Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் முகவரி குத்தம்பாக்கம்...

Featured Replies

இந்தியாவின் முகவரி குத்தம்பாக்கம்... மக்கள் அதிகாரம் மலர்ந்தது எப்படி?

குத்தம்பாக்கம் கிராமத்தை பார்வையிடும் வெளிநாட்டினருடன் இளங்கோ.

 

குத்தம்பாக்கம் கிராமத்தை பார்வையிடும் வெளிநாட்டினருடன் இளங்கோ.
 
 

கடந்த 2014-ம் ஆண்டு அது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றார் மோடி. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நேரம் இந்திய கிராமங்களில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? வழக் கம்போன்ற கவர்ச்சிகரமான, உணர்ச்சி மயமான மோடியிஸ அறிவிப்பு அது.

அடிப்படையில் கிராமங் களைத் தத்து எடுப்பது என்கிற சித்தாந்தமே தவறானது; கோளாறானது; இளக்காரம் மிகுந்தது; நயவஞ்சகம் கலந்தது. ஆதரவற்றோர்களைதான் தத்து எடுப்பார்கள். இந்திய கிராமங்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல. நாம் உண்ணும் உணவு கிராமம் கொடுத்தது. நாம் குடிக்கும் தண்ணீர் கிராமம் கொடுத்தது. நாம் உடுத்தும் உடுப்பு கிராமம் கொடுத்தது. நாம் வசிக்கும் வீடு கிராமத்தான் கட்டிக்கொடுத்தது.

உங்கள் கருணை தேவையில்லை

எங்கள் கிராமங்கள் மீது யாரும் பரிதாபம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் கருணை எங்களுக்கு வேண்டாம். உங்கள் சலுகைகள் வேண்டாம். உங்கள் சன்மானங்கள் வேண்டாம். அன்பான வார்த்தை பேசி அதிகாரத்தை திணிக்காதீர். பலத்தைக் காட்டிக் காட்டி நிலத்தை பிடுங்காதீர். வளர்ச் சியைக் காட்டி வனத்தை அழிக்காதீர். கவர்ச்சியைக் காட்டி கனிமங்களை சுரண்டாதீர். கதையைக் கட்டி விதையைப் பிடுங்காதீர். விதையைப் பிடுங்கி விஷத்தைத் தெளிக்காதீர். அந்நியனுக்காக தண்ணீரை உறிஞ் சாதீர். ஆலைகளைக் காட்டி பாலை களை உருவாக்காதீர். மதுவை ஊற்றி தாலியை அறுக்காதீர். ஓட்டை காட்டி நோட்டை நீட்டாதீர். எங்களுக்கு உங்கள் இலவசங்கள் எதுவும் வேண்டாம். எங்களுக்கான அதிகாரத்தையும் உரிமைகளை மட்டும் கொடுங்கள். குரல் களை நசுக்காதிருங்கள். கடமையை நாங்கள் செய்கிறோம்.

எங்கள் கிராமங்கள் இயல்பாக கட்டமைக்கப்பட்டவை. இயற்கை வளங்கள் நிறைந்தவை. அவற்றின் உயரமான மலைச் சிகரங்களில் இருந்து தாய்ப்பால் என தண்ணீர் சுரப்பதைப் பாருங்கள். திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்கள் அல்ல எங்கள் கிராமங்கள்; அவை காலச் சக்கரத்தின் கரடுமுரடான பயணங்களில் தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொண்டவை.

எங்கள் கிராம மக்கள் இயல் பானவர்கள். எளிமையானவர்கள். அன் பானவர்கள். கள்ளங்கபடமற்றவர்கள். வறுமையிலும் செம்மையாக வசிப்ப வர்கள். எங்களுக்கு உருக்காலைகள் வேண்டாம். எருக்குழிகள் இருக்கின்றன. அணு உலைகள் வேண்டாம். பச்சைப் பிள்ளைகள் தவழ்கின்றன. எரிகுழாய்கள் பதிக்க வேண்டாம். மண்புழுக்கள் உறங்குகின்றன. அடுக்கு மாடிகள் வேண்டாம். அடுக்குப் பானைகளே போதும்.

அழகிய கிராமம் அது!

எழுத்துக்கு எல்லாம் சரி. நிஜத்தில் அப்படி இருக்கிறதா?

இருக்கிறது நண்பர்களே! வாருங் கள் திருவள்ளூர் மாவட்டம், குத்தம் பாக்கம் கிராமத்துக்குச் செல்வோம். எப்படி செல்ல வேண்டும் என்கிறீகளா? குத்தம்பாக்கத்துக்கு முகவரி தேவை இல்லை. இந்தியாவின் முகவரியே குத்தம்பாக்கத்தின் முகவரி. இந்தியரின் இதயமே குத்தம்பாக்கத்தின் இதயம். காரணம், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ‘குத்தம்பாக்கம்’ இளங்கோ. இவர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். படிப்பின் வாசனை அறியாத ஊரின் முதல் பட்டதாரி.

வேதியியல் பொறியியலில் உயர்க் கல்வி பட்டம் பெற்றார். காரைக்குடியில் மத்திய அரசுப் பணி கிடைத்தது. சேர்ந்த போதே ஓரளவு நல்ல பதவி அது. இருந்திருந்தால் இந்நேரம் இயக்குநர் அல்லது செயலர் ஆகியிருக்கலாம். ஆனால், அதைவிட இன்னும் உயரமான இடத்துக்கு ஆசைப்பட்டார் இளங்கோ. அது தனது கிராம மக்களின் இதயம். வேலையை உதறியவர், ஊருக்கே வந்துச் சேர்ந்தார்.

இந்தத் தொடரைத் தொடங்கியபோது நண்பர் நந்தகுமாருடன் நான் சந்தித்த முதல் நபர் ‘குத்தம்பாக்கம்’ இளங்கோ. இதேபோன்ற ஒரு மழை நாளின் பாதியை எங்களுக்கு பகிர்ந்தளித்தார் அவர். அன்றைக்கு அவரிடம் அன்புடன் திருடிக் கொண்ட வார்த்தைகளை அத்தி யாயத்தின் வழியெங்கும் சிதறவிட்டி ருக்கிறேன். நாம் சென்றபோது பச்சைப் பசேல் வயலில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஆண்டு முழுவதும் ஏதேனும் ஒரு படப்பிடிப்பு நடக்கும் அழகிய கிராமம் அது!

ஆனால், ஒருகாலத்தில் குத்தம் பாக்கம் எப்படி இருந்தது தெரியுமா? ஊரெங்கும் சாக்கடை. சாக்கடை நாற்றத்துக்குப் போட்டியாக சாராய நாற்றம். திரும்பிய பக்கமெல்லாம் குடிசைகள். பட்டியல் இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அனைவரும் விவசாயக் கூலிகள். நில உடமை சமூகத்தால் சுரண்டப்பட்டார்கள் அவர்கள். அன்றாடம் கஞ்சிக்கே அல்லாடினார்கள். தட்டிக் கேட்டனர். பொருளாதாரப் பிரச்சினை சமூகப் பிரச்சினையாக்கப்பட்டது. சாதிகளின் உரசலில் குடிசைகள் எரிந்தன. வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. கொலை, கொள்ளைகள் அதிகரித்தன. சமூகப் பிரச்சினை சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஆனது. ரத்த பூமியானது குத்தம்பாக்கம்.

தானாக வந்தது சமூக சமத்துவம்!

அப்போதுதான் இங்கே வந்துச் சேர்ந்தார் இளங்கோ. பிறந்த மண்ணின் நிலை கண்டு மனம் வருந்தினார். என்ன ஆனாலும் சரி தனது கிராமத்தை மாற் றாமல் விடக் கூடாது என்கிற வைராக்கி யம் அவருக்குள் பிறந்தது. முழு நேர சமூகச் சேவகராக மாறினார். கணவர் மனமறிந்து குடும்பத்தை சுமக்க பணிக்குச் சென்றார் மனைவி. பணி நிமித்தம் மனைவி, குழந்தைகள் சென் னைக்கு இடம் பெயர்ந்தனர். மக்களுடன் தங்கிக்கொண்டார் இளங்கோ. முதல் வேலையாக கள்ளச் சாராயத்தை ஒழிக்க நினைத்தார்.

மக்களின் மனதோடு பேசினார். சாத்தியமானது. அடுத்த வேலையாக சமூக சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும். பேச்சாற்றல் மிகுந்தவர் இளங்கோ. பேச்சில் சொக்கி வைத்துவிடுவார். வெறும் இனிப்பு தடவியப் பேச்சல்ல அது. எவரிடத்தும் பேச அவரிடத்தில் விஷயங்கள் இருந் தன. தினமும் தெருத் தெருவாகச் சென்றுப் பேசினார். வீடு வீடாகப் போய் பேசினார். ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார். கூட்டம் சேர்த்துப் பேசினார். குடும்பத்துடன் சென்று பேசினார். குழந்தைகளிடத்தும் பேசினார். ஒவ்வொருவரின் பிரச்சினை களையும் கேட்டறிந்தார்.

ul1_3097802a.jpg

சொன்னால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அத்தனை பேரின் விவரங் களையும் பதிவேட்டில் ஏற்றினார். ஒவ்வொரு நபருக்கு ஒரு முழு நீளப் பக்கம். அதில் அவருடைய சமயம், சாதி, வருமானம், சொத்துகள் விவரம், கணவன்/மனைவி/குழந்தைகள்/உடன்பிறந்தோர் விவரம், உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம், குணாதிசயம், குற்ற வழக்குகள் என ஒன்றுவிடாமல் இடம்பெற்றன. திட்டம் போட்டு வேலை பார்த்தார். இன்றைக்கு இந்தத் தெரு, இந்தக் குடும்பம், இந்த நபர், இந்தப் பிரச்சினை, இந்த வேலை என்று சின்னச் சின்னதாகப் புள்ளி வைத்து காரியங்களை அணுகினார். புள்ளிகள் வட்டங்களாகின. வட்டங்கள் பெரியதாகின. ஒருகட்டத்தில் குத்தம் பாக்கத்தைச் சுற்றி வளைத்தது அந்த வட்டம். பாதுகாப்பு வட்டம் அது. குற்றங்கள், சமூக மோதல்கள் படிப் படியாகக் குறைந்து ஒருகட்டத்தில் இல்லாமலே போனது. இன்றும், அவருடைய கணினியில் மேற்கண்ட விவரங்கள் இருப்பதைப் பார்க்கலாம்!

முதல் தேர்தல்... முற்றிலும் மாறுதல்!

சரியாக வந்துச் சேர்ந்தது தமிழ கத்தின் முதல் பஞ்சாயத்துத் தேர்தல். 1996-ல் பஞ்சாயத்து தேர்தலில், சுயேச்சையாக வென்றார். நாடெங்கும் உள்ள முன்னுதாரண கிராமங்களைத் தேடிச் சென்றார். ஒவ்வொரு திட்டமாக தனது கிராமத்துக்குக் கொண்டு வந்தார். மத்திய, மாநில அரசுகளின் அத்தனை திட்டங்களையும் தேடித் தேடி கொண்டுவந்துச் சேர்த்தார். சுயமாக திட்டங்களை உருவாக்கினார். கிராமத் தொழில் பரிசோதனை கூடத்தை அமைத்தார். மக்களை ஒருங்கிணைத்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். சிறுதொழில்களைப் பெருக் கினார்.

தமிழகத்தின் முதல் புகை யில்லாத அடுப்பு உருவானது. சாண எரிவாயு தயாரிக்கப்பட்டது. சிமெண்ட் கதவுகள், ஜன்னல்கள், ஓடுகள், சிறு பாலங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. சணல் கயிற்றில் ஊஞ்சல் உற்பத்தி செய்தார்கள். சோப்பு, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தார்கள். சிறு அரிசி, மாவு மில்களை உரு வாக்கினார்கள். சூரியசக்தி மின் விளக்குகள் தயாரித்தார்கள். மிகக் குறைந்த மின் சக்தியில் இயங்கும் வகையில் ‘டிசி'-யில் ஓடும் மலிவு விலை மின்விசிறி, விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு லட்சம் ரூபாய் செலவில் 1.5 ஹெச்.பி. மோட்டார் சூரிய சக்தியில் இயங்கியது. அடுப்பு ‘பர்னர்’ சிறு தொழிற்சாலைத் தொடங்கப்பட்டது. முதலுதவி உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிலகம் தொடங்கப்பட்டது.

உடனடி ஆயத்த கழிப்பறை!

ஒரு மணி நேரத்தில் கட்டும் வகையில் ‘உடனடி ஆயத்த கழிப்பறை கள்’ உருவாக்கப்பட்டன. அவை நாடெங்கிலும் பரவின. அத்தனை பேரும் வேலைவாய்ப்பு பெற்றார்கள். ஒருகட்டத்தில் குத்தம்பாக்கம் கிராமத் தின் குடும்ப வருவாய் ரூ.40 ஆயிரமாக உயர்ந்தது. விவசாயத்தில் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, விவசாயக் கூலி வேலைகள் செய்வோர் விளைநிலம் வாங்க ஊக்கு விக்கப்பட்டனர். விவசாய நிலம் வைத்தி ருப்போரின் எண்ணிக்கை பெருகியது. சிறுவிவசாயிகள் அதிகரித்தார்கள். நில உடைமை அருகியது.

ul11_3097803a.jpg

‘சமத்துவபுரம்’ பிறந்த கதை!

உள்ளாட்சி தத்துவத்தின் இரு நோக்கங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தாயிற்று. அடுத்த தேவை சமூக நீதி, சமூக சமத்துவம். அதற்காக அவர் உருவாக்க நினைத்தது தான் சமத்துவபுரம். கிராமத்தில் இருக்கும் வீடு இல்லாத அனைத்து சாதி களைச் சேர்ந்த ஏழைகளும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வசிக்க வேண்டும் என்று விரும்பினார் இளங்கோ. அதன்படி மக்களை ஒருங்கி ணைத்தார்.

ஒரே குடியிருப்பில் தலா ஒரு ஜோடி மாற்று சாதியினர் வசிக்கும் வகையிலான இரட்டை வீடுகள், பொதுவான சமுதாயக்கூடம், குடிநீர் தொட்டி, அங்கன்வாடி, விளை யாட்டு திடல் ஆகியவை திட்டமிடப் பட்டன. திட்ட வரைவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி திட்டத் தைப் பார்த்து வியந்தார். இதனை அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக் கினார். தமிழகம் முழுவதும் ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’ பிறந்த கதை இதுதான்.

அனைத்துக்கும் அரசின் உதவிகளை எதிர்பார்க்கவில்லை குத்தம்பாக்கம். மக்கள் நிதிப் பங்களிப்புடன் குத்தம் பாக்கத்தில் சாலைகள் போடப்பட்டன. இதனைக் கண்ட அரசு, மாநிலம் முழுவதும் ‘நமக்கு நாமே’ திட்டத்தை அறிவித்தது. பஞ்சாயத்துப் பணிகளுக்கு உதவியாக இருக்கிற கிராம தன்னாட்சி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது.

மகளிர் சுய உதவி குழுக்களை உரு வாக்குதல், பெண்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளித்தல் கிராம வளர்ச்சிக்கு உதவ முன்வரும் அமைப்புகளுடன் இணைந்து பணி யாற்றுதல் போன்ற பயிற்சிகள் அளிக் கப்பட்டன. குத்தம்பாக்கம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்து பயிற்சி பெற்றார்கள்.

உலகம் முழுவதிலும் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் குத்தம்பாக் கத்துக்கு வந்து குவிந்தனர். அன்றைய மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மா, இன்றைய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள். அதிகாரிகள் வந்து பார்த்து வியந்தார்கள். ஐ.நா-வின் ‘வசிப்பிட விருது’ பட்டியலில் எட்டாம் இடத்தை பெற்றிருக்கிறது குத்தம்பாக்கம்!

முதல் ஆராய்ச்சி இருக்கை

குத்தம்பாக்கம் கிராம தன்னாட்சி அறக்கட்டளைக்கு ஒருவகையில் உந்துதலாக இருந்தது ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கை. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்காக உருவாக்கப்பட்ட முதல் ஆராய்ச்சி இருக்கையும் இதுவே. கிராமப் பஞ்சாயத்து திட்டங்கள் மற்றும் கிராம சிறு தொழில்கள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பழனிதுரை, ரகுபதி ஆகியோர் முயற்சியால் தொடங்கப்பட்டது இந்த இருக்கை.

தமிழகத்தில் சட்டப் பாதுகாப்புடன் கூடிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகள் உருவான காலகட்டமான 1996 தொடங்கி 2001 வரை 74 கிராமப் பஞ்சாயத்துகளில் கிராம வளர்ச்சிக்கான திட்டமிடுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுனாமியின்போது பாதிக்கப்பட்ட 17 கிராமப் பஞ்சாயத்துகளில் பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிகளை செய்ததுடன், சுமார் ஓர் ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தங்கி, பேரிடர் மேலாண்மை பயிற்சியை மக்களுக்கு அளித்தது இந்த அமைப்பு. தற்போது நாட்டில் 11 இடங்களில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைகள் இருந்தாலும் சொந்த நிதியில் செயல்படுவது இது மட்டுமே!

ul111_3097804a.jpg

உங்களிடமிருந்தே தொடங்குங்கள்..

கடந்த 55 அத்தியாயங்களில் கிராமப் பஞ்சாயத்து தொடர்பான அத்தனை கோணங்களையும் அலசினோம். களத்துக்கே சென்று கிராமங்களைக் கண்முன் நிறுத்தினோம். ஆனாலும், இத்தனை நாட்களாக நாம் ‘அரசியல் சாசனச் சட்டத் திருத்தம்-73’ வலியுறுத்தும் ஊரக உள்ளாட்சிகளை மட்டுமே பார்த்தோம். 74-வது சட்ட திருத்தம் வலியுறுத்தும் பஞ்சாயத்து ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய மூன்று நகர்ப்புற உள்ளாட்சிகளை நாம் தொட வில்லை. அதற்குள் நாம் சென்றால் அவை இதேபோன்ற அத்தியாயங்களாக விரியும். அதேசமயம் நகர்ப்புற உள்ளாட்சி களுக்காக 74-வது சட்டத் திருத்தம் சொல்லும் வகையிலான சட்டம் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவும் இல்லை. அதனை இயற்றும் கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது. ‘நீங்கள் விரும்பும் மாற்றத்தை உங்களிடம் இருந்தே தொடங்குங்கள்’ என்பார் காந்தி. நாம் ஒவ்வொருவருமே அதற்காக குரலை முன்னெடுப்போம். விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று நம்புவோம்.

தமிழகத்தில் இன்னும் முன்னுதாரண கிராமங்கள் பல சிறப்பாகச் செயல்பட்டிருக் கின்றன. சேலம் ஆத்தூர் சாத்தப் பாடி கிராமத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மறைந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சின்னத்தம்பிக்கு மக்கள் சிலை வைத்துள்ளனர். புதுகை மாவட்டத்தில் ராஜேந்திரபுரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சண்முகநாதனுக்கும் மக்கள் சிலை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் சத்தியமங்கலம் அருகே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது கோணமூலை கிராமப் பஞ்சாயத்து. விழுப் புரம் அருகே பூத்துறை மற்றும் இருந்தை கிராமங்கள் சமூக நீதியை காப்பதில் சிறப்பாகச் செயல்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் சாணார்பட்டி, வட்ட முத்தம்பட்டி ஆகிய பஞ்சாயத்து கள் கல்வி அறிவை புகட்டியதில் முன்னோடிகளாக திகழ்கின்றன. அவற்றையும் பெருமை பொங்க நினைவுகொள்வோம்!

மோடியில் தொடங்கினோம் அல்லவா. மோடியிலேயே முடிப்போம். இதுநாள் வரை பஞ்சாயத்து ராஜ்ஜி யத்துக்கு என்று தனி அமைச்சகம் இருந்தது. ஆனால், மோடியின் மத்திய அரசு அதனை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைத்து, பஞ் சாயத்து ராஜ்ஜியத்தை ஒரு துறையாக மட்டும் சுருக்கிவிட்டது. பஞ்சாயத்து களை வலுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இடையூறு இது. மேலும், மைய அரசை பலப்படுத்தும் விதமாக பஞ்சாயத்து களைப் பலவீனமாக்க புதிய விதிமுறை களைப் புகுத்த மத்திய அரசு திட்டமிடுவ தாகவும் தகவல்கள் கசிகின்றன.

இறுதியாக ஒன்று, சத்தியத்தின் முன்பாக... சாமானிய மக்களின் உழைப்புக்கு முன்பாக அதிகாரத்தின் கரங்கள் ஒருபோதும் வென்றதில்லை.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/உள்ளாட்சி-55-இந்தியாவின்-முகவரி-குத்தம்பாக்கம்-மக்கள்-அதிகாரம்-மலர்ந்தது-எப்படி/article9405986.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.