Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழத்தகுதியற்ற நகரமா டெல்லி? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Featured Replies

வாழத்தகுதியற்ற நகரமா டெல்லி? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

pollution%204250.jpgகாற்று மாசுபடுவதால் வருங்காலத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என நாம் படித்திருப்போம். அந்த நாட்கள் அவ்வளவு தூரத்தில் இல்லை என நமக்கு அதிர்ச்சி காட்டியிருக்கிறது சீனத்தலைநகர் பீஜிங்கும், இந்தியத் தலைநகர் புதுடெல்லியும்.

வரலாற்றில் இல்லாத அளவு காற்றில் மாசின் அளவு அதிகரித்திருப்பதால், இந்த இரண்டு நகரங்களும் திக்கித்திணறி வருகின்றன. பீஜிங்கில் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' என்னும் அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. காற்றை விலைகொடுத்து சுவாசிக்கும் நிலையும் அங்கு வந்துவிட்டது.

அதேபோல, டெல்லியில் இந்த ஆண்டில், அதிகமான காற்றுமாசு பதிவான நாள் டிசம்பர் 24 ஆன நேற்றுதான் என அறிவித்திருக்கிறது இந்தியாவின் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR).  நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த அரசு, வாகனக்கட்டுப்பாடுகள், டீசல் வாகனங்களுக்கு தடை என சில திட்டங்களை, தற்காலிகத் தீர்வாக கொண்டு வந்துள்ளது. ஆனால் இவை இன்னும் சில மாதங்களுக்கு கூட பயன்படாது என்பது அரசுக்கே தெரியும்.

அதிர்ச்சி தரும் உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, உலகில் அதிகம் மாசடைந்துள்ள, நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருப்பது இந்தியா. உலகில் 91 நாடுகளில், 1600 நகரங்களில், அதிகம் மாசடைந்துள்ள நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது புதுடெல்லி. அதற்கடுத்த இடத்தில் இருப்பது, பாகிஸ்தானின் கராச்சி.

இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகள், மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள், நகரங்களில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நகரத்தின் கட்டுமானங்களையும், வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியதாகிறது. அப்படி அசுர வளர்ச்சிக்கு ஆசைப்படும் நேரத்தில், மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுப்பது இந்த சூழலியல் கேடுகள்.

2014 ல் பீஜிங்,  வாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது என உலகிற்கு அறிவித்தது வேறு யாருமல்ல, பீஜிங் நகர மேயர்தான். தொழிற்சாலைகளின் வேகமான வளர்ச்சி, அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை இவை மூன்றும் சேர்த்து, பீஜிங்கின் கழுத்தை நெரிக்க, கடந்த ஆண்டு 10 சதவீதம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட குறைந்தது. மக்களின் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

pollution%20600%2011.jpg

உடனே, சீன அரசு, 392 தொழிற்சாலைகளை அதிக காற்றுமாசு காரணமாக மூடவைத்தது. 4,76,000 பழைய வாகனங்களை சாலையை விட்டு துரத்தியது.  சீனாவின் முக்கிய நகரங்களான  பீஜிங், குவாங்க்சு, ஷாங்காய் ஆகிய மூன்று நகரங்களிலும், அனல்மின் நிலையங்களை இனிமேல் நிறுவக்கூடாது என முடிவெடுத்தது.

உலகின் வல்லரசாக, தொழில்நுட்பங்கள், ராணுவம் ஆகியவற்றில் வல்லாதிக்கம் செலுத்தும் நாடாக இருக்கும் சீனாவே இவ்வளவு செய்தும் கூட, அந்த ரெட் அலர்ட்டை தடுக்க முடியவில்லை என்பதுதான் இங்கு அடிக்கோடிட்டு காட்டவேண்டிய விஷயம். இன்று நமது தலைநகரம் சந்திக்கும், இதே பிரச்னைகளை எதிர்கொண்ட சீனா,  நமக்கு கொடுத்துள்ள  படிப்பினைதான் பீஜிங்கின் அந்த ரெட் அலர்ட்.

நமது டெல்லியின், காற்றுமாசுபாடு பற்றி தெரிந்து கொள்வதற்கு, முன்னர், காற்றுமாசுபடுதல் பற்றிய சில முக்கிய விஷயங்களைப்பற்றிய புரிதல் அவசியம்.

ஏர் குவாலிட்டி இன்டக்ஸ் (AQI) :

காற்றின் மாசு அளவைக்குறிக்கும் அலகின் பெயர்தான் இந்த ஏர் குவாலிட்டி இன்டக்ஸ். இது ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும், தன் நாட்டில் எந்த இடத்தில் எவ்வளவு காற்று மாசடைந்திருக்கிறது என்பதை, மக்களுக்கு எடுத்துசொல்ல பயன்படுத்தும் ஒரு முறை. இந்திய நகரங்களுக்கான ஏர் குவாலிட்டி இன்டக்சை அறிந்து கொள்ள, http://aqicn.org/map/india/

PM 2.5 மற்றும் PM 10 :

pollution%20who.jpgநம்மைச்சுற்றி இருக்கும் காற்றில் ஏராளமான  பொருட்கள் கலந்திருக்கின்றன. அதில் மாசுகளும், நச்சுப்பொருட்களும் அடக்கம். அவை துகள்களாக, திரவத்துளிகளாக  நம்மை சுற்றிலும் இருக்கின்றன. அந்த துகள்கள் ஒழுங்கான வடிவத்தைக்கொண்டிருக்காது. ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில்  இருக்கும். எனவே அவற்றை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்கள். பெரிய துகள்கள் மற்றும் சிறிய துகள்கள். அவற்றில் பெரியவைதான் PM 10. இவற்றில் கலந்துள்ள துகள்களின் அளவு 2.5 முதல் 10 மைக்ரோமீட்டர்கள் அளவு கொண்டது. அதாவது நமது தலைமுடியை விட, 25 முதல் 100 மடங்கு வரை சிறியது. இந்த அளவுள்ள துகள்களை பொதுவாக PM 10 என அழைக்கின்றனர்.

அடுத்து சிறிய துகள்கள். இவை 2.5 மைக்ரோமீட்டர்களுக்கும் சிறியதாக இருக்கும். இவற்றை PM 2.5 என அழைக்கிறார்கள். இந்த சிறிய துகள்கள்தான் மிக ஆபத்தானதும் கூட. PM 10 என்னும் பெரிய துகள்கள், அளவில் பெரியதாக இருப்பதால், சுவாசிக்கும் போது, உள்ளே செல்லாது. அதே சமயம் மூக்கு, வாய் போன்ற இடங்களில் இவை படிந்து உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். ஆனால் சிறியதாக இருக்கும் PM 2.5 நேரடியாக நுரையீரல் வரை சென்று படிந்து பாதிப்பை ஏற்படுத்தும். இந்த துகள்கள் புற்றுநோயை உருவாக்கும் முதல் நிலை கார்சினோஜென்களாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை நீண்ட நாட்கள் சுவாசித்தால், நுரையீரல் புற்றுநோய் வரவாய்ப்புகள் அதிகம். நீண்டநாள் சுவாசப்பிரச்னைகள், ஆஸ்துமா, இதயநோய்கள் போன்றவை எல்லாம் நிச்சயப்பரிசு.

PM 10 ஆனது அதிக தூரம் பயணிக்காது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இந்த துகள்கள், அதே இடத்தை சுற்றியே காற்றில் மிதக்கும். ஆனால் உலோகங்கள் உருக்குதல், வாகனப்புகை போன்றவற்றில் இருந்து உருவாகும் PM 2.5, அது உற்பத்தியான இடத்தில் இருந்து, பல மைல்கள் காற்றிலேயே பயணிக்கும். இதனால் ஒரு இடத்தில் உருவாகும் இந்த மாசு, அடுத்த நகரத்திற்கும் சேர்த்து ஊறுவிளைவிக்கும்.

pollution%20600%203.jpg

அபாய நிலையில் புதுடெல்லி!

இந்தத்தகவல்கள் தெரிந்தால், டெல்லியின் நிலைமையை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும். பாதுகாப்பான அளவு என்றால், ஒரு நாளைக்கு PM 2.5 மற்றும் PM 10 இரண்டும் முறையே கனமீட்டருக்கு, 60 மற்றும் 100 மைக்ரோகிராம்கள் அளவுக்கு இருக்கலாம். ஆனால் டெல்லியில் தற்போது இருப்பது, PM 2.5 மற்றும் PM 10 இரண்டும் முறையே, கனமீட்டருக்கு 295 மற்றும் 475 மைக்ரோகிராம்கள். ஆபத்து புரிகிறதா...? மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது டெல்லி. ஏர் குவாலிட்டி இன்டக்சில் பாதுகாப்பான அளவு என்பது 1-50 வரை. ஆனால் டெல்லியில் AQI தற்போது 400 க்கும் மேல். அதாவது அபாய நிலை.

டெல்லிக்கு இந்த பிரச்னை புதிதல்ல. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக, இந்த ஆபத்தை எதிர்நோக்கியே இருந்தது எனலாம். இந்த ஆண்டு கூட, இந்த ஆபத்திற்கு மிக அருகில் என்ற நிலையிலேயே இருந்தது டெல்லி. இடையில்  வந்த தீபாவளிப்பண்டிகை கொண்டாட்டத்தில் வெடித்த பட்டாசுகள், பிரச்னைக்கு மீண்டும் திரிகிள்ளி விட்டன. அப்போது உயர்ந்த மாசின் அளவு, அதற்கு பிறகு குறையவே இல்லை.

இதோடு, நகரின் வளர்ச்சிக்காக, லக்னோ, வாரணாசி, கான்பூர், பாட்னா போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து, டெல்லிக்கு படையெடுக்கும் லாரிகள், கார்கள், போன்ற வாகனங்கள் இன்னும் அதிகமாக காற்றை பாழாக்கியது.

pollution%20600%201.jpg

தற்போது டெல்லியில் நிலவி வரும் குளிரின் காரணமாக, அதிக பனிப்பொழிவு இருக்கிறது. காற்று மாசுக்கு இதுவும் ஒரு காரணமாகி விட்டது. காரணம் குளிர் காற்றில் இந்த துகள்கள், இடம்பெயராமல், மறையாமல் அப்படியே மிதக்கும். இதனால் புதிய மாசுத்துகள்கள் சேருவதால், இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லுமே தவிர குறையாது. குளிருக்காக பல இடங்களில் இலை தழைகளை எரிப்பதால், அந்த புகையும் துகள்களாக மாறி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

'டெல்லியில் மட்டுமே வருடத்திற்கு 10,000 முதல் 30,000 பேர் வரை காற்றுமாசுபடுதல் பிரச்னையால் வரும் நோய்களால் இறக்கின்றனர்'  என அறிவித்திருக்கிறது இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்(CSE) . இந்தியாவில் அதிகம் பேர் மரணிக்கும் காரணிகளில், இதற்கு 5 வது இடம்.

தற்போதைய டெல்லியின் மக்கள் தொகை 25.8 மில்லியன். வரும் காலங்களில் இது இன்னும் அதிகமாகும். 2010 ல் மொத்தம் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 47 லட்சம். 2030 ல் இது 2.6 கோடியாக உயரும் என ஒரு ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல, பெட்ரோல் கார்களை விடவும், டீசல் கார்கள் அதிக மாசினை  வெளியிடுகிறது.

pollution%20right.jpgடெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் 23 சதவீதம் கார்கள் டீசல் வாகனங்கள். எனவே  இவையும், டெல்லிக்கு தலைவலிதான்.

என்ன செய்கிறது அரசு?

15 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களை டெல்லியில் இயக்க ஏற்கனவே தடை இருக்கிறது. தற்போது, சாலைகளில் கார்களின் அளவைக்குறைக்க ஒற்றைப்படை எண் கொண்ட கார்கள் ஒருநாளிலும், இரட்டைப்படை எண் கொண்ட கார்கள் மற்ற நாளிலும், . ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு வகையான கார்களும் செல்ல வேண்டும் என்ற புதிய உத்தரவும் வந்திருக்கிறது. இந்த 'ODD-EVEN' ஃபார்முலாவை ஜனவரி 1 ம் தேதி முதல் அமல்படுத்தவிருக்கிறது டெல்லி அரசு. இதில் பிரச்னைகள் அதிகம் தென்பட்டால், 15 நாட்களில் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவித்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மிக கறார் காட்டுவது மகிழ்ச்சியான விஷயம். தலைமை நீதிபதி, டி.எஸ்.தாகூர் “பணக்காரர்கள் பெரிய டீசல் கார்களை (SUV) பயன்படுத்துவதால், சுற்றுச் சூழல் மாசடைவதை ஏற்க முடியாது . நீங்கள் கார்களை விற்பதில் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் காட்டுவதில்லை” என கார் நிறுவனங்களுக்கு சவுக்கடி கொடுத்து, 2000 சி.சி டீசல் கார்களை மார்ச், 2016 வரை பயன்படுத்த தடை விதித்திருக்கிறார்.

டீசல் கார்களை பதிவு செய்வதை தடை செய்யவேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில்தான் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதோடு டெல்லியில்  இயங்கும் கால் டாக்ஸிகள் மார்ச் மாதத்திற்குள், சி.என்.ஜி என்னும் இயற்கை எரிவாயு முறைக்கு மாறவேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

pollution%20600%204.jpg

வாழத்தகுதியற்ற கிரகம்

2005 க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, கமர்ஷியல் வாகனங்களை டெல்லியில் நுழையவும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த பிரச்னைகள் டெல்லிக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் மொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது.

கடந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட, உலகில் அதிகம் மாசடைந்திருக்கும் நகரங்களின் பட்டியலில், முதல் 20 இடங்களில் இருக்கும் நகரங்களில் 13 நகரங்கள் இந்திய நகரங்களே. இவ்வளவு எச்சரிக்கைகளுக்குப்பின்னும் நாம் திருந்தாவிட்டால், இந்த பூமியையே வாழத்தகுதியற்ற கிரகம் என அறிவிப்பது மட்டும்தான் நம்மால் முடியும்..!!!

http://www.vikatan.com/news/coverstory/56813-delhi-is-disqualified-to-alive-shocking-report.art

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.