Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

டிசம்பர்_12. சூப்பர் ஸ்டாரின் 57_வது பிறந்தநாள். வழக்கம்போல் அவரது பிறந்தநாளின் போது கூடவே இறக்கை கட்டிப் பறந்து வரும் அரசியல் ஆரூடங்களுக்கும், ஹேஷ்யங்களுக்கும் இந்த வருடமும் இறக்கைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதில் முக்கியமானதும், முதன்மையானதும் ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரஜினி சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்’ என்பதுதான்.

‘‘இப்போது விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார், ரஜினி. தவிர, ‘தான் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்பதான ஒரு மாயையை உருவாக்கி, தனது ரசிகர்களைப் புடம் போட்டு, அவர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை இனம் கண்டு விரட்டத் தொடங்கி விட்டார். தன்னைப் போலவே தனது ரசிகர்களையும் தூய்மையான அரசியலுக்குத் தயார்படுத்தும் முயற்சிதான் இது! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் ரஜினி மேற்கொள்ளப்போகும் சினிமா ஓய்வை ஒப்புக்கொள்கிறார்கள்.

‘அரசியலே வேண்டாம்’ என்பது போல் சூப்பர் ஸ்டார் ஒதுங்கிவிட்டது மாதிரி தோன்றினாலும், உண்மையாகவே தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தப் பணிகளைத் திட்டமிட்டு, அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாராம். அதில் முதன்மையானது. சினிமாவிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவது. மக்கள் பணிக்காக அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் திட்டமிட்டுள்ள ரஜினி, அதற்குத் தடையாக சினிமா பணிகள் இருந்துவிடக் கூடாது என்று கருதுகிறாராம். தவிர, தன்னால் சினிமா, அரசியல் என்று ஒரே சமயத்தில் இரட்டைக் குதிரைச் சவாரி பண்ண முடியாது என்றும் நினைக்கிறாராம்.

எனவே, இன்னும் இரண்டு வருடங்களுக்குள்ளாக, அதாவது, 2008_ம் வருடத்திற்குள் சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகிவிடுவாராம். அதன் பிறகே ரஜினியின் அரசியல் ராஜபாட்டை ஆரம்பமாகுமாம். அதென்ன இரண்டு வருடக் கணக்கு என்று கேட்டால், அதற்கும் வலுவான காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள்.

‘சிவாஜி’க்குப் பிறகு கவிதாலயா, சத்யா மூவிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களில் ஏதாவது ஒன்றுக்குத் தனது அடுத்த பட வாய்ப்பைத் தர இருந்தாராம். என்றாலும், அதிலும் சூப்பர் ஸ்டாருக்குச் சின்னதாக தயக்கம். மேற்படி இரண்டு நிறுவனங்களுமே ரஜினியின் திரையுலக வாழ்விற்கு மைல்கல்லாக அமைந்தவை. தன்னைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்த குரு கே. பாலச்சந்தர். அதே சமயம், பாட்ஷா படத்தைத் தயாரித்ததன் மூலம், தன் மீது அரசியல் நிழல் படியக் காரணமாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன். ஆகவே, இருவருமே தவிர்க்க முடியாதவர்கள். இவர்களின் இரண்டு நிறுவனங்களுக்குமே படம் செய்து தருவதுதான் முறையாக இருக்கும் என்ற எண்ணஓட்டம் சூப்பர் ஸ்டார் மனதில் ஓடுகிறதாம்.

அந்த வகையில், அசத்தலான கதை மாட்டினால், இரண்டு நிறுவனங்களுக்குமே அடுத்தடுத்த வருடங்களில் படம் செய்து தருவாராம் சூப்பர் ஸ்டார். அதற்காகத்தான் இந்த இரண்டு வருட அவகாசமாம். அதே சமயம், ஒரு விஷயத்தில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.

அதாவது, தனது கடைசிப்படம், அதிரடியான அரசியல் படமாகவும், தனது அரசியல் பிரவேசத்திற்கு அசைக்க முடியாத அடித்தளமாகவும் அமைய வேண்டும் என்று நினைக்கிறாராம். அந்த வகையில் இந்தப் புதிய படத்தை தனக்கு ‘பாட்ஷா’ மூலம் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனமே தயாரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.

சத்யா மூவீஸ் தயாரிக்கப் போவதாகச் சொல்லப்படும் ரஜினியின் இந்தக் கடைசி படத்தை இயக்கப் போவது, சர்வ நிச்சயமாக ஏ.ஆர். முருகதாஸ் தானாம். அதற்காகச் சொல்லப்படும் காரணங்களும் வலுவானவை. விஜயகாந்தின் அரசியல் இமேஜிற்கு கூடுதல் பலம் சேர்ந்ததில் அவர் நடித்த ‘ரமணா’ திரைப்படமே முக்கியக் காரணம். அதே போல், அரசியல் வாடையே இல்லாமல் தெலுங்குத் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. அவரின் ஆக்ஷன் ஹீரோ இமேஜை உடைத்து, அரசியல் அவதார புருஷராக புதிய அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படம் ‘ஸ்டாலின்’. மேற்படி இரண்டு படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ். அந்த வகையில் தனது அரசியல் நெடியடிக்கும் திருப்புமுனைப் படத்தை, இயக்கும் பொறுப்பை ஏ.ஆர். முருகதாஸிடமே தருவதென்று முடிவு செய்து விட்டாராம் சூப்பர் ஸ்டார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு விஷயமும் வங்கக்கடல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் போல் ரவுண்டு கட்டுகிறது. அதாவது, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு மறைமுக காரணமாக இருக்கப் போகிறவர் யார் தெரியுமா? நம்பினால் நம்புங்கள்! புரட்சிக் கலைஞரேதான். கேப்டனின் அரசியல் நடவடிக்கைகளையும், அவரது வளர்ச்சியையும் தற்போது ரொம்பவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார். கேப்டன் எந்தெந்த இடங்களில் ஸ்கோர் செய்து மக்களைக் கவர்கிறார், எங்கெல்லாம் சறுக்கி விழுகிறார் என்பதையெல்லாம் சரியாகக் கவனித்து, நிதானமாக கணித்து அதன் மூலம் கிடைக்கும் அரசியல் பாடங்களைத் தனது அரசியல் பிரவேசத்தின்போது பயன்படுத்த நினைக்கிறாராம் ஸ்டைல் மன்னன்!

மற்றொரு வகையிலும் கேப்டனின் அரசியல் பிரவேசம் ரஜினிக்கு உதவியிருக்கிறதாம். அதாவது, கேப்டனின் அரசியல் என்ட்ரியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மன்ற நிர்வாகிகள் சிலர் அவசரப்பட்டு, ஆவேசப்பட்டு, சில மாவட்டங்களில் பரபரப்பான கூட்டங்கள் போட்டு தனக்கொரு தர்மசங்கடமான நிலையை உருவாக்கியதை ரஜினியால் சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லையாம். இதனைத் தொடர்ந்து வந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதும், குறிப்பிட்ட அந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டும் அடங்காத ஆட்டம் போட்டதைக் கண்டு அப்போதே ரஜினிக்கு ஏகப்பட்ட எரிச்சலாம்.

என்றாலும், அத்தனையையும் பொறுமையுடன் வேடிக்கை பார்த்த ரஜினி, தேர்தல் முடிந்த கையோடு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மீது மன்றத் தலைவர் சத்யநாராயணா மூலம் நடவடிக்கை எடுத்தார்.

‘‘இன்றைக்குத் தலைவர் பேச்சுக்குக் கட்டுப்படாமல், அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலைவர் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துபவர்களை நம்பி எப்படி அவர் அரசியலில் இறங்கமுடியும்? தனது ரசிகர்களிடம் இப்போது அவர் எதிர்பார்ப்பது அரசியல் பக்குவத்தையும் நிதானத்தையும்தான்’’ என்று ரஜினியின் அந்த அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணம் கற்பிக்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

மேலும், கேப்டன் குறித்த சூப்பர் ஸ்டாரின் மனவோட்டம் எப்படி இருக்கிறது என்பது குறித்தும், அவரது திரையுலக நட்பு வட்டாரம் அறிந்து வைத்திருக்கிறது. அதாவது விஜயகாந்த் சொந்தக் காசைச் செலவு செய்துதான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்துக்குள்ளாகவே தனது சொத்துக்கள் சிலவற்றை விற்றுவிட்டார். இனிவரும் தேர்தல்களுக்கும் அவர் தனது சொத்துக்களைத்தான் விற்றாகவேண்டும். நிலைமை இப்படியே நீடிப்பது கேப்டனுக்கும், அவரது கட்சிக்கும் நல்லதல்ல. தவிர, அவரது ரசிகர்களுக்குப் போதிய அரசியல் அனுபவமின்மை, அதன் காரணமாக கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவது. அதன் விளைவாக கேப்டன் மீது எழும் அதிருப்தி, லோக்கலில் ஊழல்வாதிகளாகப் பெயர் எடுத்த தி.மு.க., அ.தி.மு.க., பிரமுகர்களைத் தனது கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட கேப்டனின் பல பிளஸ் _ மைனஸ்களை ஆராய்ந்து, அவற்றையெல்லாம் தான் அரசியலுக்கு வந்தால் எப்படித் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது என்பது குறித்தும் ஸ்டடி செய்கிறாராம் ரஜினி. என்ன மாதிரியான ஸ்டடி அது?

தான் அரசியலுக்கு வருகிறோம் என்று அறிவிப்புச் செய்தாலே போதும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மீடியாக்கள் உட்பட, இந்தியாவில் உள்ள முக்கிய மீடியாக்கள் வரை தன்னையே ஃபோகஸ் செய்யும். பைசா செலவு இல்லாமல் விளம்பரம் என்கிற வரம் தனக்கு மட்டுமே இருக்கிறது. தவிர, தனது ரசிகர்களும் காங்கிரஸ் (த.மா.கா.) தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்குத் தேர்தல் வேலை செய்து போதிய அரசியல் அனுபவத்தோடு இருக்கிறார்கள். தனக்காக எதையும் செய்யக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களைக் களத்தில் இறக்கிவிட்டால் தமிழ்நாட்டு அரசியலில் அற்புதமே செய்து காட்டிவிடுவார்கள். அதற்குமுன், தன்னைப் போலவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தனது உயிருக்குயிரான ரசிகர்களைப் பக்குவப்படுத்தவேண்டும். அவர்களுக்கு அரசியல் நாகரிகத்தையும், விமர்சனங்களைத் தாங்கக்கூடிய மனவலிமையையும் கற்றுத்தரவேண்டும். என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருந்த மன்றத்தலைவர் சத்யநாராயணா, தற்போது சென்னையில் உள்ள தன் சகோதரியின் வீட்டில் டாக்டரின் அறிவுரைப்படி இரண்டு மாத ஓய்வில் இருக்கிறாராம். இந்தச் சூழ்நிலையிலும் கூட, எல்லா மாவட்டங்களின் நிர்வாகிகளுக்கும் போன் போட்டு, மன்ற நடவடிக்கை பற்றிப் பேசுகிறாராம். பேச்சோடு பேச்சாக ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்துக்கும், அவரது கட்சிக்குமான செல்வாக்கு, வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது பற்றியும் விசாரிக்கிறாராம். கூடவே, தலைவரின் பிறந்த நாளை ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அமைதியாகக் கொண்டாடும்படி கட்டளையும் போடுகிறாராம்.

என்றாலும் கூட, தங்கள் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை அட்டகாசமாய்க் கொண்டாடவே அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அரசியல் நெடியடிக்கும் போஸ்டர்கள்... கட்சிகளுக்குச் சவால்விடும் சுவர் விளம்பரங்கள்... ரஜினியைத் தொழும் பேனர்கள்... என்று வழக்கம் போலவே முப்பது மாவட்ட நிர்வாகிகளும், லட்சக்கணக்கான ரசிகர்களும் தற்போது பரபரப்புப் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள். தலைவர் தங்களை ஏமாற்றாமல் நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது.

ஆனாலும் ரசிகர்களின் இந்த நம்பிக்கைக்கு ரஜினி என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.