Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்

12-ஆம் பதிவு

தமிழ்ப் புத்தாண்டு புரிதல் – முன்னோட்டம்

                                           நாள்: 17.09.2015

 

    அழகிய இளம் பாடினி ஒருத்தியைக் களிறுகள் வழங்கும் காட்டு வழியில் இசைக் குழுவினருடனும் ஆள் உயர யாழுடனும் நடத்திச் செல்கிறான் பாணர் குழுத் தலைவன் ஒருவன். பேரூர் ஒன்றில் விழாவினை முடித்துக் கொண்டு அங்கே தங்கி ஓய்வெடுக்காமலும் விருந்துணவை ஏற்காமலும் மிகவும் பொறுப்பாக எங்கோ செல்கிறான். வழியில் இன்னொரு பாணன் எதிர்ப்படுகிறான். நல்லவேளை வழியில் என்னைச்  சந்தித்தாய். நீ வேறெங்கும் சென்று விடாதே! ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கும் கரிகாலனைச் சென்று பார்! என்று அறிவுரை கூறுகிறான்.

 

பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன் தான்

முரசு முழங்கு தானை மூவரும் கூடி

அரசவை இருந்த தோற்றம் போல

பாடல் பற்றிய பயனுடை எழா அல்

கோடியர் தலைவ! கொண்டது அறி

அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது

ஆற்றெதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே

                                      பொருநர்-(53-60)

 

 பத்துப்பாட்டில் ஒன்றான பொருநர் ஆற்றுப் படையில் இப்படி ஒரு காட்சி விரிகிறது.

 

 

அறிவுத்துறை:-

          பெருந்தச்சன், பெருங்கொல்லன், பெருங்கணி, பெருந்தகை மறவன் என்ற வரிசையில் பெருந்தகு பாடினி எனப் போற்றப்படும் அந்தப் பெண்ணைப் பற்றி நன்கு அறிந்த அந்தப் பாணன், கோடியர் தலைவனே! நீ கொண்ட குறிக்கோளை மறந்து விடாதே! என்று கூறுகிறான்.

          என்ன குறிக்கோள்? அரசுருவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளான் அந்தக் கோடியர் தலைவன். அரசுதான் இருக்கிறதே! கரிகாலனின் அரசு, பிறகு வேறெந்த அரசைக் கட்டமைக்க வேண்டும்? மூவேந்தர்களையும் ஒன்று சேர்த்தால் உண்டாகும் பெருமை பற்றிப் பாடல் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பெருநோக்கம் இங்கே பேசப்படுகிறது.

          அந்தப் பெருந்தகு பாடினியின் கொடிவழி வந்த பாடினியர் இன்னும் தமிழ் மரபில் இருக்கலாம். அவள் பாடிய பண்ணின் கொடிவழி இன்று இருக்கிறதா என்றால் இல்லை, பறிகொடுத்து விட்டோம் என்றே கூற வேண்டும்.

          அந்த வகையைச் சேர்ந்த இன்னொரு செய்திதான் தமிழ்ப்புத்தாண்டு வரைவும் பெருந்தச்சு நிழல் நாள்காட்டியும். இன்று கரிகாலனும் இல்லை. எந்தப் பாணனும் எதிர்ப்படவும் இல்லை. காடு மட்டும் இருக்கிறது நாடு என்ற வடிவத்தில். களிறுகள் வழங்கவில்லை கயவர்கள் திரிகிறார்கள். இது இன்னொரு மரபு வழிப்பட்ட அறிவுத்துறை. யாரிடம் பகிர்ந்து கொள்வது?

தமிழ்த் தேசிய ஆளுமைகள் ஆக இளம் தலைமுறை:-

          ஆயினும் அறிஞர்களைத் தேடியும் புரவலர்களைத் தேடியும் குறிப்பாகத் தமிழ்த் தேசிய ஆளுமைகளைத் தேடியும் ஆள் திரட்டி வருகிறது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்.

          பண் மீட்புக்கும் மண் மீட்புக்கும் உறுதுணையாய் ஊற்றமாய் நிற்கும் அறிவுத்துறை ஒன்று கனிந்து வரும் காலத்தில் இன்றையத் தமிழ்த் தலைமுறை நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதனை ஒவ்வொரு தமிழரும் நன்கு உணர வேண்டும்.

          வேந்துறு தொழிலே யாண்டினது அகமே

(தொல்காப்பியம் – 1142)

          தொல்காப்பியத்தில் இப்படி ஒரு நூற்பா உள்ளது. வேந்தன் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து ஆண்டு நாட்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும், இந்த நூற்பா ஒருவேளை அதனைக் குறிக்கலாம் என்றும் இதுவரை ஒருவரும் கருதவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அவ்வாறு கருதுகிறது.

திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட

தன்னெழில் வளர் ஊழியுள் எல்லா

யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டேய்’

என்று மன்னன் இராஜராஜன் தஞ்சைக் கோயில் கல்வெட்டுகளில் தனது மெய்க் கீர்த்தியில் குறிப்பிடுகிறான்.

          தொல்காப்பியத் தொன்மை தொட்டுச் சற்றொப்ப ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வரை – ஆண்டு நாட்களை மன்னர்கள் முயற்சி செய்து கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று இதுவரை ஒருவரும் கருதிப் பார்க்கவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அவ்வாறு கருதுகிறது.

          தமிழர்களின் மரபு வழிப்பட்ட தமிழ்ப்புத்தாண்டு பற்றி அறிந்திட மேற்கொண்ட முயற்சியில், உயர் ஆய்வுக்கு உரிய தரவுகளையும் ஒரு பெருந்தச்சு நிழல் நாள்காட்டியையும் ‘மாநாகன் இனமணி 1 முதல் 120 வரை’ என்ற சிறிய கையேடாக மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் முன்னோட்டமாகக் கடந்த 14.01.2013 முதல் 23.06.2015 வரையிலும் 890 நாட்களில் 120 தனித்தனி ஏடுகளாக மின்னஞ்சல் பகிர்வாக இணையதளக் கலந்துரையாடல்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

நிலவைத் தொடர்தல்:-

          2015-ஆம் ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டின் தொடக்க நாளை அறிவித்து முழுநிலவுகளைத் தொடர்ந்து நாட்களை எண்ணி 06.01.2015 முதல் இதுநாள் வரையிலும் 11 செய்திப் பதிவுகளை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் பகிர்ந்துள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி.

          ஆகையால் பதிவுச் செய்திகளின் தொடர்ச்சியாகவும் நெருங்கி வரும் தமிழ்ப் புத்தாண்டினை எப்படிக் கையாள்வது என்ற தேடலிலும் 12-வது பதிவாகவும் ஓய்வான மனநிலையில் அசைபோடும் செய்திகளோடும் விளையாட்டாக வெளிவருகிறது இந்தப் பதிவு.

எஞ்சியுள்ள நிலவுகள்:-

          பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின் படி இன்னும் மூன்று நிலவுகள் மட்டுமே இவ்வாண்டுக்கு உரியவையாக எஞ்சி உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாள் வரையிலும் காத்திருந்து அதன் அடுத்த நாளில் தொடங்கி 18 நாட்களைக் கூட்டி எண்ணினால் இந்த ஆண்டுக்குரிய கடைசி மறை நிலவு நாளும் மூன்று பிறைநாட்களும் அதனுள் அடங்க, இந்த ஆண்டு சரிந்து சுருண்டு விடும்.

தடுமாறும் ஊழி:-

          அறம் தவறிய காலங்களில் ஆண்டு நாட்கள் அரசத் தகைமையில் நடப்பது இல்லை என்பதனைக் கண்கூடாகக் காணலாம். நிலவுகளின் ஆடுதலைத் தடுமாற்றத்தைக் கணக்கிட்டு அறியலாம். ஆட்டை நிமிர்வின் பிழையை, அது பற்றிய தேடலை, அறிவைப் புதுப்பிக்கும் முயற்சியே இன்று தேவைப்படுகிறது.

கோத்தொழில் இன்று இல்லை:-

        இயற்கையின் ஒழுங்கு செம்மையாக இருந்தால் ஆண்டின் உட்கூடு 360 நாட்களில் அமைவதும், அந்த நாளில் கதிரவனின் தென்செலவு விலகல் நிறைவு பெற்று அழகாகவும் அருமையாகவும் வடக்கு நோக்கித் திரும்புவதும், மூன்றாம் பிறையானது பொருத்தமான வடிவத்தில் மேற்கு வானில் தோன்றுவதும் நிகழும் என்று பழந்தமிழ் இலக்கியச் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது - என்று இதுவரை ஒருவரும் கருதிப் பார்க்கவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அவ்வாறு கருதுகிறது.

          ஆண்டு நாட்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் வல்லுநர்கள் ஆகக் கோத்தொழிலாளர் என்றொரு வகையினர் தமிழ் மரபில் இருந்தனர் என்றும், கோத்தொழில் நடத்தப்பட்டது என்றும் இன்று அது தமிழர்களால் முற்றாக மறக்கப்பட்டு விட்டது என்றும் இதுவரை ஒருவரும் கருதிப் பார்க்கவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் கருதிப் பார்க்கிறது. அது பற்றிய புரிதலை, விழிப்புணர்வை, உயர் ஆய்வை ஊக்கப்படுத்த விழைகிறது.

புதியவர்கள் – புதிய முயற்சி:-

        கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியில் 2015-ஆம் ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டின் நாள்முறைமை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட தமிழ் அறிஞர்கள் பலரும் தமிழ் இளைஞர்களும் முதன் முறையாக வடசெலவு தென்செலவின் விலகலையும், நிலவின் வரவு செலவையும், வானத்து மீன் கூட்ட நகர்வுகளையும் நிமிர்ந்து பார்க்கப் பழகியிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களின் துணையோடும், நல்ல உள்ளங்களின் புரிந்துணர்வோடும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் சீராகக் கட்டமைவு பெற்று வருகிறது.

ஆட்டை நிமிர்வும் அதன் துன்பமும்:-

          அண்டவெளியில் எத்தனையோ உருண்டைகள் நில்லாமல் சுழல்வதைப் போல, இந்த உலக உருண்டையும் தன் அச்சில் சுழல்வதை அறிவோம். தன் அச்சி்ல் சுழல்வதாலும் நில்லாமல் சுழல்வதாலும் அதனை உல்குதல் என்ற செயலாக வகைப்படுத்தி உலகம் என்று அழைத்தனர் போலும் பழந்தமிழர். அதில் புதுமை ஏதும் தெரியவில்லை.

          நாம் வாழும் இந்த உலகில் உயிர்கள் தொகுப்பாகவும், முற்றுமொழுப்பாகவும் வாழ்வதாலும் அவற்றுக்கு வாழ்வியல் நோக்கம் உண்டு என்பதாலும் அதனைக் கோள் என்று வகைப்படுத்தினர் போலும் பழந்தமிழர். அதிலும் புதுமை ஏதும் தெரியவில்லை.

          கதிரவனை நடுவப்படுத்திச் சுற்றிவரும் இந்தக் கோள், கிழக்கு நோக்கிக் குட்டிக் கரணம் அடித்துப் பாய்வதும் அதன் மறுதலையாகக் கதிரவன் மேற்கு நோக்கிச் செல்வதும், 6 திங்கள் வலப்புறமாகவும் 6 திங்கள் இடப்புறமாகவும் விலகி விலகித் தோன்றுவதும் நன்கு அறியப்பட்டதே. அதிலும் எந்தப் புதிய புரிதலும் இல்லை. வடசெலவும் தென்செலவும் சேர்ந்த காலத்தை ஓராண்டு என்று கருதுவதும்  மரபு வழிப்பட்டதே. அதிலும் புதுமை இல்லை.

          ஆனால் இந்த விலகல் நாட்களைக் கணக்கிட்டு உலக உருண்டையின் ஆட்டையை மாந்த முயற்சியினால் தமிழர்கள் கட்டுப்படுத்தி அதன் வழியே ஒரு நாளைச் செதுக்கி முறையாக முரசறைந்து அறிவித்தனர் என்பது மட்டுமே புதிய செய்தியாகத் தெரிகிறது. அதுவே ஆட்டை என்று அழைக்கப்படுகிறது. அந்த அறிவை ஆரோ களவாடிச் சென்று தொலைத்து விட்டனர். அன்றைய நாளில் இருந்து எல்லாக் களவுகளும் ஆட்டையைப் போடுதல் என்று அழைக்கப்பட்டு வருகின்றன போலும். உலக உருண்டையின் நிலையும் படிதமும் நன்றாகவே விளங்கிக் கொள்ளப்பட்ட தமிழர் மரபில் ஆண்டுக் கணக்கே தடுமாறிப் போனது ஒட்டு மொத்த மாந்த இனத்திற்கும் அதனைச் சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் பேரிழப்பு ஆகிறது. பிற உயிர்களுக்கும் பேரிழப்பு ஆகிறது. பிற உயிர்களுக்கும் புத்தாண்டு மீட்பு முயற்சியில் பங்கு இருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை.

தெருத்தெருவாக இருக்கைகள்:-

          ஒவ்வொரு நாளும் கதிரவனின் வரவை அதன் தோன்று புள்ளியை உற்று நோக்கினால் அது விலகி விலகி ஒரு பெரும் தொலைவை வடக்கு தெற்காக அலசுகிறது என்பது கண் கொள்ளாக் காட்சியாகும். அது தலைக்கு மேல் குறுக்கு மறுக்காகச் செல்லாமல் தெருத் தெருவாக இணையாக இடைவெளிவிட்டுப் போர் யானைகள் அணிவகுத்துச் செல்வது போலச் செல்லும் என்பதும் மகிழ்ச்சியான புரிதலைத் தரும். அந்த இடைவெளிகளே இருக்கை என்றும் அவை 30 நாட்களின் விலகல் அளவு என்றும் தெரிகிறது.  6+6=12 என இரு வசமாக மடங்கி அமைவதும் அந்த இருக்கைப் பாதைகளில் தலைக்கு மேல் இரவு வானத்தில் 12 வகை மீன் கூட்டங்கள் நகர்வதும் அவற்றில் ஓர் ஒழுங்கு இருப்பதும் மிக நன்றாகத் தமிழர்களால் விளங்கிக் கொள்ளப் பட்டிருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. பெருந்தச்சு மரபு, நிழலின் அளவுகளையும் நீளக் குறுக்கம் மற்றும் விலகலையும் திரிபு இன்றியும் ஒரு புள்ளியில் இருந்து கோணம் பார்க்கும் முறையை முற்றாகத் தவிர்த்தும் தெளிவான வரையறைகளைத் தந்திருக்கிறது.

கிரேக்க வானவியல் அறிவு:-

          ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு கோணங்களில் மீன் கூட்டங்களைக் கணக்கிடும் வழக்கம் எங்கிருந்து வந்து தமிழர்களைத் குழப்பியது என்று தெரியவில்லை. பழந்தமிழ்ப் பரப்பில் அது இல்லை என்று கூறலாம். பெருந்தச்சு மரபில் இல்லவே இல்லை. !

அசையாத வடமீனும் நகரும் மீன் கூட்டங்களும்:-

          இரவில் வடதிசையின் தொடு வானத்தில் இருந்து ஒரு பனை உயரத்தில் மிகச் சிறியதாக ஒரு மீன் அசைவு அற்று இருப்பதும், இரவு முழுவதும் ஆண்டு முழுவதும் அது மாறாமல் இருப்பதும் பழந்தமிழர்களால் வியக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் எதிர் தெற்கில் ஒரு மிகப் பெரிய வானத்து மீன் கூட்டம் நகர்வதும், அது நெருங்கியும் புறந்தள்ளியும் குனிந்தும் நிமிர்ந்தும் தென்பகுதி வானம் முழுவதையும் அலசுவதையும் நன்கு புரிந்து கொண்டு அதனை மகரம் என்று அடையாளப் படுத்தி இரவு நேர மகர இருக்கையில் பகல் நேரக் கதிரவனின் ஓடு பாதை 30 நாட்கள் பொருந்துவதை அச்சாகக் கணக்கிட்டு அருமையான ஆண்டுக் கணக்கை வடிவமைத்து இருக்கிறார்கள் பழந்தமிழர்.

          தென்செலவின் திருப்பத்தின் போது தான் மகர வெளியில் கதிரவன் நுழையும் அக்கால இடைவெளியின் முழு நிலவு மிகவும் வெளிச்சமாக இருக்கும் என்றும் நள்ளிரவில் அறுமீன் இணைந்து செல்லும், அன்று வாகை மரத்து இலைகள் கண் விழிக்கும் என்றும் வானவல்லிக் கொடி குடம் குடமமாய் நீர் சொரியும் என்றும் செய்திகள் உள்ளன.

          தமிழில் உயிரெழுத்து மெய்யெழுத்துக் கட்டமைப்பில் மகர எழுத்தின் இடமும் இதனை ஒட்டியே அமைக்கப்பட்டிருப்பது யாப்பு, செய்யுள், புலமை உடைய பிரிவினரின் இன்னொரு அறிவுத்துறையாகும். அதிலும் ஆண்டுக் கட்டுமான நுட்பம் பொதிந்துள்ளது.

பிற இருக்கைகள்:-

          மகரத்தைப் போலவே பிற இருக்கைகளும் 30 நாள் இடைவெளியைக் கடைப் பிடிக்கின்றன. வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு வடிவில் ஆன மீன் கூட்டங்கள் வெவ்வேறு கதிகளில் செல்வதும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

          மகரம் முதலாக மிதுனம் ஈறாக ஒரு வசமாகவும் கடகம் முதலாக வில் ஈறாக மறு வசமாகவும் வகை செய்யப்பட்டுள்ளன.

          பழந்தமிழ் நூல் மரபில் இவை வேறு தூய தமிழ்ச்சொற்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய பதிவுகள், தொழில் மரபு நூல்கள் தூய வடிவில் இன்று நம்மிடையே இல்லை.

கைவளையல்கள்:

          செறிவாக அடுக்கப்பட்ட கைவளையல்கள் வரிசையாக இருந்து தனித்தனியே சுழல்வது போல இருக்கைப் பாத்திகளில் மீன் கூட்டங்கள் ஆண்டு முழுவதும் சுழல்வதையே தமிழர்கள் மிக எளிமையாகப் புரிந்து கொண்டுள்ளனர். ‘கோள் நேர் எல்வளை’ என்றும் குறிப்பிடுகின்றனர். இதனால் அறிவது வானத்து மீன் கூட்டங்கள் ஒன்றையொன்று குறுக்கிடுவதில்லை என்றும், அவை ஒழுங்காகத் தோன்றினால் உலக உருண்டையின் ஆட்டை தன்னை தகைவகை செய்து தகவமைத்து ஒழுங்கில் இயங்குகிறது என்பதும் ஆகும்.

மானசாரம்:-

          சமற்கிருத மொழியில் திரித்து எழுதப்பட்ட மானசாரம் என்ற தமிழரின் பெருந்தச்சு நூல் பல அரிய உண்மைச் செய்திகளைத் தாங்கியுள்ளது. பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் நிழல் வசம், விலகல் அளவுகள் ஆகியன அதிலிருந்தே பெறப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளவாறு மகரம் முதலான பெயர்கள் ‘படிநிலை-1’ என்றவாறு ‘மாநாகன் இனமணி-10’ ஆகத் தரப்பட்டுள்ளன.

          கடந்த இரண்டு ஆண்டுகளில் அதனில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. தோன்றவும் இல்லை. எவரும் கருத்துத் தெரிவிக்கவும் இல்லை. ஊன்றிப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்கிடவும் இல்லை. தடுக்கவும் இல்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அதற்குத் தக உழைக்கவும் இல்லை. ஆயினும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்ட ‘படிநிலை-2’ நாட்காட்டியை எதிர்காலத்தில் வடிவமைத்து வெளியிடலாம்.

நாள்காட்டி அட்டை:-

          கிழக்கில் தோன்றும் கதிரவனை நாம் வெறும் கண்ணால் பார்த்துத் தலையை வலப்புறமும் இடப்புறமும் ஆக அசைத்து எப்படி அதன் தென்செலவு, வடசெலவினைக் காண்கிறோமோ அதே வசம் மாறாமல் உள்ளது உள்ள படியே நாட்காட்டி அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேர வானத்து மீன் கூட்டங்களையும் அவ்வாறே வகைப்படுத்திக் கால இடைவெளி பகுக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு புதுமை:-

          விளங்கிக் கொள்வதில் ஒரு புதுமையாக விலகல் வசம் மடக்கு முறையில் இல்லாமல் ஒரே நீட்சியாகத் தரப்பட்டுள்ளது. காண்போர் மனக்கண்ணில் அவற்றை வளைத்துப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

          கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் இந்த நாள்காட்டி வெட்ட வெளியிலும் அவரவர் மனத்திரையிலும் உள்ளது உள்ளபடி தெரியும். தனியாக நாட்காட்டி அட்டையே தேவைப்படாது.

          கிழக்கு நோக்கி நின்றுகொண்டு தலை அசையாத நிலையில் கண் பார்வையை எவ்வளவு தொலைவுக்கு விலகல் செய்து பார்க்க முடியுமோ அந்த எல்லைகளில் தான் மகரமும் மிதுனமும் எல்லை கொண்டுள்ளன என்பது புரியும்.

கூட்டு முயற்சி:-

          ஆண்டு முழுவதும் இதனைப் பார்க்க விரும்புவோர் தரையில் குச்சி அறைந்து அதைச் சுற்றி வட்டம் வரைந்து நிழலின் அடி அளவையும் ஆட்டத்தையும் பார்க்கலாம். இவ்வாறான அடியின் அளவுகளுக்கும் கால இடைவெளிக்கும் ஏற்பப் பணுவல் இயற்றும் ஆற்றலைப் பழந்தமிழ்ப் புலமை மரபினர் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. இவ்வகையிலான ஆண்டுக் கணக்குப் புரிதலை ஒரே நாளில் கண்டறிந்திட இயலாது. ஓரிருவர் மட்டும் முயன்றும் பயன் இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி. மனத் தூய்மையும், தொடர்ந்த  தேடலும் உழைப்பும் மட்டுமே பயன் தரும். பரிவான அரசுப் பார்வை தேவை என்பதில் ஐயமில்லை. இந்தச் செய்திகளின் பின்புலத்தில் நெருங்கிவரும் புத்தாண்டினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அக்கறை கொள்வோம்.

1.   இந்த ஆண்டின் இறுதிநாள் எது என்பதனை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிவித்து விடும். அதில் ஐயம் ஏதும் இல்லை.

2.   இது ஒரு பிழை அறிவிப்பு முயற்சியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியும் ஆகும். அதனால் திறனாய்வுகள் பற்றியும் மாற்றுப் பார்வைகள் பற்றியும் எவரும் ஆர்வம் கொள்ளல் இயல்பே.

3.   அடுத்த ஆண்டின் தொடக்க நாள் மற்றும் முதல் 12 நாட்கள் எவை என்றும், அந்த நாட்களில் தமிழர்கள் தாராளமாகப் புத்தாண்டு நடைமுறையைத் தொடங்கிடலாம் என்றும், அந்தப் பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னதாக 7 நாட்களைக் கணக்கிட்டுக் கைகுத்தல் அரிசியை ஊற வைத்துப் புத்தாண்டு நாளின் காலையில் புதுப்பானையில் உலை நீராகக் கழுநீரை ஊற்றி, நாற்ற உணவை முன்னோர் படையலாக அளித்திடவும் முனையலாம் – என்றும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிவித்து விடும். அதிலும் ஐயம் இல்லை.

அந்த நாள் அறிவியல் அடிப்படையில் ஆன தென் செலவுத் திருப்பத்தில் இருந்து வேறுபடுகிறதா? அல்லது மரபு வழிப்பட்ட கணக்கீட்டின்படி அடிநிழல் இற்றுப் போகும் இறுதி அளவை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்கிறதா என்பன மட்டுமே வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

நெடுங்காலமாக மறந்து போன அறிவுத்துறை ஒன்று இப்போது துலங்குகிறது என்றால் அது உடனே முழுமை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. அனைத்தையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவும் இயலாது. அதே நேரம் மரபு வழி நம்பிக்கைகளில் மாற்று மரபினரையும் படிப்பறிவு இல்லா மக்களையும் குழப்பி விடவும் கூடாது.

     ஆய்வாளர்கள், உயர் ஆய்வில் ஆர்வம் உடையோர் சார்பற்ற நடுநிலையாளர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் எந்த இனத்தில் இருந்தாலும் தமிழர்களின் இந்த முயற்சிக்குப் பங்களிப்புத் தரலாம். மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அதனை வணங்கி வரவேற்கும்.

     தமிழர்களின் இம் முயற்சிக்குத் தீங்கு விளைவிப்போரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் இறங்கி அடிப்போரைத் தகர்க்கவும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தயங்காது.  ஏனெனில் புத்தாண்டு பற்றிய அறிவு நுட்பங்கள் மொழிக்குள் பதுங்கியிருக்கின்றன.

     தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலமை மரபினர், தமிழ் இசைக் கலைஞர்கள், தமிழரின் மரபு வழிப்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், பண்மீட்பாளர்கள், கூத்துக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள், படிமக்கலை, பாவைக்கலை வல்லுநர்கள், பெருந்தச்சர், பெருங்கணியர், அறிவியல் அறிஞர்கள், மென்பொருள் வல்லுநர்கள், மேலாண்மை வல்லுநர்கள் இவர்களோடு தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமைகள் ஆகியோர் ஒன்று கூடி மீட்டெடுப்பதுவே தமிழ்ப்புத்தாண்டு ஆகும்.

அரசியல்:-

          தமிழில் அரசு, அரைசு என்ற சொற்களே நிலவை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பின் பெயர் என்று தெரிகிறது.

          நிலவை அரவு தீண்டவிடாமல் ஆண்டு நாட்களை ஒழுங்கு செய்யும் நுட்பம், அறம், முரசு, அரச யானைகள், வேல், வேத்தியல் கூத்து, கோத்தொழில், சூருள்ளியாடும் மகளிர், பொருநர் காணாச் செரு எனப் பழந்தமிழரின் புரிதல் விரிகிறது. இன்றையக் காலத்திற்கேற்பப் புரிந்து கொள்வதிலும் பிறருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வதிலும் புதிய அரசியல் கட்டாயம் இருக்கிறது.

தமிழக அரசின் தமிழ்ப் புத்தாண்டு:-

          ஐயா வந்தால் ‘தை’யென்றும் அம்மா வந்தால் ‘சித்திரை’யென்றும் ஒரே பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் இரண்டு துருவப் பூச்சாண்டிகளும் தமிழ்ப் புத்தாண்டின் பகைவர்களாக இருக்கிறார்கள்.

          ஒரு வேளை தமிழ்த் தேசியக் கருத்தியலின் அடித்தளத்தில் ஓர் அரசு தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தால் தமிழக அரசே இம் முயற்சியை முன்னெடுக்கலாம்.

          வழக்கமாக ஆண்டு நாட்களில் சரிவு நிகழும் காலக் கட்டங்களில் கொண்டாடப்படும் தகுதியில் தமிழ்ப்புத்தாண்டு இருப்பதில்லை.

          இன்று அந்த நிலைமைதான் நீடிக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டு நாட்களைச் சரிசெய்யும் முயற்சியிலும், அந்த முயற்சிக்குப் பரிவு காட்டும் அரசைக் கட்டியெழுப்புவதிலும் தமிழ் அறிஞர்களும் வல்லுநர்களும் ஈடுபட்டால் வேற்றினத்தார் எவரும் குறுக்கே நிற்கப் போவதில்லை என்பது உண்மை.

தமிழ் தேசியக் கருத்தியல் அடித்தளம்:-

          அறத்தின் வழியில் அரசு அமைப்பதில் தமிழர்கள் மாபெரும் மரபறிவு உடையவர்கள். ஒருபோதும் அடிமைப் பட்டதே இல்லை. அடிமையாகத் தமிழ் உணர விட்டதே இல்லை. ஆனால் பன்னெடுங்காலமாக வயிற்றில் அடிக்கப்பட்டுத் துவண்டு போன வாழ்வும், தலையில் அடிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட அறிவு மயக்கமும் நீங்கும் காலம் இன்று கனிந்து வருவதை உணரலாம்.

          கைக்குழந்தையுடன் ஒரு தாயை ஒருவன் அடிமைப் படுத்தி வேலை வாங்கலாம். அந்தத் தாயின் மடியில் உள்ள குழந்தை தன்னை அடிமையாக உணர்வது இல்லை. தமிழர்களுக்குத் தாய்மடியே தமிழ் என உணரப்பட்ட படியால் அந்தத் தமிழின் இருத்தல் நொறுங்கும் போதுதான் உணர்கிறான், அடிமைப்பட்டது தான் அல்ல! தாய் என்று! தாயின் விடுதலையும் தாய் மண்ணின் விடுதலையும் ஒத்த பண்புடையன. அயன்மை இன அரசுகளின் காலத்தில் தன் மரபுக்குள்ளேயே புதைந்து போகும் வல்லுநர் அறிவு. அரசு மீண்டால் மட்டுமே துலங்கும். தமிழ்ப் புத்தாண்டு அந்த வகையைச் சேர்ந்தது.

தையா சித்திரையா:-

          தமிழர், தமிழர் அல்லாதார் என்ற இன வரைவின் அடிப்படையில் ஒரு விளையாட்டாகத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டியதெல்லாம், அக்காலத்தில் தொழூஉப்புகுத்தல் என்ற மஞ்சுவிரட்டில் ஏறுகளும் காளைகளும் என்ன செய்தனரோ அதையே தான் என்று உணர வேண்டும்.

          மேய்கிற மாடுகளெல்லாம் விலக்கி விடப்படும். பாய்கிற மாடுகளுக்கு முன்னே நெஞ்சைக் காட்டி நிற்பர் மள்ளர். அதே போல இன்றும் மேய்கிற மாடுகளைச் சித்திரைக்கும் பாய்கிற ஏறுகளைத் தைக்கும் வகைப்படுத்துகிற முருகற் சீற்றத்துக் குரிசில் போன்ற இளம் தலைமுறையினர் தமிழ்ப்புத்தாண்டு முயற்சியைக் கையில் எடுக்க வேண்டும்.

          ஏறுகளுக்கும், ஆண் யானைகளுக்கும், தென் பாண்டிய மரபின் காளையருக்கும் அந்த அறிவும் ஆற்றலும் மரபணுவில் உள்ளது என்று தெரிகிறது. அது வெளிப்படுகிறதா என்று தெரிந்து கொள்ளவும் தமிழ்ப்புத்தாண்டு முயற்சி உதவி செய்யும் என்று நம்பலாம்.

 

மக்களிடம் கொண்டு செல்வது:-

          அறிஞர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூடித் தெளிவாகத் திட்டமிட்ட பிறகு மக்களிடம் கொண்டு செல்லும் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய கருத்து ஆழமாக ஊன்றி நிற்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. தமிழ் அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இன்னும் காணப்படாத இவ்வேளையில் செய்ய வேண்டியவை சில உள.

1.   இன்றையத் தமிழக அரசின் சட்டப்படியான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வழக்கம் போல நடை பெறட்டும். தடுக்க வேண்டாம். கலந்து கொள்ளவும் வேண்டாம். யாரெல்லாம் அதனை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று தள்ளி இருந்து பார்த்துக் கணக்கிட்டால் போதும்.

2.   எந்தப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு என்று குறிப்பிடுகிறார்களோ அதே பஞ்சாங்கம் சொல்லும் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடுவோரும் அதே நாளைத் திராவிடப்புத்தாண்டு என்று கூற முயற்சிப்போரும், அவரவர் விருப்பம் போலவே செயல்படட்டும். தடுக்க வேண்டாம். யாரெல்லாம் அதனை அவ்வாறு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று தள்ளி இருந்து பார்த்துக் கணக்கிட்டால் போதும்.

3.   இனத்தால் தமிழர்கள் ஆன கிறித்தவர்களும், இனத்தால் தமிழர்கள் ஆன இசுலாமியர்களும் இனத்தால் தமிழர்கள் ஆன பிற நம்பிக்கையுடையோரும் இனத்தால் தமிழர்கள் ஆன கடவுள் மறுப்பாளர்களும் தமிழ்ப்புத்தாண்டு நாளைத் தமிழ்த் தேசியர்களோடு சேர்ந்து கொண்டாட முற்றிலும் தகுதியானவர்களே. தற்போது தள்ளி இருக்கும் அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் உரிமையுடன் அழைக்கலாம். சிக்கலைப் புரியும்படி எடுத்துச் சொல்லலாம். உதவிடவும் கோரலாம். தமிழின் தையியத்தை, தமிழின் முதன்மையை, ஆளுமையை, விசும்பு உருவத்தை விளங்கச் செய்திடலாம் இந்த உலகத்திற்கு அவர்களின் ஒத்துழைப்போடு.

முன்னறிவிப்பு:-

          தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமைகள் ஒன்று கூடித் தமிழ்ப்புத்தாண்டின் நிலைமையினை அரசியல் ஒழுங்கினை முறைப்படி முன்னறிவிப்புச் செய்யலாம்.

          இவ்வாண்டின் 12-வது முழு நிலவு நாள் நிறைவுற்ற அன்றே அதனில் 18 நாட்களைக் கூட்டி இவ்வாண்டின் இறுதி நாளைக் கணித்திடலாம். அந்த நாளைக்கு 7 நாட்களுக்கு முன்பாகவே கைக்குத்தல் அரிசியை ஊறவைத்து ஏழாவது நாளின் இறுதியில் அதாவது மூன்றாம் பிறையின் நாளில் பிறை பார்த்து அன்று இரவு கழிந்ததும் மறுநாள் காலையில் தோன்றும் புத்தாண்டுக் கதிரவனை வரவேற்றுப் பொங்கல் இடலாம்.

     உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

    பலர் புகழ் ஞாயிறு (திருமுருகாற்றுப்படை-1)

        நெற்றியடியாகப் பலர் புகழ் ஞாயிறு என்று குறிப்பிடும் திருமுருகாற்றுப்படை தமிழர்களின் மந்திர மரபில் முதன்மையான நூல். பலரும் கதிரவனை அந்த ஒருநாள் தான் புகழ்வர். வரவில்லையென்றால் வருந்துவர் என்று புரிய வைக்கிறது.

          இவ்வாறாகத் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பதில் சில உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. புத்தாண்டை விடவும் அதனை அறிவிக்கும் ஆளுமை முகாமையானது.

குத்து மதிப்பாக அறிவிப்பு:-

இன்றைய நிலையில் குத்து மதிப்பாக அந்த நாள் டிசம்பர் 13-ல் அமையலாம். அன்றில் இருந்து 12-வது நாளில் முழுநிலவு அமைய வேண்டும். அதாவது இவ்வாண்டின் கிறித்துப் பிறப்பு நாளான டிசம்பர் 25க்கும் முன்னதாகவே 24.12.2015-ல் அந்த நிலவு அமையலாம். அன்று வரை தமிழ்ப்புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடலாம்.

இவ்வாறாக ஆண்டின் தொடக்கம் தென் செலவின் திருப்பத்திலிருந்து பின் வாங்கிச் செல்வது போலத் தோன்றும். அது ஆங்கில நாள் காட்டியினால் உருவான தோற்றப் பிழையே. தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பில் 30 நாள் இடைவெளியில் ‘ஒருவகை அலைக்கழிப்பு’ என்பது ஆண்டு நாட்களின் சீர்மை தடுமாறிய காலக் கட்டங்களில் தவிர்க்க இயலாதது.

இவ்வாண்டு டிசம்பர் 13 ஆகவுள்ள ஆண்டின் தொடக்க நாள் அடுத்த ஆண்டு சனவரியிலும் மாறி வரலாம். இதில் வல்லுநர் தொழில் நுட்பம் பொதிந்துள்ளது. எது எப்படியாயினும் அறிவிப்பை ஏற்கும் தமிழர்களின் உளவியல் சில மாற்றங்களை ஏற்றாக வேண்டும்.

துப்பு:-

          இதுபற்றிய தமிழரின் மரபறிவே தமிழரின் நெருங்க முடியாத துப்பு ஆகும்.

மார்கழிப் பாவை நோன்பும்

கழுநீர் கொண்ட எழுநாள் அந்தியும்:-

          மார்கழி முழுநிலவின் மறுநாளில் தொடங்கி தைத்தைங்கள் முழுநிலவு நாள் வரையில் ஆன 30 நாட்களில் சரியாக நடுவில் அமையும் மறைநிலவை முன்னும் பின்னும் மும்மூன்று நாட்களைக் கண்ணி கட்டி அமையும் நோன்பு மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

அக்க வாய்ப்பாடு:-

          ஆண்டு நாட்களை 8-ன் மடங்காகப் பிரித்து 45 அக்கங்களில் ஆண்டு நிறைவு செய்யப்படும் நுட்பம் தமிழரிடையே உள்ளது. கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. அவை முறையாகப் பயன்படுத்தப்படும்.

ஆங்கில நாள்காட்டியும் பஞ்சாங்கமும்:-

          ஆங்கில நாள் காட்டியையும் பஞ்சாங்கத்தையும் படிப்படியாகக் கைவிடப் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது ஆங்கில நாள் காட்டியைத் தொடர் நாட்களைக் கணக்கிடவே பயன்படுத்துகிறோம். ஆனால் நெடுங்காலம் அதனை நீட்டிக்க இயலாது. எதிர்காலத்தில் தமிழ் ஆண்டு நாட்களை 1 முதல் 360 வரை தொடர் நாட்களாகப் பயன்படுத்தப் பயிற்சி எடுக்க வேண்டும்.

          மன்னன் இராஜராஜன் இதனை நடைமுறைப் படுத்தியிருக்கின்றான்.

நன்மைகள்:-

          வடசெலவு, தென்செலவு, 12 இருக்கைகள், 12 திங்கள், 12 முழுநிலவு, 12 மறைநிலவு , 12 தேய்பிறை, 6 நாள் கொண்ட வாரம், 60 வாரம் கொண்ட ஆண்டு, வாரத்தின் தொடக்கம் திங்களின் தொடக்கம் ஆண்டின் தொடக்கம் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமையும் நேர்த்தி, வெள்ளிக்கிழமைகளில் முழு நிலவு, செவ்வாய்க் கிழமைகளில் முழு நிலவு, குறித்த நாளில் முதல் மழை, பெண் கோள் ஒழுக்கம், மலர் செடி கொடி மரங்கள் உரிய நாளில் பூத்துக் குலுங்குதல் இவையெல்லாம் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உவப்பானவைதான்.

          இவற்றுக்காகத் தமிழர்கள் செய்ய வேண்டியது எல்லாம் தமது மரபறிவைப் போற்றுதல். இந்தச் சனிக்கிழமையை அவிட்டப் பாதையில் விரட்டுதல் அவ்வளவே.  அதன் வழியே ஒரு திருந்திய பார்வையை ஏற்று எடுத்து, அறம் சார்ந்த வாழ்வியலைப் புதுப்பித்துக் கொற்றம் எய்துதல்.

          எந்த உள்ளூர்ச் சட்டத்தையும் மீறாமல் தமிழர்கள் இதனை எளிதாகவும் விளையாட்டாகவும் செய்து விடுவார்கள், எப்போது என்றால் அழகாக அமைதி காக்கும் தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி இனவரைவு செய்து வழிநடத்தினால். அறிஞர்களின் அத்தகைய முயற்சிகட்குத் தமிழ்ப்புத்தாண்டு படிக்கட்டுகள் அமைத்துத் தரும் என்று நம்புவோம். நல்லதை எதிர்பார்ப்போம்! வருவதை எதிர் கொள்வோம்!.

 

...---ooo000OOO000ooo---...

 

(05.01.2014ல் தொடங்கி 23.12.2014 வரை 353 நாட்களில் 12 முழு நிலவுகளும் 12 மறை நிலவுகளும் கொண்டு கடந்த ஆண்டு சுருண்டது. 24.12..2014 முதல் இன்றுவரை நாட்கள் எண்ணப்படும் பட்டியல் கீழே.)

 

முழு நிலவுகள்

வர வேண்டிய நாட்கள்

வந்த நாட்கள்

தகுதி

நாள் குறைவு

சிறப்புத் தகுதி

ஆங்கில நாள்

1 வது

12

12

     

 

பூசம்

04.01.2015

2 வது

42

42

     

 

மகம்

03.02.2015

3 வது

72

72

     

 

உத்தரம்

05.03.2015

4 வது

102

102

     

 

சித்திரை (அரவு தீண்டியது)

04.04.2015

5 வது

132

131

      X

1

விசாகம்

03.05.2015

6 வது

162

161

     

 

கேட்டை

02.06.2015

7 வது

192

191

     

 

பூராடம்

02.07.2015

8 வது

222

220

      X

2

திருவோணம்

31.07.2015

9 வது

252

249

      X

3

உத்திரட்டாதி

29.08.2015

10 வது

282

 

 

 

அசுவதி

 

11 வது

312

 

 

 

கார்த்திகை

 

12 வது

342

 

 

 

மிருக சீரிடம்

 

      (+18=360)

12 வது முழு நிலவு நாளை நேரில் கண்டு உறுதி செய்த அன்றே அத்துடன் 18 நாட்களைக் கூட்டி இவ்வாண்டு நாட்களைக் கணக்கு முடித்து விடலாம்

 

 

 தமிழ்த் தேசிய தக்கார் அவைய வெளியீடு.

[கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன thakkar.avaiyam@gmail.com ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.