Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.

Featured Replies

எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.

 

 

அச்சமும் அச்சுறுத்தலும்      செல்வரட்னம் சிறிதரன்

 எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.
 

 
வடக்கில் தமிழ் மக்கள் தமது நீண்ட நாளைய தேவைகள், கோரிக்கைகளுக்காக எழுக தமிழ் மூலம் எழுச்சி பெற்றிருந்தார்கள்.

ஆனால் எழுக தமிழ் என்ற மகுடத்தைக் கண்டு இனவாத விஷத்தைக் கக்குவதற்காக நாட்டின் தென்பகுதி இனவாத, மதவாத சக்திகளும் அரசியல்வாதிகளும் எழுச்சி கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் உண்மையான அரசியல் நிலைமை என்ன, அங்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, நிதானமாகச் சிந்திப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல. அவ்வாறு நிதானமாகச் சிந்திக்கவோ செயற்படவோ அவர்களுக்கு விருப்பமும் இல்லை என்பதையே எழுக தமிழ் குறித்து தென்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என பலதரப்பட்டவர்களும் வெளியிடுகின்ற கருத்துக்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

வடக்கில் யாழ் நகர வீதிகளில் அணி திரண்ட மக்கள் தமது நீண்ட நாள் கோரிக்கைகளுக்காகக் குரல் எழுப்பினார்கள். இந்தக் குரல்கள் அவர்களுடைய நீண்ட நாளைய அபிலாசைகளைப்பற்றியது. அவர்களது நீண்ட நாளைய உரிமைகளைப்பற்றியது.

இந்தப் பேரணியில் அவர்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை. சிங்கள மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ நோக்கி அவர்கள் இனவாத நோக்கில் கோஷங்கள் எதனையும் எழுப்பவில்லை.

எழுக தமிழ் பேரணியில் மட்டுமல்ல. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும் சரி, அதற்கு முன்னரும் சரி பேரினவாதிகளினால், பேரின அரசியல்வாதிகளின் மேலாண்மை நடவடிக்கைகளின் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்ட போதெல்லாம் அவர்கள் தமக்காக மட்டுமே, தங்களுடைய உரிமைகளக்காக மட்டுமே குரல் எழுப்பினார்கள். இனவாத நோக்கத்தில் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தது கிடையாது. இனவாதிகளாக, இனவெறியர்களாக தமிழ் மக்களோ அவர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்களோ நடந்து கொள்ளவில்லை என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

வரலாற்று ரீதியாகத் தாங்கள் வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் சுய உரிமைகளுடன் தங்களுடைய நிர்வாகச் செயற்பாடுகளைத் தாங்களே மேற்கொண்டு சுதந்திரமாக வாழ வழிசெய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் தலைவர்களும் போராடி வந்துள்ளார்கள். அந்தப் போராட்டமே இப்போதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே, தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு தாயகப் பிரதேச நிலைப்பாட்டையும், கொள்கையையும், கோரிக்கையையும் இல்லாமற் செய்வதற்காகவே, சிங்கள மக்களைப் பலவந்தமாக இந்தப் பகுதிகளில் அரச தரப்பினர் குடியேற்றி வந்தார்கள். அரசியல் உள்நோக்கம் கொண்ட சிங்களக் குடியேற்றங்களினாலேயே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் ஒடுக்கப்பட்டு சிங்கள மக்கள் குடிசன எண்ணிக்கையிலும், வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றார் கள்.

இதேபோன்றதொரு நிலைமையை வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உருவாக்குவதற்கான சிங்களக் குடியேற்றங்களும், இராணுவ குடும்பங்களுக்கான இராணுவ குடியிருப்புக்களும்

மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையிலேயே புத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் அத்துமீறிய வகையில் தமிழர் பிரதேசங்களில் நிறுவப்படுகின்றன, அதுவும் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற பொதுமக்கள் இல்லாத இடங்களில் அவைகள் அமைக்கப்படுகின்றன என்பதே இங்குள்ள முக்கிய குற்றச்சாட்டாகும்.

மத ரீதியான ஆக்கிரமிப்பு

மத ரீதியான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கே வடக்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. இது தமிழ் மக்கள் மீதான மத, கலை கலாசார ரீதியிலான ஒடுக்குமுறையாக அமைந்திருப்பதே இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகும். தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் இருக்கவே கூடாது என்ற நிலைப்பாட்டை, தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை.

தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்களோ அல்லது விடுதலைப்புலிகளோ கொண்டிருந்திருப்பார்களேயானால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களின் மத்தியில் உள்ள பௌத்த விகாரைகளும், நயினா தீவின் நாக விகாரையையும்கூடஇருந்திருக்கமா ட்டாது. புத்தர் சிலைகளையும் விட்டுவைத்திருந்திருக்க மாட்டார்கள்.

அதேபோன்று வடபகுதியின் ஏனைய இடங்களிலும் காணப்பட்ட – காணப்படுகின்ற புத்தர் சிலைகளும் சிறிய மற்றும் பெரிய பௌத்த விகாரைகளும்கூட மிஞ்சியிருந்திருக்க மாட்டாது. யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் வடக்கில் பல பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப்பகுதியில் இவற்றை அவர்கள் இல்லாமற் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான சம்பவங்கள் அங்கு இடம்பெறவில்லை.

மாறாக, விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசகங்களில் இந்து ஆலயங்களும், கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. குண்டுத் தாக்குதல்களுக்கும் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் இலக்காக்கப்பட்டிருந்தன. இதற்கென யுத்த மோதல் காலத்தில் தனியான வரலாறே இருக்கின்றது என்றே கூற வேண்டும். 

எனவே, தமிழ் மக்களும்சரி அவர்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்களும்சரி மதவாதிகளாக, மதவெறி பிடித்தவர்களாகச் செயற்பட்டிருக்கவில்லை. அதேபோன்ற இனவாதிகளாகவும், இனவெறியர்களாகவும் செயற்பட்டிருக்கவில்லை – செயற்படவில்லை என்ற யாதார்த்தத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள உண்மை நிலைமைகளை சரியான முறையில் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை அமைப்பதையும், பௌத்த விகாரைகளை நி;ர்மாணிப்பதையும் தமிழ் மக்கள் விரும்பவில்லை. பௌத்த மேலாதிக்க மதவாத அரசியல் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கைகளையே அவர்கள் வெறுக்கின்றார்கள்.

நிலைமைகள்

தமிழ் மக்கள் மட்டுமே செறிந்து வாழ்கின்ற கனகராயன்குளத்திலும், முருங்கனிலும், திருக்கேதீஸ்வரத்திலும் இந்து ஆலய வளவுகளுக்குள் புத்தர் சிலைகளை அமைத்திருக்கின்றார்கள்.

கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் ஏ9 வீதியோரத்தில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை அமைக்க வேண்டிய தேவை ஏன் எழுந்தது என்பது எவருக்குமே தெரியாது.

யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து சென்றிருந்த அந்தப் பிரதேசத்து மக்கள் மீள்குடியேற்றத்தில் திரும்பிவந்து பார்த்தபோது, இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பதைபதைத்துப் போனார்கள். அது ஆக்கிரமிப்பின் அடையாளமாக, மத ரீதியான -இன ரீதியான அச்சுறுத்தலின் வடிவமாகவே அவர்களுக்குத் தோன்றியது. இதனால் அவர்கள் அச்சம் கொண்டார்கள். அம்மன் கோவில் வளாகத்தினுள்ளே புத்தர் சிலை வந்திருக்கின்றது. இனி என்னென்ன ஊருக்குள் வரப்போகின்றதோ, என்னென்ன நடக்கப் போகின்றதோ என்று அஞ்சினார்கள்.

புத்தபெருமானைப் புனிதராக – கடவுளாக நோக்குகின்ற மக்களுக்கு இவ்வாறு இந்து மதத் தலங்களுக்குள் புகுத்தப்படுகின்ற புத்தர் சிலைகளைப் பார்க்கும்போது புத்த பெருமான் மீது அவர்கள் கொண்டிருக்கின்ற பக்தி சார்ந்த உணர்வும் பக்தி சார்ந்த மரியாதையும் அற்றுப் போகின்றது. இத்தகைய நிலையில் உணர்ச்சி வசப்பட்ட ஒருவரோ சிலரோதான் கனகராயன்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அடித்து நொறுக்கியிருந்தார்கள்.

இருள் சூழ்ந்த நேரத்தில் இடம்பெற்றிருந்த இந்தச் சம்பவத்தினால் அந்தப் பிரதேசத்து மக்கள் மனம் கசந்து போனார்கள். ஆக்கிரமிப்பின் அடையாளமாக இருந்தாலும்கூட, ஒரு கடவுளின் சிலை மீது கைவைத்திருக்கக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே உடைக்கப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தி;ல் உடனடியாக மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை அவர்கள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காகச் சென்றிருந்த பொலிசாரிடம் தெரிவித்தார்கள்.

அதேபோன்று அங்கு உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய சிலையை வைப்பதற்குரிய அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

புதிய புத்தர் சிலையை வைப்பதற்காக

கனராயன்குளத்திற்குச் சென்றிருந்த சிங்கள ஜாதிக பலய என்ற அமைப்பின் செயலாளர் அறம்பேபொல ரத்தனசார தேரர், அம்மன் கோவில் வளவில் பராமரிப்பதற்கோ பணிந்து வணங்கி பூஜிப்பதற்கோ பௌத்தர்கள் எவருமே இல்லாத ஓரிடத்தில் ஒரு சூழலில் அந்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனம் வருந்தியிருக்கின்றார்.

போற்றி வணங்கி புனிதமாகப் பேணப்பட வேண்டிய புத்தரின் வடிவம் தேவையற்ற ஓரிடத்தில் தேவைகள் எதுவும் இல்லாத ஒரு சூழலில் வைக்கப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து கொண்டார். இந்த உணர்வின் வெளிப்பாடாகவே, அந்த புத்தர் சிலையை, புனிதமான ஓரிடத்திற்கு, பேணிப் பராமரிக்கப்படுகின்ற ஒரு பௌத்த விகாரைக்குக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகள் வவுனியா அரசாங்க அதிபரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பிரதேசத்திலும் இதே நிலைமைதான். அங்கு சிங்களவர்கள் இருக்கின்றார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. நீர்கொழும்பைப் பூர்வீகமாகக் கொண்ட மீனவர் பரம்பரையைச் சார்ந்த கத்தோலிக்க மதம் சார்ந்த சிங்களவர்களே அங்கு வசிக்கின்றார்கள். நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்களின் ஆன்மீகத் தேவைக்காக அங்கு ஒரு கத்தோலிக்கத் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டு அதில் அந்த மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிலையிலேயே அங்கேயும் ஒரு பௌத்த விகாரை அமைக்கப்பட்டிரக்கின்றது. அதுவும் தனியாருக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதி மற்றும் அரச வைத்தியசாலை பிரதேச சபையின் பொறுப்பில் உள்ள ஒரு வீதியின் ஒருபகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு காணியிலேயே அது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

வடபகுதியில் பராமரித்து வணங்குகின்ற பௌத்தர்கள் எவருமில்லாத இடத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகளின் நிலைமை இதுவாகத்தான் இருக்கின்றது.

தமிழ் மக்களுடைய இந்த விருப்பு வெறுப்பையும் நிலைப்பாட்டையுமே தமிழ் அரசியல் தலைவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். தமிழ் மக்களுடைய எண்ணங்களுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு அவர்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது தென்னிலங்கையில் உள்ள வெளிப்படையான இனவாத மதவாத கொள்கை கொண்ட அரசியல் தீவிரவாதிகளுக்கு எதிராகவோ அவர்கள் செயற்படவில்லை. அவ்வாறு அவர்கள் செயற்பட வேண்டிய தேவையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
கோரிக்கைகளும் கோஷங்களும்

இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கை பௌத்த மயமாக்காதே, தமிழ் அரசியல்  கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்பது போன்ற கோஷங்களும் கோரிக்கைகளுமே எழுக தமிழ் பேரணியில் முக்கிய இடம்பெற்றிருந்தன.

வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை புதிய கோரி;க்கை அல்ல. இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கையில் காலடி எடுத்து வைத்திருந்த காலத்திலேயே  அந்த கோரிக்கை தீவிரம் பெற்றிருந்தது.

இராணுவ நெருக்குவாரங்கள் மிக மோசமான இருந்த முன்னைய ஆட்சி;க் காலத்திலும்கூட, இராணுவமே வெளியேறு என்ற கோரிக்கையை முன்வைத்து வடபகுதியின் பல இடங்களில் வீதிகளிலும் பொது இடங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடி பல போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, இராணுவம் நிலைகொண்டிருந்த பொதுமக்களின் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலைமைக்கு ஆளாகியிருந்த பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் தமத காணி உரிமைக்காகக் குரல் எழுப்பி பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.

இத்தகைய பின்னணியிலேயே எழுக தமிழ் பேரணியின்போதும் கோரிக்கைகளும் கோஷங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனை இப்போது முழுமையான இனவாத நடவடிக்கையாக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குறிப்பாக பேரினவாத கட்சி சார்ந்தவர்கள் நோக்கியிருக்கின்றார்கள்.

நாட்டைப் பிரிக்கின்ற செயற்பாட்டிற்கான ஒரு முன்னெடுப்பாகக்கூட கருத முடியும் என்ற வகையிலும் கருத்துக்கள் அவர்களால் வெளியிடப்பட்டு வருகின்றன.

எழுக தமிழ் பேரணியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டமை தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாரதிகளின் கண்களில் படவில்லை. அந்த மக்களின் முன்னிலையில் இருந்த பல்வேறு தரப்பினரும் அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உருவம் மாத்திரமே அவர்களுக்குத் தெரிந்திருக்கின்றது.

போருக்குப் பிந்திய சூழலில் தமிழ் மக்களின் தேவைகள், அரசியல் உணர்வுகளையே அவருடைய உரை உள்ளடக்கியிருந்தது. அந்த உரையில் இனவாத கருத்துக்களோ அல்லது தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களோ சிங்கள மக்களுக்கு எதிரான கருத்துக்களோ இடம்பெற்றிருக்கவில்லை.

இத்தகைய நிலையில் மாலைக்கண்ணன் பார்த்த பார்வையிலேயே தென்னிலங்கையைச் சேர்ந்த பேரின அரசியல் தலைவர்களும் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களை நோக்கி அதற்கெதிராக இனவாத மதவாத ரீதியில் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்பதெல்லாம் கிடைக்கப் போவதில்லை. இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்படமாட்டாது. அடுத்த பிரபாகரனாக உருவெடுக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் தென்னிலங்கையில் இருந்து இனவாத குரல்கள் எழுந்திருக்கின்றன.

அது மட்டுமல்ல. வடமாகாண சபையையே கலைத்துவிடுவோம் என்ற வகையில் அரசியல் ரீதியான அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருக்கின்றது. 

எழுக தமிழ் என்ற மகுடமே வடபகுதி மக்கள் கலந்து கொண்ட பேரணிக்கு இனவாத சாயம் பூசவதற்கு முக்கிய காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அதே நேரத்தில் நேரடியாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வகையில் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற தன்மையைக் கருத்திற்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சக்திமிக்கதோர் அரசியல் தலைவராக உருவாகிவிடுவாரோ என்ற அரசியல் ரீதியான அச்சமும், அவர் மீதான இனவாத மதவாத சேறுபூசலுக்கும் பிரசாரங்களுக்கும் காரணமாக இருக்கக் கூடும் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அந்தத் தீர்வில் உள்ளடக்கப்படுவதைத் தடுப்பதற்கான ஓர் உத்தியாகவும் இந்த இனவாத மதவாத பிரசாரங்களை நோக்க வேண்டியிருக்கின்றது.

அடுத்தது என்ன......?

எழுக தமிழ் பேரணியை ஒழுங்கு செய்த தமிழ் மக்கள் பேரவை இந்தப் பேரணி இத்தகையதொரு அரசியல் நிலைமையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை முன்கூட்டியே கொண்டிருந்தார்களா என்பது தெரியவில்லை.

அவர்களுடைய எதிர்பார்ப்பு மக்களை அணி திரட்டுவதாக மட்டுமே இருந்தால், அதற்காக பொங்குதமிழ் பாணியில் எழுச்சியை ஏற்படுத்த முனைந்திருக்க வேண்டியதில்லை என்றே பலரும் கருதுகின்றார்கள்.

பொங்குதமிழ் என்பது விடுதலைப்புலிகளின் போராட்டச் சூழலில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஓர் அரசியல் பிரசார உத்தியாகும். அது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கு வெளியில் பொங்குதமிழ் நிகழ்வுகள் இடம்பெற்றபோது, வீதி நாடக அரங்கியல் கலாசாரம் சார்ந்த ஒரு செயற்பாடாவே அவைகள் நோக்கப்பட்டன.

ஆனால் எழுக தமிழ் பேரணியை அவ்வாறாக எவரும் நோக்கவில்லை. எழுக தமிழ் என தமிழை முதன்மைப்படுத்திய காரணத்தினால் அதனை இனவாத பார்வையில் நோக்குவதற்கு இனவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது என்றும் கூறலாம்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களின் தேவைகள், கோரிக்கைகளையும் அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள முதலமைச்சரினால், தனது உரையின் முக்கிய பகுதிகளை அல்லது அந்த உரையின் இரத்தினச் சுருக்கத்தை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் ஆற்ற முடியாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன என்பதற்கு அப்பால், அவ்வாறு செய்யாத காரணத்தினால், முதலமைச்சர் உண்மையிலேயே தனது உரையில் என்ன கூறினார் என்பது சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள மக்கள் மற்றும் சிங்களத் தலைவர்களுக்கு சரியாகச் சென்றடையத் தவறிவிட்டது என்பதை மறுத்துரைக்க முடியாது.

கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் மத்தியில் இறங்கிய தமிழ் மக்கள் பேரவை, எழுக தமிழ் பேரணியின் மூலம் வடமாகாண முதலமைச்சரை மாத்திரம் இலக்கு வைத்து இனவாத மதவாத அரசியல் பிரசாரங்களையும்., அரசியல் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டுள்ள நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த அரசியல் தீவிரவாதிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்பது தெரியவில்லை.

அந்தச் செயற்பாடுகள் பற்றிய எதிர் வினைகளும் உணர்வுகளும் பேரவையிடமிருந்து வெளிப்படவில்லை.


அது மட்டுமல்ல. தமிழ் மக்கள் பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் தெரியவில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136537/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.