Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கிந்தியத்தீவுகள்: கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு

Featured Replies

மேற்கிந்தியத்தீவுகள்: கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு - 1

 
west-indies.jpg

2012 இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டி. போட்டிகளை நடத்துகிற இலங்கை அணியை இறுதிப்போட்டியிற் தோற்கடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றுகிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 2016 இல் போட்டியை நடாத்திய இந்திய அணியை அரையிறுதியிலும், இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெல்கிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. இரு சந்தர்ப்பங்களிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வீரர்களோடு சேர்ந்து தம் அணிகளை வெறித்தனமாக ஆதரிக்கும் இலங்கை மற்றும் இந்திய அணி இரசிகர்களும் களிப்பாக நடனமாடி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

2016 இறுதியாட்டத்தின் கொண்டாட்டங்களின் மத்தியிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சில நாட்களின்பின் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரிற்கான அணியில் தாம் தெரிவு செய்யப்படாமையைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், ட்வைன் ப்ராவோ ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். சிலநாட்கள் கழித்து அணியின் மூத்தவீரரான டினேஷ் ராம்தின் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். அவரைத்தொடர்ந்து சிலநாட்களில் டரன் சமி இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான அணியின் தலைமைப்பதவியிலிருந்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக அணியிலிருந்தே நீக்கப்படுகிறார்.

இத்தனைக்கும் மேற்சொன்ன வீரர்கள் அனைவரும் உலகின் பலபாகங்களிலும் நடைபெறும் இருபதுக்கு இருபது சுழற்கோப்பைப் போட்டிகளில் மிகவும் வேண்டப்படுகிறவர்களாயும், பெருமளவில் வெற்றிகரமாக விளையாடுபவர்களாயும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கும் மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் எப்போதும் எட்டாப்பொருத்தமே. மொத்தத்தில், மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இப்போதைக்கு கிரிக்கெட் உலகத்தில் அவர்களின் சொந்தக் கிரிக்கெட் சபையைத்தவிர எல்லோரையும் மகிழ்விக்கும் கேளிக்கைக் கலைஞர்கள் (அ) கலிப்சோ துடுப்பாட்டவீரர்கள் (Calypso Criketers).

1976 க்கு முன்னரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி கலிப்சோ துடுப்பாட்டவீரர்கள் என்றே அறியப்பட்டிருந்தார்கள். அந்த வருடம் மேற்கிந்தியத்தீவுகளில் வைத்து இந்தியாவை வென்றதிலிருந்து 1994/95 பருவகாலத்தில் சொந்த மண்ணிலேயே அவுஸ்திரேலிய அணியிடம் தோற்றது வரை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களாக இருந்தார்கள். அவர்களின் துடுப்பாட்ட வரலாற்றின் பொற்காலத்தைச் சுருக்கமாகத் திரும்பிப்பார்ப்போம். அதன்பொருட்டு முதலில் மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட்டின் ஆரம்பகால வரலாற்றை சற்றே நோக்கலாம்.

மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாறு 1880 களில் ஆரம்பிக்கிறது. பிரித்தானியக் காலனியாதிக்கத்துக்குட்பட்ட கரீபியன் நாடுகளின் ஒருங்கிணைந்த அணியாகவே மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடக்ககாலத்தில் அறியப்பட்டிருந்தது. 1880 களில் இந்த ஒருங்கிணைந்த அணி அப்போதைய கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. அக்காலகட்டத்தில் பெரும்பாலான போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளின் உள்நாட்டு அணிகளுக்கிடையிலேயே நடைபெற்றன. 1895 ஆம் வருடம், இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் கொண்டது.

1926இல் சர்வதேசத் துடுப்பாட்டச் சபையில் (International Cricket Conference) மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா மற்று நியுசிலாந்து அணிகள் இணைத்துக்கொள்ளப்பட்டன. 23 ஆனி 1928 இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக தமது முதற்போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் அணி விளையாடியது. அந்தப்போட்டியிலும், அதைத் தொடர்ந்த இரு போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி படு மோசமான தோல்விகளைத் தழுவிக்கொண்டது.

இப்படியாகத் தோல்வியுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் வரலாறு முழுவதும் அரசியல், நிர்வாகச்சிக்கல்கள் நிறைந்திருந்தன. அணித்தேர்வில் எப்போதுமே சிக்கல்கள் நிறைந்திருந்தன. இன/நிற வேறுபாடுகளால் மேற்கிந்தியத்தீவுகள் அணி அல்லற்பட்டது. பெரும்பாலும் வெள்ளையினத்தவரே மேற்கிந்தியத்தீவுகள் அணியில் விளையாடினார்கள். கறுப்பினத்தவர்கள் மிக அரிதாகவே அணிகளில் சேர்க்கப்பட்டார்கள்.

அணித்தலைவராக வெள்ளையினத்தவர் ஒருவரே எப்போதும் இருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் ஆதிக்குடிகளும், பல்வேறு மேற்காபிரிக்க நாடுகளிலிருந்து அடிமைக்குடிகளாக அழைத்து வரப்பட்ட கறுப்பினத்தவரும் நிரம்பிய பிரதேசம். இருந்தும், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட அணியில் ஆண்டைகளான ஆங்கிலேயர்களே அதிகம் விளையாடினார்கள். வரும் அத்தியாயங்களில் இந்த நிலை எப்படி மாறியது என்பதைப் பார்க்கலாம்.

 

தொடரும்

http://deepam.news/2016/08/22/மேற்கிந்தியத்தீவுகள்-கல/

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-2

 

1928 இல் இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி, அந்தத் தொடரில் 3-0 என்கிற மோசமான தோல்வியைத் தழுவியிருந்தது. அதன் பின்னராக 1930 ம் ஆண்டு இங்கிலாந்து அணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. மேற்கிந்தியத்தீவுகளுக்கும், நியூசிலாந்துவுக்கும் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து மேற்கொண்டிருந்தபடியால், மேற்கிந்தியத்தீவுகளுக்கு வந்த இங்கிலாந்து அணி முழுப்பலமுடையதாய் இருக்கவில்லை. மாசி 26, 1930 அன்று, இங்கிலாந்தைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணி தமது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார்கள். தொடரையும் 1-1 என்கிற வகையிற் சமன்செய்தார்கள். இந்தத் தொடரிற்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியிலிருந்த வெள்ளையினத்தவர்கள் அல்லாத வீரர்களின் திறமை முதலில் வெளிவந்தது எனலாம். துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் ஹெட்லி (George Headley) மற்றும் சகலதுறை வீரர் லாரி கொன்ஸ்ரன்ரைன் (Learie Constantine) ஆகியோரின் திறமையான ஆட்டம் பலரையும் ஈர்த்தது.

லாரி கொன்ஸ்ரன்ரைன் (Learie Constantine)

சகலதுறை வீரரான லாரி கொன்ஸ்ரன்ரைன் ட்ரினிடாட்டைச் சேர்ந்தவர். வலதுகை மட்டைவீரர் மற்றும் வலதுகை வேகப் பந்துவீச்சாளர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான கொன்ஸ்ரன்ரைன் தனது திறமை மூலம் தம்மைப் பிணைத்த அடிமைத்தளையை உடைக்க விரும்பினார். மேற்கிந்தியத் தீவுகளில் வெள்ளையரல்லாத துடுப்பாட்டவீரர்களுக்குப் பெரியளவில் வாய்ப்புகள் கிட்டாதநிலையில், இவர் இங்கிலாந்திலுள்ள கழகங்களுக்காகப் போட்டிகளில் பங்குபற்றியும் வந்தார். மேற்கிந்தியத்தீவுகளுக்காக 5-நாட் போட்டிகளிற் பெறப்பட்ட முதலாவது இலக்கை வீழ்த்தியவர் என்கிற பெருமைக்குரியவரான கொன்ஸ்ரன்ரைன், மேற்கிந்தியத்தீவுகளுக்காக 1928 தொடக்கம் 1930 வரை 18 5-நாட் போட்டிகளில் விளையாடினார்.

Learie

கொன்ஸ்ரன்ரைனின் ஆட்டத்திறண் சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளைவிட உள்ளூர் மற்றும் கழக அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளிலேயே அதிகம் வெளிப்பட்டது. இருந்தபோதும், விளையாடிய காலத்திலிருந்தே நிற ஒடுக்குமுறைக்கெதிராகச் செயற்பட்டுவந்தார். பின்னர் அரசியலிலும் நுழைந்த கொன்ஸ்ரன்ரைன், இங்கிலாத்துக்கான பிரித்தானியத் தூதுவராகவும் கடமையாற்றினார். அவரின் இறுதிக்காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்தார் என விமர்சிக்கப்பட்டார்.

ஜோர்ஜ் ஹெட்லி (George Headley)

அனைவருக்கும் இலகுவாக விளங்கக்கூடிய வகையில் சொல்வதானால், துடுப்பாட்டத்தின் வரலாற்றில் வெள்ளையரல்லாத முதல் உச்ச நட்சத்திரம் ஜோர்ஜ் ஹெட்லி. இவரது சமகாலத்திற்தான் 5-நாட் துடுப்பாட்டப் போட்டிகளின் சாதனை நாயகன் டொனால்ட் பிரட்மன் அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடிக்கொண்டிருந்தார். ஹெட்லியை “கறுப்பு பிராட்மன்” என வெள்ளையர்கள் அழைக்க, மேற்கிந்தியர்கள் பிராட்மனை “வெள்ளை ஹெட்லி” என்றழைக்குமளவுக்கு இருபேரும் புகழ்பெற்றிருந்தார்கள்.

George_Headley-3

ஜமேய்க்கரான ஹெட்லி (பிறந்தது பனாமாவில்), முதன்முதலாக 5-நாட் போட்டியொன்றை விளையாடியது பார்பேடோஸில். பார்பேடியர்களுக்கு இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவருக்குப் பதில் ஒரு பார்பேடியர் விளையாடியிருக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாயிருந்தது. இருப்பினும் ஹெட்லி தமது திறமையான துடுப்பாட்டம் மூலம் அந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டவாய்ப்பில் 176 ஓட்டங்களைப் பெற்று, அனைவர் மனங்களிலும் இடம்பிடித்தார்.

ஹெட்லி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 1930 தொடக்கம் 1954 வரை 22 போட்டிகளில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டிகளில், சராசரியாக ஒரு ஆட்டவாய்ப்புக்கு 60.83 ஓட்டங்கள் என்கிற விகிதத்தில், 10 சதங்கள், 5 அரைச் சதங்கள் அடங்கலாக 2190 ஓட்டங்களைக் குவித்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 270 ஓட்டங்களைக் கிங்ஸ்ரன் மைதானத்தில் குவித்திருந்தார். உள்ளூர்ப்போட்டிகளில் 69.86 என்ற சராசரியோடு 9921 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 1954 இல் ஓய்வு பெற்றபின் ஹெட்லி ஜமேய்க்கா அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார்.

பி.கு: இவரது மகனான றொன் ஹெட்லி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக இரண்டு 5-நாட் போட்டிகளிலும், 1 ஒரு நாட் போட்டியிலும் விளையாடினார். மேலும், ஜோர்ஜ் ஹெட்லியின் பெயரனான டீன் ஹெட்லி இங்கிலாந்து அணிக்காக முறையே 15 மற்றும் 13 5-நாட் போட்டிகளிலும், ஒரு நாட் போட்டிகளிலும் விளையாடினார்.

இப்படியாக, ஆங்கிலேய/வெள்ளையினப் பிரபுக்களால் நிரம்பியிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி என்கிற புறாக்கூட்டத்துக்குள்ளே முதற்கல் எறியப்பட்டது. கலைந்த புறாக்கள் எப்படி முற்றாகப் பறந்தன என்பதை இனிவரும் அத்தியாயங்களிற் பார்க்கலாம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 3

September 20, 2016
13
kalipso-696x434.jpg

1930 இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரைச் சமன் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி, 1930-ரூ-31 இல் அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து 5-நாட் போட்டிகள் ஐந்து கொண்ட தொடரொன்றில் விளையாடியது. இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே நிறையச் சம்பவங்கள் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரானதாகவே இருந்தன. அந்தக் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் “வெள்ளை அவுஸ்திரேலியா” என்கிற கொள்கை நடைமுறையில் இருந்தது. இந்தக் கொள்கையின்படி அவுஸ்திரேலியாவுக்கு, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடிய வெள்ளையினத்தவர் மட்டுமே குடிவரவாளர்களாக அனுமதிக்கப்பட்டார்கள். மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபை அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம், தொடரின் பிற்பாடு எந்தக் கறுப்பின வீரரும் அவுஸ்திரேலியாவில் தங்கமாட்டார்கள் என்ற உறுதிமொழியைக் கொடுத்தபின்னரே இந்தத் தொடரில் பங்குபற்றிய கறுப்பினவீரர்களை அவுஸ்திரேலியா நாட்டுக்குள் அனுமதித்தது. மேலும், மேற்கிந்தியத்தீவுகளின் வேண்டுகேளின்படி அந்த அணியின் எல்லா வீரர்களும் ஒரே தங்குமிடங்களிற்தங்க அனுமதிக்கப்படவில்லை. அணியிலிருந்த 7 வெள்ளையின வீரர்கள் தனியாகவும், 7 கறுப்பின வீரர்கள் தனியாகவும் தங்கவைக்கப்பட்டார்கள்.

தொடரின் ஆரம்பத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்க சிரமப்பட்டார்கள். ஆயினும், ஹெட்லி, கொன்ஸ்ரன்ரைன் ஆகியோர் ஓரளவுக்கேனும் தமது திறமையை வெளிக்காட்டினார்கள். சிட்னி மைதானத்தில் நடந்த ஐந்தாவது 5-நாட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே அவர்கள் அந்நியமண்ணில் பெற்ற முதல் வெற்றியாகும். இருப்பினும், போட்டிகளின் தொடரை 4-1 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்றிருந்தது. வில்லியம் பொன்ஸ்ஃபோர்ட் (467 @ 77.83), டொனால்ட் பிராட்மன் (447 @ 74.50) ஆகியோருக்கு அடுத்தபடியாக 336 ஓட்டங்களை (சராசரி 37.33) இரண்டு சதங்கள் அடங்கலாக ஜோர்ஜ் ஹெட்லி பெற்றுக்கொண்டார். மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடரிற் தோற்றிருந்தாலும், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட விசிறிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது.

1933 ம் வருடம் மீண்டும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2-0 என்கிற கணக்கிற் தோல்வியைத் தழுவிக்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 1934-35 காலப்பகுதியில்  மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்து அணியைச் சொந்த மண்ணில் வைத்து எதிர்கொண்டது. அந்தத் தொடர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றை மாற்றியமைத்தது எனலாம். பார்பேடோஸில் நடைபெற்ற முதலாவது 5-நாட் போட்டியை இங்கிலாந்து மிகுந்த போராட்டத்தின் பின் வெற்றிகொண்டது. மொத்தம் நான்கு ஆட்டவாய்ப்புகளில் ஒரு அணிகளும் சேர்ந்து 36 இலக்குகளை இழந்து வெறும் 309 ஓட்டங்களையே பெற்றிருந்தனர். அடுத்த போட்டியில் கொன்ஸ்ரன்ரைன், ஹெட்லி, சீலி போன்றோரின் திறமையான துடுப்பாட்டம் மர்றும் பந்துவீச்சாளர்களின் ஒருமித்த உழைப்புக் காரணமாக 217 ஓட்டங்களால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றியைத் தமதாக்கிக்கொண்டது. மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிய, நான்காவது போட்டி தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் ஹெட்லி எடுத்த 270 ஓட்டங்களும், மன்னி மாட்டின்டேல் (MANNY MARTINDALE), கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும் சாதகமாக அமைய, ஒரு ஆட்டவாய்ப்பு மற்றும் 161 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைப் படுதோல்வியடையச் செய்து, தமது முதற்தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

1939 இல் மீண்டும் இங்கிலாந்துக்குச் சென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் தோற்றது. ஹெட்லி லொர்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியின் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். இந்தத் தொடருக்குப் பிறகு 1948 வரையில் மேற்கிந்தியத்தீவுகள் எந்தத் தொடரையும் விளையாடவில்லை. இந்தத் தொடர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமைந்தது. பார்பேடோஸில் நடந்த முதற் போட்டி சமநிலையில் முடிந்தது. ட்ரினிடாடில் நடந்த இரண்டாவது போட்டியும் அவ்வாறே. அப்போட்டியில் அறிமுகமான கிஸீபீஹ் ANDY GANTEAUME சதமடித்தாரென்பதும், அதற்குப் பிறகு அவர் எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் George Carew என்பாரும் சதமடித்தார்.

இறுதியிரு போட்டிகளிலும் மிகப் பெரும் வெற்றிகளை மேற்கிந்தியத்தீவுகள் அணி பெற்றுக்கொண்டது. அவ்வெற்றிகளின் காரணகர்த்தாக்கள் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றி, வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்

http://deepam.news/2016/09/20/மேற்கிந்தியத்தீவுகள்-க-2/

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு- 4

 
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%

றுதியிரு போட்டிகளையும் லென் ஹட்டன் (Len Hutton), கபி அலன் (Gubby Allen), ஜிம் லேக்கர் (Jim Laker) போன்ற திறமையான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இலகுவாக வெற்றிகொண்டனர். இப்போட்டித் தொடரின் முதற்போட்டியில் அறிமுகமாகியிருந்த எவேர்ட்டன் வீக்ஸ் (Everton Weeks) ஜமேய்க்காவில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும், இரண்டாவது போட்டியில் அறிமுகமாகியிருந்த ஃப்ராங் வொரெல் (Frank Worrell) மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதங்களைப் பெற்றிருந்தார்கள். வொரெல் தமது அறிமுகப்போட்டியில் 97 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இவ்விருவரோடும், முதலாவது போட்டியில் அறிமுகமான க்ளைட் வோல்கொட் (Clyde Walcott) என்பாரும் சேர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுதலானார்கள். மூன்று “w” க்கள் எனப் பிரபலமடைந்த இவர்களைப் பற்றி விபரமாகப் பார்ப்போம்.

க்ளைட் வோல்கொட் (Sir Clyde Walcott)
சேர். க்ளைட் வோல்கொட் பார்படோஸ் தீவுகளின் ப்ரிட்ஜ்ரவுணில் பிறந்தவர். தனது உயர்நிலைப்பாடசாலையான ஹரிசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே வோல்கொட் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிக்காட்டுபவராயிருந்தார். மேல்வரிசை, மத்தியவரிசை என எங்கும் துடுப்பெடுத்தாடக்கூடியவராயும், சிறந்த இலக்குக்காப்பாளராயும், வீஸீ-ளஷ்வீஸீரீ வகையிற் பந்து வீசவல்லவராயும் திகழ்ந்த வோல்கொட், 1942 ம் வருடத்திலிருந்து பார்படோஸ் அணிக்காகப் பிராந்தியப்போட்டிகளில் விளையாடவாரம்பித்தார். இருந்தபோதும், துடுப்பாட்ட உலகின் கவனம் இவர்மீது திரும்பியது 1946 ஆம் ஆண்டில், ட்ரினிடாட் அணிக்கெதிராக இவர் ஆட்டமிழக்காமற் பெற்ற 314 ஓட்டங்களின் மூலமே. அந்த போட்டியில் இவரோடு இணைந்து அப்போதைய இணைப்பாட்ட சாதனையான 574 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் யார் தெரியுமா? சேர். ஃப்ராங் வொரல் வோல்கொட் 1948 இல் இங்கிலாந்துக்கெதிரான தொடரிற்தான் முதன்முதலாக சர்வதேச ஐந்துநாட் போட்டிகளில் அறிமுகமானார்.

முதற்சில போட்டிகளில் துடுப்பாட்டத்தில் இவரால் பெருமளவு சோபிக்கமுடியாமற் போனபோதிலும், ஒரு இலக்குக்காப்பாளராகவும் இருந்த காரணத்தால் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். 1948 இல் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் இரண்டு சதங்கள் இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 452 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னராக இங்கிலாந்துக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் 168 ஓட்டங்களை ஆட்டமிழக்காமற் பெற்றுத் தன்னை ஒரு தரமான துடுப்பாட்டவீரராகப் பிரகடனம் செய்துகொண்டார். வோல்கொட் முதன்முதலாக 1951/52 இல் அவுஸ்திரேலியாவில் விளையாடிய தொடரில் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை எனினும், நியூசிலாந்தில் மேலுமொரு சதத்தைப் பெற்றுக்கொண்டார். 1953 இல் இந்திய அணிக்கெதிராக மேலுமிரு சதங்களை ஜோர்ஜ்ரவுண் மற்றும் கிங்ஸ்ரன் ஆகிய மைதானங்களிற் குவித்தார். 1954 இல் இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவரது அதிகபட்ச சர்வதேசப் பெறுதியான 220 ஓட்டங்கள் உட்பட இரு சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார் வோல்கொட்.  1955 இல் இயன் ஜோன்சன் தலைமையில் நீல் ஹார்வி, கீத் மில்லர், ஆர்தர் மோரிஸ், றிச்சி பெனோ, றே லிண்ட்வோல் ஆகியோரை உள்ளடக்கிய பலமிக்க அவுஸ்திரேலிய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரொன்றை 3-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. மேற்கிந்தியத்தீவுகள் மோசமாகத் தோற்ற தொடராயினும், வோல்கொட் 5 சதங்களடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். அதிலும், இரண்டு போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார்.

1960 இல் விளையாடுவதை நிறுத்திக் கொண்ட வோல்கொட் பின்னர் ஒருநிர்வாகியாகத் தன்னை நிலைநிறுத்திக்
கொண்டார். சர்வதேசத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபையின் முதலாவது ஆங்கிலேயர்ஃவெள்ளையர் அல்லாத தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் இவரே. 44 போட்டிகளில் 15 சதங்கள், 14 அரைச் சதங்கள் அடங்கலாக 56.68 என்கிற சராசரியில் 3798 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட க்ளைட் வோல்கொட், நவீனகாலத் துடுப்பாட்டப்போட்டிகளில் கொண்டாடப்படும் அடம் கில்கிறிஸ்ட்,குமார் சங்கக்கார போன்ற துடுப்பெடுத்தாடவல்ல இலக்குக்காப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம். துடுப்பாட்ட உலகுக்கு இவரின் பங்களிப்புகளைக் கருத்திற்கொண்டு 1994 இல் “சேர்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட க்ளைட் வோல்கொட், 2006 ம் வருடம் தமது 81 வது வயதில் காலமானார்.

http://deepam.news/2016/10/04/மேற்கிந்தியத்தீவுகள்-க-3/

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 5

October 17, 2016
6
cricket.jpg

எவேர்ட்டன் வீக்ஸ் (Sir. Everton Weeks)

க்ளைட் வோல்கொட் அறிமுகமான 1948 ம் வருட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான மற்றொருவர் எவேர்ட்டன் வீக்ஸ். இவரும் வோல்கொட் போலவே பார்படோஸ் தீவிலேயே பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக உழைப்புத்தேடி இவரது தந்தையார் ட்ரினிடாட் தீவுகளுக்குக் குடிபெயர்ந்தார். புனித லெனார்ட் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே வீக்ஸ் பாடப்புத்தகங்களைவிட மைதானத்தை அதிகம் நேசிப்பவராக இருந்தார். 14 வயதிலேயே பாடசாலை செல்வதை நிறுத்திவிட்டு துடுப்பாட்டமும், காற்பந்தும் விளையாடிக்கொண்டு திரிந்தார். 18 வயதில் இராணுவசேவையில் தன்னை இணைத்துக்கொண்ட வீக்ஸ் 1947ம் வருடம் இராணுவ சேவையைப் பூர்த்தி செய்தார். அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்கிற காரணத்தால் பல்வேறு  புகழ்பூத்த கழகங்களுக்காக விளையாடுகிற வாய்ப்புகள் கிட்டின.

1945ரூம் ஆண்டிலிருந்தே முதற்தரப் போட்டிகளில் விளையாடி வந்தாலும் 1946/47 பருவ காலத்திலேயே மிகச்சிறப்பான பெறுதிகளை வீக்ஸ்சால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன் பலனாக 1948 ம் வருடம் இங்கிலாந்தை எதிர்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியில் வீக்சுக்கு ஓரிடம் கிட்டியது.

1948 தொடரில் கென்சிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற முதற்போட்டியில் அறிமுகமான பன்னிருவரில் ஒருவரான வீக்ஸ், முதற்சில போட்டிகளில் தடுமாற்றமான ஆட்டப்பாணியை வெளிக்காட்டினார். அணியிலிருந்து நீக்காப்படுவதிலிருந்து ஜோர்ஜ் ஹெட்லிக்கு ஏற்பட்ட உபாதையின் காரணத்தால் தப்பித்துக்கொண்ட வீக்ஸ், 141 ஓட்டங்களைப் பெற்றுத் தன் இடத்தை அணியில் தக்கவைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து இந்தியாவிற் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணிக்காக விளையாடிய வீக்ஸ், அந்தத் தொடரின் முதல் நான்கு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்ததன் மூலம், ஐந்து ஆட்டவாய்ப்புகளிற் தொடர்ந்து 100க்கு மேலான ஓட்டங்களைக் குவித்தவர் என்கிற சாதனையைத் தனதாக்கிக்கொண்டார். அதற்கடுத்துச் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 90 ஓட்டங்களில் க்ஷீரஸீ-ஷீரவ முறையில் ஆட்டமிழந்திருக்காவிட்டால் ஆறாவது தொடர் சதத்தையும் குவித்திருப்பார்.

அதன் பின்னர் 1950 இல் இங்கிலாந்துக்கெதிராக இங்கிலாந்தில் வைத்து தமது முதற்சதத்தை எட்டினார். 1953 இல் இந்தியாவுக்கு எதிராக போர்ட்-ஒஃப்-ஸ்பெயினில் வைத்து தன்னுடைய அதிகபட்சப் பெறுதியான 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் வீக்ஸ். அதற்கடுத்த வருடம் அதே மைதானத்தில் இங்கிலாந்துக்கெதிராக 206 ஓட்டங்களைக் குவித்தார். 1956 இல் நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தில் வைத்து மூன்று தொடர்ச்சியான ஆட்ட வாய்ப்புகளில் சதங்களைக் கடந்தார். 1958 இல் பாகிஸ்தான் அணிக்கெதிராக பிறிட்ஜ்ரவுண் மைதானத்தில் வைத்து 197 ஓட்டங்களைப்பெற்றார். அந்தத் தொடரோடு தனது சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 48 போட்டிகளில் 15 சதங்கள், 19 அரைச் சதங்கள் அடங்கலாக 58.61 என்கிற சராசரியுடன் மொத்தமாக 4455 ஓட்டங்களைக் குவித்திருந்தார் வீக்ஸ். இவரது சராசரியானது துடுப்பாட்ட வரலாற்றில் நீண்டகாலம் விளையாடிய வீரர்களின் வரிசையில் 7வது இடத்தைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1964 வரையிலும் தொடர்ந்து முதற்தரப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அவரது முழங்காலில் ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான உபாதை காரணமாகச் சர்வதேசப் போட்டிகளிலிருந்து வீக்ஸ் விலகியது துடுப்பாட்ட உலகுக்குப் பேரிழப்பே.

சர்வதேசப் போட்டிகளிலிருந்தான ஓய்வுக்குப் பின்னர் சில கண்காட்சிப் போட்டிகளில் வீக்ஸ் விளையாடிவந்தார். மேலும் 1979 ம் வருட உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டித்தொடரிற் பங்கேற்ற கனேடியத்துடுப்பாட்ட அணிக்குப் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார். பார்படோஸ் துடுப்பாட்டச் சங்கத்திலும் சிறிதுகாலம் கடமையாற்றினார். இவரை முன்னுதாரணமாகக் கொண்டவர்கள் பலர் பின்னர் பார்படோஸ் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட அணிகளின் வீரர்களாகவும், நிர்வாகிகளாகவும் பிற்காலத்தில் பிரகாசித்தார்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் கொன்ராட் ஹன்ரே என்கிற பார்படோஸ் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். மேலும், வீக்ஸ்சின் மகனான டேவிட் மரேயும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 1978-1982 காலப்பகுதியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1994ம் ஆண்டு சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளில் போட்டி நடுவராகவும் கடமையாற்றினார்.

தான் விளையாடிய காலகட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகவும், விளையாடிய காலகட்டத்தின் பின் நிற வெறியர்களுக்கெதிரான செயற்பாட்டாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும், நல்லெண்ணத் தூதுவராகவும் செயற்பட்ட, செயற்பட்டுக்கொண்டிருக்கும் எவெர்ட்டன் வீக்ஸ், 1995 ம் ஆண்டில் “சேர்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

தொடரும்

http://deepam.news/2016/10/17/மேற்கிந்தியத்தீவுகள்-க-4/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 6

 
Untitled-1.jpg

ஃப்ராங் வொரெல் (Sir Frank Worrell)

1948 இல் இங்கிலாந்துக்கெதிரான தொடரில் அறிமுகமாகிய மூன்று “கீ”க்களில் மூன்றாமவரும், சமமானவர்களின் முதன்மையானவரும் என்றால் சேர். ஃப்ராங் வொரெல் அவர்களைக் குறிப்பிடலாம். அறிமுகமான முதற் போட்டியின் முதல் ஆட்டவாய்ப்பிலேயே 97 ஓட்டங்களைக் குவித்துத் தன்னை நிரூபணம் செய்துகொண்ட வொரெல், மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு ஆளுமையென்றால் மிகையாகாது.

ஃப்ராங் வொரெல், வோல்கொட் மற்றும் வீக்ஸ் போலவே பார்படோசில் பிறந்தவர். சிறுவயது முதலே துடுப்பாட்டப்போட்டிகளில் ஈடுபாடு காட்டிவந்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பிக்கும் முன்னரே, உள்ளூர் முதற்தரப் போட்டிகளில் இரண்டுமுறை 500 ஓட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டங்களைப் பெற்றுக்கொண்ட முதலாமவர் என்கிற சாதனைக்கு உரித்துடையவர். (1943ரூ-44 இல் ஜோன் கொடார்ட்டுடன் சேர்ந்து 502 ஓட்டங்கள், 1945-ரூ46 இல் வோல்கொட்டுடன் சேர்ந்து 574 ஓட்டங்கள்). 1948 இல் இங்கிலாந்துக்கெதிரான முதலாவது 5- நாட் போட்டியில் அறிமுகமான முதற் பாட்டியில் 97 ஓட்டங்களைப் பெற்று சதத்தினைத் தவறவிட்டாலும், அதற்கடுத்த போட்டியில் 131 ஓட்டங்களை ஆட்டமிழக்காமற் பெற்றார். 1950 இல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக நொற்றிங்காம் மைதானத்தில் 261 ஓட்டங்களையும், லண்டன் ஓவல் மைதானத்தில் 138 ஓட்டங்களையும் பெற்றார். 539 ஓட்டங்களை இந்தத் தொடரில் குவித்து, மேற்கிந்தியத்தீவுகள் 3-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிகொள்ள வழிசமைத்தார்.

தொடர்ச்சியாக எல்லா அணிகளுக்கும் எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார் வொரெல். கிங்க்ஸ்ரனில் இந்தியாவுக்கெதிராய் 237 (1953), இங்கிலாந்துக்கெதிராய் போர்ட்-ஒஃப்-ஸ்பெயினில் 167 (1954), நொட்டிங்காமில் ஆட்டமிழக்காமல் 191 (1957), ப்றிட்ஜ்ரவுணில் ஆட்டமிழக்காமல் 197 (1960) ஆகிய சதங்களைக் குறிப்பிடலாம். துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், ஒரு பகுதிநேரப் பந்து வீச்சாளராகவும் செயற்பட்ட வொரெல், இங்கிலாந்துக்கெதிராக 1957 ஆம் வருடம் ஒரு முறை ஏழு இலக்குகளைச் சாய்த்துமிருக்கிறார். இவ்வாறாக சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராகாவும், பகுதிநேரப் பந்துவீச்சாளராகவும் இருந்த வொரெல் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வராலாற்றில் முக்கியமானவராகக் கருதப்படுவது இன்னொரு காரணத்துக்காக.

ஃப்ராங் வொரெல்தான் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முதலாவது கறுப்பினத் தலைவர். 1960-61 இல் அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட வொரெல், அவுஸ்திரேலியாவின் தலைவர் ரிச்சி பெனோவுடன் சேர்ந்து அந்தத் தொடரை இரசிகர்களின் மனம்நிறைந்த தொடராக ஆக்கினார். இரு தலைவர்களும் வெற்றியை நோக்கி, ஆனால் விதிகளுக்குட்பட ஆடுவதற்குத் தமது வீரர்களைப் பணித்தார்கள். இந்தத் தொடரிற்றான் 5-நாட் போட்டிகளின் வரலாற்றின் சமநிலையில் (ஜிவீமீ)  முடிந்தமுதற்போட்டி இடம்பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் 2-1 என்ற வகையில் தொடரைத் தோற்றிருந்தாலும், அவுஸ்திரேலிய மக்கள் வீதியோரங்களில் திரண்டு நின்று அவர்களை வழியனுப்பியது, அவர்களின் விளையாட்டின் கனவான் தன்மையையும், கவர்ச்சியையும் பறைசாற்றிய நிகழ்வாகும்.

வொரெல் ஒரு கனவான் துடுப்பாட்டவீரர் மட்டுமல்ல, அரசியல்ரீதியான பிரக்ஞையும், விதிகளைப் பேணுகிற தன்மையும், கட்டுக்கோப்பான அணித்தலமைத்துவப் பண்பும், மனிதாபிமானமும் மிக்கவர். அவர் அணித்தலைவராகமுன்னர் ஜமேய்க்கர்களாகவும், பார்படியர்களாகவும், ட்ரினிடாடியர்களாகவும் பிரிந்துகிடந்த அணிவீரர்கள், அவரின் கீழ் “மேற்கிந்தியத்தீவுகள்” அணியாகினர். நடுவரின் தீர்ப்பைஏற்றுக்கொள்ளல், ஆட்டமிழந்துவிட்டோமென்று தெரிந்தால் தாமாக வெளியேறுதல், சகவீரர்களையும், எதிராளிகளையும் மதித்தல் ஆகிய நற்பண்புகளைத் தனது அணி வீரர்களிடம் நிலைபெறச் செய்தார். பிரபலமான வீரரான காரி சோபர்ஸ் ஒரு போட்டியில் நடுவரின் தீர்ப்பை மதிக்காமையைச் சுட்டிக்காட்டி அவரைத் திருத்தினார். சார்ளி க்ரிஃபித்தின் எகிறுபந்தால் தலையில் காயமடைந்த இந்திய அணித்தலைவர் நாரி கொண்ட்ராக்ரருக்குக் கொடுக்கப்பட்ட முதற்துளி இரத்தம் வொரெலுடையது.

வெளிப்படையாக அரசியல் பேசிய வொரெல் அதன்காரணமாகச் சில பகைகளைச் சேர்த்துக்கொண்டாலும், எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டார். 1963 இல் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வைத்து 3-1 என்ற கணக்கில் தோற்கடித்த பின்னர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். 51 போட்டிகளில், 9 சதங்களடங்கலாக 49.48 என்கிற சராசரியோடு 3860 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வொரெல், 69 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார். 1967ரூம் வருடம்,இரத்தப் புற்றுநோய் காரணமாக உயிர்நீத்த வொரெல் அவர்கள் 1964ரூல் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். இன்றும் அவுஸ்திரேலியா-மேற்கிந்தியத்தீவுகள் 5-நாட் போட்டித்தொடர்கள் சேர்.ஃப்ராங் வொரெல் ஞாபகார்த்தக் கோப்பை என்றே அழைக்கப்படுகின்றன. அவரது சடுதியான மரணம் துடுப்பாட்ட உலகுக்கு மட்டுமல்ல, கரீபியன் தீவுகளுக்கே ஒரு பேரிழப்பாக அமைந்தது.

   தொடரும்…

http://deepam.news/2016/10/31/மேற்கிந்தியத்தீவுகள்-க-5/

  • 3 months later...
  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 7

 
kalipso-696x547.jpg

1948 ம் வருடம் மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை 2-0 என்கிறகணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்கடித்தது. அந்தத் தொடரில் அறிமுகமாகிச்சிறப்பாக விளையாடி, அதன் பின்னரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடியதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற “மூன்று கீ க்கள்” பற்றிய சுருக்கமான அறிமுகங்களைத் தொடர்ந்து, மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் துடுப்பாட்ட வரலாற்றுக்குள் மீளவும் புகுவோம்.

1948 இல் சொந்த மண்ணிற்பெற்றுக்கொண்ட வெற்றியைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் வொரெல் சில தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆனால், வீக்ஸ்சும் வோல்கொட்டும் விளையாடினார்கள். இங்கிலாந்துக்கெதிரான கடைசிப்போட்டியில் 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வித்திட்ட வீக்ஸ், இந்தியாவில் பெற்றுக்கொண்ட பெறுதிகள் வருமாறு: டெல்லி-128, மும்பாய்-194, கொல்கத்தா 162 ரூ 101, சென்னை-90, மும்பை 56 ரூ 48. மொத்தம் 779 ஓட்டங்கள். ஐந்து ஆட்டவாய்ப்புகளில் (எதிர் இங்கிலாந்து-1, எதிர் இந்தியா-4) தொடர்ந்து சதங்கள். 6 வது சதத்தை மயிரிழையில் தப்பவிட்டார். வோல்கொட் மற்றும் ரூசி மோதி, விஜய் ஹாசாரே போன்ற இந்திய வீரர்களும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றிச் சமநிலையில் முடிந்துபோயின. நான்காவதாகச் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஒரு ஆட்டவாய்ப்பு மற்றும் 193 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மும்பையில் நடந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டு இலக்குகள் கையிருப்பில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நேரமின்மை காரணமாகப் போட்டி சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக 1-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர்அப்போட்டித்தொடரைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

1950 ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரிற்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்து இரட்டைகளான அல்ஃப் வலன்ரைன் (Alf Valentine) மற்றும் சொன்னி ராமதீன் (Sonny Ramadhin) ஆகியோர் அறிமுகமானார்கள். முதற்போட்டியை இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிகொண்டபோதும், வோல்கொட், வீக்ஸ் மற்றும் வொரெல் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தினாலும், வலன்ரைன் மற்றும் ராமதீனின் சுழற்பந்து வீச்சாலும் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வலது கை உட்-சுழற் பந்துவீச்சாளரான ராமதீன் 26 இலக்குகளையும், இடது கைச் சுழற்பந்துவீச்சாளரான வலன்ரைன் 33 இலக்குகளையும் சரித்திருந்தார்கள். இத்தொடரில் வேறு எந்தப் பந்துவீச்சாளரும் 15 இலக்குகளைக்கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் வீழ்ந்த 80 இங்கிலாந்து இலக்குகளில் 59 ஐ இந்த இணை சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் பெற்ற பெருவெற்றியின் உத்வேகத்தோடு அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வலன்ரைன் இந்தத் தொடரிலும் 24 இலக்குகளை வீழ்த்தினார். ராமதீனால் 14 இலக்குகளையே பெற முடிந்தது. அவுஸ்திரேலியாவில் ஜோன்ஸ்டன் (23 இலக்குகள்), லிண்ட்வோல் (21), மில்லர் (20) ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிப்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள். வொரெல், ஸ்ரோலிமர், கோமேஸ் ஆகியோர் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதும், பல முக்கியமான தருணங்களில் சிறப்பாகச் செயற்பட முடியாமல் மொத்த அணியுமே தடுமாறியது.

வொரெலின் சிறப்பான பந்துவீச்சுக்காரணமாக அடிலேய்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியை  ஆறு இலக்குகளால் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி, ப்ரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியை மூன்று இலக்குகளாலும், மெல்பேர்னில் நடைபெற்ற நான்காவது போட்டியை ஒரு இலக்காலும் போராடித் தோற்றது. சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளை 7 இலக்குகள் மற்றும் 202 ஓட்டங்களால் இலகுவாக வென்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 4-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது.

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டா மேற்கிந்தியத்தீவுகள் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் இலகுவாக வெற்றி கொண்டது. வீழ்த்தப்பட்ட 31 நியூசிலாந்து இலக்குகளில் 20 ஐ ராமதீனும் (12), வலன்ரைனும் (8) பகிர்ந்துகொண்டனர். வொரெல், வோல்கொட் மற்றும் ஸ்ரோலிமர் ஆகியோர் வெற்றிதோல்வியின்றி முடிந்த இரண்டாவது போட்டியில் சதங்களைப் பெற்றிருந்தார்கள்.

http://deepam.news/2016/11/18/மேற்கிந்தியத்தீவுகள்-க-6/

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 8

 
kalipso-8-696x391.jpg

1953 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் ப்றிட்ஜ்ரவுணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில்142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றவெற்றியின்மூலம் தொடரைத் தன்வயமாக்கிக்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வீரர்கள். வீக்ஸ் 760 ஓட்டங்களை 3 சதங்கள் 2 அரைச் சதங்களுட்படப் பெற்றுகொண்டார். ஐந்தாவது போட்டியில் வீக்ஸ், வோல்கொட், வொரெல் மூவருமே சதமடித்தார்கள். வலன்ரைன் 28 இலக்குகளை இந்தப் போட்டித்தொடரிற் கைப்பற்றியபோதும், இந்தியவீரர்களும் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இப்போட்டித்தொடரின் மிகுதி நான்கு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.1954 ஆம் ஆண்டு இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகளிற் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மிக விறுவிறுப்பான இந்தத் தொடரின் முதலிருபோட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி முறையே 140 மற்றும் 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றிகளைத் தனதாக்கிக்கொண்டபோதும், மூன்றாவது போட்டியிலும் ஐந்தாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்திற் பெற்றுக்கொண்ட வெற்றிகளின் காரணமாகவும், வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நான்காவது போட்டியினாலும், தொடரானது 2-2 என்கிற வகையில் சமநிலையில் முடிந்தது. நான்காவது போட்டியில் வீக்ஸ், வொரெல், வோல்கொட் மூவரும் சதமடித்தார்கள். வோல்கொட் இந்தப் போட்டித்தொடரில் மூன்று சதங்கள், மூன்று அரைச் சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார். பதிலுக்கு இங்கிலாந்தின் அணித்தலைவரான லென் ஹட்டன் 677 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ராமதீன் 23 இலக்குகளைச் சாய்த்தார். வீக்ஸ் (487 ஓட்டங்கள்) வொரெல் (334) ஆகியோரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிசார்பில் சிறப்பாக விளையாடியிருந்தார்கள்.

1955 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலிய அணியைத் தம்மண்ணுக்கு வரவேற்றார்கள். கீத் மில்லர், றே லிண்ட்வோல், நீல் ஹார்வி, றிச்சி பேனோ, இயன் ஜோன்சன், ஆதர் மொறிஸ் போன்ற சிறந்த ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை மேற்கிந்தியத்தீவுகளால் சமாளிக்க முடியாமற்போனது. இத்தனைக்கும் வோல்கொட் வெறிகொண்டவர் போல அற்புதமாக மட்டையெடுத்தாடினார். ஐந்து சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். போர்ட்-ஒஃப்-ஸ்பெயினிலும், கிங்ஸ்ரனிலும் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். வீக்ஸ்சும் தம் பங்குக்கு 469 ஓட்டங்களைப் பெற்றார், ஒரு சதம் மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கலாக. இருந்தபோதும் நீல் ஹார்வி (650 ஓட்டங்கள், 3 சதங்கள்), கீத் மில்லர் (439 ஓட்டங்கள், 3 சதங்கள், 20 இலக்குகள்), றேலிண்ட்வோல் (187 ஓட்டங்கள், 1 சதம், 20 இலக்குகள்), றிச்சி பேனோ (246 ஓட்டங்கள், 1 சதம், 18 இலக்குகள்), கொலின் மக்டொனால்ட் (449 ஓட்டங்கள், 2 சதங்கள்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்திறணுக்கு முன்னால் ஈடுகொடுக்கமுடியாமல் 3-0 என்கிற கணக்கில் தொடரை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

இதன்பிறகு நியூசிலாந்தில் நடந்த தொடரை 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வீக்ஸ் (418 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்திலும் ராமதீன் (20 இலக்குகள்), வலன்ரைன் (15 இலக்குகள்) பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். இந்தத்தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பெற்றுக்கொண்ட வெற்றி அவர்களது துடுப்பாட்ட வரலாற்றின் முதல் வெற்றியென்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் 1957 ஆம் வருடத்திலிடம்பெற்ற இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மோசமான அனுபவமாகவே அமைந்தது. அணிவீரர்கள் யாருமே சரியாகச் செயற்படாமற்போக 3-0 என்கிற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இழந்தார்கள். 5-0 என்கிற மோசமான கணக்கிலிருந்து நேரப்பற்றாக்குறை காரணமாகவே மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் மயிரிழையிற் தப்பித்தார்கள். நாடு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர், 1958 இல் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டார்கள். அந்தப் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டார்கள். இந்தத் தொடர் துடுப்பாட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். பல சாதனைகள் இத்தொடரில் நிலைநாட்டப்பட்டன. இத்தொடரைப் பற்றி விரிவாகப் பார்க்கமுன்னர், இத்தொடருக்கு முன்னர் வரை “திறமைசாலி” என்று அடையாளங்காணப்பட்டாலும் தமது திறமையை அதுவரையும் நிரூபிக்காத ஒரு இளம்வீரர் மேற்கிந்தியத்தீவுகளின் புதிய நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

சேர். காரி சோபெர்ஸ் (Sir. Gary Sobers) காரி சோபெர்ஸ் ப்ரிட்ஜ்ரவுண், பார்படோசில் 1936 ஆடி மாதம் 28ம் திகதி பிறந்தார். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த சோபெர்சுக்கு அவரது இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் இருந்தன. அவ்விரு மேலதிக விரல்களையும் தனது குழந்தைப் பருவத்தில் தானாகவே அகற்றிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் இதற்கு முந்தைய அத்தியாயங்களிற் பார்த்த மற்றைய மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டச் சாதனையாளர்கள் போலவே, காரியும் தமது சிறுவயதிலிருந்தே துடுப்பாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளிற் சிறந்தவராக இருந்தார். பாடசாலை அணி, கழக அணிகள் எனப்படிப்படியாக முன்னேறி, தமது பதினாறாவது வயதில் பார்படோஸ் பிராந்திய அணிக்காக முதற்தரப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்தார். காரி சோபெர்ஸ் தமது ஆரம்பகாலத்தில் ஓரளவு துடுப்பெடுத்தாடக் கூடிய பந்துவீச்சாளராகவே அடையாளங்காணப்பட்டார். இடது கைச் சுழற்பந்து வீச்சாளராகவும், மிதவேகத்திலும் பந்து வீசக்கூடியவராகவும் சேபெர்ஸ் செயற்பட்டார். 1953 இல் அறிமுகமான முதலாவது முதற்தரப்போட்டியில் ஏழு இலக்குகளைச் சாய்த்ததோடு, ஆஊஊ அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் முறையே இரு ஆட்டவாய்ப்புகளில் 46 மற்றும் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தச் சிறப்பான இரு ஆட்டங்கள் காரணமாக அவர் மேற்கிந்தியத் தீவுகளின் 5 நாட் போட்டிகள் விளையாடுகிற அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கெதிரான முதற்போட்டியில் 4 இலக்குகளைச் சாய்த்திருந்தாலும், அந்தத் தொடரில் அவர் மிகச் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார் என்று சொல்லமுடியாது. இதே கூற்று அவரது முதல் 14போட்டிகளுக்கும் பொருந்தும் எனலாம். அதுவரைக்குமான போட்டிகளில் சோபெர்ஸ் வெறும் மூன்று அரைச்சதங்களை மட்டுமே பெற்றிருந்தார். பந்துவீச்சில் அதிசிறந்த பெறுதியாக ஒரே ஒரு முறைமட்டும் 4 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். 1957 இல் இங்கிலாந்துக்குச் சென்று விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த சோபெர்சுக்கு அதுவே இறுதித்தொடராக இருக்கும் என விமர்சகர்கள் மற்றும் நிர்வாகிகளில் ஒரு சாரார் பேசிக்கொண்டார்கள். அது ஓரளவுக்கு உண்மையாகும் வண்ணமே சேபெர்சின் துடுப்பாட்டமும் இருந்தது. இரண்டு அரைச் சதங்கள் அடங்கலாக 32 என்கிற சராசரியில் 320 ஓட்டங்களை மட்டுமே சோபெர்சால் பெற முடிந்தது. பந்து வீச்சிலும் 71 என்கிற சராசரியில் ஐந்து இலக்குகளையே அவரால் வீழ்த்த முடிந்தது. ஆனாலும், மேற்கிந்தியத்தீவுகளின் நிர்வாகிகளை சோபெர்சின் பக்கம் சாய்த்தது இந்தத் தொடரின் இறுதிப்போட்டி.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது போட்டி தொடங்கும்போது 2 போட்டிகளை வென்று, இரண்டு போட்டிகளைச் சமன்செய்திருந்த இங்கிலாந்து, தொடரை ஏற்கனவே தன்வசமாக்கியிருந்தது. முதலிற் துடுப்பெடுத்தாடி 412 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது. பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் வெறும் 89 ஓட்டங்களுக்கு முதல் ஆட்டவாய்ப்பிலும், 86 ஓட்டங்களுக்கு இரண்டாவது ஆட்டவாய்ப்பிலும் சுருண்டார்கள். ஜிம் லேக்கர் மற்றும் ரொனி லொக் ஆகிய இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களை ஓரளவுக்காவது சரியாக எதிர்கொண்டது சோபெர்ஸ்
மட்டுமே. முதல் ஆட்டவாய்ப்பில் 39 ஓட்டங்களையும், இரண்டாவது ஆட்டவாய்ப்பில் 42 ஓட்டங்களையும் பெற்ற சோபெர்ஸ், மற்றவர்களால் இயலாத ஆடுகளத்தில் தன்னாலும் ஆடமுடியும் என நிரூபித்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நிர்வாகிகளின் நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொண்டார். அதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடவிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விடத்தில் சோபெர்சைப்பற்றிய சில வியத்தகு சம்பவங்களைப் பார்க்கலாம். மேலே பார்த்த இங்கிலாந்துக்கான தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணித் தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகளிற்தான் முதன்முதலாக சோபெர்ஸ் அணிக்குள்ளிருந்த அக முரண்பாடுகளை முரண்கொண்டார். அந்த அணியில் இடம்பெறுவதற்குச் சம வாய்ப்புகளிருந்த வெஸ்லி ஹோல் மற்றும் ஃப்ராங் மேசன் ஆகிய இரு பந்து வீச்சாளர்களில் ஹோல் தமது நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சோபெர்ஸ் மற்றும் எவேர்ட்டன் வீக்ஸ் ஆகியோர் வேண்டுமென்றே தடுத்தாடினார்கள். மேசனை அடித்தாடினார்கள். சோபெர்சின் பார்வையில் மேலான பந்து வீச்சாளரான மேசனுக்குப் பதிலாக ஹோல் அணியிற் சேர்த்துக்கொள்ளப்பாட்டார். இந்த அக முரண்கள்தான் மேற்கிந்தியத் தீவுகளின் வரமும் சாபமும். அவர்களின் பல அற்புதமான வெற்றிகளுக்கும், மோசமான தோல்விகளுக்கும் பின்னாலிருந்த ஒரு பெருங்காரணமும் இந்த அக முரண்பாடுகள்தான்.

-தொடரும்

http://deepam.news/2017/02/06/மேற்கிந்தியத்தீவுகள்-க-7/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.