Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையான சுதந்திரம்?

Featured Replies

உண்மையான சுதந்திரம்?
 
 

article_1454648636-photo.jpgமொஹமட் பாதுஷா

நமது தேசத்தின் இன்னுமொரு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடியிருக்கின்றோம். தேசிய கீதம் இசைக்க விடப்பட்டது. கொடிகள் பறக்கவிடப்பட்டன. வாழ்த்துச் செய்திகள் பிரித்தானியாவில் இருந்தும் வந்து குவிந்தன. மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எல்லாமுமாக 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன.

ஆனால், உண்மையான சுதந்திர உணர்வுடன் இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் இந்த சுதந்திர தினத்தை அனுபவித்திருக்கின்றார்களா அல்லது ஓர் அரசாங்க, வர்த்தக விடுமுறை நாளாக இதை உணர்ந்திருக்கின்றார்களா என்ற ஐயப்பாடு இருக்கவே செய்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை நாள், அத்தியாவசிய சேவை நிறுவனங்களில் கடமையாற்றும் தனியார் ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுக்குரிய நாள் என்பதற்கப்பால். இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் சுதந்திர தினத்தின் தார்ப்பரியத்தை அனுபவித்திருக்கின்றார்களா என்பதும் மிகப் பெரிய சந்தேகம்தான்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி சூழல், ஒப்பீட்டளவில் சௌஜன்யமான ஒரு வாழ்க்கைச் சூழலை, பொதுவாக எல்லோருக்கும் வழங்கியிருக்கின்றது. இருப்பினும், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 6 தசாப்தங்கள் கடந்த பின்னரும் தேசியக் கொடியின் உள்ளடக்கத்திலும், தேசிய கீதத்தை இசைப்பதிலும் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது. 'இது உண்மையான சுதந்திர தினம் இல்லை' என்று ஒரு கடும்போக்கு அமைப்பு அறிக்கை விட்டிருக்கின்றது. சுதந்திர தினத்தை வேறொரு கோணத்தில் பார்க்கின்ற இவ்வமைப்பு, வேறு மாதியான சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சில பிசுபிசுப்புகளோடு ஹோமாகமவில் நடத்தியுள்ளது. அண்மைக்காலமாக ஐந்தாறு இனவாத அமைப்புக்கள், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற ஒரு பின்புலத்திலேயே இதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது.

காதலர் தினம், ஆசிரியர் தினம், முதியோர் தினம், மகளிர் தினம் போல சுதந்திர தினம் என்பது ஒரு தொகுதி மக்களுக்கும் மட்டும் உரித்தான ஒன்றல்ல. அதுமாத்திரமன்றி, மேற்குறிப்பிட்ட தினங்களைப் போன்று ஒரு நாட்டின் சுதந்திர தினத்தைப் பத்தோடு பதினோராவது விஷேட நாளாக கொண்டாடிவிட்டு போய்விட முடியாது. ஒரு நாட்டின் முழுமையான சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட பிரஜையாலும் உண்மைக்குண்மையாக உணரப்பட வேண்டும்.

அது, அவனது அடிமனதில் இருந்து மேலெழ வேண்டும். வருடத்தில் ஒரு நாளில் அது கொண்டாடப்படுகின்றது என்றாலும் 365 நாட்களும் அவன் சுதந்திர உணர்வைப் பெற்றவனாக இருப்பது இன்றியமையாதது ஆகும். ஆனால், வெள்ளையர்களிடம் இருந்து நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை - இனவாதிகள், பயங்கரவாதிகள், ஏன் ஆட்சியாளர்களிடம் கூட சிறியதும் பெரியதுமாக பறிகொடுத்து வந்திருக்கின்றோம். இந்நிலைமையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாயினும், அது முற்றாக மாறவில்லை என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.

இலங்கையின் சுதந்திரத்தை தனியே சிங்களவர்கள் மட்டும் போராடிப் பெற்றுக் கொள்ளவில்லை. எல்லா இனங்களையும் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள், போராட்ட குணம் கொண்டவர்களின் முழுமுதற் பங்களிப்புடனேயே சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பின்னரான அரசியலில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். அத்துடன் அக் காலத்தில் இனவாத சிந்தனை இருக்கவில்லை.

இது எல்லோருக்குமான நாடு என்ற உணர்வும் நாட்டுப் பற்றுமே மேலோங்கியிருந்தது. இதன்காரணமாகவே, பொது எதிரியை எதிர்கொள்வதற்கான ஒன்றுதிரண்ட பலமும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், தனிச் சிங்கள சட்டம், பண்டாரநாயக்க காலத்தில் இனவாதத்துக்கு அடித்தளமிடப்பட்டமை போன்றவற்றுக்கு பின்னர் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடு மெல்ல மெல்ல விரிவடைய ஆரம்பித்து விட்டது எனலாம்.

அந்தப் பாகுபாட்டை பின்வந்த அரசியல்வாதிகள் தமது சுயலாபத்துக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது மட்டுமன்றி, தேசிய ரீதியில் இனங்களுக்கு இடையில் பிளவுகளையும் உண்டுபண்ணி விட்டனர். இதில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு பெரும் பங்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சிறு பங்கும் இருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தின் போக்குகளும் அதன் அழிவுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல என்றாலும், அடிப்படையில் அதனைத் துவக்கி வைத்தது சிங்கள மேலாதிக்க சிந்தனை என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

இதன் அடிப்படையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிங்கள மக்கள் மட்டுமன்றி சிறுபான்மையினரும் கூட உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை. வெளியில் நடமாடக் கூட சுதந்திரமற்ற ஒரு தேசத்திலேயே வாழ வேண்டியிருந்தது.

அதற்குப் பிறகு யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் சுதந்திர உணர்வொன்று இலேசாக உருவானது. ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த மனவருத்தம் இருந்தாலும், இனி அழிவுகள் குறையும், அமைதி நிறையும் என்ற ஓர் ஆறுதல் இருக்கவே செய்தது. இனி உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகுதான் தெரிந்தது, இன்னும் கண்டுகொள்ளப்படாத, பயங்கரவாதத்தை விடவும் மிகக் கொடூரமான பல 'வாதங்கள்' இருக்கின்றன என்பது. பேரினவாதம், தேசியவாதம், பௌத்தவாதம் மற்றும் நாட்டுப் பற்று என்பவையே அவையாகும். இதில் மிகப் பெரிய இடத்தை இனவாதம் வகிக்கின்றது. இவையெல்லாம் வேறு வேறு பெயர்களால் அறியப்பட்டாலும் எல்லோருடைய இறுதி இலக்கும் ஒன்றாகவே இருக்கக் காண்கின்றோம்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், காவியுடையிலும் மாறுவேசங்களிலும் பேரினவாதம் ஆடிய ஆட்டத்தை முழு உலகமுமே கண்டு அதிர்ந்தது. இதனால் உண்மையான சுதந்திரத்தை சிறுபான்மை மக்கள் இழந்து நின்றனர். நாட்டில் நல்லாட்சி ஏற்பட்ட பிறகு, அரசியல் ஸ்திரத்தன்மை, சிறந்ததொரு அரசியல் சூழல் என்பன ஏற்பட்டனதான் என்றாலும் மேற்குறிப்பிட்ட இனவாதம் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கின்றது என்பதே நிதர்சனம்.

யுத்தத்துக்குப் பிற்பாடு கொடிகட்டிப் பறந்த இனவாதம், நல்லாட்சியின் வருகையோடு காணாமல் போய்விடும் என்று நம்பியிருந்த முஸ்லிம், தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திர உணர்வு அதிகரித்திருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் முழுமையாக அவ்வுணர்வு கிடைத்திருப்பதாக குறிப்பிடுவது கடினமானது.

முக்கியமாக முஸ்லிம்களின் விடயங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கும் பொது பலசேனா அமைப்புக்கு மேலதிகமாக சிகல ராவய, ராவண பலய, சிங்கள தேசிய முன்னணி போன்றவற்றுடன் புதிததாக சிங்ஹலே என்ற அமைப்பும் முளைத்திருக்கின்றது. நல்லாட்சி வந்த பிறகு சிறுபான்மை மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டிருப்பதை எக்காரணங் கொண்டும் மறுக்க முடியாது.

அந்த நம்பிக்கையை அரசாங்கமும் நீதித் துறையும் காப்பாற்றி வருகின்றது. இனவாதத்தின் காதைப் பிடித்து ஜனாதிபதி திருகிக்கொண்டிருக்க, அவ்வப்போது பிரதமர் குட்டு போட்டுக் கொண்டிருக்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, அடங்காத் தினவெடுத்து அலைந்து திரிந்த பொது பலசேனாவின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்ட சிங்கள ராவய சார்பு பிக்குகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி மீது சிறுபான்மை மக்களுக்கு இருந்த 'பாதுகாப்பு உணர்வு' இதனால் அதிகரித்திருக்கின்றது. எவ்வாறாயினும் இதன் எதிர்விளைவுகள் எவ்வாறிருக்குமோ என்ற அச்சத்துடனேயே சிறுபான்மை மக்கள் நேற்றைய சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கின்றனர்.

இனவாதிகளுடன், மஹிந்த ராஜபக்ஷ போன்ற அரசியல்வாதிகளும் ஒத்துஊதிக் கொண்டிருப்பது மாத்திரமன்றி, நாட்டின் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையும் மேற்குறிப்பிட்ட அச்சத்துக்கு காரணமாகி இருக்கின்றது. சிறுபான்மை மக்களின் இனத்துவ அடையாளம் இல்லாதவாறு திரிபுபடுத்தப்பட்ட தேசியக் கொடிகள் ஆங்காங்கே பறக்க விடப்பட்டுள்ளன. சில காலத்துக்கு முன்னர் அமைச்சர்களே இக் கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடாத்திய போது, அது தவறுதலாக நடந்து விட்டது என்று சொன்னார்கள்.

இன்று கறுப்புச்சந்தையில் இது விற்பனைக்கு வந்துள்ளது. பொதுபலசேனாவின் ஒட்டுண்ணியாக இருக்கும் அமைப்புக்களே இக் கைங்கரியங்களை மேற்கொள்கின்றது. ஆனால், போலி தேசியக் கொடியை விற்ற - பறக்கவிட்ட யாரும் சட்டத்தின் பிடிக்குள் சிக்கியதாக கடந்த சில தினங்களுக்குள் செய்திகள் வரவில்லை.

சமகாலத்தில், தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு சிங்கள கடும்போக்கு சக்திகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் தமிழில் பாடுவதற்கு அனுமதி அளித்தது. இதனால் முன்பிருந்த சர்ச்சைகள் அடங்கிப் போயின. ஆனால் இப்போது மீண்டும் இதை தூக்கிப் பிடிக்கின்றனர். இதனை தெளிவுபடுத்துவதற்காகவே சிங்ஹலே அமைப்பு ஹோமகமவில் நேற்று  நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இனவாத அமைப்புக்கள் மட்டுமன்றி சில தோல்விகண்ட அரசியல்வாதிகளும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை எதிர்க்கின்றனர்.

முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, 'இன்று தமிழில் பாடினால் பின்னர் அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் பாட வேண்டுமென்று கேட்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய கீதம், தேசியபற்றை ஒருவனுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் அவன் அதை உணர்ந்து பாட வேண்டும். எனவே, அது அவனுக்கு புரிகின்ற மொழியில் இருக்க வேண்டும் என்பதுகூட தெரியாத அளவுக்கு, இனவாத சிந்தனை சிலரை முட்டாளாக்கியுள்ளது.

இலங்கையின் தேசிய கீதத்தை ஆனந்தசமரகோன் என்பவரே சுயமாக எழுதினார் என்பது  பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால், உலகப் புகழ்பெற்ற சிறுபான்மையின கவிஞரான ரவிந்திரநாத் தாகூரே இலங்கையின் தேசிய கீதத்தின் முக்கிய வரிகளை எழுதியதாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட ஒரு தகவல் இருக்கின்றது. ரவிந்திரநாத் தாகூர், அடிப்படையில் ஒரு பின்தள்ளப்பட்ட இனக்குழுமத்தை சேர்ந்தவர். அவரிடம் சிலகாலம் மாணவராக இருந்த ஆனந்த சமரகோனுக்காக ரவிந்திரநாத் தாகூர் 'நம நம ஸ்ரீலங்கா மாதா' என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை தனது தாய்மொழியான பெங்காலியில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனந்த சமரகோன் அந்த வரிகளை 'நமோ நமோ மாதா' என்ற ஆரம்ப வரிகளுடன் சிங்களத்துக்கு மொழி பெயர்த்து பாடலாக்கியதாக கூறப்படுகின்றது. இருப்பினும் ஒரு தேசிய கீதமாக அன்றி தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாடலாகவே அன்று அது ஒலிபரப்பப்பட்டது. 1951 நவம்பர் 22ஆம் திகதியே இப்பாடலுக்கு அரசாங்கம் தேசிய கீத அங்கிகாரமளித்தது.

இக்காலப்பகுதியில் 2 பிரதமர்களை நாடு இழந்திருந்தமையால் 'நமோ நமோ மாதா, அப ஸ்ரீலங்கா' என்ற ஆரம்ப வரிகள் அபசகுணம் கொண்டவை என்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தற்போதுள்ளவாறு 'ஸ்ரீலங்கா மாதா அப ஸ்ரீலங்கா' என்றவாறு  அப்பாடல் திருத்தப்பட்டது. ஆனால், ஆனந்த சமரக்கோன், பாடலின் ஆரம்ப வரிகள் மாற்றப்பட்டதை கடுமையாக ஆட்சேபித்தார். 1962ஆம் ஆண்டு அதிக

தூக்கமாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும்போது, 'எனது பாடல் சிரச்சேதம் செய்து ஊனமாக்கப்பட்டுவிட்டது' என்று குறிப்பொன்றை எழுதி வைத்திருந்தார்.

ஆக மொத்தத்தில், இப்போது தேசிய கீதத்தை கொண்டாடுகின்ற சக்திகள் அதற்கு அடிப்படை பங்களிப்பு வழங்கிய சிறுபான்மையின கவிஞரான  ரவிந்திரநாத் தாகூரை வரலாற்றில் இருட்டடிப்புச் செய்திருக்கின்றன. ஆனந்தசமரகோனை மறைமுகமாக தற்கொலைக்கு தூண்டியிருக்கின்றன. இவ்வளவும் செய்தவர்களுக்கு, சிறுபான்மை மக்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் வழங்கிய பங்களிப்பை, நன்றி மறப்பதும் அதன்மூலம் அவர்களது உண்மையான சுதந்திர பெரிய விடயமல்லவே.

- See more at: http://www.tamilmirror.lk/165378/%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE-#sthash.ypPiCWtk.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.