Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும்என்பதாலேயே பொங்குதமிழ் என்று பெயரிட்டேன்! – சுரதா யாழ்வாணனின் நேர்காணல்

Featured Replies

 

சுரதாஇன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது.  தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது.  இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன்.  யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன.  அந்தத் தளங்களைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எழுத்துருக்களை கணனியில் நிறுவ வேண்டியது அவசியமானதாக இருந்தது.  இது ஒருவிதத்தில் தமிழ் இணையத்தளங்களை அணுகவும், ஆக்கங்கள், கருத்துக்களைப் பகிரவும் தடையாகவும் இருந்தது.  இத்தகைய ஒரு காலப்பகுதியில் வெவ்வேறு எழுத்துருக்களை மாற்றுகின்ற வசதியை அறிமுகம் செய்ததுடன் அதனை இணையத்தில் இலவசமாகவும் வழங்கினார்.  இவரது புதுவை, பொங்குதமிழ் ஆகிய எழுத்துரு மாற்றிகளே இணையத்தில் முதன் முதலாகக் கிடைத்த தமிழ் எழுத்துருமாற்றிகள்.  பொதுவாக எந்த நேர்காணல்களுக்குமோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காத சுரதா யாழ்வாணன், இந்த முயற்சிகள் பதிவாக்கப்படவேண்டும் என்கிற எமது வேண்டுதலை ஏற்று தாய்வீடு பத்திரிகைக்கு தொலைபேசி ஊடான நேர்காணல் இது.

 

சுரதா யாழ்வாணன் என்பது எம்மில் அனேகருக்குத் தெரிந்தபெயர். ஆனால் பெயரைத் தாண்டி உங்களை அறிந்தவர்கள் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.  இந்த நேர்காணலுக்கான ஆயத்தப்படுத்தல்களில் ஈடுபட்டபோது உங்கள் தந்தையாரைப் பற்றியும் அறியக்கூடியதாக இருந்தது.  உங்கள் தந்தையாரான யாழ்வாணன் யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர்.  ஒரு எழுத்தாளராக விளங்கியதுடன் இலக்கியச் செயற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.  அவரது “அமரத்துவம்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு பதிப்புரை எழுதிய காரை. செ. சுந்தரம்பிள்ளை அவர் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுவார்:  “யாழ். குடாநாட்டில் எந்தவொரு மூலையில் ஏதாவது சிறு இலக்கியக் கூட்டமோ அன்றிப் பெருவிழாவோ நடந்தால், நிச்சயமாக அதில் திரு. யாழ்வாணனின் பங்கும் சேர்ந்திருக்கும்.  எவருக்கும் உதவும் இவர் சமூகப் பணிபுரியும் பல நிறுவனங்களில் அங்கம் வகித்துத் தொண்டாற்றி வருகின்றார்”  உங்கள் தந்தை பற்றியும் உங்கள் சிறுபிராயம் பற்றியும் கூற முடியுமா?

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து பார்த்தால், அப்பாவின் அமரத்துவம் என்கிற சிறுகதைத் தொகுப்பு 1969ல் வெளியானது நன்றாக நினைவில் இருக்கின்றது.  அப்பாவும், இலக்கிய ஈடுபாட்டுடன் இருந்த அவரது பல்வேறு நண்பர்களும் தொடர்ச்சியாக சந்தித்து உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.  செங்கை ஆழியான், காரை செ. சுந்தரம்பிள்ளை, கவிஞர் கந்தவனம் போன்றோர் அப்பாவின் நண்பர்களாக இருந்தனர்.  அனேகமான அவர்களது சந்திப்புகள் யாழ் நகராட்சி மண்டபத்தில் இடம்பெறும்.  அப்பாவின் இந்த இலக்கிய ஈடுபாடும், வாசிப்புப் பழக்கமும் எம்மிலும் தாக்கம் செலுத்தியிருக்கவேண்டும்.  அந்த வயதுக்கே உரிய புத்தகங்களை ஆர்வமுடன் வாசிக்கத் தொடங்கியிருந்தோம்.  உண்மையைச் சொல்வதென்றால் படிப்பை விட புத்தக வாசிப்பே எமக்கு அதிகம் ஆர்வமூட்டுவதாக இருந்தது.

சிறுவயதில் நாம் எமது அம்மாவின் சொந்த இடமான நெல்லியடியில் இருந்தோம்.  நான் நாலாவது வகுப்பு வரை நெல்லியடியிலேயே கல்விகற்றேன்.  அப்பா அப்போது யாழ் மாநகரசபையில் பணியாற்றியதால் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணம் வரவேண்டி இருந்தது.  இதனால் பின்னர் நாம் கந்தர்மடத்தில் இருந்த அப்பாவின் பரம்பரை வீட்டிற்குக் குடிபெயர்ந்தோம்.  நானும் பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்து கற்றுக் கொண்டிருந்தேன்.  பின்னர் அங்கிருந்து யாழ் இந்துக்கல்லூரிக்கு பாடசாலை மாறுவதாக வீட்டில் தீர்மானித்திருந்தார்கள்.  இது ஒரு சுவையான சம்பவம்.    என்னவென்றால், அப்போது இந்த இரண்டு பாடசாலைகளின் அதிபர்களாகக் கடமையாற்றியவர்ளும் சகோதரர்களாக இருந்தார்கள்.  எனவே பரமேஸ்வராக் கல்லூரியில் இருந்து நேரடியாக யாழ் இந்துக் கல்லூரிக்குச் செல்வதானால் அவர்கள் சகோதரர்களுக்குள் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு கேள்விகளைக் கேட்பார்கள்.  அதைத் தாண்டிச் செல்வது சிரமமானது என்பதனால் நான் பரமேஸ்வராக் கல்லூரியில் இருந்து சேணிய தெரு பாடசாலை என்று அப்போது பெருமாள் கோயிலுக்கு முன்னர் இயங்கிவந்த ஒரு சிறுபாடசாலையில் சேர்ந்து சிறிது காலம் கல்விகற்றேன்.  பின்னர் அங்கிருந்து யாழ் இந்துக்கல்லூரியில் இணைந்துகொண்டேன்.

சுரதா என்பது உங்களது இயற்பெயரா?

 ஓமோம்.  அது இயற்பெயர்தான்.  ஏன் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியாது.  ஆனால் அப்பாவிற்கு ஏதோ காரணத்தால் சுப்புரத்தினதாசன் என்கிற சுரதா மீது ஏற்பட்ட ஈர்ப்பு அல்லது மரியாதையின் காரணமாக அந்தப் பெயரைத் தேர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றேன்.  அப்பாவிற்கு உண்மையான பெயர் சண்முகநாதன் என்பது.  அவர் எழுத்துகளுக்காகத் தேர்ந்த புனைபெயரே யாழ்வாணன்.  ஆனால் அவரது வேலைத்தளத்திலும் கூட அவர் யாழ்வாணன் என்றே அறியப்பட்டிருந்தார் என்று கூறுவார்கள்.

உங்களது அப்பாவின் இலக்கியச் செயற்பாடுகளும் எழுத்தார்வமும் சிறுவயதிலேயே உங்களுக்கும் வாசிப்பில் ஈடுபாட்டினைத் தந்ததாகக் கூறினீர்கள். அதுபோல எழுத்தார்வம், படைப்பாக்க முயற்சிகள் ஏதேனும் சிறுவயதில் உங்களுக்கு இருந்ததா?

 வாசிப்பில் பெரும் ஆர்வம் இருந்தது.  அதுபோல ஓரளவு எழுத்தார்வமும் இருந்தது.  ஆனால் எனது அண்ணா யாழ். சுதாகர் அருமையாக எழுதுவார்.  அவர் அத்தனை தீவிரமான வாசகர் என்று சொல்லமுடியாது.  ஆனால் இயல்பாகவே அவருக்கு எழுத்தாற்றல் இருந்தது.  ஆரம்பகாலங்களில் அன்புநெஞ்சன் என்ற பெயரிலும் எழுதியிருக்கின்றார்.  தற்போது ஒரு பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் சூரியன் FM ல் வேலை செய்கின்றார்.  அனேகம் பேர் அவரை அவ்வாறுதான் அறிவார்கள்.  ஆனால் அவர் இந்தியாவில் இருந்து வெளியான “பொம்மை” என்கிற சினிமா இதழிற்கு உதவி ஆசிரியராக இருந்தவர்.  அதன் பின்னர் அதே நிறுவனத்தார் மகளிருக்காக நடத்திய மங்கை என்கிற இதழிற்கு ஆறு ஆண்டுகள் பொறுப்பாசிரியராக இருந்தார்.  ஈழத்தவர் ஒருவர் இந்தியாவில், ஒரு வணிக இதழில் ஆசிரியர் பதவி வகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்று நீங்கள் அறிவீர்கள் தானே?

இந்தக் காலப்பகுதிகளில் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? உங்கள் உயர்கல்வியை நீங்கள் இலங்கையிலேயே கற்றீர்களா அல்லது அதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறினீர்களா?

 இல்லை.  நான் இலங்கையில் இருக்கும்போது உயர்கல்வி அதிகம் கற்கவில்லை.  சிலகாலம் நகரசபையிலே வேலைசெய்துவிட்டு 1984ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நாட்டைவிட்டு வெளியேறி ஜெர்மனிக்கு வந்துவிட்டேன்.  அதன் பின்னர் தான் என்னால் உயர்கல்வி கற்க முடிந்தது.  இங்குவந்துதான் நான் இலத்திரனியல் கற்றுக்கொண்டேன்.  உண்மையில் எனக்கு மென்பொருள் துறையில் அதிக ஆர்வம் இருந்தது.  ஆனால் பல்வேறு சூழல்கள் காரணமாக அதனைக் கற்பது எனக்குக் கைகூடவில்லை.

அந்தக் காலப்பகுதி ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டம் நோக்கி நகரத்தொடங்கிய காலப்பகுதி. நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறியமைக்கு ஏதேனும் அரசியல் ரீதியான காரணங்கள் இருந்தனவா? உங்களுக்கு ஏதேனும் அரசியல் பின்புலம் இருந்ததா?

இல்லை.  அப்போது அரசியல் கட்சிகளே வெகுவாக அறியப்பட்டிருந்தன.  இயக்கங்கள் தோன்றி வளர்வது பற்றிய பேச்சு இருந்தது.  ஆனால் எனக்கு நேரடியாக எவருடனும் அறிமுகம் இருக்கவில்லை.  இயக்கங்கள் பெரும்பாலும் சிறு கிராமங்களையே மையமாக வைத்து இயங்கின.  நாம் யாழ் நகரத்திலேயே வசித்துவந்ததாலும் எமக்கு இயக்கங்கள் பற்றி நேரடியாக அறியும் சாத்தியம் குறைவாக இருந்திருக்கலாம்.

அப்போது புலம்பெயர்வாழ்வு உங்களுக்கு எவ்விதம் இருந்தது? கணணிப் பாவனை என்பதே அப்போது அதிகம் பரவலாகவில்லை அல்லவா? புதிய நாடு, உங்கள் ஆர்வங்களான புத்தக வாசிப்பு, பாடல் கேட்பது போன்றவற்றை எவ்விதம் சமாளித்தீர்கள்?

அப்போது எமக்கு தமிழ் புத்தகங்கள் எவையுமே கிடைப்பதில்லை.  சிலவேளைகளில் மிளகாய்த்தூள் சுற்றிவரும் பழைய செய்தித்தாள்களையே திரும்பத் திரும்ப வாசித்துக்கொள்வோம்.  திரைப்படப் பாடல்கள் ஒன்றிரண்டு கசற்றுகளில் இருக்கும்.  அதை ஒலிக்கவிட்டு சுற்றிவர நண்பர்களாக இருந்து கேட்போம்.  தமிழ்க் கணிமை என்பது என்பது அப்போது பெரிதாக வளரவேயில்லை.  பின்னர் இணையத்தின் பாவனை சற்றே பரவலாகத் தொடங்கியபின்னர் தான் எமக்கும் ஒரு பாய்ச்சலாக இருந்தது.  தற்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. 1992 க்கும் 96க்கும் இடையிலாக இருக்கவேண்டும்.  அப்போது தமிழ்நெற் ஒரு தமிழ் Chat சேவையை அறிமுகப்படுத்தி இருந்தது.  அதுபோல yahoo வும் வெவ்வேறு chatroom களை அறிமுகப்படுத்தி இருந்தது.  அது எமக்கு பெரிய வடிகாலாகவும் உந்துதலாகவும் இருந்தது.  வெவ்வேறு விடயங்கள் சார்ந்து பேசவும் பகிரவும் புதிய நட்பு வட்டங்களை உருவாக்கவும் அது உதவியாக இருந்தது.  அங்கிருந்துதான் இணையத் தளங்களை உருவாக்கும் எண்ணமும் உருவானது.

கணனித்துறையில் உங்களுக்கு எவ்விதமான பயிற்சி இருந்தது? பின்னாட்களில் ஏதாவது மேலதிகமாகக் கற்றுக்கொண்டீர்களா?

 மிகச் சாதாரணமான அறிவே எனக்கு இருந்தது.  எனது தேவைகளின் பொருட்டு நானாகவே மெல்ல மெல்ல தேடி அறிந்துகொண்டேன். இணையத் தளங்களை உருவாக்குவது பற்றியும், அதில் ஒவ்வொரு நிறத்தையும், கோடுகளையும், வடிவங்களையும் எவ்விதம் தேர்ந்தெடுப்பது என்பதையும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஊடாகவே கற்றுக்கொண்டேன்.  இப்படியாக ஒரு இணையப்பக்கத்தை உருவாக்கிக்கொண்டேன்.  அதில் மெல்ல மெல்ல சிலவிடயங்களை உள்ளிடத் தொடங்கினேன்.  அப்போது யுனிகோட் எல்லாம் வரவில்லை.  எங்களுக்கு பாமினி எழுத்துரு பெரும் உதவியாக இருந்தது.  அதே நேரம் இந்தியர்கள் வேறு சில எழுத்துருக்களைப் பாவித்துவந்தனர்.  இதனால் செய்திகளையும் ஆக்கங்களையும் பகிர்வதிலும் அவற்றைப் பதிவேற்றுவதிலும் நிறைய சிரமங்கள் இருந்தன.  ஒரு எழுத்துருவில் இருந்து இன்னொரு எழுத்துருவுக்கு மாற்றுவதற்கு ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  Microsoft Word இல் அப்படியான ஒரு எழுத்துருமாற்றி செய்வதற்கான முறை இருப்பதை அறிந்து அதனை முயன்று பார்த்தேன்.  அது நடைமுறையில் மிகச் சிரமமானதாக இருந்தது.  இதை எப்படி இன்னமும் இலகுவாகச் செய்யலாம் என்று தொடர்ச்சியான தேடலில் ஈடுபட்டேன்.  இணையத் தளங்களில் தேடி வெவ்வேறு ஜாவா script களுக்காக உதாரணங்களைப் பார்த்து அவற்றில் இருந்து பல்வேறு விடயங்களைக் கோர்த்து நான் உருவாக்கியதே புதுவை எழுத்துருமாற்றி.

(அருண்மொழிவர்மன் : இடையில் நான் குறுக்கிட்டு “அந்த எழுத்துருமாற்றிதான் தமிழின் முதலாவது எழுத்துருமாற்றியா?” என்று கேட்கின்றேன்.  வேறும் ஏதாவது இருந்திருக்கலாம்.  ஆனால் இணையத்தில் இருக்கவில்லை என்று பதிலளித்துவிட்டு தொடர்கின்றார்)

 அப்போது நாம் பாவனையில் இருந்த அனேக எழுத்துருக்களை நாம் தரவிறக்கம் செய்து எமது கணணியில் இணைத்துக்கொள்வதன் மூலமே அந்த எழுத்துருக்களைப் பாவிக்கக் கூடியதாக இருந்தது.  அவ்வாறு எழுத்துருக்கள் கணணியில் இணைக்கப்படாதபோது அந்த எழுத்துருக்களில் இருக்கின்ற இணையத்தளங்களையோ ஆவனங்களையோ உங்களால் வாசிக்கமுடியாது இருந்தது.  இது பாவனையாளர்களுக்கு நிறைய சிரமங்களைத் தந்தது.  பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி யாழ்.கொம் மோகனும் தொடர்ந்து பேசிவந்தார்.  இதற்கான மாற்றுகளை எவ்விதம் அடைவது என்றும் யோசித்துவந்தேன்.  அப்போது Microsoft இனர் WEFT (Web Embedding Fonts Tool) என்கிற முறையை அறிமுகப்படுத்தினார்கள்.  இது என்ன செய்ததென்றால் உங்கள் கணனியில் இருந்து நீங்கள் வலைப்பக்கங்களில் உள்ள சில எழுத்துருக்களைப் பார்க்கின்றபோது அந்த வலைப்பக்கங்களியே நீங்கள் அந்த எழுத்துருக்களை வாசிக்க உதவுகின்ற மூலங்களை இணைத்துவிடுகின்ற வசதியை வலைப்பக்க நிர்வாகிகளுக்குக் கொடுத்தது.  இதைத் தொடர்ந்து Netscape உம்  புதிய தொழினுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.  .  இந்த இரண்டு தொழினுட்பங்களையும் நான் உள்வாங்கி எழுத்துருமாற்றியுடன், எந்த மென்பொருட்களையும் கணணியில் நிறுவாமலே தமிழில் தட்டச்சு செய்கின்ற வசதியை வழங்கக்கூடியதான வசதியையும் இணைத்து பொங்குதமிழின் ஊடாக வழங்கினேன்.

பொங்குதமிழ், புதுவை இரண்டுமே ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான பெயர்கள். நீங்கள் என்ன காரணங்களுக்காக இந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

 புதுவையின் கவிதைகளும் பாடல்களும் எனக்கு எப்போதும் நெருக்கமானவை.  அதனாலேயே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.  பொங்குதமிழ் இனை அறிமுகப்படுத்தியபோது யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பொங்குதமிழ் நிகழ்வு பெரும் உத்வேகத்தை அளிப்பதாக இருந்தது.  அதனால் அந்தத் தளத்திலேயே “யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்கு பொங்கு தமிழ் எனப் பெயரிடப்படுகிறது” என்று குறிப்பிட்டே இருக்கின்றேன்.  தமிழ்க் கணிமையில் ஒருவிதத்தில் முன்னோடியாக இருந்த இந்த செயற்திட்டங்கள் எமது, ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும் என்பதனாலேயே பொங்குதமிழ் என்கிற இன்னமும் பொருத்தமானதாகவும் அமைந்தது.  ஈழத் தமிழர்கள் தமிழ்க் கணிமைக்குப் பல்வேறு விதங்களில் பங்காற்றியுள்ளார்கள்.  ஆனால் பல இடங்களில் அவர்களது பங்களிப்புகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.  நிறையத் தமிழகத்தவர்கள் பல்வேறு விதமான ஆதரவுகளையும் தோழமையையும் வழங்குகின்றபோதும் ஒருவிதமான பெரியண்ணன் மனோபாவத்துடனும், வன்மத்துடனும் ஈழத்தமிழர்களின் பங்களிப்புகளை நிராகரிக்கின்ற போக்கும் இருக்கின்றதை நான் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது.

அன்றைய நாட்களில் பல்வேறு தமிழ் எழுத்துருக்களும், மென்பொருட்களும் விலைக்கே விற்கப்பட்டன. நீங்கள் இவற்றை ஆரம்பத்திலேயே இலவசமாகவே வெளியீட்டீர்கள் அல்லவா?  அவ்வாறான ஒரு எண்ணம் எப்படி உங்களுக்கு உருவானது?  இது யதேச்சையானதா அல்லது ஏதேனும் கருத்தியல் ரீதியான காரணங்களைக் கொண்டதா?

 இந்த விடயத்தில் நான் மிகத் தெளிவாகவே இந்த முடிவை எடுத்தேன்.  இயற்கையில் இருந்தும், எம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்தும் நாம் எவ்வளவு விடயங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்கின்றோம்.  இன்றும் கூட இணையத்தில் இருந்து எவ்வளவு அறிவு சேகரங்களை நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளுகின்றோம்.  இலங்கையில் கன்னங்கரா அறிமுகம் செய்த கல்வித்திட்டம் பற்றி தெரிந்திருப்பீர்கள்.  மிக மிக முன்னுதாரணமான இலவசக் கல்வித்திட்டம் அது.  எனது கல்வியை எனக்கு இலவசமாகவே தந்த கல்விமுறை அது.  இதுவெல்லாம் எனக்குள் தாக்கத்தை விளைவித்தன.  மேலும், பல்வேறு நாடுகளில் சிதறிவாழும் தமிழர்களை இணைக்கவும் அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உந்துதலாக இணையம் எதிர்காலத்தில் விளங்கப்போகின்றது என்பதை என்னால் உணர முடிந்தபோது, சேவைகளை விலைக்கு வழங்குவது நிறையப்பேரை உள்வாங்காமல் தவிர்த்துவிடக் கூடிய நிலையை உருவாக்கிவிடலாம் என்றும் உணர்ந்தேன்.  இதனாலேயே இலவசமாக எனது சேவைகளை இணையத்தில் வெளியிட்டேன்.  உண்மையில் இப்போது யோசித்துப் பார்க்கின்றபோது நானோ, அல்லது பாமினி எழுத்துருவை வெளியிட்ட சசியோ அவற்றை இலவசமாகவே இணையத்தில் வெளியிட்டமை மிகச் சாதகமான விளைவுகளை உருவாக்கியிருப்பதையும், தமிழ்க் கணிமையின் வளர்ச்சியின் வேகத்தை முடுக்கி விட்டிருப்பதையும் உணரமுடிகின்றது.

பொங்குதமிழ் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை இன்னமும் நிறைய எழுத்துருக்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அவற்றுக்கான எழுத்துருமாற்றிகள், தொடர்ச்சியான இற்றைப்படுத்தல்கள் ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடுகின்றீர்களா?

பொங்குதமிழ் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதன் தேவை மிக மிக அதிகமாக இருந்தது.  யுனிகோடும் அவ்வளவும் பரவலாகவில்லை.  வலைப்பதிவுகளின் ஆரம்பநாட்கள்.  பல்வேறு இணையத்தளங்கள் வெவ்வேறு எழுத்துருக்களுடன் இயங்கிவந்தன.  ஆக்கங்களை அனுப்பும்போதும் பகிரும்போதும் கூட வெவ்வேறு எழுத்துருக்கள் காரணமாக நிறையப் பின்னடைவுகள் இருந்தன.  இப்படியான ஒரு சூழலில் இருந்த தேவைகளுக்காக உருவானதே.  இன்று அந்தத் தேவைகள் நிறையக் குறைந்துவிட்டன.  அதேநேரம் இப்போதும் நாளாந்தம் நிறையப் பேர் பொங்குதமிழ் சேவைகளை உபயோகிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.  அந்தளவில் மகிழ்ச்சியே.

யாழ்தேவி என்கிற தேடுபொறி நான் இணையத்தில் எழுதவும், தொடர்ச்சியாகப் பயன்படுத்தவும் தொடங்கிய காலங்களில் பெரிதும் உதவியாக இருந்தது. அதையும் நீங்கள் தான் உருவாக்கினீர்கள் அல்லவா?

எமது தேவைகள் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு சுலபமாக அணுகக்கூடியதாகவும், பாவனையாளர்களுக்கு இலகுவானதாகவும் வழங்கும்படி எப்படி இருக்கின்ற தொழினுட்பத்தைப் பிரயோகிக்கலாம் என்று பார்ப்பதே எனது வழமை.  அப்போது அடிக்கடி தமிழ் இணைய மாநாடுகள் நடக்கும்.  அவ்வாறு நடக்கும்போதெல்லாம் தமிழ் தேடுபொறி என்ற வேண்டுதலும் முன்வைக்கப்படும்.  இதற்கான ஒரு தீர்வாக நான் கூகிள் தேடுபொறியில் தமிழை உள்ளிடக்கூடியதாக ஒரு மாற்றத்தைச் செய்து தேடுபொறி ஒன்றினை உருவாக்கினேன்.  அதற்கு யாழ் கூகிள் என்று பெயரும் இட்டேன்.  இதன்மூலம் தமிழ் மூலமான தேடுதல் சாத்தியமானது.  பிறகு, அதே தொழினுட்பத்துடனே, வெவ்வேறு தளங்களிலும் தேடக்கூடிய வசதிகளை உருவாக்கினேன்.  அதுவே நீங்கள் குறிப்பிடும் யாழ்தேவி.  இன்று கூகிள் உள்ளிட்ட தேடுபொறிகளில் எல்லாம் தமிழில் தேடுதல் சாத்தியமாக உள்ளது.  ஆனால் அந்த வசதி இல்லாத காலங்களில் யாழ் கூகிளும் சரி யாழ்தேவியும் சரி பயனுள்ளதாக இருந்தது.

உங்களது இந்த முயற்சிகளுக்கான வர்வேற்பு சமகாலத்தில் எவ்விதம் இருந்தது?

உண்மையில் நிறையப் பேர் ஊக்குவித்தார்கள்.  ஈழத்தவர்களாகட்டும், தமிழகத்தவர்களாகட்டும் நிறையப் பேர் பாராட்டினார்கள்.  இந்த இடத்தில் ஒரு விடயத்தை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.  தமிழ்க் கணிமைக்கு நிறையப் பேர் பெருமளவான பங்களிப்புகளை நல்கியுள்ளார்கள்.  எனக்கு முன்னரும் நிறையப் பேர் இருந்தார்கள்.  அப்போது மணிவண்ணன் என்பவர் முன்னெடுத்த TSCII அப்போதையை தமிழக அரசு ஆதரித்த TABஇன் அறிமுகத்தைத் தொடர்ந்து ஒரு தேக்கநிலையை அடைந்தது.  உண்மையில் TSCII நல்லதோர் திட்டம்.  அது சரியாகச் சென்றிருந்தால் பொங்குதமிழிற்கான தேவை அவ்வளவாக இருந்தும் இருக்காது.  அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இருந்த தேவைகளை முன்வைத்து நான் என்னாலான சில பங்களிப்புகளை நல்கினேன்.  நான் இல்லாவிட்டாலும் நிச்சயம் இன்னொருவர் அதைச் செய்திருப்பார்.  அப்படி ஒருவரை அன்றிருந்த தேவைகள் உருவாக்கியே இருக்கும்.  இன்று அடுத்த கட்டம் நோக்கி நிறையப் பேர் பயணிக்கின்றார்கள்.  இது ஒரு தொடர்ச்சியான அஞ்சலோட்டம்.  அண்மையில் கூட தமிழ் இலக்கணத் திருத்தி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பற்றி அறியக்கிடைத்தது.  இப்படியான வெவ்வேறு முயற்சிகள் சேர்ந்து தமிழுக்கு வளம் ஊட்டும்.

இது தவிர வேறேதேனும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? தமிழ்க் கணிமை தொடர்பான தற்போது இருக்கின்ற வேறு முக்கியமான தேவைகள் என்ன? 

எழுத்துருமாற்றிகளின் இன்னொரு வடிவமாக, எழுத்துருக்களை பிரெய்லி எழுத்துகளுக்கு மாற்றி அவற்றை அச்சில் எடுத்து வாசிக்கும்முறையைச் செய்வதன் மூலமாக கட்புலனற்றோருக்கான வசதிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.  ஆனால் எனக்குத தெரிந்த கட்புலனற்றவர்களிடம் பேசியபோது அது நடைமுறையில் பெரிதாக உதவிகரமாக இருக்காது என்பதை உணர்ந்ததால் அதை இடைநிறுத்திவிட்டேன்.  அண்மையில் தமிழுக்காக OCR தொழினுட்பத்தை கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.  இது மிகப்பெரிய பாய்ச்சல்.  நீங்கள் ஈடுபட்டிருக்கின்ற நூலகம் போன்ற திட்டங்களிற்கு பல புதிய சாத்தியங்களை உருவாக்கும்.  அது போல தமிழ்ப் பேச்சுகளை உள்வாங்கி அதை எழுத்துவடிவங்களிற்கு மாற்றுகின்ற மென்பொருளும் முக்கியமாகத் தேவை.

 

 


http://arunmozhivarman.com/2015/11/19/ஈழத்தமிழ்-அடையாளங்கள்-பே/குறிப்பு : தாய்வீடு பத்திரிகைக்காக என்னால் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல் நவம்பர் 2015 தாய்வீடு இதழில் இடம்பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அபராஜிதன் said:

 அப்போது நாம் பாவனையில் இருந்த அனேக எழுத்துருக்களை நாம் தரவிறக்கம் செய்து எமது கணணியில் இணைத்துக்கொள்வதன் மூலமே அந்த எழுத்துருக்களைப் பாவிக்கக் கூடியதாக இருந்தது.  அவ்வாறு எழுத்துருக்கள் கணணியில் இணைக்கப்படாதபோது அந்த எழுத்துருக்களில் இருக்கின்ற இணையத்தளங்களையோ ஆவனங்களையோ உங்களால் வாசிக்கமுடியாது இருந்தது.  இது பாவனையாளர்களுக்கு நிறைய சிரமங்களைத் தந்தது.  பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி யாழ்.கொம் மோகனும் தொடர்ந்து பேசிவந்தார்.  

 

இணைப்புக்கு நன்றி அபராஜிதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.