Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'டொராண்டோ'வில் பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்' - கிரிதரன் நவரட்ணம்

Featured Replies

'டொராண்டோ'வில் பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்' - கிரிதரன் நவரட்ணம்:-


நேற்று பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின.


எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். நிகழ்வில் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், சேரன், கற்சுறா, அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி, சிவவதனி பிரபாகரன் என்று பலரைக்காண முடிந்தது.


நிகழ்வின் ஆரம்பத்தில் மார்க் அந்தனி என்னும் இளைஞர் தமிழகச்சிறப்பு முகாமொன்றில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை விபரித்து உரையாடினார். 'நாடு கடந்த தமிழீழம்' அமைப்பின் பிரதிநிதிகளிலொருவரான உஷா ஶ்ரீஸ்கந்தராசா தனதுரையில் தமிழகத்துச் சிறப்பு முகாம்கள் மூடப்படுவதனை வற்புறுத்தி உரையாற்றினார். அத்துடன் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை புலப்படும் வகையில் ஜெயலலிதாவுக்கு எல்லாரையும் கடிதங்கள் எழுதும்படியும் அறிவுரை பகிர்ந்தார்.


அவரைத்தொடர்ந்து சர்வதேச மன்னிப்புச் சபையினைச்சேர்ந்த ஜான் ஆர்கியு உரையாற்றினார். அவர் தனதுரையில் தனக்குக் கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி ஆழமான புரிதல் இருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் இவ்விதம் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்கள் என்னும் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் பற்றி அவ்வளவான புரிதல் இல்லை என்றும், ஆனால் இனிமேல் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த விடயத்தைச் சர்வதேச மன்னிப்புச்சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்போவதாகக்குறிப்பிட்டார்.


இவர்களைத்தொடர்ந்து நூல் பற்றிய ஆய்வுரைகள் இடம் பெற்றன. முனைவர் சேரன், எழுத்தாளர் த.அகிலன், கணன் சுவாமி , பரதன் நவரத்தினம் மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் உரையாற்றினர்கள்.


சேரன் தனதுரையில் தமிழகத்தில்மட்டுமல்ல , உலகின் ஏனைய நாடுகள் பலவற்றிலும் கூட இது போன்ற நாடொன்றின் சாதாரண சட்டங்களுக்கு அப்பாற்பட்டு இயங்கும் வகையிலான சட்டங்களின் அடிப்படையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விதமான தடுப்பு முகாம்களில் வைக்கப்படும் கைதிகளுக்குச் குற்றமிழைத்துச் சிறை செல்லும் கைதிகளுக்கு உள்ள உரிமைகள் கூட இல்லையென்றும், 9-11ற்குப் பின்னர் இவ்விதமான, நாடொன்றில் நிலவும் சட்டங்களுக்கு அப்பால் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கப்படும் போக்கு வளர்ந்து வருவதாகவும், அவ்விதமான போக்கு ஜனநாயகத்தின் ஓரங்கம் போன்றதாகக்கருதப்படுவது போன்றதொரு நிலை தென்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.


எழுத்தாளர் த.அகிலன் கவித்தும் நிறைந்த மொழியில் தனது தமிழக அனுபவங்கள், மற்றும் சிறப்பு முகாம் பற்றிய பாலன் தோழரின் நூல் பற்றி விபரித்தார். அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது. அது நூல் பற்றியது. நூல் பற்றிக்குறிப்பிடும்போது அகிலன், பாலன் தோழர் தன் அனுபவத்தின் ஒரு துளி அனுபவங்களையே நூலில் விபரித்திருப்பதாகவும், எதிர் காலத்தில் பாலன் தோழர் தன் சிறப்பு முகாம் அனுபவங்களை முழுமையாக எழுதவேண்டுமெனவும் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும் குறிப்பிட்டார்.


நூலினைப்படித்தபோது எனக்கும் அவ்விதமே எண்ணம் தோன்றியது. நூல் பாலன் தோழரின் சிறப்பு முகாம் பற்றிய விமர்சன நூலாகவே தென்பட்டது. தன் அனுபவங்களின் அடிப்படையில், சிறப்பு முகாம் பற்றிய உண்மையான சட்டங்கள் அடிப்படையில் அவர் தர்க்கரீதியாக சட்டங்களை உருவாக்கிய தமிழகத்து அரசியல்வாதிகளை, மேற்படி சட்டத்தைத்தொடர்ந்தும் பேணி வரும் தமிழக அரசை எனக் காரசாரமாக வாதாடியிருப்பார். அவர் தனது சிறப்பு முகாம் அனுபவங்களை விரிவாக விபரித்து , எதிர்காலத்தில் இன்னுமொரு நூலொன்று எழுத வேண்டும். அவ்விதம் எழுதுவது அந்நூல் சிறப்பு முகாம்கள் பற்றிய முக்கியமானதோர் ஆவணமாக விளங்க வழி வகுக்கும்.


கணன் சுவாமி தனக்கென்றொரு உரையாடல் மொழியினை இணையத்தில் வளர்த்து வந்துள்ளார். அவரது உரையினை அண்மையில் மறைந்த கவிஞர் திருமாவளவன் ஒருமுறை சிலாகித்துக்கூறியது இச்சமயத்தில் நினைவுக்கு வருகின்றது. கணன் சுவாமி அந்த மொழியிலேயே பேசிச் சபையோரை குலை நடுங்க வைத்திருக்கப்போகின்றாரோ என்றொரு ஐயமெழுந்தது. நல்ல வேளை, நல்ல தமிழில் பேசி அவர் என் ஐயத்தை அடியோடு நீக்கி வைத்தார். அவர் தனதுரையில் தனது தமிழகத்துச் சிறப்பு முகாம் அனுபவங்களைப்பகிர்ந்துகொண்டார். அவரது அனுபவத்தின் வெளிப்பாடாக அமைந்த உரை அது.


தொடர்ந்து உரையாற்றிய பரதன் நவரத்தினம் தனதுரையில் ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னரான தனது தமிழகத்து அகதி முகாம்கள் பற்றிய நினைவுகளை மற்றும் தானிருந்த இயக்கத்தின் அகதிகள் பற்றிய அரசியற் செயற்பாடுகள் பற்றி நினைவு கூர்ந்தார்.

12321282_10153244195783372_7896119414462
அடுத்துப்பேசிய ஈழவேந்தன அவர்கள் நூலின் வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டித் தனதுரையினை நிகழ்த்தினார்/


பேச்சாளர்களின் உரைகளைத்தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெற்றது. அதில் எழுத்தாளர் கற்சுறா, மார்க் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். கற்சுறா தனது உரையில் இவ்விதம் சிறப்பு முகாம்களை மூடச்சொல்வதற்கு எங்களுக்கு உண்மையிலேயே உரிமையுண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினார். எழுப்பியவர் தொடர்ந்து இங்கு நாம் மண்ணுக்கு மேலுள்ள முகாம்களைப்பற்றிப்பேசுகின்றோம். ஆனால் 2009ற்கு முற்பட்ட காலகட்டத்தில் வன்னியில் நிலத்துக்கீழ் பல அடுக்குகளில் கைதிகள் சிறை வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்கள். இதனை அன்றே தட்டிக் கேட்டிருந்தால் எத்தனையோ பேரைக்காப்பாற்றி இருந்திருக்க முடியும் என்றும் இயலாமை தெறிக்கும் குரலில் குறிப்பிட்டார்.


இவ்விதம் கற்சுறா உரையாடிக்கொண்டிருக்கும் சமயம் சபையிலிருந்த பெண்ணொருவர் கற்சுறாவை நோக்கி, ஆக்ரோசமாகக் கேள்விகள் கேட்கத்தொடங்கினார். இருவருக்குமிடையில் இலேசாக வாய்த்தர்க்கம் அதிகரிப்பதைக்கண்ட , நிகழ்வின் தலைவர் ஜெயகரன் 'அவர்களை சாமர்த்தியமாக அடக்கினார். மேலும் மார்க் மற்றும் இலங்கை இடதுசாரியான பாலசுப்பிரமணியம் ஆகியோரும் தம் கருத்துகளைச் சபையில் வெளியிட்டனர்.


இறுதியாக சிவவதனி பிரபாகரன் இந்த நிகழ்வில் யாரும் அரசியல் பேச வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன், இந்த நிகழ்வு தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை மூடுவதற்குக் குர்ல் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என்றும், இதன் பொருட்டு நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறி நிகழ்ச்சியினை முடித்து வைத்தார்.


நிகழ்வின் முடிவிலும் கற்சுறாவுக்கும், அந்தப்பெண்மணிக்குமிடையில் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மிகவும் இலகுவாக நடந்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, இனியும் அவ்விதத்தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியமென்பதை மிகவும் இலகுவாக அந்தப்பெண் ஏற்றுக்கொண்டிருந்தால் விவாதம் மேலும் நீண்டிருக்காதென்று தோன்றியது. தமிழீழத்துக்காகப் போராடிய அனைத்து அமைப்புகள் மத்தியிலும் இவ்விதமான சித்திரவதை முகாம்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. இவை அனைவரும் அறிந்த ஒன்றே. இவற்றைப்பற்றி இனியும் பேசாமல் இருப்பது நல்லதல்ல. இவற்றைப்பற்றிய ஆரோக்கியமான சுய விமர்சனங்களை இப்பொழுது செய்யாமல் எப்பொழுது செய்வது? அவ்விதம் செய்வதால் அவை எதிர்கால ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்கும்.


பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்' என்னும் நூல் அரசியல், மனித உரிமைகள் விடயத்தில் முக்கியத்துவமானது. பல தசாப்தங்களாக, சிறப்பு முகாம்களென்ற சித்திரவதை முகாம்களில் தம் அடிப்படை உரிமைகளை இழந்து பல்வேறு சொல்லொணாத்துன்பங்களுக்கு ஆளாகிவரும் ஈழத்துத்தமிழ் அகதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வு கிடைப்பதற்கான முதலாவது ஆரோக்கியமான செயற்பாடு பாலன் தோழரின் இந்த நூலாகும்.


இது போன்ற நூல்களுடன், சமூக மற்றும் அச்சு ஊடகங்களில் இவ்விதமான நூல்கள், ஓவியங்கள், பற்றிய விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். உலகத்தமிழர்கள் குறிப்பாகத் தமிழகத்தமிழர்கள் மத்தியில் அங்கு இருக்கும் இவ்வகையான சிறப்பு முகாம்களென்ற சித்திரவதை முகாம்கள் பற்றிய போதிய விழிப்பினை ஏற்படுத்துவதற்கு இவ்விதமான பகிர்தல்கள் மிகவும் அவசியம். மேலும் இவ்விதமாகத்தடுப்பு முகாம்களில் எவ்வித விசாரணைகளுமற்று , தடுத்து வைக்கப்பட்டு தம் வாழ்வின் பொன்னான பொழுதுகளை இழந்தவர்களின் கழிந்த காலம் மீண்டும் திரும்பப்போவதில்லை. அவர்கள் இழந்த அவர்கள்தம் வாழ்நாளின் பொன்னான பொழுதுகள் அர்த்தமற்றுப் போய்விடக்கூடாது. அதற்கு அவர்களின் விடுதலையை வலியுறுத்துவதுடன், அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக தமிழக அரசு மீதும் மானநஷ்ட்ட வழக்குகள் போடப்பட்டு, நியாயமான நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

சட்டரீதியாகத் தாசில்தாரரே சிறப்பு முகாம் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் சட்டமற்ற முறையில் தமிழகக் காவல்துறையின் 'கியூ பிராஞ்ச்' பல இன்னல்களை ஏற்படுத்தியிருப்பதாகப் பாலன் தோழரின் நூல் குற்றஞ்சாட்டுகிறது. குடும்பப்பெண்களுட்படப்பல பெண்கள் மருத்துவசோதனை என்ற ரீதியில் இரவு நேரங்களில் 'கியூ பிராஞ்ச்' அதிகாரிகளினால் அழைத்துச்செல்லப்பட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்ட போதும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை யென்றும் நூல் வாயிலாக அறிய முடிகின்றது. அந்தப்பெண்களுக்கு நியாயமான தீர்வு சட்டரீதியாகப் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவ்விதம் பெண்களைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய அதிகாரிகள் விடயத்தில், ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு இந்திய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு மேற்கு நாடுகளெல்லாம் நாற்பது, ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் கூட, சிறு வயதில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்கள் வழக்குகள் தொடர்ந்து, நியாயம் பெறக்கூடிய வகையிலான சட்டங்களுள்ளன. அதுபோல் எத்தனை வருடங்கள் சென்றாலும், ஓய்ந்து விடாது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்விதம் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற மனித உரிமை மீறல்களில் தமிழகக்காவற்துறையினர் ஈடுபடத்துணிய மாட்டார்கள்.


மேலும் தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஆக்ரோசமாகக்குரல் கொடுக்கும் அதே சமயத்தில் அவர்களது கொல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் சிறப்பு முகாம்களென்ற பெயரில் இயங்கும் சிறைக்கூடங்கள் பற்றியும் சிந்தித்து, அவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் மத்தியில் நடைபெறும் மிகப்பாரதூரமான ஈழத்தமிழ் அகதிகள் மீதான மனித உரிமை மீறல்களைப்புரிந்து கொள்ளாத நிலையிலா அவர்கள் இருக்கின்றார்கள்? அப்படியும் சொல்வதற்கில்லை.

இவ்விதமான சிறப்பு முகாம்களை உருவாக்கியதே கலைஞர்தான். அவற்றைத் தன் ஆட்சியிலும் பராமரிப்பவர் இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கலைஞரும் அரசியலில் ஒத்துப்போகுமொரு புள்ளிதான் இச்சிறப்பு முகாம்கள்.


இந்த வகையில்தான் பாலன் தோழரின் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. தமிழகத்துச்சிறப்பு முகாம்கள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், அவை பற்றிய தன் அனுபவங்களினூடு அவற்றில் நடைபெறும் மனித உரிமைகள் மீறப்படுவதை வெளிப்படுத்துவதிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியினைச்செய்திருக்கின்றது பாலன் தோழரின் இந்த நூல். இவ்விதமான நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்த அனைவரும், பாராட்டுக்குரியவர்களே.

நன்றி - Giritharan Navaratnam - முகநூல் பக்கம்...

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126468/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

நானும் இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன் .நேர்த்தியான விமர்சனம் கிரி. 

சேரன் பல பயனுள்ள விடயங்களை பேசினார் வழக்கம் போல சில நையாண்டிகளையும் அவர் அள்ளி வீச அவர் தவறவில்லை .குறிப்பாக கறுப்பு சேலை கட்டி மாவீரர் மேடையில் ஆடி ஆகப்போவது ஒன்றுமில்லை போன்றவை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.