Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் தல டோனி... தளபதி யுவி... இப்போ வாங்க பங்காளிகளா..!

Featured Replies

களத்தில் தல டோனி... தளபதி யுவி... இப்போ வாங்க பங்காளிகளா..!

 

ந்திய அணி வென்ற மிகச் சிறந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட்  போட்டிகள் என பட்டியலிட்டால்,  அதில் பல போட்டிகளில்  துருப்புச்சீட்டாக யுவராஜ் சிங் கண்டிப்பாக  இருந்திருப்பார். 

1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர்,  கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இந்திய அணி,  அயல்மண்ணில்  இறுதி போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சமயம் அது.  2002 -ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பைக்கான முத்தரப்பு போட்டியின்  இறுதி போட்டியில்,  இந்தியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

ஷேவாக், கங்குலி, டெண்டுல்கர், மோங்கியா, டிராவிட் என  முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழக்க, 24 ஓவரில் 146/5 என இந்திய அணி தடுமாறியது. அப்போதுதான் கைப்புடன் ஜோடி சேர்ந்தார் யுவராஜ் சிங். ஜாம்பவான் வீரர்களே தடுமாறிக் கொண்டிருந்த சமயத்தில்,  யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர் கைப்பும்- யுவராஜும். இந்திய அணி வெற்றிபெற்றதும் கங்குலி சட்டையை கழற்றி சுற்றினார். இன்றளவும் இப்போட்டி, கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் பின்னர்  ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மெல்ல மெல்ல முன்னணி அணியாக கோலோச்ச ஆரம்பித்தது.

ms%20dhoni%20one%20two.jpg

ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி,  எப்போதுமே கடைசி ஐந்து ஓவர்களில் சொதப்பியதற்கும், இறுதிப் போட்டியில் தோற்றுக்கொண்டே இருந்ததற்கும் காரணம்,  பேட்டிங்கில் 5,6,7 நிலைகளில் நல்ல  ஃபினிஷர் இல்லை எனும் குறைதான். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் எல்லா போட்டிகளிலும் 50 ஓவர் வரை அவரே நிற்பது சாத்தியமற்றது அல்லவா! இந்த சமயத்தில்தான் யுவராஜ் சிங் இந்திய அணிக்கு கிடைத்தார். யுவராஜ் சிங்கை போலவே இந்திய அணிக்கு கிடைத்த இன்னொரு பொக்கிஷம் மகேந்திர சிங் டோனி.

யுவராஜ் சிங்,  இந்திய அணிக்காக 2000 த்தில் விளையாட வந்துவிட்டார், ஆனால் தோனி இந்திய அணிக்கு வந்ததே 2005-ம் ஆண்டில்தான். யுவராஜுக்கும், தோனிக்கும் ஒரே வயது, இருவரும் 5,6 நிலைகளில் விளையாடக் கூடியவர்கள்,  சிறந்த ஃபினிஷர்கள், சிக்ஸர் பிரியர்கள் என எக்கச்சக்க ஒற்றுமை என்பதால் அப்போதே இருவரும் திக் பிரெண்ட்ஸ் ஆகி விட்டார்கள்.

 2007-ம் ஆண்டு,  உலக கோப்பை டி20 போட்டியை நடத்த ஐசிசி முடிவு செய்தது. ஷேவாக், கங்குலி, டிராவிட், லக்ஷ்மண் என பெரும் தலைகள் ஒதுங்க, இளம் இந்திய அணி களமிறங்கியது. யாருக்கு கேப்டன் வாய்ப்பு என்ற கேள்வி வர, அணியில் யுவராஜும், சேவாக்கும் சீனியராக இருந்தாலும் தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்தது பி.சி.சி.ஐ. தோனி கிரிக்கெட்டில் நுழைந்த இரண்டே ஆண்டில், அதுவும் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனியை நியமித்தது சரியல்ல என முன்னாள் வீரர்கள் டிவியில் கத்திக்கொண்டிருக்க, ஆர்ப்பாட்டமின்றி பயிற்சியாளர் இல்லாமல், இளம் கேப்டன் தோனி தலைமையில் முதல் டி20 உலககோப்பையில் களமிறங்கியது இந்திய அணி.

2007-ம் ஆண்டு,  உலகக் கோப்பையில் மிகவும் முக்கியமான தருணத்தில்,  இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், இன்றைய உலகின் நம்பர் 1 பவுலர் ஸ்டுவர் பிராடின் பந்துவீச்சை துவம்சம் செய்து,  ஆறு பந்தில் ஆறு இமாலய சிக்சர்களை விரட்டி,  உலகின் அபாயகரமான வீரர் என்பதை நிரூபித்தார் யுவராஜ் சிங். யுவராஜ் சிங்கின் பங்களிப்பு,  இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உதவியது. இறுதிப் போட்டியில் தனது அபார கேப்டன்ஷிப் திறமையால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வென்று,  உலக அரங்கில் தலைநிமிர காரணமாக இருந்தார் தோனி.

தோனியும்- யுவராஜும் அதன் பின்னர் இணைந்து உலகின் அத்தனை பந்துவீச்சாளர்களையும் மிரட்ட ஆரம்பித்தனர். இரண்டு சிறந்த ஃபினிஷர்கள் இருந்ததால் இந்திய அணி வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது 2007 ல் உலககோப்பை டி20,  2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்  காமன்வெல்த்பேங்க் தொடர்,  2010 ல் ஆசிய கோப்பை,  2011 ல் உலகக் கோப்பை என வெற்றி நடை போட்டது இந்திய அணி. இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்றால் 2007 -2011 தான்.

2011 -ம் ஆண்டு உலகக் கோப்பை அணி அறிவிப்பதற்கு முன்னதாக நடந்த சில தொடர்களில், யுவராஜ் சிங்  பேட்டிங்கில் சொதப்பியபோது, உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகம் என்ற நிலையில், அணித்தேர்வாளர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்து யுவராஜ் சிங்கை அணிக்கு கொண்டு வந்தார் டோனி .

dhoni%20one%20two.jpg

ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர், கோலி, யுவராஜ், டோனி என இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமானது. 2010 உலககோப்பையில்,  இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணம் யுவராஜ் சிங் தான். ஒன்பது போட்டிகளில் நான்கு அரை சதம், ஒரு சதம் எடுத்து 362 ரன்களை குவித்தது மட்டுமின்றி,  15 விக்கெட்டுகளை கைப்பற்றி, உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங். ஃபார்மில் இல்லாத ஒரு நபரின் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த டோனிக்கு புகழ் சேர்த்தார் யுவராஜ் சிங்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர், புற்றுநோய் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய யுவராஜ் சிங்,   அவ்வப்போது இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருந்தார். இந்நிலையில் 2014-ம்  ஆண்டு,  டி20 உலகக் கோப்பைக்கு அணியில் இடம்பெற்றார் யுவராஜ் சிங்.

இறுதிப் போட்டியில் 21 பந்துகளை சந்தித்து,  வெறும் 11 ரன்களை மட்டுமே யுவராஜ் எடுக்க,  இந்திய அணி  விக்கெட்டுகள் கைவசம் இருந்தும்,  130 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை எளிதாக சேஸ் செய்து வென்றது. யுவராஜின் வீட்டில் கற்கள் எறியப்பட்டது. டோனி ஏன் யுவராஜ் சிங்கை  அணியில் எடுத்தார் என கேள்விக்கணைகள் தொடுத்தனர் சிலர். அதன் பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் யுவராஜ்.
யுவராஜ் சிங்- டோனி இடையே எப்போதும் நேரடி மோதல் இல்லை.  எனினும் சில வடஇந்திய மீடியாக்கள் யுவராஜ்- டோனி மோதல் என தூபம் போட்டு வளர்த்தன, இந்நிலையில் கடந்த ஆண்டு,  ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் யுவராஜ் சிங், அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி  அரையிறுதியில்,  ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்தது.

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்,  தோனிதான் யுவராஜின் வாழ்க்கையை  கெடுத்ததாக குற்றம் சாட்டினார். 2011-ம் ஆண்டு நல்ல ஃபார்மில் இருத்த யுவராஜ் சிங்கை, இறுதிப் போட்டியில்  வழக்கமான  ஐந்தாம் நிலையில் இறங்கவிடாமல்,  வழக்கத்துக்கு மாறாக அப்போது மோசமான ஃபார்மில் இருந்த தோனி ஏன் முன் கூட்டி இறங்கினார் என்றும், 2015 -ம் ஆண்டு அரையிறுதியில் ஏன் தோனி முன் கூட்டியே இறங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்  யோகராஜ் சிங். டோனியை அறைவேன் என்றும்,  டோனி ஒருநாள் செல்லா காசாக வாழ்நாளில் மாறுவார் என்றும் அவர் ஆவேசமாக பேட்டி கொடுத்தார். யுவராஜ் சிங் மற்றும் டோனி ஆகியோரின்  ரசிகர்கள் ஆன்லைனில் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டார்கள். 

டோனிக்கும், தனக்கும் எந்தவித மோதல் இல்லை என்றும், இருவரும் நண்பர்கள்தான் என்றும் ட்வீட்டினார் யுவராஜ். டோனி தந்தையானதற்கு வாழ்த்துக்கள் கூறினார்.அதன் பின்னர் கடுமையாக  பயிற்சி செய்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் பலனாக,  இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  மீண்டும் இந்திய அணிக்கு தேர்வானார் யுவராஜ்.

யுவராஜ் சிங்கும், டோனியும் அப்போதும், இப்போதும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இருவரும் இணைந்து ஜோடி போட்டி சர்வதேச கிரிக்கெட்டில்,  3916 ரன்களை இதுவரை குவித்திருக்கின்றனர். இதில் 11 போட்டிகளில் ஜோடியாக 100 ரன்களுக்கு மேலும், 19 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேலும் பாட்னர்ஷிப் போட்டிருக்கிறார்கள் இருவரும். 5,6 நிலைகளில் இறங்கி இவ்வளவு ரன்களை இணைந்து குவிப்பது மிகவும் கடினமான விஷயம்.

டோனி இதுவரை எப்போதுமே யுவராஜுக்கு பக்கபலமாக இருந்தே வந்திருக்கிறார். இம்முறை ஆஸ்திரேலிய தொடரில்,  முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரில்,  நான்கு பந்துகள் மீதமிருக்கும் நிலையில்தான் யுவராஜுக்கு பேட்டிங் வாய்ப்பு வந்தது. ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில்  வந்த இரண்டாவது நாளே,  களைப்பில் இருக்கும் யுவராஜை,  அதுவும் நான்கு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் களத்தில் இறக்க வேண்டாம் என முடிவு செய்த டோனி,  அதிரடியாக ஒரு சிக்ஸர், பவுண்டரி என மூன்று பந்தில் 11 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்லும் என்ற நிலையில்,   17 வது ஓவரில் விக்கெட் விழுந்ததும் மீண்டும் யுவராஜை இறக்காமல் தானே இறங்கி விளையாடினார் டோனி. பவுலிங்கில் இரண்டு ஓவரை வீசி,  ஏழு ரன்களை மட்டும் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் யுவராஜ் சிங். மூன்றாவது டி20 போட்டியிலும் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் யுவராஜ். சேஸிங்கில் 198 ரன்கள் என்ற மெகா இலக்கை இந்தியா விரட்டிய போது விராட் கோலி, ரோஹித், தவான் ஆகியோர் ஆட்டமிழக்க 14.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஐந்து ஓவரில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், யுவராஜ் மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்க இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்து,  அவரை அனுப்பினார் டோனி. 

18-வது ஓவர் வரை நான்கு  பந்துகளை மட்டுமே சந்தித்திருந்தார் யுவராஜ் சிங்,  12 பந்தில் வெற்றிக்கு 22  ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரில் ஐந்து  பந்துகளை சந்தித்து,   நான்கு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் யுவராஜ். கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கில் யுவராஜ் நிற்க, 'யுவராஜ் பார்ம் அவுட்டில் இருக்கிறார் போல, ஸ்ட்ரைக்கில் வேற இருக்கிறாரே,  கடைசி ஓவரில் 17 ரன்கள் எப்படி சாத்தியம்?' என இந்தியாவே  உச் கொட்டிக்கொண்டிருக்க, தடாலடியாக நான்காவது கியரை தட்டினார் யுவராஜ், கடைசி ஓவரில் முதல் பந்தில் ஒரு பவுண்டரி, இரண்டாவது பந்தில் அமர்க்களமான சிக்ஸ் என  இரண்டே பந்தில் இந்திய  அணியை டிரைவர் சீட்டுக்கு கொண்டு வந்தார் யுவராஜ். பின்னர் ரெய்னா  கடைசி பந்தில் பவுண்டரி விளாச, 140 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் எந்த அணியுமே ஆஸியை வாஷ் அவுட் ஆக்கியதில்லை என்ற சாதனையை,  டோனி தலைமையிலான இந்திய அணி தகர்த்து புது வரலாறு படைத்தது.

dhoni%20new%20pic.jpg

யுவராஜ் சிங் மீது மிகவும், மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர் டோனி.  கிரிக்கெட்டின் மீது யுவராஜ் கொண்ட காதல் அளப்பரியது என்றும்,  யுவராஜிடம் இருந்து உறுதியை கற்றுக்கொண்டேன் என்றும்  சொல்லியிருக்கிறார் டோனி.  கங்குலி தனக்கு நிறைய உதவியதாகவும், தான் விளையாடியதில் சிறந்த கேப்டன் தோனிதான் என்றும் சர்டிபிக்கேட் கொடுத்திருக்கிறார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங்கும் - டோனியும் சேர்ந்தால் எப்போதும் மாஸ்தான். இருபது ஓவர் உலககோப்பையில்,  யுவராஜ் அணியில் இடம்பெறும் பட்சத்தில்,   இந்திய அணியின் பலம் பல மடங்கு கூடும். கோலி, தவான் ,ரோஹித் என முன் வரிசை வீரர்கள் பக்காவாக அடித்தளமிட, முடித்துவைக்க ரெய்னா, யுவி, டோனி என முப்படை இருக்கிறது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

http://www.vikatan.com/news/sports/58406-indian-team-now-strengthened-with-ms-dhoniyuvraj.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.