Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தற்களம்- சகதியாகி மணக்கும் நந்திக்கடல் - தேவ அபிரா

Featured Replies

தேர்தற்களம்- சகதியாகி மணக்கும்  நந்திக்கடல் - குளோபல் தமிழச் செய்திகளிற்காக தேவ அபிரா:-


 
யுத்தம்  முடிவடைந்து ஆண்டுகள் ஆறாகியும் தீர்க்கப்படாத  இனப்பிரச்சனையுடன் இலங்கை  உலக  அரங்கில்  இயங்கிக்  கொண்டிருக்கிறது.  கெடுவோம் பந்தயம் பிடி என்கிற   அரசியல் வாதிகள்  வாழும்  நாட்டில் இன்னும்  60 வருடங்கள் ஆனாலும் இப்பிரச்சனை தீராது சர்வேசா.

அண்மையில்  நான் எழுதிய “ அரசியல்  வியாபாரமும் இராணுவ  பலமும்”  என்ற பத்திக்கு  முக நூலில் எனது  நண்பர்  ஒருவர்:  “ அரசியற் கடை நடத்துவதை விட இப்போதைக்கு  வேறு  என்ன  வழி?  மாற்றுவழி  இருந்தால்  கூறவும்”.  எனக் கேட்டிருந்தார்.  அவருக்கு  நான்  (அரசியல்)  வியாபாரத்தை  ஊழல்  இல்லாமல் கலப்படம் (பொய் பேசாமல்)  இல்லாமல்  மக்களைச்  சுரண்டாமல்  தொழிலாளர்களைச் சுரண்டாமல்  செய்யும்படி  கேட்கிறேன்   எனப்பதில்  அளித்தேன்   அதற்கு அவர் :  “வியாபாரம்  செழிக்காதே!  கடையை  விரைவில்  மூட வேண்டி  வரும்.  அந்த  இடத்தை வேறொருவன்  நிரப்பி விடுவான்.  அவன்  இவனைவிட  மோசமான  வியாபாரியாக இருப்பான்.  இன்றைய  உலக மயமாதலில்  மாற்று வழி  என்பது  தற்கொலைக்கு  சமன்” எனப் பதில்  அளித்திருந்தார்.

உண்மையிலும்  அவர் மட்டுமா இப்படிச்   சிந்திக்கிறார்?    இன்றைக்கு   புத்தி சீவிகளில் இருந்து   ஊடக வியலாளர்களில்   இருந்து   அரசியல் ஆய்வாளர்களில்  இருந்து அனேகமாக   எல்லோருமே அவ்வாறாகச்  சிந்திக்கத்  தொடங்கி விட்டார்கள் என்பதை இலங்கைத்தமிழ்ச்  சூழல் புலப்படுத்துகிறது.

தேர்தலில்  வாக்குகளைத்  திரட்டுவதற்கான   பிரச்சார உத்திகளை 
முதன்மைப்படுத்தி,  பாராளுமன்ற  அரசியலை  மையப்படுத்தி  இயங்குவதாகத் தமிழ்த் தேசிய  அரசியல்  மாறி   உள்ளது.  இது தான்   உண்மையிலும்   தமிழர்களின்  மூன்று  தசாப்த  காலப்   போராட்டத்தின்   தோல்வியாகிறது.  இத்தேர்தற்களம் தமிழ்த் தேசியத்தின் முள்ளிவாய்க்கால்;  அசிங்கங்களால் நிறைந்து சகதியாகி மணக்கும்  நந்திக்கடல்.
தமிழ்த் தேசியம்  என்ற  பிம்பத்தை  வலிமையான இராணுவக் கட்டமைப்பினாலும் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லாத  சனநாயக   மறுப்பினாலும்  வெளி  உலகத்தில்  இருந்து   தங்களைத்   துண்டித்துக்   கொண்டதனாலும்  புலிகளினால்  ஏற்படுத்த முடிந்தது. புலிகளின்  அதிகாரம்   தோற் கடிக்கப்பட்ட போதும்   ஒரு   இனமாக  ஒட்டு  மொத்தத்  தமிழர்களும்   சிங்களப் பேரினவாதத்தினால்   ஒடுக்கப்பட்டு   வந்தமையினாற் தேசியம்   என்ற   பிம்பம்  உடனடியாகக்    கலையவில்லை.  ஆனால்   இப்பொழுது   அதுமைத்திரி அரசாங்கம் தந்த  “இடை வெளியினாற்”  கலையத்  தொடங்கியுள்ளது.

உள்நாட்டு    யுத்தம்   முடிவுக்கு   வந்த   போது    எங்களுக்கு   முன்   இரண்டு  சவால்கள்  உருவாகின.  அவை   இப்பொழுதும்     சவால்களாகவே  இருக்கின்றன..

1.நீண்ட   காலம்  நீடித்து  இறுதியில் தனது  கோர முகத்தைக்  காட்டிய 
யுத்தத்தின் பாதிப்புக்களில்  இருந்து   விடுபடுதல்  ( உடல்  உள  உடைமைப்   பாதிப்புகளில்  இருந்து)

2. ஒரு இனமாக  எங்களது இருப்பையும் வளர்ச்சியையும்   எப்படி   இனி   உறுதி  செய்வது. இவ்விரண்டு சவால்களையும்  நாங்கள் அப்படியே விட்டு விட்டு   பாராளுமன்றக்  கதிரைகளில்   அமர்ந்து கொள்வதே  தமிழர்களின்  பெரும்  இலட்சியம்   என்பது   போல நடக்கத்  தொடங்கி   இருக்கிறோம்.   இந்நடத்தைக்கான  காரணம்  என்ன?  கடந்த காலத்தில்  ஈழவிடுதலைப் போராட்டம்  அதிகாரத்தைப் பெறுதல்  என்பதிலேயே  கவனம் செலுத்தி அதிலேயே  மையம்  கொண்டிருந்தது.   சிங்கள  அதிகாரத்தை  விரட்டுதல்தான் அதன் தலையாய நோக்கமாக   இருந்தது.  ஆனால்  அது நிறை வேறவில்லை.  ஆயினும்  ஒட்டு  மொத்தமான இலங்கையின்  அதிகார மையத்துள்   நுழைந்து  கொள்வது  தற்போது  சாத்தியமாக  உள்ளது.  

 ஓரதிகாரம்  முடிந்தாலென்ன சப்புக் கொட்டிக் கொண்டிருக்காமல்  இன்னொரு அதிகாரத்துள் நுளைந்து கொண்டாற் பொச்சம் தீருமல்லவா?. அதிகாரம் அது எவ்வகையானதாக விருந்தாலும் கசக்காது.  அதிகாரத்தினொரு  பகுதியாவது தனிப்பட்ட ரீதியிலும்   என்றென்றைக்கும்  பலன் தருவது. 

அரசியல்வாதி யொருவர்  தனக்குக்  கிடைக்கும் அதிகாரத்தையும் வளங்களையும்   மக்களுக்காகப் பயன்படுத்தப் போகிறேன், என்று சொல்கிறார் என்று வைப்போம். எந்த மக்களுக்காக?  தமிழ் மக்களுக்காக வென்பார்.  தமிழ் மக்கள் என்பவர்கள் யார்?  அவர்கள் எல்லாவற்றிலும் ஒருமைத் தன்மையைக்  கொண்டிருக்கிற ஒரு ஒற்றைப்படையான மக்கள் கூட்டமா?  தமிழ் மக்களுள்  பொருளாதாரரீதியிற்  பல தட்டுக்கள் இருக்கின்றன சமூகரீதியிற்  பல தட்டுக்கள் இருக்கின்றன.  இதனை  விடவும் பிரதேசரீதியாகவும் பாலினரீதியாகவும் சாதிரீதியாகவும்   மதரீதியாகவும் தட்டுக்கள் உள்ளன. இவற்றுள் பிளவுகளும்  இருக்கின்றன.  யுத்தம் முடிவடைந்த சில காலங்களுக்கு உள்ளேயே  இப்பிளவுகள்  தெரியத் தொடங்கியும்  விட்டன. இத்தட்டுகள் யாவற்றையும் ஒன்றன் மேலோன்றாக   அடுக்கி விட்டு  அதனைத் தேசியம் என்கிறீர்கள். ஒன்றன் மேலாக ஒன்றை அடுக்கி விடுவதனால் மட்டும் வெடிப்புகளும் அடுக்குகளும் தெரியாமற் போய்விடுமா?  உங்களுக்கு கிடைக்கும் அதிகாரத்தையும் வளங்களையும்  எந்தத்தட்டுக்கு கொடுக்கப் போகிறீர்கள்? எல்லாவற்றுக்கும்  மேலே இருக்கிற தட்டு  எல்லாவற்றையும்  தட்டிப்  பறித்துக்  கொள்ளும்.

எந்த  இனமானாலும்  சரி  அதிகாரத்தை நோக்கி யார்  நகருகிறார்கள்? அதிகாரத்தைப்  பெறுபவர்களை யார் சூழ்ந்து கொள்கிறார்கள்?   இத்தேர்தலில்   யார் வென்றாலும்  (அவர்  செய்யும்   அரசியலுக்கு   என்ன பெயரிட்டாலும் )  அவரால் இலங்கையின்   இறைமையையும் இனங்களின் உயரிகளினதும் மேற் தட்டுக்களினதும்  நலன்களையும் பேணும்   அரசியலையே  செய்ய  முடியும். 

பல்லினங்கள் வாழும்  நாடுகளில் இனங்களுக்கு   இடையில் ஒடுக்கு முறையைப் பார்கிறோம் ஆனால்   இனங்களுக்குள்ளும்   ஒடுக்கு முறையைப் பார்க்கிறோம். அதிகாரத்தைப் பெறுபவர்களும் அவர்களைச் சூழ்ந்து கொள்பவர்களும்  கிடைக்கும் அதிகாரங்களையும் வளங்களையும் இனங்களுக்கு  இடையிலும் இனங்களுக்குள்ளும் நீதியாகவும்  சனநாயகமாகவும்  பகிரும் பொறிமுறைக்குள் வரக்கூடிய அரசியற்கட்டமைப்பும்  கலாசாரமும் உலகத்தில் பல்லினச் சமூகங்கள் வாழும் அனேகமான நாடுகளில்  இல்லை. இலங்கையிலோ அறவே இல்லை.

இந்நிலையிற்  தனிப்பட்ட அரசியல்வாதிகள் பற்றிய  விம்பங்களை ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தி  மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக மக்களை மயங்க வைப்பது  நவீன  காலத்  தேர்தல் உத்திகளில் ஒன்றாகவுள்ளது.

  அண்மைக்கால அரசியலில் ஒபாமா,  மோடி   மைத்திரி போன்றவர்கள் இவ்வுத்தியைப்பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்தவர்களுக்கு உதாரணம். அதிஸ்டவசமாக இவ்வுத்தியைத் தமிழ் அரசியலில் உள்ள பழைய முகங்களாற்  பயன்படுத்த முடியாது.  இவர்கள் தமது   கோவணங்களைக்   கடந்த   ஆறு   ஆண்டுகளாக,  தோய்த்துத்  தூய்மையாக்க மறந்து விட்டார்கள். இன்றைக்கு  அதன் துர்வாசத்தை மறைக்க முடியாமற்  திணறுகிறார்கள். சமஸ்டி, ஒரு நாடு இரு தேசம் போன்ற  சொற்கள் வாசனைத் திரவியங்களாக  மாறுமோ ?

இவ்விடத்தில் தான்  தேர்தல்கள், அதிகாரங்கள் மற்றும் வளங்கள் என்பனவற்றுக்கு மேலாக  இன்னுமொன்று வருகிறது. தளை நீக்கம். விடுதலை   வேண்டின்  விடு தளை விடு  உட் தளை  என்று  வருகிறது.  இதனை  விட்டு விட்டுச்   சர்வதேசத்தைத் தலையிடு  தலையிடு  என்றழைத்தோம்.  தலையிட்டவர்கள்   தலை   எடுத்தார்கள். இன்றோ தளையறாக் கைகளுடன்  கதிரைகள் இருபது தாவென்கிறீர்கள் சர்வதேசத்திடம்  முறையிடுவீர்கள்  என்கிறீர்கள்.

 சர்வ நாசத்தின் தலைவர்கள் அவர்கள்   இனித்  தலையெடுக்க  விட மாட்டார்கள்.  போங்கள் அது சரி இனமொன்றைத்  தேசியமாக எது  பிணைக்கிறது?  ஈழத்த மிழர்களை  அவர்களினுள்  நிலவும்  எல்லா  முரண்பாடுகளினூடும் எதோ ஒன்று  பிணைத்திருக்க  வேண்டுமே? அல்லது  அப்படி ஒன்றும் இல்லையா? 
 
அதுதானே சுப்பர் சிங்கரில் ஜெசிக்காவுக்கு வாக்களிச்சனாங்கள்  எண்டு   ஆராவது வெளிக்கிட்டியளெண்டால்…

தேவ அபிரா  8-8-2015
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122753/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.