Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருண்ட முள்ளிவாய்க்காலில் ஒளிர்விட்ட மெழுகுவர்த்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட முள்ளிவாய்க்காலில் ஒளிர்விட்ட மெழுகுவர்த்திகள்

மு.திருநாவுக்கரசு

<p>இருண்ட முள்ளிவாய்க்காலில் ஒளிர்விட்ட மெழுகுவர்த்திகள்</p>
 

 

'இந்த பூமி அணுகுண்டின் நிழலில் நிறுத்தப்பட்டுவிட்டது' என்று அணுகுண்டு வீசப்பட்டபின் பூமியைவிடவும் பாரமான தன் கருத்தை ஜோர்ஜ் ஓவல் கூறினார். அணுகுண்டைப் பற்றி இதைவிட மேலான கருத்தை யாரும் சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை.

மச்ச நியாயமும், தொழில்நுட்பத்தின் ஆதிக்கமும் இணைந்து மனிதப் பண்பாட்டையும், பூமியின் வாழ்வையும் சிறைப்படுத்திவிட்டதை ஜோர்ஜ் ஓவலின் மேற்படி கருத்து பிரகடனப்படுத்தியது.

'அணுகுண்டை வீசாமல் யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாதென்று கூறும் நியாயத்தில் ஓரளவு உண்மை இருப்பதுபோல் தோன்றினாலும் அணுகுண்டு வீசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று 13 அல்லது 14 வயது மதிக்கத்தக்க ஒரு ஜப்பானிய பள்ளிச் சிறுமி கடந்த மே 27ஆம் தேதி பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டாள்.

இது ஜோர்ஜ் ஓவல் கூறிய கருத்துக்கு நிகராகவோ அல்லது சற்று மேலாகவோ அமைந்துள்ளது. அறிஞன் ஜோர்ஜ் ஓவல் அறிவுபூர்வமாக உலகின் எதிர்காலம் பற்றி சிந்தித்து மேற்படி கருத்தை கூறியிருந்த அதேவேளை, ஜப்பானிய சிறுமி அதுவும் அணுகுண்டு வீசிய அமெரிக்க நாட்டின் ஒரு ஜனாதிபதி ஒபாமா, அணுகுண்டு வீசப்பட்ட ஹீரோஷிமா நகரில், அதற்குப் பலியான 1,40,000 பேருக்கு அஞ்சலி செலுத்தும் மலர்வளையத்தை சாத்தும் அந்த வேளையில், அந்தத் திடலில் தன் இயல்பாக மேற்படி நேர்காணலின் போதான ஒரு கேள்விக்கு பதிலளித்திருந்தாள்.

விரைவாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக அணுகுண்டு வீசி அப்பாவி மக்களை கொன்றிருக்கக்கூடாது என்பது அவளது தெளிவான பதிலாக இருந்தது. அவள் தனது பதிலில் மேலும் கூறுகையில் 'எமது ஜப்பானிய இராணுவமும் யுத்தக் குற்றம் புரிந்ததாக எமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்' என்று அவள் நியாயத்தின் இன்னொரு பக்கத்தை அவள் மறைக்கவில்லை. ஆனால் எதற்காகவும் அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்திருக்கக்கூடாது என்பதை அவளின் பசுமையான இதயம் சொல்லத் தயங்கவில்லை.

ஜோர்ஜ் ஓவலின் வார்த்தை மூளையில் இருந்து இதயத்தால் வந்தது. அது மனிதப் பண்பாடு அணுகுண்டின் கீழ் பணையம் வைக்கப்பட்டு பண்பாடு பணிந்து நிற்பதைக் கூறியது. ஆனால் சிறுமியின் வார்த்தை இயத்தில் இருந்து மூளையை உராய்ந்த வண்ணம் வெளியே வந்தது.

இவ்வாறே ஓன்றரை இலட்சம் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டமையும் மேற்படி இச்சிறுமியின் வார்த்தைகளால் அளவீடு செய்யப்படத்தக்கது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை எதனாலும் சமன் செய்யவோ அன்றி பண்டமாற்றுச் செய்யவோ அல்லது எவ்வகையிலாவது நியாயப்படுத்வோ முடியாது.

<p>இருண்ட முள்ளிவாய்க்காலில் ஒளிர்விட்ட மெழுகுவர்த்திகள்</p>

2016 மே-18ஆம் தேதிக்கும் யூன்-2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட இரண்டு வாரங்களில் ஐந்து முக்கிய சம்பவங்கள் இந்த பூமியில் நிகழ்ந்தேறியுள்ளன.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களுக்கு மே-18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் வைபவம் நிகழ்ந்தது.

அதே நாளில் மேற்படி ஒன்றரை இலட்சம் மக்களையும் கொன்று குவித்த சிங்கள இராணுவத்தினருக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேடயங்களை வழங்கி பாராட்டும் வைபவம் நிகழ்ந்தது.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்குப் பலியான 1,40,000 மக்களுக்கு இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஹீரோஷிமா நகரில் அந்த அணுகுண்டு வீச்சு நினைவிடத்தில் மலர்வளையம் சாத்தி அஞ்சலி செலுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு மே-27ஆம் தேதி நடந்தேறியது.

1982ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சியிலிருந்த போது 40,000 மக்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஆபிரிக்க ஒன்றிய நீதிமன்றத்தால் சார்ட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இசைன் கைபிரேக்கு கடந்த ஏப்பிரல் மாதம் 31ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலக மகாயுத்தத்தின் போது 1915ஆம் ஆண்டு 15 இலட்சம் ஆர்மீனிய மக்களை துருக்கியப் படையினர் கொன்று குவித்தமையானது 'ஓர் இனப்படுகொலை' என்று ஜெர்மனி நாடாளுமன்றத்தில் யூன் 2ஆம் தேதியன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு மனிதப் படுகொலை குறித்த மேற்படி ஐந்து சம்பவங்களும் இரண்டு வார இடைவெளியில் நடந்தேறியுள்ளன. இதில் தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தினருக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டிய நிகழ்வைத் தவிர மற்றைய மூன்றும் மனிதப் படுகொலைக்கு எதிரான ஒரே குரல்களாக உள்ளன.

அதாவது ஆர்மீனியப் படுகொலை நிகழ்ந்து ஒரு நூற்றாண்டின் பின்பு அதனை மனிதகுல வரலாறு மன்னிக்கத் தயாரில்லை என்பதை ஜெர்மனின் நாடாளுமன்றத் தீர்மானம் பறைசாற்றியது. ஆர்மீனிய இனப்படுகொலையும், அமெரிக்க அணுகுண்டு வீச்சுப் படுகொலையையும் வரலாறு மன்னிக்கத் தயாரில்லாதிருந்ததுடன் அந்த வரலாற்று மடியில் அதற்கான நிகழ்ச்சி நிரல் இருந்ததையும் நாம் காணமுடிகிறது. அதாவது முக்கால் நூற்றாண்டுகளின் பின்பேயாயினும் உலகப் பெருவல்லரசான அமெரிக்கா தான் அணுகுண்டு வீசிய இடத்தில் மலர்வளையத்தை சாத்துவதை வரலாற்று அன்னை கண்டுகளித்தாள். இது நீதியின் குரல்களுக்கு கிடைத்த ஒருபகுதி வெற்றியாகும்.

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி தேவதையின் ஏட்டில் ஒரு தீர்ப்பு இருக்கவே செய்யும் என்பதை ஹீரோஷிமாவில் ஒபாமா மலர்வளையம் சாத்திய நிகழ்வு எமக்கு நிரூபித்திருக்கிறது.

ஒருவருக்கும் சேதமில்லாத (Zero Casualty) இராணுவ நடவடிக்கையென்று இதுவரை கூறிவந்த இலங்கை அரசு கடந்த மே-18ஆம் தேதி இராணுவத்திற்கு கேடயம் வழங்கும் வைபவத்தின் போது 'யுத்தத்தில் வெற்றி பெற்றமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் யுத்தத்தில் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை கவலையளிக்கிறது' என்ற இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் வார்த்தையில் முதல்முறையாக அரசு தரப்பில் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்டமையானது மேற்படி இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியேயாகும். ஜனாதிபதியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் தமிழ் மக்களின் எதிர்கால வெற்றிகளுக்கான ஓர் அச்சாரமாகும்.

முள்ளிவாய்க்காலில் வெடித்த துப்பாக்கிக்குண்டுகளினதும், வெடிகுண்டுகளினதும், பீரங்கிக் குண்டுகளினதும், விமானக் குண்டுகளினதும் பேரொலி அந்த வட்டாரச் சூழலோடு அடங்கிப் போகக்கூடியவை. ஆனால் அதில் வீழ்த்தப்பட்ட மனிதர்களின் அழுகுரல்களும், நீதியின் குரலும் இலங்கைத் தீவையும் தாண்டி காடு, கடல், மலையென உலகின் அனைத்து கண்டங்களையும் தாண்டி இவை அனைத்திற்கும் அப்பால் காலங்களையும் தாண்டி நீண்டு நின்று நிலைக்கவல்லவை என்பதை வரலாறு ஒருபோதும் நிரூபிக்கத் தவறாது.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டேன். முதலாம் உலக மகாயுத்தத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டேன். இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனம் ஹோமோ சாப்பியன் என்ற மனித இனத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டதையும் கண்டேன். மேலும் இற்றைக்கு 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ நலெடி என்ற இனம் புவிப்பரப்பில் இருந்து எப்படியோ மறைந்து போனதையும் கண்டேன். இவையெல்லாம் என் வரலாற்றுக் கண்களால் கண்ட காட்சிகள். ஆனால் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலையானதை என் பச்சைக் கண்களால் கண்டேன்.

இதுவரை வரலாற்றுக் கண்களால் கண்டவற்றை முள்ளிவாய்க்காலில் பச்சைக் கண்களால் கண்ட காட்சிகள் அதிகம் உணர்வுத் தளத்திற்கு இழுத்துச் செல்பவையாய் உள்ளன. அறிவுத் தளத்தில் உள்ளவற்றை உணர்வுத் தளத்திற்கு இட்டுச் செல்ல கலை-இலக்கியப் படைப்புக்களினாலேயே அதிகம் முடியும். இந்த வகையில் முள்ளிவாய்க்கால் துயரங்களை காலம் கடந்து உணர்வுத் தளத்திற்கு இட்டுச்செல்லவல்ல கலை-இலக்கியப் படைப்புகள் எதிர்காலத்தில் பெருமளவு எழும் என்பதில் சந்தேகமில்லை.

முள்ளிவாய்க்கால் சக்கரத்தில் ஈழத்தமிழரின் வரலாறு சுழன்று முன்னேறுமே தவிர அது முடிவை குறித்ததாய் மாண்டு மடியப்போவது கிடையாது. முள்ளிவாய்க்கால் சக்கரத்தின் சுழற்சியில் இருந்து நீதிமான்கள் பிறப்பெடுக்கிறார்கள், சிந்தனையாளர்கள் தோன்றுவார்கள், உன்னதத் தலைவர்கள் எழுவார்கள், உன்னதமாக கலை-இலக்கியப் படைப்பாளிகள் உருவாகுவார்கள்.

கண்டம் கடந்து கனடாவில் வாழும் ஈழத்துச் சிறுமியான பாடகி ஜெசிக்காவின் குரலோசையில் முள்ளிவாய்க்காலின் பெருந்துயரம் கனப்பதைக் காணலாம்.

தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன பல கலை-இலக்கியப் படைப்புக்களில் இவற்றிற்கான அச்சாரங்கள் தெரிகின்றன. இவை வரலாற்றின் கருப்பையில் பிரசவமாக இன்னும் சற்று காலம் பிடிக்கலாம். அதுவும் ஒரு வரலாற்றின் நியதியே. இந்த முள்ளிவாய்க்காலின் பிரசவங்களைப் பற்றி அடுத்த அடுத்த கட்டுரைகளில் பேசுவதற்கு முன்பு இருண்ட முள்ளிவாய்க்காலில் ஒளிர்விட்ட சில மெழுகுவர்த்திகளின் கதையை இங்கு இக்கட்டுரையில் முதலில் அறிமுகமாய் நோக்குவோம்.

வன்னியில் வசித்த மொத்த மக்கள் தொகையான 4,46,000 பேரில் 2,70,000 பேர் மட்டுமே உயிர் மிஞ்சியதாக முள்வேலி முகாம்களில் காணப்பட்டனர் என்று அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரம் கூறுகிறது. இத்தொகையினராவது உயிருடன் மிஞ்சுவதற்கு ஏதுவாக அந்த மண்ணில் செயற்பட்ட உன்னத மனிதர்களைப் பற்றி ஒரு கண்கண்ட குறிப்பை இங்கு பதியலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக முள்ளிவாய்க்காலில் குண்டுபட்டு வீழ்ந்த உடலங்களின் சூடாறமுன்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எனப்படும் TROவினால் புதைக்கப்பட்டிருக்காவிட்டால் மேற்படி 2,70,000 பேரும் மிஞ்சியிருக்க முடியாத அளவிற்கு தொற்று நோய்க்கு பலியாகியிருப்பர். இதில் மேற்படி TROவினரின் பங்கும் பணியும், மருத்துவப் பிரிவைச் சேர்ந்தோரினது பங்கும் பணியும் வரலாற்றில் அளவிடற்கரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதில் அனைவரது பெயர்களும் சொல்லமுடியாதுவிட்டாலும் மருத்துவர்கள் திரு.சத்தியமூர்த்தி, திரு.சண்முகராஜா, திரு.சிவபாலன், திரு.ஜோர்ஜ், திரு.சுயந்தன் மற்றும் திரு.தூயவன், திரு.அமுதன் போன்றோர் நான் குறிப்பிடக்கூடிய எனக்குத் தெரிந்த பெயர்களாகும்.

அவ்வாறே மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றிய திரு.கே.பார்த்திபனின் நிர்வாகப் பணியும் அவருடன் சேர்ந்த நிர்வாகிகளின் பணியும் மகத்தானவை.  இவை சார்ந்த விவரங்கள் அடுத்த கட்டுரையில் தொடரும்....

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=16896270-b4f5-4eed-ade3-5af9631a605b

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.