Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: நவீன விமானம் கேட்கும் இறை ஊழியம்!

 

 
03chskopic
 
 

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மதபோதகர்களில் ஒருவர் ஜெஸ்ஸி டுப்லான்ட்டிஸ். பிரசங்கங்களுக்காக பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கித் தருமாறு, பக்தர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த விமானத்தின் விலை சுமார் 361 கோடி ரூபாய்! லூசியானாவில் உள்ள தேவாலயத்தில் செல்வாக்கு மிக்கப் பதவியில் இருக்கும் இவர், ஏற்கெனவே பிரைவேட் ஜெட் விமானங்களைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இப்போது மூன்றாவது விமானத்தை வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார். 68 வயது ஜெஸ்ஸி, “மதபோதகர்களுக்கு ஏன் தனி விமானங்கள் என்று பலரும் கேட்கிறார்கள். ஃபால்கன் 7எக்ஸ் விமானம் மூலம் உலகம் முழுவதும் நிற்காமல் பறக்கலாம். இதனால் எரிபொருள் கணிசமாக மிச்சமாகும், இறைவனின் புகழும் பரவும் என்பதைப் பார்க்கும்போது பக்தர்கள் தாராளமாக நன்கொடை அளிக்கலாம். இது என் தனிப்பட்ட விருப்பம் அல்ல. 1978-ம் ஆண்டு இறைவன் என்னை விமானம் வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டார். அதன் பிறகே விமானம் வாங்கும் எண்ணம் வந்தது. இறைவனின் திருப்பணியில் நீங்களும் ஒரு அங்கமாக வேண்டும் என்றால் நன்கொடை அளியுங்கள். இதில் எந்த நிர்பந்தமும் இல்லை. இறைவனே இன்று பூமியில் தோன்றினாலும் கழுதையில் பயணம் செய்ய விரும்பமாட்டார். விமானத்தின் மூலம்தான் உலகை விரைவாகச் சுற்றி வர முடியும் என்பார்” என்று வீடியோவில் மக்களின் மனதைத் தொடும் விதத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதற்கு முன் வாங்கப்பட்ட 2 ஜெட் விமானங்களையும் பக்தர்களின் நன்கொடையில்தான் வாங்கியிருக்கிறார். ஜெஸ்ஸியின் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இறைவனின் பெயரைச் சொல்லி கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிப்பதைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இறைவனுக்குத் தொண்டு செய்யும் மதபோதகர், தனி விமானத்தில் செல்வதே சரி என்று சொல்லி லட்சக்கணக்கில் நன்கொடை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

 

நவீன விமானம் கேட்கும் இறை ஊழியம்!

 

 

இத்தாலியின் மிலன் நகரில் வசிக்கும் லூகா, தன்னுடைய பெண் குழந்தைக்கு ‘ப்ளூ’ என்று பெயரிட்டிருந்தார். 18 மாதக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழும் பாஸ்போர்ட்டும் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது பெண் குழந்தையின் பெயராக இல்லை என்பதால், வேறு ஒரு பெயரை வைக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். இத்தாலியில் ப்ளூ என்ற பெயர் பெண் பெயராகத்தான் இதுவரை இருந்து வந்தது. திடீரென்று இந்தப் பெயரை மாற்றச் சொன்னதும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். “அடுத்த முறை நீதிமன்றம் செல்வதற்குள் நாங்கள் பெயர் மாற்றவில்லை என்றால், நீதிமன்றமே ஒரு பெயரைச் சூட்டிவிடும் என்று சொல்லியிருக்கிறது. சென்ற முறை நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது எங்கள் கண் முன்னே ‘ப்ளூ’ என்ற ஒரு பெண் குழந்தையின் பெயரை நீதிபதி மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். எங்களை மட்டும் ஏன் மாற்றச் சொல்கிறார் என்று புரியவில்லை. ஒரு காலத்தில் செலஸ்ட் என்ற பெயர் ஆணுக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்றோ அது பெண்ணின் பெயராக மாறிவிட்டது” என்கிறார் ப்ளூவின் அப்பா லூகா.

பெயரில் கூட நீதிமன்ற தலையீடா!

http://tamil.thehindu.com/world/article24071369.ece

  • Replies 1k
  • Views 150.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: பிளாஸ்டிக் அரக்கனிடமிருந்து விடுதலை எப்போது

 

 

05chskopic

 

 

தாய்லாந்தில் கரை ஒதுங்கிய பைலட் திமிங்கிலம், 5 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டது. கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் திமிங்கிலத்தைக் காப்பாற்றுவதற்காக எடுத்த பெரும் முயற்சி தோல்வியடைந்தது. இறந்த திமிங்கிலத்தை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது திமிங்கிலத்தின் வயிற்றில் 8 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றுக்குள் சென்றதால் ஜீரணமும் ஆகவில்லை, பசியும் எடுக்கவில்லை. இது தவிர, திமிங்கிலத்துக்கு வேறு எந்தப் பிரச்சினையும் உடலில் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “மிகப் பெரிய உயிரினமாக இருந்தாலும் திமிங்கிலம் கணவாய், ஆக்டோபஸ், சிறிய மீன்கள், மிதவை உயிரினங்கள் போன்றவற்றைதான் உணவாக்கிக்கொள்கின்றன. திமிங்கிலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள் இருந்தன. தாய்லாந்து மக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். அது கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இனிமேலாவது பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொண்டால் மற்ற உயிரினங்களுக்கு நல்லது” என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். உலகம் முழுவதும் 8 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் பாட்டில்களாகவும் பைகளாகவும் கடலுக்குள் கொட்டப்படுகின்றன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் அமைந்திருக்கிறது.

 

பிளாஸ்டிக் அரக்கனிடமிருந்து விடுதலை எப்போது?

 

 

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 24 வயது அரி காலா, மனநல ஆலோசகராக இருக்கிறார். நோய்வாய்ப்பட்ட மனிதரின் உடலில் இருந்து வரும் வாசனையை வைத்து, அவர் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்துவிடும் ஆற்றல் இவருக்கு இருக்கிறது! “எனக்கு இப்படி ஒரு திறன் இருப்பதை 12 வயதில் கண்டுகொண்டேன். நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த என்னுடைய மாமாவின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவரிடமிருந்து வித்தியாசமான வாசனை வந்து கொண்டிருந்தது. நான் மற்றவர்களிடம் அந்த வாசனை குறித்துக் கேட்டேன். யாருக்கும் வாசனை தெரியவில்லை. இனிப்பான பழம் அழுகியது போன்ற அந்த வாசனையை நான் அதற்கு முன்பு நுகர்ந்ததில்லை. மாமா இறக்கப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது. அன்று இரவு மாமா இறந்துவிட்டார். நாள்பட்ட நோய் கண்டவர்கள், முதியவர்களைச் சந்திக்கும்போது எல்லாம் இந்த வித்தியாசமான வாசனை வர ஆரம்பித்தது. அவர்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் மரணமடைந்தனர். பிறகுதான் எங்கள் வீட்டில் உள்ளவர்களே என்னிடம் உள்ள திறனைப் புரிந்துகொண்டனர். இதைக் கேள்விப்பட்டு இறப்பு குறித்து முன்கூட்டியே தெரிந்தால் சொல்லுமாறு என்னைக் கேட்டனர். என்னுடைய இந்தத் திறன் மூலம் பெரிய அளவில் எந்தப் பலனும் இல்லை. காலப்போக்கில் என்னுடைய கவனத்தை அதிலிருந்து திருப்பிவிட்டேன். ஆனால் இன்றும் என்னால் மணத்தை வைத்து மரணத்தை உணர முடிகிறது. விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் அதைச் சொல்லிவிடுவேன். மற்றபடி என் திறமையை வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை” என்கிறார் அரி காலா.

வாசனை மூலம் மரணத்தை அறியும் அதிசயம்!

http://tamil.thehindu.com/world/article24085167.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மாட்டுக்கு மரணதண்டனை

 

 
 
 

பல்கேரியாவைச் சேர்ந்த பென்கா என்ற மாடு, சட்டத்துக்குப் புறம்பாக எல்லையைத் தாண்டி செர்பியாவுக்குள் நுழைந்துவிட்டது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நாடு என்று பாவம் இந்தப் பென்காவுக்குத் தெரியாது என்பதால், தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பல்கேரியாவின் கோபிலோவ்ட்சி கிராமத்தில் மந்தைகளுடன் இருந்த இந்தப் பென்கா, எப்படியோ மந்தையை விட்டு வெளிவந்து, பல்கேரிய எல்லையைத் தாண்டி, செர்பியாவுக்குள் நுழைந்துவிட்டது. பென்காவின் உரிமையாளர் இவான் ஹராலம்பிவ், இரண்டு வாரங்கள் பல்வேறு இடங்களில் தேடினார். கிடைக்கவே இல்லை என்பதால் காவல் துறை, மேயர்வ ரை பென்கா காணாமல்போன விஷயத்தைப் பதிவு செய்துவிட்டார். திடீரென்று ஒருநாள் இவானுக்குத் தகவல் கிடைத்தது. செர்பியாவின் போசில்க்ராட் கிராமத்தில் பென்கா இருக்கிறது , அதைக் கிராம மக்கள் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிந்துகொண்டார். உடனே செர்பியாவுக்குச் சென்று மாடுகளை அழைத்து வர முடிவெடுத்தார். எல்லையைக் கடக்க முயன்றபோது மோசமான பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். செர்பியாவுக்குள் நுழைந்தால் இனிமேல் பல்கேரியாவுக்குத் திரும்பிச்செல்ல முடியாது என்றார்கள் அதிகாரிகள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாட்டிலிருந்து பல்கேரியாவுக்கு மாடு வருவதாக இருந்தால், இறக்குமதி சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒருவேளை பென்காவை பல்கேரியாவுக்குக் கொண்டு சென்றாலும், சில நாட்களில் அது மரணத்தைச் சந்திக்கதான் வேண்டும் என்றார்கள்.

 

“என்னுடைய மந்தையை ஓநாய்கள் துரத்தியதால், பென்கா வழி தவறி செர்பியாவுக்குச் சென்றுவிட்டது. அந்தக் கிராமத்து மக்களும் பென்காவைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டார்கள். இப்போது பென்கா கர்ப்பமாக இருக்கிறது. 3, 4 வாரங்களில் பிரசவிக்கப் போகிறது. மருத்துவர் பரிசோதனை செய்து, பென்கா ஆரோக்கியமாக இருப்பதாகச் சான்றிதழ் கொடுத்துவிட்டார். ஆனால் எங்கள் நாட்டு அதிகாரிகள் பென்கா வரக் கூடாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாட்டில் இருந்து வரும் மாட்டின் மூலம் ஏதாவது நோய் பரவினால், பல்கேரிய மாடுகளுக்குப் பிரச்சினையாகிவிடும். சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நான் பென்காவை அழைத்துச் சென்றாலும் சில நாட்களில் மரணம் நிச்சயம் என்கிறார்கள். இந்தச் சட்டத்தைத் தாங்கள் இயற்றவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான பிரசெல்ஸில் இருந்து வரும் சட்டத்தைத்தான் நடைமுறைப் படுத்துகிறோம் என்றும் சொல்லிவிட்டனர். என் பென்கா செய்த தவறு என்ன? ஏன் இந்தத் தண்டனை? வழி தவறிய மாட்டைப் பத்திரமாகப் பராமரித்து ஒப்படைத்திருக்கிறது அந்நிய நாடு. ஆனால் வழி தவறிய மாட்டுக்குத் தண்டனை அளிக்கிறது சொந்த நாடு என்பதை என்னவென்று சொல்வது?” என்று கேட்கிறார் இவான் ஹராலம்பிவ்.

பென்காவின் மரண தண்டனை செய்தி பல்கேரியா முழுவதும் வைரலாக பரவியது. இப்போது ஐரோப்பா முழுவதும் பரவிவிட்டது. பென்காவைப் பாதுகாக்கும் முயற்சியில் மக்களும் விலங்குகள் நல அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இவை எதுவும் அறியாத பென்கா, தன் குட்டி பிறக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

மனிதர்களுக்குத்தான் எல்லைகள், மாடு என்ன செய்யும்?

http://tamil.thehindu.com/world/article24093650.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஆங்கிலத்தில் கலக்கும் அரபி சிறுவன்

 

 

 
07chkanboy
 
 

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 3 வயது ஓ நீல் மஹ்மூத், கிராமத்தில் வசிக்கிறான். இவனது வீட்டில் அரபிக்தான் எல்லோரும் பேசுகிறார்கள். இவனோ பிரிட்டிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுகிறான்! “எங்கள் வீட்டில் யாரும் ஆங்கிலம் பேசினதில்லை. 2 வயது வரை இவனுக்குப் பேச்சே வரவில்லை. திடீரென்று புரியாத மொழியில் பேச ஆரம்பித்தான். நாங்கள் பயந்துபோனோம். வெகு விரைவில் சரளமாக ஆங்கிலம் பேச ஆரம்பித்தபோது ஆச்சரியமடைந்தோம். நாங்கள் அரபிக்கில் ஏதாவது கேட்போம், அவனோ ஆங்கிலத்தில் ‘யெஸ் டியர்’. ‘ஓ மை குட்னஸ்’ என்றெல்லாம் அழகாக உச்சரித்தான். ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. அதனால் பேச்சு சிகிச்சை வல்லுநரிடம் அழைத்துச் சென்றோம். அங்கே மொழியியல் வல்லுநரும் இவனைப் பரிசோதித்தார். ஆங்கிலம் பேசக் கூடிய குடும்பத்தில் இருக்கும் 3 வயது குழந்தை பேசும் அளவுக்கு இவனது ஆங்கில மொழி அறிவு இருப்பதாகவும், தாய்மொழி பேசும் இதே வயது குழந்தைகளைவிட, இவனது அரபிக் மொழி வளம் குறைவாக இருப்பதாகவும் சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்கள் இவனிடம் பேசுவதற்கே தயங்குகிறார்கள். ‘யெஸ், ஓகே’ என்பதை வைத்து சமாளிக்கிறார்கள்” என்கிறார் சிறுவனின் தந்தை.

 

மருத்துவர் இரிட் ஹோல்மன், “முதலில் இவனுக்குப் பேச்சு வரவில்லை என்றுதான் என்னிடம் வந்தார்கள். இப்போதோ இங்கிலாந்து மன்னர் மாதிரி ஆங்கிலம் பேசுகிறான் என்று புகார் சொல் கிறார்கள். ஆங்கிலமே அந்த வீட்டில் யாருக்கும் தெரியாது. பேசப் பேசத்தான் ஒரு மொழியைக் கற்க முடியும். இவன் எப்படி ஆங்கிலம் பேசுகிறான் என்று எனக்குத் தெரியவில்லை” என்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மஹ்மூத் பங்கேற்று வருகிறான். இதுவரை அவன் பார்க்காத அருவி, செவ்வகம் போன்றவற்றைக் கூட வாட்டர்ஃபால், ரெக்டாங்கிள் என்று சொல்வதைக் கேட்டு எல்லோரும் பிரமித்துவிட்டனர். பாலர் வகுப்புக்குச் செல்லும் இவனைக் கண்டு ஆசிரியரும் சக மாணவர்களும் மிரண்டுவிடுகின்றனர். அரபிக் மொழியை இவன் கற்றுக்கொள்ளாவிட்டால் இந்தக் கிராமத்தில் வசிப்பது கடினம் என்று கவலை கொள்கிறார்கள்.

பலருக்கும் தெரிந்த ஆங்கிலமாவது பேசுகிறானே!

 

 

இத்தாலியின் பியாசென்ஸா ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில், கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் தவறி விழுந்துவிட்டார். “ரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் ஓடி வந்தோம். ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தோம். அந்தப் பெண் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். கால் உடைந்துவிட்டதால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை. வலியில் மிகவும் துடித்துக்கொண்டிருந்தார். வெள்ளை ஆடை அணிந்த ஒரு இளைஞர் இந்தக் காட்சியின் பின்னணியில் தன்னை செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அருகில் இருந்த காவலர்கள் அவர் எடுத்த படங்களை அழிக்கச் சொன்னார்கள். ஒரு உயிர் துடிக்கும்போது செல்ஃபி எடுக்கும் எண்ணம் எப்படி வருகிறது என்றே புரியவில்லை” என்கிறார் பத்திரிகையாளர் ஜியார்ஜியோ லாம்ப்ரி.

செல்ஃபி மோகம் இங்கிதமற்றது!

http://tamil.thehindu.com/world/article24101277.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: 18 வயதில் 80 வயது தோற்றம்

 

 
08chskopic
 
 

சீனாவைச் சேர்ந்த ஸியாவோ குய், 80 வயது முதியவர்போல் தோற்றம் அளிக்கிறார், ஆனால் இவருக்கு 18 வயதுதான் ஆகிறது. பள்ளி இறுதியாண்டில் படித்துவரும் ஸியாவோ, அரிய வகை முகச் சுருக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். “நான் நடுநிலைப் பள்ளியில் படித்தபோதுதான் என் முகம் சுருக்கமடைய ஆரம்பித்தது. மருத்துவரிடம் சென்றோம். ஏராளமான பரிசோதனைகளின் முடிவில், இது அரிய வகைக் குறைபாடு என்று சொன்னார்கள். இப்போதைக்கு இதுக்குச் சிகிச்சை இல்லை. ஆரம்பத்தில் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பிரச்சினை என்று வருத்தப்பட்டிருக்கிறேன். விரைவிலேயே உண்மையை ஏற்றுக்கொள்ள என் பெற்றோர் பழக்கப்படுத்தி விட்டனர். நான் என்பது என் முகம் அல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். ஆரம்பத்தில் என்னைச் சிலர் பள்ளியில் கிண்டல் செய்தார்கள். அதை நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால், அவர்களும் புரிந்துகொண்டனர். இப்போது சக மாணவர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று யாரும் என் உருவத்தை வைத்து என்னை மதிப்பிடுவதில்லை” என்கிறார் ஸியாவோ. “எங்கள் பள்ளியில் ஸியாவோ படிப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். மிகவும் புத்திசாலி. முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர். விளையாட்டுகளிலும் மற்ற போட்டிகளிலும் இவர் கலந்துகொண்டால், பரிசு வாங்காமல் திரும்பியதில்லை. கடின உழைப்பாளி. மிகவும் நல்ல குணம் கொண்டவர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விருப்பத்துக்குரியவர். இவரை ‘சூப்பர்மேன்’ என்றுதான் எல்லோரும் கூப்பிடுகிறார்கள். ஸியாவோவின் இந்தக் குறைபாடுதான் இவரை இவ்வளவு திறமை மிக்கவராக மாற்றியதோ என்று கூட நாங்கள் நினைப்பதுண்டு. சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து, பெரிய அளவில் சாதனை செய்வார். அப்போது அவரின் பெற்றோர், பள்ளி, பல்கலைக்கழகம் மட்டுமல்ல, இந்த நாடே பெருமைகொள்ளும்” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் ஸியாவோவின் ஆசிரியர்.

 

‘பா’ திரைப்படத்தில் வரும் அமிதாப் போலிருக்கிறார்! !

கோ

ட் தீவில் ஒரு முதலையைத் துரத்தும் நாயின் வீடியோ கடந்த ஆண்டு வைரலானது. தன்னுடைய நண்பரை முதலை கொன்றுவிட்டதால், 9 ஆண்டுகளாகப் பழிவாங்கும் முயற்சியில் இருந்து வந்தது இந்த நாய். “நகர வாழ்க்கை பிடிக்காமல்தான் இந்தத் தீவில் குடியேறினோம். நாய், முதலை, பறவைகளை வளர்த்து வந்தேன். நான் எவ்வளவோ தடவை நாயைத் தடுத்துப் பார்த்தேன். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தண்ணீர் அருகே சென்று, முதலையைப் பயமுறுத்தாமல் இருக்காது. சில நேரங்களில் முதலையின் வாய் அருகே கூட சென்றுவிடும். இப்படித் தைரியமாக நாய் முதலையுடன் அடிக்கடி மோதும்போதே என்றாவது ஒருநாள் முதலையால்தான் நாய்க்கு முடிவு வரும் என்று நினைத்தேன். அது நிகழ்ந்துவிட்டது. மிகவும் தைரியமான, போராட்டக் குணம் மிக்க நாய். முதலையை ஒன்றும் சொல்ல முடியாது, கொல்வது அதன் இயல்பு. இனிமேல் வளர்க்கும் நாயை முதலையிடம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் கை ஹான்சென்.

தைரிய நாய்!

http://tamil.thehindu.com/world/article24110672.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மாட்டிக்கொண்ட படிக்காத மேதை

 

 
09chskoplane
 
 

ரஷ்யாவின் பயணிகள் விமானத்தில் விமானியாக 5 ஆண்டு காலம் பணியாற்றிய டாராஸ் ஷெலஸ்ட், போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வத்தில் சுயமாகவே விமானம் குறித்த அனைத்து விஷயங்களையும் கற்றிருக்கிறார். முறையாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறவில்லை, பயிற்சி எடுக்கவில்லை. 1974-ம் ஆண்டு மாஸ்கோ அருகே பிறந்தார். சிறிய வயதிலேயே விமானியாக வேண்டும் என்று கனவு. விமானப் பயிற்சி நிலையங்களுக்கு நண்பர்களுடன் செல்வார். விமானம் தொடர்பான புத்தகங்கள், கட்டுரைகளைத் தேடித் தேடிப் படிப்பார். நண்பரின் அப்பா உதவியோடு சிறிய விமானங்களை ஓட்டிப் பார்க்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றார். எல்லோரும் பொழுதுபோக்காகத்தான் கற்றுக்கொள்வதாக நினைத்தனர். ஆனால் டாராஸ் மிகவும் முனைப்பாக ஒவ்வொன்றையும் கற்றுத் தேர்ந்தார்.

 

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் விமானப் பயிற்சிக் கல்லூரியில் சேருவதற்காகப் பலமுறை தேர்வுகளை எழுதினார். அவரால் வெற்றி பெற முடியவில்லை. வேறு வழியின்றி ஒரு வீடியோகேம் விளையாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனாலும் விமானி ஆகும் லட்சியத்தைக் கைவிடவில்லை. ஒரு போலிச் சான்றிதழைத் தயார் செய்தார். ஓராண்டுக்குப் பிறகு மிகச் சிறிய விமான நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். அவர்கள் வைத்த தேர்வுகளில் தேறினார். பயிற்சி பெற்றார். இறுதியில் விமானியாகப் பணியில் சேர்ந்துவிட்டர். கடினமாக உழைத்தார். மேலும் மேலும் ஆர்வத்தைப் பெருக்கிக்கொண்டார். சிறந்த விமானி என்று பெயரெடுத்தார். பிறகு மிகப் பெரிய ரஷ்யன் ஏர்லைன் நிறுவனத்தில் விண்ணப்பித்தார். தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று, விமானியாக வேலையில் அமர்ந்தார்.

அதுவரை எந்த நிறுவனமும் இவரது சான்றிதழ் போலி என்று கண்டுபிடிக்கவில்லை. 2012 முதல் 2015 வரை 2,660 மணி நேரம் விமானிப் பணியை மேற்கொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். 2015 ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவிலிருந்து சைப்ரஸ் செல்லும் விமானத்தை ஓட்டினார். உக்ரைன் பகுதியிலிருந்து தொழில்நுட்ப மொழியில் சமிக்ஞைகள் வந்தன. அதற்கு ‘உக்ரைனுக்கு மகிமை’ என்று பதில் அனுப்பிவிட்டார் டாராஸ். அப்போதுதான் இவரது போலித்தனம் வெளிப்பட்டது. விமான நிறுவனத்துக்குப் புகார் சென்றது. விசாரணை ஆரம்பித்தது. “அவர் முறையாகப் படிக்கவில்லையே தவிர, மிகச் சிறந்த விமானியாக வேலை செய்தார். இதுவரை வேலை நிமித்தமாக சின்னத் தவறு கூடச் செய்ததில்லை. ஆனால் விமானிப் பணி என்பது எவ்வளவு முக்கியமானது. இதில் முறையாகப் பயிற்சி பெறாவிட்டால், தொழில்நுட்ப சமிக்ஞைகளைப் புரிந்து, அதற்கேற்ப செயல்பட முடியாது. எவ்வளவு பேரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் இனி இவர் ரஷ்யா வில் விமானத்தை ஓட்டக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதேபோல சான்றிதழைச் சரி பார்க்காதவர்கள் மீதும் குற்றம் இருக்கிறது” என்கிறார் ஒரு விமானி. ஆனால் டாரஸ், ‘என்னுடைய உண்மையான சான்றிதழ் தொலைந்துவிட்டது. அதனால் போலிச் சான்றிதழைப் பெற்றேன்’ என்றும் ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.

மாட்டிக்கொண்ட படிக்காத மேதை!

http://tamil.thehindu.com/world/article24119748.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: போராட்டப் பாடல்

 

 
10chskopic
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 6 வயது அன்யா ஓட்லே, அரிய வகை சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அன்யா பாடிய ‘போராட்டப் பாடல்’ வீடியோ, உலகம் முழுவதும் வைரலாகியிருக்கிறது. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது அன்யா மிகவும் சோர்வாக இருந்தாள். வயிறு கொஞ்சம் பெரிதாகத் தெரிந்ததால் உடனே மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுநீரகத்தில் எலுமிச்சை அளவு புற்றுக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கீமோ தெரபி ஆரம்பிக்கப்பட்டது.

 

“ஒவ்வொரு கீமோ தெரபியின்போதும் மிகவும் சோர்ந்து போனாள். ஒருகட்டத்தில் தனக்கு ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டாள். நான் விரைவில் மரணம் அடைந்துவிடுவேனா என்ற அவளது கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது. உனக்கு வந்திருப்பது புற்றுநோய்தான். ஆனால் தைரியமாக இருந்தால் அதை விரட்டி விடலாம் என்று சொன்னவுடன், அவளின் முகம் மலர்ந்தது. அன்று முதல் கீமோ தெரபி எடுக்கும்போது பெரிய அளவில் அழுகையோ, புலம்பலோ அவளிடம் இல்லாமல் போனது. மற்ற குழந்தைகள் எல்லாம் அழுதுகொண்டிருப்பார்கள். இவள் தைரியமாக மருத்துவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பாள்.

வலியிலிருந்து அவள் கவனத்தைத் திருப்ப, அவளுக்குப் பிடித்த லிட்டில் மிக்ஸ் ஆல்பங்களை வாங்கிக் கொடுத்தேன். அதைத் கேட்டு, கேட்டு தன்னுடைய துன்பங்களை மறந்தாள். 28 தடவை எடுத்த கீமோ தெரபியின் விளைவாக புற்றுக் கட்டி காணாமல் போய்விட்டது. ஜூலை வரை கீமோ எடுக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் புற்றுநோய் வந்துவிடாமல் இருப்பதற்காக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்யாவின் முடியை வெட்டி அவளுக்கு ஒரு விக் தயார் செய்து கொடுத்தோம். ஆனால் அதை அவள் அணிய விரும்பவில்லை. எனக்குப் புற்றுநோய் இருப்பது எல்லோருக்கும் தெரியட்டும், என்னைப் பார்த்து எல்லோரும் தைரியமாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாள். எங்கள் வீட்டுத் திருமணத்தில் முதல் முறை மேடையேறிப் பாடினாள். பாட்டுக்கு இடையில், ‘இது போராட்டத்துக்கான பாடல். நான் நோயிலிருந்து மீண்டு வந்ததற்கான பாடல்’ என்று அவள் சொன்னவுடன் அத்தனை பேரும் கண்ணீர் விட்டனர். சிரித்துக்கொண்டே பாடலைப் பாடி முடித்தாள் அன்யா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்கிறார் அன்யாவின் அம்மா கேத்ரின்.

போராட்டக்காரி அன்யாவுக்கு ஒரு பூங்கொத்து!

 

சாலைகளில் நடக்கும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் பெரும்பாலானவர்கள் கேட்பதில்லை. விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. இதைத் தடுப்பதற்காகச் சீனாவின் ஸியான் நகரின் சாலைகளில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொபைல் போனைப் பயன்படுத்துகிறவர்கள் இந்தப் பகுதியில் மட்டும் நடக்க வேண்டும். மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது எதிரில் உள்ளவர்கள் மீது மோதினாலும் பெரிய அளவுக்குப் பாதிப்பு வராது. மற்ற வாகனங்கள் இந்தப் பகுதியில் பயணிக்கக் கூடாது.

இவர்கள் வழி தனி வழி!

http://tamil.thehindu.com/world/article24126882.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உலக மசாலா: காணாமல் போன 100 வயது ஆமை

 

 

 
21chkantortoise

இங்கிலாந்தைச் சேர்ந்த 86 வயது டெர்ரி பெல்ப்ஸ், காணாமல் போன தன்னுடைய 100 வயது ஆமையைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு விளம்பரம் கொடுத்திருந்தார். “எனக்கும் என் மனைவிக்கும் ஒரே துணை இந்த ஆமைதான். 100 வயதான ஆமை, எங்களிடம் 30 ஆண்டுகளாக இருக்கிறது. தினமும் பின்பக்க கதவை நாங்கள் திறப்பதற்காகக் காத்திருக்கும். சென்ற வாரம் கதவைத் திறந்தபோது ஆமையைக் காணவில்லை. இதுவரை வீட்டைவிட்டு அது வெளியே சென்றதில்லை. பல இடங்களில் தேடினோம். கிடைக்காததால் விளம்பரம் கொடுத்தோம். எங்களின் தூக்கம் தொலைந்தது. ஆமைக்கு உணவு கொடுக்க வரும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் வருத்தமடைந்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகு, ஒரு மைல் தொலைவில் ஆமையைக் கண்டெடுத்ததாகச் சொல்லி, நல்ல மனிதர் ஒருவர் கொடுத்துவிட்டுப் போனார்” என்கிறார் பெல்ப்ஸ்.

 

ஊர் சுற்றிப் பார்க்கப் போயிருக்குமோ!

 

சீனாவின் செங்குடு நகரில் ஒரு மாதத்துக்கு முன்பு ஜியாமெனர் என்ற உணவகம் தொடங்கப்பட்டது. உணவகத்தைப் பிரபலப்படுத்த ஒரு மாதத்துக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 வாரங்களிலேயே உணவகம் மூடும் நிலைக்கு வந்துவிட்டது. “நானும் நண்பரும் சேர்ந்துதான் உணவகத்தை தொடங்கினோம். ரூ.1,200 கொடுத்து எங்களிடம் ஒரு அட்டையை வாங்க வேண்டும். காலை முதல் இரவு வரை பஃபே உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலையில் உணவகத்தைத் திறப்பதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர். ஒரு நாளைக்கு சுமார் 500 வாடிக்கையாளர்கள் உணவகத்துக்கு வந்தனர். 2, 3 மணி நேரம் மட்டுமே எங்களால் தூங்க முடிந்தது. ஊழியர்களை ஷிஃப்ட் முறையில் பணிக்கு அமர்த்தினோம். சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்கள் உணவகத்தில் சாப்பிட ஆரம்பித்தனர். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக நினைத்தோம். பிறகுதான் அந்தத் தவறை அறிந்தோம். நாங்கள் கொடுத்த அட்டையில் வாடிக்கையாளரின் படமோ வேறு அடையாளமோ கேட்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் 3 வேளை சாப்பிட்டதோடு, தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அட்டையைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டனர். அட்டை இருப்பவர்களை அனுமதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் அளவுக்கு அதிகமாக செலவானது. கணிசமான வாடிக்கையாளர்கள் நேர்மையாக இருந்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஏமாற்றியவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருந்தது. 11 நாட்களில் ரூ.55 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தாக்குப் பிடிக்க முடியாமல் இரண்டே வாரங்களில் உணவகத்தை மூடிவிட்டோம். மக்களின் நேர்மையை நம்பி இந்தத் திட்டத்தை தொடங்கினோம். ஆனால் மக்கள் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை அறிந்துகொண்டோம். எதிர்காலத்தில் இன்னும் கவனமாக இருப்போம்” என்கிறார் சூ ஸி.

நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

http://tamil.thehindu.com/world/article24216486.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அசலை முந்திய நகல்!

 

 
13chskopic
 
 

பிரபலமானவர்களைப்போல் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உருவத்தை மாற்றிக்கொள்வதற்குப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு சிலரே அதில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த ஹி செங்ஸி. சீனாவின் மிகப் பிரபலமானவர் ஃபான் பிங்பிங். நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், ஃபேஷன் ஐகான் போன்ற பல அடையாளங்கள் இவருக்கு உண்டு. எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று, சீனர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார். ஏராளமான பெண்களின் கனவு இவரைப்போல் உருவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான். 23 வயது ஹி செங்ஸியைப் பார்ப்பவர்கள், ஃபான் பிங்பிங்போல இருப்பதாகச் சொல்வார்கள். அப்படித்தான் தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஆசை இவருக்கு வந்தது. 8 ஆண்டுகள் கடினமான காலகட்டம். ஏராளமான பணத்தைச் செலவு செய்து பல்வேறு உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்துகொண்டார்.

 

அச்சு அசலாக ஃபான் பிங்பிங் போன்றே காட்சியளித்தார். பார்ப்பவர்கள் பிங்பிங் என்று நினைத்துப் பேச ஆரம்பித்தார்கள். ஆட்டோகிராப் கேட்டார்கள். இந்த நாளுக்காக இவ்வளவு காலமும் காத்திருந்த ஹி செங்ஸியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனத் தொலைக்காட்சி ஒன்றில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். அப்போதுதான் பிங்பிங் போன்று இன்னொரு பெண்ணா என்று சீனர்கள் வியந்து போனார்கள். சர்வதேச செய்தித்தாள்களில் ஹி செங்ஷி இடம் பிடித்தார். அந்தப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார். ஆனாலும் வைல்ட்கார்ட் சுற்றில் ஏராளமான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் போட்டிக்குள் நுழைந்தார். இதற்குக் காரணம் இவரது பாடல் அல்ல, பிங்பிங் போன்ற தோற்றம்தான் என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு பக்கம் எதிர்ப்பு வலுவாக இருந்தது. இன்னொரு பக்கம் மாடல், நடிப்பு என்று வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. விரைவிலேயே ஹி செங்ஷி பிரபலமானவராக மாறிப் போனார். இவர் எந்த மருத்துவமனையில் அழகு சிகிச்சை செய்துகொண்டார் என்ற ஆராய்ச்சிகள் நடந்தன. இறுதியில் இவரது காதலரின் மருத்துவமனை என்று ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இப்போது இந்த அழகு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏராளமானோர் படையெடுக்கிறார்கள்.

உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும் இந்த மருத்துவமனையும் செங்ஷியைப்போல பிரபலமாகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களில் பிங்பிங்கை விட ஹி செங்ஹிக்குதான் அதிக செல்வாக்கு. இவரை 17 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பிரபலமான ஒருவரைப்போல தன்னை மாற்றிக்கொண்டாலும் தனக்கென தனியான அடையாளத்தைக் காட்டிவிட்டார். “எனக்கு ஃபான் பிங்பிங் மிகவும் பிடிக்கும்தான். அவரைப்போல என் உருவத்தை மாற்றிக்கொண்டதும் உண்மைதான். ஆனால் அவரது அடையாளத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அவர் அவர்தான், நான் நான்தான். ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவரைப்போல இருப்பதற்காக வந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எனக்கென தனி அடையாளத்தை நான் உருவாக்கிக்கொண்டதால்தான் நான் இந்த அளவுக்குப் புகழ் பெற்றுள்ளேன்” என்கிறார் ஹி செங்ஷி.

அசலை முந்திய நகல்!

http://tamil.thehindu.com/world/article24150153.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: சகிப்புத்தன்மையற்ற செயல்

 

 
20chskopic

மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்த ட்ரம்ப் அரசு, அதைத் தற்போது அமல்படுத்தி வருகிறது. கடந்த 6 வாரங்களில் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பெற்றோர் கைது செய்யப்பட்டு ஓரிடத்திலும் குழந்தைகள் பல்வேறு முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளன. புலிட்சர் விருது வென்ற ஒளிப்படக் கலைஞர் ஜான் மூர், “மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதும் குழந்தைகளின் ஓலமும் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. எல்லைப் பிரச்சினையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சகிப்புத் தன்மையற்ற செயலை இது காட்டுகிறது. அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்ட துயரத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை என்னால் படம் பிடிக்கவே முடியவில்லை. அந்தக் குழந்தைகளின் அழுகை அசாதாரணமாக இருந்தது. பெற்றோரும் இனி எப்போது குழந்தைகளைப் காணப் போகிறோம் என்ற பயத்துடன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. பல ஆயிரம் மைல்கள் பயணம் மேற்கொண்டு, அடைக்கலம் தேடி வரும் மக்களை இன்னும் மோசமான துயரத்தில் தள்ளிவிடுகிறது ட்ரம்ப் அரசு. அங்கிருந்து வந்தபிறகே என்னால் மூச்சு விட முடிந்தது” என்கிறார். அமெரிக்க வரலாற்றில் இது மோசமான செயல் என்று லாரா புஷ், மிஷேல் ஒபாமா உட்பட பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

 

மனிதாபிமானமற்ற, சகிப்புத்தன்மையற்ற செயல்!

 

 

கனடாவைச் சேர்ந்த 12 வயது ஆலிவர் ரியோக்ஸ், 6 அடி 11 அங்குல உயரம் இருக்கிறார்! கூடைப்பந்து விளையாட்டு வீரராக இருக்கும் ஆலிவர், அவரது அணியின் சொத்தாக மதிக்கப்படுகிறார். தன் வயது குழந்தைகளை விட 2 அடி உயரமாக இருக்கிறார். பாதங்களைச் சிறிதும் தூக்க வேண்டிய அவசியம் இல்லாமல், 8 அடி உயரம் உள்ள கூடைக்குள் பந்தைப் போட்டு விடுகிறார். பாய்ந்து செல்லும் பந்தைக் கையால் திசைத் திருப்புகிறார், பிடிக்கிறார். இதனால் இவரது அணி எளிதில் வெற்றி பெற்றுவிடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் ஆலிவரின் அணி அதிகமான வெற்றிகளைப் பெற்று, பாராட்டுகளை அள்ளி வருகிறது. இப்போது ஆலிவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ‘ஒரே உயரம் கொண்ட குழந்தைகளுடன்தான் போட்டி நடத்த வேண்டும். அசாதாரணமான உயரம் கொண்ட ஒருவருடன் அவரது இடுப்பு உயரமே இருக்கும் குழந்தைகள் விளையாடுவதில் நியாயமே இல்லை. ஆலிவரால் இந்த அணி வெற்றி பெறுவதை ஒரு வெற்றியாகக் கருத முடியாது’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். “ஆலிவர் அளவுக்கு அதிகமான உயரத்துடன் இருந்தாலும் அவருக்கு 12 வயதுதான் ஆகிறது. அவர் ஒரு குழந்தை. அவரிடம் பேசிப் பாருங்கள், சிறுவனுக்குரிய குணங்கள்தான் இருக்கும். உயரத்தைக் காரணம் காட்டி, அவரது திறமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. உயரம் என்பதற்காக இவரைப் பெரியவர்கள் அணியில் சேர்க்க முடியுமா? கூடைப் பந்து விளையாடக் கூடாது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்கிறார் ஆலிவரின் பயிற்சியாளர்.

ஆலிவர் என்ன செய்வார், பாவம்!

http://tamil.thehindu.com/world/article24206852.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இப்படியும் ஒரு மகனா!

 

 
23chskopic
 
 

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த மூன்று நிறுவனங்கள் இணைந்து ‘நல வாழ்வு’ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றன. வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷயர் ஹாத்வே, ஜெஃப் பேஜோஸின் அமேசான், ஜாமி டைமனின் ஜேபி மோர்கன் சேஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து ஆரம்பிக்கும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் அதுல் காவண்டே. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 52 வயது அதுல் காவண்டே, அறுவை சிகிச்சை நிபுணர், பேராசிரியர், எழுத்தாளர், மக்கள் நல வாழ்வு மீது அதிக அக்கறை கொண்டவர். முதல்முறையாக மிகப் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பணிபுரியப் போகிறார். ஆனாலும் தான் இதுவரை செய்துவந்த பணிகளில் இருந்து விலகப் போவதில்லை என்கிறார். அமெரிக்க நிறுவனங்கள் தொழிலாளர்களின் மருத்துவக் காப்பீட்டுக்காகச் செலவிடும் தொகையால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகச் சொல்லி வருகின்றன. நிறுவனங்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து ‘நல வாழ்வு’ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றன. இது லாப நோக்கம் இல்லாத நிறுவனமாகச் செயல்படும் என்கிறார்கள்.

 

அதுல் காவண்டே கூறியபோது, “நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுவதும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். மக்களின் மருத்துவ செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அந்த லட்சிய பாதையில் தொடர்ந்து பயணம் செய்வேன்” என்றார்.

வாழ்த்துகள் டாக்டர்!

 

 

இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது மாத்யூ கெர்லே, தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்த குற்றத்துக்காக 32 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். சிறையில் இருந்து வந்த பிறகும் அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. “ஒரு பெற்றோராக எங்கள் மகனுக்குப் பணம் கொடுத்து உதவ நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அளவுக்கு அதிகமாகப் பணம் கேட்கும்போது எங்களால் என்ன செய்ய முடியும்? ஓராயிரம் தடவை பணம் கேட்டாலும் ஓராயிரம் பொய்யான காரணங்களை அவனால் சொல்ல முடிகிறது. இன்டர்வியூ போவதற்கு ஷேவ் செய்யப் பணம் வேண்டும் என்பான். பணம் கொடுத்தால் ஷேவிங் பிளேடு உடைந்துவிட்டது வேறு வாங்க வேண்டும் என்பான். கொடுக்காவிட்டால் தாடியுடன் சென்றதால் வேலை கிடைக்கவில்லை என்பான். எந்த வேலைக்கும் செல்ல அவன் தயாராக இல்லை. எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் புகார் கொடுத்தோம். சிறை தண்டனையாவது அவன் மனதை மாற்றும் என்று நினைத்தோம். ஆனால் அவன் சிறிதும் மாறவில்லை. சென்ற மாதத்தில் ஒருநாள், 24 மணி நேரத்தில் 30 தடவை எங்களை அழைத்தான். பணம் வேண்டும் என்பதைத் தவிர அவனிடம் வேறு விஷயம் இல்லை. நள்ளிரவு என்று கூட அவன் எங்களுக்குக் கருணை காட்டவில்லை. இது தவிர குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது. வேறு வழியின்றி மீண்டும் புகார் கொடுத்தோம். விசாரித்த அதிகாரிகள், “பெற்றோரைத் துன்புறுத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் அவன் எங்களைத் தொடர்புகொள்ளக் கூடாது, வீட்டுக்கு அருகில் கூட வரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றனர். எந்தப் பெற்றோரும் செய்ய விரும்பாத செயலை நாங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு எங்களைத் தள்ளிவிட்டான்” என்கிறார்கள் கெர்லேயின் பெற்றோர்.

இப்படியும் ஒரு மகனா!

http://tamil.thehindu.com/world/article24237805.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: தேயிலை வாங்கியதால் 10 ஆண்டு சிறை

 

 
12chskopic
 
 

மூலிகைத் தேயிலை வாங்கிய குற்றத்துக்காக ரஷ்யாவைச் சேர்ந்த 35 வயது அலெக்ஸி நோவிகோவ், 2 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவிக்கிறார். 2015 செப்டம்பர் மாதம், சமாரா பகுதியில் வசிக்கும் மனைவியையும் மகளையும் அழைத்து வருவதற்காகக் கிளம்பினார். பேருந்தில் பயணம் செய்தால் நேரம் அதிகம் ஆகும் என்பதால், கஜகிஸ்தான் வழியாகக் குறுக்கு வழியில் சமாரா அடைய முடிவு செய்தார். கிடைக்கும் வாகனங்களில் ஏறிப் பயணத்தை மேற்கொண்டார். கஜகிஸ்தான் எல்லைக்கு வந்தபோது, எதுவும் பிரச்சினை வர வேண்டாம் என்ற எண்ணத்தில் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்தார். எல்லையில் நடந்து சென்றால் பிரச்சினை வருமா என்று கேட்டார். பையைப் பரிசோதித்து விட்டால் ஒரு பிரச்சினையும் வராது என்றார்கள். பையைக் காட்டினார். அதிலிருந்து மூலிகைத் தேயிலைப் பொட்டலங்களை எடுத்தனர். தான் சர்க்கரை நோயாளி என்பதால், மூலிகைத் தேயிலையைப் பயன்படுத்துவதாக சொன்னார் அலெக்ஸி. பொட்டலத்தில் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அவர்களுக்கு மொழி தெரியாததால் மோப்ப நாயும் போதை மருந்து நிபுணரும் வரவழைக்கப்பட்டனர். நாய் தேயிலையை நுகர்ந்துவிட்டு, பேசாமல் இருந்துவிட்டது. போதை மருந்து நிபுணர் பரிசோதித்துவிட்டு, இதில் போதைப் பொருள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அதிகாரிகள் அதைக் குறிப்பிடாமல் சான்றிதழ் கொடுத்து அனுப்பிவிட்டனர். பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார். 3 மாதங்களுக்குப் பிறகு திடீரென்று அலெக்ஸியின் பெயர் ரஷ்யாவின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 800 கி.மீ. தூரத்திலிருந்து போதை மருந்து கடத்தி வந்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்தது. இறுதியில் 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

அலெக்ஸியின் வழக்கறிஞர், “ரஷ்ய நீதித்துறையையே கேள்விக்கு உட்படுத்தக்கூடிய மோசமான தீர்ப்பு. போலியாக வழக்கை ஜோடித்து, ஒரு நிரபராதிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கைப்பற்றியதாகச் சொன்ன போதைப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவே இல்லை. அதிகாரிகளுக்குள் ஏதோ பிரச்சினை. அதில் அலெக்ஸியைச் சிக்க வைத்துவிட்டனர். இறுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை நீதிமன்றத்தில் காட்டச் சொன்னோம். அதில் ஆழ்ந்த பச்சை வண்ண இலைகள், புதினா மணம் வருகிறது என்று அதிகாரிகள் பேசிக்கொள்வதும் போதை மருந்து நிபுணரும் நாயும் பரிசோதித்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதையும் இன்னும் சில ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். சரியாக விசாரிக்காமல், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் காட்டாமல் ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக மாற்றியது தவறு என்று எடுத்துரைத்தேன். இறுதியில் போதை மருந்து கடத்தல் வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். ஆனால் ‘மருந்து கடத்தல்’ என்ற புதிய வழக்கு தொடுக்கப்பட்டதால், சிறைத் தண்டனையை ரத்து செய்யாமல் விட்டுவிட்டனர். மீண்டும் வழக்கு நடத்த வேண்டும்” என்கிறார். மனித உரிமை ஆணையம் தற்போது இந்த வழக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது.

ஐயோ… ஒரு தேயிலைப் பொட்டலம் வாங்கியது குற்றமா?

http://tamil.thehindu.com/world/article24141810.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: 11 வயது ஜீனியஸ்!

 

 
safi
 
 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மத் சஃபியின் உத்வேகம் அளிக்கக் கூடிய பேச்சைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்கள். 11 வயதே ஆன இந்தச் சிறுவன், தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகமான மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்! ஒரு மனிதர் தன் வாழ்நாளில் செய்யக்கூடிய செயல்களை, சாதனைகளை இந்தப் பதினோரு வயதிலேயே சஃபி செய்துவிட்டார்! மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பெஷாவர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு விரிவுரையாளர் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகவும் செய்கிறார். அதனால் இவரை மக்கள், ‘சூப்பர் கிட்’, ‘மோட்டிவேஷனல் குரு’, ‘லிட்டில் ஜீனியஸ் ஆஃப் பாகிஸ்தான்’ என்றெல்லாம் அழைக்கிறார்கள். இந்தப் புகழும் பாராட்டும் குறித்து எந்தவிதக் கர்வமும் இன்றி, மிக இயல்பாகத் தன்னுடைய வேலைகளில் கவனமாக இருக்கிறார் சஃபி. ‘‘இவன் சராசரி குழந்தை இல்லை என்பதை அறிந்துகொண்டேன். இவனுடைய வயது குழந்தைகளை விட எப்போதுமே அதிகமாகச் சிந்திப்பான், செயல்படுவான். அதனால் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டுதான் பாடம் கற்பித்து வருகிறோம். இவன் கடவுள் கொடுத்த சிறப்புக் குழந்தை. என்றாவது ஒருநாள் பாகிஸ்தானின் தலைவராக வருவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்கிறார் அப்பா அப்துல் ரெஹ்மான் கான். இவர் சொல்வது அதிகம் என்று சொல்பவர்களும் விமர்சிப்பவர்களும் கூட 11 வயது சிறுவனின் பேச்சு ஆயிரக்கணக்கான மக்களை மெய்மறக்கச் செய்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

 

யூடியூப் சானல் ஒன்றை நடத்தி வருகிறார் இவர். இதில் 1,60,000 பேர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள். சில வீடியோக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இவரது உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சுகளைப்போல் இதுவரை யாரும் பேசியதில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு 11 வயது சிறுவன் பேசும்போது அது அசாதாரணமாக மாறிவிடுகிறது. ‘‘சில மாதங்களுக்கு முன்பு வாழ்க்கை குறித்து நம்பிக்கை இழந்தேன். வேலை கிடைக்கவில்லை. வாழ்வதற்கு வழி இல்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தேன். என் நண்பன் சஃபியின் வீடியோவைப் பார்க்கச் சொன்னான். முதல்முறை பார்த்தபோதே என் மனம் மாற்றம் அடைந்தது. இரண்டாவது முறை பார்த்து முடித்த போது முற்றிலும் புதிய மனிதனாக மாறியிருந்தேன். எவ்வளவு நம்பிக்கையான பேச்சு! மிக ஸ்டைலாக, அழகாக, நேர்த்தியாகப் பேசுவதைக் கேட்கும்போது ஏதோ அற்புதம் நிகழ்கிறது. ஒரு சிறுவனால் இவ்வளவு வேலைகளைச் செய்யும்போது என்னால் ஒரு வேலை செய்ய முடியாதா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்” என்கிறார் ஓர் இளைஞர்.

பெஷாவரில் இருக்கும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சஃபி. இவருக்குப் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை. ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் படித்துக்கொண்டிருப்பார். தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார். ‘‘நான் இந்த நாட்டின் தலைவராக வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால் அதை ஏற்கத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். எங்கள் நாட்டு இளைஞர்கள் மீது குத்தப்பட்ட தீவிரவாதி முத்திரையை அழிப்பதுதான் என்னுடைய லட்சியம். நாங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்தால் போதும். அதற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஹம்மத் சஃபி.

பாகிஸ்தானின் வருங்காலத் தலைவருக்கு வாழ்த்துகள்!

http://tamil.thehindu.com/world/article24159982.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: விநோதமான வெற்றி ஃபார்முலா!

 

 
 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
15chskopic

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் ‘ஸ்டானீமீஹோய்’ என்ற உணவகம் மற்ற உணவங்கங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த உணவகத்தின் ருசி அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. காரணம், இங்கே உணவு பரிமாறும் ஆண்களின் உடை, நடை, பாவனைகள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுகின்றன! உணவக ஊழியர்கள் அனைவரும் சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் பெண்களின் உடைகளை அணிந்து விநோதமாகக் காட்சியளிக்கிறார்கள். இந்த உணவகத்தின் உரிமையாளர் 34 வயது வீராசாக் மேசா, “நான் ஒரு காபி கடையை ஆரம்பிக்கத்தான் விரும்பினேன். ஒரு உணவகத்தில் அமர்ந்து நத்தை சூப், நண்டு வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஓட்டுடலிகளைச் சமைப்பதற்குப் பெரிய அளவில் உபகரணங்கள் தேவை இல்லை என்பதை அறிந்தேன். உடனே ஓட்டுடலிகளுக்கென்று தனியாக ஒரு உணவகம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். இணையதளங்களில் உணவகம் நடத்துவது குறித்துக் கற்றுத் தேர்ந்தேன். ஸ்டானீமீஹோய் என்ற பெயரில் உணவகத்தையும் ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் வியாபாரமே ஆகவில்லை.

 

ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்குக் கூட வருமானம் வரவில்லை. மிகவும் துவண்டு போனேன். ஒருநாள் என் நண்பரின் அம்மா உணவகத்துக்கு வந்தார். ஒவ்வொரு உணவின் சுவையையும் அதிகரிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தார். பிறகு சுமாராக கூட்டம் வந்தது. என்ன செய்தால் என்னுடைய உணவகம் பிரபலமாகும் என்று யோசித்தேன். என் உணவகத்துக்குள் நுழையும்போதே மக்கள் புன்னகையுடன் வரவேண்டும். சாப்பிட்டுக் கிளம்பும்வரை அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆண் மாடல்களை உணவக ஊழியர்களாக மாற்றும் யோசனை தோன்றியது. ஆனால் அது உணவகத்தின் விற்பனையைப் பல மடங்கு உயர்த்துமா என்ற சந்தேகம் வந்தது.

இறுதியில் ஆண் மாடல்களுக்குப் பெண்கள் அணியும் கவர்ச்சி யான உடைகளை அணிய வைப்பது என்று முடிவு செய்தேன். பலரும் சிரித்தனர். உணவகத்தை 3 மாதங்கள் மூடினேன். வேலைக்குச் சேர்ந்தவர்கள் கூட இந்த உடை என்றதும் வேலையை விட்டு ஓடினார்கள். வழக்கத்தை விட நல்ல சம்பளம் பேசி, பயிற்சியளித்தேன். புதிய உணவகத்தைத் திறந்தேன். வெகு விரைவில் நான் விளம்பரம் செய்யாமலே உணவகம் பிரபலமானது. எங்கள் ஊழியர்களைப் பார்ப்பதற்காகவே வெகு தூரத்திலிருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். வியாபாரம் பெருகியது. பெண்கள் ரசிக்க மாட்டார்களோ என்ற அச்சம் முதலில் இருந்தது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ரசிக்கிறார்கள். ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இந்த வெற்றி தந்த நம்பிக்கையில் பலரும் கிளைகள் ஆரம்பிக்கச் சொல்லி எங்களை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னுடைய நோக்கம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது அல்ல. பணம் கொடுத்துச் சாப்பிட வரும் மக்கள், புன்னகை செய்துகொண்டே உணவுக்கான தொகையைத் திருப்தியாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறிவிட்டது. இந்த வாழ்க்கைக்கு இது போதும்” என்கிறார்.

விநோதமான வெற்றி ஃபார்முலா!

http://tamil.thehindu.com/world/article24169933.ece

15chskopic

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஆச்சரியமளிக்கிறார் இந்த ரியல் டாக்டர் டூலிட்டில்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
 
16chskopic
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயது ரூதி பிராட்ஷா, விலங்குகளிடம் பேசும் நிபுணராக இருக்கிறார். செல்லப் பிராணிகளிடம் பேசி, குறைகளைக் கண்டறிந்து, சிகிச்சையும் அளித்து வருகிறார். விலங்குகளிடம் அளவுக்கு அதிகமான நேசத்துடன் இருக்கும் ரூதி, தன்னை நிஜ வாழ்க்கை டாக்டர் டூலிட்டில் என்று சொல்லிக்கொள்கிறார். “மார்க்கெட்டிங்தான் என்னுடைய தொழில். 10 ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கருக்குச் சென்றிருந்தேன். அப்போது காடுகளுக்குள் பயணித்தபோது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. ‘இங்கிருந்து உடனே கிளம்பு’ என்று பல குரல்கள் கேட்டன. அந்தக் குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்தேன். மரத்தின் மீது அமர்ந்திருந்த லெமூர்கள் என் தலையில் மலத்தைப் போட்டன. அதற்குப் பிறகே லெமூர்கள்தான் இந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

 

என்னுடன் வந்தவர்களுக்கு இந்தக் குரல்கள் கேட்கவில்லை. அன்று முதல் விலங்குகளின் மொழி எனக்குப் புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுடன் பழகி, அவற்றைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொண்டேன். விலங்குகளின் மொழி, சமிக்ஞைகள், உடல்மொழியை வைத்து அவை என்ன சொல்கின்றன என்பதை சொல்லிவிடுவேன். அதேபோல் விலங்குகளுக்கும் நாம் பேசுவது அனைத்தும் புரிகிறது. சமீபத்தில் ஒருவர் குதிரையை அழைத்து வந்தார். குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது, இயல்பாக இல்லை என்று சொன்னார். நான் குதிரையின் அருகில் சென்றேன். உடனே விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. சிவப்பு வண்ணத் துடைப்பத்தால் சிவப்பு போலோ சட்டை அணிந்த ஒருவர், குதிரையை அடித்திருக்கிறார் என்பதை மிகுந்த வேதனையுடன் சொன்னது. நான் அதை உரிமையாளரிடம் சொன்னேன்.

அவர் அதிர்ந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு குதிரைப் பராமரிப்பாளர் சிவப்பு போலோ சட்டை அணிந்திருந்தார். அவர்தான் குதிரையை அடித்திருக்க வேண்டும் என்றார். இன்னொரு பெண், தாங்கள் வளர்த்து வந்த 4 பூனைகள் நெருப்பில் இறந்துவிட்டன. காரணம் புரியவில்லை என்று என்னை அழைத்தார். உயிருடன் இருந்தால்தானே அவற்றிடம் பேச முடியும் என்று நினைத்தேன். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறுவதற்காகத்தான் சென்றேன். அந்த இடத்தைப் பார்வையிட்டேன். இறந்த பூனைகளின் அருகில் சென்றேன். இறந்தும் அவை காரணத்தை எனக்குப் புரிய வைத்தன. உருளைக்கிழங்கு வறுவல் என்றால் ஆண் பூனைக்கு விருப்பம் அதிகம். உருளைக்கிழங்கு அடுப்பில் வெந்துகொண்டிருந்தபோது ஆர்வத்தில் பாய்ந்துவிட்டது. எண்ணெய் பரவி தீப்பற்றிக்கொண்டது. 4 பூனைகளும் பலியாகிவிட்டன என்றேன். அந்தப் பெண் என் கைகளைப் பிடித்துக்கொண்டார்” என்கிறார் ரூதி.

தன்னுடைய தனித் திறமையை இப்போது ரூதி லாபகரமான தொழிலாக மாற்றிக்கொண்டார். விலங்குகளின் மொழியைக் கேட்டுச் சொல்வதற்கு 90 ஆயிரம் ரூபாயும் விலங்குகளின் மொழியைக் கற்றுக்கொள்ள 1,80,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவரைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறார் இவர்.

ஆச்சரியமளிக்கிறார் இந்த ரியல் டாக்டர் டூலிட்டில்!

http://tamil.thehindu.com/world/article24178605.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இயற்கையை நேசிக்கும் இன்னொரு டெர்சு உஸாலா!

 

 
27chskopic
 
 
 

ஜப்பானைச் சேர்ந்த 82 வயது மசாஃபூமி நாகசாகி, 29 ஆண்டுகளாக மனிதர்கள் வசிக்காத தீவில் வாழ்ந்து வந்தார். முதுமையின் காரணமாக அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். “நான் ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்தில் வேலை செய்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நகர வாழ்க்கை பிடிக்காமல் போய்விட்டது. அதிலிருந்து தப்பி, சோட்டோபனாரி தீவுக்கு வந்து சேர்ந்தேன். மனிதர்கள் வசிக்காத தீவு அது. மீனவர்களே எப்போதாவதுதான் அந்தத் தீவில் இறங்குவார்கள். நான் வந்த ஒரே வருஷத்தில் பெரும் சூறாவளி வீசியது. அதில் என்னுடைய உடைகள் அத்தனையும் காணாமல் போய்விட்டன. அதிலிருந்து உடைகள் அணிவதை விட்டுவிட்டேன். கொசு, வண்டுகளின் கடியிலிருந்து தப்பிப்பதுதான் கடினம். பாம்புகள், சிறு விலங்குகள், பறவைகள் எல்லாம் நிறைய இருக்கின்றன. அவை ஒருபோதும் தேவையின்றி பிற உயிரினங்களைத் தொந்தரவு செய்ததில்லை. ஒருமுறை என்னுடைய கூடாரத்துக்குள் விஷப் பாம்பு இருந்தது. என்னைக் கண்டதும் சீறியது. நான் ஓரமாக உட்கார்ந்துவிட்டேன். உடனே அது வேகமாக ஓடிவிட்டது. ஒருவர் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. அரிசி, எரிபொருள், குடிநீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு எப்போதாவது அருகில் உள்ள தீவுக்குச் செல்வேன். அங்கே என் குடும்பத்தினர் பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். மனிதர்களே இல்லாவிட்டாலும் அந்தத் தீவு எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

 

திடீர் மழை, புயல், சூறாவளி, வெயில் என இயற்கையின் சவாலைச் சமாளித்து உயிர் வாழ்வது அற்புதமான அனுபவம். கடற்கரை முழுவதும் கடல் ஆமைகள் வருவதையும் முட்டையிடுவதையும் குஞ்சு பொரிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தீவில் கடுமையான நோய்கள் வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இயற்கை நம்மைக் காப்பாற்றுகிறதே தவிர, நமக்கு நோய்களைப் பரப்புவதில்லை என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டுகொண்டேன். இயற்கைச் சூழல் என்னை நிறையவே மாற்றிவிட்டது. சமீபகாலமாக மீன்களைப் பிடிப்பதில்லை, விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. அதனால் எனக்கு சக்தி குறைந்துவிட்டது என்பது உண்மைதான். நாகரிக நகர வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடிக்காத இரண்டு விஷயங்கள் பணமும் மதமும்தான். இவை இரண்டும் மக்களை ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் இருக்க விடுவதில்லை. உலகத்தையே அழித்துவிடக் கூடியவை. தீவில் இருந்து 60 கி.மீ. தொலைவில்தான் என்னுடைய குடும்பம் இருந்தது. ஆனால் ஒருநாள் கூட நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை. சொர்க்கம் போன்ற அந்தத் தீவிலேயே என்னுடைய உயிர் போக வேண்டும் என்று விரும்பினேன். யாருக்கும் தெரியாமல், யாரையும் துக்கப்பட வைக்காமல் தீவில் வாழும் சக உயிரினங்களைப்போல் என் உயிர் பிரிய வேண்டும். அடுத்த சூறாவளி வந்தால் நான் பிழைப்பது கடினம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என் விருப்பத்துக்கு மாறாக அரசாங்க அதிகாரிகள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். இதில் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை” என்கிறார் மசாஃபூமி நாகசாகி.

இயற்கையை நேசிக்கும் இன்னொரு டெர்சு உஸாலா!

http://tamil.thehindu.com/world/article24265158.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அட, கட்அவுட் கூட உலகக் கோப்பை கால்பந்து பார்க்குதே!

 

 
17chskopic
 
 

மெக்சிகோவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் 4 பேர் ரஷ்யாவுக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர்கள் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் வெகு வேகமாகப் பரவும் இந்தப் படங்களைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் நண்பர்களுடன் சேர்ந்து ஆள் உயரத்தில் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்டும் இடம்பெற்றிருக்கிறது! “2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண்பதற்கு 5 நண்பர்கள் சென்றிருந்தோம். அப்போதே அடுத்த உலகக் கோப்பை போட்டியைக் காண்பதற்காக ரஷ்யா செல்வது என்று முடிவு செய்தோம். மெக்சிகோவின் டுராங்கோ நகரத்திலிருந்து மலிவு விலை பேருந்து ஒன்று வாங்கி அதில் தேசியக் கொடியை வரைந்து செல்லவும் திட்டமிட்டிருந்தோம்.

 

அதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் 4 ஆண்டுகளாகப் பணத்தைச் சேமித்து வந்தோம். அந்தத் தருணமும் வந்தது. ஏப்ரல் இறுதியில் மெக்சிகோவை விட்டுக் கிளம்ப முடிவு செய்தோம். அப்போது நாங்கள் எதிர்பார்க்காத செய்தி இடியாக இறங்கியது. நண்பர்களில் ஒருவரான ஜாவியர் என்பவரை அவரது மனைவி கால்பந்து போட்டியைக் காண ரஷ்யாவுக்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. மனைவியின் பிடிவாதத்தால் 4 ஆண்டுகள் கண்ட கனவு நனவாகாமல் போனதில் ஜாவியர் மிகவும் பாதிக்கப்பட்டார். அனுமதிக்காக நாங்களும் முயன்று பார்த்தோம். முடியவில்லை. வேறு வழியின்றி ஜாவியரின் உயரத்துக்கு ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்டைத் தயார் செய்து, எடுத்துக்கொண்டு ரஷ்யா வந்தோம். நாங்கள் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் கட்அவுட்டை தூக்கிக்கொண்டு சென்றோம். ஜாவியரின் கட்அவுட் மைதானத்தில் எங்களுடன் போட்டியைப் பார்த்தது. உணவகத்தில் சாப்பிட்டது. மதுபான விடுதியில் மது அருந்தியது. தொலைக்காட்சிப் பார்த்தது. அவ்வப்போது எங்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டது. எங்களைப் பார்த்துச் சிரிக்காதவர்களே இல்லை.

ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இப்படிச் செய்ததன் மூலம் ஜாவியர் எங்களுடனே இருப்பது போன்ற திருப்தி ஏற்பட்டது. இந்தப் படங்களை எல்லாம் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், ஜாவியரும் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு எங்களின் படங்கள் இப்போது உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் நண்பர்களில் ஒருவரான பெர்னான்டோ ஓசாரியோ.

அட, கட்அவுட் கூட உலகக் கோப்பை கால்பந்து பார்க்குதே!

இறால், கணவாய் மீன், நட்சத்திர மீன்கள் எல்லாம் மழையாகப் பொழிந்ததாகச் சீனாவின் கடற்கரை நகரமான மிங்டாவோ மக்கள் சொல்கிறார்கள். கடந்த புதன்கிழமை மிக மோசமான வானிலை. அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தன. அசுரத்தனமான காற்று வீசியது. சாலைகளில் வெள்ளம் ஓடியது. நீந்திக் கொண்டிருந்த வாகனங்கள் மீது கணவாய் மீன், நட்சத்திர மீன், இறால்கள் போன்றவை வானிலிருந்து மழைபோல் விழுந்தன. எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ‘கடல்நீரோட்டத்தால் கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் கரைக்கு அருகில் கொண்டுவரப்பட்டன. அசுரத்தனமான காற்று தண்ணீரில் இருந்த உயிரினங்களை மேலே இழுத்து, சாலைகளில் தள்ளிவிட்டது’ என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கையின் விந்தை!

http://tamil.thehindu.com/world/article24184692.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: தானாகப் பொரிந்த குஞ்சுகள்!

 

 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
19chkansamu
TAMILTHTemplateLibrarynation21clIMG2

ஜப்பானில் உள்ள ‘ஹோமி ஹிரோய் சாமுராய்’ குழு, தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே குப்பைகளையும் சேகரிக்கிறார்கள். பழங்கால சாமுராய் வீரர்களைப் போல் உடை, தொப்பி, காலணிகளை அணிந்து மிக நேர்த்தியாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இன்றைய இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய நடனங்கள் என்று தங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குவதில் வல்லவர்கள். சாமுராய் கலைஞர்களாக இருந்தவர்கள், குப்பைகளை அள்ளும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகு, ஜப்பான் முழுவதும் பிரபலமாகிவிட்டனர்.

“நாங்கள் முதலில் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே தெருக்களில் நடத்தி வந்தோம். இப்போது சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். ஜப்பானிய நகரங்களில் குப்பைகள் அதிகம். அதிலும் பண்டிகைக் காலங்களில் குப்பை பல மடங்கு அதிகரித்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பண்டிகை காலத்தில்தான் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் முடிவை எடுத்தோம். சாமுராய் ஆடைகள், வாளுடன் குப்பை சேகரிக்கும் பெட்டி, குப்பை எடுக்கும் கரண்டி போன்றவற்றையும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துவோம்.

 

நிகழ்ச்சியின் நடுவிலேயே குப்பைகளைச் சேகரித்து விடுவோம். இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகக் கடமை இருப்பதாக நினைக்கிறோம். எங்கள் குழுவின் முக்கிய முழக்கம் மனிதர்களை நேசியுங்கள் என்பதுதான். குப்பை அகற்றுவது மகத்தான பணி என்பதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். பல நகரங்களிலும் எங்களின் குழுக்கள் இயங்கி வருகின்றன” என்கிறார் ஜிடாய்குமி.

கலையுடன் சமூகக் கடமையும் சேரும்போது உன்னதமடைகிறது!

ஜார்ஜியா நாட்டின் மார்மெயுலி என்ற சிறிய நகரத்தின் குப்பைக் கிடங்கில் இருந்து ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வெளிவருவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். “நான் குப்பைக் கிடங்கு வழியே வரும்போது, காகிதங்கள் பறந்து வருவதுபோல் தோன்றியது. அருகில் சென்று பார்த்தபோது இளம் மஞ்சள் வண்ண கோழிக் குஞ்சுகள் கத்திக்கொண்டு தங்கள் தாயைத் தேடி ஓடிக் கொண்டிருந்தன.

பிறகுதான் தெரிந்தது, நகரில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணை, கெட்டுப்போன முட்டைகளை இங்கே வந்து கொட்டியிருக்கிறது. அவர்கள் கெட்டதாக நினைத்த முட்டைகள் எல்லாம் வெயிலில் தானாகவே பொரிந்து, முட்டை ஓடுகளை உடைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் வெளிவந்துவிட்டன. உடனே இந்த அரிய காட்சியை வீடியோ எடுத்தேன். உள்ளூர் மீடியாக்களுக்கும் தகவல் கொடுத்தேன். இப்போது இந்தச் செய்தி ஜார்ஜியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிவிட்டது. உள்ளூர் மேயர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

பண்ணை உரிமையாளர், கெட்டுப்போன முட்டைகள் என்று தாங்கள் தவறாகக் கணித்துவிட்டதால் இந்தச் சம்பவம் நடைபெற்றுவிட்டது. கோழியில் இருந்து கிடைக்கும் வெப்பநிலை உருவானதால் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்துவிட்டன என்று தெரிவித்திருக்கிறார். பொதுமக்கள் இந்தக் குஞ்சுகளைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்” என்கிறார் சாஹித் பயராமோவ்.

தானாகப் பொரிந்த குஞ்சுகள்!

http://tamil.thehindu.com/world/article24198651.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் அதிசய கிராமம்

 

 
22chskopic

ருமேனியாவின் பானட் மலைத்தொடர்களில் இருக்கிறது அழகான எபின்தல் கிராமம். இங்கே செக் இன மக்கள் வாழ்கிறார்கள். உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக இந்தக் கிராமம் திகழ்கிறது! இங்கே காவல் நிலையம் கிடையாது. இங்கு குற்றங்களே பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அதிலும் திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது! இங்குள்ள மக்கள் அமைதிக்கும் மரியாதைக்கும் பெயர் பெற்றவர்கள். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும் பணமும் வைக்கப்படுகின்றன.

 

ரொட்டி கொண்டு வருபவர் பையில் உள்ள குறிப்பைப் படித்து, தேவையான ரொட்டிகளை வைத்துவிட்டு, பணத்தை எடுத்துக்கொள்வார். மீதிப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால் அந்தப் பையிலேயே போட்டு விடுவார். வீட்டின் உரிமையாளர்கள் வீடு திரும்பும்போது ரொட்டிகளை எடுத்துக் கொள்கிறார்கள். “1989-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் இருந்த ரொட்டிக் கடை மூடப்பட்டது. அதனால் நாங்கள் 20 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரத்துக்குச் சென்றுதான் ரொட்டி வாங்கிக் கொண்டிருந்தோம். 1996-ம் ஆண்டு நகரிலிருந்து ரொட்டிகளை வரவழைக்கும் திட்டத்தை ஆரம்பித்தோம். அன்று முதல் பையில் பணத்தையும் குறிப்பையும் போட்டு வாசலில் வைத்துவிடுவோம்.

ரொட்டிக் கடைக்காரர் தேவையான ரொட்டிகளை வைத்துவிடுவார். கடந்த 22 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருக்கிறது. இதுவரை ரொட்டியோ, பணமோ திருடு போனதே இல்லை. இங்கு வசிக்கும் மக்களிடத்தில் பொருளாதாரத்தில் வேறுபாடு இருந்தாலும் நற்பண்புகளில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். எல்லோரும் உழைக்கிறோம். அவரவர் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைப் பெறுகிறோம். நிம்மதியாக வாழ்கிறோம். அனுமதியின்றி இன்னொருவர் வீட்டுக்கோ, விளைநிலத்துக்கோ யாரும் செல்ல மாட்டார்கள். சொந்தம் இல்லாத ஒரு பொருள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இங்கே உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறது” என்கிறார் 75 வயது எபின்தல் கிராமவாசி ஒருவர். “நான் இந்தக் கிராமத்துக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. கார் நிறுத்தும் இடத்தில் ஏராளமான பொருட்களைப் போட்டு வைத்திருக்கிறேன். அனைத்தும் பயன்படக்கூடியவை. கதவு கூட இல்லை. ஆனால் இதுவரை எதுவும் திருடு போனதில்லை. யாருக்காவது உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்தால், தாமாக உதவும் பண்பும் இங்கே இருக்கிறது. மிக நாகரிகமான மக்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்களுடன் வசிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்கிறார் பாதிரியார் வாக்லாவ் மாசெக்.

“பத்திரிகைகளும் மீடியாக்களும் எங்களைப் பற்றி அதிசயமாகச் செய்தி வெளியிடுவது குறித்து எங்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. நாங்கள் நாங்களாக இருக்கிறோம். பண்புடன் நடந்து கொள்வதுதானே மனிதர்களின் இயல்பு! இப்படி இருப்பதால்தான் நாங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்” என்கிறார் 40 வயது அகஸ்டினா பாஸ்பிசில். மேயர் விக்டர் டோஸ்கோசில், 300 மக்கள் வசிக்கும் இந்தக் கிராம மக்கள் குறித்துப் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

பண்பான மனிதர்கள் வாழும் உலகின் அதிசய கிராமம்!

http://tamil.thehindu.com/world/article24224450.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் மிக உயரமான சிறுவன்

 

 
30chskopic
 
 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லேஷான் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறான் ரேன் கேயூ. 11 வயதிலேயே 2.06 மீட்டர் (6 அடி) உயரம் இருக்கிறான்! பூமியிலேயே இந்த வயதில் இவ்வளவு உயரம் இருக்கக்கூடிய ஒரே சிறுவன் இவன்தான். “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வயது குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். அதனால் சிலர் என்னுடன் விளையாடத் தயங்குவார்கள். பள்ளியிலும் வயது அதிகமானவன் என்று கருதி புது ஆசிரியர்கள் என் வகுப்புக்குப் போகச் சொல்வார்கள். பள்ளி நாற்காலியில் அமர முடியவில்லை. அதனால் பெரிய நாற்காலி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னுடன் படிக்கும் சக மாணவர்கள், என் இடுப்பு உயரமே இருக்கிறார்கள். மனதளவில் நான் அவர்கள் அளவுக்கு இருந்தாலும் உயரத்தால் அவர்களை விட்டு விலகியிருப்பதாகத் தோன்றுகிறது. சாலைகளில் நடக்கும்போது எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்ப்பார்கள். ஆனாலும் இந்த உயரம்தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் என்னை இடம்பெற வைத்திருக்கிறது” என்கிறான் ரேன் கேயூ. “அளவுக்கு அதிகமான உயரத்தால் பயந்துபோய், பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் எதுவும் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டனர்” என்கிறார் ரேனின் அம்மா.

 

உலகின் மிக உயரமான சிறுவனுக்கு ஒரு பூங்கொத்து!

 

 

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைக்காரர்கள், வீகன் (விலங்குகளின் பால் உட்பட எதையும் சாப்பிடாதவர்கள்) செயற்பாட்டாளர்களால் தங்களுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். “சமீப காலமாக வீகன் செயற்பாட்டாளர்கள் மிக மோசமான வழிகளில் இறைச்சி உண்பதற்கு எதிர்ப்புக் காட்டி வருகிறார்கள். கடைக் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். மோசமான உணவு என்றும் இறைச்சி விற்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் பெயிண்ட்டால் எழுதி வைக்கிறார்கள். பொது மக்களும் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அடுத்தவர் உணவுப் பழக்கத்தில் தலையிடாமல் இருப்பதுதான் நியாயமானது. நாங்கள் வீகன் உணவுக்கார்களை இறைச்சி உண்ணும்படிச் சொல்லவில்லை. அதேபோல இறைச்சி சாப்பிடுபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் அவர்கள் மதிக்க வேண்டும். பிரான்ஸில் மட்டும் 18 ஆயிரம் இறைச்சிக் கடைக்காரர்கள் இருக்கிறோம். எங்களுக்கும் கடைகளுக்கும் பாதுகாப்பு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுள்ளோம்” என்கிறார் ஓர் இறைச்சிக் கடைக்காரர். “பிரான்ஸ் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கே வீகன் உணவுக்காரர்கள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் காவல் போடுவது சாத்தியம் இல்லை. எல்லாவற்றையும் விசாரித்த பிறகு நடவடிக்கை எடுப்போம். மிகக் குறைந்த அளவில் இருப்பவர்கள் பெரும்பான்மையான மக்களை அச்சுறுத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்கிறது உள்துறை அமைச்சகம்.

இதெல்லாம் ரொம்ப அநியாயம்!

http://tamil.thehindu.com/world/article24297391.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரமிக்க வைக்கிறார் இந்த ஜார்ஜினா!

 

 
24chskopic

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜினா ரைலாண்ட் ஒப்பனைக் கலைஞராகவும் உடல் ஓவியராகவும் இருக்கிறார். இதுவரை பலரும் அடுத்தவர்களின் உடலில்தான் ஓவியங்களைத் தீட்டிவருகிறார்கள். ஆனால் ஜார்ஜினா தன் உடலில் தானே ஓவியங்களைத் தீட்டிக் கொள்வதுதான் மிகவும் ஆச்சரியமானது. கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு எழுதுவதோ, வரைவதோ அவ்வளவு எளிதான விஷயமில்லை. ஆனால் ஒரு தாளில் ஓவியம் தீட்டுவதுபோல் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தன் உடலில் தானே ஓவியம் தீட்டுவதில் வல்லவராக இருக்கிறார் இவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இன்றுவரை இவரது ஓவியத் திறமை மேலும் மேலும் மெருகேறிக்கொண்டிருக்கிறது. அதேபோல இவரது புகழும் உலகம் முழுவதும் பரவிவருகிறது. “ஒரே நாளில் இந்தக் கலை என் வசமாகிவிடவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவே இன்று மற்றவர்களிடமிருந்து என்னைத் தனித்துக் காட்டியிருக்கிறது. இப்போதும் வாரத்தில் ஒரு நாளாவது பயிற்சி செய்யாமல் இருப்பதில்லை. ஃபேஷன் இதழ்கள், மாடலிங் வாய்ப்புகள் எல்லாம் இந்தக் கலை மூலம்தான் எனக்குச் சாத்தியமாயின” என்கிறார் ஜார்ஜினா.

 

பிரமிக்க வைக்கிறார் இந்த ஜார்ஜினா!

 

 

இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயது நீல், 32 ஆண்டுகளாக ஏப்பம் விடுவதில்லை. இதனால் வாழ்க்கை முழுவதும் பல விதத் துயரங்களை அனுபவிக்கிறார். எல்லோருக்கும் எப்போதும் ஏப்பம் வருதில்லைதான். ஆனால் இவருக்கு ஏப்பமே வராததால் அடிக்கடி தாங்க முடியாத வலியுடன் கூடிய விக்கல் வருகிறது. வயிறு இரண்டு மடங்காக வீங்கிவிடுகிறது. தொண்டையிலிருந்து வித்தியாசமான ஒலி வருகிறது. “இரண்டு வயதுக்குப் பிறகு இது நாள் வரை ஏப்பமே வந்ததில்லை. ஆரம்பத்தில் என் பிரச்சினைகளுக்குக் காரணம் ஏப்பம் என்பதை பெற்றோர் அறியவில்லை. அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்போம். மருத்துவர்களுக்கும் என் பிரச்சினை புரியவில்லை. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தபோது எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தேன். உணவு சற்று அதிகமானாலோ, பாட்டில் குளிர் பானங்களைக் குடித்தாலோ வலி அதிகமாகிறது என்பதைக் கண்டறிந்தேன். அதற்குப் பிறகு மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர். இறுதியில் அரிய குறைபாட்டின் காரணமாக எனக்கு ஏப்பம் வருவதில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். இதுபோன்ற ஒரு பிரச்சினையை மருத்துவர்களே அதுவரை கேள்விப்பட்டதில்லை என்றார்கள். அதனால் என் பிரச்சினைக்குத் தீர்வும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பசியாக இருந்தாலும் குறைவாகவே சாப்பிட வேண்டும். ஏப்பம் வரவழைக்கும் பானங்களைப் பருகக் கூடாது. விழா, பார்ட்டி போன்றவற்றுக்குச் செல்லக் கூடாது. இதை மீறினால் என் வயிறு வீங்கிவிடும். உடனே விக்கலும் வலியும் உயிர் போகும் அளவுக்கு ஏற்பட்டுவிடும். விநோத ஒலியும் தொண்டையில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இறுதியில் யாகுபு கரகாமா என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் சென்றேன். 3 லட்சம் ரூபாய்க்குத் தொண்டையில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினார். என் வாழ்நாளில் முதல் முறை முன்னேற்றம் தெரிவதுபோல உணர்ந்திருக்கிறேன். பிரச்சினையைச் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் நீல்.

ஐயோ… பாவம்….

http://tamil.thehindu.com/world/article24245054.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரமிக்க வைத்த படம்!

 

 
26chskopic

இங்கிலாந்தைச் சேர்ந்த வன உயிரினங்கள் ஒளிப்படக் கலைஞர் ரிச்சர்ட் பவ்லர். கடந்த வாரம் ஒரு மரப்பலகை மீது 5 தகைவிலாங் குருவிக் குஞ்சுகள் குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தாய்ப் பறவை கொண்டு வந்த உணவைக் கண்டதும் 5 குஞ்சுகளும் ஒரே நேரத்தில் மஞ்சள் வண்ண வாயைத் திறந்தன. இந்தக் காட்சியைக் கச்சிதமாகப் படம் பிடித்துவிட்டார் ரிச்சர்ட். “தன்னுடைய 5 குழந்தைகளும் ஒரே நேரத்தில் உணவுக்காக வாயைத் திறக்கும்போது, ஒரு தாயால் என்ன செய்ய முடியும்? இந்தக் காட்சி என்னை உலுக்கிவிட்டது. பொதுவாக இந்தக் குருவிகள் ஒரு நேரத்தில் 3 முட்டைகளைத்தான் அடை காக்கும். இந்தக் குருவி 5 குஞ்சுகளைப் பொரித்திருக்கிறது. கொசு, ஈக்கள் போன்ற பூச்சிகளே இவற்றின் உணவு. சில நேரத்தில் ஒரு நாளைக்கு நூறு பூச்சிகளையாவது சாப்பிட வேண்டியிருக்கும். குஞ்சுகள் பறந்து, தாமாக உணவு தேடும்வரை தாயின் சுமை அதிகமாக இருக்கும்” என்கிறார் ரிச்சர்ட் பவ்லர்.

பிரமிக்க வைத்த படம்!

 

ஜப்பானின் கோப் நகரில் இயங்கும் அரசாங்க நீர் வழங்கும் அலுவலகத்தில் கடந்த வாரம் வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அழைக்கப்பட்டிருந்தன. அரசாங்க அதிகாரிகள் வரிசையாக நின்று, தலை தாழ்த்தி பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார்கள். “எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு இடைவேளைக்கு 3 நிமிடங்கள் முன்பாகவே அடிக்கடி எழுந்து சென்று விடுகிறார். அவரது செயலுக்கு நாங்கள் அனைவரும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்றனர். நீர் வழங்கும் அலுவலகத்துக்கு 12 முதல் 1 மணிவரை உணவு இடைவேளை. அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் 64 வயது ஊழியர் ஒருவர், வாரத்துக்கு ஒரு நாள் உணவு இடைவேளைக்கு 3 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து, எதிரில் இருக்கும் உணவகத்துக்குச் சென்றுவிடுவார். இப்படி 7 மாதங்களில் 26 தடவை எழுந்ததால் 78 நிமிடங்கள் அலுவலக வேலைகளைச் செய்ய முடியாமல் போயிருக்கிறது. தனியறைகளில் இருந்து கவனித்து வந்த உயர் அதிகாரிகளுக்கு இந்தச் செயல் மிகுந்த வருத்தத்தை அளித்தது. மக்களுக்காகச் சேவை செய்யும் ஓர் அரசாங்க ஊழியர் இப்படிச் செய்வதில் நியாயமில்லை என்று நினைத்தவர்கள், மன்னிப்புக் கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டனர். “வாரத்துக்கு 3 நிமிடங்கள் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், இந்தச் செயலை அங்கீகரித்ததாகிவிடும். இன்னும் அதிகமாக இது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இவரைப் பார்த்து இன்னும் பலரும் இப்படி முன் கூட்டியே எழுந்துவிடலாம். பொதுமக்களின் பணத்தில் பொது மக்களுக்காக இயங்கும் ஓர் அலுவலகத்தில் ஒரு நொடி கூட வீணாகக் கூடாது என்பதை வலியுறுத்தவே இதைச் செய்தோம்” என்கிறார் ஓர் அதிகாரி. இதற்குப் பிறகு அவர் மட்டுமில்லை, வேறு யாருக்கும் கூட உணவு இடைவேளைக்கு முன்பே எழும் எண்ணம் தோன்றாது. இதைப் பலரும் வரவேற்று இருக்கின்றனர். ஒரு சாதாரண நிகழ்ச்சியைப் பெரிதாக்கிவிட்டதாகச் சிலர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். கடந்த மாதம் ஜப்பானில் ஒரு ரயில் 25 நொடிகள் முன் கூட்டியே வந்துவிட்டதற்காக, பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரத்தை மதிக்கும் ஜப்பானியர்கள்!

http://tamil.thehindu.com/world/article24259389.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிறவிக் கலைஞன் கரீம்

 

04chskomasalapic

 
 

பல ஆண்டுகள் பயிற்சி எடுத்த பிறகே தத்ரூபமான ஓவியங்கள் வரைவது சாத்தியமாகும். ஆனால் 11 வயதே ஆன கரீம் வாரிஸ் ஓலாமிலிகான், தன்னுடைய ஓவியங்களால் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்! நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வசிக்கும் இவர், 6 வயதில் தனக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைய ஆரம்பித்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் ஓவியப் பயிற்சி அகாடமிக்கு அருகே இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. மிக ஏழ்மையான குடும்பம் என்பதால், மகனை ஓவியப் பயிற்சியில் சேர்த்து விடுவதற்கு அவர்களால் இயலவில்லை. அதற்காகத் தன் முயற்சியைக் கரீம் கைவிடவில்லை. ஓவிய அகாடமியின் மூலையில் அமர்ந்து, மற்ற மாணவர்கள் பயிற்சி செய்வதுபோல் தானும் செய்துகொண்டிருப்பார். ஒருகட்டத்தில் கரீமின் ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்த அகாடமி உரிமையாளர்கள், தாங்களாகவே பயிற்சியளிக்க முன்வந்தனர். இன்று தங்கள் மாணவர்களில் மிகச் சிறந்தவர் கரீம் என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

 

“என்னுடைய ஓவியத் திறமையைக் கண்டுபிடித்து, அங்கீகரித்தது அயோவால் ஆர்ட் அகாடமிதான். நான் வண்ணங்களை விட்டு, தத்ரூபமான ஓவியங்களுக்கு மாறியது என்னுடைய ஏழ்மையால்தான். காகிதம், தூரிகை, வண்ணங்கள் வாங்க என்னிடம் வசதி இல்லை. அதனால் பேனா, பென்சில் மூலம் மனித முகங்களை வரைவதில் ஆர்வம் செலுத்தினேன். அம்மா மளிகை சாமான் வாங்கி வரச் சொல்லிப் பணம் கொடுப்பார். அதில் கொஞ்சம் வெள்ளைத் தாள்களை வாங்கிக் கொள்வேன். வீட்டில் மின்சார வசதி இல்லை. அதனால் நள்ளிரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில்தான் வரைவேன். அம்மாவும் அப்பாவும் கடுமையாக உழைத்தால்தான் நாங்கள் சாப்பிடவே முடியும். உழைப்பு எப்படிப் பணமாக, உணவுப் பொருளாக, சமைக்கப்பட்ட உணவாக மாறி எங்கள் தட்டுக்கும் வாய்க்கும் வந்து சேர்கிறது என்பதை நான் அனுபவத்தின் வாயிலாகக் கண்டறிந்தவன். அதனால்தான் என்னுடைய ஓவியங்களில் ஏழ்மையும் உணவும் பிரதானமான விஷயங்களாக இருக்கின்றன. இன்று தொழில்முறை கலைஞனாகப் பலருக்கும் ஓவியங்களை வரைந்து கொடுக்கிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தின் வறுமை இன்னும் மறையவில்லை. பொதுவாக நைஜீரியப் பெற்றோர் தங்கள் குழந்தைகள், மருத்துவராகவோ வழக்கறிஞராகவோதான் வர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்னை என் விருப்பத்துக்கு பெற்றோர் விட்டுவிட்டனர். எங்கள் குடும்பம் இருக்கும் நிலையில் இது பெரிய விஷயம். என் போன்ற வித்தியாசமான திறமை கொண்டவர்களை அரசாங்கமே கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும். நைஜீரியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். தத்ரூப ஓவியங்களைத் தவிர்த்து வண்ண ஓவியங்கள், முக ஓவியங்கள் என்று பல்வேறு ஓவியங்களையும் வரைந்து வருகிறேன். நைஜீரியாவின் அழகிய முகங்களை உலகம் முழுவதும் தெரிய வைக்கும் தத்ரூப ஓவியங்களே எனக்கு மிகவும் பிடித்தவை” என்கிறார் கரீம்.

“நீ தெரு ஓவியனாக உன்னை நினைத்துக்கொள்ளாதே, வான் கா, டாவின்சி போன்ற மிகப் பெரிய ஓவியனாக நினைத்துக்கொள் என்று கரீமுக்கு அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நைஜீரியாவின் மிக இளம் வயது தொழில்முறை ஓவியன் கரீம்தான்” என்று பெருமையோடு சொல்கிறார் ஓவிய அகாடமியின் உரிமையாளர்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கரீமை சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

பிறவிக் கலைஞன் கரீமைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!

http://tamil.thehindu.com/world/article24327180.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: முன்னாள் குடியேறிகள் வைத்தது சட்டமா?

 

 

 
03chkanLia
 
 

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளும் பெற்றோரும் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டனர். இதற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் சேர்க்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் குடும்பத்துடன் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையைக் கண்டித்து, வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 700 நகரங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ஸ்பெயினைச் சேர்ந்த 12 வயது லியா கயாசோ மேடையில் பேசியது அனைவரையும் கலங்கச் செய்துவிட்டது.

 

“நான் மியாமியில் இருந்து வந்திருக்கிறேன். வீட்டு வேலை செய்பவரின் மகள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். என் அம்மா வேலைக்குச் செல்வது எங்கள் குடும்பத்துக்கு அவசியமானது. வேலை செய்யும் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பத்திரமாகவும் அன்பாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்கிறார் அம்மா. அதற்குப் பரிசாக இந்த அரசாங்கம் அவரது குழந்தைகளைப் பெரும் துயரத்தில் தள்ளியிருக்கிறது. தினமும் அம்மா வேலைக்குச் சென்று எப்போது திரும்புவார் என்று காத்திருக்கிறோம். எங்களையும் அம்மாவையும் பிரித்துவிடுவார்களோ என்று ஒவ்வொரு நொடியும் அச்சத்தில் கழிக்கிறோம். நாங்கள் நிம்மதி யாக சாப்பிட்டு நீண்ட காலமாகிவிட்டது. ஒருநாள் கூட தூக்கம் வருவதில்லை. பாடத்தைப் படிக்க முடிவதில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் தவிக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பிரிக்கப்படுவதையும் அவர்கள் துயரத்தில் இருப்பதையும் காணும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. இதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் பெற்றோரைவிட வேறு யாரும் பாதுகாப்பும் நிம்மதியான வாழ்க்கையையும் தர முடியாது. நாங்கள் எங்கள் குடும்பத்தையும் பெற்றோரையும் எவ்வளவு நேசிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகளின் மனநிலையை ஏன் கருத்தில்கொள்ள மறுக்கிறீர்கள்?

எங்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? மோசமான கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெற்றோரையும் பார்க்கும்போது இதில் சிறிதும் நியாயம் இல்லை என்று தோன்றவில்லையா? அம்மாவிடமிருந்து பிரிந்து விடுவேனோ என்ற பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் அம்மா உறுதியானவர், அழகானவர், தைரியமானவர். அநியாயத்தைக் கண்டால் உரக்கப் பேசவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இனிமேலும் எங்கள் குடும்பங்களும் குழந்தைகளும் துன்பப்படுவதை எங்களால் அனுமதிக்க இயலாது.

எல்லோரும் ஒன்றாகப் போராடினால் நாம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம். எல்லைகளில் வாழ்பவர்களும் மனிதர்களே. எல்லைகளில் வாழும் குடும்பத்தின் குழந்தைகளும் குழந்தைகளே. என் போன்ற அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் இங்கே பேசியிருக்கிறேன். பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதை நிறுத்தும்வரை போராடுவேன். நான் அரசாங்கத்திடமிருந்து கருணை கேட்கவில்லை. பெற்றோருடன் குழந்தைகள் இருப்பதும் அமைதியாக வாழ்வதும் குழந்தைகள், பெற்றோரின் உரிமை” என்று 2 நிமிடங்கள் அழுதுகொண்டே பேசி முடித்தார் லியா.

முன்னாள் குடியேறிகள் வைத்தது சட்டமா?

http://tamil.thehindu.com/world/article24317650.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: என்ன ஓர் அதிசயம்!

 

 
05chkanindo
 
 

இந்தோனேஷியாவில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண், தொலைந்துபோன இடத்திலேயே மீண்டும் கிடைத்திருக்கிறார். காணாமல் போனபோது அணிந்த உடைகளையே அணிந்திருந்தார். 52 வயது நைனிங் சுனார்ஷி, சுற்றிப் பார்ப்பதற்காக மேற்கு ஜாவாவில் உள்ள சைட்பஸ் கடற்கரைக்குச் சென்றிருந்தார். அலைகளில் கால்களை வைத்துக்கொண்டு நின்றிருந்தபோது எதிர்பாராமல் ராட்சத அலை அவரை இழுத்து சென்றது. பெரிய அலைக்கு நடுவே ஒரு பெண்ணின் கைகள் உதவி கேட்டு கத்தியதைக் கடற்கரையில் இருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

 

யாராலும் பாய்ந்து சென்று காப்பாற்ற முடியவில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் படையினர் வந்து நாள் கணக்கில் தேடிய போதும் நைனிங் எங்கே போனார் என்றே தெரியவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு ஓர் உடலைக் கண்டுபிடித்தார்கள். நைனிங் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் மிக மோசமாக சேதமடைந்திருந்தபோதும் இவர் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிட்டனர்.

ஆனால், அவராகத்தான் இருக்கும் என்று மீட்புப் படையினர் கூறினர். பிறகு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நைனிங் இல்லை என்பது உறுதியானது. இனியும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி, மீட்புப் படையினர் தேடுதலைக் கைவிட்டனர். எங்கோ உயிருடன் இருக்கிறார், என்றாவது திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு நைனிங்கின் மாமா, பாலபுஹன்ராட்டு கடற்கரையில் ஒரு பெண் திரும்பி வருவதாகக் கனவு கண்டார். முதலில் அதைப் பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதே கனவு வந்ததால் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனே எல்லோரும் அந்தக் கடற்கரைக்குச் சென்றனர். நைனிங் தொலைந்துபோன கடற்கரையில் இருந்து வெகு அருகில் இருந்தது இந்தக் கடற்கரை. நீண்ட நேரம் காத்திருந்தும் அங்கே யாரும் வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. மறுநாள் வீடு திரும்பலாம் என்று முடிவெடுத்தனர். ஞாயிற்றுக்கிழமை, காணாமல் போய் மிகச் சரியாக ஒன்றரை வருடம் கழித்து கடற்கரையில் மணலால் மூடப்பட்டு ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். உடனே குடும்பத்தினர் ஓடிவந்தனர்.

தொலைந்து போனபோது என்ன உடைகளை அணிந்திருந்தாரோ, அதே உடைகளுடன் நைனிங் சுயநினைவின்றி கிடந்தார். எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, சுத்தம் செய்து படுக்க வைத்தனர். சுயநினைவு இல்லாததாலும் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததாலும் மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போதைக்கு இவரது உடல் பலவீனமாக இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. விரைவில் குணமாகிவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நைனிங் நினைவு திரும்பிய பிறகுதான் அவர் காணாமல் போய், திரும்பி வந்தது எப்படி என்ற விஷயம் தெரியும். ஆனால் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை, எங்கள் அம்மாவுக்கு தெய்வீக சக்தி இருப்பதால்தான் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார் என்கிறார்கள் இவரது குழந்தைகள்.

அட, என்ன ஓர் அதிசயம்!

http://tamil.thehindu.com/world/article24336277.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.