Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கை முறை மண், பயிர் பாதுகாப்புத் தகவல் தொகுப்பு

Featured Replies

நிலத்தாய்க்கும் போர்வை தேவை!

E_1457506853.jpeg

தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான். களைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மண்ணாக மாற்ற வேண்டும்.

அதில் ஒரு வகை தான் மூடாக்கு. பயிர் கழிவுகளை நிலத்துக்கு திருப்பியளிப்பது. என் நிலத்தில் உள்ள தென்னை மட்டை, ஓலை ஆகியவற்றை வெளியே விற்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட இயந்திரத்தில் இவற்றை அரைத்து நிலத்திலேயே தூவுகிறேன். மாதம் ஒருநாள் 2 மணி நேரம் அரைத்தால் போதும். மூன்று மாதத்தில் இவை மட்கி விடும்.

மட்கிய தென்னைமட்டை கழிவுகளில் மண்புழு தானாகவே உருவாகிறது. மண் வளப்படுகிறது. தென்னைக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது. மண்புழுவை சாப்பிட ஆயிரம் நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். இவை ஒரு நாளைக்கு 50 முதல் 100 முட்டை வரை இடுகிறது. இவற்றின் கழிவு தென்னைக்கு உரமாக பயன்படுகிறது. 
கோழிகள் தென்னையில் கரையான் அரிக்காமல் பார்த்து கொள்கிறது. தென்னைக்கு இடையில் ஊடுபயிராக செம்பருத்தி பயிரிட உள்ளேன். இதற்காக அரிமளத்தில் 10 ஆயிரம் நாற்று தயார் நிலையில் உள்ளது. தென்னை விவசாயிகள் லாபம் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதே என் விருப்பம். மண்ணை பாதுகாக்க மண்புழுவை நாம் வளர்த்தால், மண்புழு நம்மை காக்கும், என்றார். ஆலோசனைக்கு... 89032 24222.

டி.செந்தில்குமார், காரைக்குடி.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29749&ncat=7

 

பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!

செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி. வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 - 6 அடி உயர குச்சிகளை "டி' வடிவில், கவட்டை வடிவில் கட்டினால் 
பறவைகள் உட்கார முடியும். 
இதன் மூலம் வயலில் உள்ள தாய்ப்பூச்சி, புழு மற்றும் கூட்டுப்புழுக்களை பறவைகள் பிடித்து உண்ணும். இரவில் உலா வரும் ஆந்தை, கூகை, கோட்டான்களும் அமர்ந்து எலிகளை பிடித்து உண்ணும். இதற்கு ரசாயன மருந்தோ, வேறு செலவுகளோ தேவையில்லை. 
ஏக்கருக்கு 20 இடங்களில் இதுபோன்ற பறவை இருக்கைகளை நிரந்தரமாக கட்டி வைத்தால் அறுவடை காலத்தில் சேதத்தை தவிர்க்கலாம். 
காலி டப்பாக்கள், பெரிய டின், பயன்படாத சைக்கிள் டயர், கார் டயர், கம்பு, மருந்து டப்பாக்களிலும் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டால் பறவைகள் அவற்றை கூடுபோன்று பயன்படுத்தும்.
-முனைவர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், 
ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டி வளாகம், உடுமலைபேட்டை. 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29488&ncat=7

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நிலத்தின் ரசாயன தன்மையை மாற்றணுமா

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்வது. தமிழகத்தில் இந்த பழைய முறை புதிய மாற்றத்தை அளித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நானும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் கடந்த 9 ஆண்டுகளாக 24 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன் என்கிறார் மதுரை வாடிப்பட்டி திருவாலவாய நல்லூரைச் சேர்ந்த விவசாயி பார்த்தசாரதி.இயற்கை விவசாய அனுபவங்களை கூறியதாவது: 
8 ஏக்கரில் நெல், 2 ஏக்கரில் காய்கறி, 7 ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. இரண்டு கிணறு, 2 போர்வெல் மூலம் தண்ணீர் வசதியும் உள்ளது.

7 ஏக்கரில் 600 தென்னை மரங்கள் உள்ளன. 60 நாட்களுக்கு ஒரு முறை 8,000 தேங்காய்கள் எடுக்கின்றேன். நான்காண்டுகளாக சரியான மழையில்லாததால் தென்னைகளை காப்பாற்றுவதே கஷ்டம். அந்த சூழ்நிலையில் இந்த விளைச்சல் போதும் தான். கடுமையான வறட்சியை தாங்கியதற்கு ஒரே காரணம் மூடாக்கு முறையே. தென்னை மட்டைகளை மரங்களுக்கு கீழே மூடுவதால் வெயிலிலும் நிலம் குளிர்ச்சியாக இருக்கும். 

நிலத்தின் தன்மை மற்றும் வீரியத்தை குறையாமல் பாதுகாக்க மாற்றுப்பயிர் செய்ய வேண்டும். 2 ஏக்கர் நிலங்களாக வேறு வேறு இடங்களை தேர்ந்தெடுத்து புடலை, கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் சாகுபடி செய்கிறேன். கால்நடை தீவனங்களான கோ4, வேலிமசால் வளர்க்கிறேன். இயற்கை காய்கறிகள் என்பதால் மதுரையில் இயற்கை அங்காடி அமைத்து விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயிகளும் இங்கு வந்து காய்கறிகளை கொடுக்கின்றனர்.

என்னுடைய நிலத்தில் 8 ஏக்கரில் ஏடிடி45, நாட்டு நெல் கவுனி, சீரகச் சம்பா நெல் ரகங்களை பயிருட்டுள்ளேன். தற்போதைய விலை நிலவரப்படி ஏடிடி45 ரூ.60 முதல் ரூ.70 வரையும், கவுனி ரூ.150, சீரகசம்பா ரூ.100க்கும் விற்பனை ஆகிறது. வறட்சியை தாங்கும் நெல்ரகங்கள் என்பதால் காய்ச்சலும், பாய்ச்சலுமாக வாரம் ஒருமுறை தண்ணீர் விடுகிறேன்.
ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கு இயற்கை உரம் தான் முக்கியம். 

10 மாடுகள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இயற்கையாக தயார் செய்கிறேன். ஜீவாமிர்த கரைசலை வாரம் ஒருமுறை தண்ணீரில் கலந்து தெளிக்கிறேன். இதனால் நெல்லுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சீராக சென்றடைகிறது. இதனால் களைகள் வளரவே இல்லை, எந்தநோயும் நெற்கதிர்களை தாக்கவில்லை. நெல்லாக விற்பனை செய்வதில்லை. அரிசியாக மாற்றி மொத்தமாகவும், சில்லரையாகவும் கொடுக்கின்றேன்.

நம்பிக்கையுடன் சரியான முறையில் கையாண்டால் விளைச்சல் பாதிக்காது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கத் தேவையும் இல்லை. அதற்கான செலவும் இல்லை. இதற்கு விவசாயிகள் செய்யக்கூடிய ஒரே வேலை, மாடுகள் வளர்ப்பது தான். ரசாயன உரத்தில் இருந்து விடுபட நினைத்தால் நிலத்தை ஆறு முறைக்கு குறையாமல் நன்றாக உழ வேண்டும். இயற்கை குப்பைகள் கலந்த புதிய மண்ணைக் கலந்து உழுத பிறகு 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும். ஒரு விதை, இரு விதை, காய்கறிகளின் விதைகளை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் அவற்றை மடக்கி உழ வேண்டும். இதனால் மண்ணுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ரசாயன உரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

இரு ஆண்டுகளில் நிலத்தின் தன்மை மாறி மீண்டும் பழைய மகசூல் இயற்கை முறையில் கிடைக்கும் என்கிறார் பார்த்தசாரதி. தொடர்புக்கு 99425 06253
-மு.ரமேஷ் குமார், மதுரை.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29333&ncat=7

தென்னை நார்க்கழிவில் மட்கும் உரம்: பொருளாதாரத்தில் விவசாயிக்கு பயன்

தோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.
மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது: தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது நார்க்கழிவுகள் கிடைக்கின்றன. 
இதிலுள்ள மூலப்பொருட்களால் தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது. நார்க்கழிவில் உள்ள தழைச்சத்து விகிதத்தை குறைக்க, லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைக்க, தென்னை நார்க்கழிவு மக்க வைக்கப்படுகிறது. நன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்த்தால், மண் சத்துக்களை கிரகித்து சிதைவடையும். அதனால் நிலத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயிர் பாதிப்படையும்.

நார்க்கழிவு கம்போஸ்ட்: தென்னை நார்க்கழிவு மட்கும் உரம் தயாரிக்க, நாரற்ற தென்னை நார்க்கழிவுகளை சேகரிக்க வேண்டும். ஏனெனில் இந்த நார்கள் மற்ற கழிவுகளையும் மக்குவதில் இருந்து தாமதப்படுத்தும். எனவே மட்குவதற்கு முன் நார்களை பிரித்து எடுக்க வேண்டும். மட்கும் உரம் தயாரிக்க தென்னை மரங்களுக்கு இடையிலோ அல்லது ஏதேனும் ஒரு மர நிழலையோ தேர்வு செய்ய வேண்டும். 
தரை நன்கு சமப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உரக்குவியலை தரை மட்டத்திற்கு மேலே அமைக்க வேண்டும். நார்க்கழிவை மட்க வைக்க 60 சதவிகிதம் ஈரப்பதம் அவசியம். அதே சமயம் கழிவில் இருக்கும் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிட வேண்டும்.

மக்கிய உரம் முதிர்வடைதல்: பொதுவாக கழிவுகள் 60 நாட்களில் மக்கி உரமாகி விடும். இதன்படி கழிவுகளின் கொள்ளளவு குறைந்து அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும். மக்கிய கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி அதன் துகள்கள் சிறியதாக மாறி இருக்கும். மக்கிய உரத்தில் இருந்து மண் வாசனை வரும். 
மக்கிய உரத்தை சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். மக்கிய உரத்தில் உள்ள சூட்டை தணிக்க குவியலை கலைத்து, நிலத்தில் நன்றாக பரப்ப வேண்டும். இவ்வாறு உரத்தை காற்று உள்ள நிழலான இடத்தில் குவியலாக இட்டு பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும்.

நார்க்கழிவின் பயன்பாடுகள்: தென்னை நார்க்கழிவு அதன் எடையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான நீரை ஈர்த்து வைத்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற பயிர்ச்சத்துக்கள் உள்ளன. எனவே இது ஒரு செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றுகிறது. மண் வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் தென்னை மட்கும் நார்க்கழிவை வாங்கி அதிகளவு நிலத்தில் இடுவது கடினம். எனவே விவசாயிகள் சொந்தமாக தயாரித்து வயலில் இட்டு, அதிக விளைச்சல் பெறலாம் என்றார்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29335&ncat=7

  • தொடங்கியவர்

பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு பசுமாடு தேவையா

இயற்கை விவசாய உத்தியான பஞ்சகவ்யா தயாரிப்பது மிக எளிது. அதற்கு பசுமாடு தான் தேவை. அதுவும் நாட்டு மாடு தான் நல்லது என்ற பிரசாரம் செய்து சில நாட்டு மாடு வியாபாரிகள் நல்ல காசு பார்த்து வருவது அறியாமை. ஒவ்வொரு விலங்கும் கழிவினை வெளியிடுவது இயற்கை. இதில் நாட்டு மாடு வேற மாதிரி கோமியம் தரும். வேற மாடு வேஸ்ட் என்று கூட பிரச்னை செய்வது நல்லதல்ல. மாடுகள் உண்ணும் உணவில் எந்த மாறுபாடும் நாம் காட்டாத போது கழிவு எப்படி வேறுபடும்.

ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் பசுமாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கன்றுக்குட்டிகளாவது வளர்த்து வரலாம். அல்லது ஆடு வளர்க்கலாம். அருகில் உள்ள விவசாயிகளிடம் விலை கொடுத்து கூட பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர் வாங்குவது பெரிய கஷ்டமான வேலையே இல்லை.
வீட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள கடைக்குப்போய் மருந்து அதிக விலை கொடுத்து வாங்க மனம் உள்ளவருக்கு அருகில் கிடைக்கும் கழிவினை வாங்குவது ஒன்றும் பெரியதாக தென்படாது. மிகவும் எளிய பொருள் தான் பஞ்சகவ்யா. அது தயாரித்திட பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், தயிர் 1 லிட்டர், நெய் - 1லிட்டர், நாட்டு சர்க்கரை 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண் தேவை. பச்சை பசு சாணி 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1 லிட்டரை கலந்து பிசைந்து ஒரு வாயகன்ற மண்பானையில் 4 அல்லது 5 நாட்கள் வைக்கவும். இதை தினம் இருமுறை அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு கலக்கவும்.

ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை நன்கு கலக்கி விடவும். கம்பி வலையில் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருமுறையோ அல்லது பல முறையோ நன்கு கலக்கி விடவும். இதனால் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு அபரிதமாக நுண்ணுயிர்கள் உற்பத்தி ஆகும் வாய்ப்பும் 15 நாளில் பஞ்சகவ்யா ரெடியாகும் வாய்ப்பும் உள்ளது. இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைத்து கெட்டியான மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வர வேண்டும்.

10 லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து கொண்டு இலைவழி உரம் அல்லது பயிர்க்கு, நேரடியாக ஊற்றுதல் மூலம் பலன்பெறலாம். கைத்தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்தவும். விசைத் தெளிப்பானின் அடைப்பானையுடன் குழாயின் நுனிப்பகுதியையும் பெரிதாகச் செய்து கொண்டால் அடைப்பின்றி தெளிப்பு சீராக வரும் பஞ்சகவ்யா 75 சதம் உரமாகவும் 25 சதம் பூச்சி மற்றும் நோய்கொல்லி மருந்தாகவும் வேலை செய்து நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர், உடுமலை, திருப்பூர்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28921&ncat=7

மண்புழுக்குளியல் நீர்

E_1452579604.jpeg

மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைத்த பயிர் கழிவுகளை உண்டு நன்மை செய்யும் உரமாக்குவது நாம் அறிந்ததே. பயிர் வளர ஊக்கியாக செயல்பட மண்புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இந்த திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்தி தான் மண்புழுக்குளியல் நீர் தயாரித்தல் ஆகும். அதற்கு ஆங்கிலத்தில் வெர்மிவாஷ் என்ற பெயர் உள்ளது. மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து அதன் அடியில் சிறு துளைகள் மூன்று அல்லது நான்கு இட வேண்டும். இதன் மூலம் நீர் வடியும் வண்ணம் செய்ய முடியும்.

மண்புழு உள்ள பானைக்கு மேல்புற நீர் நிரம்பிய கலயம் அமைத்து அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போல மூன்று கம்புகளை கட்டி தொங்க வைத்து சிறு துளை ஏற்படுத்தி சொட்டு சொட்டாக வரவிட வேண்டும். ஒரு இரவு முழுவதும் இவ்வாறு சொட்டுச் சொட்டாக விழும் நீரானது மண்புழுவின் உடலையும் மண்புழு ஏற்படுத்திய சுரங்கங்களையும் கழுவியப் பானையின் அடிப்புறமாக துளைகள் வழியே வெளியேறும். இப்படி வெளியேறும் நீரே மண்புழுக்குளியல் நீர் எனப்படும் டீத்தண்ணீர் மாதிரி உள்ள நீராகும் பானைக்கு அடியில் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்து பயன்படுத்தலாம்.

அதாவது ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நீரில் கலந்து செடிகளுக்கு அடியில் ஊற்றியும் இலை வழியாக தெளித்தோ அல்லது சொட்டுநீர் பாசன முறையில் நீரில் கரைத்து அனுப்பியும் நல்ல லாபம் பெறலாம். தயாரிக்க முடியாதவர்கள் தனியார் வசம் வாங்கியும் பயன்படுத்துவது நல்லது. காய்கறிகள், பழங்கள், தென்னை, மலர்கள், மலைத்தோட்டப்பயிர்கள் எல்லாம் நல்ல மகசூல் தர இது பிரதி மாதம் தெளிப்பது நல்லது. மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர்,
உடுமலை, திருப்பூர்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28621&ncat=7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.