Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கை ஆழியானின் வாடைக்காற்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செங்கை ஆழியானின் வாடைக்காற்று

சந்திரவதனா

செங்கை ஆழியானின் வாடைக்காற்று
 

 

வாடை பெயர்ந்துவிட்டது. நெடுந்தீவுத் தெற்குக் கடற்கரையில் செமியோனின் வரவுக்காக பிலோமினா காத்திருக்கிறாள்.

மூன்று வருடங்களாக, வாடைக்காற்று பெயரத் தொடங்கியதும் தந்தையுடன் ஒரு தொழிலாளியாக வந்து வாடி அமைத்து, மீன் பிடித்துச் சென்ற செமியோன் கடந்த வருடம் தானே சம்மாட்டியாக வந்தபோதுதான் அவனுக்கும் பிலோமினாவுக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது. வாடை முடிந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பும் போது அவளையும் தன் மனைவியாகத் தன்னோடு அழைத்துச் செல்லும் நினைப்புடன்தான் செமியோன் அவளுடன் பழகினான். ஆனால் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்துவுக்கும், செமியோனுக்கும் ஒத்துவரவில்லை.

செமியோன் ஒரு சம்மாட்டி. பிலோமினாவின் குடும்பம் செமியோன் போன்ற சம்மாட்டிகளிடம் வேலை செய்யும், அந்தத் தெற்குக் கடற்கரையிலேயே வாழும் ஒன்பது தொழிலாளக் குடும்பங்களில் ஒன்று. பிலோமினாவுக்கும், செமியோனுக்கும் இடையிலான உறவைச் சாக்காக வைத்து செமியோனைப் பயன்படுத்த முனைந்தான் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்து. அது சண்டையாகி இவர்களது காதலுக்கும் முட்டுக்கட்டை வந்துவிட்டது.

போனமுறை செமியோன் போகும் போது இவளையும் கூட வரும்படிதான் கேட்டான். அம்மா, அப்பா, அண்ணாவின் சம்மதம் பெறாமல் வரமுடியாது என்று மறுத்து விட்டாள். இப்போது மறுகிக் கொண்டு, இம்முறை செமியோன் விரும்பியது போல அவனுடனேயே போய் விடவேண்டுமென்ற நினைப்புடனும், தீராக் காதலுடனும் காத்திருக்கிறாள்.

அவன் வருவானா?

சூசைக்கும் அவனுக்குமிடையில் நடந்த அடிபிடிச் சண்டையால் அவமானப்பட்டுப் போனவன், இனி வரமாட்டான் என்று பலர் பேசிக் கொண்டார்கள். அவன் வந்துவிடக் கூடாது என்ற பதைப்புடனும் சிலர் இருந்தார்கள்.

பிலோமினாவின் தோழி நாகம்மா. பிறக்கும்போதே தாயை இழந்தவள். தந்தையும் இல்லை. பதினேழு வருடங்களாக தாத்தா பொன்னுக்கிழவருடன் வாழ்ந்து வருகிறாள். அவளும் பிலோமினா குடும்பம் போல வாடையைக் காத்திருந்து, வாடி அமைத்து மீன் பிடிக்கும் சம்மாட்டிகளிடம் தொழில் செய்பவள்தான். இம்முறை அவளைத் தேடியும் ஒரு காதல் வந்தது.

நெடுந்தீவின் தெற்குக் கடற்கரைக்கு மன்னார், பேசாலையிலிருந்து 26 வயதுகள் மதிக்கத்தக்க சம்மாட்டி மரியதாஸ் வருகிறான். கரைவலை வீசி மீன்பிடிக்கும் அவனுக்கு நாகம்மா மேல் கண்விழுந்து விடுகிறது.

செங்கை ஆழியானின் வாடைக்காற்று

ஆனால் சிறுவயதிலிருந்தே நாகம்மாதான் தனது மனைவி என்ற நினைப்புடன் குதிரைச்சவாரியும், குறிதவறாத வேட்டைக் குணமும் கொண்டு கூர்த்தடியுடன், போனிக் கட்டைக்குதிரையில் திரிகிறான் நாகம்மாவின் மச்சான் விருத்தாச்சலம்.

நாகம்மா, மரியதாஸின் காதலுக்கு விருத்தாச்சலம் வில்லன். பிலோமினா, செமியோனின் காதலுக்கு பிலோமினாவின் ஒட்டுமொத்தக் குடும்பமே வில்லர்.

ஊருக்கே வில்லன் சுடலைச் சண்முகம். பெண்கள்தான் அவனது எண்ணம் முழுவதிலும்.

இவைகளோடு கரையூர்ப்பகுதியிலிருந்து இயந்திரப்படகுகளோடு வந்த சம்மாட்டி செமியோன் (பிலோமினாவின் காதலன்), பேசாலையிலிருந்து கரைவலையோடு வந்த சம்மாட்டி மரியதாஸ் (நாகம்மாவின் காதலன்), உள்ளுர்ச் சம்மாட்டி யூசுப் இவர்களுக்குள் தொழிற்போட்டி.

வருவானா, மாட்டானா..? என்றிருந்த செமியோனும் வந்து விட அங்கு இரு ஜோடிகளின் காதல் நல்ல தண்ணிக் கிணற்றடியிலும், ஆலடி வயிரவர் கோயிலடியிலும் என்று தொடர்கிறது.

கதை நெடுகிலும் எம்மோடு கூடவே கூழைக்கடாவும் (Pelican) பறக்கிறது. பறக்கும் பறவைகளிலேயே மிகப்பெரிய பறவை கூழைக்கடாதானாம். வாடைக்காற்று வீசத்தொடங்கியதும் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து (வலசை செல்லுதல்), பல நூறு மைல்கள் கடந்து நெடுந்தீவுக் தெற்குக்கடற்கரைக்கு வந்து, குட்டைக்காடுகளில் தங்கியிருந்து, எப்போதும் இணையுடன் இணைந்தே திரியும், பஞ்சுப்பொதி போன்ற கூழைக்கடாக்களை மிகச் சாதுரியமாகக் கதையோடு அழைத்துச் செல்கிறார் செங்கை ஆழியான்.

காதலர்கள் இணைவார்களா, பிரிவார்களா, விருத்தாசலத்தின் நாகம்மா மீதான காதல் நிறைவேறுமா... என்ற கேள்விகளுடனேயே கதை தொடர்கிறது. கதையின் முடிவு பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஞாபகப்படுத்துகிறது. அதிலே பொன்னாவின் கணவன் காளி அவளிடம் வரும்போது குழந்தைப்பேறு இல்லாத அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு குழந்தைக்காக இன்னொருவனிடம் போய் விட்டாள். இங்கே விருத்தாச்சலம் தனது முறைப்பெண்ணைத் தேடி வரும் போது நாகம்மா வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே காதலுக்காக, தன் மனம் விரும்பியவனுடன் இருக்கிறாள். இரண்டும் வேறு வேறு கதைகளும், வேறு வேறு கோணங்களும் என்றாலும் தவிர்க்க முடியாமல் அக்கதை நினைவில் வருகிறது. அந்தக் கணவன் காளியில் ஏற்பட்ட அனுதாபம் போலவே விருத்தாசலத்திலும் ஒரு வித அனுதாபமும் ஏற்படுகிறது. அதே போல அந்த ஜோடிகள் பிரிக்கப்பட்டு விடக்கூடாது என்ற விருப்பும், பிடிபட்டு விடக்கூடாது என்ற தவிப்பும் கூடவே வருகின்றன.

ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கும் போது எப்போதும் ஆரம்பத்தில் ஒரு இழுபறி நிலை இருக்கும். ஆனால் இந்நாவலைத் தொடங்கியதில் இருந்து முடிக்கும் வரை ஒரு இடத்தில் கூட ஒரு தொய்வு இல்லை. அடுத்து என்ன என்ற ஆவலுடனேயே கதை முழுவதும் நகர்கிறது.

செங்கை ஆழியானின் 'முற்றத்து ஒற்றைப்பனை' வாசிக்கும் போதும் அப்படி ஒரு உணர்வே தோன்றியது. ஆனாலும் அதைப்போல இதை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடியவில்லை. நின்று நிதானித்து அனேகமான பக்கங்களை இரண்டு அல்லது மூன்று முறைகள் வாசித்தேன். சில பக்கங்களை இன்னும் பலமுறை வாசித்தேன். அத்தனை விடயங்கள் கதைக்குள் அடங்கியுள்ளன. நயினாதீவுக் கடற்கரை, கௌத்தி ஆறு, வாடை, சோளகம், பகிறுவேலி, மீன்பிடித்தொழில், அதிலுள்ள சில நுணுப்பங்கள், சம்மாட்டி, மன்றாடி... போன்ற பதவிப் பெயர்கள்... என்று கதை முழுவதிலும் மிகுந்த ஆர்வத்தைத் தரக்கூடிய பல விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மீனவக் குடும்பங்களின் வாழ்வியல் முறையில் ஒரு சொற்பத்தையேனும் அறிய முடிந்த திருப்தி ஏற்படுகிறது.

செங்கைஆழியான் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்காக மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான மீன்பிடித் தொழில் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். அதனுடன் தான் ஆங்காங்கு சந்தித்த கதை மாந்தர்களை இங்கு உலாவ விட்டு நெடுந்தீவின் புவியியற் பின்னணியில் கதையை உருவாக்கியிருக்கிறார். வீரகேசரி வெளியீடாக 1973 இல் வெளியாகி உள்ளது.

கதையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எழுத்துப் பிழைகள் உள்ளன. பேச்சுத் தமிழிலும் தடுமாற்றங்கள் உள்ளன. அது ஒரு குறையாகத் தெரியாத அளவுக்கு கதை நிறைவாக உள்ளது.

43 வருடங்களுக்கு முன் வெளிவந்த வாடைக்காற்று என்னும் ஒரு நாவல் இன்னும், இன்றைய நவீனங்களின் மத்தியிலும் சுவாரஸ்யம் குன்றாமல் இருப்பது வியப்புக்குரியதே.

இதை நான் கண்டிப்பாக எழுதியே தீர வேண்டும் என்றாகி விட்டது. இந்நாவலை வாசித்த பின் வேறு சிலதை வாசிக்கத் தொடங்கி முழுமையாக மனம் ஒன்ற முடியாமல் அவதிப்பட்டேன். மீண்டும் ஒரு முறை வாடைக்காற்றை முழுமையாக வாசித்தேன். ஒரு சில வரிகளாவது வாடைக்காற்றைப் பற்றி எழுதினால்தான் என்னால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் போல் தோன்றியது. நான் எழுதியது சொற்பமே. வாசித்தால் கிடைக்கப் போவது இன்னும் பல.

இந்நாவல் வாடைக்காற்று என்ற படமாகக் கூட 1978 இல் வெளிவந்தது. முதல் முதலாக ஜனாதிபதி விருது பெற்ற தமிழ்ப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தக் கதையே ஒரு படம் போல என் மனம் முழுவதும் விரிந்து கிடக்கிறது.

இந்நாவலை இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த நூலகத்துக்கு நன்றி.

நூலகத்தில் வாடைக்காற்று:

http://www.noolaham.org/wiki/index.php/படிமம்:16603.JPG

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=daeb8042-d503-4fd6-9427-7df53f859ca4

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.