Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் முன்னாலுள்ள தெரிவுகள் எவை?

Featured Replies

இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இயங்கிய இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் இன்று ஒரு தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன.

இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே, இலங்கையின் இனத்துவ அரசியலும் முளைகொள்ளத் தொடங்கிவிட்டது.

பின்னர் அது மெதுவாக வளர்ந்து, பெரும் இனவாத விருட்சமானது. இந்த இனவாத விருட்சத்தின் விசநிழலின் விளைவுகளைத்தான் கடந்த 67 வருடங்களாக இலங்கை அனுபவித்துவருகிறது. அந்த விளைவுகள் இலங்கையின் தலைமுறைகளை எவ்வாறு பாதித்தது என்பதை விபரிக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில் அது அனைவருக்குள்ளும் அனுபவங்களாக உறைந்துகிடக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில்தான், தனிநாடு ஒன்றிற்காக போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் தலையெடுக்க முடியாதளவிற்கு நிர்மூலமாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தமிழ் சமூகத்தை மிகவும் மோசமாகப் பாதித்தது.

தமிழ் சமூகத்தின் 95 வீதமான மக்கள் உண்மையிலேயே ஒரு தனிநாடு சாத்தியம் என்று நம்பியவர்கள்தான். இந்தப் பத்தியாளரும் அவ்வாறு நம்பியவர்களில் ஒருவர்தான். அதனை இன்று சூழ்நிலை கருதி மறுப்பது, எழுத்துக்கு நேர்மையன்று.

ஆனால் 2009இன் வீழ்ச்சி உலகம் என்பதன் உண்மைப் பொருள் தொடர்பிலும், அதன் நலன்சார் அணுகுமுறை தொடர்பிலும் பல உண்மைகளை எடுத்தியம்பியது.

இது எங்களைப் போன்ற சிறிய மக்கள் கூட்டத்தின் உலகமல்ல என்னும் இருளில் மூழ்கிய உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த உண்மைகள் சுடக் கூடியவை எனினும் அதனை தொட்டுணர வேண்டியது அனைவரது கடமையாகவும் மாறியது.

ஆனாலும் பலருக்கு அது சாத்தியமாக இருக்கவில்லை. சிலர் கற்பனைகளில் சஞ்சரிக்க, சிலரோ யதார்த்தத்தை பேசியவர்கள் மீது சீறிப்பாய்வதை ஒரு தமிழ்த் தேசிய கடமையாக கருதிக் கொண்டனர்.

அவ்வாறானவர்கள் இன்று மிகவும் பலவீனமடைந்துவிட்டனர், ஏனெனில் நீண்டகாலத்திற்கு உண்மைகளின் சூட்டிலிருந்து தப்புதல் அவர்களுக்கும் இலகுவாக இருக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த ராஜபக்ச இந்திய அமெரிக்க பிராந்திய அணுகுமுறைகளுக்கு இடையூறான சக்தியாக மேலெழுந்தார்.

இது ஒரு புதிய சவாலாக மாறியது. 2009 தொடக்கம் 2015 வரையிலான காலப்பகுதியில் எவ்வாறான சம்பவங்கள் எல்லாம் இடம்பெற்றன? 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்தியா உட்பட 29 நாடுகள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. இந்தக் காலப்பகுதியில்தான் ஒபாமா நிர்வாகம் மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொள்வது தொடர்பான கொள்கை மறுசீரமைப்பை செய்கிறது. 2006 இல் உருவாக்கப்பட்ட மேற்படி பேரவையில் இணைந்து கொள்வதை அப்போதைய அதிபர் புஸ் நிர்வாகம் தவிர்த்திருந்தது.

அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, முதல் முதலாக 2011இல் கனடாவின் ஊடாக, ஒரு பிரேரணையை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது.

அந்த பிரேரணை ஓர் உள்ளார்ந்த உரையாடலை ஊக்குவித்தல் என்னும் தொனிப்பொருளில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது பின்னர் மீளெடுத்துக் கொள்ளப்பட்டது.

அணிசாரா நாடுகளின் ஆதரவுடன் அதனை வெற்றிகரமாக பின்வாங்கச் செய்ததாகவே அப்போது ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருந்த தாமரா குணநாயகம் பிரச்சாரப்படுத்தினார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2012இல் அமெரிக்கா இலங்கையின் மீதான பிரேரணையை முன்வைத்தது. அது பின்னர் 24 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இந்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது.

2009இல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த இந்தியா, 2012 இல் ஏன் எதிர்த்து வாக்களித்தது? இதற்கு இடையில் என்ன நடந்தது? ஒரு எளிமையான புரிதல் உண்டு.

அதாவது, அப்போது மத்தியில் காங்கிரசுடன் தி.முக ஆட்சியமைத்திருந்ததால், தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாகத்தான் இந்தியா அவ்வாறானதொரு முடிவை எடுத்தது என்று வாதிடுவோர் உண்டு. இதனை சரியென்றே எடுத்துக் கொள்வோம்.

அவ்வாறாயின் அந்த அழுத்தத்தை ஏன் 2009இல் கொடுக்க முடிந்திருக்கவில்லை? இப்படியான கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டால் தமிழ்ச் சூழலில் நிலவும் தமிழ்நாடு தொடர்பான அதீதமான கற்பனைகள் எந்தளவிற்கு அப்பாவித்தனமானது என்பதை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம்.

2012 இல் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறுதான் கோரியது. ஆனால் ராஜபக்ச அதற்கு செவிசாய்க்கவில்லை.

ராஜபக்சவின் அணுகுமுறை அப்படித்தான் இருக்குமென்பதை அமெரிக்கா அறியாமல் இருந்திருக்கும் என்று நம்பினால் அதுவும் அப்பாவித்தனமானதே. இதனைத் தொடர்ந்து 2013ல், மீண்டும் ஒரு பிரேரணையை அமெரிக்கா கொண்டு வந்தது.

இதற்கும் இந்தியா ஆதரவாகவே வாக்களித்தது. ஆனால் இவ்வாறு இரண்டு பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, 2014இல் கொண்டுவரப்பட்ட அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதிலிருந்து பின்வாங்கியது.

வாக்கெடுப்பில் கலந்து கொள்வதை தவிர்த்திருந்தது. இந்தியாவில் ஓர் ஆட்சிமாற்றம் ஏற்படக் கூடிய புறச்சூழலின் போதுதான், இந்தியா இவ்வாறு வாக்கெடுப்பை தவிர்த்திருந்தது. மேற்படி பிரேரணையையும் வழமை போலவே மகிந்த அரசாங்கம் நிராகரித்திருந்தது.

ஆனால் மேற்படி பிரேரணையில்தான் முதன் முதலாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆணையாளர் நவிப்பிள்ளையின் தலைமையில், நம்பகமான சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான ஆணை உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்தியா மேற்படி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமைக்கு மேற்படி சிக்கலான சரத்தே காரணமென கருதப்பட்டது. இந்த அடிப்படையில்தான் கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை விசாரணைக் குழுவினர் உறுதிப்படுத்தினர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் மீது மீண்டுமொரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.

புதிய அரசாங்கம் குறித்த பிரேரணையை எதிர்க்கவில்லை. மாறாக, அதற்கு இணை அனுசரணையாளராக (Co-sponsor) தன்னை முன்னிறுத்தியது. இதன் மூலம் மனிதவுரிமைகள் சார் அழுத்தங்கள் ஒரு முடிவுக்கு வந்தது. தற்போது குறித்த பிரேரணையில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் விடயங்களை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறான விடயங்கள் ஏன் இந்த இடத்தில் பதிவு செய்யப்படுகிறது என்றால், இவை அனைத்தையும் ஒருங்கு சேர வாசிக்கும் போதுதான் இலங்கையில் என்ன நடைபெறுகிறது, இதில் தமிழர் தரப்பு எந்த இடத்தில் இருக்கிறது? தமிழர் தரப்பால் இந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரம் ஓட முடியும்? – என்றெல்லாம் சிந்திக்க முடியும்.

2012இல் மகிந்த அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதிலிருந்து, சரியாக மூன்று வருடத்தின் பின்னர் மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

இதே போன்றதொரு மூன்று வருடங்களில்தான் பிரபாகரனின் முப்பது வருடகால இராணுவக் கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்டு, அவர் அரசியல் அரங்கிலிருந்தும் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

2005இன் இறுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமடைந்தது, சரியாக 2009இன் நடுப்பகுதியில் யுத்தம் முடிவடைந்தது. 2009இல் மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, 2012இல் மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது தமிழர்களுக்காகவா?

2012ல் மகிந்த அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பிரேரணை ஒன்றுக்கு அனுசரணை வழங்கி, அதனை வெற்றிபெறச் செய்து, படிப்படியாக அதன் வலுவை அதிகரித்துக்கொண்டு சென்ற அமெரிக்கா, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அழுத்தத்தின் தீவிரத்தை சடுதியாக குறைத்துக் கொண்டது, தமிழர்களுக்காகவா?

இதற்கு ஆம் என்பதுதான் பதிலென்று நம்புவோர், தொடர்ந்தும் சுலோங்களில் சுகம்காணும் அரசியல் பாதையொன்றை நாடிச் செல்லலாம்.

நிச்சயமாக இல்லை – அப்படி இருக்கவும் முடியாது என்னும் பதிலை நம்புபவர்கள் யதார்த்தமான வழிமுறைகள் குறித்து சிந்திக்கலாம். ஏனெனில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு உதவக் கூடியது அவர்கள்தம் அறிவாற்றலும், புத்திசாதுர்யமான அணுகுமுறைகளேயன்றி, வேறில்லை.

 

இறுதியான பிரேரணையில் குறிப்பிட்டிருக்கின்றவாறு, தேவையான அரசியல் யாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஏற்கனவே தோல்வியடைந்த 13வது திருத்தச் சட்டத்தை ஓர் அடிப்படையாகக் கொண்டு (கவனிக்க 13வது அல்ல) ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை தொடர்பில் கருமங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

நிச்சயமாக இது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல, ஆனால் தமிழ் மக்களுக்குமான தீர்வு. ஏனெனில் 1987இல் பலம்பொருந்திய பெரிய அண்ணன் தன்னுடைய படைபலத்தை பிரயோகித்து, அப்போதைய ஆட்சியாளரின் குரல்வளையை நெரித்தும் கூட, வடக்கு-கிழக்குக்கென்று தனியான ஓர் அரசியல் தீர்வை கொண்டுவர இயலவில்லை.

தமிழ் மக்களுக்கென்று கொண்டுவரப்பட்ட, பலவீனமுடைய அரசியல் தீர்வு ஒன்றைக்கூட ஒட்டுமொத்த இலங்கைக்குமான தீர்வு முறைமையாகவே அமுல்படுத்த முடிந்தது. இத்தனைக்கும் மறுபுறத்தில் தமிழர்களிடம் ஓர் ஆயுத பலமும் இருந்தது.

இத்தனையிருந்தும் தமிழர் என்னும் நிலையில் அல்லாமல் இலங்கை என்னும் நிலையில்தான் ஒரு புதிய முறைமை உதயமானது.

அன்று வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டமை ஓர் அரசியல் வெற்றியாக இருந்தது. அதற்கு இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக இருந்தன.

அன்று இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையின் தலைமை செயலகம் திருகோணமலையில் நிறுவப்பட்டிருந்த பின்னணியிலும் ஒரு காரணம் இருந்தது.

அது தொடர்ந்தும் இயங்கும் நிலையில் காலப்போக்கில் வடக்கு–கிழக்கு இணைவென்பது நிரந்தரமாகிவிடும் என்பதே அன்றிருந்த புரிதல். அதற்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் பிற்கால நிலைமைகளால் எல்லாம் தலைகீழானது.

இப்போது மீண்டும் தலைகீழானதை நிமிர்த்த வேண்டும் என்பது தமிழர் தரப்பின் ஆசையாக இருக்கிறது. எவ்வாறு? தீர்வு எதுவாக இருந்தாலும் அது வடக்கு கிழக்கு இணைந்த ஓர் அலகு என்னும் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அவ்வாறானதொரு தீர்வின் மூலம்தான் தமிழ் மக்களின் மனக்குறைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். ஒருவேளை அதுவும் சாத்தியமில்லை என்றால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது?

தமிழர் தரப்பின் வேண்டுகோள்கள் என்னவாக இருந்தாலும், இலங்கையின் தற்போதைய நிலையில் அதிக தூரம் தமிழர்களால் ஓட முடியாது என்பதே யதார்த்தம்.

இந்த யார்த்தத்தை சுலோகங்களை கொண்டு தாண்டிச் செல்வது ஒன்றும் கடினமான காரியமல்ல. ஆனால் அவ்வகை சுலோகங்களால் நடைபெறப்போகும் நிகழ்வுகள் எதனையும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

எனவே இவ்வாறானதொரு சூழலில் தமிழர் தரப்பின் முன்னால் உள்ள தெரிவுகள் எவை? நான்கு தெரிவுகள்தான் தற்போது தமிழர் தரப்பின் முன்னாலுள்ளது. இப்பத்தி தமிழர் தரப்பு என்று குறிப்பிடுவதன் கீழ் கூட்டமைப்பிலிருந்து விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்துவம் வகிப்போர் வரையில் அடங்குவர்.

தெரிவு ஒன்று: இந்த நிலைமை விருப்புக்குரியதல்ல, இது நாங்கள் விரும்பும் அனைத்தையும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பதை விளங்கிக் கொண்டு, இந்த யதார்த்தத்திற்குள் குதித்து நனைவது. இதன் மூலம் முடிந்தவரை இன்றைய வாய்ப்புக்களை, உச்சமான பயனை தரக்கூடியவாறு பயன்படுத்துவது. இதற்காக, எங்களுடைய அடிப்படை கோரிக்கைகள் அனைத்தையும் விட்டு விட்டுப்போவது என்பதல்ல பொருள். சூழல் கனியும் போது அதனை கையாள முடியுமென்னும் நம்பிக்கையுடன் பயணிப்பது.

தெரிவு இரண்டு: வழமைபோல் மக்களுக்கு உண்மையான நிலைமையை தெளிவுபடுத்தாமல் மீண்டும், நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாங்கள் எங்கள் உரிமைகளை நிலைநாட்டும் வரையில் ஓயப் போவதில்லை என்று அறிக்கை விடுவது. அதன் பின்னர் வழமைபோலவே அரசாங்க வாகனங்கள் வசதிகளை சாகும்வரையில் அனுபவிப்பது.

தெரிவு மூன்று: நாடாளுமன்ற பதவிகள், மாகாண சபையின் பதவிகள் அனைத்தையும் துறந்து, மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது.

அடையாள உண்ணாவிரதம் அல்லது காணாமல் போனோர்களின் குடும்ப உறுப்பினர்களை திரட்டிக் கொண்டு வீதியில் இறங்கிவிட்டு பின்னர் கலைந்து செல்லுவது போன்ற போராட்டங்களை இப்பத்தி குறிப்பிடவில்லை. பரந்தளவிலான மக்கள் போராட்டங்கள். இலங்கையின் நிர்வாக இயந்திரத்தை முற்றிலும் முடக்கும் வகையிலான போராட்டங்கள்.

தெரிவு நான்கு:: ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து, மீண்டும் சிங்களவர்களை இராணுவரீதியாக தோற்கடிக்க முயற்சிப்பது. அதேவேளை, பாலஸ்தீனத்தை போன்று, ஒரு புறம் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, இண்டிபாதா போன்ற மக்கள் போராட்டங்களையும் முன்னெடுப்பது.

இதில் முதலாவதை கையாண்டால் தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை கிடைக்கும். இரண்டாவது, அரசியல்வாதிகளுக்கு மட்டும் நன்மைகளை வாரி வழங்கும். மூன்றாவது மக்களுக்கான உயர்ந்த ஒரு தீர்வை கொண்டுவருவதற்கான புறச் சூழலை கனியவைக்கும்.

நான்காவது, மிகவும் ஆபத்தானது, ஆனால் பெரிய அழிவுகளை கொண்டுவரக் கூடியது. இதில் ராஜதந்திர வழிமுறையில் இயங்க முடியுமென்று எவரேனும் கூறுவார்களாயின், அதற்கான வாய்ப்பு ஓரளவில் முதலாவதில்தான் உண்டு.

இந்த நான்கில், தமிழர் தரப்பின் தெரிவு எதுவாக இருக்கப் போகிறது.

http://thuliyam.com/?p=13054

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.