Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவெளி: பெண்கள் மீதான வன்முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையவெளி: பெண்கள் மீதான வன்முறை

இணையவெளியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதைக் குறித்த ஒரு சிறிய, அதேநேரம் ஒட்டுமொத்த நிலைமையைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, வெவ்வேறு தளங்களில் இயங்கும் பெண்களின் கருத்துகள் இங்கே. . .

hate.jpg

முழுக்க முழுக்கத் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் முகநூலைவிட்டு வெளியேறினேன். சமூக வலைதளங்களில் யாரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுபோல யாரென்றே தெரியாத சிலரிடமிருந்து அபத்தமான, அர்த்தமில்லாத முகநூல் குறுஞ்செய்திகள் வரும். ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியொரு குறுஞ்செய்தி வந்தால் அவர்களை ‘ப்ளாக்’ செய்துவிடுவேன். பொதுவாக எனது புகைப்படங்களை முகநூலில் பதியமாட்டேன். ஒருவேளை பதிந்தாலும் அது குழுவாகச் சேர்ந்திருக்கும் புகைப்படமாக இல்லையென்றால் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படமாக இருக்கும். பதியும்போது நண்பர்கள் மட்டும் பார்க்கும்படியாக ‘ஃப்ரண்ட்ஸ் ஒன்லி’யாகத்தான் பதிவேன்.

என்னுடைய குடும்பத்தால்தான் முகநூலை விட்டு வெளியே வந்தேன். என் தலைமுறை நண்பர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரை முகநூல் நண்பர்களாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். ‘குடும்பத்தினர் நண்பர்களானால் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். தவறான புரிதல்கள் ஏற்படும்’ எனப் பொதுவான புரிதல் உண்டு. இருந்தாலும் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை. அதனால் என்னுடைய பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் முகநூலில் என் நண்பர்களாக இருந்தார்கள். ஒரு புகைப்படம், அந்தப் புகைப்படத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட கருத்துகள் இவற்றைப் பார்த்துவிட்டுப் பாதுகாப்பானதா என என்னிடம் சந்தேகத்தைக் கிளப்புவார்கள். இத்தனைக்கும் முகநூல் கணக்கின் முகப்புப் படத்தில் என் புகைப்படத்தைக்கூட வைத்ததில்லை. குறிப்பாக என்னுடைய அம்மா மிகவும் பதற்றமடைவார். என் புகைப்படங்கள் எதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடுமோ என்னும் பயம் அவருக்கு.

அந்தப் பதற்றம் ஒரு எல்லைக்குமேல் போனபோது என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. முகநூலை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகத்தான் பார்க்கிறேன். அதற்கு ஏன் இவ்வளவு தடைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு குறித்த கேள்விகள்? என் விஷயத்தைப் பொறுத்தவரை உணர்ச்சிக் கொந்தளிப்புதான் பாதிப்பை விளைவித்தது. ஒருநாள் அம்மாவிடமிருந்து பெரிய திட்டு கிடைத்தது. அன்றுதான் முகநூலிலிருந்து வெளியேறினேன்.

ஸ்ரீநிதி 
இளங்கலை சமூகப்பணி மாணவி

 

கடந்த சில மாதங்களுக்குமுன் முகநூலில் நானும் என்னுடைய கணவரும், ஐந்நூறுக்கும் மேற்பட்ட பயனாளர்களால் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் பாலியல் வசவுகளுக்கும் மரண அச்சுறுத்தல்களுக்கும் உள்ளானோம். நாங்கள் மிகப்பெரும் அமைப்பின் போராளிகளல்ல; யாருடைய கைக்கூலிகளுமல்ல; எங்களுக்குப் பின்னால் மக்களரசியலைத் தவிர எந்த அரசியல் நோக்கமும் இல்லை.

எங்களுடைய அசைவுகள், எழுத்துகள், செயற்பாடுகள் பொதுப்புத்தியில் மாற்றத்தைத் தரக்கூடியவையாக இருக்கவேண்டுமென விரும்புகிறோம். விளையாட்டு, சிரிப்புபோன்ற உணர்வுகள் மற்றவர்களைப் போலவே எங்களுக்கும் இருக்கின்றன.

nila-loganathan.jpgகருத்துகளுக்கும் போராட்டங்களுக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கும் பதில்சொல்ல முடியாதவர்கள் பதிவிலுள்ள விடயம், பொது அரசியலை வீணடித்து, அதை நகைச்சுவைப் பதிவாக மாற்ற முயல்கிறார்கள். எனக்கு முகநூலில் வரும் அனாமதேய விசாரிப்புகளுக்கு என் மன ஓட்டம் என்னவாக இருக்கும் என்பது பற்றிய நகைச்சுவையான ஒரு பதிவிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்கியதாக நண்பர்கள் அறிந்தார்கள். அது நகைச்சுவைக்கானதல்ல என்று நிரூபித்தாலும் வருத்தமுமில்லை. ஏனென்றால் சமூக வலைதளங்களில் பெண்களைச் சுரண்டும் ஆண்களைப் பற்றிய பதிவு அது; சம்பந்தப்பட்டவர்களை உலுக்கியிருக்கிறது.

ஒரு பெண் பொதுவெளியில் விவாதிப்பதை முற்றாகத் தடைசெய்யும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு குழு எழும்புகிறது. அந்தக் குழு மக்களின் பார்வையைப்போல, அந்தப் பெண்ணின் தனிமனித விழுமியங்களை, அவளுடைய நடத்தையை, மண வாழ்க்கையை, பொது வாழ்க்கையைக் கூறுகளாக்கி விமர்சிக்கிறது. அவளுடைய வாழ்க்கைத் துணைவருடைய புரிதல்களை மட்டம் தட்டுகிறது. அதிகபட்சமாக அவளைக் கூட்டு வன்புணர்வு செய்வதைப் பற்றிக்கூறி அதற்கான செயற்பாடுகளையும் அதற்கான குழுக்களையும் தயார்ப்படுத்துகிறது. இது காலாகாலமாகப் பொதுவெளியில் இயங்கும் எல்லாப் பெண்களுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் வற்புறுத்தப்பட்டு, நடத்தப்பட்டே வந்திருக்கிறது.

உச்சபட்சம் என்னவென்றால், எங்களைப் பற்றிக் கீழ்த்தரமாக விவாதிக்கும்போதுகூட அவர்களுக்கு ஒருதுளிக் கலக்கமும் சமூகம் பற்றிய சிந்தனையும் தமது செயல்பற்றிய தாழ்வுச்சிக்கலும் ஏற்படுவதில்லை என்பதுதான். இந்த ஆதிக்க மனப்பான்மை எங்கிருந்து வந்தது? ஒரு பெண்ணைக் கூட்டாக வன்புணர்வு செய்வதுபற்றி விவாதிப்பதில் இல்லாத தயக்கம்தான் இன்றைய பொதுப்புத்தி ஆண் மனநிலை. இவர்கள்தாம், இலங்கையின் வடக்கில், பள்ளிச் சிறுமி வித்தியாவின் கூட்டு வன்புணர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்செய்யச் செல்கிறார்கள்; இலங்கையின் தெற்கில் குழந்தை சேயாவின் பாலியல் துன்புறுத்தல் கொலைக்கெதிராக வலைதளங்களில் கண்டனத்தையும் பதிவுசெய்கிறார்கள். இவர்கள் பொறியியல், மருத்துவம், வர்த்தகம் படித்த மாணவர்கள். மெத்தப் படித்த தலைமுறையின் இந்த மனோபாவம் மிகவும் மோசமானதாக இருக்கிறது.

இவர்களுக்குத் தங்களின் தாய், சகோதரிகள், மனைவி பெண்குலத்தின் குலவதுக்களாகவும், பிற பெண்கள் குல நாசினிகளாகவும் தெரிகிறார்கள். சமூக வலைதளங்களில் இவ்வாறான பெண் ஒடுக்குமுறைகள் புதியதல்ல. நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதுதான். இங்கே பெண்கள் அவர்களின் கருத்துகளைத் தெளிவாக முன்வைப்பதற்காக எதிர்க்கப்படுகிறார்கள் என்பதைவிட, ஒரு பெண் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்படுத்தலாம் என்கிற பதற்ற தொனிதான் வெளிப்படுகிறது.

தமிழ்நதி, லீனா மணிமேகலை, குட்டிரேவதி, நிலவு மொழி செந்தாமரை, ஸர்மிளா ஸெய்யித், இப்போது ஹேமாவதி. இது மிகவும் சொற்பமான பட்டியல்; கொலை அச்சுறுத்தல்வரை சென்ற பட்டியல். பெண்கள் இவ்வகையான அடக்குமுறைகளை ஏதாவதொரு வகையில் தம் தினசரி வாழ்வில் எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான வாதங்கள் பல தனிமனிதத் தவறுகளையோ தனிநபர் பிரச்சினைகளையோ மிகைப்படுத்தி ஒரு முழு இயக்கத்தின் சிந்தனைப்போக்கைக் குழப்பக்கூடியவை. இன்னொருபுறம் அரசியலைத் தவிர்த்தும் சமூக மாற்றத்தைத் தவிர்த்தும் எல்லாப் பிரச்சினைகளையும் திறக்க முயலும் அரசு சாரா நிறுவனங்கள் பெண்களின் பிரச்சினைகளை வைத்துப் பணம் சம்பாதிக்க முயல்கின்றன. பெண்கள் எழுதுவது, போராடுவது, பேசுவது எல்லாமுமே அவர்களுக்குப் பணம்தான்.

பெண்ணைப் போகப்பொருளாகப் பார்க்கும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கச் சமூகம், பெண்கள் மீதான வன்முறைகளை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. நுகர்வுக் கலாச்சாரமும் நகரமயமாதலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தனிநபர் வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது. பெண்கள்மீதான வன்முறைகளைக் கொடிய குற்றமாகச் சித்திரித்து அதற்கெதிராகப் போராடவேண்டிய அவசியத்தை உணர்த்தாமல், பரபரப் பூட்டும் வகையிலும் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் வகையிலும்தான் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டே உருவாக்கப்பட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது. இதனால் அநீதி இழைப்பதும், அதைக் கண்டும்காணாமல் இருப்பதும், சகித்துக்கொள்வதும் சகஜமானதாகி வருகிறது.

ஆணாதிக்க அடக்குமுறைகளைத் தத்தமது கடமையாகச் செய்யும் பெண்களையும் தட்டிக் கொடுத்து, அவர்களை மென்மேலும் அடிமையாக்குவது திறம்பட நிகழ்த்தப்படுகிறது. அடிமைகளைக் கொண்டு அடிமைகளுக்குக் கற்பித்தலை நிலவுடைமை அரசியல் மிக லாவகமாகச் செய்யக்கூடியது. ஆணாதிக்கத்தின் அடிமைப் பிரதிநிதிகளன்றி வேறு யாரும் அடுத்த தலைமுறையின் சிந்திக்கக்கூடிய பிரதிநிதிகளாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிக நிதானமாக இருக்கிறார்கள். ஆணாதிக்கமும் அதன் அரசியலும் ஒரு தொழில்நுட்பத்தைப்போல அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் புகுத்தப்படுவதற்கே மின்னணு ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிரான போக்குடையவர்களைப் பெண்ணியவாதிகள் என்கிறார்கள். பெண்ணியம் என்பது பலவாறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் பெண்ணியம் வர்க்க முரண்பாடுகளுக்குள் சிக்கிவேறு வடிவத்தை அடைந்திருக்கிறது. எவ்வாறாயினும் மார்க்சிய ரீதியில் பெண்ணியம் எனும் கலைச்சொல் தரும் நேரடி அர்த்தம், எல்லா இடங்களிலும் குடும்பத் தளம் உட்பட, ஆண், பெண், பிற பாலினத்தவருக்கும் முழுமையான சமத்துவம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

முகநூலில் எனக்கு நடந்த பிரச்சினைக்கு நானே குரல் கொடுத்தேன். குறுகிய காலமே நடந்த அந்தப் போராட்டத்தின்மூலம் பல ஆணாதிக்கவாதிகளுடன் கொண்டிருந்த நட்பை முறித்துக்கொண்டதாகச் சில பெண்கள் தம் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்திருக்கின்றனர். இத்தகைய போராட்டங்கள்தாம் ஆண் - பெண் உறவில் ஜனநாயகக் கூறுகளை அமல்படுத்தும்; பேருந்தானாலும் சமூக வலைதளமானாலும் பெண்ணுக்கு அநீதி நடந்தால் பார்த்துக்கொண்டு செல்லாமல் தலையிட்டுத் தட்டிக் கேட்கும் பண்பை வளர்க்கும்; பெண்களை இழிவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு எதிர்த்துப் போராடும் மனவலிமையைத் தரும்.

புனிதமானவை, எக்காலத்திற்கும் மீறப்படக் கூடாதவை போன்ற எல்லாமும் பெண்களின் உடலுக்குள்ளிருந்து வருகிறவையாகச் சித்திரிக்கப்படுகிறது. அபாயா பெண்களுக்கு இடையூறென ஒரு பெண் சமூகவலை தளத்தில் பதிவுசெய்தால், அப்பெண்ணைக் கொளுத்து வோம் என்கிறார்கள் மதக் காவலர்கள். பாலியல் சுதந்திரம்பற்றி ஒரு பெண் எழுதினால், ‘நீ ஒரு பாலியல் தொழிலாளி’ என்கிறார்கள். மார்க்சியப் பார்வையில் பெண்ணியத்தைப் பற்றி ஒரு பெண் விவாதித்தால் ‘போலிப் பெண்ணியவாதி’ என்கிறார்கள். திருமண முறிவின் பின்னர் ஒரு பெண் எழுதினால் அவர் ‘நடத்தை கெட்டவர்’.

நம்மிடையே ஏராளமான கேள்விகள் உண்டு. ஒரு பெண்ணின் நடத்தையையும், ஆளுமையையும் கருத்தையும் தீர்மானிப்பது யார்? தனிநபர் நடத்தைகள், பாலியல் கொச்சைகளால் பெண்கள் மட்டம் தட்டப்படுவது ஏன்? இதை மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறோம்? எந்தப் போராட்டமும் தனித்து மேற்கொள்ளப்படும்போது ஒடுக்கப்படும்; சக மனிதர்களுடன் இணைந்து செயல்படும்போதே பயனைப்பெற உதவியாக இருக்கும்.

எனக்கேற்பட்ட இந்தப் பிரச்சினையை என்னால், என்னுடைய கணவரால், என்னுடைய குடும்பத்தவர்களால், புரிதல் காரணமாகப் புறந்தள்ளி மேலெழ முடியும். இந்த அடிப்படைப் புரிதலில் குறைபாடு கொண்டவர்களால், சிக்கல்தன்மையுள்ளவர்களால், ஒடுக்கப்பட்ட, தனக்காகக் குரல்கொடுக்க முடியாதவர்களால் என்ன செய்ய முடியும், இது எவ்வளவு காலத்திற்கு இன்னமும் நீடிக்கும்?

நிலா லோகநாதன் 
ஆராய்ச்சியாளர் (கணினி எந்திரவியல்)

 

புதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்களைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது.

அறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத் துன்புறுத்துதல், வக்கிரப் புணர்வுகள் தாண்டி மேலும்பல புதுமையான வன்முறைகளைத் தேடிச் செல்கிறது ஆண்மனம். அதுவே பாலியல் இன்பமாகவும் அமைகிறது. போர்னோ வலைதளங்களிலும்கூட பெண்ணின் அனுமதியற்று எடுக்கப்படும் காட்சிகள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. பெண்ணின் அருவருப்பு, அதிர்ச்சி, பயம் போன்றவை ஆணுக்கான பாலியல் தூண்டலாகின்றன. தெருவில் நடந்து செல்லும்போது எதிர்வரும் ஆண், சட்டென்று தன் குறியை வெளிக்காட்டும்போது அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியும் அருவருப்பும் அவனுக்கான பாலியல் மகிழ்வை வழங்குகிறது. இப்படிச் செய்ய இயலாத சமூகம்குறித்த பிரக்ஞையுள்ள ஆண்களுக்கு அந்த நல்வாய்ப்பைச் சமூக வலைதளங்கள் வழங்கியுள்ளன.

parameswari.jpgபெண்களின் உழைப்பைத் தொடர்ந்து சுரண்டும் குடும்பக் கட்டுமானத்தின் பேரலகான ஆணாதிக்கச் சமூகம், பல்வேறு இறுக்கமான நியதிகளின்மூலம் பெண்களின் இயக்கத்துக்குத் தடைபோடத் தொடர்ந்து முயற்சித்தே வருகிறது. தடைகளையும் மீறி இயங்கும் ஒரு பெண், ஆணைப் பதற்றத்துக் குள்ளாக்குகிறாள். ஆண் மனத்தில் உறைந்திருக்கும் காமமும் மீறுபவளை அடக்க நினைக்கும் வன்முறையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது. இணைய யுகத்தில் தனக்கு எதிரில் இல்லாத எதிரியுடனும் போராட வேண்டிய சிக்கலுக்குப் பெண் உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.

ஆண்களின் கருத்தியல்களால் இயங்கும் பொதுச் சமூகத்தில், பெரும்பான்மை ஆண்கள் இயங்கும் சமூக வலைதளங்கள், அவர்களினன் காமத்திற்கான பெரு வெளி; அங்கே உலவும் பெண்களெல்லோருமே பாலியல் பண்டங்கள்.

அண்மைய உதாரணங்களாக கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் மீதான மதம்சார் வன்முறை, கவிஞர் தமிழ்நதி குறித்து ஆணாதிக்க வன்மத்துடன் எழுதப்பட்ட பதிவு போன்றவற்றைச் சொல்லலாம். பெண் கவிஞரொருவர் எழுதிய பதிவுக்கு மற்றொரு ஆண் எழுத்தாளரும் அவருடைய தோழியும் எழுதிய பதில்கள் ஆபாசத்தின் உச்சம். பெண் கவிஞருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பத்திரிகையாளரையும் மிக மோசமான வசவுகளால் தாக்கியதுடன் சமூகத்தளத்திலேயே இயங்காத அவருடைய தாய், மனைவி, பெண் குழந்தை ஆகியோரையும் பாலியல் வன்முறைசார் சொற்களால் இழிவுபடுத்தினர். இன்றைக்கு அவர்களே சமூக நீதி பேசுபவர்களாகவும் இருக்கிறார்களென்பது நகைமுரண்.

பெண் எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து மரபான ஒழுக்க விதிகளின்பேரால் அருவருப்பான வசவுகள் கொண்டு அவரைத் தாக்கிப் பதிவிட்டதுடன் தங்களை மரபைக் காக்கும் காவலர்களாகக் கருதி, பிற பெண்களுக்கு உடைபற்றிய அறிவுரைகளையும் வாரி வழங்கியிருந்தனர்.

நண்பர்கள் விரும்பும் பக்கங்களை நமக்கும் காட்டித் தரும் முகநூல் பக்கங்களில் இரவின் இருளில் பதுங்கிவரும் ஆபாசப் பாலியல் பக்கங்களுக்கு விருப்பக்குறியிடும் எழுத்தாளர்களைக் கண்டு நான் அதிர்ந்ததுண்டு.

ஸ்மார்ட் போன்கள் மலிந்துபோயிருக்கும் நவீன காலத்தில், கடுமையான சட்டங்களுக்குப் பிறகும்கூட, பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்குக் குமுதம் ரிப்போர்ட்டரின் லெக்கிங்ஸ் பற்றிய கட்டுரையில் பகிர்ந்திருந்த பெண்களின் (அவர்களுடைய அனுமதியின்றி எடுக்கப்பட்ட) புகைப்படங்களே சாட்சி.

மரபான விதிகளாலும் இறுக்கமான மத - சாதிய அமைப்புகளாலும் உடல், மனரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த பெண், சமூகத் தளங்களில் இயங்குவதும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஆண்களால் விரும்பப்படுவதில்லை. பெண் கருத்து சொல்பவளாகவும் மரபான நடவடிக்கைகளை மறுத்து இயங்குபவளாகவும் இருப்பது அவர்களை எரிச்சலுக்குள்ளாக்குகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவளுடைய நடத்தையைக் குற்றம் சொல்லியும் உள்பெட்டிக்கு ஆபாசப் படங்களை அனுப்பியும் மனரீதியாகத் தொந்தரவு செய்கின்றனர்.

சமூக வலைதளங்கள் ஆண்களுக்கான கட்டற்ற பெருவெளியென்று கருதும் ஆண்கள் அங்கே உலவும் பெண்களைப் பொதுப் பண்டமாகப் பார்க்கின்றனர். அங்கே பெண் இயங்க வேண்டுமென்றால் தங்களுக்குத் தாங்களே பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளைச் சுமந்தே தீர வேண்டியிருக்கிறது.

ஒரு பெண் தன் புகைப்படத்தைப் பகிர்ந்தால் அதில் மோசமான கருத்துகளைப் பதிவுசெய்தல், படங்களைப் பகிர்தல் - இடுதல் என அவளை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். பெண்களை மதிக்கும் ஆண்களும்கூடப் படங்களைப் பகிர்வது ஆபத்தானது; அதைத் தவிர்த்திடுங்கள் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். நண்பர்கள் பட்டியலைவிடவும் ப்ளாக் செய்தவர்களின் பட்டியல் நீளமானது என்பது ஒரு சமூக அவமானம்.

முகநூல் உள்பெட்டியின் வக்கிரங்கள் இன்னும் கொடுமை. உள்பெட்டிக்கு அனுப்பும் செய்திகளுக்கு வண்ணப் பூச்சுகளே தேவையில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை என்பதால் சிறிதளவும் வெட்கமின்றித் தங்கள் ஆபாசப் பேச்சுகளைக் கட்டவிழ்க்கின்றனர். மிக நீளமான ஆண்குறிப் படமொன்று என் உள்பெட்டியில் வந்து விழுந்தபோது அடைந்த அருவருப்பும் தவிப்பும் இன்றும் மனதில் உறைந்திருக்கிறது. இப்போது, இப்படிப்பட்ட கழிசடைத்தனமான விஷயங்களைக் கையாள்வதற்கான துணிவையும் பக்குவத்தையும், தொடர்ந்த சம்பவங்களே எனக்கு வழங்கின. அதுமட்டுமின்றி, பிற பெண்களின் பக்கங்களில் நடைபெறும் இத்தகைய ஆபாச வன்முறைகளுக்கு எதிராகக் குரலுயர்த்துவதை என் கடமையாகவே கருதுகிறேன். பயந்து முடங்காமல், எதிர்த்து நிற்கும் பெண்களின் சிறுசிறு குழுக்கள் இயங்கத் தொடங்கியிருப்பது சமூக மாற்றத்தின் நல் அடையாளம்.

நண்பர்கள் அல்லாதவர்களின் தனிச்செய்திகளை முகநூல் நிறுவனமே தனியாக, நம் கண்ணில்படாத வகையில் தருகிறது. இப்படியொன்றிருப்பதை சமீபத்தில் அறிந்து அதற்குள் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஒருநாள் காம அழைப்புகளாக வந்து விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனேன். இப்படி ஒவ்வொரு பெண்ணின் பெட்டியிலும் அழைப்புகளிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. தன்னுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பெண்ணுடலின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தைக் கைக்கொள்கிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வுமின்றி நாகரிகமான அணுகுமுறை என்ற போர்வையில் இதுவும் நியாயப்படுத்தப்படும். பெண்ணைச் சார்ந்து இயங்கும் ஆண்கள், தங்கள் மனசாட்சியைக் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய தருணமிது. பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?

சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்கள், தங்கள் தயக்கங்கள் களைந்து துணிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்காகக் கணக்கை முடக்குவதோ, இயக்கத்தைக் குறைப்பதோ, தவிர்ப்பதோ ஆணாதிக்க மதிப்பீடுகளைக் கவனப்படுத்துவதாகவும் மறைமுகமாக ஏற்றுக்கொள்வதுமாகவே இருக்கும். அப்படி அவர்களை உற்சாகப்படுத்திடாமல் பெண்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டும்.

மதிப்பீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய அறிவுத்துறை, ஊடகத்துறை செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து, இதுபற்றிய விவாதங்களை முன்னெடுப்பதும் மாற்றத்தை நோக்கிய நகர்வுகளைத் துரிதப்படுத்துவதும் தேவை. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, பெண்கள் தங்கள் வெளியை இவர்களுக்காகக் குறுக்கிக்கொள்ளாமல் மனஉறுதியுடன் இயங்குதல், சமூகவெளியில் இயங்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான சமூகக் கடமையிது.

தி. பரமேசுவரி 
கவிஞர், பள்ளி ஆசிரியர்

 

இணையம் ஒரு கட்டற்ற சுதந்திரவெளி. பெண்கள் தாங்கள் பேச முடியாத அத்தனை பேச்சுகளுக்கும் வடிகாலாக வலைப்பூ, மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்ஆப் என ஒருங்கிணைத்துப் பெண்களின் குரலுயரக் காரணமாக இருக்கிறது இணையம். சென்னையில் தங்கியிருக்கும் பெண்கள் சிலர் தங்களது ஊருக்குச் செல்லும்போது சாதி, குடும்பச் சூழலில் சூழ்நிலைக் கைதியாகிவிடுகிறார்கள். அவர்களுக்குச் சென்னை வடிகாலாக உள்ளதுபோலக் குடும்ப, சமூகச் சூழலில் உழலும் பெண்களுக்கு இணையத்திலும் ஒரு வடிகாலாக உள்ளது. ஆனால் இணையமும் சாதி - மத ஆணாதிக்க வெறியர்கள் மறுபடியும் பெண்களை இழுத்துச் சென்று இருட்டறையில் முடக்க முயல்கிறார்கள். மாற்றுக் கருத்துக்கொண்ட பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் இணையத்தில் இழிவுபடுத்தப்படுகின்றனர். புலிகள் அமைப்பின் சின்னத்தைப் பச்சை குத்திக்கொண்டதற்காக மலேசியப் பெண் ஒருவருக்கும் மாட்டுக்கறி உணவை ஆதரித்ததற்காக மீனா கந்தசாமி, ஹேமாவதி இருவருக்கும் சாதிய எதிர்ப்பு குறித்துப் பதிவிட்டதற்காக எனக்கும் ஆண்களின் தொடர் உள்பெட்டிச் செய்திகளை எதிர்த்துப் பதிவிட்டதற்காக நிலா லோகநாதனுக்கும் பல சிக்கல்கள் உருவாயின.

இவை மட்டுமல்ல பெரியாரியவாதி தமிழச்சியும், ஊடகத் துறையில் பணிபுரியும் கவின்மலரும், கவிதா சொர்ணவல்லியும், கவிஞர்கள் சுகிர்தராணியும், லீனா மணிமேகலையும், மனுஷியும், இஸ்லாமியர்கள் என்பதற்காக சல்மாவும், ஸர்மிளா ஸெய்யித்தும் நேரிடையாகவே இணையத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டார்கள்.

nilavumozhi.jpgமாற்றுக்கருத்து, பெண்ணியம் பேசும் பெண்களுக்கு இந்த நிலைமையெனில், சாதாரண பெண்கள் தினம் தினம் இப்படியாகப் பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்; அதுதான் யதார்த்தம் எனவும் பழகிக் கொள்கிறார்கள். ஆனால் இவற்றுக்குப் பதிலடிகொடுக்காமல், யதார்த்தம் என அப்பெண்கள் கடந்து செல்வதே, ஆண்களை அதிகப்படியான விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறது. யதார்த்தம் பெண்களை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள சொல்கிறது. அப்படிப் பொறுத்துக் கொள்ளும் பெண்களுக்கு ‘நல்ல பெண்’ என்னும் பெயர் கிடைக்கிறது. இல்லையெனில் ‘திமிர் பிடித்த பெண்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார் அப்பெண்.

பாரபட்சமின்றிப் பெண்களின் முகநூல் உள்பெட்டிச் செய்திகளால் நிரம்பிவழிகிறது. நேரிடையாக இணைய வெளியில் பாதிக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் மறைமுகமாகப் பல இடங்களில் பல்வேறு பெண்கள் இணையவெளியில் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் பலருடைய புகைப்படங்கள் ஆபாச வலைதளங்களில் பகிரப்படுகின்றன. பெண்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆண்கள் ஆபாச வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தைத் தொடர்பு எண்ணுடன் பதிவேற்றுகிறார்கள். காதல் தோல்வியைக் காரணம் காட்டி, காதலித்த அப்பெண்ணின் புகைப்படத்தையும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி மகிழ்வதும் தொடர்ந்து நடக்கிறது. உண்மையில் இவர்களெல்லாம் மனவியாதிகொண்ட இச்சமூகத்தில் நோய் முற்றியவர்கள்.

தனிப்பட்டு இப்படி இழிநடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே வேளையில் சமூகமே இப்படிப் பெண்களுக்கு எதிராக நிற்கும்போது, ஒரு தனிநபர்மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நிச்சயமாகச் சமூகத்தை மாற்றாது. இவர்கள் இப்படி ஒருபுறமிருக்க மற்றொரு புறம் அரசியல்ரீதியாகப் பெண்களை இழிவுபடுத்தும் நபர்கள் இணையவெளியில் ‘அறிவாளிகளாக’ உலவுகிறார்கள். ‘முற்போக்கு ரோமியோ’க்களும் இவர்களில் அடக்கம். சமூகத்தின் கழிவுகள் அனைத்தும் இணையத்திலும் சிதறிக் கிடக்கின்றன. சமூகம் மாற்றமடைந்து, சரியான கலாச்சாரமும் ஜனநாயகமும் பிறக்கும்போதுதான் இந்தச் சீர்கேடுகள் கலையும். அப்போது தான் இணையவெளியிலும் சரியான மாற்றம் மலரும்.

அதுவரையிலும் இப்படியான நபர்களுக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு போராட்டங்கள்

வாயிலாக எதிர்ப்புகளைப் பதிய வேண்டும். மேலும் அவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்கமாக பாலியல் ரீதியான இணையவழித் துன்புறுத்தல்களை (Online Harassment) பதிவுசெய்யும் ‘தகவல் தொழில் நுட்பச் சட்டம் - 2000’ மட்டுமின்றி, ‘இந்தியத் தண்டனைச் சட்டம் -1890’ தமிழ்நாடு அரசின் ‘பாலியல் ரீதியாகப் பெண்களைத் துன்புறுத்துதல் தடைச் சட்டம்-1998’ ஆகிய சட்டங்களின் கீழும் வழக்குப் பதிய முடியும்.

மார்பிங் செய்யப்படும், ஆபாச வலைதளங்களிலும் பதிவேற்றப்படும் புகைப்படங்களுக்கு எதிராக ‘பெண்களை அநாகரிகமாகச் சித்திரித்தல் தடைச் சட்டம் - 1986’கீழ் வழக்குப் பதிய முடியும். ஆபாசப் படங்கள் பதிவேற்றத்திற்கு எதிராக, இணையக் குற்றப்பிரிவு விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. அதுபோல கூகுளில் சம்மந்தப்பட்ட பக்கத்தை நீக்கவும் தொடர்ச்சியாகப் புகார்கள் கொடுக்க வேண்டியுமுள்ளது. இவை எல்லா வற்றுக்கும் எதிராகப் பெண்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.

நிலவுமொழி செந்தாமரை 
வழக்கறிஞர்

 

 

http://www.kalachuvadu.com/issue-191/page67.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.