Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய பயண அனுபவங்கள் சில...

Featured Replies

மலேசியாவில் ஒரு நாள் (பாகம் 1)

நீண்ட நாட்களாகப் போக வேண்டும் என்று நினைத்து வேலை காரணமாகத் தள்ளி தள்ளி சென்று கடந்த வாரம் மலேசியா சென்று வந்தேன்.

சிங்கபூருக்கு மிக அருகில் இருப்பதால் இங்குள்ளவர்கள் பல முறை சென்று வந்துள்ளார்கள் என்பதால், நான் இன்னும் சென்றதில்லை என்று கூறினால் அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

சிங்கபூருக்கும் மலேசியாவிற்கும் இடையே ஒரு பாலம் தான் உள்ளது. இங்கே இருந்து செல்லும் போது பாலத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூர் இமிகிரேசன் முடிவில் மலேசியா இமிகிரேசன். இந்தப் பாலம் தான் இரு நாடுகளையும் பிரிக்கிறது.

ஒரு நாள் தான் செல்ல முடிந்தது அதனால் அதிக இடங்கள் செல்ல முடியவில்லை. சிங்கப்பூர் ல் இருந்து பேருந்து ரயில் கப்பல் விமானம் மூலம் செல்லலாம்.

விமானம் மூலம் சென்றால் எதையும் காண முடியாது மற்றும் செலவு பிடிக்கும் என்பதால் பேருந்தில் செல்வதாக முடிவு செய்து நானும் என் நண்பரும் சென்றோம்.

மலேசியா நெடுஞ்சாலை மிகச் சிறப்பாக உள்ளது, சாலைகள் மிகத் தரமாக இருந்தது இரு புறமும் மரங்கள் மலைகள் என்று இயற்கை சூழ்ந்தது. ஓட்டுனர் நகரை தாண்டியவுடன் விசை மிதியில் குச்சி வைத்து விடுவார் என்று நினைக்கிறேன் 

வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை போக்குவரத்து நெரிசல் இல்லை, பிரேக் போடவில்லை ஒரே வேகத்தில் நிற்காமல் போய்க் கொண்டு இருக்கிறது.

ஆனால் கோலாலம்பூர் (அனைவரும் சுருக்கமாக K L என்று அழைக்கிறார்கள்) அடைந்தவுடன் போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் ஆகி விடுகிறது, நண்பர் போக்குவரத்து நெரிசல் பற்றிக் கூறி இருந்தாலும் நான் நம்பவில்லை ஆனால், பார்த்தவுடன் தான் அது உண்மை என்று தோன்றியது.

அங்குக் கார்கள் அதிகமாக உள்ளன. சுமார் ஒரு கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேல் போக்குவரத்து நிற்கிறது. வழியில் அதிக அளவில் சுங்க சாவடிகள் இருந்தன.

சிங்கையில் இருந்து 6 மணி நேர பேருந்து பயணத்தில் கோலாலம்பூரை அடையலாம்

கோலாலம்பூர் எந்த ஒரு பில்ட் அப் ம் இல்லாமல் வந்தது போல இருந்தது.

பொதுவாக ஒரு பெரிய நகரத்தை அடையும் போது வழியில் அதிக அளவில் கடைகள், நெருக்கமான கட்டிடங்கள், வண்ணமயமான சுற்றுப் புறம் என்று எதிர்பார்த்தேன்.

அவை எல்லாம் நான் சென்று அடைந்த இடத்தில் இருந்தது ஆனால், வழியில் அவ்வாறு பார்த்ததைப் போல நினைவில்லை.

டைம் ஸ்கொயர் என்ற இடம் அருகில் தங்கி இருந்தோம், அதன் அருகிலும் சுற்று புறங்களிலும் ஏகப்பட்ட கடைகள் வண்ணமயமான இடங்கள் (நாம் மலேசியா விளம்பரங்களில் காண்பது போல), ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்தார்கள்.

அங்கே உள்ள பிரபலமான BB பிளாசாவில் அனைத்து வகைப் பொருட்களும் கிடைக்கின்றன, மிகப் பெரிய இடம் மற்றும் அதிகளவில் கடைகள்.

IMG_0907.JPG

தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் இருக்கிறார்கள், பெரும்பாலும் தமிழ் பேசும் நபர்களையே அதிகளவில் கண்டோம், வேறு நாட்டில் இருப்பது போன்ற உணர்வே இல்லை.

அவர்கள் பேசும் தமிழ் கொஞ்சம் வித்யாசமாக உள்ளது, அப்படியா! என்பதற்கு ஆமாவா! என்று கூறுகிறார்கள்.

தமிழர்கள் அதிகளவில் இருந்தாலும் தமிழ் அங்கே சிங்கையைப் போல ஆட்சி மொழிகளுள் ஒன்றல்ல.

அங்கு மலாய் மொழி பேசப்படுகிறது மற்றும் அதுவே அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆங்கிலத்தை எங்கும் காண முடியவில்லை.

ஒரு சில இடங்கள் தவிர. இதனால் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிய சிரமமாக உள்ளது.

அவர்கள் ஜப்பான் போல அவர்கள் மொழிக்கே முன்னுரிமை தருக்கிறார்கள். இதனால் ஆங்கிலத்தில் பேச மிகவும் சிரமப்படுகிறார்கள்.

IMG_0903.JPG

அங்கே டாக்சி, காஸ் ல் அதிகளவில் ஓடுகிறது, பெட்ரோல் போடும் இடங்களில் காஸ் நிரப்ப வசதி உள்ளது.

போக்குவரத்து விதிமுறைகள் அவ்வளவாகப் பின்பற்றபடுவதில்லை.

மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர் நான் பார்த்தவரை

இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தில் உள்ளார்கள் (வாலிப வயசு )

மசாஜ் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளன

“லேடிபாய்” எனக் கூறப்படும் ஆண்களாய் இருந்து பெண்களை மாறியவர்கள் பலர் உள்ளதாக டாக்சி ஓட்டுனர் கூறினார். இவர்கள் உண்மையான பெண்களை விட அழகாக இருப்பார்கள் என்று கூறினார்  (நான் பார்க்கவில்லை )

பாலியல் தொழிலாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் தென்பட்டனர்

இரவில் நெடு நேரம் வண்ணமயமாகப் பரபரப்பாக இருக்கிறது

அங்கே பணம் “ரிங்கட்” என்று அழைக்கப்படுகிறது நம்ம ஊர் “ருபாய்” போல

பிரபலமான இரட்டை கோபுரம் அருகில் சென்று பார்க்க நேரமில்லை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டேன்.

IMG_0896.JPG

அங்கே இருந்த முக்கியச் சாலையில் படத்தில் இருப்பவர் சில்வர் பெயிண்ட் பூசி கொண்டு சிலை போல அமர்ந்து இருந்தார், கொஞ்சம் கூட அசையவில்லை. நான் ரொம்ப நேரம் இருந்து பார்த்தேன்.ரொம்பக் கஷ்டமான விஷயம் தான் ஆனால் அவருக்கு வசூல் நல்லா கிடைத்தது

நேரம் இல்லாததால் நமது மலேசிய பதிவர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்திக்க முடியவில்லை, தொலைபேசியில் பேசினேன்.

சாலை அருகில் இருக்கும் தொலைபேசியில் இருந்து பேசினேன், போக்குவரத்துச் சத்தம் காரணமாக அவர் கூறியதை சில முறை திரும்பக் கூற சொன்னேன், எனக்குக் காது கேட்கவில்லை என்று நினைத்தாரோ என்னமோ .

நான் மேலே கூறியது கோலாலம்பூர் பற்றிய இடங்களை மட்டுமே, மலேசியாவில் மற்ற இடங்கள் எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை.

அடுத்தப் பதிவில் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை உள்ள அழகான கோவிலான பத்து மலை பற்றிக் கூறுகிறேன்.

http://www.giriblog.com/2008/12/malaysia-trip-1.html

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மலேசியாவில் ஒரு நாள் ([இறுதி]பாகம் 2)

 

IMG_0874.JPG

நான் முக்கியமாகப் போக நினைத்த இடம் பத்து மலை முருகன் கோவில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அங்கே தான் உள்ளது. எனக்குப் பிடித்த கடவுள் முருகன் என்பதாலும் அங்கே செல்ல மிக ஆர்வமாக இருந்தேன்.

கோவிலுக்கு 272 படிகள் உள்ளது. செங்குத்தாக உள்ளது, படிகள் அகலம் குறைவாக உள்ளன.

முதியவர்கள், கால் வலி உள்ளவர்கள் ஏறுவது சிரமம். ஆனாலும் சில முதியவர்களைப் பார்க்க முடிந்தது.

IMG_0888.JPGஇயற்கையாகவே அமைந்த இடம் என்பதால் பார்ப்பதற்கு வித்யாசமாக இருந்தது.

நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்திற்கு முன்பு மழை பெய்து இருந்தது அதனால் மழை நீர் சொட்டிக்கொண்டு இருந்தது சாதாரணமாகவே அப்படித் தான் என்று கூறினார்கள்.

மேலே சிமெண்ட் கூரை எதுவும் கிடையாது இயற்கையாகவே அமைந்துள்ள மலை(குகை) தான் கூரை.

எனவே, சாதாரணமாக மலையில் சுரக்கும் நீர் வடிவது எப்படி இயற்கை நிகழ்வோ அதே போல நீர் சுரந்து சொட்டி கொண்டே இருப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது

குகை என்று கூறுவதால் குறுகலாக இருக்கும் என்று எண்ண வேண்டாம், நல்ல பெரிய உயரமான மற்றும் விசாலமான இடம்

மலை மீது ஏறி மீண்டும் கொஞ்சம் படிக்கட்டுகள் இறங்கி மூலவரை தரிசிக்க வேண்டும்.

கோவில் பெரிய அளவில் எல்லாம் கிடையாது சிறிய கோவில் தான், ஆனால் இடம் மிக அமைதியாக இருப்பதால் அந்த இடத்திற்கு அது மேலும் அழகு சேர்க்கிறது.

நாங்கள் சென்ற போது அங்கே கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டு இருந்தது. அந்த இடத்தின் சூழ்நிலைக்கும் பாடலுக்கும் அப்படி ஒரு பொருத்தம்.

பொதுவாகவே சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசம் கேட்க அருமையாக இருக்கும் அதுவும் இப்படி ஒரு அருமையான சூழ்நிலையில் அமைதியாகக் கேட்கும் போது விவரிக்க வார்த்தைகள் இல்லை

IMG_0886.JPGகோவிலின் அடிவாரத்தில் நம்ம ஊர் உணவகங்கள் உள்ளது, சுவையாக இருந்தது என்று கூற முடியாது

அடிவாரம் நல்ல விசாலமான இடம் தை பூசம் போன்ற நாட்களில் வரும் கூட்டத்திற்கு நன்கு ஈடு கொடுக்கும்.

நம்ம தல அஜித் பில்லாவில் ஆடுவாரே சேவல் கொடி! பாட்டிற்கு அதே இடம் தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம பக்கத்து (மலேசியாவில் வாழும்) பொண்ணுகளைப் பார்த்துச் சைட் அடிக்க வாய்ப்புக் கிடைத்தது, முருகன் மன்னிப்பாராக  .

என்ன தான் சங்கி மங்கி என்றாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான், அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது  .

நாங்கள் மாலை நேரத்தில் சென்றதால் தாமதமாகி விட்டதால் விரைவில் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

நாங்கள் சென்ற இன்னொரு இடம் ஹி ஹி பெயர் மறந்து விட்டேன், கோலாலம்பூர் அருகிலேயே 20 நிமிட கார் பயணத்தில் அடைந்து விடலாம். அருமையான நீர்வீழ்ச்சி

இதைத் தனியார், அரசு அனுமதி பெற்றுப் பராமரிப்பதாகக் கூறினார்கள், சிறப்பாகவே செய்து இருந்தார்கள் உள்ளே செல்ல இலவசம் வண்டியை நிறுத்த மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள்

சும்மா சொல்ல கூடாதுங்க குற்றால நீர்வீழ்ச்சி கணக்கா ஊத்து ஊத்துன்னு ஊத்துது. விழும் தண்ணீர் குளம் போலத் தேங்கி பின் வழிந்து செல்லும் படி அமைத்து இருக்கிறார்கள்.

பசங்க பொண்ணுக பெரிசுங்க எல்லாம் பட்டாசா குதி போடுறாங்க. அதிலையும் பசங்க, இருக்கிற எல்லாப் பல்ட்டியையும் போட்டு அந்த இடத்தையே ரணகளம் ஆக்குறானுக  ஒரு மீனு உயிரோட இருக்க வாய்ப்பு இல்ல .

அங்கேயும் நம்ம மக்கள் அதிகம், என்னடா இது! மலேசியாவா இல்ல தமிழ்நாடான்னு நமக்கு டவுட் வந்துடும், ஏதோ வெள்ளை தோல பார்க்கிறதால சரி இது நம்ம ஊரு இல்லைன்னு முடிவு பண்ணிக்க வேண்டியதா இருக்குது

அங்கே இருந்த பூங்காவில் ஏதோ சீரியல் பாட்டு எடுத்துக்கொண்டு இருந்தாங்க.. சரி என்ன தான் எடுக்கறாங்கன்னு நம்ம பண்பாட்டை விட முடியாமல் கொஞ்ச நேரம் பார்த்தேன்.

ஒரு காட்சியையே ஒன்பது வாட்டி எடுத்துட்டு இருக்காங்க..இவங்க மொக்கை தாங்காம எஸ்கேப் ஆகிட்டேன்.

அங்கே இருந்தவங்க ஒரு சிலர் காதுல கடுக்கன், ஸ்ப்ரிங் முடி, கலர் முடி, உதட்டுல என்னமோ கிளிப் மாதிரி போட்டு இருப்பாங்களே அது, தலை முடிய இதற்க்கு மேல் கொலை செய்ய முடியாது என்கிற ரேஞ்சுக்கு இருந்து நம்மை டென்ஷன் பண்ணுனாங்க

எல்லாம் முடிந்து திரும்பி சிங்கை வரும் போது மலேசியா இமிக்ரேசன் ல பொறுப்பா சீல் மாற்றிக் குத்திட்டாங்க, அதாவது Nov 29 2008 மலேசியா க்கு உள்ளே நுழைந்து Nov 1 2008 வெளியே போகிற மாதிரி.

நம்ம இமிக்ரேசன் அண்ணாத்தை பொறுப்பா Dec 1 க்கு Nov 1 சீல் குத்திட்டாரு, எத்தனை பேருக்கு குத்தினாரோ!!!

நாம யாரு! வழக்கம் போலப் பார்க்காம சிங்கப்பூர் இமிக்ரேசன் ல நுழைந்தா கோழிய அமுக்குற மாதிரி உடன் வந்தவரை பிடிச்சிட்டாங்க (யப்பா! சாமிகளா நீங்க பொறுப்போ பொறுப்பு தான்) அவர் சீல் எங்கேன்னு கேட்குறாரு நாம செந்தில் வாழை பழ காமெடி மாதிரி

அது தான் சார் இது

இது போறதுக்கு வறதுக்கு எங்கே!

அது தான் சார் இது..

அப்புறம் பாஸ்போர்ட்டை எங்களிடம் காட்டி விளக்கினதுக்கு அப்புறம் ஐயையோ! நம்மை ஜட்டியோட சன் டிவி செய்தில மாதிரி உட்கார வைத்து விடுவாங்களோன்னு பயம் ஆகி விட்டது. அடேய்! கிரி உங்களுக்குச் சங்கு தாண்டி ன்னு பீதி ஆகி விட்டது

சரி! மலேசியா இமிக்ரேசன் பக்கத்துல தான்.. அவங்க கிட்ட காட்டி ஏதாவது செய்வோம்னு பீதியில யோசிச்சுட்டு இருக்கும் போது (நமக்குத் தான் அதுக்குள்ளே சூப்பர் சானிக் வேகத்துல கற்பனை ஓடுமே ), நம்ம சிந்தனையைக் கலைத்து…

“சரி! இனிமே பார்த்து ஒரு முறை செக் பண்ணிட்டு வாங்குங்க!” என்று எச்சரித்து அனுப்பினாங்க..

நல்ல வேளை டா சாமி .. மலேசியா போக நினைத்து கடைசில பின்னாடி பிரம்படி கொடுத்து பழுக்க வைத்து இருப்பாங்கன்னு கலவரம் ஆகிட்டோம், அதுவும் உடன் வந்தவர் செம டென்ஷன் ஆகிட்டார்.

தப்பிச்சா போதும்னு, அருள் பாலித்த சிங்கை இமிக்ரேசன் கடவுளுக்கு நன்றி சொல்லி லிட்டர் கணக்குல வழிந்து விட்டு ஜூட் விட்டு வந்தாச்சு..

கிளைமாக்ஸ் தவிர மலேசிய பயணம் ஒரு நாள் சூப்பர் தான். ஆனா கடைசில பேதி மருந்து கொடுக்காமையே வயிற்றைக் கலக்கி விட்டது தான் ரொம்ப நேரம் மனசுல இருந்தது.

பின் குறிப்பு : அதிக அளவில் தகவல்கள் தரும்படி சில நண்பர்கள் கேட்டு இருந்தீர்கள், நான் சென்றதே ஒரு நாள் தான் எனவே இவ்வளவு தான் கொடுக்க முடிந்தது.

பதிவு போட வேண்டும் என்பதற்காகச் சுவாராசியம் மற்றும் அவசியம் இல்லாத தகவல்களைக் கொடுக்க விருப்பம் இல்லை.

தேவையில்லாமல் இது பற்றிய பதிவின் எண்ணிக்கையையும் கூட்டவும் விருப்பமில்லை. மீண்டும் இதைப் போலச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் அதிகத் தகவல்களைத் தெரிந்து பதிவிடுகிறேன்.

 

http://www.giriblog.com/2008/12/malaysia-trip-2.html

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மலேசியா பயணம் – பத்து மலை

Batu caves Murugan

நான் இந்த வருடத்தில் இந்தியா கிளம்பிடனும் என்று உறுதியாக இருப்பதால், எப்படியாவது உலகின் மிகப்பெரிய மலேசியா “பத்து மலை” தைப்பூச திருவிழாவிற்குச் சென்று வந்து விட வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், செல்வதற்கு உடன் யாரும் இல்லாததால் செல்ல முடியவில்லை.

சீனப் புத்தாண்டு விடுமுறையில் திடீர் என்று மலாக்கா செல்லலாம் என்று முடிவான பிறகு அப்படியே பத்து மலையும் சென்று வரலாம் என்று நினைத்தேன். விசா கூடச் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் விண்ணப்பித்தேன்.

நல்ல வேளை கிளம்பும் முதல் நாள் கொடுத்து விட்டார்கள்.

நான் நண்பர்கள் பாபு, சுரேஷ் மூவரும் காரில் சென்றாலும், சுரேஷ்க்கு கால் வலியால் அவரால் மலை ஏற முடியாது என்பதால் அவர் வர முடியாது என்பது உறுதியானது, அப்படியே வந்தாலும் மேலே ஏற முடியாது. இதனால் பத்து மலை செல்வது சந்தேகமாகவே இருந்தது.

எனக்குத் திரும்ப இது போல வர வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை.

தலைவரை இவ்வளவு அருகில் இருந்தும் பார்க்காமல் செல்கிறோமே! என்று இருந்தது. பிறகு நான் பாபு இருவர் மட்டும் மலாக்காவில் இருந்து பேருந்தில் சென்று வருவது என்று முந்தைய இரவு முடிவானது.

காலையில் நேரத்திலேயே சென்று திரும்பி வந்தால், கோவில் செல்வதற்கும் பின் திரும்ப மலாக்கா வந்து சுற்றிப் பார்க்க எளிதாக இருக்கும் என்று பாபு கூறிய யோசனையை ஏற்றுக் காலை 6 மணிக்குக் கிளம்புவதாக முடிவானது.

காலை 6 மணி என்பது மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இரவு போல இருக்கும், 7 மணிக்கே இருட்டாகத்தான் இருக்கும். இதில் எங்கே டாக்சி தேடுவது! என்பதால் சுரேஷ் தானே காரில் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாகக் கூறினார், 15 நிமிடப் பயணம்.

காலையில் இருட்டில் கூகுள் வழிகாட்டி உதவியுடன் சரியாகப் பேருந்து நிலையத்தை அடைந்தோம். சுரேஷ் கூகுள் வழிகாட்டியில் நன்கு தேர்ந்தவராக இருக்கிறார், இதை வைத்து அனைத்து இடங்களிலும் பட்டையைக் கிளப்பினார்  .

எனக்கு எந்தப் பக்கம் திரும்புவது என்று சந்தேகம் இருக்கும் இடங்களில் எல்லாம் எந்தச் சந்தேகமும் இல்லாமல் சென்று அவரோட அனுபவத்தைக் காட்டினார்.

உதாரணத்திற்கு நேராகச் செல்லும் போது இடது பக்கம் ஒரு வழி அதோடு இன்னொரு பாலம் வந்தால் மேலேயா கீழேயா எதில் செல்வது என்ற குழப்பம் வரும்.

கூகுள் வழிகாட்டி அதுவே சரியாகக் கூறும் என்றாலும், அதிலும் கொஞ்சம் அனுபவம் இருந்தால் மட்டுமே அதன் தூரம் திருப்பம் போன்றவற்றை எளிதாகப் புரிந்து கணிக்க முடியும்.

ஏற்கனவே அனுபவம் இருந்ததால் காரில் ஏறியவுடனே வழி தெரிந்தாலும் இதையும் உதவிக்கு வைத்துக் கொள்கிறார். இருட்டிலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்றடைந்தோம்.

அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்பதால் 6.30 பேருந்தை பிடிக்க முயற்சி செய்தோம் ஆனால், 7 மணி தான் முடிந்தது. மலாக்காவில் இருந்து கோலாலம்பூர் செல்ல 10 அல்லது 12 ரிங்கட் கட்டணம்.

12 ரிங்கட் கொஞ்சம் கூடுதல் சொகுசாகவும் தொலைக்காட்சியும் இருந்தது. பல பேருந்து நிறுவனங்கள் உள்ளது, நம் விருப்பம் போல எதில் வேண்டும் என்றாலும் செல்லலாம்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்று நினைத்தோம் ஆனால், 8.45 க்கு புறநகர் பேருந்து நிலையமான TBS (Terminal Bersepadu Selatan) ஐ அடைந்து விட்டது. 1.45 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் எந்த வித அலுப்பும் இல்லாமல் அடைந்து விட்டோம்.

பேருந்தில் மொத்தமே 7 பேர் தான் இருந்தோம்.

அங்கே (Bandar Tasik Selatan) இருந்து LRT ரயில் சேவையில் “கோலாலம்பூர் சென்ட்ரல்” சென்று அங்கே இருந்து பத்து மலை செல்லும் இன்னொரு ரயிலில் மாற வேண்டும். TBS லியே பத்து மலை வரை பயணச்சீட்டு எடுத்தால் கட்டணம் குறைவு.

எந்தச் சிரமும் இல்லாமல் காலை 9.30 க்கு பத்து மலை வந்தடைந்து விட்டோம். ரயில் நிலையம் கோவில் அடிவாரத்திலேயே இருப்பது வசதியாக இருந்தது.

நான் ஏற்கனவே ஆறு வருடங்களுக்கு முன்பு இங்கே வந்து இருந்தாலும் பெருமாள் கோவில் பார்த்தது போல நினைவில்லை. கடந்த முறை டாக்சியில் வந்ததால் ஓரமாக இருந்த இந்தக் கோவிலை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் இந்தக் கோவில் வழியாகத் தான் சென்றாக வேண்டும்.

சிறிது உயரத்தில் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பெருமாளுக்கு அட்டகாசமாக அலங்காரம் செய்து இருந்தார்கள். பொதுவாக நான் கும்பிடுவது எல்லாம் அதிகபட்சம் ஐந்து நொடிகள் தான். தலைவர் முருகனுக்கு மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.

பெருமாள் அலங்காரத்தைப் பார்த்து அசந்து போனதால், கூடுதல் நேரம் நின்று பார்த்து வந்தேன். சமீபத்தில் அலங்காரம் பார்த்து வியந்தது இதுவாகத் தான் இருக்கும்.

அதற்குச் சிலையின் வெளிச்சமான பின்னணியும் மற்றும் வித்தியாசமான வண்ணத்தில் இருந்த பூ மாலையும் காரணமாக இருக்கலாம்.

அதன் பிறகு விநாயகர் மற்றும் சிவன் கோவில் உள்ளது. அசுரன் புத்தகம் படித்த பிறகு சிவனுக்கும் நான் ரசிகன் ஆனது போலத் தோன்றுகிறது. இங்கேயும் சென்று வணக்கம் போட்டு விட்டு வந்தேன். சமீபமாக சிக்ஸ் பேக் சிவன் என்னை ரொம்பக் கவர்ந்து விட்டார்  .

இந்த முறை பத்து மலை ஏறும் முன்பு பெண்கள் டிராயர் அல்லது தொடை வரை இருக்கும் உடை (அது பெயர் என்ன என்று தெரியவில்லை) அணிந்து இருந்தால் அடிவாரத்தில் 5 ரிங்கட் கொடுத்து துணி வாங்கி இடுப்பில் கட்டிய பிறகு தான் செல்ல முடியும்.

கடந்த முறை இது போல விதிமுறை இருந்ததா! என்று நினைவில்லை. திரும்பி வந்து துணியைக் கொடுத்தால் 2 ரிங்கட் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

இது போலச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. வேறு எங்கும் இது போலப் பார்த்ததாகவும் நினைவு இல்லை.

படிகள் செங்குத்தாக இருப்பதால், பெண்கள் மேலே ஏறும் போது பின்னாடி வருபவர்களுக்குத் தர்மசங்கடம் ஆகி விடக் கூடாது என்பதற்காக, இது இருக்கலாம் என்று நினைக்கிறேன் (பின்வரும் படம் பாருங்கள், ஒரு பெண் அந்தத் துணி கட்டி இருப்பார்). இடுப்புக்கு கீழே சரி… மேலே…?!

Batu caves Malaysia

மூலவரை தரிசித்து விட்டு (அறிவிப்பைப் பார்த்தால் தான் மூலவர் என்று தெரியும், ரொம்பச் சாதாரணமாக இருக்கும்) திரும்பச் சில படிகட்டுகள் ஏறினால் ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகன் கோவில் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு கிளம்பினோம்.

கோவில் பற்றி ஏற்கனவே விளக்கமாக எழுதி இருக்கிறேன்.

படிகள் ஏறி பலர் மூச்சிரைத்து நிற்பதைப் பார்க்க முடியும். படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதால் கொஞ்சம் படிகள் ஏறியவுடனே மூச்சு வாங்கும், நின்று நின்று தான் ஏற முடியும். வயதானவர்களும் ஏறி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

விடுமுறை காலம் என்பதாலோ என்னவோ வெளிநாட்டினர் கூட்டத்தோடு உள்ளூர் கூட்டமும் அதிகளவில் இருந்தது.

பத்து மலைக்கு மலாக்காவில் இருந்து வேட்டியில் தான் சென்றேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது  .

நீண்ட நாட்களுக்குப் பிறகு வேட்டி கட்ட வாய்ப்பு. ஊருக்குச் சென்றால், எங்கெல்லாம் வேட்டி அணிந்து செல்ல முடியுமோ அங்கெல்லாம் அணிந்து செல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

பத்து மலை உலகளவில் எவ்வளவு பிரபலமான கோவில்! ஆனால், கோவிலின் உள்ளே தண்ணீர் பாட்டில்கள், பைகள், குப்பைகள் என்று இருக்கிறது. படிக்கட்டுகள் முழுவதும் சாப்பாட்டு பைகளும், குப்பைகளும் நிறைந்து இருக்கின்றன.

எவ்வளவு வருமானம் பார்க்கிறார்கள், சுத்தமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டாமா! கோவிலுக்கு வருகிறவர்களும் கோவில் புனிதமான இடம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் இது போலச் செய்வதைப் பார்த்தால், எரிச்சலே மேலிடுகிறது.

இதில் கோவில் நிர்வாகத்தையும் குற்றம் கூற வேண்டும். இவர்கள் உண்டியல் வைக்கக் காட்டிய ஆர்வத்தில் குப்பைத் தொட்டி வைக்கவும் கவனம் செலுத்தி இருக்கலாம். உண்டியல் தான் எங்குப் பார்த்தாலும் காணப்படுகிறது, குப்பைத் தொட்டியைக் காணோம்.

வெளிநாட்டினர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!

வெளிநாட்டினரை விடுங்கள் நம் கோவிலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா! முருகனிடம் உள்ள தடியை வாங்கி எல்லோரையும் நாலு சாத்து சாத்தனும் போல இருந்தது.

கோவில் உள்ளே வரை செருப்பு அனுமதிக்கிறார்கள். நம் தற்குறிகள் சிலர் உள்ளே கோவில் பிரகாரத்தின் படிக்கட்டின் மீதே செருப்போடு அமர்ந்து பல்லைக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். முருகனைப் பார்க்க ஆர்வமாக வந்தேன் ஆனால், ஏனோ திருப்தி இல்லாமலே கிளம்பினேன்.

மொத்த ஆர்வமும் கீழே இறங்கும் போது வடிந்து விட்டது.

கீழேயே உணவகம் இருந்தது, சுவையும் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு அங்கே இருந்து 11.30 க்கு கிளம்பி திரும்ப ரயிலில் சென்றோம். அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இருப்பதால், பிரச்சனையில்லை.

ரயிலில் புகைப்பிடிக்கக் கூடாது, சாப்பிடக்கூடாது என்ற அறிவிப்போடு முத்தம் இடக்கூடாது என்றும் இருந்தது  . அதற்கு “Indecent behavior” not allowed என்று அறிவிப்பு இருந்தது. ரயில் மெதுவாகவும் சில இடங்களில் சில நிமிடங்கள் நின்றே சென்றது.

ரயில் / பேருந்து நிலையங்களில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை.

காலையில் கூட்டமே இல்லாமல் இருந்ததால் இப்பவும் அப்படியே இருக்கும் என்று நினைத்துச் சென்றால், செம கூட்டமாக இருந்தது. விமான நிலையம் போல அறிவிப்புகளுடன் பேருந்து நிலையம்  பிரம்மாண்டமாக இருக்கிறது.

2.15 மணி பேருந்தில் இடம் கிடைத்தது ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.

வழியிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாங்கள் மலாக்கா சென்றடைந்த போது 5.30 ஆகி விட்டது. கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வீணாகி விட்டது.

நாங்கள் மலாக்கா திட்டமிடாமல் வந்தோம். எங்குமே தங்க விடுதி கிடைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் “House full” என்று அறிவிப்பு இருந்தது. அப்புறம் எப்படியோ இங்கே இடம் பிடித்தோம். நான்கு பேர் தங்கும் அறை 130 ரிங்கட். அறை நன்றாக இருந்தது.

நாங்கள் தங்கி இருந்த Golden star விடுதி அருகே உணவு விடுதி இருந்தது, கேரளாவைச் சார்ந்தவர்கள். டீ, காஃபி, புரோட்டா போன்றவை ரொம்ப நன்றாக இருந்தது. சிங்கப்பூர் புரோட்டாவை விட இங்கு நன்றாக இருந்தது.

மலையாளிகள் சிங்கப்பூர் மலேசியாவில் அதிகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Malacca

திரும்ப மாலை, அருகில் இருந்த இடங்களுக்குச் சென்று நிழற்படம் எடுத்துக்கொண்டு வந்தோம். நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு எதிரே இருந்த பஞ்சாபி உணவு விடுதியில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து சென்றால், அதன் சுவையில் மயங்கி விட்டோம்.

நான் இவ்வளவு சுவையாகச் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. இரண்டு இரவும் இங்குத் தான் சாப்பிட்டோம்.

இன்னும் அந்தச் சுவை நாவில் இருக்கிறது  . தயிர் அட்டகாசமாக இருந்தது. தந்தூரி சிக்கன் அதிகமாகக் கொடுத்து விட்டார்கள். நான் கூட வீணாகி விடுமோ என்று நினைத்தேன் ஆனால், சுவை நன்றாக இருந்ததால், வீணாகவில்லை.

சுவை நன்றாக இருந்தால், வழக்கமாகச் சாப்பிடுவதை விடக் கூடுதலாகச் சாப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன்.

நான் அதிகம் சாப்பிட மாட்டேன் இருப்பினும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இங்கே ரொம்பத் திருப்தியாகச் சாப்பிட்டேன். இவர்கள் இருவருக்கும் ரொம்பப் பிடித்து இருந்தது.

நீங்கள் ஒருவேளை மலாக்கா செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக இங்கே சென்று சாப்பிட்டுப் பாருங்கள். அங்கே இருந்த சிங் நன்றாகக் கவனித்தார். இந்த இடம் மலாக்கா சென்ட்ரல் அருகேயே உள்ளது. பின்வருவது முகவரி.

The Tandoori House Restaurant
273, Jalan Melaka Raya 3
Taman Melaka Raya
75000 Melaka

சென்ற இடங்களில் எல்லாம் பாபுவை அனைத்தையும் படம் எடுக்கக் கூறி ஒரு வழி ஆக்கிட்டேன். “நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் படங்களை எடுத்தவர் உங்கள் பாபு” (என்று போடும்படி மிரட்டினார்) .

பாபுக்குப் படம் எடுப்பதில் ரொம்ப ஆர்வம், வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துத் தள்ளினான். இந்தக் கேமராவில் நான் எடுத்தால் கூட நன்றாக வருகிறது  . விலை கேட்டு அதிர்ச்சியானதால், வாங்கும் யோசனையைக் கை விட்டு விட்டேன்.

காலையில் நேரத்திலேயே கிளம்பலாம் என்று முடிவானது. ஏனென்றால் மாலையாகி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும். மொத்த சிங்கப்பூரும் மலேசியா வந்தது போல இருந்தது. எங்குப் பார்த்தாலும் சிங்கப்பூர் கார்கள் தான்.

காலையில் லிட்டில் இந்தியா பகுதியில் [அங்கேயும் ஒரு லிட்டில் இந்தியா  ] இருந்த உணவு விடுதியில் சாப்பிட்டோம், அட்டகாசம். செம்ம கவனிப்பு. சீனர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தார்கள். சொன்னா நம்ப மாட்டீங்க! இங்கே நம்ம ஊரை விட விலை குறைவு.

மூன்று முட்டை தோசை, ஒரு சாதா தோசை, ஒரு ஆஃப் பாயில், உப்புமா, இரண்டு காஃபி இன்னொன்னு எதோ சாப்பிட்டார்கள் மறந்து விட்டேன். இவ்வளவும் சேர்த்து 350 ருபாய் நம் மதிப்பில் வந்தது. நம்ம ஊரில் சாதா தோசையே 80 ருபாய் சொல்கிறார்கள்.

நம் ஊரில் நிச்சயம் 500 ரூபாய்க்கு மேல் வந்து இருக்கும். சாம்பார் சுவை எல்லாம் சொல்வதற்கே இல்லை.. அவ்வளவு அசத்தலாக இருந்தது.

சிங்கப்பூரில் இருந்து வரும் எங்களுக்கே (எங்களுக்கே என்றால், நிரந்தரவாசி அல்லாத எங்களுக்கே) பெரும்பாலும் விலை குறைவாகத் தோன்றுகிறது. சுருக்கமாக சிங்கப்பூர் பணத்தில் பாதி விலை.

இதே அமெரிக்கா ஐரோப்பா போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அவர்கள் பண மதிப்பில் ஒன்றுமே இல்லை.

இதனால் தான் வெள்ளைக்காரர்கள் நம் ஊர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற இடங்கள் வந்தால் செலவழிக்கத் தயங்குவதில்லை. பவுண்டில் செலவு செய்தால், அவர்களுக்கு இவையெல்லாம் இலவசம் என்பது போலத் தான் தோன்றும்.

இங்கே உள்ள கோவிலுக்குச் செல்ல நினைத்தேன் ஆனால், நேரமில்லாததால் திரும்பப் புராதான தெரு சென்று சில நிழற்படங்களை எடுத்த பிறகு கிளம்பி விட்டோம். கிளம்பியவுடன் கூகுள் வழிகாட்டி உதவி மூலம் பல சாலைகளைச் சுற்றி சரியாக விரைவுச் சாலை அழைத்துச் சென்றது.

அங்கே இருந்து சரியாக 200 கிலோமீட்டர்.

திரும்ப ஒரு அற்புதமான நெடுஞ்சாலைப் பயணம். பாபு செம பாடல்களைப் பதிவு செய்து கொண்டு வந்து இருந்தான். அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருந்தது. பெரும்பாலும் புதிய இசையமைப்பாளர்கள் பாடல்கள்.

சமீபமாகத் தமிழில் நிறைய இசையமைப்பாளர்கள் அறிமுகம் ஆகி இருப்பது ரொம்ப நல்ல விஷயம்.

பாதித் தூரம் சென்ற பிறகு இளையராஜா பாடல்கள். இதைக் கேட்டால் இன்னும் 200 கிலோமீட்டர் கூடச் சலிப்பில்லாமல் செல்லலாம்  . அதி தீவிர இளையராஜா ரசிகரான சுரேஷ், இளையராஜா பாடல்கள் வந்ததும் உற்சாகமாகி விட்டார்.

இரு புறமும் இயற்கையின் அழகைப் பார்த்து, காரை நிறுத்தி ரசிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால், பின்னால் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டு இருந்ததால், அந்த யோசனையைக் கை விட்டுவிட்டேன். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறி இருந்தால், கலக்கலாக இருந்து இருக்கும்.

கடந்த இடுகையில் நெடுஞ்சாலை பற்றிக் கூறும் போது ஒன்றை மறந்து விட்டேன். இந்த நெடுஞ்சாலை இரு வழிச் சாலை என்பது எனக்கு மிக மிக ஆச்சர்யமான ஒன்று.

நம் ஊரிலேயே ஆறு வழிச் சாலை இருக்கின்ற போது ஏன் இன்னும் இரு வழிச் சாலையில் இருந்து மாற்றாமல் வைத்து இருக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. விரிவாக்கம் செய்வதும் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

பாபு சுரேஷ் இருவருக்குமே நான் கடமைப் பட்டு இருக்கிறேன். பாபு எனக்காகத் தான் பத்து மலை வந்தான், அதோடு நிழற்படம் எடுக்கக் கூறிய என்னுடைய தொல்லையையும் சகித்துக் கொண்டான்  .

சுரேஷ் க்கு காலில் வலி இருந்தாலும் இரண்டு நாட்களும் எங்களுக்காகக் கார் ஓட்டிக்கொண்டு வந்த நல்லவர்.

இவரைப் போல நல்லவர் வல்லவரைப் பார்ப்பது அரிது  . அநியாயத்துக்கு அனுசரித்துப் போவார். நானே நிறைய முறை “சுரேஷ்! இப்படி எல்லாம் நீங்க ரொம்ப நல்லவராக இருக்காதீங்க!” என்று கூறும் அளவிற்கு இருப்பார். எங்கள் இருவர் சார்பாக சுரேஷ்க்கு மிக்க நன்றி.

இந்தப் பயணம் ஒரு அவசரப் பயணம் என்பதால் நிறைய இடங்கள் பார்க்க முடியாமல் போய் விட்டது. இருப்பினும் இது போன்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! Road Trip செல்வது எனக்கு ரொம்பப் பிடித்தமானது. வட மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

குழுவாகச் செல்வது வேறு! ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களுடன் செல்வது என்பது வேறு! இது போல ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களுடன் செல்ல விருப்பமாக உள்ளேன். ஏற்கனவே திட்டம் போட்டாச்சு ஆனால், நேரம் தான் அமையத் தாமதமாகிறது.

http://www.giriblog.com/2015/02/malaysia-batu-cave-road-trip.html

 

Foto:

 

Foto:

Foto:

Foto:

Foto:

 

Foto:

Foto:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.