Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாள அறைகளுடன் இலங்கையில் ரகசிய சித்ரவதை கூடம் நேரில் கண்டுபிடித்த ஐ.நா. குழு அதிர்ச்சி தகவல்

Featured Replies

 
201511190104158304_Cellar-rooms-In-Sri-L

கொழும்பு

இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்தது.

10 நாள் பயணம்

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்த சமயத்திலும், சண்டைக்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே–ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், இலங்கைக்கு சென்றனர்.

அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். தலைநகர் கொழும்பு மட்டுமின்றி, கலே, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்றனர். காணாமல் போன தமிழர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களை சந்தித்துப் பேசினர்.

அவர்களின் 10 நாள் சுற்றுப்பயணம் நேற்றுடன் முடிவடைந்தது.

சித்ரவதை கூடம்

இதையடுத்து, தாங்கள் நேரில் கண்டவற்றை குழுவில் இடம்பெற்றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி நேற்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

இந்த பயணத்தின்போது, கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை கண்டுபிடித்தோம்.

சண்டை முடிவடைந்த ஓராண்டுக்கு பிறகும், அதாவது 2010–ம் ஆண்டுவரை அந்த கூடம் இயங்கி உள்ளது. அங்குள்ள பாதாள அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அங்குள்ள சுவர்களில் காணப்படுகின்றன.

விசாரணை வேண்டும்

இதை கண்டுபிடித்ததை முக்கிய கண்டுபிடிப்பாக கருதுகிறோம். இன்னும் இதுபோல் நிறைய இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே, இந்த கூடம் பற்றி இலங்கை அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்குழு, தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்க உள்ளது.

http://www.dailythanthi.com/News/World/2015/11/19010419/Cellar-rooms-In-Sri-Lanka-Secret-torture-chamber.vpf

UNWGEID reveals details of a 'secret' detention camp - See more at: http://www.dailymirror.lk/95963/unwgeid-reveals-details-of-a-secret-detention-camp#sthash.k4oCzVgX.dpuf

http://www.dailymirror.lk/95963/unwgeid-reveals-details-of-a-secret-detention-camp

 

  • கருத்துக்கள உறவுகள்
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை தாம் அவதானித்ததாகவும், 2010 ஆம் ஆண்டு வரை இதில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாகவும், காணாமல் போனோர் குறித்த ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை தாம் அவதானித்ததாகவும், 2010 ஆம் ஆண்டு வரை இதில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாகவும், காணாமல் போனோர் குறித்த ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

   

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு பிரதிநிதிகளான . பேனார்ட் டுகைமி, டயி உம் பைக், ஏரியல் டுலுட்ஸ்கி ஆகியோர் நேற்று தமது விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர்.

நாம் இலங்கை விஜயத்தின் போது அரச அதிகாரிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள், பாதிக்கப்பட்டோர் என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கொழும்பு, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார். மாத்தளை, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு நாங்கள் விஜயம் மேற்கொண்டோம். அத்துடன் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர்கள், இராணுவத் தளபதி, பிரத நீதியரசர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர், சி.ஐ.டி.என். உப பணிப்பாளர், வடக்கு, கிழக்கு ஆளுநர்கள், புனர்வாழ்வு அமைப்பின் தலைவர், காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட மாத்தளை, மன்னார் பகுதிகளுக்கும் பூசா முகாமுக்கும், திருகோணமலை கடற்படை முகாமுக்கும், சி.ஐ.டி. மற்றும் டி.ஐ.டி. கட்டிடங்களுக்கும் விஜயம் செய்தோம்.

வாக்குறுதிகள் போதும்செயற்படுத்துங்கள்

விசேடமாக எமது குழுவானது காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பல சந்திப்புக்களை நடத்தின. இலங்கையின் புதிய அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அந்த வாக்குறுதிகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயலுருவாக்கம் பெறவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை புறம் தள்ளி நல்லிணக்கத்தை அடைய முடியாது. இலங்கையில் பலவந்தமான காணாமல் போன சம்பவங்கள் பல திட்டமிட்ட வகையில் இடம்பெற்றன. யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் பலவந்தமான ஆட்கடத்தல் இடம் பெற்றன.

இராணுவ பிரசன்னத்தை குறையுங்கள்

வடக்கு, கிழக்கில் அதிக பட்ச இராணுவப் பிரசன்னமானது சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பதன் மூலம் சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். தற்போது இந்த விடயங்களை ஆழமாக ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கைக்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்டோரின் ஆலோசனையை பெறுங்கள்

எனவே முன்னெடுக்கப்படும் எந்தவொரு பொறிமுறையும் பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும். சிவில் சமூகத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் காணாமல் போனோரின் உறவினர்கள், எந்தவிதமான அச்சமும் , அச்சுறுத்தலும் இன்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டும். ஆனால் இவ்வாறான தரப்பினர் மீது சில அச்சுறுத்தும் செயற்பாடுகள், பாலியல் வன்முறைகள், மேற்கொள்ளப்படுவதாக எமது குழுவிற்கு தகவல் கிடைத்தது. புலனாய்வுப் பிரிவினராலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எமது ஐ.நா. குழுவை சந்தித்த பாதிக்கப்பட்ட சிலர் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இவை ஜனநாயக சமூகத்தில் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குறியதாக ஆக்கப்படுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

பாதுகாப்பு வழங்குங்கள்

எம்மை சந்தித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், அவர்களை எவ்விதமான பழிவாங்கல்களுக்கும் உட்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை கோருகிறோம். உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டின் வெற்றியானது பாதிக்கப்பட்டோர். மற்றும் அவர்களின் உறவினர்களின் உணர்விலேயே தங்கியுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த சில வருடங்களாக 12 ஆயிரம் சம்பவங்கள் தொடர்பில் நாம் அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளோம். அவற்றில் 5750 சம்பவங்கள் இன்னும் நிலுவையிலுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் திட்டமிடப்பட்ட கடத்தல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக வெள்ளை வேன் கடத்தல்கள், மற்றும் கப்பத்திற்கான கடத்தல்கள் என்பன இடம் பெற்றுள்ளன. இலங்கையில் எமக்குக் கிடைத்த தகவல்களின் படி உலகத்திலேயே இரண்டாவது அதிகூடிய தரவை இங்கு பெற்றிருக்கின்றோம். அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளை வரவேற்கின்றோம். புலிகள் தரப்பிலும் பல, கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

உண்மையை கண்டறியும் உரிமை உள்ளது

கடத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உண்மையைத் தெரிவதற்கான உரிமை உள்ளது. எந்தவொரு செயற்பாடும் அனைத்துவகையாலும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயப்படவேண்டும். அங்கு அநீதி இடம் பெற முடியாது. காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்த போது நாம் பாரிய கவலைக்குரிய கதைகளை செவிமடுத்தோம். ஆழமான மற்றும் வருந்தத்தக்க கதைகள் நம்மை வந்து சேர்ந்தன. மிக அண்மைக்காலம் வரை இலங்கையில் கடத்தல்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இது போன்ற செயற்பாடுகள் மீண்டும் இடம் பெறாத வாறு நடவடிக்கை எடுக்கப்படுதல் மிகவும் அவசியம்.

விசாரணைகள் இல்லை

ஆயிரக்கணக்கான காணாமல்போனோர் சம்பவம் தொடர்பில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவும் இல்லை. எனவே தற்போது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளவாறு காணாமல் போனோர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியது அவசியமானதாகும். வாக்குறுதி அளித்தது போதும் தற்போது செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். நம்பிக்கைக்குரிய நடவடிக்கைகளும் உறுதியான முடிவுகளும் தேவைப்படுகின்றன. அதற்கு உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. காணாமல் போனோர் செயற்குழு தயாராக இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச தரங்களுக்கு அமைவாக உருவாக்கப்படவில்லை. அந்த சட்டமானது பலவந்தமாக காணாமல் போகும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு எமது குழு பரிந்துரை செய்கிறது.

இரகசிய முகாம்

எமது குழு திருகோணமலை கடற்படை முகாமிற்கு விஜயம் செய்தது. அங்கு 12 அறைகளைக் கொண்ட ஒரு இரகசிய தடுப்பு முகாமை நாம் கண்டோம். 2010 ஆம் ஆண்டுவரை இதில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம். இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவுகள் தொடர்பில் நாம் அதிக கரிசனை செலுத்தியிருக்கிறோம் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்ட 11 பேர் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்த இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பார்களா என்பது தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நீதிக்காக நீண்டகாலம்

காணாமல் போனோரின் உறவினர்கள் நீதிக்காக நீண்டகாலம் காத்திருந்து விட்டனர். எனவே அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். எனவே காணாமல் போனோர் குறித்து அரசாங்கம் உடனடியாக கொள்கை ஒன்றை தயாரித்து மிகவும் சுயாதீனமாக விசாரணைகளை புதிய நிறுவனமொன்றின் ஊடாக முன்னெடுக்கவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் ஒன்றை அமைக்கவுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐ.சி.ஆர்.சி. உதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் ஊடாக முறையான மற்றும் உண்மையைக் கண்டறியும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையைக் கண்டறிய வேண்டும். விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தேவையா ன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

நம்பிக்கையின்மையை போக்குங்கள்

இந்த விசாரணை செய்யும் அமைப்பானது தொழில்நுட்ப ரீதியாகவும், சுயாதீனமாகவும் பக்கச்சார்பின்றி தொழிற்சார் ரீதியில் செயற்படவேண்டும். சிங்கள, தமிழ், ஆங்கிலமென அனைத்து மொழிகளிலும் செயற்பாடுகள் இடம் பெறவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் பாரிய நம்பிக்கையின்மை இருப்பதை நாம் காண்கின்றோம்.இவ்வாறு நம்பிக்கையின்மை இருப்பதால் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி முன்னெடுக்கப்படவேண்டும். அதுமட்டுமன்றி உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அரசாங்கம் அமைக்கவுள்ளதாக அறிந்தோம். இந்த ஆணைக்குழுவானது உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டில் முக்கிய வகிபாகத்தை வகிக்கும் என நம்புகிறோம்.

இலங்கையில் 91 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆணைக்குழுக்கள் விசாரணை நடத்தியுள்ளன. இவற்றில் அதிகமானவை சுயாதீனத் தன்மை குறித்து விமர்சனங்களை கொண்டிருந்தன. சில ஆணைக்குழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் கூட அறிமுகப்படுத்தப்படவில்லை. இதை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.

பரணமகம ஆணைக்குழு

நாங்கள் பரணகம ஆணைக்குழுவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் காணாமல் போனோர் குறித்து உருவாக்கவுள்ள அலுவலகம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த ஆணைக்குழுவின் அனைத்து கோப்புக்கைளயும் அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் மிகவும் வலிமையாக பரிந்துரை செய்கின்றோம்.

மாத்தளை, மன்னார் எலும்புக்கூடுகள்

எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்ட மன்னார், மற்றும் மாத்தளைப் பகுதிக்கு நாம் விஜயம் செய்தோம். இந்த விடயத்தில் தடையவியல் விசாரணைகளில் முன்னேற்றம் தேவைப்படுகின்றது. குறித்த பகுதிகளை உரிய முறையில் பாதுகாக்கவேண்டும். இந்த விடயத்தில் தொழில் சார் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படும் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பில் கரிசனை கொள்கிறோம். பரிசோதனைகளை மேற்கொள்ளும் அமைப்புக்கள் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸாரின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

விசாரணை பொறிமுறை நம்பிக்கையளிக்கவேண்டும்

இலங்கையின் போர்க்குற்ற விடயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டு கலப்பு நீதிமன்றதை அமைத்து விசாரணை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமை பேரவை பரிந்துரை செய்திருந்தது. இந்த நீதி விசாரணை தொடர்பான எந்தவொரு தீர்மானமாக இருந்தாலும் அது அனைத்து இலங்கை மக்களுக்கும் நம்பிக்கையளிப்பதாக இருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அதில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பவை மதிக்கப்படவேண்டும். எமது குழுவிற்கு சாட்சியமளித்த மக்கள் நீதி நிர்வாகம் தொடர்பில் தமது நம்பிக்கையின்மையை வெளியிட்டனர். எனவே விசாரணைகள் நிபுணத்துவ வழக்கறிஞர்களால் தொழில்சார் ரீதியில் முன்னெடுக்கப்படவேண்டும்.

பாதுகாப்பு தரப்பினரின் தலையீடு வேண்டாம்

இந்த விசாரணை செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பினரின் தலையீடு இருக்கக்கூடாது. விசாரணை செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யும் பாதிக்கப்பட்டவர்கள் சி.ஐ.டி. மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல்போன சம்பவங்களினால் அதிகமான பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் பல்வேறு சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். மனைவிமார், தாய்மார், சகோதரிகள், மகள் மார் என பலர் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் தமது வேதனைகளையும், பொருளாதார கஷ்டங்களையும் எம்மிடம் தெரிவித்தனர். இலங்கையின் நீதி முறைமை மற்றும் வழக்காடும் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு நம்பிக்கைக்குரியதாக இருக்கவேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

UN-Working-%20Group-19115-seithy%20(2).j

 

 

UN-Working-%20Group-19115-seithy%20(1).j

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145165&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.