி வந்த தமிழர்கள், அது தொடர்பான பல உண்மைகளை மொழிக்குள் புதைத்து வைத்துள்ளனர்.

     மூச்சுக்காற்றை அளந்து வெளிவிடும் தமிழர்கள் மாந்த இனம் மட்டும் இன்றி, உடன் வாழும் அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்கும் வாழ்வியலை வடிவமைத்தனர் எனல் மிகையன்று. அத்தகைய வாழ்வியலுக்குப் பழகிய மரம், செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள் என அனைத்தும் பெற்ற பயிற்சியை முழுப் புரிதலோடு செய்து கொண்டு இருக்கின்றன. மாந்தன் மட்டுமே அதில் திரிபுகளை ஏற்படுத்திச் சீரழிக்கிறான்.

     கட்டுதல் என்றாலே காற்றைக் கட்டுதல் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேலேற்றி (திருமந்திரம் 245-1)

     ஓகம், ஓர்கம், ஓர்மை என அனைத்துமே ஒரு வகைத் தவமுயற்சிக்கான அடிப்படைப் பயிற்சிகளே. தவ முயற்சியென்பது இயற்கையின் போக்கில் தன்னை மெள்ள மெள்ள இணைத்துக் கொண்டு வீடு பேறு அணைவது. உடலை விடுத்து இயற்கையில் கலப்பது.

கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர் (திருமந்திரம் 711-1)

     மரணத்தை வென்று மீண்டும் பிறப்பெடுக்காமல் இருப்பது என்று விரிகிறது.

     நாடு பேறு அடைந்தவன் அடுத்த கட்டமாக வீடுபேறு அடையலாம். நாடற்றவன் முதலில் நாடு பேறு அடைய வழி தேடி மூச்சுப் பிடிக்க வேண்டும். மூச்சைப் படிக்கவும் வேண்டும்.

     நாடு பேறு அடையாமல் வீடு பேறு அடைய வழி கூறுகிறவன் மற்கலி போன்ற அயன்மைப் பார்வையுடைய துறவியர் – என்று சாடுகிறார் மணிமேகலை. தமிழ்ப்புத்தாண்டினைக் குறிவைத்துப் பெற்ற ஆசில் வாகை வேறு, சமணப் பார்வை வேறு.

மாலைப் போதில் ஒரு மயிரும் அறியார்

சாலத் திரள் மயிர் சாற்றுதல் சாலும்

...............மற்கலி நூலின் வகையிது

எனக் குறிப்பிடும் மணிமேகலை தமிழர்களின் அறிவு மரபை அக்காலத்தில் மீட்டெடுத்த பெரும் போராளி.

     அவள் நோன்பு பயின்று இருக்கலாம். வேறு உடற் பயிற்சிகளை அவளது அகவையில் மேற்கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் உருவை மறைத்துக் கொள்ளும் ஆற்றலைத் தமிழால் பெற்றாள்.

     இது ஒரு தொன்மையான கலை என்பதில் ஐயம் இல்லை. அது மறைந்து வருகிறது என்பதும் அது பற்றிய நூல் மரபுச் செய்திகள், சித்தர் பாடல்கள் பட்டறிவின் உத்திகள் போன்றவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. இதில் தமிழர்கள் தமது ஊற்றம் அறியாமல் கலங்கல் நீரோடு கலக்கும் தெளிந்த நீர் போல அடையாளம் இழந்து வருகின்றனர் என்பது மட்டுமே கவலையளிக்கிறது.

     ஓகப் பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைகிறது என்று பலரும் கூறுகிறார்கள். யாருக்கு மன அழுத்தம் குறைய வேண்டும் என்பது பெருங்கேள்வி. உலக நன்மைக்காக யாருக்கு மன அழுத்தம் குறைய வேண்டுமோ அவர்களுக்குத்தான் ஆறுதல் தேவை. அந்தப் புரிதல் வழிப்பட்ட ஓக நடைமுறையினையே தமிழர்கள் கையில் எடுக்க வேண்டும்.

     தமிழர்கள் ஆய்வுக்காக எதனை முயற்சிப்பதிலும் தவறு இல்லை. எதனைப் பின்பற்றுகிறார்கள் என்பதில் தெளிவான புரிதல் தேவை. எதனை அடுத்த தலை முறைக்காகப் போதிக்கிறார்கள் என்பதில் விழிப்புத் தேவை.

     திருக்குறள் ஒரு அறநூல். திருமந்திரம் ஓகம் பற்றிய நெறிமுறைகளைக் கூறும் பயிற்சிக் கையேடு. திருமுருகாற்றுப்படை ஒரு மந்திர நூல். இவற்றைத் தொல்காப்பியம் முதல் மணிமேகலை ஈறாகப் பட்டியலிடப் பெற்றுள்ள 41 செவ்விலக்கியங்களின் உதவியுடன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவை அனைத்து வினாக்களுக்கும் இனப் பார்வையில் விடைதரும் என்று நம்பலாம்.

     இந்த முயற்சியில் ஈடுபடுவோரைத் தமிழ் மொழியே கையைப் பிடித்து அழைத்துச் செல்லும். இறுதியில் உட்கார வைத்துப் பாடம் எடுக்கும். நன்றாக விழித்துப் பார்த்தால் அது ஒரு பாவை என்று தெரிய வரும். ஆய்வு தேவை இல்லை அது தமிழ்ப் பாவை.

வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை

செம்பவளத் திருமேனிச் சிறுமியை

நம்பினேன் உள்ளே நயந்து வைத்தேனே ! (திருமந்திரம்-10582-4)

     அந்தத் தமிழ்ப் பாவையை நயந்து தவம் இயற்றுவோர் ஒரு போதும் பிறழ்ந்து விடமாட்டார்கள். அது இயற்கையின் மாபெரும் திறம். அது மாவண் தமிழ்த்திறம் ஆகும். தமிழர்களுக்குத் தமிழர்தம் மூதாதையர் வழிச் சொத்து.

கதிரவனை வணங்குதல்:

     போற்றுதற்குரிய கதிரவனின் வருகையும் பகற்செயல் பாடும், மாலை மறையும் அழகும், பரிப்பும் நீத்தமும் உள்ளது உள்ளவாறு விளங்கிக் கொள்ளல் பட்ட தமிழர்களால் கதிரவன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறான் என்பதுவே வியப்பான உண்மை. புத்தாண்டு நாளில் படையல் இட்டுப் பரவும் தமிழர்கள் கதிரவன் உடனான போரில் அவனை வென்று அந்த வெற்றியையே கொண்டாடுகின்றனர் என்பது உற்று நோக்கத்தக்கது.

     கதிரவனைப் பயன்கொள்ள வேண்டுமே தவிர வணங்கி நின்று தமது ஆற்றலை இழக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் ஆணுக்கு ஆண்மைக்குறைவும் பெண்ணுக்குப் பெண்மை குறைவும் ஏற்படும். இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அயன்மை இனப் பார்வை கலவாத பழந்தமிழைப் பயின்று பயின்று விளங்கிக் கொள்ளலாம், மேலோட்டமாகப் பார்த்தால் ஓகப் பயிற்சிகள் எவையும் குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் தேவையே இல்லை. உடல் வளர்ச்சி சரியத் தொடங்கும் போது இழுத்துப் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.

     தஞ்சைப் பெரிய கோயிலில் நாள் ஒன்றுக்கு ஒருவேளை மட்டும் முக்குறுணி நெல்லின் சோறு உண்டு அங்கேயே தங்கி 10 பேர் கொண்ட குழுவினர் 24 குழுக்களாக ஆண்டு முழுவதும் மேற்கொண்ட ஓகப்பயிற்சியானது வானவியல் அடிப்படையில் உலக உருண்டையின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது என்றும் ஆண்டு நாட்கள் 360-ல் 12 முழு நிலவுகளும் ஒழுங்காக முறை முற்றித் தோன்றின என்றும் 12 சதய விழாக்கள் கொண்டாடப்பட்டன என்றும் அவற்றுள் ஒரு தைச் சதயம் தை முதல் நாளில் ஆட்டைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது என்றும் அசைக்க முடியாத கல்வெட்டுச் சான்றுகள் உள்ள படியால் இனி யோகம் தவம் போன்ற முயற்சிகளை விரும்பும் தமிழர்கள் இந்தப் பக்கம் திரும்ப வேண்டும். தமிழ்மொழியும் தமிழர் கலைகளும் தமிழ்த் தேசியக் கருத்தியலும் படிக்கட்டுகளை அமைத்துத் தரும் என்று நம்பலாம்.

தாவில் கொள்கைத் தம் தொழில் முடிமார் (திருமுருகாற்றுப்படை-89)

என்பது தமிழ்ப்புத்தாண்டு குறித்த கூட்டு ஓக முயற்சி. உலக நன்மை குறித்தது. அந்த நுட்பங்களைத் தமிழர்கள் பறிகொடுத்ததன் விளைவே தன்னல நோக்குடனான பல்வேறு ஓக வடிவங்கள் உலககெங்கும் சிதறிக் கிடக்கின்றன. தமிழர்கள் அவற்றைப் புறக்கணித்து அரிமாவைப் போல் அறிவு வேட்டை ஆடிட இதுவே உகந்த காலம். தமிழர்களின் கடமையும் கூட.

___...---ooo000OOO000ooo---...___

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arumai

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.