Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்!

Featured Replies

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்! 

 

 
M

எம்.ஏ.சுசீலா 

மதுரையிலுள்ள பாத்திமாக் கல்லூரியில் 36 ஆண்டுக் காலம் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் இடையில் இரு ஆண்டுகள் துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம், 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து 80 க்கும் மேற்பட்ட இவரதுசிறுகதைகளும், கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

'கண் திறந்திட வேண்டும்' என்னும் இவரதுசிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சித்தொடர் வழி, 'நான் படிக்கனும்' என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.

 நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள் இவற்றோடு பணி நிறைவு பெற்றபின் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும்தண்டனையும்' -(2007) 'இடியட்' - அசடன் (2011) ஆகிய உலகப் பேரிலக்கியங்கள் இரண்டையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்பில் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மூன்று குறுங்கதைகள் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்' என்ற பெயரில் நற்றிணை வெளியீடாக வந்துள்ளன. 

இவரது முதல் நாவல் 'யாதுமாகி' 2014 இல் வம்சி வெளியீடாக வந்திருக்கிறது. 'அசடன்' நாவலின் மொழிபெயர்ப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது ஆகிய மூன்று விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். 

2008 முதல் www.masusila.com என்ற பெயரில் வலைத்தளம் தொடங்கி எழுதி வருகிறார்.

ரஷ்ய இலக்கியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு ரஷ்ய இலக்கிய மேதைகள் வாழ்ந்து மறைந்த அந்த சோஷலிச மண்ணுக்கு ஒருமுறையேனும் சென்று மீள வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அவர் ரசித்து வாசித்த இலக்கிய ஆளுமைகளின் நினைவுகள் ஊடறுக்க அவர் ரஷ்ய சென்று திரும்பிய நாட்களை தினமணி வாசகர்களுக்காக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று இவரது ரஷ்யப்பயணத் தொடர் வெளிவர இருக்கிறது.

 

 

 

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 1

 

 
in_front_of_maskwa

’ஆழும்நெஞ்சகத்து ஆசை இன்றுள்ளதேல்

அதனுடைப்பொருள் நாளை விளைந்திடும்’’

- இது என் ஆசான் பாரதியின் வாக்கு. கவிஞர்களின் உள்ளொளியும் தீர்க்க தரிசனமும் ஒருநாளும் பொய்ப்பதில்லை. ரஷ்யா செல்ல வேண்டும் என்ற என் கனவு மெய்ப்பட்டதும் அது போலத்தான்.

வாசிப்பின் சுவையை நுகரத் தொடங்கிய பாலிய நாட்களில், அதாவது ‘60-களுக்கு முற்பட்ட எங்கள் தலைமுறைக்கு எளிதாகக் கிடைத்தவை மலிவு விலையில் கண்கவர் படங்களோடு  கிட்டிய  சோவியத் பிரசுரங்களும் குட்டிக்கதைகளும்தான். அப்போது 'சோவியத் லேண்ட்’ என்னும் நாளிதழும் பள்ளி நூலகத்துக்கு வந்து கொண்டிருந்தது... வழுவழுப்பான அட்டையுடன் வண்ணப்படங்கள் தாங்கியபடி சோவியத் நாட்டின் கலை, கலாச்சாரத் தேடல்களை, விண்வெளிப் பயணத்துக்கான ஆயத்த  முயற்சிகளை சித்தரிக்கும் அந்த இதழும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது, குடும்பத்தில் - ஒற்றை ஒரே  குழந்தையாக - புத்தக வாசிப்பைத் தவிர வேறு பொழுது போக்குகள் அற்ற பெண்ணாக வளர்ந்து வந்த என்னை மேற்சொன்ன கதைகளும் இதழ்களும், ''ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’’ என ஜார் மன்னனின் வீழ்ச்சியை சொல்லும் பாரதி கவிதையும் ஒரு கனவுலக சஞ்சாரத்தில் ஆழ்த்தியபடி சோவியத் ரஷ்யா குறித்த கனவை ஆழமாக வேரூன்ற வைத்திருந்தன.

வயதும், வாசிப்பு  அனுபவமும் முதிர்ந்து டால்ஸ்டாய், அலெக்ஸீ டால்ஸ்டாய், கார்க்கி, கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் என என் எல்லைகள் விரிந்துகொண்டே போன தருணத்திலேதான் ரஷ்ய நாவல் பேராசானும்,.உலக இலக்கியத்தின் பிதா மகன்களில் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவருமான ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மகத்தான நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத் தமிழாக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. தமிழ் வாசகர்கள் அதற்கு அளித்த வரவேற்பும் அங்கீகாரமும் தொடர்ந்து அவரது மிகப்பெரும் நாவலான அசடனை மொழியாக்கும்  பேற்றையும் அளித்தது.

மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களைத் தேடிக்கண்டடைந்து மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி,  ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி. அவரது படைப்பை   நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்த்த கணங்கள் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். அந்த வேளைகளில் அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிந்ததும்... அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிந்ததும் அரிய அனுபவங்களாக வாய்க்க அவரது குறுங்கதைகள் சிலவற்றையும் தமிழாக்கி வெளியிட்டேன். தொடர்ந்து அவரது வேறு சில படைப்புகளைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் முனைந்திருக்கும் இந்த வேளையில் - கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீராத தாகம் ஒன்று என்னை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது.

தஸ்தயெவ்ஸ்கி வாழ்ந்த மண்ணில் ஒரு நாளாவது கால்பதிக்க வேண்டும்...அது வரை மானசீகமாக உடன் பயணித்த அவரது பாத்திரங்களான ரஸ்கோல்னிகோவும் சோனியாவும் மர்மெலோதோவும் ரஸுமுகீனும் குடியிருந்த இருண்ட எலிவளை போன்ற குடியிருப்புக்களையும்... அவர்களும் அசடன் மிஷ்கினும் சுற்றித் திரிந்த மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வீதிகளையும் தோட்டங்களையும் ஆற்றுப்பாலங்களையும் காண வேண்டும்  என்னும் தீராத அவா என்னைப்பற்றிக்கொண்டது.

2009-இல் ஐரோப்பிய நாடுகளுக்கும், 2012-இல் இலங்கைக்கும், 2014-இல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கும் சென்னையிலுள்ள ஒரு சுற்றுலாக் குழுவோடு சென்று  பழகியிருந்ததால் அவர்களின் ரஷ்யப்பயணத் திட்டத்தை எதிர்நோக்கியபடி இருந்தேன். மிகக்கச்சிதமான திட்டமிடல், செல்லும் இடங்கள் குறித்து மெய்யான கல்வியாளர்களின் அக்கறையோடு அளிக்கும் விரிவான விளக்கங்கள், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்திய உணவை அதிலும் சைவ உணவைக் கட்டாயம் அளித்துவிடும் கரிசனம் ஆகியவற்றால் அந்தக்குழுவுடன் என்னைப் பிணைத்துக்கொள்வதே என் மன அமைப்புக்கு ஏற்றதாக இருந்தது. நான் நினைத்தது போலவே ஜூலை மாதத்துக்காக அவர்கள் திட்டமிட்டு வகுத்திருந்த ரஷ்ய மற்றும் ஸ்கேண்டினேவியப் பயணத் திட்டம் ஆண்டின் தொடக்கத்தில் என்னை வந்தடைந்தது. ரஷ்யாவில் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இரு இடங்கள் மட்டுமே அந்த சுற்றுலாக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவை; நான் காண விரும்பியவையும் அவையே என்பதால் என்னையும் பயணத்துக்குப்பதிவு செய்து கொண்டேன்.

பிற பணிகள் காரணமாக ரஷ்யாவுடன் மட்டுமே திரும்ப எண்ணிய என்னைப்போலவே வேறு சில பயணிகளும் அமைந்து போனதால் மொத்தம் 16 பேர்  (சுற்றுலாவை வழி நடத்தும் தலைமையையும் சேர்த்து) அடங்கிய எங்கள் குழுவில் நாங்கள் ஐந்து பேர் ரஷ்யாவுடன் திரும்புவதென்றும் பிறர் செயின்ன் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து பயணத்தை நார்வே நோக்கித் தொடர்வதென்றும் முடிவாயிற்று.

ஜூலை 23 அதிகாலை சென்னையிலிருந்து துபாய் புறப்படும் எமிரேட்ஸ் விமான சேவையில் துபாய் சென்று, [துபாய் நேரப்படி காலை 6.40], அங்கிருந்து துபாய் நேரம் 9 40-க்குக் கிளம்பும் அதே விமான சேவையில் ரஷ்ய நேரம் பிற்பகல் 2 மணியளவில் மாஸ்கோ விமான நிலையத்தை வந்தடைந்தோம்.

குடியேற்றச் சடங்குகள்... பரிசோதனைகள் இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் மனம் அதன் போக்கில் கிளர்ச்சியுடன் தனியே வேறொரு பக்கம் உலவிக்கொண்டிருந்தது. புரட்சியின் விளைநிலத்தில்தான்.. ரஷ்யாவில்தான்  இருக்கிறோமா என்று. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மனம் நெகிழ்ந்தும் குழைந்தும் கிடந்தது.

மாலை 4 மணிக்கு விமான நிலையத்திலிருந்து தங்கும் இடம் நோக்கிய ஒரு மணி நேரப் பயணம். மாஸ்கோவின் மாஸ்க்வா ஆற்றில் ஆறு மணிக்குப் படகுப் பயணம் என்று அன்றைய திட்டம் வகுக்கப்பட்டிருந்ததால் விடுதி சென்ற மறு நொடியே பயண மூட்டைகளை மட்டும் வைத்து விட்டுக் கிளம்பியாக வேண்டும் என்ற வழிகாட்டல் பிறக்க, நாங்களும் அவ்வாறே ஆயத்தமானோம்.

நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஸிமுட் ஓட்டலிலிருந்து மீண்டும் ஒரு பேருந்துப் பயணம். வழி நெடுக விரிந்து சென்ற மாஸ்கோவின் காட்சிகள்!! மக்கள் நடமாட்டம் குறைவாக... வாகனப்போக்கு வரத்துக்களுமே கட்டுக்குள் இருந்த, அழகும், தூய்மையும் நிறைந்த நீண்ட அகன்ற சாலைகள்... சாலைகளின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்கள்.,குடியிருப்புக்கள், ஆங்காங்கே பசும்புல்வெளியோடு தோட்டங்கள் (புலிவார்ட் என்று சொல்லப்படுபவை  அவைதான்) தனி ஒரு வீடாக... அடுக்குகள் அற்ற தனி அமைப்பாக எந்த ஒரு சின்னக் கட்டிடத்தைக்கூட செல்லும் வழியின் ஓரிடத்திலும் காணக்கூடவில்லை.

மாஸ்கோவிலுள்ள மிக அழகிய சாலைகளில் ஒன்றான ‘வளைவான தோட்டம்’ என்ற பொருள்படும் Garden Ring என்னும் சாலை வழி சென்றோம், 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அந்தப்பாதை, 15 சதுக்கங்களையும் 17 கிளைச்சாலைகளையும் உள்ளடக்கியது, அதன் வழியே வாகனங்கள் வழுக்கிச்செல்லும்போது மாஸ்கோவின்  நவீன கட்டிடக்கலைகளைக் காணக்கிடைக்கும் வாய்ப்பு அரியது. அந்தக் கட்டிட அமைப்புக்களை ரஷ்ய நாட்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் திட்டமிட்டு உருவாக்கியதால் அது ஸ்டாலினியக் கட்டிடக்கலைப்பாணி என்றே அழைக்கப்படுவதாக உள்ளூர்ப் பெண் வழிகாட்டி டேன்யா எங்களிடம் சொல்லிக்கொண்டு வந்தார்.

மாஸ்க்வா நதி தீரத்தை நாங்கள் நெருங்கும்போது மாலை ஆறு மணிக்கும் மேலாகி விட, எங்கள் படகுப்பயணம் 8 மணிக்குத் தள்ளி வைக்கப்பட்டது, பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு, ஐந்து கிலோ மீட்டர் நடந்த பிறகே  நாங்கள் படகுத் துறையை அடைய முடியும் என்பதால் அந்த நடைப்பயணத்துக்கும் கூட  அத்தனை நேரம் தேவையாகத்தான் இருந்தது.

மாஸ்க்வா ஆற்றின் படகுப்பயணத் துறை அலங்காரத் தோரண வாயிலோடும்... தொடந்து நீண்டு சென்ற கார்க்கி தோட்டத்தோடும் ஏழு மணி அளவில் கண்ணில்  பட்டபோது, இது ரஷ்யாவின் கோடை காலம் என்பதால் மாஸ்கோ வானத்தின் சூரியன் மறைந்திருக்கவில்லை...

உலகப்புகழ் பெற்ற  'தாய்’ (THE MOTHER) நாவலைத் தந்த  மாக்ஸிம் கார்க்கியின் பெயரால் பசுமையான பரந்த புல்வெளிகளோடும் பூந்தோட்டங்களோடும் நீரூற்றுக்களோடும் அமைந்திருந்த கார்க்கி தோட்டத்தைக் கடந்து செல்லும்போது கண்ணில் காணும் காட்சிகள் ஒருபுறம் ஈர்த்தாலும்கூட கண்ணில் காணாமல் மனதை மட்டுமே  தன் எழுத்தால் தொட்ட அந்த மாபெரும் எழுத்தாளனின் நினைவிலேயே மனம் சுழன்று கொண்டிருந்தது.

மாஸ்குவா ரிக்கா, மாஸ்கோ ஆறு (Moscow River) ஆகிய பல பெயர்களால் அழைக்கப்படும் மாஸ்க்வா நதி,  மாஸ்கோ நகரின் பெயருக்குக் காரணமாக அமைந்திருப்பது. மாஸ்கோ நகரின் மேற்கில் கிட்டத்தட்ட 90 மைல்கள் தொலைவில் உற்பத்தியாகி, மாஸ்கோவை ஊடறுத்தபடி சுமோலியான்ஸ்க், மற்றும் மாஸ்கோ வட்டம்ஆகியவை வழியே  இந்நதி செல்கிறது. மாஸ்கோவின் தென்கிழக்கில் 70 மைல்கள் தொலைவில் வோல்கா ஆற்றின் கிளைகளில் ஒன்றான ஓக்கா ஆற்றில் கலந்து, பிறகு  காஸ்பியன் கடலில் கலக்கிறது. 503 கி.மீ. நீளமும் 155 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நதியின் பிற கிளை நதிகள், ரூஸா, இஸ்த்ரா, யாஸா, பாக்ரா போன்றவை.

பொதுவாகக் குளிரும் பனியும் தாங்க முடியாத காலகட்டங்களான நவம்பர் டிசம்பர் மாதங்களில் உறைநிலைக்குச் சென்றுவிடும் இந்த ஆறு, மார்ச் மாதத்துக்குப் பிறகே படிப்படியே உருகி நீராக ஓடத் தொடங்குகிறது. அதனால் கோடைகால ஆற்று வெள்ளம் அந்த மக்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

வசதியான பெரும்படகு ஒன்றில் எட்டு மணியளவில் தொடங்கிய எங்கள் பயணம் இரவு பத்து மணி வரை நீண்டு செல்ல மாஸ்கோவின் கலையழகு மிகுந்த கட்டிடங்களை முதலில் அந்திச்சூரியனின் செவ்வொளியிலும், இரவு 9 மணிக்கு மேல் தீபங்கள் ஒளிரும் திகட்டாத பேரழகிலும் காண வாய்த்தது. இருந்தாலும், கட்டிடங்களின் செயற்கை அழகை விடவும் ஆற்றுப்பயணமும், அந்தி மாலையும், மாலை மறைந்து இரவு படர்ந்ததும் தழுவிக்கொண்ட சில்லிப்பான குளிரும் என்றும் நினைவில் இருப்பவை. புதுதில்லி போன்ற வட இந்திய நகரங்களில் கோடைகால ஆதவன் ஏழு ஏழரை மணி வரை நீடிப்பதைக் கண்டிருந்தபோதும் இங்கே எட்டு மணிக்குக்கூட மாலை ஆறு மணி போல இருந்ததும், இரவு 8.30-ஐ ஒட்டியே அஸ்தமனம் நிகழ்ந்ததும் கல்வெட்டு ஞாபகங்கள். பயணம் முடியும் நேரத்தில் பீட்டர் பேரரசனின் உருவம் ஒளியூட்டப்பட்டு தனிப்படகு ஒன்றில் எடுத்துச்செல்லப்படுகிறது..

இங்கே மாஸ்கோவிலேயே  வாழும் மக்கள், இந்தக்கோடை கால ஆற்றின் இனிமையை ரசித்தபடி நதிக்கரைப்புல் மேடுகளில் தங்கள் துணையோடும், குடும்பத்தோடும், நட்போடும், சுற்றத்தோடும்  நின்றும், இருந்தும்,  கிடந்தும், நடந்தும், ஓய்வாகப் பொழுதைக் கழித்தபடி தங்களை இலகுவாக்கிக்கொள்கிறார்கள். படகுகளில் பயணித்தபடி இசைக்கருவிகளை மீட்டி நடனமாடி நேரம் கழிக்கிறார்கள். ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஆற்றுப்பயணம் செய்தபோதும்கூட எதிர்ப்பட்ட காட்சிகள் இவை. நிற்கக்கூடப் பொழுதில்லாமல் தேடிச்சோறு நிதம் தின்பதில் மட்டுமே காலம் கழிக்கும் பலரும் அயல்நாட்டினரிடமிருந்து பயின்றாக வேண்டிய பாடம் இது.

இரவு 10 மணிக்கு மேல் படகை விட்டு இறங்கி மீண்டும் கார்க்கி தோட்டம் வழியே பேருந்தை நோக்கி நடக்கும் வேளையிலும் நீரூற்றின் அருகே மக்கள் விளையாடி ஆனந்தித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

நாம் கோடையிலே இளைப்பாற வழி தேடி அலைகிறோம்.

பனி உருகி வெண் நீராய் ஓடும் இந்த மண்ணிலோ கோடை ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது என்று எண்ணியபடியே அஸிமுட் விடுதியை வந்டைந்தபோது, அதன் ஒரு பகுதியில் அமைந்திருந்த இந்திய உணவகத்தில் நம் நாட்டு உணவு வகைகளுடன் தமிழ்க்குரல் ஒன்று எங்களை வரவேற்றது. நிறைவாக உண்டு முடித்து உறக்கத்தைத் தழுவியபோது மணி நள்ளிரவைத் தொட்டிருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-2  

செஞ்சதுக்கம்_ரஷ்யா

அந்தி வானத்தின் அழகு, காலந்தோறும்  கவிஞர்களின்  புதுப்புதுக் கற்பனைகளால் அழகூட்டப்பட்டும் மெருகூட்டப்பட்டும் வந்திருக்கிறது.

"பாரடீ இந்த வானத்திற் புதுமையெல்லாம்...
உவகையுற நவ நவமாத் தோன்றும் காட்சி
யாரடி இங்கிவை போலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணந்தோறும் நவ நவமாம் களிப்புத் தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ’’- இது, பாரதியின்  பாஞ்சாலி சபதம்.

"தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னிலே
செங்கதிர் மாணிக்கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை"

என்பது அழகின் சிரிப்பைச்  சொல்லும் பாரதிதாசனின் கற்பனை.

ரஷ்யப்பயணத்தின்  முதல்நாள் மாலையில் மாஸ்க்வா ஆற்றில் நாங்கள்  பார்த்துக் களித்திருந்த  மாஸ்கோ வானத்தின் அந்திப்பொழுதையும் கவிஞர்கள் பாடாமல் இல்லை...
 
"மேலைத் திசையில் ஓய்வெடுக்க சூரியன் செல்லும் அந்தமாலைப் பொழுதிலே தான் நகரம் எத்தனை அழகான ஜொலிப்புடன்!  ஆதவனின் தங்க வண்ண ரேகைகளால் மெருகூட்டப்பட்டுப் பொன்னிறமாய்ப் பொலியும் மாஸ்க்வா நதியின்  மேனி! மாஸ்கோ நகரத்து சுவர்களிலும் சதுக்கங்களிலும் உச்சிக் கூம்புகளிலும் கோபுரக் கலசங்களிலும் அந்தியின் நிழல் மென்மையாக... மிக இலேசாகப் படர்ந்து படிந்து சற்று உறைந்தும் நிற்கும் போது ஏதோ தவம் செய்யும் ஞானியர் போன்ற காட்சியல்லவா காணக் கிடைக்கிறது! அந்த மயக்கும் மாலைப்பொழுதில் நள்ளிரவுச்  சில்லென்ற காற்று நம்மைத் தீண்டும்  வரை... கடந்து  செல்லும் ஜனத் திரளைப் பார்த்தபடியே கனவுகளோடும், பழங்கதைகளோடும் காலம் கழிக்க இரகசியவாயிலை நோக்கி வா...” என்ற பொருள்படத் தொடர்ந்து நீளும்அற்புதமான கவிதை ஒன்றை, மாஸ்கோவின் மாலை ’Sunset Moscow’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் எட்னா டீன்ப்ராக்டர் (Edna Dean Proctor (1829–1923) என்ற கவிஞர். 

உறக்கத்தின் கனவோடு  நேற்றைய செக்கர் வானத்தின் அழகிய காட்சி தந்த நினைவுகளில் அமிழ்ந்தபடி, அந்தக் கவிதைகளும் ஒரு புறம் மிதந்து கொண்டிருக்க, ஆழ் துயிலின் வசப்படும் நேரம் பார்த்து விடுதி அறையின் மிகப்பெரிய ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தது சூரியக்கதிர் ஒன்று! சட்டென்று தூக்கத்தின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு நேரத்தைப் பார்த்தால் காலை மணி நான்கைக் கூடத் தொட்டிருக்கவில்லை. பனியோடும் குளிரோடும் மட்டுமே வாழ்ந்து பழகிப்போன ரஷ்ய மக்கள் கொண்டாடும் இந்தக்கோடை காலத்தின் இரவுகள் மிகவும் குறுகியவை என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்...

அதற்கு மேல் படுக்கையில் புரள மனம் வராமல் வெயிலை வேடிக்கை பார்த்தால் ஐந்து மணிச் சூரியன் ஏழுமணி முகம் காட்டிக் கொண்டிருந்தது...

விடுதியில் கணினித் தொடர்புக்கான இலவசவசதி செய்யப்பட்டிருந்ததால்  அதன் உதவியுடன் சுற்றம் நட்பு ஆகியோருடன் மின் அஞ்சல், கட்செவி அஞ்சல் போன்றவற்றில்தொடர்பு கொண்டு செய்திகளையும் புகைப்படங்களையும் பரிமாறிக்கொள்ள அந்தக் காலை உதவி செய்தது.

விடுதி அறையிலேயே இருந்த மின்கலத்தின் உதவியோடு சூடாகக் காப்பி தயாரித்து என் அறைத் தோழிக்கும் தந்து நானும் அருந்தினேன்...

வெளிநாடுகளின் தங்கும் விடுதிகளில் தரப்படும் காலை உணவுகள் விஸ்தாரமானவை. காலை உணவை அரசனைப் போல உண்ண வேண்டும் என்னும் வழக்கு அவர்களுக்கே பொருத்தமானது. உறுதியான சைவ உணவுப் பழக்கம் மட்டுமே கொண்டிருக்கும் நான், பழ ஜாமுடன் கூடிய இரண்டு ரொட்டித் துண்டுகள், ஓட்ஸ் கஞ்சி, பழரசம், யோகர்ட் எனப்படும் மணமூட்டப்பட்ட தயிர் இவற்றோடு சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மிக விரைவில் ஆயத்தமாகி விடுவேன். காரணம்… சுற்றுலா நேரங்களில் நெடுந்தூரம் நடப்பதற்கு ஏற்றது இலகுவான உணவு மட்டுமே!
 
மாஸ்கோவில் எங்களுக்கு வழிகாட்டியான டேன்யா, சிற்றுந்தோடு வந்து சேர்ந்த பிறகு காலை 10 மணி அளவில் எங்கள் அன்றைய ஊர்சுற்றல் தொடங்கியது. 

அகன்ற மாஸ்கோ வீதிகளின் இரு மருங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள்... குடியிருப்புக்களைக் காணும் ஒவ்வொரு நிமிடமும் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களில் விவரிக்கப்படும் கட்டிடம், இவற்றுள் எதுவாக இருந்திருக்கும்! இந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தின் ஒருமூலையிலே தான் அவரது நாவலின் நாயகன் குடி இருந்திருப்பானோ! அவனது சித்தம் இங்கே தான்அலைக்கழிவுக்கு ஆளாகி இருக்குமோ போன்ற பிரமைகள் என்னை ஆட்டிப்படைக்கத் தொடங்கி விடும்... அந்தக் கற்பனை உலகிலிருந்து நான் சற்று யதார்த்தத்துக்கு இறங்கி வந்தபோது மாஸ்கோவின் அடையாளமான செஞ்சதுக்கத்துக்கு  வந்து சேர்ந்திருந்தோம்...

ரஷ்யப் பயணத்தின் முழுமையான சாரத்தையும் உள்ளடக்கியிருப்பதைப் போன்ற சிலிர்ப்பையும் மனஎழுச்சியையும் மாஸ்கோவின் அந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியில் – செஞ்சதுக்கத்தில் - உணர்ந்தது போல் வேறெங்கும் என்னால் உணரக்கூடவில்லை.
 
எழுச்சி மிக்க பல வரலாற்றுத் திருப்பங்கள்... பிரகடனங்கள்... புரட்சிக் கோட்பாடுகளால் நாட்டின் போக்கையே திசை திருப்பிய மகத்தான பல  தலைவர்களின் வீரியமான... உத்வேகமூட்டும் சொற்பெருக்குகள்... பேரணிகள்... போராட்டங்கள் இவற்றால் இன்னமும் கூட நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்ததைப் போல எனக்குப் பட்ட அந்தப் பொதுவுடைமை பூமி, அன்றைய கடும்வெயில் வேளையில் சூடாகத் தகித்தாலும்  அந்தத் தகிப்புக்களும் கூட மகத்தான ரஷ்யப் புரட்சியின் செங்கனல்களாக என்னைச் சூடேற்றின....

செஞ்சதுக்கம் என்பது மாஸ்கோவின்  மையச்சதுக்கம் மட்டுமல்ல; கருத்தியல் ரீதியாக முழு ரஷ்யாவுக்குமே சொந்தமான மையச் சதுக்கம் அது. தொடக்கத்தில் மாஸ்கோவின்  முக்கியமானதொரு சந்தைப் பகுதியாக இவான் என்பவரால் வடிவமைக்கப்பட்ட அந்தச்சதுக்கம், பல்வேறு பொது விழாக்கள் நடைபெறும் இடமாகவும், கொள்கைப் பிரகடனங்கள் செய்யப்படும் இடமாகவும்  பயன்பட்டது, சிலவேளைகளில் ஜார் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களும் இங்கு நிகழ்ந்ததுண்டு. 

கால வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்கேற்பப் படிப்படியாக மாறி வந்த இந்தச் சதுக்கம், இப்போது அரசாங்க விழாக்களுக்கான இடமாக விளங்கி வருகிறது.
 
13 ஆம் நூற்றாண்டில் இருந்து ரஷ்யநாட்டின் வரலாற்றோடு இணை பிரியாதிருக்கும் இந்தச் சதுக்கமும் கிரெம்லினும், 1990 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன...

பொதுவுடைமைக் கொள்கையின் தொட்டிலாக செஞ்சதுக்கம் இருந்தபோதும், சிவப்பு நிறம் குறியீடாக அமைந்திருந்தாலும், அந்தக் காரணங்களாலோ இதனைச்சுற்றிச்சூழ்ந்திருக்கும் சிவப்புநிறசெங்கற் கட்டிடங்களினாலோ இச்சதுக்கம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கவில்லை  என்பது ஒரு சுவாரசியப்படுத்தும் தகவல். 

”எரிந்துபோன இடம்” என்னும் பொருள்படும் “போசார்” என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த இந்தச் சதுக்கத்திற்கு செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்பட்டது 1 7 ஆம் நூற்றாண்டிலே தான். ”கிராஸ்னாயா” என்னும் ரஷ்யச் சொல்லுக்கு “சிவப்பு” மற்றும் “அழகு” என்னும் இரு பொருள்கள் உண்டு. 

செஞ்சதுக்க வளாகத்தில் அமைந்துள்ள புனித பசில் பேராலயத்தைக் குறிக்க "அழகு" என்னும் பொருளில் "கிராஸ்னாயா” என்னும் பெயர் வழங்கப்பட்டுப் பிறகு சதுக்கத்தைக் குறிக்கும் பொதுப்பெயராக அது வழக்கில் இடம் பெறத் தொடங்கியது. செஞ்சதுக்கத்தின் வரலாற்றை வசிலி சுரிக்கோவ், கான்சுட்டன்டின் யுவோன் போன்ற பல ஓவியர்களின்  ஓவியங்கள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

புனித பசில் தேவாலயம், கிரெம்லின் சுவர், அலெக்சாந்தர் பூங்கா, கிரெம்லின் கோபுரம், தேவாலயங்கள், அரண்மனைகள் ஆகியவையும்,  ரஷ்ய அதிபரின் அதிகாரபூர்வ இல்லமும்  செஞ்சதுக்க வளாகத்திலே தான்  உள்ளன. அரசின் மிக முதன்மையான அலுவலங்கள் பலவும் அமைந்திருக்கும் இடமும் இதுவே. 

தெற்கே மாஸ்க்வா ஆறும், கிழக்கே புனித பசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் புடைசூழ அமைந்திருக்கும் கிரெம்லின் கோட்டைச்சுவர் பிரம்மாண்டத்தின் அடையாளம் மட்டுமல்ல; புரட்சியின் குறியீடும் கூடத்தான் என்பதால் அதைக்காணும்  அனுபவமே மெய் சிலிர்க்கச் செய்வதாக இருந்தது. கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இந்தக் கோட்டைக்கு உள்ளேதான் ரஷ்யப்புரட்சியைத் தலைமையேற்று நடத்தி, உலகிலேயே  முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய தலைவர் விளாடிமிர் லெனின் அவர்களின்  உடல் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

IMG_0584.JPG

1924 ஜனரி 27ஆம் நாளன்று… அவரது உடல் முதன்முதலாக  மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது முதல் இன்று வரை உலகின் பல திசைகளிலிருந்தும் திரண்டு வந்து அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் கூட்டத்தின் காட்சியை நாங்களும் நெகிழ்வுடன் கண்டோம். எங்களுக்கும் அங்கே சென்று லெனினின் உடலைப் பார்க்கும் ஆவல் இருந்தபோதும் கூட்ட மிகுதியாலும் அன்றையநாளில் முடிக்க வேண்டிய பல இடங்கள் மீதம் இருந்ததாலும் வெளியில் இருந்து பார்ப்பதோடு எங்களைத் திருப்தி செய்து கொண்டோம்…

கிரெம்லின் (Kremlin)என்னும் ரஷ்யச்சொல், கோட்டை … கொத்தளத்தைக் குறிக்க வழங்குவது. அதனால் அவற்றுக்கே உரிய ஆயுத தளவாடங்களும் அங்கே இருந்திருத்தல் கூடும். ரஷ்ய நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின், பல நேரங்களில் கிரெம்லின் என்றே  குறிப்பிடப்படுகிறது. நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளடங்கியதாய், சுவர்கள் சூழ்ந்துள்ள இந்தக் கோட்டையில் உள்ள கோபுரங்கள், கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு கால‌த்தில் ஜார் ம‌ன்ன‌ர்க‌ளின் அர‌ண்மனையாக இருந்த‌ க‌ம்பீர‌மான  கிரெம்லின் மாளிகையே இன்று  ரஷிய அதிபரின் அதிகார பூர்வ  மாளிகை.. அமெரிக்க அரசின் அதிகார மையத்தைக் குறிப்பிட வெள்ளைமாளிகையைப் பயன்படுத்துவது போல…கிரெம்லின் என்னும் சொல்லும் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கி வந்திருக்கிறது…

செஞ்சதுக்கத்தையும் க்ரெம்லின் கோட்டையையும் என்றேனும் காணக்கூடும் எனக்கனவு கூடக்கண்டிராத நான்…., செஞ்சதுக்க வளாகத்தின்  சுட்டெரிக்கும் வெயிலையும் கூடப் பொருட்டாக எண்ணாமல் சுற்றி அலைந்தபடி, வழிகாட்டி சொன்ன தகவல்களையும் நான் படித்திருந்தவற்றையும் உள்வாங்கிக் கொண்டும்… அவற்றுக்குள் ஆழ்ந்து தோய்ந்து மனதை அலையவிட்டபடியும், வாய்ப்பு நேரும் போதெல்லாம் புகைப்படங்கள் எடுத்தபடியும்  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எங்கள்  குழுவினரோடு சுற்றித்திரிந்தபடி களைப்பின் சுவடு கூட இல்லாமல் இருந்தேன்… வீட்டின் நிழலில் ஒதுங்கி இருக்கும்போது கூட வெயில் கொடுமை என முணு முணுத்துக் குறை சொல்லும் நாம் வேனலின் வெம்மை தாங்கிக் காட்சியின் கததப்புக்குள்ளும் ஐக்கியமாகி விட முடிகிறதென்றால் அதுவே பயணங்கள் தரும் அபூர்வமான கிளர்ச்சி!

தொடரும்....

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-3  

 

 
பஸில்_கதீட்ரல்ல்ல்ல்

பொதுவுடைமைக் கொள்கை செல்வாக்குப்பெற்ற பிறகு ரஷ்ய நாட்டின் பெருவாரியான பகுதிகளில் கடவுள் மறுப்பு வாதமே பெரும்பான்மையாக நிலைபெற்றபோதும் தொன்மைக்காலத்தின் எச்சங்களாக ரஷ்யா நெடுகிலும் பல தேவாலயங்களும் கூட நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. குறிப்பாக ரஷ்ய நாட்டில் நாங்கள் சென்ற மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இரண்டு நகரங்களிலுமே வித்தியாசமான அமைப்புடன் கூடிய பல தேவாலயங்களைக் காணமுடிந்தது. பழமையின் சின்னங்களாக இன்றும் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலவற்றில் மட்டுமே பூசைகள் நடைபெற்றுவர, மற்றவை தொன்மையின் அடையாளங்களாக மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உருசிய மரபுவழித் திருச்சபை என்பது, உலகின் வேறு பல பகுதிகளில் நிலவும் பொதுவான கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை மரபுகளிலிருந்து மாறுபட்டது. கிரேக்க ஆசார அடிப்படையிலான திருச்சபை GREEK ORTHODOX CHURCH என்று அழைக்கப்படும் இந்தக் கிறித்தவ சமயத்தின் பிரிவு, கருங்கடலின் வடக்குக் கரையை ஒட்டிய கிரேக்க குடியேற்றங்களுக்கும்,  சீத்தியா  ஆகிய பகுதிகளுக்கும் சென்றிருக்கும் திருத்தூதர் அந்திரேயா என்பவரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்த மரபைச் சார்ந்ததாக… வியக்கத்தக்க கட்டிடக்கலையுடன் செஞ்சதுக்கத்தை ஒட்டி அகழியின் மீது அமைந்திருப்பது புனித பசில் தேவாலயம். Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் என்றும் அழைக்கப்படும் இந்த ஆலயம் 1552 ல், மங்கோலியப் படைகளிடமிருந்து கஸான் பகுதியைக் கைப்பற்றியதன் நினைவாக இவான் என்பவரால் உருவாக்கப்பட்டது. வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தகவலைத் தவிர இதைச் சார்ந்து வழங்கும் பல வகையான தொன்மக் கதைகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லை.

%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%

இந்த ஆலயத்தில் காணப்படும் வெங்காய வடிவிலான மேற்கூரை அமைப்புக்கள், ரஷிய நாட்டுத் தேவாலயங்களுக்கே உரிய தனிப்பட்ட அடையாளங்கள். சோவியத் யூனியன் உருப்பெற்றபிறகு,  செஞ்சதுக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பேரணிகளை நடத்துவதற்கு புனித பசில்  தேவாலயம் இடையூறாக இருப்பதாக எண்ணிய ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இதை இடிக்க முயன்ற போது கட்டிடக் கலைஞராகிய ப்யோதர் பேரனொவ்ஸ்கி (architect Pyotr Baranovsky) எழுப்பிய எதிர்ப்புக்குரல் அவருக்கு ஐந்தாண்டுச் சிறை வாசத்தைப் பெற்றுத் தந்தது… ஆனாலும் கூட அவர் மேற்கொண்ட அயராத முயற்சியால் – அற்புதமான கட்டிடக்கலைக்கு ஓர் உதாரணமாகத் திகழும் இந்த தேவாலயம் எப்படியோ தப்பிப் பிழைத்து விட்டது. வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பூசை நடக்கும் இந்த ஆலயம் தற்போது அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதனுள் இருக்கும் அரிய பல ஓவியங்களையும் மர வேலைப்பாடுகளையும் சற்று நேரம் கண்டு களித்தோம்.

cathedral-1.JPG

தேவாலயங்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படும் ஒரு பகுதியும் கூட செஞ்சதுக்க வளாகத்திற்குள் அமைந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானவை, ஆர்க் ஏஞ்சல் ஆலயம், அனன்சியேஷன் ஆலயம், மற்றும் அஸ்ஸம்ப்ஷன் ஆலயம் (ஜார் மன்னர்களில் பலரும் முடி சூட்டிக்கொண்டது இங்கேதான்) ஆகியன. பெல்ஜியம் கண்ணாடி  வேலைப்பாடுகளுடனும் மேற்கூரைகரைகளில் இயேசு கிறித்து மற்றும் புனிதர்களின் அரிய பல ஓவியங்கள் தீட்டப்பட்டும் இருக்கும் அவையெல்லாம் இப்போது  பெரும்பாலும்
காட்சியகங்களாக மட்டுமே இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்து முடித்தபிறகு அங்கிருந்த பழங்காலக்கட்டிடம் ஒன்றைக் காண்பதற்கு எங்களுக்கு இருபது நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

பழமையின் அடையாளமாக அது இருந்தபோதும் தற்காலத்திலுள்ள பேரங்காடிகளைப் போன்ற கடைகளே அங்கேயும் நிறைந்திருப்பதாக எங்கள் வழிகாட்டி கூறிவிட, நான் மட்டும்  உள்ளே  செல்வதைத் தவிர்த்து விட்டு செஞ்சதுக்கத்தின் சூழலை மேலும் அனுபவித்து ரசிப்பதற்காக அதன் முன்னிருந்த கல்மேடை ஒன்றின் மேல்  தனித்த சிந்தனைகளோடு அமர்ந்திருந்தேன்...

செஞ்சதுக்கம் குறித்த பழைய வரலாறுகளை மனதுக்குள் ஓட்டிக்கொண்டும், நேர் எதிரே தெரிந்த லெனின் சமாதிக்குச் செல்லக் காத்திருந்த  பன்னாட்டுப் பயணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், விற்பனைக்கூடத்தின்  முகப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கால  பீரங்கிகளின் மூலம் இதுவரை எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கக்கூடும் என்று எண்ணியபடியும் பொழுது போவதே தெரியாதபடி என்னுள் அமிழ்ந்து கிடந்தேன்... சுற்றியிருந்த தேவாலயங்கள் கண்ணில் படும்போதெல்லாம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்யத் திருச்சபைகளைப்பற்றித் தனது அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கின் மூலம் வைத்திருக்கும் பொருள் பொதிந்த பல விவாதங்கள் நிறைந்த அத்தியாயத்தை என் உள்ளம் அசை போட்டபடி இருந்தது.

உள்ளே சென்ற குழுவினர் திரும்பி வந்தபிறகு ரஷ்ய நாட்டின் கொடுங்கோல் மன்னர்கள்களாக அறியப்பட்ட  ஜார் மன்னர்கள் பயன்படுத்திய பீரங்கிகளையும், அவர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய  மணியையும் காண்பதற்காகச் சென்றோம்.

me_bef.the_bell_.JPG

ஆங்கிலத்தில் ராயல் பெல் என்றும்,  ரஷ்ய மொழியில்  ஜார் கொலொகூல் (Tsar-Kolokol) என்றும் சொல்லப்படும்  இந்த மணி தற்போது உடைந்த துண்டுடன். ஒரு பெரிய மேடையின்மீது  வைக்கப்பட்டிருக்கிறது. ராணி அன்னா ஈவானோவ்னாவால் (1735)  நிறுவப்பட்ட இந்த மணியின்  வடிவமைப்பாளர் ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகேயில் ஆகியோர் என்று கூறப்படுகிறது. உலகின்  மிகப்பெரிய மணி என்று கருதப்படும்  இந்தக் காண்டாமணி வெண்கலத்தால் (Bronze) ஆனது. இதைப்  பற்றி வழங்கும் சுவையான  கதைகள் ஏராளம்... 202 டன் எடையும் 20 அடி குறுக்குவிட்டமும், 22அடி உயரமும் 24 அங்குல தடிமனும் கொண்ட இந்த மணி, அதைத் தூக்கி மாட்டிக் கட்டும்போதே அதன் எடை  தாங்காமல்  உடைந்துவிட்டது என்றும், இது வரை ஒரு முறை கூட இது ஒலித்ததே இல்லை என்றும்  எங்கள் வழிகாட்டியான  டேன்யா சொன்னபோதும் அது குறித்த வேறு பல சுவாரசியமான  தகவல்களும் கிடைக்காமல் இல்லை...

broken_bell.JPG
  
மாவீரன் நெப்போலியன் போனபார்ட், தன்  வெற்றியின் சின்னமாக (1812) இதை பிரான்ஸ் நாட்டுக்குக்கொண்டு செல்ல முயன்றதாகவும் ஆனால் இதன் பெரிய உருவம் மற்றும் அதிக எடை காரணமாக அந்த  முடிவைக் கைவிட்டதாகவும் ஒரு கதை...

இன்னொன்று… இளவரசன்  ஐவான் பற்றியது. ஒரு முறை கிரெம்ளின் கோட்டைக்கு அவன் வருகை புரிந்தபோது, அவனது வருகையை சிறப்பிக்க விரும்பிய மதகுரு ஒருவர், இந்த மணியை அடித்துப் பேரொலி எழுப்பினார், அந்தக் கடுமையான சத்தத்தைத் தாங்க மாட்டாமல் அவன் பயந்து நடுங்கி மயங்கி விழுந்துவிட்ட செய்தி அரசனின் காதுக்கு எட்ட, கடுங்கோபம் கொண்ட மன்னன், மதகுருவின் தலையைத் துண்டிக்கச் செய்ததோடு… இந்த மணியையும் உடைக்கச் சொன்னான் என்பது இந்த மணி சார்ந்து வழங்கும் மற்றுமொரு கதை.

இவற்றையெல்லாம் உண்மையென நிறுவுவதற்குப் போதுமான ஆதார ஆவணங்கள் ஏதும்  இல்லை என்ற போதும் மனித மனங்களில் தேங்கி உறைந்து போய்க்கிடக்கும் ஆணவத்தையும், கொடுங்கோன்மையையும் எடுத்துக்காட்டும் நிரந்தரமான ஒரு சாட்சியாக அங்கே இருந்தபடி அத்தகைய தீய பண்புகளைத் தவிர்க்குமாறு அந்த மாபெரும் உடைந்த மணி,  மனிதகுலத்திடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது எனக்கு.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களைப் போலவே ரஷ்யநாட்டு மக்களும் மலர்களை நேசிப்பவர்கள். ஜன சந்தடி மிகுந்த தெருக்களில் இருக்கும் அடுக்குமாடி வீடுகளின் வெளிப்புற வராந்தாக்களும் கூட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். எழுச்சியூட்டும் மக்கள் பேரணிகளும் அணிவகுப்புக்களும் நடந்தேறியிருக்கும் செஞ்சதுக்கத்திலும் கூட நாங்கள் நடந்து செல்லும் வழி நெடுகிலும் விதம் விதமான மலர்களின் அணிவகுப்புக்கள் எதிர்ப்பட்ட வண்ணம் இருந்தன. செவ்வண்ணத்திலும், மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்களிலும்  பலரக மலர்கள் வெவ்வேறு வடிவங்களில் அடுக்கடுக்காகக் கொல்லென்று பூத்திருக்கும் காட்சியைக் காண்பது மனக்கிளர்ச்சியூட்டும் ஓர் அழகிய அனுபவம்!

malargal.JPG

 

viir_jothi.JPG

செஞ்சதுக்கத்தில் தவற விடாமல் கண்டாக வேண்டிய மற்றுமொரு இடம், உலகப்போர்கள் உட்படப் பல்வேறு கால கட்டங்களிலும் அந்நாட்டில் நிகழ்ந்திருக்கும் அனைத்துப் போர்களிலும் உயிர் நீத்த வீரர்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம். புதுதில்லியின் இந்தியா கேட் பகுதியில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கான ஜோதியைப் போலவே இங்கும் நீள்சதுர வடிவிலான ஓர் அமைப்புக்குள் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் இருபத்து நான்கு மணி நேரமும் அணையாத நெருப்பு ஒன்று கனன்று கொண்டே இருக்கிறது. அதன் இரு புறமும்
அதைப் பாதுகாக்க இராணுவ உடை தரித்த இரு காவலர்கள் மாறி மாறிப் பணி செய்து கொண்டிருக்கும் காட்சியையும் காண முடிந்தது.

கொடும் வெயிலில் காலை பத்து மணி தொடங்கிப் பல கிலோ மீட்டர் தொலைவுகளை நடந்தே கடந்தபடி சுற்றியதில் பசியும் களைப்பும் ஒரு புறம் வாட்டினாலும் மதிய உணவுக்கு முன்பு நாங்கள் பார்த்தே ஆக வேண்டிய மற்றொரு இடமும் அருகாமையிலேயே இருந்ததால் அதையும் பார்த்து முடித்த பின்பு அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார் எங்கள் வழிகாட்டி. அதுதான் ஜார் மன்னர்களின் ஆயுதக்கிடங்கு என்ற பெயரில் (The Armoury Chamber) அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அருங்காட்சியகம்.

FullSizeRender.jpg

 

 

 

 

மாஸ்கோ க்ரெம்லினின் இந்த அருங்காட்சியகம் ’ஆயுதக்கிடங்கு’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டாலும் மன்னராட்சிக் காலத்தின் இராணுவ தளவாடங்கள், போர்க்கருவிகள் ஆகியவற்றின் தொகுதியாக மட்டுமன்றி வழி வழியாக இந்நாட்டை ஆண்ட அரசர்களின் சேமிப்பில் இருந்தவையும், போர்களின் போது அவர்கள் கவர்ந்து குவித்தவையுமான எண்ணற்ற செல்வங்களின் கருவூலமாகவும் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாகச் சேமிக்கப்பட்டு வந்திருக்கும் எண்ணற்ற, அரிய பொருட்களின் பெட்டகமாகக் கருதப்படும் இந்தக்காட்சியகம் ரஷ்யாவின் மிகப்பழமை வாய்ந்த
அருங்காட்சியகங்களில் ஒன்று. ஜார் அரசர்களின் கருவூலத்திலிருந்த செல்வங்களும்  பரம்பரை பரம்பரையாகத் திரட்டப்பட்ட பல பொக்கிஷங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் பல, க்ரெம்லினில் உள்ள தொழிற்கூடங்களில் உருவாக்கப்பட்டவை வெளிநாடுகளிலிருந்து பரிசுப்பொருட்களாகப் பெறப்பட்டவைகளும் அங்கே உண்டு. மன்னர்கள் பூண்டிருந்த தங்க வெள்ளி அணிகலன்கள், கவசங்கள், அவர்கள் தரித்திருந்த விலையுயர்ந்த வைரம் மற்றும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட  ஆடம்பரமான கிரீடங்கள்,  அவர்கள் பயணித்த விதம் விதமான வடிவமைப்புக்களுடன் கூடிய கோச்சு வண்டிகள், தங்க வெள்ளிப்பாத்திரங்கள், அவர்கள் பெற்ற உயரிய விருதுகளுக்கான அடையாளப் பதக்கங்கள், அரச விழாக்களில் அவர்கள் அணியும் டாம்பீகமான ஆடைகள்… மத்திய கால ரஷ்யாவின் அடையாளங்களான எம்ராய்டரி வேலைப்பாடுகள், தங்கத்தாலேயே இழைக்கப்பட்ட மணிமுடிகள், தந்தவேலைப்பாடு கொண்ட சிம்மாசனங்கள். இவற்றோடு ரஷ்ய நாட்டுக்கே உரித்தான நுண்மையான வேலைப்பாடுகள் நிறைந்த முட்டை வடிவப் பளிங்கு வடிவங்கள் ஆகியவற்றால் நிறைந்து கிடந்தது அந்த அருங்காட்சியகம்.

காட்சியகத்துக்குள் நாம் நுழையும் போதே  நம்மிடம் ஒரு ஒலிவாங்கி  தரப்பட்டு முன் பதிவு செய்யப்பட்ட  விளக்கமும் அதன் வழியே தரப்பட்டு விடுவதால் (இந்தியாவிலும் கூட ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் போன்றவற்றில் இந்த வசதியைக்காண முடியும்) அதைச் சுற்றிப் பார்ப்பதற்கு உள்ளூர் வழிகாட்டியின் துணை தேவைப்படவில்லை. வரிசை முறைப்படி எல்லாக் காட்சிக் கூடங்களுக்கும்தொடர்ந்து சென்றபடி அந்த விளக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டிருந்தாலே அவற்றைக் குறித்த புரிதல் முழுமையாகக் கிடைத்து விடும். 

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஒரு புறம் மலைப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தினாலும் கூட ஏனோ என் மனம் அவற்றில் ஒட்டாமலேயே அலைந்து கொண்டிருந்தது. மிதமிஞ்சியதும் அளவு கடந்ததுமான  செல்வத்தின் பகட்டான செருக்கைக் காணும்போது எழும் ஒவ்வாமை உணர்வு ஒரு புறம்! மறு புறம், போரையே வாழ்வின் ஒற்றை இலக்காகக் கொண்டு அந்த வெறியோடு கூடிய வெற்றிக் களிப்புடன் கவர்ந்து வரப்பட்ட பொருட்களின் பின்னணியில் மறைந்திருக்கும் சில தீராத சோகங்கள், அவலங்கள்  குறித்த மன உளைச்சல்கள்! 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற தத்துவம்… அத்து மீறிய இந்தத் தனியுடைமைப் பொக்கிஷங்கள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய கடுமையான சினத்தின் அடிப்படையிலேயே இந்த மண்ணில் வேர் கொண்டிருக்கக் கூடுமென அப்போது நினைத்துக் கொண்டேன். 

இந்த உணர்வுகளோடு கூடவே - காலை முதல் கடும் வேனலில் பல இடங்களில் வெட்ட வெளிகளில் சுற்றி அலைந்த களைப்பு... இவையும் இணைந்து கொள்ள… என்னால் அங்கே மிகுதியாக ஒன்ற முடியவில்லை. வேகமாக ஒரு சுற்று முடித்து விட்டுத் திரும்பினேன்… அந்தக் காட்சியகத்தைக் காண ஆர்வம் காட்டிய குழுவினர் சிலரும் கூடப் பசி வேகத்தில் விரைவாக வந்து சேர்ந்து விட, மதிய உணவுக்குக் கிளம்பிச்சென்றோம்…அங்கே எங்களுக்காக ஒரு வியப்பு காத்திருந்தது.

- தொடரும் ...

http://www.dinamani.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-4

 

 
painting-_jesus_enter

செஞ்சதுக்கத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தபடி மதிய உணவுக்காக சிறப்புப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது எங்கள் குழுவினரிடம் ஒரு சிறு கவலையும் கூடக் குடியிருந்தது… குறிப்பாக மரக்கறி உணவை மட்டுமே உட்கொள்ளும் எனக்கு!

ரஷ்யப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பே - என் தோழியர் பலரும் அங்கே இந்திய உணவு - குறிப்பாக சைவ உணவு கிடைப்பது கடினம் என்று பல முறை என்னை பயம் காட்டியிருந்தனர். அதனால் நானும் கொதிக்கும் நீரில் போட்டு உடனடியாக உண்ணக்கூடிய ஆயத்த உணவு வகைகள் பலவற்றையும் உடன் எடுத்துச் சென்றிருந்தேன்… ஆனால் முதல் நாள் இரவு மாஸ்கோவில் நாங்கள்
தங்கியிருந்த அஸிமுட் விடுதியோடு இணைந்து இந்திய உணவகம் இருந்ததால் எப்படியோ தப்பி விட்டோம்.

இப்போது அந்த இடம் வரை மீண்டும் செல்வது இயலாதது என்பதால், உணவுக்காக  எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பது புரியாதவர்களாக நாங்கள் இருக்க, சென்னையிலிருந்து உடன் வந்த எங்கள் சுற்றுலாக்குழுவின் தலைவரும் உள்ளூர் வழிகாட்டியும் ஓர் இந்திய வடநாட்டு உணவகத்துக்கு எங்களைக் கொண்டு வந்து சேர்த்தபோது வியப்புக்கலந்த மகிழ்ச்சி எங்களை ஆட்கொண்டது. சுட்ட சுக்கா ரொட்டி… வெண்ணெய் தடவிய ரொட்டி, சீரகம் கலந்த பாசுமதிச் சோறு, பன்னீர்க்குழம்பு, ராய்தா எனப்படும் தயிர்ப்பச்சடி இவை பரிமாறப்பட்டபோது ஏதோ காணாதது கண்டது போல ஓர் உணர்வு! சோறு விரைத்துப் போய் விதை விதையாக இருந்தாலும் தயிரோடு கலந்து விழுங்கி விட்டு இரண்டு சுக்கா ரொட்டிகளையும் சாப்பிட்டு சுருக்கமாக மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன்.

மதிய உணவு மிகுதியானால் ஓய்வெடுக்க உள்ளம் தூண்டும், சுற்றுலாவிலிருந்து கவனம் சிதறும் என்ற என் வழக்கமான போக்கைப் பொதுவாக எல்லாப் பயணங்களிலும் சற்று  விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பது என் வழக்கம். குறிப்பாக இப்படிப்பட்ட அரிதான பயணங்களின்போது பசிக்களைப்பில்லாமல் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உணவைக் கருதவேண்டுமே தவிர, அதை ஒரு விருந்து போல ஆக்கிக்கொண்டு அசந்து போய்விடுவது பயண நோக்கத்தையே பாழ் செய்து விடக்கூடியது.

எங்கள் ரஷ்ய சுற்றுலாவின் இரண்டாம் நாளான அன்று (24ஜூலை) மாலை அருங்கலைக்காட்சியகம் ஒன்றைக் காண்பதும் மாலை ஏழு மணி அளவில் ரஷ்ய நாட்டின் சிறப்புக்களில் ஒன்றான ரஷிய சர்க்கஸ் காட்சிக்குச் செல்வதும் எங்கள் பயணத்திட்டத்தில் இருந்தவை.

உணவை முடித்துவிட்டுப் பேருந்தில் ஏறப்போகும் நேரம் பார்த்து என்னிடம் பாய்ந்து வந்தார் எங்கள் மாஸ்கோ வழிகாட்டியான டேன்யா. மாஸ்கோ வந்து சேர்ந்த கணம் முதல் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி குறித்து அவரிடம் நான் விடாமல் அரித்தெடுத்துத் துளைத்துக்கொண்டு வந்திருந்தேன். தனிப்பட்ட முறையிலோ கல்விச் சுற்றுலாவாகவோ இல்லாமல் இப்படிப்பட்ட சுற்றுலாக்குழுக்களுடன் செல்லும்போது - குழுவினரோடு மட்டுமே - அதிலும்  பயணத் திட்ட வடிவமைப்பை சார்ந்து மட்டுமே செல்ல முடியும் என்பதையும்  நம் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வது கடினம் என்பதையும் நான் உணர்ந்திருந்தாலும் அவ்வப்போது என் உள்மன விருப்பத்தை - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி சார்ந்த நினைவிடங்களைத் தொலைவிலிருந்தாவது எனக்குக் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் நான் தொடர்ந்து விடுத்தபடியே இருந்தேன்.

அதை நினைவில் கொண்டிருந்த டேன்யா, சாலையின் மறுபுறம் இருந்த ரஷ்ய தேசிய நூலகத்தையும் அதன் முன்பு கம்பீரமாக நின்றிருந்த தஸ்தயெவ்ஸ்கியின் சிலைவடிவையும் எனக்குக் காட்டினார். ரஷ்யப்பயணத்தை அந்த இலக்கிய ஆசானுக்காக மட்டுமே மேற்கொண்டிருந்த நான் தொலைவிலிருந்து அதைப் பார்த்தாலும் கூட மெய்சிலிர்த்துப் போனேன். இலக்கியத்தைக் கொண்டாடும் இந்த மண்ணில் - உலகஇலக்கியங்கள் பலவற்றின் ஊற்றுக்கண்ணான இந்த நாட்டில் - அதன் தேசியநூலகத்துக்கு முன்பாக ஒரு மாபெரும் நாவலாசிரியரின் சிலையை வடிவமைத்து வைத்திருந்தது தான் எத்தனை பொருத்தமானது.

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%

சுற்றுலாவில் வழிகாட்டுவது என்பது, தான் மேற்கொண்ட பணியாக இருந்தாலும் அதை ஒப்புக்குச் செய்யாமல் மனம் கலந்து செய்பவர் என்பதைத் தான் அழைத்துச்செல்லும் ஒவ்வொரு இடத்திலும் நிரூபித்துக் கொண்டே வந்தார் டேன்யா. உயரமும் கம்பீரமுமான தோற்றம், ஒரு குழுவைத் தலைமையேற்று நடத்துவதற்கான மிடுக்கான ஆளுமை, அங்கங்கே நேரம் ஒதுக்குவதிலும் நேரக்கணக்கைத் தவறாமல் கடைப்பிடிப்பதிலும் கண்டிப்பு!

எடுப்பான குரலில் அங்கங்கே விரைவாக வழி நடத்திச்செல்லும் அவரது போக்கு, வயதில் மூத்த எங்கள் குழுவினர் சிலருக்கு அதிகார தோரணையாகத் தென்பட்டாலும் ஒரு வழிகாட்டிக்கே இருந்தாக வேண்டிய பொறுப்பையும், கடமையையும் அவர் மிகச் சரியாகச் செய்து வருவதாகவே எனக்குப் பட்டது. கல்லூரியில் பணியாற்றிய நாட்களில் மாணவியரோடு சுற்றுலாக்கள் பலவற்றை ஒழுங்கு செய்து வழி நடத்தியிருப்பதால், எந்த இடத்தையும் நேரம் பிசகாமல் காண்பதற்கும் எவரும் குழுவிலிருந்து பிரிந்து வழி விலகிப்போகாமல் இருப்பதற்கும் அவர் கையாண்ட அந்த வழிகளே முற்றிலும்
சரியானவை என்பதை நான் நன்கு புரிந்து வைத்திருந்தேன்.

இடங்களைக்காட்டி விளக்கம் தருவதோடு மட்டுமல்லாமல் தன் அளவு கடந்த நாட்டுப்பற்றையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் டேன்யா வெளிப்படுத்திக்கொண்டே இருந்ததும் என்னைக் கவர்வதாக இருந்தது.

கார்கி பூங்காவாகட்டும், செஞ்சதுக்கமாகட்டும்... எது பற்றிச்சொன்னாலும் ’இது என் தேசம்’ என்ற பெருமித உணர்வுடன் அதை வெளிப்படையாகச் சொன்னபடியே எங்களுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் கொண்டிருந்தார் அவர். தஸ்தயெவ்ஸ்கி சிலையை என்னிடம் சுட்டிக்காட்டிய அந்த வேளையிலும் கூட "இவர் எங்கள் நாட்டின் இலக்கியச்சொத்து" என்ற பெருமிதம் டேன்யாவிடம் கொப்பளித்துக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அதனாலேதான் அத்தனை நேர நெருக்கடியிலும் என் கோரிக்கையை மறக்காமல் நினைவில் கொண்டபடி தேசிய நூலகத்தின் வாயிலிலுள்ள தஸ்தயெவ்ஸ்கியை அவரால் எனக்கு இனம் காட்ட முடிந்தது. தன் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த அந்த இலக்கிய மேதையின் மீது மொழிதெரியாத  ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்த ஒருவர் அத்தனை ஆர்வம் காட்டுவது அவரை நெகிழ்த்தியிருக்க வேண்டும்.

அடுத்தாற்போல அவர் எங்களை அழைத்துச்சென்ற இடம், மாஸ்கோவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ’ட்ரெட்யகோவ் நுண்கலை அருங்காட்சியகம்’. ரஷ்ய நாட்டு நுண்கலை வேலைப்பாடுகளின் களஞ்சியமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சியகத்துக்குப் பேருந்தை நிறுத்திய இடத்திலிருந்து சற்று நடந்து சென்றபோது காட்சியகத்தில் காணப்போகும் அரிய செய்திகளில் முதன்மையான சிலவற்றைத் தட்டிகளில் எழுதி அந்த வீதியின் குறுக்காக வைத்திருந்தார்கள். தகவல்கள் ரஷ்ய மொழியிலேயே தரப்பட்டிருந்தாலும் நாங்கள் எவற்றையெல்லாம் காணப்போகிறோம் என்பது பற்றிய  முன்னோட்டமாகவே அது அமைந்து விட்டது.

TretyakovGallery.jpg

மாஸ்கோ இந்நாட்டின் தலைநகராக இருந்தபோதும், பலநாட்டவரும் பல மொழி பேசுவோரும் வருகை புரியும் இடமாக இருந்தபோதும் அங்கிருந்த எல்லாஅறிவிப்புப் பலகைகளிலும் ரஷ்ய மொழியை மட்டுமே காண முடிந்ததே தவிர அதற்கு இணையான ஆங்கிலச் சொல் உடன் தரப்பட்டிருக்கவில்லை. மின் தூக்கிகள், ஓய்வு/ஒப்பனை அறைகள் ஆகியவை குறித்த அறிவிப்புக்களும் கூட அப்படித்தான். தங்கள் தாய்மொழியை எந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்களென்பதை அது எடுத்துக்காட்டிய போதும் அந்த மொழி தெரியாத பிறநாட்டுப் பயணிகளுக்கு – குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு அது சிக்கலளிப்பதாக இருப்பதை உணர்ந்து ஆங்கிலச் சொற்களையும் அவர்கள்  சேர்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ட்ரெட்யகோவ் அருங்காட்சியகத்துக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது எங்கள் குழுவில் சிலர் காலை முதல் கடும் வெயிலில் வெகு தூரம் சுற்றி அலைந்ததால் களைத்துப் போனவர்களாய் வெளியில் இருந்தபடியே ஓய்வு கொள்வதாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டனர். உள்ளே சென்ற நாங்கள் திரும்பி வந்து அது குறித்த வருணனைகளை அடுக்கிய பிறகுதான் தாங்கள் எதையோ இழந்து விட்டதான உணர்வு அவர்களை ஆட்கொண்டது.

மாஸ்கோ நகரில் பல அருங்காட்சியகங்கள் இருந்தபோதும் அவற்றையெல்லாம் தன்னிடமுள்ள கலைக்கருவூலங்களால் விஞ்சக்கூடிய தன்மை படைத்ததாக விளங்குவது ட்ரெட்யகோவ் நுண்கலை அருங்காட்சியகம். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரிலுள்ள லூவ் அருங்காட்சியகத்துக்கு ஓரளவு சமமாகும் தன்மை கொண்ட இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க ஓரிரு மணிநேரம் மட்டுமே செலவிடுவது நிச்சயமாக அதற்கு நியாயம் சேர்க்க முடியாது என்றாலும் எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறைந்த பட்ச நேரத்தில் முடிந்தவரை சுற்றிப்பார்த்து அங்கிருந்த அருங்கலைப் பொக்கிஷங்களைக் கண்டு ரசிக்க நாங்கள் தவறவில்லை. 

gallery--5.JPG

மாஸ்கோ நகரைச் சேர்ந்த பேவல் மிகேலோவிச் ட்ரெட்யகோவ், ஒரு வணிகர்; அதே நேரத்தில் அவர் கலைகளின் காதலரும் கூட! 1856 இல் தொடங்கி ரஷ்யநாட்டுக் கலைஞர்களிடமிருந்து  விலை கொடுத்து வாங்கித் தான் சேமித்து வந்த கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை இந்நாட்டுக்கே உரியசொத்தாக 1892 இல் அவர் வழங்கி விட ரஷ்ய பாணிக் கலைகளின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஒரு காட்சியகம்  உருப்பெறத் தொடங்கியது. க்ரெம்லினின் தெற்குப் பகுதியில் ரஷ்ய நாட்டு தேவதைக் கதைகளில் இடம் பெறும் வீடுகளின் பாணியில் 1902–04 காலகட்டத்தில் இக்கட்டிடம் முழுமையாக வடிவமைக்கப்பட்டுக் காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டது.

மேற்கத்திய நாடுகளில் வாழும் பெரும்பாலோருக்கும் ரஷ்யக்கலைப் பெருமைகள் இருபதாம் நூற்றாண்டு வரை மூடப்பட்ட புத்தகம் போலவே இருந்தன. உலகத்தாரால் மிகுதியும் அறியப்படாததாக இருந்த அவையனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது இந்தக்காட்சியகம் உருவான பிறகுதான்.

POSTERS_LEADING_TO_THE_STREET_OF_MUSEUM1
 
10 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரையிலான  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களும் சிற்பங்களும் ரஷ்யக்கலையின் படிப்படியான வளர்ச்சியையும் வெவ்வேறு காலகட்டங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கங்களில் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் வெளிப்படுத்தியபடி  காட்சியகத்தில் உள்ள 62 அரங்குகளையும் அலங்கரித்து வருகின்றன. முழுக்க முழுக்க ரஷ்யத் தன்மை கொண்டவை என்றே அவற்றைக் கூறி விடலாம்.  மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்தவை, போர்க்கொடுமைகளைக் காட்டுபவை,  இம்ப்ரஷினிச பாணி ஓவியங்கள், நிலப்புரபுத்துவ கால கட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய  அடிமை முறையை வெளிக்காட்டி அதன்  அவலங்களைச் சித்திரிக்கும் ஓவியங்கள், செவ்வியல் மற்றும் கற்பனாவாத பாணியைச் சேர்ந்தவை எனப் பலதரப்பட்ட
வகைப்பாடுகள் கொண்டவை அவை.

POSTERS_LEADING_TO_THE_STREET_OF_MUSEUM_

ட்ரெட்யகோவ் இயற்கையை மிகவும் நேசித்தவரென்பதால் பனி மூடிய மலைச்சிகரங்கள், குமுறும்கடல், பசுமை போர்த்தியிருக்கும் காடுகள், ஆறுகள், வானத்தின் பல வண்ணங்கள் என இயற்கைக் காட்சிகளுக்கும் அங்கே பஞ்சம் இல்லை. அருங்கலைப்பொருட்களை நேசித்ததோடு மட்டுமன்றி சிறந்த ஓவியத்திறமை கொண்டவர்களைத் தன்னிடம் அழைத்து அவர்களுக்கு உரிய சன்மானம் தந்து இந்நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளான தல்ஸ்தோய், தஸ்தயெவ்ஸ்கி, துர்கனேவ் ஆகியோரின்  ஓவியங்களையும் வரையப் பணித்தார் ட்ரெட்யகோவ். அந்தப் படைப்பாளிகளின் புத்தக முகப்பட்டைகள் பலவற்றை இன்றுவரையிலும் அலங்கரித்து வருபவை அந்த ஓவியங்களே.

ரஷ்யப்புரட்சி மலர்ந்து சோவியத் யூனியன் உருவான பின்பு சோஷலிசக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்புக்களும் நவீன பாணிக் கலைப்படைப்புக்களும் கூட இந்தக்காட்சியகத்தில் இடம் பெறத் தொடங்கின.

gallery-3.JPG

சமயச்சார்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் காட்சியகத்தின் முதல் தளத்தில் திருமுழுக்கு செய்பவரான ஜான் என்னும் புனிதர், மீட்பர் ஏசுவின் வரவைச் சுட்டிக்காட்டுவதான மிகப்பெரிய ஓவியம் ஒரு சுவர் முழுவதையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் தீட்டப்பட்டிருக்கும் அந்த வண்ண ஓவியத்தின் அருகே எங்கள் குழுவினர் பலரும் ஆர்வத்தோடு புகைப்படம்  எடுத்துக்கொண்டனர்.  காட்சியகத்தின் இரண்டாம்  தளம் இயற்கைச் சித்திரிப்புக்களுக்கானது.

gallery-_jesus_enter.JPG

2012ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தும் போரிஸ் ஜெஃப்லேண்டும் பங்கு பெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியும் கூட இந்தக்காட்சியகத்தின் ஓர் அரங்கிலே நடைபெற்றிருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அருங்காட்சியகத்தைப்பார்த்து முடித்து வெளியே வந்தபின் சிறிது நேரம் அருகிலிருந்த கலைப்பொருள் விற்பனைக் கடை ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தது. ரஷ்யாவுக்குச்சென்று வந்ததன் அடையாளமாக ஏதேனும் வாங்கிச் செல்ல நினைத்தால் அவை பொம்மைகள் மட்டும்தான். மரத்தில் செய்யப்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக அடக்கப்பட்டிருக்கும் வினோத அமைப்புக்கொண்ட அந்த பொம்மைகள் பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமாகக் கடைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன.

இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக நாங்கள் காண இருந்தது ரஷ்யநாட்டு சர்க்கஸ் காட்சி. சர்க்கஸ் கலைக்கும், அதை மிக நுட்பமாகப் பயின்று லாவகமாக வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கும் பெயர் பெற்ற நாடு ரஷ்யா. என் இளம் வயதில் நான் வசித்த சிறு நகரத்தில் மணல் பரப்பிய பொட்டல் வெளியில் கூடாரம் அடித்தபடி எந்தக் குழுவினர் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினாலும் அது ரஷ்யன் சர்க்கஸ் என்றே விளம்பரப்படுத்தப்படும்; அந்த அளவுக்கு  இந்தநாட்டின் இன்னொரு தனித் தன்மையாக விளங்குவது சர்க்கஸ் கலை. 

circus_auditorium.JPG

நாங்கள் சென்ற சர்க்கஸ் அரங்கம் குளிரூட்டப்பட்ட ஓர் உள்ளரங்கம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. குழுவில் என்னுடன் வந்திருந்த தோழி ஒருவர் மிகுந்த ரசனையோடு அவற்றில் லயித்திருக்க… எனக்கோ, காலை முதல் சுற்றி அலைந்த களைப்பில் கண் செருகிக் கொண்டு செல்ல, பயங்கரமான  தூக்கத்தின்
வயப்பட்டிருந்தேன்; அந்தத் தோழி பல முறை பல விதமாகச் சுண்டி எழுப்பிப் பார்த்தும் என் துயில் கலைவதாக இல்லை. அதற்கு இன்னொரு காரணமும் கூட உண்டு. சிறுவயது முதலே சர்க்கஸ் காட்சிகள் எனக்கு உகப்பானதாக இருந்ததில்லை; அதுவும் ஒரு கலையே என்ற அளவில் அதை மதித்தாலும் கூட மனிதர்கள் இவ்வாறு தங்களையும் துன்பப்படுத்திக் கொண்டு வாயில்லா ஜீவன்களையும் துன்புறுத்துவதை சகிக்க முடியாததால் பள்ளி நாட்களிலேயே சர்க்கஸ் செல்வதை நான் தவிர்த்து விடுவேன்… இங்கும் கூட யானை, குரங்கு, பூனை, நாய் ஆகியவற்றை வைத்து வினோத வினோதமாய் வித்தை காட்டும் விளையாட்டுக்கள் பலவும்  அரங்கேறிக் கொண்டிருந்தன.

ஒரு வழியாகப் பத்தரைக்கு அது நிறைவுக்கு வர நாங்கள் அஸிமுட் விடுதியோடு இணைந்த இந்திய உணவகத்துக்குச் சென்றோம். திருநெல்வேலியைச் சேர்ந்த அந்த உணவகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவர் சூடான சோறு, மிளகு ரசம், இட்லி ஆகியவற்றுடன் எங்களை வரவேற்றபோது நாம் இருப்பது ரஷ்யாவில் தானா! என்று கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது...

இன்றும் அறைக்குச் சென்று பொருட்களை ஒழுங்கு படுத்தி உறங்கும்போது நள்ளிரவாகி விட்டிருந்தது.

- தொடரும்...

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-5

 

 
METRO_5

ரஷ்யப்பயணத்தின் மூன்றாம் நாளான அன்றுதான் (ஜூலை 25) மாஸ்கோவில் நாங்கள் செலவழிக்கும் கடைசி நாளும் கூட. மிகக்குறைவான அந்தக் காலகட்டத்திற்குள் மாபெரும் தேசம் ஒன்றின்  புகழ் வாய்ந்த தலைநகரில் இன்றியமையாத ஒரு சில இடங்களை முடிந்த வரை பார்க்க முடிந்ததோடு அந்நகரத்தின் உயிர்ப்பான ஜீவனையும் உள்வாங்கிக்கொள்ள முடிந்ததில் நிறைவு கொண்டிருந்தேன் நான்.
அன்றைய முற்பகல் முழுவதும் மாஸ்கோ மெட்ரோவில் பயணம் செய்வதும் மெட்ரோ நிலையங்கள் பலவற்றைக் காண்பதும் எங்கள் பயணத் திட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. மாஸ்கோ மெட்ரோவின் வினோதமான தனித்துவம் என்னவென்று அதுவரை அறிந்திராததால்  அன்றைய சுற்றுலாத் திட்டம் எனக்கு வியப்பையே அளித்தது. புதுதில்லியில் கழித்த ஏழாண்டுக்காலத்தில் மெட்ரோவில் பலமுறை பயணம் செய்திருந்ததாலும் தற்போது சென்னை மெட்ரோவிலும் கூடச் சென்றிருந்ததாலும், அப்படிக் குறிப்பாக  மெட்ரோ நிலையங்களை  மட்டுமே பார்க்க என்ன இருக்கப்போகிறது என்றே என் சிந்தனை சென்று கொண்டிருந்தது.

METRO_3.jpg
டேன்யா (வழிகாட்டி) எங்களைப் படிப்படியாக வழி நடத்திக்கொண்டு கிட்டத்தட்ட இருபது வண்டிகள் மாறிமாறிச் சென்றபடி… தரைத் தளத்துக்குக் கீழே மட்டுமே அமைந்திருந்த மெட்ரோ பாதையில் பல  நிலையங்களைக் காட்டியபோது தான்… அவை வெறும் போக்குவரத்துக்கானவை மட்டுமல்ல… சுரங்கத்துக்குள் இருப்பதைப் போன்ற அள்ள அள்ளக் குறையாத காட்சிகளும், ஆழமான பல  தகவல்களும் கூட அவற்றில் பொதிந்து கிடக்கின்றன என்பதை நான் புரிந்து கொண்டேன்.
உண்மையைச் சொல்லப்போனால் பரபரப்பான மாஸ்கோ வீதிகளுக்கு அடியில் மிகப்பிரம்மாண்டமும் அதிசயமுமான அருங்கலை வேலைப்பாடுகளும் வேறு பல இரகசியங்களும் நிரம்பிய இன்னொரு உலகமே மறைந்து கிடக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்…

கலைக்காட்சியகம் போலத் திகழும் இந்த மெட்ரோ நிலைய எழிற்களஞ்சியத்தை முதன்முதலாகப் படமெடுக்க அனுமதிக்கப்பட்டவர் கட்டிடக் கலைஞராக இருந்து பிறகு புகைப்பட நிபுணராகவும் பரிமாணம் பெற்ற கனடாவைச் சேர்ந்த டேவிட் பர்ட்னி என்பவர். மக்களின் போக்குவரத்து வசதிகளுக்கு இடையூறாக இருக்கலாகாது என்பதால் இரவு நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பிறகே அவருக்கும் அதற்கான அனுமதி கிடைத்தது.. மாஸ்கோ மெட்ரோவில் புதைந்து கிடக்கும் இரகசியமான அதிசய உலகம் உலகத்தின் பார்வைக்கு முன்  வைக்கப்பட்டது அப்போதுதான்.
தலைநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 1875 ஆம் ஆண்டிலேயே முன் மொழியப்பட்டு  1902 இல் விவாதிக்கப்பட்ட  இந்தத் திட்டம் அப்போதைய நகராட்சியால் நிராகரிக்கப்பட்டுவிட, சோவியத் யூனியன் உருவான பின் -1931ஆம் ஆண்டுக்குப்பிறகு - இதன் உருவாக்கம் தொடங்கிப் படிப்படியாக முழுமை பெறத் தொடங்கியது.
உலகின் பல நாடுகளில் பாதாள ரயில்கள் குறித்த சிந்தனைகள் கூட அரும்பியிராத ஒரு காலகட்டத்தில் மெட்ரோ வழி பற்றியும், அதன் நுணுக்கங்களையும் சிந்தித்துச் செயல்படுத்தியதோடு அதை ஒரு கலைக்கூடமாகவும் மாற்றிய பெருமை ரஷ்ய நாட்டின் தலைவர்களுக்கே உரியது. மாஸ்கோ மெட்ரோவைத் தனித்தன்மை பெற்றதாக - ஏனைய தரையடிப் போக்குவரத்து ரயில் அமைப்புக்களிலிருந்து மாறுபட்டதாக ஆக்குவது அதன் இந்த அம்சமே.. உலகிலேயே மிக மிக எழிலார்ந்ததாக எண்ணப்படும் இந்த மெட்ரோவைச் சேர்ந்த நாற்பத்து நான்கு நிலையங்கள் உலகின்  பெருமை மிகு கலாச்சாரச் சின்னங்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துக்கான சராசரி இரயில் நிலையங்களாக மட்டுமே சொல்ல முடியாதவையாக - சோஷலிஸ யதார்த்தவாதக் கொள்கையைச் சித்திரிக்கும் கலைக்கூடங்களாகவும் சோவியத் நாட்டின் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யும் அரங்கங்களாகவுமே இந்நிலையங்கள் திகழ்கின்றன. மிகப்பிரம்மாண்டமான மிக விரிவான வேலைப்பாடுகளுடன் கூடியதாகப் பொலியும் இவை சோவியத் மண்ணின் ஒளி மிகுந்த எதிர்காலத்தை - ஸ்வெத்-ஒளி; ஸ்வெல்டோ புதுஷ்ஷே-பிரகாசமான வருங்காலம் (“svet” (light) and “sveltloe budushchee” (bright future)) என தேசத்தின் அடிப்படை நோக்கங்களை முன் நிறுத்துவனவாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.  
மாஸ்கோ மெட்ரோவின் வலைப்பின்னலில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட நிலையங்களில் நகரத்தின் அடி ஆழத்தில் தெருக்களுக்கு அடியே புதைமட்டத்தில் எழுபது நிலையங்களும் அதற்குச்சற்று மேல்மட்டத்தில் எண்பத்தேழு நிலையங்களும் தரை மட்டத்திலும் அதற்கு மேல் சற்று உயரத்தில் ஒரு சில நிலையங்களும் அமைந்திருக்கின்றன. இவற்றுள் எண்பத்து நான்கு மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் பார்க் பொபெடி[Park Pobedy] என்னும் நிலையமே அதிகபட்ச ஆழத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம்.
பல நிலையங்களில் பலப்பல  ரயில்களில் மாறி மாறிப் பயணம் செல்லச் செல்ல நாங்கள் பல மட்டங்களிலும் இருக்கும் பல தளங்களையும் பார்த்து அதிசயத்திலும் பிரமிப்பிலும் ஆழ்ந்து போயிருந்தோம்...

metro.jpg
விளாடிமிர் லெனின் அவர்களின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்த - அவர்நினைவாக அர்ப்பணிக்கப்பட்டிருந்த  தளம், ரஷ்யப்புரட்சியை சித்திரிக்கும் பிரம்மாண்டமான சுவரோவியத்தைக் கொண்டிருக்கும் தளம்,  இரு பெரும் உலகப்போர்க் கொடுமைகளால்  பட்ட அவலங்களிலிருந்து விட்டு விடுதலையாகி ‘இந்த உலகம் முழுவதும் சமாதான சக வாழ்வில் திளைக்கட்டும் ‘ என்ற செய்தியை ரஷ்ய மொழி வாசகங்களுடன் எடுத்துக்காட்டும் வண்ணச் சித்திரம் கொண்ட தளம்,  இன்றும் கூடச் செயல்படும் நூலகமாக விளங்கிக்கொண்டிருக்கும்  குர்ஸ்கயா  மெட்ரோ நிலையம் [The Kurskaya metro station] என்று பலவற்றையும் ஆர்வத்துடன் பார்வையிட்டுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே சென்று கொண்டிருந்த எங்களைக்  கண்ணைக்கட்டி  நிறுத்தும் பளிங்கு மற்றும் மேற்கூரை வேலைப்பாடுகள் நிறைந்த  மாயாகோவ்ஸ்கயா [Mayakovskaya ] ரயில் நிலையம் பெரு வியப்பில் ஆழ்த்தியது, அதிலிருந்த பளிங்குச்சுவர்களையும் விதானங்களையும்  எத்தனை முறை எத்தனை கோணங்களில் படங்கள் எடுத்தாலும்  எங்கள் ஆவல் தீராமல் பெருகிக்கொண்டேசென்றது.

METRO_MAYAKOVASKY.jpg
மாயாகோவ்ஸ்கயா  ரயில் நிலையத்துக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. 1941ஆம் ஆண்டு அக் 6ஆம் தேதி -  ரஷ்யப்புரட்சியின் ஆண்டு விழா நாளன்று ஃபாஸிஸத்தின் வீழ்ச்சியைப் பிரகடனம் செய்தபடி அரசியல்வாதிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் இங்குள்ள அரங்கத்தில் இருந்தபடிதான் உரையாற்றியிருக்கிறார்  ரஷ்யாவின்  மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஜோசஃப் ஸ்டாலின்.

joseph-stalin.jpg
மாஸ்கோ  மெட்ரோ  குறித்து  நாங்கள்  அறிந்து கொண்டதில் மிகவும் முக்கியமானதும்  சுவாரசியமானதுமான  மற்றொரு தகவலும் உண்டு. இரண்டாவது  உலகப்போர்  நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - வான் வழித் தாக்குதல்கள் மிக அதிகமாக இருந்தபோது இந்த நிலையங்களில் இருந்த அரங்கங்கள், கூடங்கள் மற்றும் நடைமேடைகள் ஆகியவை,  வெடிகுண்டு வீச்சுக்களிலிருந்து பொது மக்களைக் காப்பாற்றும் புகலிடங்களாகப் பயன்பட்டிருக்கின்றன என்பதே அந்தச்செய்தி.  இரவு வேளைகளில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் வண்டிகளில் பெண்களும் குழந்தைகளும் பெருவாரியாக அடைக்கலம்  புகுந்திருக்கின்றனர். ஜெர்மானியர்கள் நடத்திய வான் தாக்குதல்கள் மிகுதியாக இருந்தபோது அந்த இடத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் தொகை மிகுதியானதால் அவர்களின் தேவையை  நிறைவு செய்வதற்காகவே பலபொருள் அங்காடிகளும் முடி திருத்தகங்களும் கூட அங்கே  அப்போது  செயல்பட்டிருந்திருக்கின்றன.
பிற நாடுகளின்  வெடிகுண்டுவீச்சுத் தாக்குதலிலிருந்து காக்கும் புகலிடமாக அமைந்ததோடு  ரஷ்யாவின் ஆயுதசேமிப்புக்கிடங்காகவும் கூட இந்த நிலையங்கள் பயன்பட்டிருக்கின்றன. இரும்புக்கோட்டை போன்ற ஒன்றை  இரு வீரர்கள்  காவல் புரிந்து கொண்டிருப்பதைப் போன்ற அமைப்பு ஒன்றைக்காண முடிந்தது. அதுவே இந்நாட்டின் ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சேமிக்கும் கிடங்காகப்  பயன்பட்டிருத்தல் கூடும்.

METRO_BOMB.jpg
மெட்ரோ ரயில்கள் பலவற்றில் பயணித்தபடி மதியம் வரை சுற்றிக்கொண்டிருந்தோம். ரயில்பயணத்தைப் பொறுத்தவரையில் பிற மெட்ரோக்களைப் போலத்தான் அதுவும்  அதில்  புதுமைகள்  ஏதும்  இல்லை என்றாலும் மிக அதிக பட்சமான மக்கள் - கோடிக்கணக்கில் இதில் பயணம் செய்கிறார்களென்பதும் நேரம் தவறாதபோக்கை மாஸ்கோ மெட்ரோ ரயில்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் ஒழுங்காய் கடைப்பிடிக்கின்றன என்பதும்  கருத்தில் கொள்ள வேண்டிய செய்திகள்,
பிற்பகல் ஒருமணி அளவில் மாஸ்கோ மெட்ரோவிலிருந்து விடை பெற்று ஒருவட இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்ட பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. மாஸ்கோ ரயில் நிலையம் சென்று பீட்டர்ஸ்பர்க் செல்லும் விரைவு ரயிலில் ஏறிக்கொண்டோம்... விரைவாகச் சென்றாலும் செல்வதே தெரியாதபடி... மிகுந்த தூய்மையோடு இருந்த  அந்த ரயிலில் விமானப்பயணம் போலச்சென்று கொண்டிருந்தபோது, ரஷ்யாவின் புறநகர்ப்பகுதி சார்ந்த காட்சிகள் எங்கள் கண்களுக்கு விருந்து படைத்துக்கொண்டிருந்தன. 

rushyan_village_house.jpg
மாஸ்கோவில் அடுக்கு மாடிக்கட்டிடங்களைத் தவிரத் தனி வீடுகள் குடியிருப்புக்கள் என்று  எதையும் பார்க்காமலிருந்த நாங்கள் ரஷ்யநாட்டுச் சிற்றூர்களையும் கிராமங்களையும் கோதுமை வயல்களையும் சின்னச்சின்ன அழகான வீடுகளையும் பண்ணை வீடுகளையும் பார்க்க முடிந்தது அப்போதுதான்... கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செல்வதே தெரியாமல் கழித்த அந்தப் பயண நினைவுகள், வெகு சுவையும் இனிமையும் வாய்ந்தவை; பயணத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்த சகபயணிகளோடு மனம் விட்டுப்பேசியபடி பலவற்றைப்பகிர்ந்து கொள்ளமுடிவதற்கும் ஒருவரைப்பற்றி மற்றவர் அறிந்து கொள்ளவும் கூடநேரம் வாய்த்தது அப்போதுதான்....

METRO_RIDE222.jpg
செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் என்ற பெயரைக்கேட்டதுமே... அந்த நகரத்தில் கால் பதிக்கப்போகிறோமென்ற எண்ணம் எழுந்த மாத்திரத்திலேயே என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்த்தபடி நான் பரவசத்தின் உச்சநிலையில் இருந்தேன்... நான் மொழி பெயர்த்திருக்கும் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் கதைக்களன்கள் பெரும்பாலும் மையம் கொண்டிருப்பதும் அவரது நினைவகம் அமைந்திருப்பதும்   அங்கேதான்... அதனாலேயே அங்கு சென்று கொண்டிருப்பது என்னை ஆனந்தச் சிலிர்ப்பில் ஆழ்த்தி இருந்தது... ரயிலை விடவும் விரைவாக அங்கே  சென்று விட என் மனம் முந்திக் கொண்டிருந்தது.
ரஷ்ய நாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த மகா பீட்டரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த  நகரம் அரசரின் பிரியத்துக்கு   உரியவராய் விளங்கிய  புனிதரான அப்போஸ்தலர் பீட்டரின் பெயரையே சூடிக்கொண்டிருக்கிறது. உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்றான இது., நேவா ஆறு  பால்டிக் கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்திருக்கிறது.
“பீட்டரின் கைவண்ணமே, உனை நேசிக்கிறேன்!  உனது எளிமையை நேசிக்கிறேன், உனது சமச்சீர் வடிவை நேசிக்கிறேன்;  பளபளக்கும் கருங்கல் பாவிய உனது கப்பற்துறை மேடைகளிடையே  எத்தனை மௌனமாய், நளினமாய் நேவா நதி நெளிந்தோடுகிறாள்!”   என்று இந்நகரைத் தன் கவிதையில் வருணிக்கிறார் ரஷ்யக்கவிஞர் அலெக்ஸாண்டர் புஷ்கின்.

nothern_venice.jpg
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை ஒட்டி  ரஷ்யா வளர்ச்சியடையாமல் பின்தங்கிப்போக... கடல்வழிப் போக்குவரத்து இல்லாதிருந்ததே அதற்குக் காரணம் எனக்கருதிய .ரஷ்ய இளம் சக்கரவர்த்தியான மகா பீட்டர், ஒருகடல் மார்க்கத்தை, - ரஷ்யாவுக்கான  “ஐரோப்பிய நுழைவாயில்” ஒன்றை  நிறுவ வேண்டுமென்பதைத் தன்  கனவாகக் கொண்டார்.  சுவீடன் வசமிருந்த பால்டிக் கடலோரப் பகுதியின் மீது அவரது பார்வை விழுந்தது. தன் கனவை நனவாக்க ஆகஸ்ட் 1700-இல், சுவீடன் மீது போர் தொடுத்தார் பீட்டர், பலப்பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக ஸ்வீடனை வெற்றி கொண்டு மே 16, 1703-இல், சுமார் 300 வருடங்களுக்கு முன், பீட்டர்-பால் கோட்டை என இன்று அழைக்கப்படும் கோட்டைக்கு மகா பீட்டர் அடிக்கல் நாட்டினார்.  செயிண்ட்பீட்டர்ஸ்பர்க்  நகரம், அதிகாரபூர்வமாக  நிறுவப்பட்ட நாளும் இதுவே..

ஒரு புதிய நகரமாக உருவாகிய செயிண்ட்பீட்டர்ஸ்பர்கின் அழகுக்குக் கூடுதல் அழகு சேர்ப்பவை அங்குள்ள  ஏராளமான வாய்க்கால்கள் மீதும், கால்வாய்கள் மீதும் கட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள். இது பற்றியே . பீட்டர்ஸ்பர்க் “வடக்கு வெனிஸ்” என்றும் வருணிக்கப்பட்டிருக்கிறது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும், திறமைமிக்க ரஷ்ய கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும் சேர்ந்து பீட்டர்ஸ்பர்கை “ஐரோப்பாவிலுள்ள மிக அற்புதமான நகரங்களில் ஒன்றாகவும், நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரமாகவும்” உருவாக்கியிருக்கிறது.

neva_river_saint_peterburg.jpg

தனது ‘இரட்டையர்’ [THE DOUBLE] நாவலுக்கு ’’பீட்டர்ஸ்பர்க் கவிதை’’  என்றே மாற்றுப்பெயர் தரும்அளவுக்கு தஸ்தயெவ்ஸ்கியின் மனம் கவர்ந்த அந்த அழகிய நகரத்தில் நாங்கள் நுழைந்தபோது மாலை ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தபோதும் அப்போது ’’வெண்ணிற இரவுகளின்’’ காலம் என்பதால் கதிரவனின் ஒளி மங்காமல் வீசிக்கொண்டிருந்தது... ‘வெண்ணிற இரவுகள்” என்பது தஸ்தயெவ்ஸ்கி  எழுதிய புகழ் பெற்றநாவல்... கோடை காலங்களில் ஆறு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இருட்டையும் பட்டப்பகல் போன்ற வெளிச்சமான  இனிய  இரவுப்பொழுதையும் குறிக்கும் சொல் அது... அதைச்சார்ந்த பல சுவாரசியமான செய்திகளைக் கூறியபடியே  எங்களை மிக அழகான நேவா ஆற்றுப்பாலம் ஒன்றின் கரையில் அமைந்திருந்த தெருவுக்குக் கூட்டி வந்து சேர்த்தார்... பீட்டர்ஸ்பர்கின் வழிகாட்டி. காதரினா. பீட்டர்ஸ்பர்க் நகரின் உயிர்ப்பான இடங்களனைத்தையும் ஒருசேரக்காணும் வண்ணம் அமைந்திருந்த அந்த அழகிய அகன்ற  தெருவில் ஒரு புத்தகக்கண்காட்சியும் கூட நடைபெற்றுக்கொண்டிருந்தது. உணவு விடுதிகளின் வெளியே வண்ணக்குடைகளின் கீழ் அமர்ந்தபடி உணவையும் நட்பையும் ஒரு சேர ரசித்து அனுபவித்துக்கொண்டிருந்த மனிதர்கள்! அங்கேயுள்ள ஜெய்ஹிந்த் என்னும் இந்திய  உணவு விடுதிக்கு நாங்கள் சென்றோம்... இந்தியாவிலிருந்து - குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அங்கே மருத்துவக் கல்வி பயில வந்து பகுதி நேரமாக உணவகப்பணி செய்து கொண்டிருந்த தமிழ்மாணவர்கள் எங்களை அன்போடு வரவேற்றதிலேயே பாதி வயிறு நிறைந்து போக உணவு வேலையை முடித்துக்கொண்டு வாஸிலெவ்ஸ்கி தீவுப்பகுதியில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதிக்குச்சென்றோம்... இன்று நள்ளிரவாகி இருக்கவில்லை என்றாலும் கதிரவனின் ஒளி மறையும் வரை வெண்ணிற இரவுகளில் மனதை அலைய விட்டபடி  கண்களை உறக்கம் தழுவ மறுத்துக்கொண்டுதான் இருந்தது...

தொடரும்...

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 6

 

 
LADY_OF_KAZAN_CATHEDRAL

சூரியனின் கதிர்கள் தங்களை மிக மிகத் தாமதமாகவே சுருக்கிக் கொள்ளும் கோடைகால பீட்டர்ஸ்பர்க் இரவுகள்... 'வெண்ணிற இரவு' களாய்க் கொண்டாடப்படுவதே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் தனித்துவம். பொதுவாக அடர் கறுப்பு நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும் இரவுப் பொழுதுகள்... நிலவொளியை விடவும் கூடுதல் பிரகாசமான சூரிய வெண்மையில் குளிக்கும் போது அவற்றுக்கு 'வெண்ணிற இரவுகள்' (WHITE NIGHTS) என்று நகைமுரணாகப் பெயர் சூட்டி மகிழும் அந்த நகரத்து மக்களின் உள்ளம் தான் எவ்வளவு ரசனை மிக்கது?  

PETERSBURG_MORE.JPG

ஆண்டின் பெரும்பாலான நாட்கள்,  துளிகளாகவும், வில்லைகளாகவும், கட்டிகளாகவும் விடாமல் பெய்துவரும் பனிப்பொழிவை மட்டுமே கண்டு அதற்காகவே வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பீட்டர்ஸ்பர்க் வாசிகள் உல்லாசமாக வெளியுலகில் சஞ்சரிக்க வழியமைத்துத் தருபவை இந்த வெண்ணிற இரவுகள்! குறிப்பாகக் காதல் வயப்பட்டவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்தப் பருவ காலத்தில், கருவுறும் பெண்களின் எண்ணிக்கையும் கூட மிகுதியாக இருக்கும் என்று பீட்டர்ஸ்பர்க் நகரின் வழிகாட்டியாக நேற்று எங்களோடு இணைந்து கொண்ட கேத்தரீனா கூறியதை நினைத்துக் கொண்டே உறங்கிப் போன நான் கண் விழித்தபோது, மணி விடியற்காலை நான்கைக் கூடத் தொட்டிருக்கவில்லை. அதற்குள் புலரியின் பொன்னொளிச் சாயல் அறைக்குள் படரத் தொடங்கி விட... அதற்கு மேல் உறக்கம் பிடிக்காதவளாக… பீட்டர்ஸ்பர்க் நகரத்தைப் பற்றி நான் குறித்துக் கொண்டு வந்திருந்த தகவல்களின் மீது கண்களை ஓட்டத் தொடங்கினேன். 

தாமரை மொட்டுப் போன்ற கோயில்... அதைச் சுற்றியுள்ள அடுக்கடுக்கான இதழ்களைப் போன்ற சதுரம் சதுரமான வீதிகள் என அழகுற அமைந்திருக்கும் என் தென்மதுரையைப் போலவே இந்த பீட்டர்ஸ்பர்க் நகரமும் மிகுந்த சிரத்தையோடு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.   ரஷ்ய நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாகவும் திகழும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,  சக்கரவர்த்தி மகாபீட்டர்  கண்ட மகத்தான ஒரு கனவின் எழிலார்ந்த புறவடிவம். மாஸ்கோவை விடவும் கூட இந்நகருக்கே முதன்மை தர எண்ணிய மகா பீட்டர். அங்குள்ள கட்டுமானப் பொருட்களையும் பணியாளர்களையும் இங்கே வருவித்து அழகான பல கட்டிட அமைப்புக்களை அசுர வேகத்தில் உருவாக்க முனைந்ததில் பிறந்ததே ரஷ்யநாட்டுக் கலாசாரத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்நகரம்.

இங்கிருந்து இரண்டரை மணி நேரத்துக்குள் கடல் வழியாக ஐரோப்பாவின் பின்லாந்து நாட்டுக்குச் சென்று விட முடியுமென்பதால் இது ஒரு வகையில் ஐரோப்பாவின் நுழைவாயிலாகவும் சொல்லப்படுகிறது. நேவா ஆறு, பால்டிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் பீட்டர்ஸ்பர்க் நகரில், நகரக் கட்டுமானத்தோடு ரஷ்ய நாட்டின் கப்பற்படைத் தலைமை அலுவலகமும் (அட்மிரேலிடி) அப்போது முதலே உருவாக்கப்பட்டு இங்கே இயங்கி வருவதும் அதுபற்றியே. 

2003 ஆம் ஆண்டில் தனது முந்நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யநாட்டு நகரங்களிலேயே  பெரிதும் ஐரோப்பியத் தன்மை கொண்ட ஒன்றாக - அந்தப்பாணியில் அமைந்திருக்கிறது. 1713 – 1728, மற்றும் 1732 -1918 ஆகிய இரு காலகட்டங்களிலும் மன்னராட்சிக்கால ரஷ்யாவின் தலைநகராக விளங்கிய பெருமையும் இதற்கு உண்டு. 1918ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரம் மீண்டும் இங்கிருந்து மாஸ்கோவுக்கே மாற்றப்பட்டு அரசு அலுவலகங்களும் அங்கிருந்தே செயல்படத் தொடங்கின. 

காலப்போக்கில் இந்த நகரத்தின் பெயர்கள், சில மாற்றங்களுக்கு உள்ளானதும் உண்டு. 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரின் போது பெட்ரோகிராட் என்றும், 1924 இல் தலைவர்  விளாடிமிர் லெனின் காலமான போது அவர் நினைவாக  லெனின் கிராட் என்றும் அழைக்கப்பட்டாலும் 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற தொன்மையான பெயரே இன்றளவும்  இந்நகருக்கு நின்று நிலைத்து  வழங்கி வருகிறது.
ஓவியம், இசை – நடனம் (பாலே) முதலிய நுண்கலைகளின் இருப்பிடமாகவும். அலெக்ஸாண்டர் புஷ்கின், தஸ்தயெவ்ஸ்கி போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த இடமாகவும் விளங்கிய இந்த நகரம். மிகச் சிறந்த பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுடன் கல்வி வளர்ச்சிக்கும் கணிசமான பங்கை ஆற்றி வருகிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வசதியற்ற மாணவர்கள், குறைவான கட்டணத்தில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள – ரஷ்ய நாட்டின்,  குறிப்பாக பீட்டர்ஸ்பர்கின் மருத்துவக் கல்லூரிகள் வழி அமைத்துத் தருவதாலேயே அவ்வாறு பயின்று வரும் தமிழக மாணவர்களைப் பகுதி நேரப் பணியாளர்களாக நேற்றைய சுற்றுலாவின் போது நாங்கள் உணவு விடுதியில் சந்திக்க நேர்ந்தது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த பார்க் இன் விடுதி, மாஸ்கோவின்  அஸிமுட் விடுதியைப் போல அத்தனை விசாலமான அறைகளுடன் இல்லையென்றாலும்... தேவைக்கேற்ற வசதிகளுடனும், கச்சிதமான ஒழுங்குடனுமே இருந்தது.  அது அமைந்திருந்த இடம், தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் வருணிக்கப்படும் வாஸிலெவ்ஸ்கி தீவு என்பதால், அந்த இடத்தின் மீதான ஒட்டுதல்  சற்றுக் கூடுதலாகவே  என்னைக் கிளர்ச்சியுறச் செய்து கொண்டிருந்தது. ஆறுகள் கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிகளில் அவ்வாறான குட்டித் தீவுகளை மிகுதியாகக் காண முடிவதும் கூட இரசனைக்குரிய ஒரு காட்சிதான்! 

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு காலை பத்து மணி அளவில் நகர் உலாவுக்குச் செல்ல ஆயத்தமானோம்.  ரஷ்யாவின் அரசியல் தலைநகராகக் கம்பீர மிடுக்குடன் – ஸ்டாலினிய பாணிக்கட்டிடங்களோடு தோற்றம் தந்த மாஸ்கோவுக்கு மாறாகப் பன்முக எழில் உருவ அமைப்புக்கள் பலவற்றோடு எங்களை  வரவேற்றது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.  இங்கும் கூட மாஸ்கோ போலவே அடுக்குமாடிக் குடியிருப்புக்களும், அலுவலகங்களும், வணிக வளாகங்களும் நிறைந்து கிடந்தாலும், மக்கள் நடமாட்டம்  கொஞ்சம் அதிகமான உயிர்ப்போடு இருந்ததைக் காண முடிந்தது. சாலைகளின் ஒட்டத்திலேயே இடையிடையில் குறுக்கிடும் பசுமையும், தூய்மையுமான பூங்காக்கள்! அங்கே உள்ள இருக்கைகளில், புல் தரைகளில் ஓய்வாக, உல்லாசமாகப்  பொழுதுபோக்கும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள்!

PETERSBURG_PARK1.JPG
விடுதியிலிருந்து கிளம்பிய எங்கள் பேருந்து, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மையமாகக் கருதப்படும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் என்னும் மிகப் பெரிய விசாலமான வீதி வழியே சென்று கொண்டிருந்தது. உலகின் மிகப்பெரிய தெருக்களில் ஒன்றான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட், தேவலாயங்கள் உள்ளிட்ட எழிலார்ந்த பல கட்டிட அமைப்புக்களைக் கொண்டிருப்பது. அங்காடிகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் ஆகிய பலவற்றோடு அமைந்திருக்கும் இந்தத்தெரு. ’இரவு வாழ்க்கை’க்கும் பெயர் பெற்றிருப்பது...

NEVSKY_1.JPG
நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் ஜுர வேகமான வாழ்க்கை ஓட்டத்தை, அந்தத் தலைப்பிலேயே புனைகதையாக்கித் தந்திருக்கிறார், ரஷ்ய எழுத்தாளர் நிகோலாய் கோகோல். ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலான ‘குற்றமும்தண்டனையும்’ மற்றும் 'பீட்டர்ஸ்பர்க் கவிதை' (ST PEETARSBARG POEM) என்ற மாற்றுப் பெயர் கொண்ட அவரது ‘இரட்டையர்’(THE DOUBLE) நாவல் ஆகியவை பெரும்பாலும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டை  நிலைக்களனாக வைத்து  நிகழும் சம்பங்களையே மிகுதியாகக் கொண்டிருக்கின்றன. 

NEVSKY_2_%281%29.JPG
அரைவட்ட வடிவம் கொண்டதும், நிறையத் தூண்களோடு கூடியதுமான  ஐசக் தேவாலயம், கம்பீரமான மேற்கூரையோடு பீட்டர்ஸ்பர்கின் தனித்த முத்திரையாகவே காட்சி தரும் கஸான் தேவாலயம் ஆகியவை, தங்கள் கட்டிடக் கலை நுணுக்கங்களால் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் அழகுக்கு அழகு சேர்ப்பவை. .

ISSAC_CATHEDRAL_-ME_%282%29.jpg
தொடக்க காலகட்டத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய முதன்மையான தேவாலயமாக விளங்கியிருந்த  ஐசக் பேராலயம் 1818-1858 களில் ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. தங்க நிறத்தில் தகதகக்கும் இதன் மேற்கூரையே இன்றளவும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின்  வானளாவிய சிகரத்தைப்போன்ற அடையாளச்சின்னமாக  விளங்கி வருகிறது.
ரோமாபுரியின் வத்திகான் நகரில்  இருக்கும் செயிண்ட் பீட்டர் பசிலிக்கா பேராலயத்தின்  வடிவமைப்பால் தூண்டுதல் பெற்று,  அதை இன்னொரு பிரதி எடுத்ததைப்போலக் காட்சி தரும் கசான்மாதாவுக்கான (LADY OF KAZAN) தேவாலயம் கட்டிடக் கலையின் அற்புதமாய்ப் பொலிந்து கொண்டிருப்பதும் இங்கேதான்... ரஷ்ய ஆசார மரபை ஒட்டிய  தேவாலயங்களில் முக்கியமானதாக எண்ணப்படும்  இந்த ஆலயம், 1812 ஆம் ஆண்டு, நெப்போலியனோடு நிகழ்ந்த போரில் - அவன் தோற்கடிக்கப்பட்ட பிறகு  இந்த நாட்டின் வெற்றிச் சின்னமாகவே கருதப்படலாயிற்று - அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் திறன் படைத்த ’கஸான் மாதா’வின் பெயரால் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்குள்ளேதான்  நெப்போலியனுடனான போரைத் தலைமையேற்று நடத்திய படைத்தலைவர் மிக்கேல் குடுசோவின் கல்லறையும் அமைந்திருக்கிறது. 1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவின் சமயம் சார்ந்த வரலாற்றையும், அதன் நாத்திக வாதக் கோட்பாடுகளையும் கூட வெளிக்காட்டும் காட்சியகம் இதனுள் உருவாக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு நிறுத்தப்பட்டு விட்ட பூசனைகள்  அண்மைக்காலமாக  மீண்டும் நிகழத் தொடங்கியிருந்தாலும் ஆத்திக, நாத்திகக் காட்சியகம் இன்னும் கூட இங்கே இயங்கி வருகிறது.  பிரம்மாண்டமான வெண்கலக் கதவுகளும், அரண்மனை போன்ற எடுப்பான தோற்றப் பொலிவும் கொண்ட இந்த ஆலயத்தை நேவா ஆற்றின் பின்னணியில் பொருத்திக் காண்பது சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி. 

LADY_OF_KAZAN_CATHEDRALlll.JPG
இளநீலப் பனி வண்ணத்தில் தங்க மயமான ஐந்து மேற்கூரைகளுடன் ஜொலிக்கும் மற்றொரு கட்டிடம் செயிண்ட் நிக்கோலஸ் தேவாலயம், கடற்படை வீரர்களுக்கும், மாலுமிகளுக்கும், பயணிகளுக்கும் வழிகாட்டிப் பாதுகாப்புத் தரும் செயிண்ட் நிக்கோலஸ் என்ற தெய்வத்தின் ஆலயமாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தின்  நுட்பமான வேலைப்பாடுகளும்... கண்ணுக்கினிய வண்ணச் சேர்க்கையும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு மேன்மேலும் அழகூட்டுபவை.
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்யக் கலைப்பாணிக்குக் கட்டியம் கூறும் செயிண்ட் நிக்கோலஸ் ஆலயத்தை உருவாக்கும் கனவு, பீட்டர் பேரரசரின் உள்ளத்தில் உதித்த போதும் அவரது மகள் எலிசபெத்தால் தொடங்கப்பட்ட பணி, பின்னர் இரண்டாம் காதரினின் காலகட்டத்திலேயே நிறைவு பெற்றிருக்கிறது. ஆலயத்தின் நேர் எதிரில் இருக்கும் அழகான மணிதாங்கிய கோபுரம் (BELL TOWER) இதன் எழிலை மேலும் எடுப்பாக்கிக் காட்டுகிறது. 

BELL_TOWER_%282%29.JPG
விதம் விதமான கட்டிடக் கலை அமைப்புக்களுடன் கூடிய பேரலாயங்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தவற விடாமல் பார்த்தாக வேண்டிய முக்கியமான ஓர் இடமாக எங்கள் வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்ற இடம்... 'சிதறிய இரத்தத்துளிகளின் மீதான மீட்பரின் ஆலயம்’! (The Church of the Savior on Spilled Blood) அந்தப் பெயருக்குள்ளேயே அரிதான ஒரு கதையும் கூட ஒளிந்து கிடந்ததை இனம் கண்டு கொண்டவளாய்… அதை அறியும் ஆர்வத் துடிப்பில் இருந்தேன் நான்….!

- தொடரும்... 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 7

 

 
resurrection2

சிதறிய இரத்தத் துளிகள்! அதன் மீது மீட்சிக்கான ஓர் ஆலயம் (Church of Resurrection on Spilled Blood)! தான் கொண்டிருந்த வினோதமான பெயரைப் போலவே – எங்கள் கண்முன்னர் பிரம்மாண்டமாக விரிந்து நின்றிருந்த அந்தக் கட்டிடமும் கூட – அங்கிருந்த பிற ஆலய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டதாக, வித்தியாசமான, விசித்திரமான தோற்றத்தோடு, பல புதிர்களைத் தன்னுள் அடக்கியபடி காட்சி தந்து கொண்டிருந்தது. 

resurrection_31.JPG

நேவா ஆற்றிலிருந்து கிளைபிரிந்து செல்லும் கால்வாய்கள் பலவற்றில் ஒன்றின் கரை மீது பிரமிப்பூட்டும் அதிசயமாக அமைந்திருந்த அந்த பீட்டர்ஸ்பர்க் அற்புதம், 1800 களில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அலெக்ஸாண்டரின் ஆன்ம சாந்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம். ஃப்ரான்ஸ், பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளோடு நிகழ்ந்த கிரிமியப் போரில் (CRIMIAN WAR) ரஷ்யா அடைந்த மிக மோசமான தோல்விக்குப் பிறகு 1855 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர் இரண்டாம் அலெக்ஸாண்டர். ரஷ்யாவின் மன்னராட்சித் தொடர்ச்சியில் வித்தியாசமான ஓர் ஆளுமையாக விளங்கிய அவர், வேறெவரும் மேற்கொள்ளாத பலப்பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்.

resurrection5.JPG

அடிமைமுறை (Serfdom) என்னும் வழக்கம், ரஷ்யாவில் மிகக் கடுமையாக நிலவிவந்த காலகட்டம் அது.  நாட்டுப்புற மாகாணங்களின்  கிராமப்பகுதிகளில் வசதிக்குறைவோடு தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் பிரபுத்துவ சமூகத்தின் பிடியில் கொத்தடிமைகளைப்போல (Serfs) வைக்கப்பட்டிருந்த சூழல் அது. நிலக்கிழாராக இருக்கும் ஒரு பிரபுவின் தகுதி, அந்த மனிதன் எத்தனை அடிமைகளைத் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுவந்த அந்த சமூக அமைப்பை – அவ்வகை ஏற்றத்தாழ்வுகளை ரஷ்யப் படைப்பாளிகள் பலரும் தங்கள் படைப்புக்களில் விரிவாகச் சித்திரித்திருக்கிறார்கள். அவ்வாறு பரம்பரை அடிமைகளாக – பிணைக் கைதிகளைப் போல மீட்சியற்றுக் கிடந்த மக்கள் பலரையும் அவர்களது எஜமானர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியை 1861 இல் மேற்கொண்டார் மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர்.

இராணுவம், நீதித்துறை ஆகியவற்றிலும், நகர்சார் சீரமைப்புக்களிலும் ரஷ்யாவில் இதுவரை கைக்கொள்ளப்பட்டிராத பல திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் அவர் முயற்சி மேற்கொண்டார். மெய்யான நல்லுள்ளத்தோடு அவர் ஈடுபாடு காட்டிய அந்த சீர்திருத்த முயற்சிகளே அவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் அவருக்குப் பல எதிரிகளைத் தேடித்தரப் பலமுறை அவர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழத்தொடங்கின.  அரசர்கள் இளைப்பாறும் குளிர்கால அரண்மனையிலும், வேறு பல இடங்களிலும் வைத்து அவரைக் கொலை செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட, 1881இல் நேவா ஆற்றின் கரையோரமாகக் கோச்சுவண்டியில் சென்றுகொண்டிருந்த அவர்மீது புரட்சியாளர்கள் வெடிகுண்டு வீசினர்.  குண்டுவீச்சில் இரத்த வெள்ளத்தில் சரிந்து வீழ்ந்த  மன்னரின் இரத்தத் துளிகள் சிந்திய இடத்தில் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு அவரது மகனான மூன்றாம் அலெக்ஸாண்டர் முயற்சி மேற்கொள்ள இரண்டாம் நிகோலாஸ் மன்னனின் காலத்திலேயே அதற்கான பணிகள் முழுமையாக நிறைவுற்றன.

resurrection6.JPG

நான்கரைக் கோடி ரூபிள் பொருட் செலவில் பளிங்குக் கற்களாலும், சலவைக் கற்களாலும் இழைத்துக் கட்டப்பட்ட இதன் உட்புறச் சுவர்களையும், விதானங்களையும் அந்தக் காலகட்டத்தில் முதன்மையாக விளங்கிய பல ரஷ்யக் கலைஞர்கள் தங்கள் அற்புதமான ஓவியங்களால் அழகுபடுத்தினர்.பின்னர் ரஷ்யப் புரட்சியின் உடனிகழ்வாக நேர்ந்த பல கலவரங்களால் ஆலயத்தின் உட்புறம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று. 1932 ஆம் ஆண்டில் சோவியத் அரசு இந்த ஆலயத்தை மூடியது.  இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜிப் படைகளால் லெனின் கிராட் முற்றுகையிடப்பட்ட தருணத்தில் பஞ்சத்தாலும், பிற சித்திரவதைகளாலும் இறந்துபோன மக்களின் பிணங்கள் கூட இங்கே வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

1997ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆலயம் மறுபடி திறக்கப்பட்டாலும், ரஷ்யப் புரட்சிக்கு முன்பு இருந்தது போலப் பொதுவான வழிபாட்டுத்தலமாக அல்லாமல் இறந்துபோன ஜார் மன்னரின் நினைவைப் போற்றும் வழிபாடு மட்டுமே இப்போது இங்கே நிகழ்ந்து வருகிறது.

resurrection_7.JPG
    
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் உச்சபட்சக் கவர்ச்சியாகவே விளங்கும் அந்த ஆலயத்திற்குள் – திட்டிவாசல் போன்ற ஒரு சிறு கதவின் வழி உள்ளே சென்றோம்.  இயேசுவை மீட்பராகச் சித்திரிக்கும் வண்ண ஓவிங்களாலும், புனிதர்கள் மற்றும் தேவதைகளின் உருவச் சித்திரிப்புக்களாலும் ஆலய உட்புறச் சுவர்களும், மேற்கூரைகளும் நிறைந்து கிடந்தன; ஆங்காங்கே பல நிறம் கொண்ட பெல்ஜியம் கண்ணாடிப் பளபளப்புக்களும் காணத் திகட்டாத பேரழகோடு பொலிந்து கொண்டிருந்தன.  நாங்கள் சென்ற பிற ஆலயங்களை விடவும் இதைக் காணவரும் மக்கள் கூட்டமும் மிகுதியாகவே இருந்தது. பல்வேறு காலகட்டங்களில் பலவகையான பாதிப்புக்களுக்கு ஆளானபோதும் இன்னும் கூடக் கலையழகு குன்றாமலிருக்கும் அந்த இடத்தை மனம் கொண்ட வரை ரசித்துப் பார்த்த பிறகு மதிய உணவுக்காகச் சென்றோம்.

அகன்ற சாலை ஒன்றின் மிகப்பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சிக்கனமான எளிமையுடன் இருந்தது அந்த இந்திய உணவு விடுதி.  அதன் அருகே, அதை ஒட்டியிருக்கும் ஒரு இடத்திலேதான் என் நேசத்துக்குரிய நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி மிகக்குறுகிய காலம் வாழ்ந்தார் என்றும் அதைக் காட்டும் நினைவுச் சின்னம் ஒன்று  அங்கிருக்கிறது  என்றும் உணவுக்காக உள்ளே நுழையும்போது மெல்ல என் காதுக்குள் ஓதினார் வழிகாட்டி காதரீனா.  அடுத்த கணமே பசிக்களைப்பும், ஊர் சுற்றிய களைப்பும் எங்கோ ஓடிப்போய்விட உடனே அதைப் பார்த்தாக வேண்டும் என்ற உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது.  உடன் வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகளுக்கு அதில் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் ஐந்தே நிமிடத்தில் மிகச்சுருக்கமாக… விரைவாக உணவை முடித்துக் கொண்டேன். எங்கள் குழுவின் தலைவரிடமும், வழிகாட்டியிடமும் அந்தத் தெருமுனை வரை தனியே சென்று வர அனுமதி பெற்று வெளியே வந்தேன்.  அதே தெருவின் திருப்பத்தை ஒட்டிய பகுதியில்தான் அந்த நினைவுச்சின்னம் இருப்பதாக காத்தரீனா கூறியிருந்ததால் – எங்கள் உணவு விடுதி இருந்த இடத்தை மட்டும் நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு நடைபாதை வழியே வேகநடை போட்டுத் திருப்பத்தை நெருங்கினேன்.  

நான்கு அகலமான சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில் எவரிடம் எப்படிக் கேட்டுக் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தைத் தேட முடியும் என்பதறியாமல் சற்றுத் திகைக்க வேண்டியநிலை! மொழியும், வழியும் தெரியாத ஓர் இடத்தில் அதற்கு மேல் தொடர்ந்து செல்லவும் மனமின்றி எதிர்ப்பட்ட ஒரு சிலரிடம் விசாரிக்க முனைந்தால் மொழிச்சிக்கல்! பெரும்பாலான ரஷ்ய மக்களும்  தங்கள் மொழியையன்றி ஆங்கிலம் அறியாதவர்களாகவே இருப்பதால் நான் விசாரிக்க முனைந்த விஷயம் எவருக்கும் விளங்கவில்லை.  அந்தக் கணத்தில் எங்கிருந்தோ என்னிடம் பாய்ந்து வந்தார் ஒரு பருமனான பெண்மணி.  தஸ்தயெவ்ஸ்கி என்ற பெயர் மட்டுமே அவர் காதில் அரைகுறையாக விழுந்திருக்க வேண்டும், அதை மட்டுமே பற்றிக் கொண்டு என்னருகே வந்தவர், என் தேடல் குறித்து நல்ல ஆங்கிலத்தில் என்னிடம் வினவினார்.  நான் அதை விளக்கி முடித்ததும், அவரே என் கரத்தைப் பற்றிக்கொண்டு எங்கள் உணவு விடுதி இருந்த கட்டிடத்தின் அதே திசையில் என்னை நடத்திச் சென்றார்.  எனக்குள் ஒரே குழப்பம்!  நான் கூறியதை அவர் சரியாகத்தான் உள்வாங்கிக் கொண்டாரா என்பதிலேயே எனக்கு சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது.

எங்கள் உணவு விடுதிக்குக் கொஞ்சம் முன்பாக – அதே கட்டிடத்தில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பகுதிக்கு முன்பு என்னை நிறுத்திய அந்தப் பெண்மணி, சற்று உயரத்திலிருந்த ஒரு தளத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு கற்பலகையை எனக்குச் சுட்டிக்காட்டினார். ‘நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி 1847ஆம் ஆண்டு முதல் 1849ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இடம்.’ என ரஷ்ய மொழியல் பொறிக்கப்பட்டிருந்த அந்தஎழுத்துக்களை எனக்கு ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லிய அவருக்கு நன்றி கூற வார்த்தை தேடி நான் தவித்தேன்; அவரோ தனது நாட்டின் இலக்கிய மேதை ஒருவரின் சுவடு தேடி இந்தியப் பெண்ணான நான் அலையும்போது எனக்கு உதவ முடிந்ததில் தனக்குப் பெருமகிழ்ச்சி என்று கூறியபடி விடைபெற்றுச் சென்றார்.  தஸ்தயெவ்ஸ்கி குறித்த அந்தக் கற்சின்னத்தை மகிழ்வோடு புகைப்படமெடுத்துக் கொண்டு மனநிறைவோடு உணவு விடுதிக்குத் திரும்பி எங்கள் குழுவினரோடு உரிய நேரத்திற்குள் இணைந்து கொண்டேன். காத்தரீனாவுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்றொரு பகுதியில் தஸ்தயெவ்ஸ்கி சற்று நீண்ட காலம் வாழ்ந்த இடம், தற்போது அவரது நினைவில்லமாகவே மாற்றப்பட்டிருப்பதாகவும், உரிய நேரம் வாய்த்தால் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, ரஷ்யாவின் தனித்தன்மை கொண்ட நினைவுப் பரிசுகளை நண்பர்களுக்கு வாங்கிச் செல்ல விரும்பிய நாங்கள் ஒரு அங்காடிக்குச் சென்றோம். ‘வால் மார்ட்’ போன்ற அமைப்பில் சற்று சிறியதாக இருந்த அந்தப் பல்பொருள் விற்பனைக் கூடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நம்மை அன்போடு வரவேற்று உபசரித்து  முகப்பிலுள்ள மேசையிலிருக்கும் குப்பிகளில் நிறைக்கப்பட்டிருக்கும் ‘சிவப்பு மது’ (Red wine) அல்லது ‘வோட்கா’வை (Vodka) அருந்தக் கொடுக்கிறார்கள்.  நம்மூர்த் துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் காப்பியோ, குளிர்பானமோ வழங்குவது போன்ற அவர்களது கலாச்சார மரபு அது! சர்க்கஸ் சென்றிருந்தபோதும் அதன் இடைவேளை நேரத்தில் அதே போன்ற உபசாரம் அளிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது.  விரும்பியவர்கள் அதை அருந்த… நாங்கள் கடைக்குள் சென்றோம்.

dolls_1.jpg

ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கடுக்காகப் பொதிந்துவைக்கப்படும் (Nesting dolls) மர பொம்மைகளே ரஷிய நாட்டின் தனித்தன்மையைக் காட்டும் கலைப்பொருட்கள்..  பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பெண் வடிவத்தையே (நம்மூர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல) கொண்டிருக்கும் அவை… தற்போது வேறுபல வடிவங்களிலும் கூடக் (தலைவர் உருவங்கள், மதச்சார்புக் கதைகள்) கிடைக்கின்றன.  ‘மெட்ரியோஷ்கா’ பொம்மை (Metriyoshka doll) ‘பபூஷ்கா’ பொம்மை (Babushka doll) என்ற பெயராலும் வழங்கப்படும் அவை நாம் இங்கிருந்து நினைவுப்பரிசாக வாங்கிச் செல்வதற்கு உகந்த பொருட்கள்.  

egg21.jpg

அதே போல வண்ண வேலைப்பாடுகளுடன்… சற்று விலை கூடியதாக ஆபரண வேலைப்பாடுகளுடனும் அமைந்திருக்கும் பளிங்கிலான முட்டைகளும் (Feberge egg) ரஷ்யக் கலைப் பொருட்களில் தனித்துவம் கொண்டவை.  ஜார் மன்னர்களுக்காகத் தங்கம் இழைத்து உண்டாக்கப்பட்ட அந்த முட்டைகள் இப்போது அவரவர் வசதிக்கேற்ற வகையில் அழகிய வேறு பல வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அவரவர் விரும்பிய பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டபின் மாலை ஐந்துமணி அளவில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுப் பயணத்துக்காக நேவா ஆற்றின் துறையை வந்தடைந்தோம்.

neva_1.JPG

மாஸ்க்வா ஆற்றில் மேற்கொண்ட பிரம்மாண்டமான கப்பற்பயணம் போன்ற சவாரியாக இல்லாமல் இந்தப் படகுப் பயணம் எளிமையான அழகும், இனிமையும் கூடியதாக இருந்தது.  நேவா நதி தீரத்தில்தான் பீட்டர்ஸ்பர்க் நகரமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அதில் பயணம் செய்யும்போது நகரின் அதி அற்புதமான அத்தனை கட்டிடங்களையும் ஒரு சேரக் கண்டு ரசிக்க முடிவது சுகமான ஓர் அனுபவம்.

நீர்க் கொள்ளளவு அடிப்படையில் பெரிய ஐரோப்பிய நதிகளில் ஒன்றான நேவா ஆழம் மிகுந்து அலைகள் தளும்பியபடி இருந்தது.  லடோசா என்னும் ஏரியின் வழியாக பால்டிக் கடலோடு கலக்கும் நேவா ஆறு… மாஸ்க்வாவை விடவும் கூட உயிரோட்டத்தோடும், துடிப்போடும் இருந்ததாகத் தோன்றியது.  ஆற்றிலிருந்து நகருக்குள் பிரிந்து செல்லும் பல கால்வாய்கள், அவற்றின் மீது அமைந்திருக்கும் வளைவான பாலங்கள் என வெனிஸின் படகுப் பயணத்தை மிகுதியாக நினைவூட்டியது நேவா நதிப் பயணம்.  வழியில் எதிர்ப்பட்ட பாலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டே வந்த காத்தரீனா… ஒரு குறிப்பிட்ட பாலத்தின் மேலிருந்து முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்களுக்கு ஓராண்டில் திருமணம் நிகழ்வது உறுதி என்றும் அதன்பிறகு மணமக்களாக அவர்கள் அங்கே திரும்பிவந்து நன்றிக் கடன் செலுத்துவார்கள் என்றும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார்.  நாத்திகம் கோலோச்சும் நாட்டிலும் கூட இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மனித வாழ்வோடு கலந்திருப்பதை எண்ணி வியந்தபடி, குளிர் நீரின் சில்லிப்போடு வீசிய மென்காற்றின் தீண்டலை அனுபவித்து ரசித்துக் கொண்டே நேவா நதிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.
 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-8

 

 
ballroom-at-the-grand-palace-in-peterhof

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த மூன்றாம் நாள்! அன்றைய எங்கள் பயணத் திட்டம் அங்கிருந்த மாளிகைகளுக்கானது. பீட்டர்ஸ்பர்க் நகரம், ஆலயங்கள் மற்றும் அழகான கட்டிடங்களின் இருப்பிடம் மட்டுமல்ல. எழில் வாய்ந்த மாளிகைகள் பலவற்றின் நகரமும் கூடத்தான். ஜார் மன்னர்களும் அவர்களின் சந்ததியரும் அரசாண்ட பல்வேறு காலகட்டங்களில் அவரவர் ரசனைக்கும் , கண்ணோட்டத்துக்கும் ஏற்றபடி - அந்தந்தப் பருவநிலை மாற்றங்களுக்கேற்பப் பல மாளிகைகளை உருவாக்கி அவற்றில் சுகபோகமான பகட்டான வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் பல இன்றளவும் நினைவுச்சின்னங்களாகவும் அருங்காட்சியகங்களாகவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
 
மிக்கேலாவ்ஸ்கி மாளிகை, ஸ்டோகனோவ் மாளிகை, யுசுபோவ் மாளிகை, நிகோலெவ்ஸ்கி மாளிகை, மகா பீட்டரின் கோடைகால அரண்மனை, குளிர்கால அரண்மனை என்று நகருக்கு உள்ளேயும் அருகாமையிலும் நிறைந்து கிடக்கும் மாளிகைகளில், நகர்ப்புறத்திலிருந்த கோடைகால மாளிகை ஒன்றும் நகரின் மையப்பகுதியில் அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் குளிர்கால மாளிகை ஒன்றும் நாங்கள் காண்பதற்காகத் தேர்வு செய்யபட்டிருந்தன.

summer_palace-susila.JPG

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து அரை மணிநேரப் பயணத்தில் புறநகர்ப்பகுதி ஒன்றில் இருப்பவை பீட்டர்ஹாஃப் கோடை மாளிகைகளும் அதை ஒட்டிய அரண்மனைத் தோட்டங்களும். முதலில் அதைக் காண்பதற்காகச் சென்றோம்…

பெட்ரோட்வோரெட்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விஸ்தாரமான பகுதி இங்குள்ள அரசமாளிகைகளுக்கெல்லாம் உச்சமாய் அமைந்திருப்பது; கடல்மட்டத்திலிருந்து சற்றே உயரத்தில் செங்குத்தான மேட்டின் மீது கம்பீரமாக நின்றிருக்கும் ‘கிராண்ட் பேலஸ்’, அதற்குக் கீழே அடுக்கடுக்கடுக்காய்ச் சரிந்து செல்லும் மேடுகளிலும் கீழே உள்ள சமதரைகளிலும் இருக்கும் நேர்த்தியான வடிமைப்புடன் கூடிய புல்வெளிகள், வகை வகையான பூந்தோட்டங்கள்… கண்கவரும் நீரூற்றுக்கள், சின்னச் சின்ன நீர்வீழ்ச்சிகள்… அற்புதமான பல குட்டிக்குட்டி மாளிகைகள்..., தங்க முலாம் பூசப்பட்டுத் தகதகக்கும் பல சிலைவடிவங்கள்… இவற்றோடு காட்சி தரும் பீட்டர்ஹாஃப், ஃபிரான்ஸ் நாட்டிலிருக்கும் வர்செயில்ஸ் மாளிகைக்கு நிகரானதாக… ‘ரஷ்யாவின் வர்செயில்ஸ்’ என்றே வழங்கப்படுகிறது. கலை எழில் கொஞ்சும் இந்த இடம் யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சாரச்சின்னங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பெற்றிருக்கிறது. 

summer_palace_garden_1.JPG

பீட்டர்ஸ்பர்கின் நகர்ப்புறத்தில் வர்செயில்ஸ் போன்ற மாபெரும் அரசத் தோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சக்கரவர்த்தி பீட்டர் கொண்டிருந்த  குன்றாத ஆர்வத்தாலும் அவரது இடையறாத உற்சாகத்தாலும் தொடங்கப்பட்ட இந்த மாளிகை அமைப்புக்களின் கட்டுமானப்பணி 1725இல் அவர் மரணமடந்ததற்குப் பிறகு நின்று போய் விட, கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றுவிட்ட பீட்டர்ஹாஃப், அவரது மகளான எலிஸபெத் ஆட்சிக்கு வந்த பிறகே [1740] புத்துயிர் பெறத் தொடங்கியது. 18,19ஆம் நூற்றாண்டுகளில் மேன்மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட இந்தப்பகுதி, காதரீன் பேரரசியின் ஆட்சிக்காலத்தில் அவரது ரசனைக்கேற்ற முத்திரைகளைத் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மானியத் துருப்புக்களால் சூறையாடப்பட்ட நகரின் பிற புறநகர்ப்பகுதிகளைப்போலவே பீட்டர்ஹாஃபும் சீர்குலைக்கப்பட்டபோதும் இராணுவப்பொறியாளர்களின் அயராத உழைப்பால் வெகு விரைவாகவே சீரமைக்கப்பட்டு 1945க்குள் இயல்புநிலைக்குத் திரும்பி விட்டது ஓர் அதிசயம் என்றே கூற வேண்டும்.

grand_cascade_peterhof_-_Copy.jpg

பீட்டஹாஃபின் பிற மாளிகைகளுக்கெல்லாம் நடுநாயகமாக அதன் இதயம் போன்றிருக்கும் ‘கிராண்ட் பேலஸை’ப் பார்த்தபின்பு வேறு இடங்களைப் பார்க்கலாம் என எங்கள் வழிகாட்டி கூறியபடி, முதலில் அந்த மாளிகைக்குள் நுழைந்தோம். மகாபீட்டரின் காலத்தில் நீளமும் குறுகலுமாய் அமைந்திருந்த அந்த அரண்மனையின் பழைய கட்டிடக்கலை அமைப்பை அதிகம் மாற்றாமல் தன் கலைநுட்பத்தேர்ச்சியால் அதற்கு அழகும் மெருகும் ஊட்டியவர் பார்டோலோமியோ ரஸ்ட்ரெல்லி என்னும் கட்டிடக்கலை நிபுணர்.

ballroom-at-the-grand-palace-in-peterhof

பீட்டர் சக்கரவர்த்தியின் மகள் எலிஸபெத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  அந்தப்பணியை மேற்கொண்ட அவர் மூலக்கட்டிடத்தின் சிறகுகள் போல அதன் இரு புறமும் தங்க முலாமிட்ட அரங்குகளை அமைத்து அதற்கொரு கம்பீர வடிவம் அளித்தார். அதை ரசித்தபடியே மாளிகைக்குள் பிரவேசித்தால்…. ஜார் மன்னர்கள் நடத்தியிருக்கும் பகட்டும் படாடோபமுமான மித மிஞ்சிய செல்வச்செழிப்போடு கூடிய வாழ்க்கைக்கு சாட்சியாகவே க்ரேண்ட் பேலஸின் ஒவ்வொரு அறையும் அமைந்திருந்ததைக் காண முடிந்தது. 

ரஸ்ட்ரெல்லியின் கைவண்ணத்தில் அலங்காரமான தோற்றப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளைவான மாடிப்படிகளே தொடர்ந்து நாம் காண இருக்கும் ஆடம்பரமான காட்சி அமைப்புக்களுக்குக் கட்டியம் கூறி விடும். படிகளில் மேலேறிச்சென்றதுமே நம்மை மலைப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்துவது ‘பால்’ நடனம்  [ballroom dance]  ஆடுவதற்கான மிகப்பெரிய கூடம். தங்கத்தின் மீது மிகப்பெரும் பித்துக்கொண்டிருந்தவளாகச் சொல்லப்படும் மகாபீட்டரின் மகள் எலிஸபெத், பொன்னாலேயே இழைத்து இழைத்து உருவாக்க வைத்திருக்கும் அந்த அறையைக் கடந்தால், வெண்மை கலந்த மயிற்கழுத்து நிறத்தோடு கூடிய ஆட்சிகட்டில் உள்ள  அரங்கம், சீனப்பட்டில் செய்த திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் வரவேற்பறை, ஓக் மரத்தால் இழைத்துச் செய்யப்பட்ட இருக்கைகளும் சுவரலமாரிகளும் கொண்ட படிக்கும் அறை, மன்னர்கள்…அரசியர் ஆகியோரின் படுக்கை அறைகள் என்று காட்சிகள் தொடர்ந்து கொண்டேசெல்கின்றன. ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே நிகழ்ந்த  கடற்போரைச் சித்தரிக்கும் ஓவியங்கள் பல ’செஸ்மா’ அரங்கை நிறைத்திருக்கின்றன. இவான் ஐவஸோவ்ஸ்கியால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ’ஓவியக்கூடம்’[picture hall] என்றே பெயர் பெற்றிருக்கும் ஓர் அரங்கம் முழுவதும் விதம் விதமான வண்ண உடையணிந்து வெவ்வேறு கோலங்களில் காட்சி தரும் 368 பெண்களின் வண்ண ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தனை ஓவியங்களுக்கும் ‘மாதிரி’யாக [model] இருந்தவர் ஒரே ஒரு பெண்தான் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.

painting-hall-at-the-grand-palace-in-pet

பீட்டர் பேரரசர் தொடங்கி அவரது மகள் எலிஸபெத், பிறகு வந்த பேரரசி காதரீன் எனப் பல்வேறு ஆட்சியாளர்களின் உருவப்படங்களும் ஓர் அரங்கில் இருந்தன… அவற்றைக் காட்டியபடியே அரச பரம்பரைக்குள் ஆட்சி பீடத்துக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கும் பதவிப்போட்டிகள்…அவற்றின் தொடர்ச்சியாக நிகழ்ந்த படுகொலைகள்..வேறுவகையான அவலங்கள் என்று வரலாற்றுச்சம்பவங்கள் பலவற்றையும் கதை போல சுவாரசியமாக விவரித்துக்கொண்டேசென்றுகொண்டிருந்தார் எங்கள் வழிகாட்டி….

மாளிகையிலிருந்து படி இறங்கி வெளிவந்தபோது என் உள்ளம் கலவையான உணர்வுகளால் நிரம்பிக்கிடந்தது… கலை…. அதன் எழிலார்ந்த வெளிப்பாடு இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் திகட்டும் செல்வச்செருக்கோடும் மிகையான படாடோபங்களோடும் அகந்தையான ஆடம்பரங்களோடும் அது வெளிப்படும்போது அதோடு ஒட்ட மனம் மறுக்கிறது  என்று நினைத்துக்கொண்டேன்….

view_of_summer_palacewith_cascades.JPG

நடுப்பகல் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்க, பீட்டர்ஹாஃபில் நாங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டிய தோட்டங்களும் நீரூற்றுக்களும் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. நகரத்துக்குச்சென்று சேரவே நேரமாகும் என்பதால் பகல் உணவு நேரம் தவறுவதற்குள் நாங்கள் அவற்றைப் பார்க்காமல் கிளம்பி விடுவதே நல்லது என்று வழிகாட்டி சொல்ல அவருக்கும் சென்னையிலிருந்து உடன் வந்திருந்த எங்கள் சுற்றுலாக்குழுத் தலைவருக்கும் இடையே சிறியதாய் ஒரு வாக்கு வாதம் நிகழ்ந்தேறியது… பீட்டர்ஹாஃப் வரை வந்து விட்டு அங்கே தவறவிடாமல் பார்த்தாகவேண்டிய தோட்டங்களையும் நீரூற்று, நீர்வீழ்ச்சி முதலியவற்றையும் பார்க்காமல் எங்களைத் திரும்ப அழைத்துச்செல்ல எங்கள் குழுத் தலைவருக்குச் சற்றும் மனம் இல்லை; விடாப்பிடியாக உள்ளூர் வழிகாட்டி காதரீனாவிடம் அதற்காக வாதாடி எங்களுக்கு நாற்பது நிமிடங்களைப் பெற்றுத் தந்தார் அவர்… அந்த நாற்பது நிமிடங்களை மட்டும் நாங்கள் பெறத் தவறியிருந்தால் மிகச்சிறந்த காட்சி இன்பங்களை இழந்திருப்போம் என்பது மாளிகையிலிருந்து சரிந்து செல்லும் பாதைக்குள் கால் பதித்ததுமே புலனாகி விட்டது… 

summerpalacegarden.JPG

மைசூரிலுள்ள பிருந்தாவனத் தோட்டத்திலும் வேறு பல சுற்றுலாப் பகுதிகளிலும் வழக்கமாக நாம் பார்க்கும் நீரூற்றுக்களுக்கும், க்ரேண்ட் பேலசிலிருந்து கீழே தரைப்பரப்பு வரை பல்வேறு மட்டங்களில் பொங்கிப்பெருகிக்கொண்டிருக்கும் நீரூற்றுக்களுக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பீட்டர்ஹாஃபின் மிகச்சிறந்த தனித்துவம் என்றே குறிப்பிடும் அளவுக்குப் பல வகைகளிலும் படைப்புத் திறனின் வெளிப்பாடுகளாகவே இந்த நீரூற்றுக்கள் அமைந்திருக்கின்றன. நீரை மேல்நோக்கி எழச்செய்யும் செயற்கையான விசைக் குழாய்கள், அழுத்தும் பொறிகள் என ஏதும் இன்றி, எந்த உயரத்தில் - எந்த மட்டத்தில் ஒரு நீரூற்று உள்ளதோ அந்த உயரத்தின் ஏற்றத் தாழ்வு காரணமாக ஏற்படும் ஈர்ப்பு விசையால் மட்டுமே அந்த நீரூற்று தானாக  இயங்குவதென்பது  மிகவும் விந்தையானது. இங்குள்ள பெரும்பாலான நீரூற்றுக்களும் வடிவமைக்கப்பட்டிருப்பது அந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேதான். வினோதமான வடிவங்களில் அமைந்து பார்வையாளர்களை வியப்பில் மட்டும் அல்லாமல் நீர்க்குளியலிலும் ஆழ்த்தி விடும் ஊற்றுக்களும் இங்கே நிறையவே உண்டு.

செங்குத்தான அச்சில் வட்டவடிமாகச் சுழலும் தகட்டின் விளிம்புகளிலிருந்து தெறிக்கும் நீர்த் திவலைகள் சூரியக்கதிர் போலத் தோற்றமளிப்பதால் ‘சூரியன்’ என்ற பெயர் கொண்ட நீரூற்று, ’ஆதாம்’, ‘ஏவாள்’ பெயர்களைத் தாங்கியபடி தோட்டத்தின் இரு ஓரங்களிலும் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் நீரூற்றுக்கள், சிங்கத்தின் வாயை சாம்சன் பிளப்பது போன்ற தோற்றத்துடனிருக்கும் சாம்சன் நீரூற்று ஆகியவை நம்மை மலைக்கச் செய்பவை. ரஷ்யா ஸ்வீடனை வெற்றி கொண்டதன் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கும் சாம்சன் நீரூற்றில் பிளந்த சிங்கத்தின் வாயிலிருந்து இருபது மீட்டர் தொலைவு வரை நீர் செங்குத்தாகப் பீய்ச்சியடிக்கிறது…

மரங்களின் வடிவத்திலும் குடை போலவும் அமைக்கப்பட்டிருக்கும் சில நீரூற்றுக்கள் அவற்றை நெருங்கிய அளவிலேயே நம் மீது நீரை அள்ளிச்சொரிந்தபடி நம்மை மகிழ்வில் ஆழ்த்துபவை. பழக்கூடை தாங்கிய மேசை போன்ற ஒரு அமைப்பு……அதிலுள்ள பழத்தை எடுக்க முற்பட்டால் போதும்….உடனே ஒரு குட்டி நீர்வீழ்ச்சி நம்மை நனைத்துவிட்டுப்போகும்…

kids_with_fountains.JPG

இவற்றையெல்லாம் விட இறுதியாக சம தளப்பகுதிக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் கண்ட நீரூற்று மிக மிக விசித்திரமானது…சிறிதும் பெரிதுமாய்க் கூழாங்கற்கள் பாவியிருக்கும் சதுரவடிவமான ஒரு தரைப்பகுதி…அந்தக்கற்களின் மீது நாம் கால் பதித்த மாத்திரத்தில் – அந்த அழுத்தம் ஒன்றினாலேயே கீழிருந்து மேல்நோக்கிப் பீறிட்டு வரும் நீர் நம்மை முழுமையாக நனைத்து விட்டுப்போகும்.அந்த நீர்விளையாட்டில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்த காட்சி கண்டு என் வயதை மறந்து நானும் கூடக் குழந்தையாகிப் போனேன்… ஈரம் படிந்த கல்லில் நான் வழுக்கிக்கொண்டு விடக்கூடாதே என்று எங்கள் குழு நண்பர்கள் கவலையோடு தடுத்தும் கேட்காமல் அந்த சதுரத்தரைக்கற்களில் கால் வைத்துப் பொங்கி வரும் நீரில் நனைந்து திளைத்தேன்… அப்போது அங்கே அடித்துக்கொண்டிருந்த கடும் வெயிலுக்கு அது வெகு சுகமாய் இருந்ததோடு……திரும்ப நெடுந்தூரம் நடந்து ஏறி மேற்பரப்பில் நின்றுகொண்டிருந்த எங்கள் பேருந்தை எட்டுவதற்குள் உடைகளும் கூட அதில் காய்ந்து போயிருந்தன. தோட்டங்களும் நீரூற்றுக்களும் முடிவு பெறும் இடத்தில் கடலோடு கலக்கும் கால்வாய் பரந்து விரிந்த நீர்ப்பரப்போடு மிகப்பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது… ஃபின்லாந்து நாட்டுக்கு அதன் வழி எளிதாய்ச்சென்றுவிட முடியும் என்றார் வழிகாட்டி.  

திட்டமிட்டதை விடவும் கூடுதலான நேரத்தை பீட்டர்ஹாஃஃப் எடுத்துக்கொண்டு விட்டதால் பேருந்தில் ஏறி பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்து அங்கு விரைவாக மதிய உணவை முடித்துக்கொண்டு குளிர்கால அரண்மனையைப் பார்க்கக் கிளம்பினோம். செல்லும் வழியில் பேருந்திலிருந்தே பீட்டர்-பால் கோட்டை அரண் கண்ணில் பட அது பற்றிப் படித்திருந்த செய்திகள் மனதுக்குள் விரிந்தன.

early-spring-sun-at-the-peter-and-paul-f

 

ரஷ்யாவின் மீது ஸ்வீடன் நிகழ்த்திய தரை மற்றும் கடல்வழிப் படைத் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்ள பீட்டர்பேரரசரால் கட்டப்பட்ட இந்த அரணின் ஒருபகுதியில்தான் அரசியல் கைதிகளுக்கான சிறைக்கூடமும் அமைந்திருந்தது. புரட்சிக்காரனாக விளங்கிய பீட்டர் பேரரசரின் மகன் அலெக்ஸியே இதில் முதன்முதலாகச் சிறை இருந்தவன் என்பது வியப்பூட்டும் செய்தி….படைப்பாளிகளான மாக்ஸிம் கார்க்கி, தஸ்தயெவ்ஸ்கி லெனின் மூத்த சகோதரரான அலெக்ஸாண்டர் ஆகியோரும் கூட இந்தச்சிறையில் இருந்திருக்கிறார்களென்ற தகவலை நான் அசைபோட்டபடி இருந்தபோது நகரின் மையப்பகுதியில் உள்ள அரண்மனைச் சதுக்கத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம்.

The_Bronze_Horseman_of_Peter_the_Great.j

சதுக்கத்தின் மையப்பகுதியில் பிரம்மாண்டமான குதிரை வீரன் வடிவில் நின்று கொண்டிருந்த பீட்டர் பேரரசரின் வெண்கலச்சிலை, ரஷ்ய இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படும் அலெக்ஸாண்டர் புஷ்கினின் ‘வெண்கலக்குதிரை வீரன்’ (The Bronze Horseman) என்னும் கவிதையை நினைவூட்டியது. மிகவும் கனம் வாய்ந்ததும் கடினமானதுமான  கற்பாறைப் பீடத்தின் மீது காதரீன் பேரரசியால் நிறுவப்பட்ட இந்தச்சிலை, அந்தக் கவிதையின் பெயராலேயே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. நேவா ஆற்றில் வந்த வெள்ளத்தால் தன் காதலி அடித்துச்செல்லப்பட்டு விட… அவ்வாறான ஓரிடத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரை நிறுவியதற்காக அந்தச் சிலைக்கு முன் நின்று புலம்பியபடி அரசனைச் சபிக்கிறான் அந்தக்காதலன்… உயிர் பெற்றெழுந்து விட்ட அந்தச்சிலையின் குதிரை வீரன், காதலனைத் துரத்திக்கொண்டு ஓட… இறுதியில் ஆற்றோரமாய் உள்ள பாழடைந்த குடிசைப்பகுதி ஒன்றின் அருகே மிதக்கிறது அந்த அப்பாவியின் உடல். அரசாள்பவர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை… எப்போதும்  நிலவும் சாஸ்வதமான போராட்டத்தைப் பதிவு செய்திருக்கும் இந்தக் கவிதை பீட்டர்ஸ்பர்க் நகரின் அழகு… மேன்மை இவற்றோடு அதன் மறு பக்கத்தையும் கூட மறக்கவிடாமல் நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறது… 

தொடரும்...

http://www.dinamani.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் – 9

 

 
coach_in_palace_-2

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தைப்போல ரஷ்ய நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுக்கெல்லாம் களனாக,  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் நடுநாயகமாக அமைந்திருப்பது அரண்மனைச்சதுக்கம் (Palace Square). குளிர்கால அரண்மனைக்கு நேர் எதிரே 580 மீட்டர் பரப்பளவில் அரைவட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்தச் சதுக்கத்தில் வெற்றியைக் குறிக்கும் ஒரு தோரண வாயிலும் கூட உண்டு. பேரணிகளும் திருவிழாக்களும் நடைபெறுவதற்கு ஏற்ற இடமாகக் கருதப்படும் அரண்மனைச்சதுக்கத்தில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் புரட்சியாளர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால் இரத்த ஆறும் கூட ஓடியதுண்டு. இந்திய விடுதலைப்போரின்போது நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு நிகரான அந்தச்சம்பவம் ‘குருதிக்கறை படிந்த ஞாயிற்றுக்கிழமைப்படுகொலை’ [Bloody Sunday massacre] என்றே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

coach_in_palace_sq.JPG

தற்போது புத்தாண்டு விழாக்கள்,வெற்றி விழாக்கள், வெண்ணிறஇரவு நாட்களின் களியாட்டங்கள் ஆகியவை நிகழும் இடமாக இருக்கும் இந்தச் சதுக்கத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவமைப்புக் கொண்ட  அந்தக் காலத்துக் கோச்சு வண்டிகள் பலவும் கண்ணில் பட்டு மீண்டும் ரஷ்யப் புனைகதைகளுக்குள் சிறிது நேரம் பயணம் செய்ய வைத்தன. எல்லா சுற்றுலாப்பகுதிகளையும் போலப் பயணிகள் அவற்றில் ஏறி சவாரி செய்ய முந்திக்கொண்டும் இருந்தனர். 

alexander_column-in-the-middle-of-palace

சதுக்கத்தின் மையப்புள்ளியாக நின்றுகொண்டிருப்பது அலெக்ஸாண்டர் தூண்- (The Alexander Column) எனப்படும் நினைவுச்சின்னம். ஃபிரான்ஸ் நாட்டு மன்னனான நெப்போலியனுடன் நிகழ்த்திய போரில் ரஷ்யா பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த நினைவுத்தூண் ரஷ்யநாட்டுமன்னர் முதலாம் அலெக்ஸாண்டரின் (1801 முதல் 1825 வரை) பெயரைக் கொண்டிருக்கிறது. ஒற்றை சிவப்பு க்ரேனைட் கல்லால் ஆகிய இந்தத் தூணை வடிவமைத்தவர் ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த அகஸ்தே தெ மாண்ட்ஃபெர்ரேண்ட் என்னும் கலைஞர். தூணின் உச்சியில் மன்னர்  முதலாம் அலெக்ஸாண்டரின் முகச்சாயல் கொண்ட ஒரு தேவஉருவம் சிலுவையை ஏந்திக்கொண்டிருப்பது போல இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 500 டன்கள் எடையைக்கொண்டிருக்கும் இந்தத் தூண் நவீன பொறியியல் நுட்பங்கள் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் தூக்கி நிறுத்தும் கருவிகள் (modern cranes and engineering machines) போன்ற எந்த வசதியும் இன்றி மனிதசக்தி ஒன்றை மட்டுமே கொண்டு இரண்டே மணி நேரத்தில் இதன் அடியிலுள்ள பீடத்தின்மீது நிறுத்தப்பட்டது என்பதும் இதன் இயல்பான  எடை காரணமாக மட்டுமே இது பீடத்தின் மீது மிக இயல்பாகப் பொருந்திக் கொண்டிருக்கிறதேயன்றி பீடத்தோடு இதைப் பொருத்த  செயற்கையான எந்த முறையும் கையாளப்படவில்லை என்பதும்  வியப்புக்குரிய செய்திகளாகும்.

bas-relief-on-the-pedestal-of-the-alexan

அறிவும் வளமும் -  நீதியும் கருணையும் - அமைதியும் வெற்றியும் ஆகிய இவற்றின் குறியீடாக உருவகமாக செதுக்கப்பட்டிருக்கும் பல நுட்பமான வடிவங்களும் இராணுவ வெற்றிகளைச் சித்தரிக்கும் காட்சிகளும் அடிப்பீடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. வெயில் அடிக்கும் கோடை நாட்களில் இரவுக்குச் சற்று முன்பான அந்திச்சூரியனின் கடைசிப் பொன்னொளிக்கிரணங்கள் வழவழுப்பான இந்தக் கற்தூணில் பட்டுப் பிரதிபலிக்கும் காட்சி மிகவும் அற்புதமானது. 

winter_palace_interior-3.JPG

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் எழில்மேனியின் மீது சூட்டப்பட்டிருக்கும் மணிமகுடம் போல – அலங்காரமான ஐரோப்பியக் கட்டிடக் கலைப்பாணியின் அற்புதங்களில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருப்பது அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் குளிர்கால அரண்மனை. இளம் பச்சையும் வெண்மையும் பிணைந்த வண்ணத்தில், செல்வச்செழிப்பைக் காட்டும் நேர்த்தியும் ஆடம்பரமுமான வேலைப்பாடுகளுடன் கூடியது இந்த  அரண்மனை. இதன் கட்டுமானப்பணிகள், பீட்டர் பேரரசரின் மகளும் அரசியுமான ராணி எலிஸபெத்தின் காலத்திலேயே [1754-62] தொடங்கப்பட்டபோதும், அரண்மனை
ஒரு வடிவுக்கு வரும் முன்னமே அவர் இறந்து போனதால் சற்றுத் தேங்கி நின்று விட... பின்னாளில் ஆட்சிக்கு வந்த காதரீன் பேரரசியின் காலத்திலேயே முழுமையடைந்தன.

winter_palace_interior-2.JPG

அரசி காதரீனும் அவரது வழி வந்த அரச குடும்பத்து வாரிசுகளுமே இந்தக் குளிர்கால அரண்மனையின் சுகத்தில் திளைத்து இதை அணு அணுவாக அனுபவித்தவர்கள்.  1837ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப்பின்பு இதன் பல
பகுதிகளும் சீரமைக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றுமாடிகள், 1050க்கும் மேற்பட்ட அறைகள்…. 1,786 கதவுகள்..,1,945 ஜன்னல்கள்…, 117படிக்கட்டுகள் எனக் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் இந்தக் குளிர்கால அரண்மனையின் ஒரு சில பகுதிகள் மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் ’அரசு ஹெர்மிடேஜ் மியூசியம்’ என்றபெயரில் ஓர் அருங்காட்சியகமாக விளங்கி வருகின்றன. ரஷ்ய நாட்டின் கலைச்சுரங்கம் என்றே குறிப்பிடக்கூடிய அளவுக்குச் சிறப்பு பெற்றிருக்கும் இந்தக் கலைக்காட்சியகம் உலகின் மிகப்பெரும் அருங்கலைக்காட்சியகங்களில் ஒன்று என்பதோடு என்றென்றும் மதித்துப் போற்றத்தக்க கலைக்கருவூலங்கள் பலவற்றைத் தன்னுள்செறித்து வைத்திருக்கும் பொக்கிஷமாகவும் திகழ்ந்து வருகிறது.

artpiece_in_winter_palace-4.JPG

ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரத்திலிருந்து 255 வண்ண ஓவியங்களை விலைக்கு வாங்கி இதைக்காட்சியகமாக ஆக்க முற்பட்டவர் பேரரசி காதரீன். தொன்மையான எகிப்து நாட்டுக்கலாச்சாரம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பியக்கலாச்சாரம் வரை உலக வரலாற்றின் அனைத்துக் கலாச்சாரப்பதிவுகளையும் காட்டும் கோடிக்கணக்கான கலைத் தடயங்கள் இப்போது இங்கே குவிந்து கிடக்கின்றன. லியனார்டோடாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், ராம்ப்ராண்ட் எனப் பல கலை மேதைகளால் உருவாக்கப்பட்ட இன்ப்ரஷனிச, நவீனசெவ்வியல் பாணியிலான மூன்று  கோடி
கலைப்படைப்புக்கள் இங்கே இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர்.

artpiece_in_winter_palace-5.JPG

இங்கே இருக்கும் ஒரு படைப்பைக் காண ஒரு நிமிடம் செலவிடுவதாக வைத்துக்கொண்டாலும் கூட இங்குள்ள எல்லாக் கலைப்பொருட்களையும் அதே போலக் காணக்  குறைந்தது 11 ஆண்டுகளாவது பிடிக்கும் என்று இந்தக்காட்சியகம் பற்றிச் சொல்லப்படும் கருத்து, உண்மை… வெறும் புகழ்ச்சி இல்லை.

rushyan_folk_dance.jpg

காலையிலிருந்து கடும் வெயிலோடு பீட்டர்ஹாஃப் கோடை மாளிகை, அரண்மனைச்சதுக்கம், குளிர்கால மாளிகை என்று அலைந்து கொண்டிருந்த எங்கள் கால்களுக்குச் சற்று ஓய்வு கொடுக்கும் வகையிலும் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையிலும் அன்றைய நாளின் இறுதி நிகழ்ச்சியாக ரஷ்ய நாட்டு நாட்டுப்புற நடனநிகழ்ச்சி ஒன்றுக்கு எங்களை அழைத்துச் சென்றார் வழிகாட்டி காதரீன். ரஷ்யநாட்டுக்கலாச்சாரத்தின் முக்கியமான அம்சமாக விளங்குபவை ரஷ்யப்பழங்குடி நடனங்கள். ரஷ்ய நாட்டுப்புற நடனங்களின் வேர்கள் ஸ்லோவேனியன் மற்றும் டாடார் பழங்குடி மக்களிடமே இருந்தபோதும் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளின் படையெடுப்புக்கள் இங்கே நிகழ்ந்திருப்பதால் வேறுபட்ட கலாச்சாரக்கூறுகள் இந் நடனங்களில் பின்னிக்கிடப்பதாகச் சொல்லப்படுகிறது.

அரங்கில் இசைக்கப்பட்ட பாடல்களின் மொழியும் நடனங்களின் நுணுக்கமும் எங்களுக்குத் தெரிந்திராவிட்டாலும் கூட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் ரசித்துப்பார்த்த அந்தநாட்டுப்புற நடனம் உயிர்த்துடிப்போடு் உத்வேகத்தோடும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. உயரமான காலணிகள்…, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் ரஷ்யாவுக்கே உரித்தான சிவப்பு வண்ணம் கொண்ட  சரிகை உடைகள்….ஆகியவற்றை அணிந்த ஆண்களும் பெண்களும் சம அளவில் விரவியிருந்த அந்த நடனக்குழு எங்களைச் சிறிதும் அசையாமல் கொஞ்ச நேரம் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்பதே உண்மை.

dostoevsky-monument.jpg

மறு நாள்… ரஷ்யாவில் நாங்கள் கழிக்கும் இறுதி நாள்! முன்பே திட்டமிட்டிருந்தபடி எங்கள் குழுவில் பத்துப்பேர் அங்கிருந்து ஸ்கேண்டினேவியாவை நோக்கிய  தங்கள் பயணத்தைக் காலையிலேயே தொடங்கி விட  நாங்கள் மாலை ஐந்து மணிக்கு இந்தியா திரும்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்குக் கூடுதலாக ஒரு முற்பகல் முழுவதும் சுற்றிப்பார்க்க வாய்ப்பிருந்ததால் வழிகாட்டி காதரீனாவிடம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் நினைவில்லத்தைப் பார்க்கும் என் கோரிக்கையை நான் மீண்டும் முன் வைக்க அவரும் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்…காலையிலேயே விடுதியைக் காலி செய்து விட்டுப் பயணப்பொதிகளைப் பேருந்தில் வைத்தபடியே சுற்ற வேண்டும் என்பதால் பெட்டியைக் கட்டி ஆயத்தமாய் வைத்து விட்டுப் பின்னிரவுக்குமேல் உறங்கச்சென்றோம்.

காலைச் சிற்றுண்டிக்காக நாங்கள் ஆயத்தமாகி வரும் முன்பே ஸ்கேண்டினேவியா செல்லும் எங்கள் பயணக்குழுவினர் ஒரு சிற்றுந்தில் கிளம்பி விட்டிருந்தனர். எஞ்சியிருந்த நாங்கள் ஐந்து பேர் மட்டும் எங்கள் வழிகாட்டியின் வரவுக்காகக் காத்திருந்தோம்… உணவு விடுதியோடு ஒட்டியிருந்த கடையிலேயே இறுதியாக மேலும் சில கலை, பரிசுப்பொருட்களையும் வாங்கிக்கொண்டோம்… வழிகாட்டி காதரீனாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எனக்கு மற்றொரு பெண் வழிகாட்டியான கேட்டி வந்து சேர்ந்தது சற்று அதிர்ச்சி அளித்தபோதும், என் விருப்பம் குறித்து காதரீனா முன் கூட்டியே கேட்டியுடன் பகிர்ந்திருந்தாரென்பது ஆறுதல் அளித்தது.…

எங்கள் குழுவில் என்னோடு எஞ்சியிருந்த பிற நால்வரும் அந்தக் குறுகிய காலத்திற்குள்  என்னோடு பழகி என் ஆர்வத்தையும் புரிந்து கொண்டு விட்டிருந்ததால் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தைக் காண வேண்டும் என்னும் என் விருப்பத்துக்குத் தடை போடவில்லை; எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இடங்களையும் காட்ட எண்ணிய கேட்டி, வரைபடத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டபின், நினைவில்லம் அருகிலுள்ள சில தேவாலயங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகக்கூற அவர்களும் அந்த ஆலோசனையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர்… நானும் என் ரஷ்யப்பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவு பெறப்போகும் மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்தேன் .

முதலில் எங்கள் அனைவரையுமே ட்ரினிடி தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் கேட்டி. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இதுவரை நாங்கள் பார்த்திருந்த பிரம்மாண்டமான தேவாலயங்களைப்போல இல்லாவிட்டாலும் எளிமையான அழகோடு பொலிந்த ட்ரினிடி தேவாலயத்தில் அப்போது பூசையும் கூட நடந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் அந்த ஆலயம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியோடு தொடர்புடையதும் கூட என்று கூறிய கேட்டி அவரது திருமணம் அங்குதான் நிகழ்ந்தது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்…

 

anna.jpg

உடன் என் மனம் தியாகத்தில் தோய்ந்த தஸ்தயெவ்ஸ்கியின் மனைவி அன்னாவிடம் தாவிச்சென்றது… கணவரின் எழுத்துப்பணிக்கு உறுதுணையாக இருந்ததோடு சூதாடியாகப் பணத்தையெல்லாம் அவர் தொலைத்த காலத்திலும் அவருக்குக் கை கொடுத்து நின்று கடனிலிருந்தும் மீட்டவரான அன்னா, இலக்கிய மேதையான தன் கணவர் பற்றிய நினைவுக் குறிப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்.

ட்ரினிடி தேவாலயத்தைப்பார்த்து முடித்ததும் குழுவிலிருந்த மற்றவர்களை வேறு இரண்டு தேவாலயங்களுக்கு அருகே விட்டு விட்டு என்னை மட்டும் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தை நோக்கி வழிநடத்திச் சென்றார் கேட்டி., நினைவில்லத்துக்குச் சற்று முன்பிருந்த அகன்ற தெரு ஒன்றில் மிகப்பெரிதாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த நாவலாசிரியரின் சிலை ஒன்றை எனக்குச் சுட்டிக் காட்டி அதோடு சேர்த்து என்னைப் புகைப்படம் எடுத்துத் தரவும் அவர் தவறவில்லை. நினைவில்லத்தின் முகப்பு வரை என்னைக்கொண்டு போய் விட்டு விட்டு இருபதே  நிமிடங்களில் குழுவினரோடு நான் வந்து சேர்ந்தாகவேண்டும் என்ற நிபந்தனையோடு விடைபெற்றார் அவர்.

dostoevsky.jpg

மிகப்பெரிய அடுக்கு மாடிக்கட்டிடத்தின் ஓரத்தில் சிறியதொரு கீழ்த்தளமும் மேல்தளமும் கொண்ட எளிமையான குடியிருப்பு ஒன்றில் அமைந்திருந்தது அந்த நினைவில்லம். கீழ்த்தளத்தில் இறங்கிச் சென்று அங்கிருந்த வரவேற்பகத்தில் இருநூறு ரூபிள் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மேல்தளம் நோக்கிச்சென்றபோது என் உள்ளம் கலவையான பல உணர்வுகளின் ஆக்கிரமிப்பால் நெகிழ்ந்து கிடந்தது… இலக்கிய முன்னோடிகள் வாழ்ந்த இல்லங்களில் கால் பதிக்கும் வேளையில் இயல்பாக ஏற்படும் புல்லரிப்பும் பூரிப்புமான பரவசநிலை அது ! 

dosthoyovsky_memorial.jpg

கடந்த பத்தாண்டுக்காலமாக நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், அசடன், அவரது சிறுகதைகள், குறுங்கதைகள், குறும்புதினங்கள் ஆகியவற்றைத் தமிழாக்கும் முயற்சியிலேயே பெரிதும் முனைந்திருக்கும் நான்… அப்படைப்புக்களை உருவாக்கிய அந்த மாமேதை வாழ்ந்து ஒரு சில பேராக்கங்களையும் உருவாக்கிய அந்த இடத்தில் சிறிது நேரம் உலவி வர முடிந்ததை என் வாழ்வின் அரிதான வாய்ப்புக்களில் ஒன்றாகவும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை என் வாழ்வின் ஆகச் சிறந்த கணங்களில் ஒன்றாகவும் கொண்ட மனச்சிலிர்ப்புடன் இருந்தேன்…

உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்- என்கிறார் மொழிபெயர்ப்பாளரும் விமரிசகருமாகிய எம்.ஏ.அப்பாஸ். ரஷ்ய சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய  சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற தஸ்தயெவ்ஸ்கி , உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞர் என விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட பெருமை கொண்டவர்.

‘நானும் கற்றுக்கொள்ளக்கூடிய உளவியல் செய்திகள் நிறைந்து கிடப்பது தஸ்தயெவ்ஸ்கியிடம் மட்டும்தான்’என்று நீட்சேயும் கூட ஒரு முறை குறிப்பிட்டதுண்டு… மனித மனத்தின் ஆழம் காண முடியாத இருட்டு மூலைகளைத் தன் அகக்கண்ணால் துழாவிப்பார்த்துத் தன் படைப்புக்களின் வழி வாசகர்கள் அரிய தரிசனங்கள் பலவற்றைப்பெற வழி செய்திருப்பவர் அவர். மிகவும் எளிமையான அவரது குடியிருப்பு அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருக்க நான் நினைவில்லத்தின் ஒவ்வொரு அறையாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு கூடம் முழுவதும் எழுத்தாளர் பயன்படுத்திய பலவகையான பொருட்கள் [வயோலின், திசைகாட்டும் கருவி, அவர் படித்தநூல்கள்] கண்ணாடிப் பெட்டிகளுக்குள் நிறைந்திருந்தன.

இராணுவத்தில் இருந்தபோதும் சைபீரியச்சிறையில் சில காலம் அவர் இருக்க நேர்ந்தபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவரது கையெழுத்துப்பிரதிகள், அவரது நூலின் முதல் பிரதிகள், குடும்பப் புகைப்படங்கள் ஆகியவையும் அங்கே பாதுகாக்கப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக்காட்சிக் கூடத்தை அடுத்து அவர் வாழ்ந்த இல்லத்தில் அவர் அமர்ந்து எழுதும் அறை (உலகப்புகழ்பெற்ற நாவலான ‘கரமசோவ் சகோதரர்க’ளை அங்கேதான் அவர் உருவாக்கியிருக்கிறார் என்ற குறிப்பை அந்த இடத்தில் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவில்லை) படிக்கும் அறை… வரவேற்பறை ஆகிய அனைத்துமே அது ஒரு படிப்பாளியின், எழுத்தாளனின் இடம் என்பதை எடுத்துக்காட்டும் முறையில் மிகையும் பகட்டும் இல்லாத எளிய அழகுடன் பொலிந்து கொண்டிருந்தன.

 
 

முதல் நாள் முழுவதும் நாங்கள் பார்த்துப் பார்த்துத் திகட்டிப்போயிருந்த தங்கமும் பட்டும் இழைத்த மன்னர்களின் மாளிகைகளுக்கும் எழுதுகோலைச் செங்கோலாக்கிய இந்த நாவல் ஆசானின் வாழிடத்துக்கும் உள்ள வேறுபாட்டை என் மனம் ஒப்பிட்டு அசை போடத் தொடங்கியதைத் தவிர்க்க முடியவில்லை. 

இருபது நிமிடங்கள் நொடியில் கரைந்து போக… கேட்டி என்னைத் தேடி வரும் முன் நினைவில்லம் பற்றி அரிதாய்க் கிடைத்த ஆங்கிலநூல் ஒன்றை வாங்கிக்கொண்டு (ரஷ்யாவைப்பொறுத்தவரை ஆங்கிலநூல் விற்பனை என்பது மிகவும் அரிது; அங்கே கிடைப்பவை பெரும்பாலும் ரஷ்யமொழி நூல்கள் மட்டுமே)  எங்கள் குழுவினரைத் தேடி விரைந்து சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டேன்…

மதிய உணவுக்குப் பிறகு நேரே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விமானநிலையம் சென்று மாலை ஐந்து மணிக்கு துபாய் விமானம் ஏறி நள்ளிரவு துபாய் வந்தடைந்து அங்கிருந்து அதிகாலை விமானத்தில் கிளம்பிக் காலை எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்தோம்…

ரஷ்யாவில் கழித்ததென்னவோ ஐந்தே நாட்கள்தான்… ஆனாலும் அந்தமண்ணின்  அரசியல்… கலை… கலாச்சாரம்... இலக்கியம்… என எல்லாவற்றின் சுவடுகளையுமே பதச்சோறாகச் சுவை பார்த்து முடித்து விட்டதால்… ஐம்பது ஆண்டுக்காலம் அங்கே கழித்தாற் போன்ற இனிய நினைவுகளின் சுகமான பிடியில் மனம் இன்னமும் கூட சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது!!!

(நிறைவு)

கடந்த 9 வாரங்களாக தான் சென்று வந்த ரஷ்யப் பயணத்தின் சுவாரஸ்யமான அனுபவங்களை சற்றும் தொய்வின்றி, வாசிக்கும் ஒவ்வொருவரையும் ரஷ்யாவுக்கே நேரடியாக கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னோடு பயணிக்க வைத்த உணர்வோடு மிக அருமையாக இந்தக் கட்டுரையை கையாண்ட கட்டுரை ஆசிரியர் எம்.ஏ.சுசிலா அவர்களுக்கு தினமணி.காமின் நன்றிகள் என்றென்றும்  உரித்தாகட்டும். 

 

மீண்டும் ஒரு அருமையான பயணக் கட்டுரைக்காக காத்திருங்கள். எந்த நாடு? யார் எழுதப் போகிறார்கள் என்ற விவரங்களுடன் இந்தப் பகுதியின் அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்...
 

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.