Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு

Featured Replies

கனிமொழி - குமுதம் - முழு பேட்டி!

"விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி

இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது.

ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்னை தலைதூக்கும்போதெல்லாம் இங்கே போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது என்றால் ஒப்புக் கொள்வீர்களா?

"நிச்சயமாக ஒப்புக் கொள்ளமாட்டேன். ராஜிவ் படுகொலையை இலங்கைத் தமிழ் மக்கள் செய்யவில்லை. ஒரே ஒரு தவறுக்காக அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அதனாலேயே ‘அவர்களுக்கும் நமக்கும் உறவு விட்டுப் போய்விட்டது, அவர்கள் கஷ்டப்பட்டால் நமக்கு கவலையில்லை’ என்பது என்ன நியாயம்? ஒரு காலத்தில் அவர்களைப் பற்றிப் பேசவே பயமாக இருந்தது உண்மை. நடுவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தது. மக்கள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தார்கள். இப்போது இலங்கை அரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆகவே, திரும்ப எல்லோரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் புலிகளையும், மக்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது."

சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகள் மீதுள்ள அவநம்பிக்கையைப் போக்குவதற்காக ஈழத்தில் ஜெயபாலன் போன்ற சில அறிவு ஜீவிகள், மறைமுகமாக வெவ்வேறு நாடுகளில் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தை நடத்தச் சொல்வதாகத் தெரிகிறதே?

"ஜெய பாலனோ, பிரபாகரனோ சொல்லி நாங்கள் செய்யப் போவதில்லை. அவர்களுக்காக இங்கே உண்ணாவிரதம் இருந்தால் ‘அந்தத் தமிழர்களுக்கு விடுதலை வந்துவிடப் போகிறது, ஈழம் கிடைக்கப் போகிறது’ என்று யாராவது நினைத்தால், அதைவிட முட்டாள் தனம் இல்லை.

நாங்கள் யாரும் பிரச்னையைத் தீர்க்கப் போவதில்லை. எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நாங்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த வாழ்க்கையைத் திருப்பித் தந்துவிட முடியுமா? அமைதியைத்தான் கொண்டு வந்துவிட முடியுமா?

எங்களுக்கு என்று ஒரு ஈடுபாடு உள்ளது. நம்பிக்கை இருக்கிறது. உலகத்தில் உள்ள அத்தனை நாட்டு அவதிப்படும் மக்களுக்காகவும் பேசுகிறோம். ஏன் நம் கண் முன்னே, பக்கத்தில் உள்ள நமது இனத்தை, மொழியைப் பேசுகிற மக்களைப் பற்றி, நமது சகோதர சகோதரிகளைப் பற்றிப் பேசக் கூடாது? விடுதலைப் புலிகள் என்கிற ஒரு பயத்தை உருவாக்குவது நிறையப் பேர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.’’

சிங்கள ராணுவத்தின் அட்டூழியம் ஒரு பக்கம் என்றால், விடுதலைப் புலிகள் மீது அங்குள்ள தமிழர்களுக்குப் பயம். வேறு வழியில்லாமல் புலிகளோடு போகிறார்கள் என்றால் உங்கள் பதில்?

"எப்படிப் பயம்? ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது."

சக போராளிக் குழுக்களையே தீர்த்துக் கட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டு புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஈழம் அடைய வேண்டும் என்பதைவிட தங்களாலேயே அடைய வேண்டுமென நினைப்பவர்கள்...

(இடைமறிக்கிறார்) ‘‘நீங்கள் சொல்வது முடிந்து போன கதை. அதைத் திருப்பிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. நான் விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கோ, எதிர்த்துப் பேசுவதற்கோ உங்களிடம் பேசவில்லை. அந்த ஆதரவற்ற மக்களின் பிரச்னைகளைத்தான் பேசுகிறேன். பிரபாகரன் செய்தது தவறா, இல்லையா அல்லது அவரது அமைப்பின் அவசியம், அனாவசியம் ஆகியவை பற்றிப் பேச எனக்குத் தகுதியோ, அருகதையோ இல்லை. தவிர, நான் களத்தில் நிற்கின்ற போராளியோ, அவதிப்படும் மக்களில் ஒருத்தியோ இல்லை. வெளியில் நின்று பரிதாபத்துடன் அக்கறையுடன் கவனிக்கும் பெண்.’’

சரி, சுற்றி வளைக்க வேண்டாம். நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

"அந்தக் கேள்விக்கே இடமில்லை. நான் எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசவில்லை. அந்த மக்களைப் பற்றிப் பேசுகிறேன். வேதனைப்படுகிறேன். நான் ஆதரித்தால் ஒரு வண்ணமும், இல்லையென்றால் வேறு வண்ணமும் என் மீது பூசப்படும். நாம் பிரச்னையைத் திசைதிருப்பக் கூடாது."

அந்த மக்களுக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

"எனக்கு எந்தத் தீர்வும் கிடையாது. தீர்வு தமிழ் ஈழமாக இருக்கலாம். வேறாக இருக்கலாம். அங்கே அல்லல்படும் மக்களுக்கும், போராடுபவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதே சமயம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம், தன் மக்கள் மீதே வன்முறையையும், அட்டூழியத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, பொருளாதாரத் தடையையும் ஏற்படுத்துவது உச்சகட்டக் கொடுமை. அதனால் மக்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போவதைப் பார்த்துக் கொண்டு இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் வாயை மூடிக்கொண்டுள்ளன. இதுபோல வேறு எங்கே நடந்தாலும் சகித்துக் கொள்ளாது."

விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தாலும் இலங்கை ராணுவம் நம் இனத்தைப் பழிவாங்கலாம் இல்லையா?

"அப்படியென்றால், அமெரிக்கா மீது கூடத்தான் எனக்குக் கோபம் இருக்கிறது. அமெரிக்காவை எரிச்சுடலாமா? (குரலை உயர்த்துகிறார்). அமெரிக்கா அட்டூழியம் செய்கிறது என்று உலக நாடுகள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து விலகி

தனிமைப்படுத்தினால் ஒப்புக் கொள்வோமா? அங்கே இருக்கும் அத்தனை மக்களும் மருந்துகூட இல்லாமல் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போகட்டும் என்று, ஒரு புஷ்ஷிற்காக விட்டு விடுவோமா? இலங்கையில் ராணுவம் குண்டு போடும்போது இப்போதைக்கு அந்த மக்களுக்கு புலிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர்."

செஞ்சோலையில் இலங்கை ராணுவம் குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை என்றால், புலிகள் அட்டூழியம் செய்யவில்லையா?

"சிரீலங்கா பிரச்னை பற்றியோ, விடுதலைப் புலிகள் வரலாறு பற்றியோ பேச நான் ஒன்றும் நிபுணர் இல்லை. ஏன் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த மக்களைப் பற்றியே கவலை. அதற்குத்தான் உண்ணாவிரதம். இன்னொரு விஷயம், சும்மா ‘விடுதலைப் புலிகள், புலிகள்’ என்று அந்த அப்பாவி மக்களிடமிருந்து புலிகள் மீது உலக மக்கள் கவனத்தைத் திருப்புவது ஒரு நாடகம். இந்த நேரத்தில் நீங்களும் தமிழர், நாங்களும் தமிழர் என்ற முறையில் அந்த மக்களுக்காக நம் அக்கறையையும், உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்."

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைமையில் ஓர் ஆட்சி அமைந்தால், அது இப்போது இருப்பதை விட மோசமாக இருக்கும் என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?

"இப்போது நம்மூரில் ‘இந்தியாவை பிரிட்டிஷ்காரன் ஆண்டபோதுகூடப் பரவாயில்லை’ என்று சொல்பவர்கள் இல்லையா? வெள்ளைக்காரன் விட்டுப் போனால் நாடே உருப்படாமப் போய்விடும் என்று சொன்னவர்கள் உண்டு. எதற்காகப் போராடினார்கள்? என் நாட்டை என் மக்கள் ஆள வேண்டும் என்று சொல்ல அந்த மக்களுக்கு உரிமை இல்லையா?"

இந்த உண்ணாவிரதப்போராட்டமெல்லாம் நீங்கள் அரசியலுக்கு வர ஒத்திகையா... ஆழம் பார்க்கிறீர்களா?

(சிரிக்கிறார்) ‘‘நிச்சயமாக இல்லை. அரசியலில் எல்லா ஆழத்தையும் பார்த்தாகிவிட்டது. அதற்கு இப்போது அவசியமும் இல்லை.’’

அன்று உங்களுடன் உட்கார்ந்தவர்கள் இலங்கைப் பிரச்னைக்கு உணர்வுபூர்வமான ஆதரவு என்பதைவிட, கனிமொழியுடன் உட்கார்ந்தால் கலைஞரைத் திருப்திப்படுத்தலாம் என்ற எண்ணத்தில்..

(இடைமறிக்கிறார்) ‘‘ஞானக் கூத்தனுக்கு அப்படி அவசியமில்லை. முக்தாவுக்கும் அப்படித் தேவையில்லை. இந்த விஷயத்தில் சுபவீயை விட அதில் அக்கறையுள்ள எத்தனை பேரைப் பார்த்துவிட முடியும்? பொடாவில் எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்தவர். ரவிக்குமாருக்கு அப்பாவைச் சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் போஸ்டரில் கூட என் பெயரைப் போடவில்லை. உட்காரும்வரை யாருக்கும் நான் உட்காரப் போவது தெரியாது. இப்படி உணர்வோடு வருபவர்களை, உங்கள் கேள்வியால் கொச்சைப்படுத்தக் கூடாது. எழுத்தாளர்களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும் சேர்ந்து செய்தது இது.’’

உங்கள் அப்பா இலங்கை பிரச்னையில் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகத் தோன்றுகிறதே?

"ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குப் பல தடைகள், பொறுப்புகள் உள்ளன. அதற்குள் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். ஒரு மாநில அரசு, வெளிநாட்டுக் கொள்கையில் தலையிட முடியாது. ஈழப் பிரச்னை தொடர்பாகப் பல விஷயங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சிலவற்றை வலியுறுத்தியிருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதைவிட வேறு என்ன செய்ய முடியும்?"

கருத்துக்கு வரலாம். உங்களுக்குப் பின்னணி இருக்கிறது. எந்தப் பின்னணியும் இல்லாத நம் நாட்டில் ஒருவன், தன் ஏரியாவில் நடக்கும் அநியாயத்தை வெளிப்படையாகப் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடமுடியுமா? ஆட்டோ வந்துவிடாதா?

"எங்கள் கருத்துக் கூட்டங்களில் நான் பேசுவதையும், கார்த்தி பேசுவதையும் காட்டமாக எதிர்த்துப் பேசிவிட்டுத்தான் போகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே! நம்மூரில் தெருவில் ஒருவர் நியாயத்தைத் தட்டிக் கேட்கும்போது, மற்றவர்கள் ஜன்னலை மட்டும் கொஞ்சமாகத் திறந்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தைரியமாகப் பேசறவனுக்குப் பின்னாடி அவன் குடும்பம் மட்டும் நின்றால் போதாது. சமூகமும் நிற்கவேண்டும். தனிக் குரலாக நின்றால்தானே ஒடித்துவிட முடியும்? பத்துப் பேர், ஐம்பது பேர் சேர்ந்தால் பிரச்னை தீர வாய்ப்புண்டு."

(நன்றி : குமுதம்)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16612

இங்கே இணைக்கப்பட்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு முதல் 9ம் திகதி இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16523

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.