Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் 

by கோமகன் 

box-new-800x800அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது.

பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை  இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் கதைமாந்தர்களினூடாக, அவர்களினுடைய பார்வையில் இருந்துகொண்டே கருத்தியல் வாதங்களை முன்வைக்கின்றது. இதுவும் நூலாசிரியரின் புதிய கதைசொல்லும் பாணியாக என்னால் உணரமுடிந்தது. அத்துடன் வாய் பேச முடியாத குழந்தைக்கு அந்தக்கதை மாந்தர்கள், யுத்தத்தின் வலியையும் இராணுவத்தின் கொடுமைகளையும் போரம் தியேட்டர் (Forum Theatre) நாடக அரங்க முறையில் அந்தக்குழந்தைக்கு விளக்கிக் கொண்டு சென்றதும்  நூலாசிரியரின் புதிய அணுகுமுறை என்றே எண்ண இடமுண்டு.

BOX கதைப் புத்தகம் ஆரம்பமான காணிக்கைப்பத்திரம் பின்வருமாறு வருகின்றது ” இரத்த சாட்சியான பாலச்சந்திரனையும், ஈழப்போரில் மாண்ட ஆயிரமாயிரம் குழந்தைகளையும் நினைவுகொள்கின்றேன். எங்களது சந்ததியைக் காக்க நாங்கள் தவறியிருந்தோம். அந்த மாசில்லாக் குழந்தைகளின் இரத்தப்பழி நம்முடனேயே இருக்கின்றது “. இந்தக் காணிக்கைப்பத்திரம் தாயகத்தின் விடுதலைப்போரில் பங்கு பற்றிய அனைத்துத்  தரப்பு போராளிகளின் வலியாகவே என்னால் உணரமுடிந்தது. இந்த வரிகளைத் தட்டிக்கழித்துவிட்டு யாருமே ஈழத்துப் போரியல் வரலாறு பற்றிப் பேசமுடியாது.

251 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை இவ்வாறு சுருக்கிப் பார்க்கலாம். “சிங்களக் கிராமமான மதவாச்சியில்  “ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன்” என்ற பெரும் செல்வந்தரின் ஒரேயொரு மகனாகப் பிறக்கும் சந்த, அந்தக்கிராமத்தில் இருக்கும் புத்த விகாரைக்கு துறவியாக வருவதற்குப் பெற்றோரால் நேர்ந்து விடப்படுகின்றான். செல்வச்செழிப்பில் வளர்ந்த சந்தவுக்கு மடாலயத்தின் கட்டுப்பாடுகள் குடைச்சல்களை ஏற்படுத்துகின்றன. இறுதியில் அங்கிருந்து தப்பி கால் போன போக்கில் சென்று வன்னியில் உள்ள ” பெரிய பள்ளன் குளம் ” என்ற குக்கிராமத்துக்கு வருகின்றான். அங்கு சந்த ,” கார்த்திகை” என்று  அந்த மக்களால் அழைக்கப்பட்டு, அவர்களின் செல்லப்பிள்ளையாக  பெரிய பள்ளன் குளத்து அணைக்கட்டில் இருந்த ஆதாம் சுவாமியின் கல்லறை வீட்டில் வாழ்ந்து வருகின்றான்.அங்கு அவன் கூடுதலாக “அமையாள் கிழவியின்” அரவணைப்பில் இருந்தான். பசிக்கு அந்த கிராம மக்கள் போடும் சோற்றை யாசகமாக பெற்று உண்கின்றான். அவன் அந்த மக்களின் செல்லப்பிள்ளையாக மாற வேண்டிய முக்கிய காரணமாக கார்த்திகை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்ததே . சிறிய கால ஓட்டங்களின் பின்னர் இலங்கை இராணுவம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பெரிய பள்ளன் குளம் கிராமத்தை பிரகடனப்படுத்தி அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு சொல்கின்றது. அமையாள் கிழவியையும் கார்த்திகையையும் தவிர எல்லோருமே அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இராணுவம் இறுதியாக ஆதாம் சுவாமி கல்லறை வீட்டை பெட்டியடித்து சுற்றி வளைத்த பொழுது, கார்த்திகை அந்த ராணுவத்துடன் சிங்களத்தில் உரையாட ஆரம்பித்து தனது பூர்வீகத்தை சொல்கின்றான். குளத்திலே இறந்த அமையாள் கிழவியின் நிர்வாண உடலை துறவிகளுக்குரிய போர்வையைப் போர்த்தி இராணுவ உதவியுடன் சந்த ஸ்வஸ்திக தேரர் அடக்கம் செய்ய செல்வதுடனும், பின்இணைப்பு ஒன்றுடன் பெட்டி நிறைவடைகின்றது .

நாவலை வாசிக்கும் பொழுது பல உபபிரதிகள் நாவலினூடாகச் செல்கின்றன. பிரான்சிலே இருந்து பெரிய பள்ளன் குளத்துக்குச் செல்லும் சகோதரர் டைடஸ் லேமுவேல் ‘உபபிரதியை’ தவிர மற்றைய உபபிரதிகள் வாசிப்புச் சுவாரசியத்துக்கு இடைஞ்சல் தந்து மனதில் ஒருவித அயர்சியை ஏற்படுத்துகின்றன. அதாவது வாசகன் பல பெட்டிகளைக் கடந்து மெயின் பெட்டிக்கு வரவேண்டியிருக்கின்றது. நாவலின் இரண்டாவது கதை சொல்லியாகிய கார்த்திகை என்ற குழந்தை ஒரு கட்டத்தில் அதனது நண்பர்கள் மத்தியில் நிர்வாணமாக நின்று சுயஇன்பம் செய்கின்றது. ஆரம்பத்தில் காணிக்கைப்பத்திரத்தில்  போரில் மரணித்த குழந்தைகளின் இரத்தப்பழிக்கு கசிந்துருகிய நூலாசிரியர்  இந்த இடத்தில் சிறுவர்கள்  பாலியல் மனநிலையை ஒரு சம்பவமாக மட்டுமே பதிவு செய்வது குழப்பமடைய வைக்கிறது. இருந்தபோதிலும் குழந்தை மனது என்பது கார்பன் பிரதி போன்றது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். பெற்றோரால் மடாலயத்துக்கு நேர்ந்துவிடப்பட்ட குழந்தைமீது  மடாலயத்தில் இருந்த பௌத்த பிட்சுக்கள் தங்கள் பாலியல் வக்கிரங்களை தீர்த்திருப்பதாலும் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.  நூலாசிரியர், புனிதங்களை இறுக்கமாகக் கட்டிக்காக்கும் இலங்கையின் பௌத்தமத மடாலயங்கள் மீதான தனது  காட்டமான விமர்சனம் ஒன்றைப் பதிந்திருக்கின்றார்  என்றே எண்ண இடமளிக்கின்றது.

நாவலின் ஆரம்பத்தில்  அமையாள் கிழவி செத்து மிதந்து கொண்டிருந்த காட்சியின்  வர்ணனை ஏறத்தாழ மூன்று வருடங்களிற்கு முதல் எதுவரை இலக்கிய சஞ்சிகையில் வெளியாகிய ‘அங்கையற்கண்ணி’ சிறுகதையினை எனக்கு நினைவு படுத்தியது.

நாவலில் நூலாசிரியர் வரலாறு சம்பந்தமான இடங்களில் தனது நுண்ணிய எள்ளல்களால் புலித் தேசியவாதிகளை கவர முயற்சித்து இருக்கின்றார்  என்றே எண்ண வைத்தது.

நாவலின் பக்கம் 106 இல், “காலையில் யுத்தம் முடிந்திருந்தது .நூற்றுக்கணக்கான கருத்த உடல்களை வெள்ளையப்படை புரட்டிப் புரட்டிப் பார்த்தது .அங்கே கிடந்த பல உடல்கள் அடையாளம் தெரியாமல் சிதைந்திருந்தன .அவற்றிடையே கால்களைப் பரப்பி முகம் முற்றாகக் கருகி நிர்வாணமாகக் கிடந்த குள்ளமும் பருமனுமான உடலொன்றை “பண்டார வன்னியன்” என ஆங்கிலேயப்படைகளுடன் வந்திருந்த “நெடும்மாப்பாணமுதலி” அடையாளம் காட்டினான் .அந்த உடல் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டு அந்தப்புதைகுழியின் மேலே “இங்கே பண்டார வன்னியன் கப்டன் வொண் ட்ரிபோர்க்கால் தோற்கடிக்கப்பட்டான் “என்ற நினைவு கல்லும் நாட்டப்பட்டது அதனால் அந்த இடம் பின்னர் கற்சிலைமடு என்றாயிற்று.

ஆனால் பண்டாரவன்னியனும் அவனது படைவீரர்கள் எண்மாரும் அந்தப் பெட்டி வடிவ நெருப்பு முற்றுகையை உடைத்துக்கொண்டு ஏற்கனவே வெளியேறி வவுனியாவை நோக்கி காட்டுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தனர் .

அதற்குப் பின்பாக வன்னி ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் முழுமையாக வந்தது .பண்டாரவன்னியன் கற்சிலைமடு சண்டையில் இறந்து போய்விட்டதாகத்தான் வன்னி மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். பண்டாரவன்னியனோ அதற்குப்பின்பும் ஏழு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிற்கும் கண்டி அரசனுக்கும் உறுதியான நடப்பு இருந்ததினால் அவன் கண்டி இராஜியத்துக்கும் வன்னிக்கும் இடையில் மாறி மாறி நடமாடிக்கொண்டிருந்தான் .ஆங்கிலேயர்களை விரட்ட ஒரு படையைத் திரட்டக் கடுமையாக அவன் முயற்சித்துக்கொண்டிருந்த போதும் அது சாத்தியமில்லாமலேயே இருந்தது “.

இங்கு நூலாசிரியர் இரண்டு விதமான செய்திகளை சொல்லி நந்திக்கடலில் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும், ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு முயற்சி செய்தாலும் அது நடை பெறவில்லை என்றும் புலித்தேசியவாதிகளைக் குளிர்மைப்படுத்துகின்றார். இது நூலாசிரியரின் வழமையான புலியெதிர்ப்பு பார்வையை விட்டு விலகிச் செல்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. இதை வேறுவகையில் பார்த்தால் இதுவரைகாலமும் கடும் புலியெதிர்ப்பு வாதங்களை தனது படைப்புகளில் வைத்து “துரோகி” பட்டம் பெற்றுக்கொண்ட நூலாசிரியர், அதை துடைக்க முயற்சிக்கின்றாரா? என்று எண்ணவும் இடமளிக்கின்றது.

இறுதியாக, பல சிறுகதைகள் மூலம் வாசகர்களிடையே பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திய நூலாசிரியர் நாவல் என்று வரும்பொழுது தழும்பல் நிலையையே ஏற்படுத்துகின்றார். BOX கதைப் புத்தகம் நாவலில் சில குறைபாடுகள் இருந்தாலும் அது ஓர் காற்றடைத்த கனதியான பெட்டியாகவே என்னால் தீர்மானிக்க முடிந்தது. அத்துடன் இறுதிப்பகுதியான “முற்றுப்பகுதி ” நாவலுடன் ஒட்டாமல் துருத்திக்கொண்டு  இடைஞ்சலாகவே இருக்கின்றது. மாறாக, நூலாசிரியர் அமையாள் கிழவியின் இறுதி யாத்திரையில்  சந்த ஸ்வஸ்திக  தேரர் இராணுவத்தின் திரை மறைவுப் பெட்டிக்குள் நிர்வாணமாக செல்வதுடன் நாவலை முடித்திருந்தால் கதை வாசகர்களிடையே அதிக அதிர்வுகளைப் பெற்றிருக்கும் என்பது எனது எண்ணம்.

http://vallinam.com.my/version2/?p=2228

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் பதிவு புத்தக விமர்சனம் என்பதைவிட வாசக அபிப்பிராயம் என்றுதான் சொல்வேன்.

BOX கதைப் புத்தகம் கையில் கிடைத்து 100 பக்கங்களை வாசித்துவிட்டேன். ஷோபாசக்தியின் புனைவு உத்தி Quentin Tarantino வின் படங்களைப் பார்க்கும் உணர்வைத் தருகின்றது.  இதனை வலிந்தே உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்வேன்.

 

வேறு சில வாசக அபிப்பிராயங்கள்:

ஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்


 
6
 

images

ஜெ,

நான் பொதுவாக மனதை உலுக்கும் நூல்களையோ படங்களையோ நெருங்குவதில்லை. ஏழாம் உலகத்தை கையில் எடுத்து 20 பக்கங்கள் தாண்ட முடியாமல் வைத்துவிட்டு 6 மாதங்கள் கழித்தே மீண்டும் நூலை எடுத்தேன்.

BOX கதை புத்தகம் நாவலின் தொடக்கத்தில் அமையாள் கிழவி குளத்தில் மிதக்கும் காட்சியை வாசிக்கும் போதே என்னால் இதை படிக்க முடியாது என்று தோன்றியது. அதே நேரம் அந்த மொழி என்னை உள்ளே இழுத்தபடியேவும் இருந்தது. இந்த நாவலின் சொல்முறையை, அதன் அழகியலை பற்றி பேசுவதே கூட குற்றவுணர்வை தரக்கூடியதாக படுகிறது. நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் தப்பிவிடவே எண்ணினேன். என்னை முழு நாவலை முடிக்க வைத்தது ஷோபா சக்தியின் மொழியே.

இன்னமும் இந்த கேள்வி நிற்கிறது. இந்த நாவல் இத்தனை வடிவநேர்த்தியுடனும் அழகியலுடனும் எழுதப்பட்டிருக்க வேண்டுமா? ஷோபா சொல்வதை போல நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சம்பவங்களும் இடமும் உண்மை என்று கொண்டால் இந்நாவலில் ஷோபா சக்தியின் பங்கு என்ன? இந்த நேர்த்தியும் எளிமையான வடிவமும் அந்த எளிமையை வந்தடைய அவர் மேற்கொண்ட பயணமுமே அவரது பங்கு என்று தோன்றுகிறது. குளத்தில் மிதந்த அமையாள் கிழவின் உடலை நிலவு மேகத்திலிருந்து வெளிவந்து பார்க்கிறது. பிறகு அதே நிலவு மெல்ல வன்னி நிலத்தில் அதே நேரம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் தொட்டுச்செல்கிறது. இதை இப்படி சொல்லாமல் நேரடி விவரணைகளாக சொல்லி இருந்தால் நான் 20 பக்கங்களை தாண்டி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். இதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கணமும் இந்த நாவலில் இருந்து தப்பிக்கவே நினைத்தேன். இதன் உள்ளடக்கம் என்னை மிகத்தீவிரமாக வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. அப்படி வெளியேற விடாமல் தடுத்தது இதன் மொழியும் வடிவ நேர்த்தியும் தான். கார்த்திகை இறக்கும் தருணத்தை ஊரே சேர்ந்து நடித்துக்காட்டும் இடமும் அதில் கார்த்திகையாக அவனது தாயான அமையாள் கிழவி நடிப்பதும் அந்த தருணத்தின் சோகத்தை தாண்டி சிலிர்க்க வைத்தது.

நாவலின் இறுதி வரை அழாமல் படித்த என்னால், நாவலின் முடிவில் இடம்பெரும் இன்றைய இலங்கையின் பாலியல் விடுதிகளை பற்றிய விவரணைகளை கண்ணீரின்றி தாண்ட முடியவில்லை. சமீபத்தில் நான் வாசித்த அபாரமான நாவல் இது

சித்தார்த் வெங்கடேசன்

shoba

ஜெ,

சமீபத்தில் ஷோபாசக்தியின் பாக்ஸ் கதைப்புத்தகம் என்னும் நாவலை வாசித்தேன். ஷோபாசக்தியின் கொரில்லா நான் மிக விரும்பி வாசித்த நாவல். தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று அது. அவரது ம்ம் ஒரு முயற்சி என்றே தோன்றியது. அற்புதமான பல பகுதிகள் அதில் இருந்தன, ஆனால் முழுமை கைகூடவில்லை. ஆனால் இந்த நாவலில் முந்தைய இருநாவல்களிலும் இல்லாத ஒரு அம்சம் குடியேரியிருக்கிறது. இதை நல்ல நாவல் என்று சொல்லலாமா என்றால் உறுதியாகச் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. போரின் மானுட அழிவுகளை இந்நாவல் சொல்கிறது. போர் என்பது படிப்படியா மானுடத்தை அழிக்கிறது. சரியான தரப்பு தப்பான தரப்பு என்று ஏடுமில்லாமல் ஆகிறது. ரெண்டு தரப்புமே எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிக்கின்றன. எல்லாவற்றையும் நியாயபப்டுத்தவும் செய்கின்றன. கொடுமைகள் வழியாகச் செல்லும்போது மனிதமனம் எந்த அளவுக்கு இருட்டானது என்று தெரிகிறது. வன்முறை வழியாக அன்பையும் கருணையையும் சொல்லும் நாவல் இது என்பதில் சந்தேகமே இல்லை

ஆனால் என்னுடைய கேள்வி அல்லது சந்தேகம் இன்னொன்று. இதில் உள்ள போர்க்கொடுமைச் சித்தரிப்புகளில் ஒரு சின்ன நம்பகத்தன்மை இல்லாமை உள்ளது. இது எனக்கு மட்டுமே தோன்றுவதாக இருக்கலாம். நேரடியாக வாழ்க்கையை அறிந்து எழுதுவதாகத் தெரியவில்லை. saw முதலிய சினிமாக்கள் அளிக்கும் morbid உணர்வை இந்நாவல் அளிக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்களால் தாக்கம் பெற்று எழுதப்பட்டதா என்று இந்நாவலை நினைக்கத்தோன்றுகிறது. கொடுமைகள் சித்தரிக்கப்படுவதில் உள்ள சில இயல்புகளை வைத்து இந்த எண்ணத்தை அடைந்தேன். இப்படி நடந்ததா நடக்குமா என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை. அனுபவங்களில் இருந்து எழுத்து உருவாகும்போது வந்துசேரும் நுண்மை நிகழவில்லை. கற்பனைமூலமே எழுதப்படும்போது வந்துகூடும் ஒரு சின்ன மிகை அல்லது செயற்கைத்தனம் உள்ளது. ஷோபாவின் வேறு நாவல்களில் இதெல்லாம் இல்லை. இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் வாசிப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. நமக்கு நம் வாழ்க்கையும் மனநிலையும் தெரியும் என்பதனால் இது தோன்றுகிறது. இது ஒரு குறையாகவே இந்நாவலை வாசித்தபோது தோன்றியது.

அப்பட்டமான பட்டவர்த்தனமான நாவல். அதிர்ச்சியும் விழிப்பும் அளிப்பது. ஆனால் இந்த கலைக்குறைபாடு இருந்துகொன்டே இருக்கிறது

சாரங்கன்

 

http://www.jeyamohan.in/78511#.VhgrcnpViko

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியின் BOX கதைப்புத்தகம் நாவல் – ஒரு வியாபார அரசியல்

- சாஜித்

 

BOX-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA

ஷேபாசக்தியின் BOX கதைப்புத்தகம் நாவலினை நுகர்ந்து முடித்த பொழுதினில் இப்பதிவினை இடுகிறேன். ஏலவே கொரில்லா, ம் என இரு நாவல்களைத் தந்து மூன்றாவது நாவலாக BOX கதைப்புத்தகம் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி…

அட்டைப்படத்திலிருந்து ஆரம்பித்தால் BOX முதல் தமிழ் கொலையினை தலைப்பில் விட்டுச் சென்றிருக்கிறார் ஷோபாசக்தி. தமிழில் பிற மொழி கலத்தல் என்பது ஆதி காலம் தொட்டு நிலவி வந்தாலும் அது ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சங்கமருவிய காலம் தொட்டு நாயக்கர் காலப் பகுதிகளில் தமிழ் மொழியுடன் வட மொழி கலந்த அமைப்பியலை ‘மணிப்பிரவாள நடை’ என்று அழைத்தார்கள். நாயக்கர் கால இலக்கிய செயற்பாடுகள் ஜொலிக்காமைக்கு மொழிக்கலப்பே பெரும் காரணமாய் அமைந்ததால் அதே கதி இன்று ஷோபாசக்தியின் நாவலிற்கு கிடைத்திருக்கிறது.

தமிழின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத பற்றுக் கொண்டவராய் தனது அனைத்து படைப்புகளிலும் கவனம் செலுத்தும் ஷோபாசக்தி ஆங்கிலத் தலைப்புடன் தமிழ் கலந்திருப்பது புலம் பெயர்ந்து தான் வாழ்வதால் அதன் மீதான தந்திரோபாய அரசியல் என்று முன்அட்டை விளம்பரத்தை முன் வைக்கலாம்…

நாவலிலினை காணிக்கையாக பாலச்சந்திரனுக்கும் ஈழப்போரில் மாண்ட குழந்தைகளுக்கும் அர்ப்பணித்திருக்கிறார். தாங்கள் அச்சந்ததியினரை காக்க தவறிவிட்டதாகவும் பரிதவிக்கிறார். ஆம் நிச்சயமாக ஷோபாசக்தி அவரின் சந்ததிகளை காப்பதற்கு தவறிவிட்டார் என்பது இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.

புலம் பெயர்ந்து பிரான்ஸிலும் கனடாவிலும் வெறும் எழுத்து பொம்மைகளாகவும் திரைப்பட நடிகர்களாகவும் உல்லாசம் அனுபவிப்பவர்கள் இப்படி பேசுவதில் ஆச்சரியமில்லை. ஒரு போதும் இவர்கள் செயற்பாட்டாளர்களாக இருந்ததும் கிடையாது. யுத்தத்தின் அவலங்களை கவிதைகளாலும் கதைகளினாலும் வடிக்கும் இவர்கள் தனது சொந்த மண்ணிற்கு யுத்த முடிவிற்குப்பின் கால் வைத்ததும் கிடையாது. ஆனால் பேனை தூக்கி விட்டால் இவர்களைப் போல் தமிழ் இன பற்றுள்ளவர்களை காணவும் முடியாது. உண்மையில் சிறந்த நடிகருக்கான விருதினை வெள்ளக்காரன் அறிந்துதான் கொடுத்திருக்கிறான்….

இனி நாவலுக்குள் வருவோம். அங்கே மீண்டும் அதே பல்லவி யுத்த அரசியலை மிகையாக்கப்பட்ட புனைவுடன் நிஜம் எனும் பெயரில் முன்வைக்கப்பட்ட ஒரு இருட்டடிப்பே BOX கதைப்புத்தகம்…

மு.பொ வின் ‘நோயில் இருத்தல்’ பேசிய போரியல் செயற்பாட்டின் ஒரு துளியேனும் தொடவில்லை. குறைந்தது சாதி போராட்டத்தினை முன்வைத்த டானியலின் ‘பஞ்சமர்’ கொண்டிருக்கும் யாழின் காட்சிப்படுத்தல் கூட சரிவர இடம்பெறவில்லை. போருக்குப் பின்னரான வாழ்வியல் அம்சங்களை பேச முற்பட்டு புனைவே வாழ்வாகி மிகைப்படுத்திக் கூறும் ஷோபாசக்தியின் நாவல் எதனை மையப்படுத்துகிறது என்பதே பெரும் குழப்பம். இதை விட முன்பொரு காலம் ஷோபாசக்தி எழுதிய ரம்ழான் போன்ற கதைகள் எவ்வளவோ மேல்….

வன்னிக் கிராமங்களினுடைய பெயர்களின் பட்டியல், வன்னிக் காட்டில் இருக்கும் தாவரங்களின் பட்டியல் போன்ற கிராமிய சமையல் குறிப்புகள் நாவலில் நிரம்பிக் கிடக்கிறது. பேசு பொருள் என்ற கருத்தாடல் நாவலில் மறைந்தே விட்டது…

பெரிய பள்ளன் குளத்தில் இராணுவத்தினரால் நடப்பட்டிருக்கும் செய்தியினை படம் போட்டு காட்டியிருக்கும் ஷோபாசக்தி வெறும் எந்த அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்குல் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய பார்வையானது நாவல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ஏனோ?

தீபன் படம் மூலமும் பல்வேறுபட்ட படைப்புக்களின் மூலமும் ஷோபாசக்திக்கு பெருத்த அடையாளமும் அழகிய இருப்பிடங்களும் கிடைத்தன. ஆனால் அவருடைய படைப்புக்களின் கதை மாந்தர்களாகிய தமிழ் மக்களின் அடையாளமும் இருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது?

” யாம் பெற்ற இன்பம்….?”

 

http://www.nanilam.com/?p=8522

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.