Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் நினைவுகளுடனேயே காலம் ஆகிப் போவோமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நினைவுகளுடனேயே காலம் ஆகிப் போவோமா?

கலாநிதி சர்வேந்திரா

 

89d821af-96bd-44f3-8355-49112da707a81.jp

இன்றைய பத்தி இரண்டு கதைகளுடன் தொடங்குகிறது. இவற்றை நான் இங்கு கதை என்று குறிப்பிட்டாலும் இவை உண்மையில் நடந்த நிகழ்வுகளே. முதலாவது கதை கனடா ரொரோண்டோவில் நடக்கிறது. இரண்டாவது கதை நோர்வே ஒஸ்லோவில் நடக்கிறது. முதலாவது கதைக்கு வயது 18. இரண்டாவது கதையின் வயது 22. இக் கதைகளைப் பற்றி முன்னரும் பொங்குதமிழில் எழுதியிருக்கிறேன். இப் பத்திக்காக இக் கதைகளை மீண்டும் ஒரு தடவை பார்ப்போம்.

கதை 1.

1997 ஆம் ஆண்டு சில மாதங்கள் நான் கனடாவில் தங்கியிருந்தேன். நான் கனடா வந்திருப்பதைக் கேள்வியுற்ற எனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துகால நண்பர் ஒருவர் தனது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அன்று அவர் வீட்டில்தான் சாப்பாடு.

சாப்பாடு முடிந்து நண்பருடனும் அவரது மனைவியுனும் பல்வேறு விடயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நமது புலம்பெயர் வாழ்க்கை பற்றியும் உரையாடல் விரிந்தது.

இவ் உரையாடலின் ஒரு கட்டத்தில் நான் நண்பரின் மனைவியிடம் கேட்டேன்.

'நீங்கள் காகம் பதிவு செய்து விட்டிங்களா?'

'என்ன காகம்?' அவர் எதுவும் புரியாதவராகக் கேட்டார்.

நான் உற்சாகமாகப் பதில் கூறத் தொடங்கினேன்.

'புரட்டாசிச் சனி விரதம் வருகுதுதானே. விரதம் பிடிக்கிற எங்கடை ஆக்களிலை கனபேருக்கு சரியான மனக்குறை. விரதம் பிடிச்சுப்போட்டு காகத்துக்குச் சோறு வைக்காமல் நாங்கள் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறதிலை துப்புரவா திருப்தி இல்லையாம். விரதம் பிடிச்ச மாதிரியே இல்லாமல் கிடக்குது எண்டு சொல்லிச் சரியாக் கவலைப்படுகினம்'

நானும் இக் கவலையில் பங்கேற்பவனாக என்னை உணர்ந்து கொண்டு கதையை ஆரம்பிக்க நண்பரின் மனைவியும் நான் கூறுவதனை ஆமோதிப்பவராகத் தன்னை வெளிப்படுத்தினார்.

நான் எனது கதையைத் தொடர்ந்தேன்.

'காகம் இல்லாமல் விரதம் பிடிக்கிறது குறித்த தங்கடை கவலையை சில ஆக்கள் தாங்கள் விரதத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கிற கடை முதலாளிமாரிட்டைச் செல்லியிருக்கினம். கடை முதலாளிமாரிலை சிலர் இதுக்கு என்ன செய்யலாம் எண்டு யோசிச்சு திட்டம் ஒண்டு போட்டிருக்கினம்'

நண்பரின் மனைவி ஆர்வமாகக் கதையைக் கேட்கிறார் என்பதனை அவரது முகபாவம் வெளிப்படுத்தியது. நானும் உற்சாகமாக் கதையைத் தொடர்ந்தேன்.

'அவை போட்ட திட்டத்தின்படி இப்ப ஒரு தொலைபேசி இலக்கத்தை அறிவிச்சிருக்கினம். புரட்டாசிச் சனி விரதத்தை காகத்துக்குச் சாப்பாடு வைச்சு முடிக்க விரும்புறவை தங்களுக்கு விரத காலத்திலை காகம் தேவையெண்டால் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு எத்தனை காகம் தேவையெண்டு பதிவு செய்ய வேணும்.

குறிப்பிட்ட திகதிக்கை, ஒரு குறிப்பிட்டளவு காகம் பதிவு செய்யப்பட்டால் அந்தத் தொகையளவு காகத்தை ஊரிலை இருந்து இறக்கி ஒரு கூண்டுக்கை வைச்சு விரதம் பிடிக்கிற, காகம் பதிவு செய்த ஆக்களுக்கு கொடுக்க இருக்கினம். விரதகாரர் தங்கடை வீடுகளிலை இந்தக் காகங்களை வைச்சு, விரதகாலத்திலை காகத்துக்குச் சாப்பாடு கொடுத்து தங்கடை விரதத்தை முடிச்சுப் போட்டு காகங்களை கூண்டோடை திருப்பிக் கொடுக்க வேணும். இந்தச் சேவைக்கு அவை ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக அறவிட இருக்கினம். தொகை விபரம், எவ்வளவு காகங்கள் பதிவு செய்யப்படுகுது எண்டதைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுமாம்'

காகம் பதிவு செய்து விட்டீர்களா என நான் நண்பரின் மனைவியிடம் கேட்டதற்கான பின்னணியினை நான் நண்பரின் மனைவியிடம் இவ்வாறு விளக்கிக் கூறியவுடன் அவரது உடனடியான பதில் இப்படித்தான் அமைந்தது.

'நல்லது. என்ன!'

இது நான் கற்பனையில் கூறிய கதைதான் என்பதனை பின்னர் நண்பரின் மனைவியிடம் கூறிவிட்டு ஊரில் நாம் செய்த எல்லாவற்றையும் இங்கும் செய்ய முனைகிறோம். இவ்வாறு செய்ய முடியாமால் இருப்பவை குறித்து மிகவும் கவலையடைகிறோம் - என்பது குறித்தும் உரையாடினோம்.

இது நடந்தது 1997 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்.

கதை 2:

1993 ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பி ஒஸ்லோவுக்கு வருகை தந்திருந்தார். அவரது வருகையின்போது அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட ஆசிரியர், நிர்வாகிகளுக்கு இவருடன் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்திருந்தோம்.

கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு அப்போது ஒரு வருடம்தான் பூரத்தியாகியிருந்தது. தற்போது 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இக் கலைக்கூடத்தில் அப்போது 100க்கும் குறைவான மாணவர்கள்தான் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்க முன்னர் பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார்.

'நான் முதலிலை கதைக்கேலையடாப்பா. வாறாக்களிட்டை அவை சந்திக்கிற பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பத்தி முதலிலை கேட்பம். அதிலையிலிருந்து நான் கதைக்கத் தொடங்கிறன்'.

கருத்தரங்கில் ஏறத்தாழ நாற்பது பேர் வந்திருந்தார்கள். இவர்கள் கலைக்கூடத்தின் ஆசிரியர்களாகவும் நிர்வாகிகளாகவும் இவர்களில் பலர் பெற்றோர்களாகவும் இருப்பவர்கள். இவர்கள் தமது பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கூறத் தொடங்கினர்.

இவற்றை அவதானமாகச் செவிமடுத்த பேராசிரியர் பேசத் தொடங்கினார்.

'நீங்கள் ஊரிலை எப்படி வளர்தனிங்களோ, இருந்தனிங்களோ அதே மாதிரித்தான் உங்கடை பிள்ளைகளும் வளரவேண்டும் எண்டு எதிர்பாக்கிறிங்கள். உங்கடை எதிர்பார்ப்பு எனக்கு விளங்குது. ஆனால் நீங்கள் ஒண்டை மறக்கக்கூடாது.

நீங்கள் தமிழ்ப் பண்பாட்டுச்சூழலிலை, தமிழைத் தாய்மொழியாகவும், முதல் மொழியாகவும், கல்விமொழியாகவும், தொடர்பாடல் மொழியாகவும் கொண்டு வளர்ந்து வந்த ஆக்கள்.

ஆனால் பிள்ளைகள் அந்நிய பண்பாட்டுச்சூழலிலை தாங்கள் வாழுற நாட்டு மொழியை முதல்மொழியாகவும், கல்விமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் கொண்டு வளர்ந்து வருகுதுகள். நாங்கள் ஊரிலை தமிழ் படிப்பிச்சமாதிரி நீங்கள் உங்கிடை பிள்ளைகளுக்கு இங்கை தமிழ் படிப்பிக்கேலாது'

இவ்வாறு ஆரம்பித்து ஊரில் தமிழ் கற்பிப்பதற்கும் புலத்தில் தமிழ் கற்பிப்பதற்குமிடையிலான வேறுபாடுகளையும் எடுத்துக்கூறி, பிள்ளகைள் தமிழ்ப் பண்பாட்டை உணர்ந்தவர்களாக வளர்வதற்கு வீட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். வீட்டில் தமிழ்ப் பண்பாட்டுச் சூழல் பேணப்படுதலின் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்தினார்.

ஒரு கட்டத்தில் அவர் பெற்றோர்கள் என்ற நிலையில் உள்ளவர்களுக்குக் கூறினார்.

'நீங்கள் இருக்கிற மாதிரி, நீங்கள் வாழுற மாதிரி, ஊரிலை உள்ள மாதிரித்தான் கட்டாயம் பிள்ளைகள் வளரவேண்டும் எண்டு நீங்கள் விரும்புவியள் எண்டால் நான் உங்களுக்கு சொல்லக்கூடிய ஒரேயொரு ஆலோசனை – வாங்கோ என்னோடை. ஊருக்குத் திரும்பிப் போவம்'

இவ் இரண்டு கதைகளும் புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினருக்கு ஊர் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது என்பதனை வெளிப்படுத்துகின்றன. இங்கே ஊர் என்பது தாங்கள் பிறந்து வாழ்ந்த கிராமத்தின் பெயரை மட்டும் குறிக்கவில்லை. தாங்கள் பிறந்த வாழ்ந்த நாட்டையும் குறிக்கிறது. நாம் இங்கு ஊர்ப்புதினம் என்று குறிப்பிடுவது, நமது கிராமத்துப் புதினங்களை குறிப்பிடுவதாக அமைவதில்லை. நாட்டில், முக்கியமாகத் தமிழர் தாயகப் பகுதிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதே பொதுவாக நம்மால் ஊர்ப்புதினம் என்று குறிப்பிடப்படுகிறது. மலேசியாவில் மூன்றாம் நான்காம் தலைமுறைத் தமிழர்கள் பலரும் ஊர் என்று தமிழ்நாட்டைக் குறிப்பிடுவதனை இன்றும் அவதானிக்கலாம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, மதத் தளங்களில் ஊருடன் தமது தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். நம்மில் பலருக்கு நாம் வாழ்ந்து வரும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை விட நமது ஈழத்தமிழர் தயகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது கூடுதலாகத் தெரியும். தமிழீழத் தாயக விடுதலைப் போராட்டத்துக்கு தம்மால் முடிந்தளவு பங்களிப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கும் தமது உதவிகளை வழங்கியிருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதார பங்களிப்புக்கள் யுத்தகாலத்தில் பல குடும்பங்கள் தாக்குப் பிடித்து வாழவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் உதவியிருக்கின்றன.

ஊர் நினைவுகள் மட்டுன்றி ஊரின் பழக்க வழக்கங்களையும் புலம்பெயர் மக்கள் தம்மோடு எடுத்து வந்திருக்கிறார்கள். நல்லவை மட்டுமன்றி நாம் கைவிட வேண்டிய சில விடயங்களை இன்றும் பின்பற்ற முனைபவர்களும் உள்ளனர். நான் எனது ஆய்வுக்காகச் செவ்வி கண்ட பெரியவர் ஒருவர் சொன்னார் 'எங்கடை சமூக ஊத்தைகள் எல்லாத்தையும் எங்களோடை சேர்த்து இங்கையும் கொண்டு வந்திருக்கிறம். முன்னேற்றறம் அடைஞ்ச நாடுகளிலை இருந்தாலும் எங்கடை மனங்களிலை மாற்றங்கள் நிகழேலை'.

இரண்டாம் தலைமுறையினருக்கு மத்தியில் சாதியுணர்வை புகுத்த முனையும் பெற்றோர்கள் குறித்து மிகவும் கோபமாகப் பேசினார் அவர். இது நமது தாயகத்தில் நாம் வாழ்ந்த சமூக அமைப்பு முறையினை புலத்தில் இறக்குமதி செய்யும் ஒரு முயற்சி. பண்பாட்டுவடிவில் தாயகத் தொடர்ச்சியினை நாம் பல்வேறுவகைளில் பேண முயல்கிறோம். நான் மேற்குறிப்பிட்ட காகக் கதை இதன்பாற்பட்டதுதான். மதங்களையும் பண்பாட்டின் ஒரு பகுதியாகப் பார்ப்போரும் மதங்களையும் பண்பாட்டையும் வேறுபடுத்திப் பார்ப்போரும் ஆய்வாளர்களிடையே உள்ளனர். இரண்டு அணுகுமுறைகளுக்கும் நியாயப்பாடுகள் உள்ளன. எனது ஆய்வு பண்பாட்டு அம்சங்களில் மதத்தையும் ஓரங்கமாக உள்ளடக்கியிருந்தது. மதம் சார்ந்து தாயகத்துடன் நாம் பல்வேறு வகையான தொடர்புகளை, தொடர்ச்சிகளைப் பேணி வருகிறோம். ஊர்க்கோவிலில் கொடியேறும்போது வாழும் நாட்டில் விரதம் பிடிப்பதிலிருந்து புலத்தில் அமைத்திருக்கும் கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் வரை நாம் இதனை அவதானிக்கலாம்.

புலம்பெயர் முதலாம் தலைமுறையினர் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து பல வருடங்கள் கடந்து விட்டன. காலம் போக போக ஊர் நினைவுகள் அவர்களை விட்டு நீங்குவதாகத் தெரியவில்லை. மாறாக இன்னும் அதிகரித்துச் செல்வது போன்றுதான் தெரிகிறது. ஊர் நினைவுகளுடன் வாழ்ந்தாலும் இவர்களால் ஊர் திரும்ப முடியவில்லை. முதலில் பிள்ளைகளுக்காவும் பின்னர் பேரப்பிள்ளைகளுக்காகவும் புலம்பெயர்ந்த நாடுகளிலேயே தமது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். லங்காசிறி போன்ற மரண அறிவித்தல்கள் வெளியாகும் இணையத் தளங்கள் தரும் தகவல்கள் புலம்பெயர் முதலாவது தலைமுறை காலம் ஆகத் தொடங்குவதை வெளிப்படுத்துகின்றன.

இப்போது மனதைக் குடையும் கேள்வி இதுதான். தமது தாயகத்தின் விடுதலையைக் கனவு கண்டவாறு தமது புலம்பெயர் வாழ்வை ஆரம்பித்த முதலாவது தலைமுறை தாயக விடுதலையைக் காணாமல் ஊர் நினைவுகளுடன் புலம்பெயர் நாடுகளியே காலம் ஆகப் போகிறதா?

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=89d821af-96bd-44f3-8355-49112da707a8

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாட்டில் நினைத்தவுடன் எல்லாமே வாங்கக்கூடியதாய் இருந்தாலும்............ ஊரில் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கமுடியாமல் அந்த நினைவுகளை சுமந்தபடியேதான் வாழ்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.