Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கைப் போல் வடமாகாணமும் தனித்துவத்தை இழக்கும் நிலைமை; இதுவரை தடுக்க முடியாவிடினும் இனியாவது தடுக்க வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்!

Featured Replies

கிழக்கைப் போல் வடமாகாணமும் தனித்துவத்தை இழக்கும் நிலைமை; இதுவரை தடுக்க முடியாவிடினும் இனியாவது தடுக்க வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்!

 

இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வெலிக்கடை படுகொலையின் 33ஆவது நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்;

மனிதப்படுகொலை என்று சொல்லும் வகையில் இந்த நாட்டில் கொலைகள் நடைபெற்றுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் எனத் இப்படி பலருக்கு என்ன நடந்தது என தெரியாதுள்ளது.

ஆகவே தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது இந்த நாட்டில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தை முதன்முதலாக அமெரிக்கா கொண்டு வந்தது. அதில் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அது வந்தது.

சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய ஒரு உள்ளக விசாரணையை நாங்கள் நடத்துவோம். அந்த உள்ளக விசாரணை ஊடாக யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும். உண்மைகள் கண்டறியப்படும். அதன் மூலம் தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

தற்போதைய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இந்த தீர்மானத்தின் ஒவ்வொரு வரிகளையும் பார்த்த பின் அதனை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

ஆனால் இன்று அந்த தீர்மானத்தின் பிரகாரம் செயற்படவில்லை. நான் உயிருடன் இருக்கும்வரை சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி கூறுகிறார்.எங்களுடைய நாட்டு நீதித்துறை போதுமானது நாங்கள் வேறு யாரையும் அழைக்கத் தேவையில்லை என பிரதமர் கூறுகின்றார்.

இவர்களுடைய கருத்துக்கள் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து இல்லை எனக் கூறிய வெளிவிவகார அமைச்சர் தற்போது நான் சர்வதேச நீதிபதிகளை கோரவில்லை. அவர்களிடம் சில தொழில்நுட்ப உதவிகளை பெறலாம் என்றே கூறினேன் என கூறுகின்றார்.

மொத்தத்தில் யுத்தக் குற்றங்கள், காணாமல் போதல் தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பது தான் முதலாவது விடயம். அதுமட்டுமல்ல, விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்பாகவே இராணுவத்தினர் விசாரிக்கப்பட மாட்டார்கள் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு எதிரான விசாரணைகள் நடைபெறமாட்டாது. அப்படியாயின் யாருக்கு எதிராக விசாரணை..? ஏன் இந்த விசாரணை? என்பன போன்ற பல்வேறுபட்ட கேள்விகள் தமிழ் மக்களுக்கு எழுந்திருக்கின்றன.

தற்போதுள்ள அரசாங்கத்தை கொண்டு வந்ததில் தமிழ் மக்களுக்கும் பாரிய பங்களிப்பு இருக்கிறது.தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவை மாற்ற வேண்டும் என விரும்பினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை விரும்பியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமாறு மக்களை கேட்டது. மக்களும் ஆதரவு வழங்கினார்கள்.

இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதி மாறினார். அதன்பின் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம், புதிய அமைச்சரவை என மாறியுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறும் இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன நல்லாட்சியை கொடுத்தார்கள்?

சரியான அரசியல் தீர்வு, காணாமல் போன பிள்ளைகளை கண்டு பிடிப்பது, தமிழ் சிங்கள மக்களிடையே சமத்துவமான வாழ்க்கை முறை, சமத்துவமான அதிகார பகிர்வுகள் என ஏதாவது கிடைத்ததா? ஆனால் தமிழ் மக்களுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருப்பது என்ன?

முன்னைய அரசாங்கத்தை விடுவோம். இந்த அரசாங்கத்தால் கிடைத்தது என்ன? முழத்திற்கு முழம் புத்தர் சிலை, சிங்கள குடியேற்றங்கள், இராணுவம் காணிகளை கைப்பற்றுவது, இவை தவிர இந்த அரசாங்கம் என்ன செய்தது?

சம்பந்தனின் மாவட்டத்தில் உள்ள சாம்பல் தீவில் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சிலையை தூக்கிவிட்டு புத்தர் சிலை வைத்தார்கள். பிள்ளையார் சிலையை தூக்கி எறியலாம். ஆனால் புத்தர் சிலையை வைத்தால் நீதிமன்றம் போகலாம்.

நீதிமன்றம் புத்தர் சிலையை அகற்றுவதற்கான ஆணையை கொடுக்கவில்லை. முல்லைத்தீவு, கொக்கிளாயில் ஒரு தனியாருடைய காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்டு வருகிறது.

காணிச் சொந்தக்காரர் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் புத்த பிக்கு சொல்கிறார் எனக்கு தடை உத்தரவு தர நீ யார்? இன்றும் அந்தப் புத்த கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றத்திற்கு எதிராக புத்த கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே, இந்த அரசாங்கமும் இந்தச் செயற்பாடுகளுக்கு ஒரு மறைமுகமான ஆதரவைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக வடக்கு மாகாணம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடிய ஒரு மாகாணம். புத்த பிக்குகள் விரும்பினால் எதையும் செய்யலாம். யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர் ஒருவர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு சொன்ன விடயம் தமிழ் பத்திரிகையில் வந்தது.

தமிழ் மாணவர்கள் அனைவரும் இராணுவத்திற்கு சரியான பயம் என்று சொல்கிறார். ஆகவே பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தை நிறுத்த வேண்டும். அவ்வாறு இராணுவத்தை நிறுத்தினால் தமிழ் மாணவர்களால் பல்கலைக்கழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

இப்படியே போனால் பல்கலைக்கழகத்தில் ஒரு இராணுவக் குடியிருப்பையே ஏற்படுத்தச் சொல்லி அவர்கள் கேட்பார்கள். இவ்வாறான ஒரு நிலையில் புத்த பிக்குகள் செயற்படவும், சிங்கள மாணவர்கள் செயற்படவும், வடக்கு மாகாணம் தொடர்பில் சிங்கள மக்கள் செயற்படவும் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்தது யார்?

இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. ஆனால் செய்ய முடிந்தது என்ன? இந்த இணைந்த செயற்பாட்டின் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடிந்ததா?

காணாமல் போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடிந்ததா? புத்தர் சிலை வைப்பதை தடுக்க முடிந்ததா? இது குறித்து அரசாங்கத்துடன் பேசப்பட்டதா? பேசப்பட்டால் இது ஏன் நிறுத்தப்படவில்லை? அல்லது அரசாங்கம் கூட்டமைப்பு கூறுவதை மறுதலிக்கிறதா?மறுதலித்தால் அதற்கு காரணம் என்ன? கிழக்கு மாகாணம் போல் வடக்கு மாகாணமும் தமது தனித்துவத்தை இழக்கும் நிலை வந்துள்ளது.

வடக்கு மாகாணத்தை சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு கீழ் கொண்டு வர இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது. அது தான் உண்மை. இந்த அடிப்படையில் தான் வேலைகள் நடைபெறுகின்றன. இதை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா? அல்லது புரிந்தும் புரிந்து கொள்ளாமல் இருப்பது போல் இருக்கின்றோமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

தமிழ் மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராளிகள் உயிரைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் நாங்கள் அவர்கள் உயிர்கொடுத்த சிந்தனைக்கேற்ப செயற்படுகின்றோமா? நாங்கள் இன்று கதிரைகளை காப்பாற்றி கொள்ளவும், நமது இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கும் ஏற்ப செயற்படுகின்றோமா? என்பது தெரியவில்லை.

ஏனெனில் இந்த நல்லாட்சிக் காலத்தில் எதனையும் எம்மால் செய்ய முடியாதுள்ளது. ஆகவே இது இப்படியே போய்க் கொண்டிருந்தால் நாம் எங்கே போய் சேரப்போகின்றோம்? இது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கெல்லாம் தலைமை தாங்கக் கூடியவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தச் சிறிய விடயங்களையே செய்ய முடியாத அரசாங்கம். புதிய அரசியலமைப்பு ஊடாக வடக்கு  கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்சி முறை, அதிகாரபரவலாக்கம் போன்றவற்றை செய்ய முன்வருவார்களா? இதெல்லாம் நடக்குமா என்ற கேள்வி உள்ளது. ஆனால் சம்பந்தன், குழப்ப வேண்டாம். எல்லாம் வரும் எனக் கூறுகிறார். அதேவேளை சில சமயம் இது எனது கணிப்பு தான் எனவும் கூறுகிறார்.

குழப்ப வேண்டாம் என்றால் போராட வேண்டாம். அமைதியாக இருங்கள் என்றே கூறுகின்றார். ஆனால் இந்த அரசியல் சாசனத்தில் வரவேண்டியவை இருக்கின்றன. அவை வருமா என்பதற்கு அப்பால் பௌத்த கோவில்கள், சிங்களக் குடியேற்றம், இராணுவ வெளியேற்றம் என்பன குறித்து பேசப்படுமா, இது அரசியல் சாசனத்தில் வராது. இது நாளாந்தப் பிரச்சினை.

நாவற்குழி, கோணேஸ்வரம், கேதீஸ்வரம், கொக்கிளாய் என பல பகுதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவை அகற்றப்படுமா? வந்திருந்தால் அகற்ற முடியாது. வருவதற்கு முன்னரே அவற்றைத் தடுக்க வேண்டும். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.இது தள்ளிப் போடக் கூடிய விடயம் இல்லை. திருகோணமலை  பறிபோயிருக்கின்றது. மட்டக்களப்பு பறிபோகிறது.வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னாரிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

கிழக்கு மாகாணம் போல் வடக்கும் போய் கொண்டிருக்கிறது. எனவே காலத்தை இனியும் கடத்த முடியாது.இவை வெறுமனே கேள்விகளாக இருக்க கூடாது. இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

நன்றி: தினக்குரல்

http://thuliyam.com/?p=35919

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.