Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் நடைபெற்ற மு.திருநாவுக்கரசு எழுதிய "இலங்கை அரசியல் யாப்பு" நூல் வெளியீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய " இலங்கை அரசியல் யாப்பு" (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. கிழக்கு லண்டன் - ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணி வரை இடம்பெற்றது.

   

தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாளர் திரு.என். செல்வராஜா அவர்களும், வெளியீட்டுரையினை ஊடகவியலாளர் திரு.தி.திபாகரன் அவர்களும் நிகழ்த்தினர் நூலின் பிரதிகளை திரு.பொ.சத்தியசீலன் அவர்களும், திரு.என்.செல்வராஜா அவர்களும் வழங்க மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் பிபிசி அறிவிப்பாளருமான திருமதி,ஆனந்தி சூரியப்பிரகாசம், பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு.ரவிச்சந்திரன், மற்றும் திரு.பத்மநாப ஐயர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து சிறப்புரையினை தமிழீழ பொருளாதார ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர் அவர்கள் நிகழ்த்தினார். இதன் பின்னரான ஆய்வுரைகளை ஆய்வாளர் திரு.காதர், ஊடகவியலாளர் திரு.கோபிரட்ணம், ஊடகவியலாளர் திரு.கே.வி.நந்தன், மு.திருநாவுக்கரசு அவர்களின் மாணவர்களான திருமதி.திரிவேணி சதீஸ் (அரசியல் விஞ்ஞானத்துறை), திரு.சேனாதி முத்தைய்யா (பொருளியல்துறை) தமிழ்த்தோழமை இயக்கத்தை சார்ந்த செல்வி.பாரதி ஆகியோர் நிகழ்த்தினர்.

இவ் நூலின் ஆசிரியர் மு.திருநாவுக்கரசு அவர்கள் இணையவழியாக மக்க்ளின் கேள்விகளுக்கு பதில் வழங்கியதை அடுத்து இறுதியாக ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்கள் நன்றியுரையினை வழங்க நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

ஒரே நாளில் தாயகத்திலும், பிரித்தானியாவிலும் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் வவுனியாவில் 700 க்கும் அதிகமான மக்களும், பிரித்தானியாவில் நூற்றுக்கும் அதிகமான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(1).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(2).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(3).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(4).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(5).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(6).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(7).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(8).jpg

 

 

SLC_BOOK_LAUNCH-080816-seithy%20(9).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=163135&category=TamilNews&language=tamil

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரு மாஸ்டரின் அரசியல் யாப்பு நூல்: யாருக்கு எதனைச் சொல்கிறது?

கலாநிதி சர்வேந்திரா

<p>திரு மாஸ்டரின் அரசியல் யாப்பு நூல்: யாருக்கு எதனைச் சொல்கிறது?</p>
 

 

ஈழத்தமிழர் தேசத்தின் மூத்த வரலாற்று அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் «அரசியல் யாப்பு – டொனமூர் முதல் சிறிசேன வரை (1931-2016)» என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் தமிழ் ஆய்வு மையத்தின் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. மிகுந்த காலப்பொருத்தம் வாய்ந்தவொரு வெளியீடாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. இந் நூலின் வெளியீடு வவுனியாவிலும் இலண்டனிலும் நேற்றையதினம் (06.08.2016) இடம்பெற்றிருக்கிறது. இந்நூல் குறித்தவொரு குறிப்பாகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது. இருப்பினும் இந் நூல் குறித்து மட்டுமன்றி இந்நூல் ஆசிரியர் குறித்தும், ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் அறிவு சார்ந்த சிந்தனையினதும் அதன் பாற்பட்ட செயற்பாடுகளதும் போதாமை குறித்தும் சில கருத்துக்களைப் பதிவு செய்தலும் அவசியம் எனக் கருதி இவை குறித்தும் இக் கட்டுரை தொட்டுச் செல்கிறது.

ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தின் தத்துவார்த்த, மூலோபாய, தந்திரோபாய சிந்தனைகள் குறித்து கவனம் கொள்ளும் எவரும், ஆய்வுகள் செய்யும் எவரும், மு.திருநாவுக்கரசு அவர்களைத் தவிர்த்துவிட்டு தமது ஆய்வுகளைச் செய்ய முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் புவிசார் அரசியல் சிந்தனையின் பிதாமகர் என்றும் நாம் அவரைக் குறிப்பிட முடியும். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி மாணவனாக இருந்த 1982-1986 காலத்தில் மு.திருநாவுக்கரசு அவர்கள் அங்கு வரலாற்றுத்துறை விரிவுரையாளராக இருந்தார். ஒரு தடவை கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் தான் விரிவுரை மண்டபங்களுக்குள் கற்றுக் கொண்டவையினை விட விரிவுரை மண்டபங்களுக்கு வெளியில் கற்றுக் கொண்டவையே அதிகம் எனத் தனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவகாலம் பற்றித் தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இக் கூற்று எனக்கும் எனது பல நண்பர்களுக்கும் மிகவும் பொருந்திப் போகிறது. இவ்வாறு நான் விரிவுரை மண்டபங்களுக்கு வெளியில் கற்றுக் கொண்டவற்றுக்கு பங்களித்தவர்களில் மூவர் முக்கியமானவர்கள். திரு மாஸ்டர், கலாநிதி சிதம்பரநாதன், பேராசிரியர் சிவத்தம்பி ஆகிய இம் மூவரும் எனக்கு வகுப்பறை ஆசிரியர்களாக இருந்ததில்லை. இருப்பினும் வெவ்வேறு துறைகளில் எனது அறிவு, ஆளுமை வளர்ச்சிக்கு இவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

திரு மாஸ்டர், திருநா என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மு.திருநாவுக்கரசு அவர்கள் இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினையின் சிக்கல்கள் பற்றியும் அதன் புவிசார் அரசியல் பரிமாணங்கள் பற்றியும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பதற்கு என் போன்ற பலருக்கு வழிகாட்டியாக, ஆசானாக இருந்தவர். கருத்தரங்குகள் மூலமும், நேரடியான உரையாடல்கள் மூலமும் இவரிடம் நாம் கற்றுக் கொண்டவை அதிகம். தனது மாணவர்களின் திறமை கண்டு அவற்றை அவர் ஊக்குவிக்கும் விதம் அற்புதமானது. வணிகமாணி மாணவனான என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் காலத்தில் ஊக்குவித்தவரும் இவர்தான். ஆழமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர் இவர். தனது படிப்பறிவையும் பட்டறிவையும் இணைத்து தனது மார்க்சிய வழிப்பட்ட ஆய்வுமுறையின் ஊடாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலை குறித்து இவர் சிந்தித்த விதம் சமகாலத்தில் நாம் வேறு எவரிடமும் காணமுடியாதது. தனது சொந்தப் பெயரிலும் புனைப்பெயரிலும் பல நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் (1985), புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு (1990), இலங்கை: இனப்பிரச்சனையின் அடிப்படைகள் (1991), இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை (1993), இலங்கை அரசியல் யாப்பு (1994), சமஸ்டியா தனிநாடா (2004), ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் (2008), தேசியமும் - ஜனநாயகமும் (2010) போன்ற நூல்கள் இவர் எழுதியவற்றில் குறிப்பிடப்பட வேண்டியவையாகும்.

திரு மாஸ்டர் அறிவியல் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவர். அறிவின் வழி செயற்பட வேண்டும் என வலியுறுத்துபவர். போராட்டத் தலைமை அறிவின் பாற்பட்டு செயற்படவில்லை என அவர் கருதிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது காட்டமான, கூர்மையான விமர்சனங்களை அவர்களிடம் நேரடியாகவே 1970 களின் இறுதிப்பகுதியில் இருந்து முள்ளிவாய்க்கால் காலப்பகுதி வரையும் தெரிவித்து வந்தவர். மக்ளோடு மக்களாக, மக்களின் துயரைத் தாமும் சுமந்தவாறு முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணம் வரை களத்தில் வாழ்ந்தவர். இன்று தனது கருத்துக்களை வாழவைக்கும் நோக்கில் தேசம் தாண்டி வாழ்ந்து வருகிறார். இவரும் நாமும் தாயகம் திரும்பும் நிலை விரைவில் வர வேண்டும் என்பதே எமது வேண்டுதல் ஆகும்.

2.

<p>திரு மாஸ்டரின் அரசியல் யாப்பு நூல்: யாருக்கு எதனைச் சொல்கிறது?</p>

திரு மாஸ்டர் எழுதியுள்ள «அரசியல் யாப்பு – டொனமூர் முதல் சிறிசேன வரை (1931-2016)» என்ற நூல் டொனமூர் காலத்தில் இருந்து இற்றைவரையான காலத்தில் இலங்கைத்தீவின் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டமை குறித்த யாப்பின் அரசியல் (Politics of Constitution) குறித்துப் பேசுகிறது. வரலாற்று ரீதியாக அனைத்து யாப்பு உருவாக்க முயற்சிகளிலும் ஈழத் தமிழ் மக்கள் பலிக்கடாவாக்கப்பட்ட நிலைமைகளையும் அதற்கான காரணங்களையும் இந்நூல் தர்க்கரீதியாக முன்வைக்கிறது. இந்நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் நிலைப்பாடுகள் பல இந் நூலாசிரியரால் முன்னர் அவரது பல்வேறு நூல்களிலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள தேசம், இந்தியா மீது கொண்டுள்ள வரலாற்றுப் பகைமையும் அச்சமுமே ஈழத் தமிழர் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் இனஅழிப்புத் தாக்குதல்களுக்கான அடிப்படைக் காரணம் என்பதனையும் இது குறித்த புவிசார் அரசியலை புரிந்து கொள்ளாமல் இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனையும் இந்நூல் தனது அடிப்படை வாதமாக முன்வைக்கிறது.

வரலாற்றுரீதியாக யாப்பு உருவாக்கம் குறித்து எடுக்கப்பட்ட ஒவ்வாரு முயற்சிகளும் ஏதோவொரு வகையில் இந்தியாவின் செல்வாக்கை இலங்கைத் தீவில் மட்டுப்படுத்தும் உள்நோக்கத்துடன் சிங்கள தேசத்தின் அரசியற்பலத்தை வலுப்படுத்தும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பதனையும், இம் முயற்சிகளில் ஈழத் தமிழ் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டு அவர்களது அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் இந்நூல் தெளிவாக முன்வைக்கிறது. பிரித்தானியர்கள் இலங்கைத்தீவைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தமையின் முதன்மை நோக்கம் இந்தியா மீதான தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதாகவே இருந்தது என்பதனையும் இந்நூல் தனது வாதங்களில் ஒன்றாக முன்வைக்கிறது. சிங்களத் தலைவர்கள் தமது தேசத்தின் அரசியற்பலத்தை அதிகரிப்பதற்கான மார்க்கங்களைத் தொலைதூரச் சிந்தனையுடன் ஆராய்ந்து செயற்படுத்த, தமிழ்த் தலைவர்கள் எவ்வித புவிசார் அரசியல் புரிதலும் இன்றி, நுண்ணரசியல் அறிவின்றி தோல்வியினைத் தழுவிக் கொண்டதனையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

காலனித்துவக் காலத்தில் ஈழத் தமிழர் தலைவர்கள் இந்தியத் தலைவர்களோடு நெருக்கமான உறவு கொள்ளத் தொடங்கிய காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு சிங்கள தேசத்தின் அரசியற்பலத்தை அதிகரிக்கும் வகையில் பொதுவாக்குரிமை முறையினை அறிமுகப்படுத்தியமையினைச் சுட்டிக் காட்டும் இந்நூல், முற்போக்கான ஜனநாயகம் சார்ந்த ஒரு விடயம் எவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் சிறிய தேசங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது என்பதனையும் சுட்டிக் காட்டுகிறது. எண்ணிக்கையில் குறைந்த மக்களது அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டு உரிமைகைளப் பாதுகாப்பதற்கான தனித்துவமான ஏற்பாடு ஏதும் இன்றி பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரத்தை கையளிக்கும் ஜனநாயகமுறையின் ஆபத்தையும் இந்நூல் உணர்த்துகிறது.  பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் தமிழர்களை முதலில் பயன்படுத்திய பிரித்தானியர் இந்தியத் தலைவர்களின் செல்வாக்கை இலங்கைத் தீவில் மட்டுப்படுத்த சிங்கள தேசத்தின் அரசியற்பலத்தை அதிகரிக்க எடுத்த முடிவைத் தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டுகிறது.

டொனமூர் அரசியல் யாப்பின் பின்னர் அமைந்த தனிச் சிங்கள மந்திரிசபை சிங்கள தேசத்தின் அரசியல் பலத்தை வலுவாக்கியமையினையும் இதன் தாக்கம் சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தில் எவ்வாறு இருந்தது என்பதனையும் இந்நூல் குறிப்பிடுகிறது. பிரித்தானியரின் நலன்கள் எவை என்பதனைப் புரிந்து கொண்டு சிங்களத் தலைவர்கள் அவர்களுக்குத் தேவையான தளவசதிகளை வழங்கி, Westminsiter முறையில் யாப்பினை ஆக்கித் தமது அரசியற்பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டமையினை இந்நூல் வெளிப்படுத்துகிறது. சோல்பரியினால் 'சிறுபான்மை' மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு என்றுகூறி உள்நுழைக்கப்பட்ட அரசியலமைப்பின் 29 ஆவது பிரிவும் செனட் சபையும் அர்த்தமற்ற ஏற்பாடுகளாக இருந்தன என்பதுவும் சுட்டிக் காட்டப்படுகிறது. இதே போன்று இலங்கை சுதந்திரமடைந்தமையின் பின்னர் சிங்களத் தலைவர்களால் உருவாக்கபட்ட 1972 ஆம் ஆண்டு, 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அரசியல் குறித்தும் இந்நூல் பேசுகிறது. இக் கட்டுரையின் விரிவஞ்சி இவை பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.

உருவாக்கப்பட்ட யாப்புகள் குறித்துப் பேசிய இந்நூல் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அனைத்துலக அரசுகளின் பங்குபற்றலுடன் நசுக்கப்பட்டமையின் அரசியலையும் பேசுகிறது. தற்போது உருவாக்கப்படவுள்ள சிறிசேன – ரணில் அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்கள் உரிமைகளை பெறமுடியுமா? என்ற கேள்வியினையும் இந்நூல் எழுப்புகிறது. பட்டியல் முறையில் அல்லாது மத்திக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய சில துறைகள் தவிர்ந்து மிகுதி அனைத்து அதிகாரங்களும் வடகிழக்கு இணைத்த ஈழத் தமிழ் மாநிலத்துக்கும் வழங்கும் வகையிலான ஏற்பாடு பற்றிக் குறிப்பிடும் இந்நூல் சிங்களத் தலைவர்கள் இதற்குச் சம்திக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கும் வருகிறது. பிரிந்து செல்லும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமையின் அடிப்ப டையில் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் எட்டப்படும் தீர்வைத் தமிழர் தரப்பு முன்வைத்து அதற்காக ஜனநாயக வழியிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது. புவிசார் அரசியல் யதார்த்தத்தை புரிந்து வைத்திருக்கும் சிங்களத் தலைவர்கள் அனைத்துலக அரசுகளின் துணையுடன் தமிழர்களின் உரிமைக் கோரிக்கையினை வலுவிழக்கச் செய்யும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வர் எனவும் எதிர்வு கூறுகிறது.

அனைத்துலுக உறவுக் கோட்பாடுகள் ஊடாகவும் இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினையில் அனைத்துலக அரசுகளின் ஈடுபாட்டை இந்நூல் ஆய்வு செய்கிறது. கோட்பாடுகள் புலமைத்துவ பின்னணியுடன் உருவாக்கப்படுவதனால் இறுக்கமான சொற்கட்டுக்களைக் கொண்டிருப்பவை. இதனால் கோட்பாடுகளைப் பயன்படுத்தும்போது அவை வெகுசன வாசிப்பின் இலகுத் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலமைகள் உண்டு. இந் நூலிலும் கோட்பாடுகள் பயன்படுத்துப்படும் பகுதிகளில் இலகுத்தன்மை பாதிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாகக் கூறின் காலப்பொருத்தம் வாய்ந்த பரந்துபட்ட வாசிப்புக்கு உள்ளாக்கபட வேண்டியதொரு நூல் என இதனை நாம் குறிப்பிடலாம்.

3.

திரு மாஸ்டரின் எழுத்துக்களையும் கருத்துக்களையும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக படித்தும் அவதானித்தும் வருபவன் என்ற வகையில் எனக்கு ஒரு கேள்வி எழுவதுண்டு. தமிழ் மக்களின் அரசியல் தோல்விகளுக்குக் காரணம் அறிவுப் பற்றாக்குறையா? அல்லது முன்வைக்கப்படும் அறிவு சார்ந்த சிந்தனையின் வழி அரசியற் தலைமைகள் செயற்படாமல் விடுகின்றமையா? எனது பார்வையில் அடிப்படையான பிரச்சினை சிந்தனைப் பற்றாக்குறையாகத் தெரியவில்லை. மாறாக அறிவுபூர்வமான அரசியற் சிந்தனையின் பாற்பட்டு அரசியற் தலைமைகள் செயற்படாமையினையே எமது தோல்விகளுக்குக்கு காரணம் போலத் தெரிகிறது. இதனை இன்னொரு வகையில் சொன்னால் சிந்தனைக்கும் செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளியினை எவ்வாறு நிரப்புவது என்பதுதான் கேள்வி. இதற்குத் தேவையான அறிவியல் சார்ந்த அரசியற் பண்பாட்டை ஈழத் தமிழர் தேசம் எவ்வாறு உருவாக்கிக் கொள்ளப் போகிறது?

திரு மாஸ்டரின் இப் புத்தகமும் தற்போதய ஈழத் தமிழ் அரசியற் தலைமைக்குத் தேவையான அரசியல் வழிகாட்டுதலைக் கொடுக்கிறது. ஆனால் இவ் அரசியல் வழிகாட்டுதலை தமிழ் அரசியற் தலைவர்கள் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறியே. குறைந்த பட்சம் இந்நூலை தமது கொள்கை வகுப்பு விவாதத்துக்குப் பயன்படுத்துவார்களா என்பதுவும் கேள்விக்குறியே!

இந் நூலில் தமிழ் மக்களும் இந்திய மக்களும் அறிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் உண்டு. ஈழத் தமிழ்த் தலைவர்களும் இந்திய கொள்கை வகுப்பாளர்களும் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் பல உண்டு. இவற்றை இவர்கள் புரிந்துகொள்ளும் நிலையை உருவாக்குவது எவ்வாறு? அறிவு சார்ந்த சிந்தனை என்பது எந்தப் பார்வையில் இருந்து பார்ப்பது என்பதனைப் பொறுத்து மாறுபடக் கூடியது. தமிழ் மக்களின் விடுதலை என்பதே திரு மாஸ்டரின் பார்வைத்தளம். சிங்களத் தேசியவாதிகளின் அறிவுத்தளம் இதனில் இருந்து மாறுபட்டதாகவே இருக்கும். தமிழர் நிலைப்பட்டு பார்வைத் தளத்துடன் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை இணைக்கக்கூடிய கருத்துக்கள் இந்நூலில் உள்ளன. ஆனால் அரசுகளை மையப்படுத்திய அனைத்துலக உறவுகளை அரசுகள் பின்பற்றும் சூழலில், இலங்கைத் தீவின் அரசை சிங்கள தேசம் தம் வசப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிலையில் தமிழர் விடுதலை என்ற பார்வைத்தளத்தை உலக நாடுகளை நோக்கிக் கொண்டு செல்வது எவ்வாறு?

இதற்கான முதற்படியினை ஈழத் தமிழர் அரசியற் தலைமை இத்தளத்தில் இயங்குவதில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும். 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைத் தனது விடுதலையின் பேரால் ஈகம் செய்த ஈழத் தமிழர் தேசத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் எவரும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்தலைத் தமது பிரதான அரசியல் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அறிவியல் சார்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். அதனை இவர்கள் தமது சத்தியமாகக் கொண்டிருக்க வேண்டும். அறிவியல் ரீதியில் முன்வைக்கப்படும் கருத்துக்களை, சிந்தனைகளை தமது கொள்கை வகுப்பில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். திரு மாஸ்டரின் இந்த நூலை ஈழத் தமிழர் அரசியற்தலைவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதுவும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=0636b23d-d4f0-44b8-8b7b-5bddf6a982fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.