Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருண்ட பங்குனி

Featured Replies

இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விடயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாத கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர, சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது.

இதேபோன்று வேறு பலவிதமான ஆதிக்கங்களால் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார், ஈராக், சிரியா, செக், ஸ்லேவாக்கியா, பொஸ்னியா, ஹெர்ஜ கோவினா என பல நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் மக்களை அழித்தும் இடம்பெயரச் செய்தும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கியபோது இந்த அளவு தாக்கத்தை நாம் உணரவில்லை.

தமிழக அரசியல்வாதிகளால் ஈழமக்களின் வாழ்க்கைப்போக்கு சிறிதளவேனும் நேர்மறையான மாற்றம் பெறாவிட்டாலும், துயர் போக்குவதற்கு மிகப்பெரும் தார்மீக ஆதரவு சக்திகள் எனக் கருதக்கூடிய அளவில் விடாமல் சில ஆண்டுகள் முன்புவரை நம்பிக்கையைக் கொடுத்து வந்திருக்கிறது. மிகவும் மோசமான பிரச்சினைகளில் சிக்குண்டவர்களுக்கு நம்பிக்கை என்பது ஒரு அருமருந்துதானே.


2016 மார்ச் 8, வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் வடக்கு மாகாணப் பெண்களின் பகுப்புகளையும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய செயல்பாடுகளையும் அரசு மற்றும் பெண்கள் அமைப்பினருடன் சேர்ந்து "தேவை பகுப்பாய்வு  2016, என்னும் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது.

"வடக்கு, கிழக்கு மாகாணப் பெண்கள்' என்ற ஒரே தொடரில் இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்கள் பிரச்சினையைப் பொதுமைப்படுத்த முடியாது. இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இப்படி பொதுமைப்படுத்துவது இயலாது.

எனவே, இன்றைக்கு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் பாதிப்புகளுக்குள்ளாகும் அல்லது பாதிப்புகளைச் சந்திக்கும் பெண்கள் பலவாறானவர்களாக உள்ளனர். மேற்கூறிய பகுப்பாய்வில் கீழ்க்காணும் விதங்களில் பெண்களின் பிரச்சினைகளை நாம் விரிவாகவும் களத்திலிருந்தும் புரிந்துகொள்ள முடிகிறது.


 கணவன் இறந்த, கணவன் காணாமல் ஆக்கப்பட்ட, கணவன் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பிலோ சிறையிலோ உள்ள, கணவன் கைவிட்டுப்போன, நோயுற்ற நிலையிலுள்ள, திருமணமாகாத பெண்கள் (திருமணத்தால் சமூகம் வழங்கும் அந்தஸ்து இல்லாத பெண்கள்), தனித்து வாழும் பெண்கள்  தனித்து வாழும் வயோதிபப் பெண்கள்.


கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையிலுள்ள பெண்கள் சிலரும் இந்த வகைப்பாட்டில் வருவர். குடும்பத்தில் ஆரம்பித்து, வெளியில், போக்குவரத்தில், வேலைத்தலங்களில் என வெவ்வேறு தளங்களிலும் உடல், உள, பாலியல், பொருளாதார ரீதியிலென வெவ்வேறு வடிவங்களிலும் நிகழ்த்தப்படும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட வன்முறைகள் நிகழக்கூடிய பாதுகாப்பற்ற நிலைமைகளில் உள்ள பெண்கள்.


பிறப்பாலோ வேறு காரணங்களாலோ யுத்தத்திலோ உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள். இதில் உடல் அங்கங்கள் இழந்தோர், அங்கங்களின் செயற்பாடுகளில் குறையுள்ளோர், செயற்பாடுகளை இழந்தோர், உடலுள் குண்டுகளின் பாகங்கள் உள்ளோர் போன்றோர் அடங்குவர். இவர்களில் பலர் சில விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டால் தாமாகவே சுயாதீனமாக வாழக் கூடியவர்கள்.

இன்னும் சிலர் விசேட ஏற்பாடுகளுடன் ஏனையோரின் பராமரிப்பு உதவிகள் தேவைப்படுவோர். இன்னும் சிலர் வாழ்நாள் முழுவதும் முழுமையான உதவியும் பராமரிப்பும் தேவைப்படுவோர்.


நேரடியாகப் போராளிகளாகவோ வேறுவகையில் பங்களித்தவர்களாகவோ இருந்தவர்கள். இவர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டோ சிறைத்தண்டனை அனுபவித்தோ திரும்பியவர்களாக இருக்கலாம். இன்னமும் கண்காணிப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கலாம்.


பெற்றோரை இழந்த சிறுமிகள், இளம் பெண்கள், இளவயதில் கர்ப்பத்துக்குள்ளான பெண்கள். பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள்.
இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு மீள வழங்கப்பட்ட காணிகளில் குடியேறும் பெண்கள்.திருமண அந்தஸ்து இல்லாத பெண்கள்.

மேற்கண்ட பெண்கள் "வல்லமைப்படுதல்'என்பது பல்வேறு விடயங்களைப் பொறுத்தே அமைய முடியும். தனித்துவமான தேவையுடைய பெண்களைப் பார்த்தோம். அவர்களுக்குச் சமவாய்ப்பு கிட்டினால்தான் கல்வியும் பணியும் வாழ்க்கை மேம்படலும் சாத்தியமாகும்.

அவ்வாறு சமவாய்ப்பு கிட்டுவதற்கு, பால் சமத்துவமின்மையால் ஏற்படும் பாதிப்புகளைச் சட்டரீதியாக அணுகும் முறை வேண்டும். நீதி பெறுதற்கான கட்டமைப்பு தேவை. சட்ட நீதி பெறுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்த அரசு பாதிக்கப்பட்ட பெண்களை குறித்த சரியான புரிதலைக்கொண்டு அவர்களுடைய சமத்துவத்திற்குக் கொள்கை வகுப்பது அவசியம். அதன்படி அரச நிறுவனங்கள், பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தாமே கையாளக்கூடிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், திறம்படக் கையாளுவதற்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்தல், பெண்களால் அடையாளப்படுத்தப்பட்ட வெவ்வேறு பிரச்சினைகளை உரிமை ரீதியில் புரிந்துகொண்டு வழிகாட்டக்கூடிய ஆலோசகர்கள் பல்வேறு சேவை வழங்கும் மட்டங்களிலும் இணைக்கப்படல், ஆலோசனை மையங்கள் அமைக்கப்படல், பெண்களால் அடையாளப்படுத்தப்பட்ட வெவ்வேறு பிரச்சினைகளை உரிமை ரீதியில் புரிந்துகொள்ளக்கூடிய கையாளக்கூடிய உளவளத் துணையாளர்கள் பல்வேறு சேவை வழங்கும் மட்டங்களிலும் இணைக்கப்படல், விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைகளையும், பிறரைப் போலவே உரிமைகளுடன் வாழ்வதையும் உறுதிப்படுத்தல்.


அரசை அணுகும் வசதிகளைக் கீழ்காணுமாறு ஒழுங்குப் படுத்துதல் வேண்டும்,
அரச அலுவலகங்களில் வெவ்வேறு விசேட தேவையுடையோர் அணுகக் கூடியதான பொதுத் தொடர்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படல், பொதுமக்கள் சந்திப்பு நாட்களில் சந்திப்புகளை அலுவலகங்களின் கீழ்த் தளங்களிலும் வெவ்வேறு தொடர்பாடலுக்குரிய ஏற்பாடுகளுடனும் செய்தல், விழாக்களை ஒழுங்குபடுத்தும் போது வெவ்வேறு விசேட தேவையுடையோரின் பங்குபற்றலைக் கருத்தில் கொண்டு திட்டமிடல்.


இவர்களுக்கான பிரதான அரசமட்டப் பொதுச் சேவைகளைக் கிராம மட்டத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படல், விசேட நடமாடும் சேவைகளை ஏற்படுத்துதல். சகல விசேட தேவையுடைய பெண்களதும் வீட்டுத் தேவை அதனுள்ளான பிரத்தியேக வசதிகள். நீர் வழங்கலுடன்கூடிய மலசலகூட வசதிகள் பூர்த்தி செய்யப்படல்.


இலவச மருத்துவச் சேவையை உறுதிப்படுத்தல். வைத்தியசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படுவதையும் கௌரவமாக நடத்துவதையும் விசேட தேவைகளுக்குரிய வகையில் தொடர்பாடல்களையும் உறுதிப்படுத்தல்.


தொழில் வாழ்வாதாரத் தேவைகள்


விசேட தேவையுள்ளவர்களுக்கான வேலை ஒதுக்கீட்டின் பிரகாரம் ஒவ்வொரு துறையிலும் குறைந்த பட்சம் மூன்று சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல். அதிக எண்ணிக்கையான விசேட தேவையுள்ளோர் இருக்கும் மாவட்டங்களில் இந்த வீதத்தைக் கூட்டல்.


மாறுபட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்பினை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய விசேடமாக வடிவமைக்கப்பட்ட தொழிற்பட்டறைகள், பண்ணைகள் போன்றன செயற்படுத்தப்படல்.


வாழ்க்கைக்குத் தேவையான முழுமையான வருமானத்தை ஈட்டமுடியாத ஒவ்வொருவருக்கும் குறை நிரப்பு நிதி வழங்கப்படல்.
வேலைசெய்ய முடியாதவர்களுக்குப் போதுமான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படல்.


 மேற்குறிப்பிட்ட கொடுப்பனவுகளுக்கான நிதியம் மாகாணசபையில் உருவாக்கப்படல்.


இவ்வாறு பல்வேறு தேவைகளையும் அதற்கான தீர்வுகளாக அரசுக்கும் பெண்கள் உள்ளிட்ட சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டிய உதவி அளிக்கக்கூடிய விடயங்களையும் கடந்த மாதம் பெப்ரவரி 2016 முதல் மகளிர் நாள் வரைக்கும் வடமாகாணத்தில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் குறித்த பிரச்சினைகளை, ஆவணப்படுத்தி "தேவை பகுப்பாய்வு  2016' ஐ சுகாதார அமைச்சு முன்வைத்ததை வடக்கு மாகாண சபை ஏற்றுக்கொண்டது.

அதிகபட்சம் நேர்மையான ஒரு பகுப்பாய்வு அறிக்கையைத் தமிழ் மாகாண அரசு ஏற்றுக் கொண்டதெனில் அப்பகுப்பாய்வு சுகாதார அமைச்சர் முதல் உளவளத் துணை உதவியாளர்கள் ஈறாக 15 தரப்பு அரசுப் பிரதிநிதிகளையும் ஐக்கிய நாட்டுச் சபையின் அகதிகளுக்கான ஹை கமிஷன் மற்றும் யூனிசெப் முதல் 48 அரசு சாரா அமைப்புகள் கலந்துகொண்டு கருத்தளித்துத் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு அறிக்கை பல விடயங்களை முன்வைக்கிறது.


குறிப்பாக சமீபகாலத்தில் பெண்கள்மீதும், பெண் குழந்தைகள்மீதும் நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் உடனடிக் கவனஈர்ப்புக் கொள்ளவைப்பனவாக உள்ளன. எனவே கடந்த 08.03.2016 அன்று யாழ்ப்பாணப் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு பிரதமர் ரணிலிடம் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு உடன்நீதி வழங்க நடவடிக்கை தேவை எனவும் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலையுண்ட பெண்கள், இளம்சிறார் பட்டியலை அளித்து உடனே நீதிவழங்க வலியுறுத்தும் அறிக்கை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அவ்வறிக்கையில் பல வன்புணர்வுக் கொலைச் சம்பவங்களும் அதற்காக நீதி தாமதித்து வருவது குறித்தும் கவலையுடன் கூறப்பட்டுள்ளது.


13.05.2015இல் யாழ்ப்பாணத்தில் (புங்குடுதீவு) வைத்து 18 வயதுப் பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் செய்து நீதி கோரிய போதிலும் இன்னமும் அது எட்டப்படவில்லை. மட்டக்களப்பில் 2009 இல் 24 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதிலும் இன்னமும் அப்பெண்ணின் தாயார் நீதிமன்றம் ஏறி இறங்குவதுடன் 
நீதியை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு மாத்திரம் பல வன்புணர்வுகள், கொலைகள் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 15.10.2016 இல் நான்கு வயதுச் சிறுமி மட்டக்களப்பில் வன்புணர்வு. 26.01.2016 இல் சம்பூர், திருகோணமலையில் ஆறு வயதுச் சிறுவன் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை. 29.01.2016 இல் குருநாகலில் 13 வயதுச் சிறுமி வன்புணர்வு மற்றும் சித்திரவதையின் பின்னர் கொலை.

31.01.2016 இல் அம்பாறையில் 16 வயதுச் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு. 13.02.2016 இல் நுவரெலியாவில் ஆறு வயதுடைய இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம். பெப்ரவரி 2016 இல் கம்பஹாவில் 18 வயதுடைய பெண் வன்புணர்வு. பெப்ரவரி 2016 இல் கம்பளையில் ஏழு மாதக் குழந்தையின் தாய் 10 ஆண்களால் வன்புணர்வு.

16.02.2016 இல் வவுனியாவில் 14 வயதுச் சிறுமிமீது வன்புணர்வின் பின்னர் கொலை. 23.02.2016 இல் மட்டக்களப்பில் பெண் கொலை. 27.02.2016 இல் வவுனியாவில் 13 வயதுச் சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம். 15.02.2016 இல் யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்.

இவற்றுடன் விசேடமாக 23 வயதுப் பெண் தொடர்ச்சியாக கடந்த 17 வருடங்களாகத் தனது தந்தையாலும், சகோதரர்களாலும் ஒன்றுவிட்ட சகோதரர்களாலும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்தமை, 17.02.2016 அண்மித்த நாளில் தெரிய வந்தமை என்பனவற்றை குறிப்பிட்டுக் கூறலாம்.


மேற்கூறிய நிலைமைகள் மிகுந்த கவன ஈர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாகச் சில மாற்றங்கள் தேவை என்கிற அடிப்படையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணப் பெண்கள் அமைப்பினர் மார்ச் எட்டு தினத்தைக் கறுப்பு நாள் என்றும் இம்மாதத்தைக் "கறுப்புப் பங்குனி' என்றும் மேற்கண்ட நிலைமையை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் இதே தொனியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

2009 போருக்குப் பின் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாகக் கூறுவதை முழுமையாக ஏற்க இயலாது. ஏனெனில், வடக்கு மாகாணத்தில் மட்டும் தொடர்ந்து நிலையாக நடத்தப்பட்டுவரும் இராணுவ முகாம்களும் அதையொட்டி அமைக்கப்பட்டுள்ள எண்ணற்ற புத்த விகாரைகளும் அந்த முகாம்களுக்குள்ளும், அதன் நீட்சியான இடங்களிலும் எவரும் செல்லவோ வெளிஉலகுடன் தொடர்பு கொள்ளவோ இயலாது என்னும் உண்மை, இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்பாகிவிட்டது என்னும் உண்மையற்ற கூற்றை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.


இன்றுவரை யாழ்ப்பாணம், கொக்குவில், முகமாலை, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை, வவுனியா, ஈற்பெரியகுளம் ஆகிய இடங்களிலுள்ள இராணுவ முகாம்களும் வவுனியா பலாலி ஆகிய இடங்களில் உள்ள விமானப் படைத் தளங்களும் காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, வன்னி ஆகிய இடங்களில் உள்ள கடற்படைத் தளங்களும் அதில் உள்ளே தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கிலுள்ள படைகளும் 11 இலட்சம் மக்களின் ஜனநாயக, சுதந்திர வாழ்க்கை மேம்பட என்ன செய்கிறார்கள் என்பது பெரும் கேள்வி.

மேலும், 2009 போருக்குப் பின்னும் தொடர்ந்து நடக்கிற மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள், கடத்தல்கள், சட்டவிரோத சித்திரவதை முகாம்கள் போன்றவை மிகப்பெரிய மனித உரிமை மீறல்களாகத் தொடர்வதைக் கவனிக்க முடிகிறது. சர்வ தேசிய அமைப்புகள் தரும் பல அடிக்குறிப்பாக இலங்கை குறித்த "சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்'  என்னும் அரசு சாரா நிறுவனம் இலண்டனில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கைகளில் (நிறுத்து அறிக்கை www.stoptorture.com மற்றும் www.itjpsi.com) இக்கொடூரமான போருக்குப் பின்பு மேலும் அதிகமாகச் சர்வதேச விதிகள் மீறப்படுவதை நாம் அறியலாம்.


எனவே, இங்கு தமிழ்நாட்டு மேடைகளில் பேசப்படும் "உணர்ச்சிபூர்வமான' வார்த்தைகளுக்கும், யதார்த்தத்தில் இலங்கைத் தமிழ்மக்கள் குறிப்பாகப் பெண்களின் இன்னல்களுக்கும் உள்ள இடைவெளியை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பல காரணங்களால் முக்கியத்துவம் பெறுவதாகிறது.


கட்டுரையாளர் : வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்
நன்றி ; காலச்சுவடு

http://www.thinakkural.lk/article.php?article/sr3rkvntle2237b166b57d195212sgxgw5370cd41f80dd29ed523d9vkleg#sthash.7uJI7mkJ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.