Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் நகர்வுகள்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் நகர்வுகள்? - யதீந்திரா

ரணிலின் நகர்வுகள்?
 

 

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டுவேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல்கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றார். இங்கு பேசிய ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. மேற்படி அறிக்கைகளை சமர்பித்து பேசுகின்ற போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை பலப்படுத்துவதற்காக நீதிபதி ஒருவரை அனுப்பி உதவுமாறு 2014ஆம் ஆண்டு விடுத்த வேண்டுகோள் ஒன்றின் அடிப்படையிலேயே, தற்போது யப்பான் ஒரு சர்வதேச நீதிபதியான முட்டோ நொகோச்சியை (Moto Nogouchi) அனுப்பி வைத்திருப்பதாகவும், இதற்காக மகிந்த ராஜபக்சவிற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் ரணில் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கு ரணில் தன்னுடைய பேச்சில் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, சர்வதேச கொள்கைக்கும், நாடுகளுடனான உறவிற்கும் இடையில் சமநிலையை பேணிக்கொள்ளவதில் முன்னைய அரசாங்கம் ஆற்றலற்றதாக இருந்தது. இதன் காரணமாகவே நாம் எங்களுடைய நண்பர்கள் பலரை இழக்க நேரிட்டது. ஜப்பானுக்கும் இலங்கைக்குமான உறவிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறானதொரு சூழலில்தான் ஜப்பானிய பிரதமரின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், எங்களுடைய அரசாங்கம் முன்னைய தவறுகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் ஒரு சீரான வெளிவிவகாரக் கொள்கையை (balanced foreign policy) முன்னெடுப்பத்தற்கு நாங்கள் பெருமுயற்சியெடுத்தோம், விசேடமாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பானுடன்.

ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகிறது. அதாவது, ரணில் விடயங்களை இரண்டு நிலையில் அணுக விளைகின்றார். ஒன்று முன்னைய ஆட்சியாளர்களால் இலங்கையின் சர்வதேச உறவுகள் பெருமளவில் பாதிப்படைந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு தன்னுடைய அரசாங்கத்திற்கு உண்டு. இதனை சரிசெய்ய வேண்டுமாயின் சர்வதேச சமூகத்துடன் ஒத்துப்போக வேண்டியது அவசியம். ஆனால் ரணில், மகிந்தவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் சமர்ப்பித்துவிட்டே இவ்வாறானதொரு விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மட்டுமே நாடாளுமன்றத்தில் ரணில் சமர்பித்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, ஏன்? ஐ.நா விசாரணை அறிக்கையை மட்டும் சமர்ப்பித்து விவாதத்திற்கு சென்றால் அதனை மகிந்த தரப்பு மட்டுமற்றி ஏனைய பலரும் எதிர்க்கக் கூடும். மகிந்தவினால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கையையும் இணைத்து விவாதமொன்றிற்கு செல்லுமிடத்து, எதிர்ப்பை சமாளிப்பதுடன் சிங்கள மக்கள் மத்தியிலும் தேவையற்ற அச்சங்களை விதைக்க கூடியவர்களையும் சமாளிக்க முடியும். இந்த இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ரணில் மகிந்தவின் ஆணைக்குழுக்களின் அறிக்கையையும் விவாதத்திற்கு எடுத்திருக்கின்றார்.

ஆனால் இதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கலாம் என்பது இப்பத்தியின் கணிப்பு. அதாவது, பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பலவற்றை நிராகரித்துள்ளது. மேலும் யுத்தத்தின் இறுதியில் 40000 வரையான தமிழ் மக்கள் இறந்திருக்கின்றனர் என்னும் தர்ஸ்மன் அறிக்கையின் தகவலையும் மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கை நிராகரித்திருக்கின்றது. மேலும் யுத்தத்தின் இறுதி நாளில் 12 மணித்தியாலத்திற்குள் கொல்லப்பட்ட பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளாலேயே கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகிறது. அந்த அடிப்படையில் நோக்கினால் யுத்தத்தின் போது இறந்ததாக கூறப்படும் பெருமளவான தமிழ் மக்கள், ஒன்றில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது அவர்களது இறப்பிற்கு விடுதலைப் புலிகள் காரணமாக இருந்திருக்கின்றனர் என்னும் முடிவொன்றிற்கே அனைவரும் (இதனை ஏற்றுக் கொள்பவர்கள்) வர நேரிடும். ஆனால், இராணுவத்தினரும் பொதுமக்களின் கொலைகளுக்கு காரணம் என்பதையும் பரணகம ஆணைக்குழு ஏற்றுக் கொள்கின்றது. முன்னைய ஆட்சியாளர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட விடயங்கள் சிலவற்றை பரணகம ஆணைக்குழு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ரணில் மூன்று அறிக்கைகளையும் முன்வைத்து விவாதிக்கின்ற போது, இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை பொறிமுறை தொடர்பிலான ஒரு பொது இணக்கப்பாட்டை எட்டுவது அவசியம். ஆனால் இங்குள்ள ஆபத்து அவ்வாறானதொரு பொது இணக்கப்பாடு அனைத்து விடயங்களிலும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறானதொரு சூழலில், பொது இணக்கப்பாடு ஏற்படக் கூடிய விடயங்களை முதலிலும், பொது இணக்கப்பாடற்ற விடயங்களை பின்னரும் முன்னெடுக்கலாம் என்றவாறான ஒரு வேலைத்திட்டத்தை ரணில் முன்வைக்கலாம். சிக்கலான விடயங்களை உடனடியாக பொறிமுறைக்குள் உள்வாங்கிக் கொள்வதை தவிர்க்கலாம். ஏனெனில் தெற்கின் பொது இணக்கப்பாடின்றி எந்தவொரு விசாரணையையும் இலங்கையில் மேற்கொள்ள முடியாது. இந்த யதார்த்தத்தை ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஏற்றுக்கொள்ளும்.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ரணில் இலங்கையின் வெளிவிவகார உறவுகளை பலப்படுத்துவதற்கே முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகின்றார். இதன் மூலம் இலங்கையின் மீதான அழுத்தங்களை குறைப்பதுடன் அதனை நட்புரீதியான தொடர்புகளின் வழியாகவும் கையாள விளைகின்றார். ரணிலின் நகர்வுகள் தூர நோக்கில் இலங்கையின் மீதான அழுத்தங்களை முற்றிலும் இல்லாமல் செய்துவிடுவதற்கான ஓர் உபாயமாகும். இதற்காக இலங்கைக்குள் எதனையும் செய்யாமலும் இருக்க முடியாது. சில விடயங்களில் முன்னேற்றங்களை காண்பிக்கவும் வேண்டும். ஆனால் அந்த முயற்சிகள் தன்னுடைய அரசியல் இருப்பையும் பலவீனப்படுத்திவிடக் கூடாது. ஏனெனில் தற்போதிருக்கின்ற தேசிய அரசாங்கத்தின் ஆயுள் எவ்வளவு காலம் என்பதை எவரும் அறியார். மகிந்த தரப்பு மீள்எழாதாவொரு சூழல் தெற்கில் உருவாக்கப்படும் வரையில் காத்திருக்க வேண்டியதொரு புறநிலைமையே தெற்கில் காணப்படுகிறது.

எனவே, தான் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தன்னுடைய இருப்பை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதே ரணிலில் முதல் இலக்காக இருக்கும். அதேவேளை தற்போதைய தேசிய அரசாங்கத்தை பலவீனமடையச் செய்யும் வகையில் அழுத்தங்கள் எவையும் வெளியிலிருந்து வரப் போவதுமில்லை. இறுதியான அமெரிக்க பிரேரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் அமெரிக்க அழுத்தங்கள் தொடர்வதற்கான தேவையை இலங்கை இல்லாமலாக்கியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் வோசிங்டன் கூட்டமொன்றில் பேசிய அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி, இலங்கையின் ஜனநாயகத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார். அவர் குறிப்பிடும் பாரிய முன்னேற்றம் என்பது ஆட்சிமாற்றமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் புதிய அரசாங்கத்தின், மேற்குடன் இணங்கிப் போகும் வெளிவிவகார அணுகுமுறையுமாகும்.

இதில் பிறிதொரு விடயத்தையும் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ரணில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த ஒருவர். 2015இல் ஜனாதிபதியாவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தும் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலையீட்டால் நழுவிப் போனது. இதன் பின்னர் இடம்பெற்ற இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போதும் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தும் கூட, அவரால் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கமுடியவில்லை. இந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருப்பதற்குக் கூட, பல்வேறு உள் முரண்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவை அனைத்தையும் வெற்றிகரமாக சமாளித்து தொடர்ந்தும் அதிகாரத்தை நோக்கி காத்திருந்த ஒருவராகவே ரணில் இருந்தார்.

ரணிலின் நகர்வுகள்?

இப்படியொரு சூழலில்தான் ஆட்சிமாற்றத்தின் வாயிலாக ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்தது. உள்ளுக்குள்ளும் வெளியிலும் எதிர்ப்புக்களை கையாண்டு அவற்றிலெல்லாம் வெற்றிபெற்றிருக்கும் ஒரு பின்புலத்தில்தான் ரணில் இன்று பிரதமராக இருக்கின்றார். எனவே நிச்சயமாக ரணில் தன்னுடைய அரசியல் இருப்பை பலவீனப்படுத்திக் கொள்ளும் வகையில் எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னரான நிலைமைகள் ரணிலுக்கு முற்றிலும் சாதகமாகவே இருக்கின்றது. ஒருவேளை ரணிலின் இலக்கு அடுத்த ஜனாதிபதியாக இருக்குமாயின், அவர் நிச்சயம் நிலைமைகளை மிகுந்த நிதானத்துடன்தான் கையாளவே முற்படுவார். அடிப்படையில் ரணிலுக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுப்பதிலோ அல்லது போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதிலோ சங்கடங்கள் இருக்காமல் இருந்தாலும் அவைகள் தன்னுடைய அரசியல் இருப்பை பாதிக்குமென்றால் ரணில் நிச்சயம் அவற்றிலிருந்து பின்வாங்கவே செய்வார். ரணில் கால அவகாசம் எடுக்கும் ஓர் உபாயத்தையை கடைபிடிக்க முயல்வார். வாக்குறுதியளித்த விடயங்களில் சிலவற்றை செய்யும் அதேவேளை, சிக்கலான விடயங்களுக்கு காலத்தை எடுக்க வேண்டிய தர்க்கமொன்றையே சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் முன்வைக்க முயற்சிப்பார்.

அது சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில் சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கும் இடைவெளிகள் சரிசெய்யப்பட்டிருக்கும். இதுவே ரணிலின் பிரதான நகர்வாக அமையலாம். ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ரணில் இந்தியாவுடனான உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு பிரதான இடத்தை வழங்கியிருக்கின்றார். அதேவேளை சீனாவிலிருந்து முற்றிலும் விலகிவிடாதவொரு வெளிவிவகார அணுகுமுறையையும் கடைப்பிடிக்கின்றார். மேலும் பெருமளவான அந்நிய முதலீடுகளை நாட்டை நோக்கி கொண்டுவருவதிலும் அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக இந்தியா, ஜப்பான் மற்றும் மேற்குலக முதலீடுகள் அதிகரித்துச் செல்கின்ற போது, இலங்கைக்குள் அமைதியான சூழல் ஒன்றையே சர்வதேச சக்திகளும் அவாவி நிற்கும். தவிர, இலங்கையில் எது பிரச்சினையாக நோக்கப்பட்டதோ அந்த விடயங்கள் குறிப்பாக நீதித்துறை மறுசீரமைப்பு, சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற விடயங்களில் முன்னேற்றகரமான நிலைமையையும் அரசாங்கம் காண்பிக்கும். இதுபோன்ற பல்வகை உக்திகளை ஒருங்குசேர முன்னெடுக்கக் கூடிய ஒருவராகவே ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். இவ்வாறானதொரு பல்வகைத்தான விடயங்களை ஒருங்குசேர முன்னெடுத்துச் செல்லும் போதுதான் பல்தரப்பு சவால்களை சமாளிக்கவும் முடியும்.

ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். அவ்வாறாயின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன நிகழும்? இதற்கு பதில் தமிழ் மக்கள் எவரை தங்களின் தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களிடம்தான் கோர வேண்டும். அரசியல் கைதிகள் விவகாரம், தேசிய அரசாங்கம் எதுவரை செல்லும், ஆட்சியாளர்களை இறங்கிவர வைக்க வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கோடி காட்டியிருக்கிறது. 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=13856a56-da55-41cd-8ba2-c2d2b0fca362

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.