Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலா அண்ணைக்கு முதல்வர் கருணாநிதி வழங்கிய கௌரவம்: சு.ப.தமிழ்ச்செல்வன் நன்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணைக்கு முதல்வர் கருணாநிதி வழங்கிய கௌரவம்: சு.ப.தமிழ்ச்செல்வன் நன்றி

ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை:

அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விளக்கொன்றை நாம் இழந்துவிட்டோம். இழப்பின் ஆறாத சுவடை தாங்கி உலகத் தமிழினமே துயரக்கடலில் மூழ்கியுள்ளது. விடுதலை இயக்கம் என்ற பெரும் குடும்பத்தின் மூத்த தலைமகனான "தேசத்தின் குரல்" பாலா அண்ணாவின் இழப்பு என்பது எவராலும் நம்ப முடியாததும் இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாததுமே.

தனக்குச் சாவு நிகழப்போகும் தருணம் அறிந்திருந்தும் இம்மியளவும் கலக்கமின்றி தயக்கமின்றி இறுதிவரை உறுதியோடு இலட்சியம் பேசியவர் பாலா அண்ணா. "சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும், அந்தத் துணிவிலும் தெளிவிலும் விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக்கப்படுகிறது, நிறைவானதாக்கப்படுகிறது" என தானே குறிப்பிட்டதற்கு அமைவாக பாலா அண்ணா வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினார். அவரது தெளிவிலும் விழிப்பிலும் சுதந்திர தமிழீழம் நோக்கிய பாதை சுடர்விட்டுப் பிரகாசித்தது. எமது இனத்துடன், இனத்துயர் துடைக்க எழுந்த புரட்சிகர அமைப்புடனும் அதன் தலைமையுடனும் பின்னிப் பிணைந்த அவருடைய வாழ்க்கையும் தத்துவ விசாரணைகளும் விடுதலை பற்றிய புதிய அர்த்தத்தை உலகுக்கு எடுத்தியம்பியது.

எமது தேசியத் தலைவருடன் பாலா அண்ணைக்கு ஏற்பட்ட உறவு தமிழ்த் தேசிய விடுதலைத் தேரின் சக்கரங்களில் ஒன்றாகி அது உலகு எங்கெனும் உலவிவர பேருதவி புரிந்தது. அந்த விடுதலைப் பயணத்தில் சக பயணியாகவும் அவர் வீற்றிருந்தார். தேசியத் தலைவரின் உற்ற நண்பனாக, விடுதலை அமைப்பின் மூத்த அரசியல் ஆசானாக புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப தாயகத்திலே எமது தலைமையினால் எடுக்கப்படும் இராஜதந்திர திருப்புமுனைகள் நிரம்பிய முடிவுகளை அரசியல் விற்பன்னத்துடனும் சாணக்கியத்துடனும் நெறிப்படுத்தி வெளிக்கொணரும் இராஜதந்திரியாக அவர் விளங்கினார். பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட பாலா அண்ணாவின் உறவை "காலத்தால் கனிந்து வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு'' என்கிறார் தேசியத் தலைவர்.

எமது விடுதலைப் போராட்டம் அதனது புற அகக் காரணிகளினால் வனையப்பட்டு ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த காலத்தில் பாலா அண்ணா தன்னையும் இந்தப் போராட்டத்தில் பங்காளி ஆக்கினார். மேலைத்தேச, கீழைத்தேச தத்துவங்கள், மானுட வளர்ச்சி பற்றியதான ஆய்வு உலகிற்கும் தனது இன விடுதலைப் போராட்ட களத்திற்குமிடையே எதனைத் தேர்வு செய்வது என்ற நிலை வந்தபோது கேள்விகளின்றியே இன விடுதலையை பற்றிக் கொண்டார். அத்துடன் தெளிவான அரசியல் தரிசனமும் உருப்படியான செயற் திட்டமும் இல்லாத அப்போதைய தமிழ் தலைவர்களின் வீண் போக்கினால் தனது இனத்தின் உயரிய அபிலாசைகள், மானுட விழுமியங்கள் சிதைக்கப்படுவதை அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. மூன்று தசாப்தத்திற்கு மேலாக பயனின்றி கடைப்பிடித்து வந்த சாத்வீக அரசியல் அணுகுமுறை சாத்தியமற்றது என்பதனை உணர்ந்து அதனையே சகலருக்கும் உணரச் செய்து, ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர இயக்கத்திற்கு துணையாகி நின்றார். இதுவே காலத்தினால் கனிந்து வந்த உறவு என்கிறார் எமது தேசியத் தலைவர்.

விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு உயிர்மூச்சாகவும் உந்து சக்தியாகவும் அது செயற்பட்டு வருகின்றது. ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில் ஒரு அரசியல் சக்தியாகவும், அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும் விடுதலைப் போரை முன்னெடுத்து வருகின்றது. ஒரு உறுதியான கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான நீதியான அரசியல் இலட்சியம். நீண்டகால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொதுசனத்தின் பலமிக்க ஆதரவு- இத்தனை பண்புகளையும் உடையது எமது விடுதலை இயக்கம் என முத்தாய்ப்பு வைத்ததுடன் அதனை சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்வதில் பாலா அண்ணா அயராது இயங்கினார். அதற்காக இறுதி மூச்சுவரை அவர் உழைத்தார்.

விவாத அரங்குகள், பேருரைகள், பேச்சுவார்த்தை மேசைகள், சர்வதேச மாநாட்டு அரங்குகள் என எங்கும் பாலா அண்ணையினது திண்மையான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது. அத்தனையும் எமது இனத்தின ஆன்ம வலிகளைப் பற்றியதாகவே ஒலித்தன. விடுதலை இயக்கங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் தன்மையுணராது பயங்கரவாதம் என பச்சை குத்திப் பார்க்க முயலும் கொடூரமான உலகமொன்றை எதிர்த்து அவர் போராடினார். அந்தப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை போராடினார். தமிழரின் தேசிய இன விடுதலையின் அவசியம் பற்றியும் அதற்கான நீதியான போராட்ட வழிமுறை பற்றியும் அதன் நியாயத்தன்மை பற்றியும் ஓயும் வரை அவரது வாய் உரைத்துக் கொண்டேயிருந்தது.

விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற ஆரம்ப காலம் தொட்டு எமது தேசியத் தலைவரோடு கூடியிருந்து அனைத்து சோதனைகளையும் வலிகளையும் தாங்கி, சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் முகங்கொடுத்து செயற்பட்ட பாலா அண்ணாவின் பிரிவு உலகத் தமிழினத்தையே கலங்க வைத்திருக்கின்றது. அவரது பிரிவின் துயர் சர்வ உலகிற்கும் ஏற்படுத்தியிருக்கும் வேதனை அவர் வரித்துக்கொண்ட இலட்சியத்தின் பாற்பட்டதாகும். அவர் நேசித்த நெறிப்படுத்திய இன விடுதலை என்ற காலக்கனியே உலகத் தமிழினத்தின் வேண்டுகையாகவும் இருக்கின்றது. பூமிப் பந்தின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் கேட்கும் துயர மொழிகள் பாலா அண்ணையின் ஆத்ம தரிசனமான "தமிழீழ விடுதலை" என்பதனையே உரைத்து உறுதிப்படுத்தி நிற்கின்றது. அன்னாரின் மறைவு குறித்து கேட்கின்ற அத்தனை குரல்களும் தமிழின விடுதலைக்கான குரல்களே என்பதனை மறுப்பதற்கு எவருமில்லை. அவர் மீதான நேசிப்பு என்பது அவருடைய நேசிப்புக்கள் மீதானவையே. அந்த வகையில் பிரிவு குறித்து அகிலம் எழுப்பிய குரல்கள் துயரக் கடலிலே மூழ்கியிருக்கும் எம்மக்களுக்கும் மண்ணுக்கும் பெரும் ஆறுதலுக்கும் உற்சாகத்திற்கும் வழி காட்டியிருக்கின்றது.

அந்த வகையில் மதிப்புக்குரிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தேசத்தின் குரலுக்கு தனது இரங்கல் செய்தியை முதலில் தெரிவித்திருந்தார். தாய்த் தமிழகத்திலிருந்து உடனேயே ஒலித்த அவர் குரலுக்கு எமது அமைப்பின் சார்பில், தேசியத் தலைமையின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம். தமிழகத்திலிருந்து அனுதாபங்களைத் தெரிவித்த ஏனைய தமிழக தலைவர்களுக்கும், தமிழினப் பற்றாளர்களுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறிலங்காவிலிருந்து "தேசத்தின் குரல்" பாலா அண்ணாவின் மறைவுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும், தமிழ் விடுதலைப் பற்றாளர்களுக்கும் எமது அமைப்பினதும் தலைமையினதும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது இன விடுதலையை மூச்சாகக் கொண்ட பாலா அண்ணனின் இழப்புக் குறித்து கவலை தெரிவித்த நோர்வே நாட்டினுடைய தூதுவர்களுக்கும், அமைச்சர்களுக்கும். அரசியல் பிரமுகர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். "அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் உண்மைக்காக உழைத்தவர். எப்போதும் உண்மையே பேசியவர். எந்தக் காரணத்திற்காகவும் அவர் பொய் கூறியதில்லை" என கௌரவ அமைச்சர் எரிக் சூல்கெய்ம் அனுதாபச் செய்தி வழங்கினார். அவர் குறிப்பிட்ட பாலா அண்ணணின் உண்மைக்கான உழைப்பு என்பது தமிழீழ விடுதலைக்கானதே. உண்மையான நீதியான நியாயமான கோரிக்கைகளோடு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு போராட்ட அமைப்பின் தலைமகனாக பாலா அண்ணன் இருந்திருக்கிறார் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பது அவரின் அத்ம தாகத்திற்கு நிச்சயம் நீர் வார்க்கும்.

"தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் மறைவு குறித்து துயரக்குரல் எழுப்பிய உலகத் தமிழினத்திற்கு எமது அமைப்பினதும் தேசியத் தலைமையினதும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இலட்சியமான உரிமைப் போராட்டத்திற்கு பின்னால் உலகத் தமிழினமே அணிதிரண்டு ஒருங்கிணைந்து எழுப்பிய குரலாக இது சர்வதேசமும் ஒலிக்குமென நம்புகின்றோம். தமிழ் தேசிய விடுதலை ஒன்றே உலகத் தமிழினத்தின் ஏகோபித்த அபிலாசை என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளும். தேசத்தின் குரல் பாலா அண்ணையின் ஆத்ம தரிசிப்பு மிக விரைவில் நிறைவேறும்.

"தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் பின்னால் எல்லாமுமாக நின்ற உழைத்து இன்று அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அடேல் அன்ரி அவர்களோடு எமது கவலைகளை பகிர்ந்துகொள்கிறோம். பாலாண்ணையின் நீண்ட தேசப்பணிக்கு பலமாகவும் இயங்கு சக்தியாகவும் இருந்தவர் இவரே. உடலின் நோயுடனேயே உலவிய தேசத்தின் குரலுக்கு நல்ல துணைவி என்பதற்கப்பால் ஒரு தாதியாகவும், தாயாகவும் இருந்து கவனித்தவர் அவர். இன்று நேறறு என்றில்லாமல் மூன்று தசாப்த காலமும் விடுதலைப் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றியவர். தனது இலட்சிய புருசனாக பாலா அண்ணாவை அடைந்து உலகியல் வாழ்வியல் அனுபவங்களை தத்துவங்களில் தோய்த்து பருகும் பெரும் பேறு பெற்ற அடேல் அன்ரிக்கு எமது தேசத்தின் சார்பாகவும் தலைமையின் சார்பாகவும் ஆறுதலையும் பெரு நன்றியையும் செலுத்தும் பொறுப்புமிக்கவராகின்றோம். தொடர்ந்தும் எமது விடுதலைப் பயணத்தை தலை மகன், தேசத்தின் குரலின் ஆசீர்வதிப்புடன் முன்னெடுப்போம்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.