Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்

%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4ஃபிடெல் காஸ்ட்ரோ, தற்போதைய அதிபர் ராவ்ல் காஸ்ட்ரோவுடன்
[பதிப்புக் குறிப்பு: கூபா என்பது ஸ்பானிஷ் உச்சரிப்பு மட்டுமல்ல, அந்நாட்டு மக்கள் அப்படித்தான் தம்மை அழைக்கிறார்கள் என்பதால் இக்கட்டுரையில் க்யூபா என்பதற்குப் பதிலாக கூபா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.]

க்யூபா. லத்தீன் அமெரிக்காவில், கரீபியன் பகுதியில் ஒரு சிறு நாடு. ஸ்பானிஷ் மொழியில் கூபா. க்யூபன் என்பதாக தங்களை அந்நாட்டவர்கள் குபானோ (Cubano) என்று அழைத்துக்கொள்வார்கள். அவர்களின் கூப-ஸ்பானிஷில் அது `குவானோ` என்று ஒலிக்கும். கூபா என்றதும் மனதில் ஃபிடெல் காஸ்ட்ரோ (Fidel Castro), சே குவாரா (Che Guevera) என்றெல்லாம் உலகின் மகாபுரட்சிக்காரர்களின் பிம்பங்கள் பாயும், குறிப்பாக T-ஷர்ட்டுகளில் சே-யின் படத்தோடு அலைவதை வீரதீரச் செயல் எனக் கருதும் இந்திய இளைஞர்களுக்கு. ஓரளவு சமகால சரித்திரம் தெரிந்தோருக்கு, பனிப்போர் (Cold war) காலத்திய, அதாவது சோவியத் யூனியனின் க்ருஷ்சாவ், அமெரிக்காவின் கென்னடி காலத்திய Cuban missile crisis நினைவில் தட்டலாம்.

தனது பரம வைரியான அமெரிக்காவைச் சீண்டுவதாக நினைத்து, அதன் எதிரியான சோவியத் யூனியனின் அணுஆயுத ஏவுகணைகளுக்கு கூபா இடம் கொடுக்கப்போய், கிட்டத்தட்ட இரு வல்லரசுகளுக்கிடையே அணுஆயுத யுத்தம் நிகழக்கூடிய அபாயம் ஏற்பட்டது 1962-ல். இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? அதுபுரியாமல், வல்லரசுகளுக்கிடையே வந்து எக்கச்சக்கமாக எதையாவது செய்து வம்பில் மாட்டிக்கொள்வது, சர்ச்சைக்குள்ளாவது,  என்பது கூபாவின் ஜாதக விசேஷம். காஸ்ட்ரோ அரசின்  ஆரம்ப காலம் அப்படித்தான் சென்றது.  `Revolucion` என்று புரட்சியாளர்களால், விசேஷமாக லத்தீன் அமெரிக்கர்களால் அழைக்கப்பட்ட `க்யூபப் புரட்சி`க்கு வித்திட்டவர்களில் ப்ரதானமானவரும்,  `புரட்சி`க்குப்பின் கூபாவுக்கு வெகுகாலம் தலைமை தாங்கியவருமான  ஃபிடெல் காஸ்ட்ரோவின் பதவிக்காலக் கடைசி வருடங்களில் கூபாவுக்குள் நான் நுழைந்தேன்.

இந்தியாவிலிருந்து இரண்டு நாள் நீண்ட, களைப்பான விமானப் பயணம். டெல்லி-நியூயார்க்-மெக்சிகோ-ஹவானா. நியூயார்க், மெக்சிகோ சிட்டியில் ஒவ்வொரு இரவு தங்கி மூன்றாவது நாள் ஹவானாவுக்குள் நுழைவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கூபா, அமெரிக்கா நாடுகளிடையே பனிப்போர் காலத்திலிருந்தே ராஜீய உறவுகள்(diplomatic relations) தடை செய்யப்பட்டிருந்தன. மட்டுமல்லாமல், இரண்டு நாடுகளுக்கிடையே விமானப்போக்குவரத்தும் இல்லை. அப்படி ஒரு சண்டை! அதாவது வாய்ச்சண்டை போட்டே எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டது காஸ்ட்ரோவின் கூபா. சோஷலிசம், புரட்சி என்கிற பெயரில், வறட்டுக் கௌரவம்தான் முக்கியம் என்றானது. அமெரிக்காவும் இதுதான் சாக்கென்று, அடாவடித்தனமாக வர்த்தகத்தடை, சுற்றுலாத்தடை என ஏகப்பட்ட தடைகளை அந்நாட்டின்மீது விதித்து அவமதித்தது. இத்தகைய சூழலில் கூபா போவதென்றாலே யாருக்கும் ஒரு பெரிய ப்ரயத்தனம்தான். நியூயார்க் வந்து ஒரு இரவு தங்கியிருந்த நானும், என் குடும்பமும் இறுதியாக ஹவானா செல்லுமுன், மெக்சிகோவுக்குப் பயணமாக அடுத்த நாள் நியூயார்க் ஏர்ப்போர்ட் வந்தோம். நான் மேற்கொண்டு எங்கு பயணிக்கிறேன் என்று விஜாரித்தார்கள். கூபா என்றதும் அமெரிக்க இமிக்ரேஷன் சீரியஸானது. அந்த அதிகாரி என்னைப் பார்த்த பார்வையில் `அப்பார்த்தீய்ட்(apartheid)` தெறித்தது! ஃபிடெல் காஸ்ட்ரோவின் நாட்டுக்கா போகிறாய்? என் பாஸ்போர்ட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, விசாவை கூர்ந்து கவனித்தார்.  கொஞ்சம் காக்கவைத்து, வேறுவழியின்றி அனுப்பினார். கூபாவின் பெயரைச் சொன்னாலே அமெரிக்க அதிகாரிகளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாவதை நேரடியாகக் கண்டு மனதினுள் சிரித்துக்கொண்டேன். இன்னும் பனி விலகவில்லையா!

%e0%ae%aa%e0%ae%b4%e0%af%88%e0%ae%af-%e0%ae%b9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81பழைய ஹவானாவில் ஒரு தெரு

1958-ல் அமெரிக்க ஆதரவு பதிஸ்த்தாவின் (Fulgencio Batista) சர்வாதிகாரத்திலிருந்து க்யூபாவை மீட்க, காஸ்ட்ரோ, சே குவாராவின் சிறிய அளவிலான, ஆயுதம் தாங்கிய குழுவினர், ஆங்காங்கே நாட்டின் மலைப்பகுதிகளில் கொரில்லாத் தாக்குதல்களினால், பத்திஸ்த்தாவின் சொற்ப அளவிலான திறமையோ, எழுச்சியோ அற்ற, சொத்தைப் படைகளை எளிதாக வீழ்த்தினர். இனி தாக்குப்பிடிக்க முடியாது எனத் தெரிந்து, பத்திஸ்த்தா க்யூபாவிலிருந்து சொந்த விமானத்தில் வெளியேறிவிட, 1959 ஜனவரியில்  காஸ்ட்ரோ தலைமையில் ஆட்சி கைமாறியது. `க்யூபன் புரட்சி`  என்பதை நாடு முழுதும் ஒரு புதிய அரசியல் சித்தாந்தமாக முன்வைத்து மணிக்கணக்கில், நாட்கணக்கில் மக்கள் முன் பேசினார் இளம் காஸ்ட்ரோ. கரும்பச்சைச் சீருடை, தொப்பி. முகத்தில் அடர்ந்த தாடி, வாயில் சிகார். புரட்சியின் புனித வடிவம் தயார்! காஸ்ட்ரோவின் இன்னொரு ப்ளஸ்: சாமானியர்களைக் கட்டிப்போடும் வாக்குத்திறம் மிகுந்தவர்.  வாய்தேர்ந்த பேச்சாளர்.

`ரெவொல்யூசியோன்!` (புரட்சி – Revolucion in Spanish) என்கிற சர்வாதிகாரத்துக்கெதிரான மாபெரும் புரட்சிதான், சித்தாந்தம்தான் கூப அரசின் தாரகமந்திரம். அதற்கு எதிர்முனையாகக் கருதப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாடல் என்பது காஸ்ட்ரோ கதாகாலட்சேபத்தின் மையப்பொருள். பனிப்போர் காலத்தில், அமெரிக்காவுக்கு எதிராக தைரியமாக கோஷமிட்ட காஸ்ட்ரோவின் புதிய அரசிற்கு, சோவியத் யூனியனின் ஆசீர்வாதம் உடனே கிடைத்தது. கூபப் புரட்சிக்கு, கம்யூனிச சித்தாந்த வெற்றி முலாம் பூசப்பட்டது. அமெரிக்க ஆதரவுத் தலைவரை விரட்டிவிட்டு, சோவியத் யூனியனின் ஆசிபெற்ற புரட்சிக்காரர் ஆள்வதாக இடதுசாரி சித்தாந்திகள் பேசி, எழுதிப் புகழ் பரப்பினார்கள். லத்தீன் அமெரிக்கா மட்டுமின்றி, உலக முழுதுக்குமாகவும், ஃபிடெல் காஸ்ட்ரோ என்கிற புரட்சிப் பிம்பம் உருவாக்கப்பட்டது.

தொழில், சொத்துபத்துகள் என எல்லாமே தேசிய உடமை ஆக்கப்பட்டதால், ஆரம்ப வருடங்களில், சோஷலிசம் என்கிற பெயரில் அரசாங்கத்தின் தர்மத்தில் இலவசமாகவோ மலிவாகவோ எல்லாவற்றையும் சுகமாக அனுபவித்தனர் மக்கள். அவ்வாறே ஒரு 30 வருடகாலம் `ஃபிதேல்!` `ஃபிதேல்!`  என அவரது ஆவேசப் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் ஆடிக் களித்தனர். காஸ்ட்ரோவும் க்யூபன் சிகாரை இழுத்துப் புகைத்து, காதலிகளோடு சால்ஸா ஆடி, அதிகார சுகம் அனுபவித்தார். இது 1989 வரை, அதாவது சோவியத் யூனியன் என்கிற கம்யூனிச சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டு நொறுங்கிவிழும்வரை நீடித்தது.

உலகெங்கும் கம்யூனிசம் அடிவாங்க, கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச அரசுகள் ஒவ்வொன்றாய்த் தள்ளாடி  வீழ்ந்தன. யதார்த்தம் என்கிற விஸ்வரூபத்தின் முன் சித்தாந்தம் என்கிற பகட்டுவேலை ரொம்பநாளைக்குச்  செல்லாது எனும் நிதர்சனம் கூபாவின் முன்னும் நின்று சிரித்தது. சோவியத் நாட்டில் புதிய தலைமை பதவி ஏற்க, இதுகாறும் கூபா உட்பட கம்யூனிஸ்ட் நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி, பொருளாதார, வணிக சலுகைகள், உதவிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கூபாவுக்கு சோவியத் யூனியனிடமிருந்து கிடைத்துவந்த உதவிகள் நின்றதோடு, கூபாவில் பணிபுரிந்த சோவியத் வல்லுனர்கள், எஞ்சினீயர்கள், மேலாளர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி அழைக்கப்பட்டனர். தடுமாற்றம் கண்டது, துவண்டது கூபா.

அதற்காக காஸ்ட்ரோ தன் ஆட்சியை விட்டுவிடவா முடியும்? எல்லாம் சரியாகவே இருப்பதாக, சத்தமாகப் பேசி இன்னும் ஒரு 10 வருடங்கள் இழுத்துப் பார்த்தார் அவர். இதற்குள்,   கூபாவில் சோவியத் உதவியுடன் திறம்பட இயங்கி வந்த தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடுவிழா கண்டன. ஒருகாலத்தில் அமெரிக்கக் கண்டத்தின் `சர்க்கரைக்கிண்ணம்` என அழைக்கப்பட்ட கூபாவில் உற்பத்தி நின்றுபோய், உழைக்க ஆட்களிருந்தும், எடுத்து நடத்தத் திறனான மேலாளர்கள், வல்லுனர்களின்றி ஆலைகள் மூடப்பட்டன. இப்படியே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்னாலைகள், சர்க்கரை ஆலைகள் என எல்லாம் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு செய்வதற்கு வேலையின்றி, வருமானத்துக்கு வழியின்றி மூளியானது தேசம். அமெரிக்காவின் பொருளாதார, சுற்றுலாத் தடைகள் வேறு, அரசின் கழுத்தை நெறித்து, டாலர் வருமானத்தை இல்லாது செய்தன. சராசரி க்யூபக் குடும்பத்தின் வருமானம், வசதிகள் உலர்ந்துபோயின. ஈனக்குரலில் கூப மக்களின் துக்கம், மெல்ல மெல்ல வெளிஉலகுக்கும் கேட்க ஆரம்பித்தது.

சோவியத் யூனியனின் அரசியல் துணையில்லாது போன நெருக்கடியான நேரத்திலும் கூபா, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தன் பழைய வசனத்தையே திரும்பவும் பேசிவந்தது. அரைத்த மாவை விடாது அரைத்தது! அமெரிக்காவைப் பழிப்பதும், சீனா, வெனிசுவெலா போன்ற அமெரிக்க எதிரிகளோடு கைகோர்த்து மகிழ்வதுமாக இருந்தது.  வெறும் சித்தாந்தமா சோறு போடும்? செய்வதற்கு வேலையேதுமின்றி, சம்பாதிக்க வழியோ அனுமதியோ இன்றி, அரசின்  நெருக்கடிகளில் சிக்கி மூச்சுத் திணறினர்  கூப மக்கள். கொஞ்சநஞ்சமிருந்த புகையிலைத் தொழிலும், விளைநிலங்களின் உற்பத்தி முதலானவையும் அரசின் கைவசமே இருந்தன. அரசின் உத்தரவுப்படி உழைக்கவேண்டும். விளைச்சலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் தந்துவிடவேண்டும். உழைத்தவனுக்குப் போதிய சம்பளம்? வருமானம்? கொடிபிடிப்பது, போராடுவது போன்ற அரசியல் சர்க்கஸ்களெல்லாம் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்தான். ஒற்றைக்கட்சி கம்யூனிச ஆட்சி நடக்கும்  கூபாவில் யாரும் அரசுக்கெதிராக மூச்சுவிடமுடியாது. அனுமதியில்லை. அரசாங்கம் கொடுக்கிற ரேஷன் சாமான்களை, அது எவ்வளவு குறைந்திருந்தாலும் வாங்கிக்கொண்டு, வாய்பேசாது இடத்தைக் காலி செய்யவேண்டும்.

காஸ்ட்ரோவின் கடுமையான ஆட்சியை அல்லது கூபப்புரட்சி என்கிற சித்தாந்தத்தை விமரிசித்து முணுமுணுத்தாலும் தொலைந்தான் கூபன். அசட்டுத்தனமாய் முயற்சிசெய்த சிலர் அப்படிக் காணாமற்போயிருக்கிறார்கள். அப்படி மறைந்தவர்களின் மனைவிகள் (பெரும்பாலும் கருப்பினத்தவரே), வெள்ளைஉடை உடுத்தி வருடத்திற்கு ஒருமுறை ஒரு அமைதியாக தெருவில் ஊர்வலம் வர அனுமதிக்கப்பட்டனர்.  கூபாவிலும் மனித உரிமை என்பது மருந்துக்காவது இருக்கிறது என்று வெளிஉலகுக்குக் காண்பிக்கத்தான் இந்த தந்திர ஏற்பாடு. மற்றபடி, தனிமனிதக் கருத்து, பேச்சு சுதந்திரம், அடிப்படையான கேள்வி கேட்கும், போராடும் உரிமைகள் என்பவை ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவின் ஆட்சியில் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன.

%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95கொலம்பஸ் சிலை. பரக்கோவா, க்யூபா

இத்தகைய நெருக்கடிப் பின்னணியில், 2006 ஜனவரியில் க்யூபாவின் தலைநகர் ஹவானாவில் வந்து இறங்கினேன் –மூன்று வருடத் தங்கலுக்காக.   வந்ததும் நான் கவனித்தது ஹவானா ஒரு பழைய நகரம். அதாவது பழங்காலம் இன்னும் பழங்காலமாக முழுதுமாக மாறிவிடாது, நேர்நின்று நிகழ்காலத்திலும் நர்த்தனமாடும் ஒரு அதிசய நகரம். நல்ல சாலைகள் ஓடுகின்றன. ஆனால் புதுப்பிக்கப்படாத, சீர்செய்யப்படாத 60-70 வயதான கட்டிடங்கள் நகரெங்கும் காணப்பட்டன. சில பழையவீடுகள், பங்களாக்கள் காரை உதிர்ந்து, சுவர்களில், கூரைகளில் பிளவுகளுடன் ஆபத்தாகக் காட்சி அளித்தன. சோஷலிச அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட அத்தகைய வீடுகளில்தான் மக்கள், வேறு வழியின்றி வசிக்கிறார்கள். சில இடங்களில் ஒரே பழைய வீட்டை இரண்டு  பகுதிகளாகப் பிரித்து இரண்டு குடும்பங்கள் வசிக்க, அரசால் கொடுக்கப்பட்டிருந்தது.

ஹவானா கூபாவின் மிகப்பெரிய நகர். ஆனால், ஜனத்தொகை 20 லட்சத்துக்கும் குறைவே. தலைநகரமாக இருந்தும் ஒரு நவீன நகரத்துக்குரிய பரபரப்புகள் இல்லாது, தூங்குமூஞ்சித்தனமாக இருக்கும். நகரின் பெரிய சாலைகள், மனித நடமாட்டம் அதிகமின்றி, நெருக்கும் வாகனங்கள் இன்றி பெரும்பாலும் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடற்கரையோர சாலையான மாலெகான்(Malecon) என்னும் பகுதி மும்பையின் மரீன் ட்ரைவ் போன்றது. நீலக்கடல் ஒருபுறம். நிதானமான பரபரப்பில்லா நகரம் மற்றொருபுறம் என வளைந்து செல்லும் அழகியசாலை. அந்த சாலையில் பலமுறை கார் ஓட்டிக் களித்திருக்கிறேன். குறிப்பாக ஹவானா மாலையின் சூரிய அஸ்தமன அழகை ரசித்துக்கொண்டு மாலெகானில் வேகமின்றிக் காரோட்டிச்செல்வது, அந்தக் காலத்து ராஜகுமாரர்கள் தேரோட்டி பவனிவந்த காட்சிக்கு நிகரானது! மனதை நிறைக்கும் ரம்யம், லேசான குளிருடன் இதமான காற்று தரும் குதூகலம். ஒருபக்கத்தில் அலைகளற்ற அமைதிக் கடல் நீலமாய்ப் பரந்திருக்கும். கடற்கரையோரக் கட்டைச்சுவரைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்காக சில சுற்றுலாப்பயணிகள், நகரின் இளம்பெண்கள், ஆண்கள் –ஹபனேரோஸ் (Habaneros) என ஹவானாக்காரர்கள் அழைக்கப்படுகிறார்கள்) நின்றுகொண்டிருப்பார்கள். யுவதிகள் தங்களது தோழர்களோடு சுற்றிக்கொண்டும், சிலர் தனியாக இலக்கில்லாதும் திரிந்துகொண்டிருப்பார்கள்.  தங்களுக்குப் புதுத்துணை கிடைக்குமா, யாராவது அபூர்வமாக கனடியன் அல்லது ஐரோப்பிய டூரிஸ்ட்டின் நட்பு கிடைக்குமா, அவனுடன் சேர்ந்து நகரின் நாகரிக ஹோட்டல்களில், பார்களில் மது அருந்த, நடனமாட வாய்ப்பு வருமா என்கிற சிந்தனைத் தாக்கத்தில் துருதுருவென அலைகிறார்கள் எனப் புரிந்துகொள்ள கொஞ்ச நாளானது!

%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95கடலின் பின்னணியில் பரக்கோவா நகர், க்யூபா

மாலெகான் தவிர நகரின் முக்கியமான சாலை கிந்த்தா அவனீதா (Avenida Quinta – 5th Avenue). மாலெகான் சாலையில் ஊருக்குள் வருகையில் ஒரு சிறிய சுரங்கப்பாதையில் தாழ்ந்து மேலேறிவந்தால் ஊரின் அடுத்தபகுதியான மிராமாருக்குள் (Miramar) 5-ஆவது அவென்யூ செல்ல ஆரம்பிக்கும். ஐந்து நட்சத்திர ஹோட்டல், டெபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், நாகரீக மினி பார்கள், வெளிநாட்டவர் தங்கியிருக்கும் வீடுகள் நிறைந்த மிராமார், தலைநகரின் ஒரு போஷ் ஏரியா. மிகப் பழைய ஸ்பானிஷ்பாணி கட்டடிடங்களுடன், கடந்த 20 ஆண்டுகளில் அபூர்வமாகக் கட்டப்பட்ட நவீன கட்டிடங்கள் சிலவும் காணக்கிடைக்கும். கிந்த்தா, தர்சேரா அவென்யூக்களுக்கு நடுவே Calle 42-ல் (42-ஆவது தெரு) `ஹவானா பேலஸ்` என அழைக்கப்பட்ட ஒரு பிரபலமான நவீன கட்டிடம் இருக்கிறது. அதிலுள்ள ஒரு ஃப்ளாட்டில்தான் நான் மூன்று வருடங்கள் குடும்பத்துடன் குடியிருந்தேன். பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், இத்தாலிய, கனடிய டூரிஸ்ட்டுகள் வாரக்கணக்கில் ஹவானா பேலஸில் வாடகை ஃப்ளாட்களில் தங்கி, க்யூபக் கடற்கரைகளை நோக்கிப் பயணிப்பார்கள்.

மிராமாரின் குறுக்கே நீண்டு செல்கிறது அவனீதா கிந்த்தா. வேகமாகச் செல்லும் சில கார்கள், அவ்வப்போது ஒன்றிரண்டு சீன பஸ்கள், டேக்ஸிகள் இவற்றையே அதில் காணமுடியும். சிலர் சாலையின் இருமருங்கிலும் நடந்து போய்க்கொண்டிருப்பார்கள். நமது நாட்டின் நகரங்களில் இருப்பதுபோன்ற போக்குவரத்து நெரிசல் க்யூபாவில் இருந்ததே இல்லை!  அவர்கள் எப்போதாவது பார்க்கும் ஹிந்தி படங்களில் நமது நெருக்கும் சாலைகளைப் பார்த்து வாய் பிளப்பார்கள். இந்திய சாலைகளில் இத்தனை மனிதர்கள், வாகனங்களா? என்று படத்தின் கதையை விட்டுவிட்டு இதையெல்லாம் ஆச்சரியமாக அளவிடுவார்கள் க்யூபாக்காரர்கள். நமக்கு அவர்கள் அதிசயம். அவர்களுக்கு நாம் அதிசயம்! தர்சேரா (Avenida Tersera) என்றழைக்கப்படும் மூன்றாவது அவென்யூ, ப்ரைமேரா (Avenida Primera) எனப்படும் முதலாவது அவென்யூ நகரின் மற்ற முக்கிய சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒன்றுக்கு ஒன்று இணையாக சீராகச் செல்லும். குறுக்கே பரவும் தெருக்களும் மிகவும் ஒழுங்கானவை. அழகான ஸ்பானிஷ் நகர் வடிவமைப்பு. தர்சேரா சாலையின்  இருபக்கங்களிலும் மஞ்சள், சிவப்புப் பூக்களோடு அழகு கொஞ்சும் பூங்கொன்றை மரங்கள் வரிசையாக நின்று, பகல் நேரத்திலும் சூரியஒளியை உள்ளேவிடாது குளு, குளுவென வைத்திருக்கும். காயே (Calle in Spanish) எனப்படும் தெருக்கள் இந்த முதலாவது, மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவது, ஒன்பதாவது அவெனியூக்களை குறுக்கே இணைத்துச்செல்லும். ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் நகரின் அவனீதா எனப்படும் பெருஞ்சாலைகள் ஒற்றைப்படை எண்ணிலேயே அழைக்கப்படுகின்றன. 2-ஆவது, 4-ஆவது, 6-ஆவது, 8-ஆவது சாலைகள் எங்கே என்று கேட்கப்படாது. இல்லை. அவ்வளவுதான்! க்யூபாவில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாலோ, விமரிசித்தாலோ அரசாங்கத்தின் சந்தேகத்துக்கு ஆளாக நேரிடும். ஜாக்ரதை!

எப்படி நமது தலைநகரம் புது டெல்லி, பழைய டெல்லி என இருபிரிவுகளாக உள்ளதோ அதைப்போலத்தான் ஹவானாவும். புது ஹவானா என்பது வெதாதோ (Vedado) எனப்படும் பகுதி. பத்திஸ்த்தாவின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதி, ஆளும் உயர்வர்க்கத்தினர், பொதுஜனங்களிடமிருந்து ஒதுங்கி வாழுமிடமாக, ரகசியம் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், மாலெக்கான் உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகள், நகரத்தின் மிகவும் பழைய, புகழ்பெற்ற 5 நட்சத்திர ஹோட்டலான `ஹோட்டல் நாசியோனால்` (Hotel Nacional (national)) இங்குதான் இருக்கிறது. க்யூபாவுக்கு முதன்முறையாக வந்திறங்கியபின், நான் இந்த ஹோட்டலில் 3 நாட்கள், குடும்பத்துடன் தங்கியிருந்தேன். ஸ்பானிஷ் காலனியக் கட்டிடம். ஹோட்டலின் எலிவேட்டரின் வெளிப்பகுதி, பழைய இரும்புக் கதவுகளுடன் பயமுறுத்தும்! மேலே போகும்போது எங்கேயாவது நடுவில் பழுதாகிவிடுமோ என்கிற திகில் தரும் எலிவேட்டர். ஹோட்டலின் பின்புறம் சென்றால் டான்ஸ் பார். அருகிலிருக்கும் பூங்காவில் அமர்ந்து க்யூபாவின் சிக்னேச்சர் ட்ரின்க்கான மொஹித்தோ (Mojito) அருந்திக்கொண்டு அருகில் பரந்திருக்கும் நீலக்கடலை தரிசிக்கலாம். ‘மேலியா கொஹீபா’ என்கிற நவீன 5-நட்சத்திர ஹோட்டல் ஒன்றும் வெதாதோவில் உண்டு. டெபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், பேருக்குச் சொல்லிக்கொள்ள என ஒரு சில நவீனபாணி கடைகள், சிறிய ரெஸ்ட்டாரெண்ட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%af%8dகூபன் ஆர்ட் சீன்

Habana Vieha என ஸ்பானிஷில் அழைக்கப்படும்   பழைய ஹவானாவில், கம்பீரமான ஸ்பானிஷ் கட்டிடக்கலையின் அழகைச்சொல்லி நிற்கும் காலந்தாண்டிய கட்டிடங்கள் சில உள்ளன. மிகப்பழைய ரெஸ்டாரண்டுக்கள், சிறிய ஹோட்டல்கள், மியூசியங்கள், சர்ச்சுகள் நிறைந்த ஏரியா. க்யூபாவின் cultural capital என அழைக்கப்படுகிறது இந்தபபகுதி. டூரிஸ்ட்டுகள் தங்களது இணைகளுடன் ஆனந்தமாக பீர் குடித்துக்கொண்டும், புகைத்துக்கொண்டும், காலனியகாலக் குதிரைவண்டிகளில் சவாரி செய்துகொண்டும் ஸ்பானிஷ் ஆதிக்ககால நினைவுகளில் ஆழ்ந்திருப்பார்கள். அல்லது பார்களில் க்யூப அழகிகளோடு அளவளாவிக்கொண்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். டூரிஸ்ட்டுகளையே பிரதானமாக நம்பி தன்னை அலங்கரித்து இயங்கும்,  தலைநகரின் முக்கியப்பகுதி இது. ஸ்பெயினின் தூதரகம் இப்பவும் இங்குதான் உள்ளது.  ஜனவரி 1959-ல், காஸ்ட்ரோ ஆட்சிபீடமேறியபின்,  சர்வாதிகாரி பத்திஸ்த்தாவின் ஆட்கள் என சந்தேகிக்கப்பட்டு பிடிக்கப்பட்டவர்களை சே குவாரா ஈவுஇரக்கமின்றி, வரிசையாக நிற்கவைத்து சுட்டுத்தள்ளிய ஒரு கட்டிடம், சுற்றுச்சுவரோடு இங்கேதான் உள்ளது. கூபப் புரட்சி என்ற பெயரில் 1959-60–ல் காஸ்ட்ரோ சகோதரர்கள், சே போன்ற தலைவர்கள் ஆடிய ஆட்டத்தைப்பற்றி க்யூப நாட்டவர் பேச பயப்பட்டாலும், சரித்திரம் அதனை மறக்கவில்லை.

இத்தகைய பழைய ஹவானாவின் ஒரு சிறிய ஹோட்டலைத் தேடி ஐரோப்பிய, கனடிய டூரிஸ்ட்டுகள் வருகிறார்கள். என்னடாப்பா அப்படி ஒரு விசேஷம் என்று நானும் சென்று பார்த்தேன். ஹோட்டல் அம்போஸ் முந்தோஸ் (Hotel Ambos Mundos) என்று அழகாகத்தான் ஸ்பானிஷில் பெயர் வைத்திருக்கிறார்கள். அம்போஸ் முந்தோஸ் என்றால் `இரண்டு உலகங்களும்(சேர்ந்த)` என்று பொருள் வரும். க்யூபாவின் கடந்தகாலம் ஒரு உலகம். இப்போதிருக்கும் கூபாவோ ஒருதனி உலகம்! இரண்டின் தரிசனத்தையும் ஒருசேரக் காணலாம் பழைய ஹவானாவின் இந்த ஹோட்டலில். எனப் பொருள். அந்த ஹோட்டலின் மாடிப்பகுதியிலிருந்து நகரின் வெவ்வேறு பகுதிகள், ஹவானா விரிகுடா (Havana Bay), ஹவானா துறைமுகம் (Havana Port area) ஆகியவை அழகாய்த் தெரியும். ஒருகாலத்தில், ஹவானாவுக்கு அடிக்கடி வந்து, இந்த ஹோட்டலில் மணிக்கணக்காக உட்கார்ந்து, ரம் அருந்திக்கொண்டு, நீலக்கடல்வெளியை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு,  தன் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டுக்கொண்டிருந்தாராம் ஒரு  அமெரிக்க எழுத்தாளர். யார் அது? எர்னஸ்ட் ஹெமிங்வே. ஹெமிங்வே இங்கே வந்து உட்கார்ந்திருந்தா பொழுதைக் கழித்தார் என ஆச்சரியப்படுகிறார்கள். இதனாலேயே இந்த ஹோட்டல் ஒரு புகழ்பெற்ற டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் ஆகிவிட்டது.

அம்போஸ் முந்தோஸ் உங்ளை மறக்கமுடியாத ஹவானாவின் பழங்காலத்துக்கு அழைத்துச்செல்லும். குறுகிய மாடிப்படிகள், இரும்பு கேட் போடப்பட்ட ஐம்பதுகளின் எலிவேட்டர்கள் என நுழைந்ததுமே தெரிந்துவிடும் நீங்கள் 60 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்துவிட்டீர்கள் என்று! ஹோட்டலின் மேல்தளம்,  ஹவானாவின் முகம்பார்க்கும் கண்ணாடி (Mirador of Havana)  என அழைக்கப்படுகிறது. அதாவது கலாச்சாரப் பழம்பெருமை பேசும் அழகுமுகம். இதுபோன்ற தருணங்களில் பழமை என்பதும் விரும்பத்தக்கது அல்லவா? ஸ்பானிஷ் கட்டிடக்கலையின் நளினம்கொண்ட ஹோட்டலின் அழகிய வெளித்தோற்றமும், உள்வெளிகளும் வாழ்வின் கடந்தகால ஏக்கங்களுக்கு நம்மை இட்டுச்செல்லும். அழகான பால்கனிகள், சிட்-அவுட்கள், பார்கள். ட்ரம்களுடன் அதிரும் ஆஃப்ரிக்க-கூபன் ஸால்ஸா/ஜாஸ் இசை(Afro-Cuban music), ஸ்பானிஷ்- கூப இசைக்கலவையான ஃப்ளாமெங்க்கோ (Flamenco). நவீன கூப இசையின் பல்வேறு பரிமாணங்கள். நடன தளத்தில் அதிரும். கூடவே, ஸ்பானிஷ் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளிப் பெண்களின் தேர்ந்த நடனம் உங்களை அந்த இடத்திலேயே கட்டிப்போட்டுவிடும். புரிகிறது, அமெரிக்காவை விட்டுவிட்டு ஏன் இங்கு வந்து அடிக்கடி உட்கார்ந்திருந்தார் ஹெமிங்வே என்று! நாமும் இங்குவந்து  அமர்ந்து ஹவானா க்ளப் ரோன் அடித்து (ரம் குடித்து) சிந்தித்தால், அதாவது அந்த அழகிகள் உங்களை ஒரு இடத்தில் உட்கார்ந்து சிந்திக்க அனுமதித்தால், ஒருவேளை ஹெமிங்வேயைப்போல எழுத்தாளராக ஆகியிருக்கலாமோ என்னவோ!

ஹவானா வியெஹாவின்  பிரதான சாலையோரமாக மரங்களின் நிழலில் 2007- ல் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவுச்சிலை ஒன்று இந்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்த முக்கிய நிகழ்ச்சியில் நான்  கலந்துகொண்டேன். இந்திய கலாச்சார உறவுக் கழகத்தினால் (ICCR), இந்தியாவிலிருந்து க்யூபாவுக்கென பிரத்யேகமாக அனுப்பப்பட்டது அது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், மற்றும் கலைஞர்களை மதிக்கும் பிரதேசம் லத்தீன் அமெரிக்கா. கூபா அதற்கு விதிவிலக்கல்ல. தாகூரின் `கீதாஞ்சலி` பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள் க்யூப நாட்டவர்கள். தாகூர் சிலை திறப்பு விழாவின்போது, பழைய ஹவானாவில் உள்ள ` காஸா த லா ஏஷியா` எனப்படும் `ஏஷியா ஹவுஸ் (ஸ்பானிஷில் Casa de la Asia) பள்ளிக்குழந்தைகளை வைத்து தாகூரின் நாடகம் ஒன்றின் ஒரு அத்தியாயத்தை, எங்களுக்கு நடத்திக் காண்பித்தது. பள்ளிக்குழந்தைகள் உற்சாகமாக அதில் நடித்தது எங்களுக்கு சிலிர்ப்பூட்டிய விஷயம்.

கூபர்களுக்கு பிடித்த உலக அரசியல் தலைவர்களில் மஹாத்மா காந்தியும் ஒருவர்.  அபூர்வமான ஒரு இந்தியத் தலைவர் என மதிக்கப்படுகிறார் காந்தி. அவரது உருவச்சிலை ஒன்று மிராமாரில் `காயே 22-ல் (22-ஆவது தெரு) பெரிய அரசமரத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்ந்தி அன்று மிராமார் சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, கூப நண்பர்களுக்கு ஸ்னாக்ஸ், ஜூஸ் கொடுத்து கொண்டாடுவோம்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%aa`சிகார்` பிடிக்கும் க்யூபப் பெண்

பழைய ஹவானாவில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அங்கு விற்கப்படும் கூபன் பெயிண்ட்டிங்குகள்.கூபாவின் இளையதலைமுறைக் கலைஞர்களின் கைவண்ணத்தில், கண்கவரும்  சித்திரங்கள். காஸ்ட்ரோவின் கூபா  ஓவியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு ஒரு எழுதப்படாத நிபந்தனை விதித்திருந்தது. கூபப்புரட்சி சித்தாந்தம், ஆட்சி இவற்றைப்போற்றும் வகையில் ஏதேனும் ஒன்றாவது படைத்திருக்கவேண்டும். அப்படி கூபப் புரட்சியின் பொருள்பட ஒன்றும் வரையவில்லை என்றால், படைக்கவில்லை என்றால் எப்பேர்ப்பட்ட கலைஞன், ஓவியனாக இருந்தாலும் அங்கே முகவரி தெரியாமல் காணாமற்போக நேரிடும். கூபாவின் புகழ்பெற்ற ஓவியர்கள் காஸ்ட்ரோவின் ஆட்சி ஆரம்பத்தில் இவ்வாறு அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது மேற்கொண்டு ஏதும் வரைய, படைக்க அனுமதி மறுக்கப்பட்டு  இருக்கிற இடம் தெரியாதபடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என அறிந்து அதிர்ந்தேன். என்ன கொடுமை இது? வேறுவழியறியாத கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் புரட்சிப்பொருள் தெரியும்படி ஏதாவது வரைந்துகாட்டி, அரசின் அனுமதி பெற்று தங்கள் ஓவியங்கள், பெயிண்ட்டிங்குகளை பழைய ஹவானா பகுதியில் போட்டு விற்றார்கள்.

இப்போதிருக்கும் சில கூபக் கலைஞர்களும் மிகவும் நுட்பமானவர்கள், தங்கள் கலையில் கைதேர்ந்தவர்கள். ஒவ்வொரு கான்வாஸ் ஓவியமும் 80-100 சியூசி (கிட்டத்தட்ட 80-100 அமெரிக்க டாலர் மதிப்பு) என்கிற விலையில் ஆரம்பிப்பார்கள். பேரம்பேசி 40-60 டாலருக்குள் நமக்குப் பிடித்ததை வாங்கிவிடலாம். அங்கே பல ரவுண்டுகள் அடித்தபின்பு எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் குழம்பி மூன்று கேன்வாஸ் சித்திரங்களை வாங்கிவந்தேன். ஒவ்வொன்றும் ஒரு அழகு.

ஹவானாவில் எந்த ஒரு தெருவிலிருந்தும்  இரண்டு கி.மீ நடந்தால்போதும் ஒரு சின்ன பீச் வந்துவிடும். Rocky beach. அங்கே வருபவர்கள் உட்கார சிமெண்ட் பெஞ்ச்கள், அருகருகே குளிர்பான ஸ்டால்களும் உண்டு. மாலை நேரத்தில் நாங்கள் கூட்டம் அதிகமில்லாத, குட்டி பீச்சிற்கு வீட்டிலிருந்து நடந்து சென்று, சூரிய அஸ்தமன அழகைக் கண்ணார ரசித்திருக்கிறோம். சில சமயங்களில்  இரவு 9 மணிவரைகூட அங்கே உட்காரந்து கடலைப் பார்த்திருப்போம். வானமும் கடலும் கலந்துவிட்ட கருமை. தூரத்தில் ஏதாவது கப்பல் ஒன்று நங்கூரமிட்டிருக்கும் அழகு சிறு ஒளித்திட்டாகத் தெரியும்.  சிறுபடகுகளில் இளைஞர்கள் கொஞ்சதூரம் வரை சென்று வட்டமடித்துத் திரும்புவார்கள். அங்கிருந்து அமெரிக்காவின் ஃப்ளாரிடா (Florida) 90 மைல் தூரம் தான். ஆனால் போய்விட முடியாது. இரண்டு நாடுகளும் தத்தம் நாட்டவர்மீது பயணத்தடைபோட்டிருந்தன அப்போது.

கபாவில் இந்திய சமூகம், இந்திய வம்சாவளி மக்கள் யாரும் இல்லை. கறாரான கம்யூனிச-சோஷலிச நாடு. அங்குள்ளவர்களுக்கே வேலை இல்லை. இந்தியர்கள் அங்கு போய் இருக்கிற டாலரையும் செலவழித்துவிட்டு, வாயில் விரலை வைத்துக்கொண்டிருப்பதா? ஏப்ரல்- செப்டம்பர் மாதங்களில் கனடா, பிரிட்டனிலிருந்து இந்திய டூரிஸ்ட்டுகள் சிலர் வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். இந்தியத் தூதரகத்தில் பணிபுரிபவர் தவிர, ONGC Videsh Ltd, NIIT ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இருதரப்பு ஒப்பந்தப்படி வேலை செய்ய வந்திருந்தனர். அதாவது மொத்தம் இரண்டு இந்திய குடும்பங்கள். அவ்வளவுதான்.

இத்தகைய சிறுநகரில் கிட்டத்தட்ட இரண்டு வருடம், ஆஃபீஸ்-வீடு என்று பொழுதுபோக்கியபின், க்யூபாவின் கிழக்கு மேற்காகக் குறுக்குவெட்டில் நாட்டில் பயணித்தால் தான் இந்த நாட்டினரின்  வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ஓரளவுப் புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றியது. அலுவலக அதிகாரிகள் நாங்கள் நான்கு பேர் சேர்ந்து ஹுண்டாய் சாந்த்தஃபே –யில் பயணித்து நாட்டின் முக்கியமான மாநிலங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். அந்த லிஸ்ட்டில் முதலில்  வந்தது பினார் தெல் ரியோ.

cuba_salsa_danceக்யூபாவின் சால்ஸா டான்ஸ் 

பினார் தெல் ரியோ (Pinar del Rio –நதியின் பைன் மரக்காடுகள்): ஹவானாவிலிருந்து 138 கி.மீ. தூரத்தில் தென்மேற்கில் உள்ள சிறு ஊர்/பகுதி. புகையிலைத் தோட்டங்கள், பைன் மரக்காடுகள் மண்டி, பார்க்கப் பச்சைப்பசேல் என்று கவர்ச்சியாக இருக்கும். கூபா எப்போதுமே சுருட்டுகளுக்கு (Cuban Cigars) உலகப்புகழ் பெற்ற நாடு. இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்சில்,  ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரினால் ஏற்பட்ட டென்ஷன் தாங்கமுடியாமல் ஊதித்தள்ளிய கூபன் சிகார் ! பினாரில் நாங்கள் சுருட்டு செய்யும் தொழிற்சாலை சென்று, வெவ்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட புகையிலையை, ஏடு ஏடுகளாகப் பிரித்துப் பார்த்தோம். அதன் வாசனை ஆளைத் தூக்கியது. சில உயர்வகை சிகார்களில் கோக்கோ, காஃபி போன்ற வாசனை கலந்திருக்கும். (புகையிலை/சிகார்  ரசிகர்கள் கவனிக்க!). மெல்லிய –சிகரெட் சைஸ் சிகார்களோடு, சர்ச்சில், காஸ்ட்ரோ போன்றோர் புகைத்த முரட்டுசைஸ் சிகார் வரை விதவிதமாகக் காண்பித்து ஒருவர் ஸ்பானிஷ் மொழியில் விளக்கினார். மொழி தெரிந்த ஒரு நண்பர் புரியும்படி சொன்னார். 2 டாலர், 5 டாலர், 10 டாலருக்கு ஒன்று  என்கிற விலையில்  விதமான, புதிதாகத் தயாரிக்கப்பட்ட சுருட்டுகளில் சிலவற்றை வாங்கிக்கொண்டோம். என் துரதிர்ஷ்டம் சிகரெட் பழக்கத்தை நான் விட்டு 10 வருடங்களாகியிருந்தது. இருந்தும் கூபாவில்  சுருட்டு வாங்காவிட்டால், அங்கே போனதற்கு என்னதான் அர்த்தம்?

பினார் ஆறு மிகச் சிறியது அதன் இருபக்கமும் ஏனைய மரங்களோடு பைன் மரங்களின் அடர்வரிசை. கடற்கரை சென்றோம். நீலப்பச்சையில் மனதை மயக்கியது கடல். பச்சையையும், நீலத்தையும்,காமெராவில்  அடைத்தபின் கொஞ்ச தூரம் பயணித்து, வினாலெஸ் என்னும் சிற்றூருக்கு வந்தோம். இங்கும் புகையிலைத் தோட்டங்கள். இத்தனை அருமையான சீதோஷ்ண நிலை, மண்வளம் இருந்தும், உயர்வகைப் புகையிலை விளையும் இந்தப் பகுதியை கூப அரசாங்கம் ஏனோ ஆரம்பவருடங்களில் சரியாகக் கவனித்ததில்லை. மலையை ஒட்டிய சிறு கிராமங்கள். வினாலெஸின் பாறைகளில் சரித்திரகாலத்துக்கு முற்பட்ட ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. டூரிஸ்ட்டுகள் சிலர் வந்திருந்தனர். ஆசைதீர க்ளிக்கித் தள்ளினர். நாங்களும் படமெடுத்தோம்.

%e0%ae%b9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8dஹவானா: காய்கறி மார்க்கெட்டில் பூண்டு மாலை!

மத்தான்சாஸ் (Matanzas) :  மேலும் கிழக்கு நோக்கிய சாலையில் தொடர்ந்தோம். மத்தான்சாஸ் எனும இந்த நகருக்கு வந்து சேர்ந்தோம். மத்தான்சாஸ் என்கிற பெயரையே கொண்ட மாநிலத்தின் தலைநகரம். மூன்று ஆறுகள் ஓடும் நகரானதால் க்யூபாவின் வெனிஸ் என்றொரு பெயரும் உண்டு. யுமுரி, சான் ஹுவான், கனிமார் எனும் பெயர் கொண்ட ஆறுகள் இவை. இவைகளின் மீது சிறிது சிறிதாக நிறைய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

மத்தான்சாஸ் மாநிலம் கூபாவின் இசை, நாட்டிய, கலாச்சார வாழ்வின் அடித்தளத்தைத் தன்னகத்தே தாங்கியிருக்கிறது. கூபாவின் தேசிய நடன, இசை வகையான `தான்ஸோன்` (danzon), மற்றும் ரும்பா நடனம் ஆகியவற்றின் ஊற்றுக்கண் இந்த சிறுநகரமே. ஆடல், பாடல் என்றால் போதும் – கூப ஆண்களும், பெண்களும் அவ்வப்போது `ரோன்` (க்யூபன் ரம்) அருந்திவிட்டு  நேரம்போவது தெரியாமல் ஆடுவார்கள். 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆஃப்ரிக்கக்  கண்டத்திலிருந்து ஏகப்பட்ட அடிமைகளை, ஸ்பெயின் ஆதிக்கக்காரர்கள்  கப்பலில் கொண்டுவந்து மத்தான்சாஸில் இறக்கினார்கள். காரணம்? மத்தான்ஸா பகுதி கரும்பு உற்பத்திக்குப் புகழ்பெற்றது. இங்குள்ள கரும்புத்தோட்டங்களில் ஆப்பிரிக்க அடிமைகள் ஸ்பெயின் முதலாளிகளின் தோட்டங்களில் அடிவாங்கினார்கள். கடுமையாக, இரவு பகலாக உழைக்கவைக்கப்பட்டார்கள். சர்க்கரை பெரிதும் உற்பத்தியானது. ஸ்பெயின் ஆதிக்கத்திற்குப்பின், அமெரிக்க ஆதரவு பத்திஸ்த்தாவின் ஆட்சியிலும் கரும்பு உற்பத்தி பிரமாதமாக இருந்தது. காஸ்ட்ரோ ஆட்சியில் சோவியத் உதவியுடன் பெரும்பாலான கரும்பாலைகள் 1989 வரை சிறப்பாக இயங்கின. கூபா லத்தீன் அமெரிக்காவின் சர்க்கரைக்கிண்ணம் எனப் புகழ்பெற்றது. 1989-ல் சோவியத்  ரஷ்ய உதவி க்யூபாவுக்கு அற்றுப்போனது. க்யூபர்களால் ஆலைகளை இயக்க, திறம்பட சர்க்கரை உற்பத்தி செய்யமுடியவில்லை. சர்க்கரை உற்பத்தி படுத்துவிட்டது. நாங்கள் போயிருந்தபோது ஏதோ பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக மந்தகதியில் சில ஆலைகள் தென்பட்டதே ஒழிய, ஒருபொற்காலம் தடயமின்றி மறைந்துவிட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் போர்ச்சுகீசிய வம்சாவளியினர் இங்கு பிழைப்புக்காகக் குடியேறினர். அவர்களின் வழிவந்தவர் நிறையப்பேர் இன்னும் மத்தான்சாஸில் வசிக்கின்றனர். எனவே மத்தான்சாஸில் ஸ்பானிஷோடு, போர்ச்சுகீஸ் மொழியும் பேசப்படுகிறது..இந்நகரம் தலைநகர் ஹவானா மற்றும் இன்னொரு பெரிய நகரான சாந்தியாகோ த க்யூபா-உடன் ரயில்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.

நகரின் சாலைகள் மனிதர்கள் மிகக்குறைவு.எப்போதாவது ஊரும் பழைய ஷெவர்லே, ப்ளிமத் கார்கள் நம்மை முந்தைய நூற்றாண்டின் மத்திக்கு அழைத்துச்செல்லப் பார்த்தன. நகரின் நடுவில் உள்ள சுதந்திரப்பூங்காவுக்கு வந்தோம். ஸ்பெயின் நாட்டவருக்கெதிரான கூப விடுதலைப் போராட்டங்களின் சின்னமாக பூங்காவின் நடுவில் ஒரு வீரரின் சிலை.  அதற்குமுன்னால் அழகிய இளம்பெண் ஒருத்தி கையில் உருவிய கத்தியோடு முகத்தில் கோபத்தோடு நிற்பதான  சிலை. அழகுகொஞ்சும் ஸ்பானிஷ் சிற்பக்கலை.

சாந்த்தா க்ளாரா (Santa Clara): க்யூபாவில், எங்களது நீண்ட பயணத்தில் அடுத்தபடியாக வந்து சேர்ந்தது க்யூபாவின் புரட்சி சரித்திரத்தில் முக்கிய இடம்பெற்றிருக்கும் சாந்த்தா க்ளாரா எனும் சிறு நகர். வில்லா க்ளாரா எனும் மாநிலத்தின் தலைநகரான இங்குதான் சர்வாதிகாரி பத்திஸ்த்தாவின் படையை சே குவாராவின் தலைமையில் புரட்சிக்காரர்கள் கொரில்லா முறையில் பதுங்கித் தாக்கித் தோற்கடித்தார்கள். பத்திஸ்த்தா தன் படைவீரர்களுக்கு அனுப்பிய உணவு, மருந்து சப்ளையையும் வழிமறித்து எடுத்துக்கொண்டார்கள் புரட்சியாளர்கள். தன் படைகளின் அவமானத் தோல்விக்குப்பின் சில மணி நேரத்தில் பத்திஸ்த்தா தன் சகாக்களுடன் தனி விமானத்தில் கூபாவை விட்டு வெளியேறி அருகிலிருந்த டொமினிக்கன் குடியரசில் தஞ்சம் புகுந்தார். இந்த முக்கிய வெற்றிக்குப்பின் சே, காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப்படை வெற்றிமுகத்துடன் முன்னேறி, எந்த எதிர்ப்புமின்றி ஹவானாவைக் கைப்பற்றி ஆட்சிஅமைத்தது. சாந்த்த கிளாரா நகரின் மையத்தில் `புரட்சி சதுக்கம்` ஒன்று வெற்றி நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தோம். நகரில் சே குவாராவின்  மிகப்பெரிய உருவச்சிலை ஒன்றும், சே குவாரா மியூசியம் ஒன்றும் உள்ளன. இந்நகரில்தான் பொலீவியப் புரட்சியின் போது கொல்லப்பட்ட சே-யின் உடல், க்யூப அரசின் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  யுனெஸ்கோ நகர்களில் ஒன்றான சியென்ஃப்யூகோஸ் (Cienfugos) நகர், சாந்த்தா க்ளாராவுக்கு அருகில்தான் உள்ளது. இந்த நகரம் ஸ்பானிஷ் கட்டிடக்கலையின் `நியோ-க்ளாசிக்` வகைக் கட்டிடங்களுக்காக உலகப் புகழ்பெற்றது.

%e0%ae%b9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81ஹவானா: கூப அமைச்சகம் முன் சே குவாரா

காமகுவே (Camaguey): க்யூபாவினூடே கிழக்கு நோக்கிப் பயணிக்கையில், மத்திய க்யூபாவில் வருகிறது காமகுவே மாநிலம் (province). காமகுவே நகர்தான் அதன் தலைநகரமும். ஸ்பெயின் தேசத்து ஆக்கிரமிப்பாளர்களால் 16-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 7 கிராமங்களில் பிரதானமானது இது. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் அடிக்கடி  கடல்கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டு சீரழிந்த நகரம். காலப்போக்கில் லத்தீன் அமெரிக்க கட்டிட, சாலை அமைப்புகளை உள்வாங்கி, வித்தியாசமான, பாதுகாப்பான நகரமாக அமைக்கப்பட்டது. இதன்  தெருக்களில் ஒரு விசேஷம். தெருக்கள் ஸ்பானிஷ் அமைப்பின் படி ஒழுங்காக, வரிசையாக அமையாது, பாம்பைப்போல் வளைந்து வளைந்து ஏனைய தெருக்களை தாறுமாறாக இடைமறித்துச் செல்லும் அமைப்புடையது. திடீரென அவ்வாறான தெருக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தெருமையத்தில் குவிந்து மேற்கொண்டு குழப்பமாக வளைந்து வெளியேறும். க்யூபாவின் மற்ற பகுதிக்காரர்களுக்கே வியப்பையும் சிரிப்பையும் தரும் தெரு அமைப்பு கொண்டது இந்நகரம்.  கடற்கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்து துரத்தினால், உள்ளூர்க்காரர்கள் பாம்புத்தெருக்களின் மூலமாக வளைந்து, வளைந்து ஓடி, எங்கோ போய்க் காணாமற்போய்விடுவார்கள். அவர்களைத் தேடிப்பிடிப்பது அரிதினும் அரிது. அத்தகைய சாலை அமைப்பு கொண்ட ஒரே க்யூபன் நகரம் இதுதான் என்பார்கள். காமகுவே யூனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் க்யூபாவின் நகர்களில் ஒன்று. வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள் தலையில் தொப்பி, வாயில் சிகார், கையில்  பீர் பாட்டில், காமெரா சகிதமாக காமகுவேயின் தெருக்களில் அலைந்து, திரும்பத் தெரியாமல் முழிப்பது விசித்திரமான சுற்றுலாக்காட்சிகளில் ஒன்று!

(தொடரும்)

   http://solvanam.com/?p=47535

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்  (பகுதி – 2)

 

ஹோல்கின் (Holguin)

 

க்யூபாவின் குறுக்கே தொடர்ந்த எங்களது நெடியபயணத்தில், நாட்டின் சில முக்கிய நகர்களுக்கிடையே பயணித்து மாலையில் ஹோல்கின் (Holguin) என்கிற சிறு நகருக்கு  வந்துசேர்ந்தோம். அங்குள்ள அரசு ஹோட்டல் ஒன்றில், இரவுக்காகத் தங்கினோம். சாலைகள் நன்றாக இருந்தபோதிலும், ஜீப்பில் மணிக்கணக்காக உட்கார்ந்தே வந்ததால் சோர்ந்திருந்தோம். இரவில் எங்கும் செல்லவில்லை. சாப்பிட்டுப் படுத்துவிட்டோம்.

அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத  ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது. ஹவானா மற்றும் மற்ற நகர்களுக்கு இங்கிருந்து செல்லும், பழைய ரஷ்ய சிறுவிமானங்களில் பயணிக்கலாம். இந்த நகரில் இன்னொரு சிறப்பு இங்கு பேஸ்பால் ஸ்டேடியம் (Baseball stadium) ஒன்றும் உள்ளது. க்யூபாவில் பேஸ்பால், இந்தியாவில் கிரிக்கெட் மாதிரி!

 

havana_cuba_hotel_seville_view

 

சாந்த்தியாகோ த க்யூபா (Santiago de Cuba)

க்யூபாவின் சாந்த்தியாகோ  என அழைக்கப்படுகிறது இந்நகரம்.(ஏனெனில், இன்னொரு சாந்த்தியாகோ-வும் இருக்கிறது. அது தென்னமெரிக்காவில், சிலே (Chile) நாட்டின் தலைநகரம்). ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தின் படைப்புகளில் ஒன்றான இது,  தலைநகர் ஹவானாவிலிருந்து சுமார் 830 கி.மீ.தொலைவில், கரீபியக்கடலின் வளைகுடாப் பகுதியைப் பார்த்துப் பரந்திருக்கிறது. இங்கு அடுத்த நாள் காலையில் வந்து சேர்ந்ததும் வித்தியாசமாய் உணர்ந்தேன். இங்கும் ஜனத்தொகை அதிகம் இல்லை. ஆயினும் நகரின் சாலைகள் அகன்று கம்பீரமாகக் காட்சியளித்தன.  பெரிய டூரிஸ்ட் பஸ்கள்(சீன அன்பளிப்பு) ஆங்காங்கே செல்வதைக் காணமுடிந்தது. சிறிய சக்கரங்களுடன் சைக்கிள் ரிக்‌ஷாக்களும்  டூரிஸ்ட்டுகளுக்காக அங்கும் இங்கும் அலைந்தன. க்யூபாவின் பழைய தலைநகரங்களில் ஒன்றாக, சாந்த்தியாகோ இருந்திருக்கிறது. இந்த நகரின் புரட்சித் தலைவனான ஃப்ராங்க் பாயிஸ் (Frank Pais) க்யூபப் புரட்சிக்காக சிறப்புப்பணி ஆற்றியவர். இளைஞர்களிடையே தொடர்ந்து பேசி பத்திஸ்த்தாவின் அரசுக்கெதிராக, ஆள் சேர்த்து, ஆயுத, மருந்து சப்ளைக்கான ஏற்பாடுகள் செய்து காஸ்ட்ரோவின் புரட்சிக்கனவு பலிக்க காரணமான சரித்திரப்புள்ளி. ஜனவரி 1, 1959-ல் சாந்த்தியாகோவிலிருந்துதான் க்யூபப் புரட்சியாளர்களின் வெற்றியை  உலகுக்கு அறிவித்தார் ஃபிடெல் காஸ்ட்ரோ.

 

குவந்தானமோ / பரக்கோவா (Guantanamo /Baracoa)

க்யூபாவின் கிழக்குக்கோடிக்கு, குவந்தானமோ மாநிலத்திற்கு வந்து சேர்ந்ததும் ஒருவித உற்சாகம் மனதை அள்ளிக்கொண்டது. அந்தப் பிரதேசமே ஒரு மாய உலகம் போன்றது. பசுமையான காடுகள், வயல்வெளி. பனை, தென்னை மரங்களோடு, கோக்கோ மரங்கள், வாழைகள் என எங்கும் கரும்பச்சை; ஒரே இயற்கைச் செழிப்பு. நாட்டின் 70 சதவிகித கோக்கோ உற்பத்தி இந்தப்பகுதியில்தான் என்றார்கள்.  29 சிறு ஆறுகள் அங்குமிங்குமாக ஓடுவதால் எப்போதும் குளிர்ந்திருக்கும் பூமி.

இந்த மாநிலத்தில்தான் வருகிறது க்யூபாவின் அசத்தலான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பரக்கோவா எனும் ஊர். புதியதொரு உலகைத் தேடித்திரிந்த உலகப்புகழ்பெற்ற மேற்கத்திய மாலுமியான க்றிஸ்டோஃபர் கொலம்பஸ், பஹாமா தீவுகளிலிருந்து பயணித்து, 1492—ல் க்யூபாவின் பரக்கோவா பகுதியில் வந்திறங்கினார்;  இதன் அழகைக்கண்டு சொக்கிப்போனார். `இந்த உலகில் இப்படி ஒரு அழகைத்தான் இதற்குமுன் கண்டதில்லை; பூமியின் காணக்கிடைக்காத அதிசயப் பிரதேசம் இது!` எனத் தன் பிரமிப்பை டையரிக்குறிப்புகளில் காட்டியிருக்கிறார் கொலம்பஸ். கொலம்பஸின் வருகைக்கு முன்காலத்தில் ஒரு கோர சம்பவம் நடந்திருக்கிறது இங்கே. ஸ்பெயின் காலனிய ஆதிக்கவாதிகளால், இங்கு அப்போதிருந்த தைய்னோக்கள் (Tainos) என அழைக்கப்பட்ட பழங்குடிகள் தாக்கப்பட்டு கூண்டோடு அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டு நொந்துபோனேன். ஆனால் சரித்திரக்குறிப்புகளில், ஏதோ ஒரு பேர் தெரியாத வியாதியினால் பீடிக்கப்பட்டு, அந்த இனம் அழிந்துபோனதாகக் கதை கட்டியிருக்கிறார்கள், மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். இப்படி உலக சரித்திரத்தில் இன்னும் எத்தனை, எத்தனை அண்டப்புளுகுகளோ, யார் கண்டது!

நீலப்பச்சைக் கடலை ஒட்டிய பரக்கோவாவின் பூங்காவில், கொலம்பஸின் மார்பளவு பெரிய சிலை ஒன்று கண்டு அதிசயித்தோம். வெளிநாட்டவர் சிலர் ஏற்கனவே அங்கு வந்து புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.  பெரும்பாலும் கனடிய, ஐரோப்பிய டூரிஸ்ட்டுகள். அமெரிக்கர்கள் வர அனுமதியில்லாத காலமது. சிலையின் முன் சென்று அந்த இடத்தின் இனந்தெரியாத அழகையும், காலங்கடந்த அமைதியையும் உள்வாங்கி நின்றேன். கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கொலம்பஸ், நிஜமாகவே அங்கு நிற்பதாய்த் தோன்றியது ஒருகணம் எனக்கு. சிலைக்கு இருமருங்கிலும் நின்று படம் எடுத்துக்கொண்டோம். கொலம்பஸையே தன் மீது ஏற்றிவந்து இந்தப் பிராந்தியத்தின் சொக்கும் அழகைக் காணவைத்த நீலப்பெருங்கடலை ஆசையோடு, வியப்போடு பார்த்தேன். எண்ண அலைகளில் மனதை மோதவிட்டு,  நேரம்போவது தெரியாமல் நிற்கலாம் போலிருந்தது.

 

cubamapwithcities

 

அங்கிருந்து எங்களது ஜீப்பில் குவந்தானமோ நகர் நோக்கி, நாட்டின் தென்கிழக்குக் கோடிக்குப் பயணித்தோம். அதிக தூரமில்லை. எங்கள் டிரைவர் ரஃபேல் லெர்ரோ. `ரஃபா!` என்று செல்லமாக அழைப்போம். சுவாரஸ்யமான இளைஞர். எங்களது பார்ட்டிகளில் `ரோன்` அடித்துவிட்டு அழகாகப் பாடுவார். ஆடுவார். க்யூபாவின் தேசபக்திப் பாடல்களில் ஒன்றான “குவந்தானமேரா குவாஜிரா…!“ எனப் பாடிக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டுவந்தார். “குவந்தானமோவின் கிராமத்துப் பெண் நான்..! “ எனப் பெருமையாக பெண் ஒருத்தி பாடி, ஆடிச் செல்வதாக அமைந்த பாடல். க்யூப தேசத்தவர்களுக்கு மிகவும் பிடித்த நாட்டுப்பாடல். ரஃபா பாட ஆரம்பித்தால் போதும். அவரது உடம்பு தன்னாலே சால்ஸா ஆடும்! வண்டி என்னவோ ஆடாமல் ஓடிக்கொண்டிருந்தது. திருப்தி.

போகிற வழியெல்லாம், பனை, கோக்கோ மரங்கள். வழக்கம்போல் சாலைகளில் ஆளில்லை. குவந்தானமோவை நெருங்குகையில், நாங்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப,  எங்கள் ஜீப் மெதுவாகச் சென்றது. கசங்கிய துணி அணிந்த ஒரு சில இளைஞர்கள் கழுதைகளில் சாலை ஓரமாகப் பயணிப்பதைப் பார்த்தேன். மக்களுக்கு பஸ், வாகனப் ப்ராப்தியில்லை. கழுதைப்பயணம் அல்லது கால்நடைப்பயணம். கொடுமை. 60 ஆண்டு சோஷலிச ஆட்சியின், புரட்சி ஆட்சியின் சமூக விளைவு. சற்று தொலைவு சென்றபின், திடீரென எதிரே கரும்பச்சையில் பெரிது பெரிதாக ஏதோ வருவதைக் கண்டு குழம்பினேன். நெருங்கியபின்தான் தெரிந்தது. மிலிட்டரி ட்ரக்குகள். க்யூபாவுக்கு சீனாவின் சப்ளை! (லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழ்மையையும், இயற்கை வளத்தையும் தனக்கேற்றாற்போல் பயன்படுத்தி கூத்தடித்து வருகிறது சீனா. கேட்பார் இல்லை).

ஹவானாவிலிருந்து சுமார் 875 கி.மீ. தூரத்தில் இருக்கும் குவந்தானமோ மாநிலத்தின் ஒரு சிறிய முனிசிப்பல் நகர் குவந்தானமோ. அங்கு இறங்கி சுற்றுமுற்றும் அதிசயமாய்ப் பார்த்தோம். அரைகுறை ஆடையோடு, அலட்டிக்கொள்ளாமல் நின்றிருந்த இளம் ஆண்கள், பெண்கள் வேற்று தேசத்தவரான எங்களை ஆச்சரியத்தோடு நோக்கினார்கள். எதற்காக உடம்பெல்லாம் இவ்வளவு துணியை இவர்கள் சுற்றியிருக்கிறார்கள் ! – என்று அவர்கள் எங்களைப்பற்றி நினைத்திருப்பார்கள். 18-20 வயது இளம்பெண்கள் சிறிய மார்புக்கச்சை, ஒரு பழைய ஷார்ட்ஸ் போன்ற ஒன்றை அணிந்திருந்தார்கள். இளைஞர்கள் அரை ட்ரவுசர்களைத்தவிர வெற்றுடம்போடுதான் இருந்தார்கள். கோக்கோவின் அதீத விளைச்சலினால் அங்கு வீடுகளில் குடிசைத்தொழில்போல் சாக்கலேட் செய்கிறார்கள். அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் டூரிஸ்ட்டுகளுக்கு அந்த ஊர் இளைஞர்கள் விற்றார்கள்.  ஒரு சி.யூ.சி (Cuban Convertible Currency) விலை. அரை சி.யூ.சி காசைக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டார்கள். அவ்வளவு எளிமை, ஏழ்மை. அவர்கள் பேசும் மொழியும் ஹவானாவில் பேசும் க்யூபன் –ஸ்பானிஷ் இல்லை. பெரும்பாலும் சைகையில் சம்பாஷித்தோம். அமைதியான நட்பான ஜனங்கள். கடற்கரைப்பகுதியில்  உலகிலேயே மிகவும் சிறியவகை அதிசயத் தவளைகள், ஆரஞ்சு நிறக் குட்டி நண்டுகள் ஆகியவற்றை எங்களுக்கு அந்த ஊர் இளைஞர்கள் காண்பித்தார்கள். அந்தப் பிரதேசத்தின் விசேஷங்களில் ஒன்றாம் இது.

க்யூப குவந்தானமோவிலிருந்து 15 கிமீ. தூரத்தில் இருக்கிறது குவந்தானமோ அமெரிக்க கடற்படைத்தளம். அருகிலேயே world’s most notorious detention centre என வர்ணிக்கப்படும் குவந்தானமோ உயர்பாதுகாப்பு சிறைக்கூடம். ஈராக், ஆப்கன் போர்களில் பிடிபட்ட அல்குவைதா மற்றும் ஏனைய தீவிரவாதிகள், ஈராக்கிய வீரர்களை சித்திரவதை செய்த, சர்ச்சையில் மாட்டிய அமெரிக்க சிறைச்சாலை இதுதான். 1903-ல் ஆட்சிசெய்த க்யூப அரசாங்கத்தினால், க்யூப-அமெரிக்க உறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்கு குத்தகையில்  தாரைவார்க்கப்பட்ட பகுதி. இன்னமும் அமெரிக்க வசமே இருக்கிறது. நாங்கள் நின்றிருந்த க்யூபப் பகுதியிலிருந்தே அமெரிக்க கடற்படைத்தளக் கட்டிடங்களை எங்களுக்கு க்யூப நாட்டவர் காட்டினார்கள். அந்தப் பக்கம் போய்ப் பார்க்க டூரிஸ்ட்டுகளுக்கு அனுமதி இல்லை.

என் மூன்று வருட க்யூப நாட்டு வாழ்வனுபவங்கள், இதற்குமுன் அந்த நாட்டைப்பற்றி இதற்குமுன் படித்திராத, கேள்விப்படாத  சில சங்கதிகளை முன்வைத்தன. சமத்துவம் என்கிற பெயரில் காஸ்ட்ரோவின் புரட்சி/சோஷலிச அரசு, அப்பாவி மக்களின் மீது சுமத்தியிருந்த அதீதக் கட்டுப்பாடுகள், கிடுக்கிப்பிடி நெருக்கல்கள் ஆகியவை கண்ணெதிரே தெரிந்ததால் மனதிற்குப் பெரும் வருத்தம் தந்தது. பொருளாதாரம் என்றால் என்னவென்றே அறிந்திராத அப்பாவி க்யூப மக்கள், படிப்பிற்குப்பின் என்ன செய்வதென அறியாது விழிக்கும் இளைய தலைமுறை என ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சமூகமே, வேலைவாய்ப்பின்றி அலைந்து திரிகின்றது.  வாய்திறந்து ஏதும் சொல்ல, செய்ய வழியின்றி, நமது விதி இதுதான் என்பதாக ஒரு நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ஜனங்கள். முன்னாள் சோவியத் யூனியனின் பெரும் பொருளாதார, நிதி உதவிகள் நின்றபின், க்யூபாவின் உயிர்நாடியே திணறியது; க்யூப மக்களின் வாழ்வு நவீன உலகில் காணச்சகிக்காத ஒரு அவலமானது. அங்கேயே தங்கி அவர்களுடனேயே க்யூப சரித்திரத்தின் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வாழநேர்ந்ததால்,  உள்ளிருந்து நான் கண்ட காட்சிகள், நாட்டு நடப்புகள் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

Giant Lenin head, Parque Lenin, Havana

 

நிதி நெருக்கடியும் பாரபட்சபோக்குகளும்

க்யூபாவுக்குள் நுழைந்ததும் முதலில் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டது க்யூபா இரட்டைச் செலாவணி அதாவது இரண்டுவகை கரன்சி நோட்டுகளை அனுமதித்துள்ள அபூர்வ நாடு என்பது. இதில் என்ன விசேஷம் என்றா அப்பாவித்தனமாக கேட்கிறீர்கள்? இருக்கிறது. அமெரிக்க பொருளாதார, பயணத் தடைகளினால் கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டுகாலமாக வெளி உலக சம்பந்தமின்றி,  க்யூப மக்கள் வாழ நேர்ந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப்பின்னோ நிலைமை படு மோசம். அமெரிக்காவோடு இடையறாது  வறட்டுவம்புசெய்துகொண்டிருந்த க்யூபாவுக்கு, ஐரோப்பிய நாடுகளும் உதவுவதாக இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டிய அந்நிய உதவி, டாலர் வரத்து நின்றுபோய் பலவருடங்கள் ஆகிவிட்டன. மக்களை விட்டுத்தள்ளுங்கள். க்யூப அரசாங்க நிர்வாக ஆட்டபாட்டங்களுக்கே போதுமான அந்நியச்செலாவணி கிட்டியில் இல்லை. இந்நிலையில்தான் வெளிநாட்டுக் கரன்சிகளோடு க்யூபாவில் மாற்றத்தக்க ஒரு க்யூபன் கரன்சி நோட்டு- சியூசி (CUC-Cuban convertible currency) அரசினால் அறிமுகப்படுத்தப்ட்டது. ஸ்பெயின் நாட்டு காலனிய ஆதிக்கக்காரர்களுக்கெதிராக, க்யூபப் போராட்டங்களுக்கு வித்திட்ட புரட்சி சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் என க்யூபாவில் கொண்டாடப்படும் ஹொசே மார்த்தியின்(Jose Marti) படம் க்யூப கரன்சி நோட்டுகளில் இருக்கும். நமது கரன்சி நோட்டுகளில் காந்திபடம் போல. சியூசி-யின் விசேஷம் – இது க்யூபாவில் வசிக்க நேர்ந்த துரதிர்ஷ்டம் பிடித்த வெளிநாட்டுக்காரர்கள், சுற்றுலாப்பயணிகளின் உபயோகத்திற்குமட்டுமே. அதாவது, இந்தக் கரன்சி நோட்டை க்யூப நாட்டவர் பயன்படுத்த அனுமதி இல்லை. இந்தக் கரன்சிக்கு க்யூப அரசினால் அமெரிக்க டாலரை விட, செயற்கையாக மதிப்பு உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன் இதன் மதிப்பு ஒரு சியூசி = 1.10 அமெரிக்க டாலர் ! இந்த சியூசி-யை க்யூபாவைவிட்டு வேறு நாட்டுக்கு எடுத்துப்போவதில் அர்த்தமில்லை. ஏனெனில், க்யூபா தவிர வேறு எந்த நாட்டிலும் நீங்கள் இதை மாற்ற/பயன்படுத்தமுடியாது ! வெளிநாட்டவர் க்யூபாவுக்குள் தங்கள் பயணம், தங்குதல் ஆகியவற்றிற்கான ஹோட்டல், டேக்ஸி, ரெஸ்டாரண்ட் என்று தொட்டதெற்கெல்லாம் சியூசி-யில்தான் பணம் கொடுக்கவேண்டும். அமெரிக்க டாலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டுக் கரன்சிகளை அரசாங்க சியூசி-டாலர் ரேட்படி மாற்றவேண்டிய கட்டாயம். எல்லாமே அரசாங்க நிறுவனங்கள்தான் என்பதால், நேராக இத்தகைய அந்நியச்செலாவணி வருமானம் (அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டிஷ் பௌண்ட்) புரட்சி அரசாங்கத்தின் கருவூலத்தில் போய்ச்சேர்ந்தது.

சரி, க்யூப நாட்டவரின் உப்யோகத்திற்கு? இன்னொரு கரன்சி இருக்கிறது. க்யூபன் பெஸோ (Cuban Peso) என்று அழைக்கப்பட்ட மதிப்பு மிகக்குறைவான கரன்சி அது.( 2009-ல் 24 பெஸோக்கள்=1 சியூசி). கிட்டத்தட்ட வெறுங்காகிதம் என அந்நாட்டவரே மெதுவாகச் சொல்வார்கள். நாட்டில் மக்களின் தினசரி செலவினங்களுக்காக அரசு அனுமதித்திருக்கும் கரன்சிதான் இந்த க்யூபன் பெசோ. சிறுசிறு க்யூபன் கடைகள், காய்கறி, மாமிச மார்க்கெட்டுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இனி ஹவானா, சாந்தியாகோ போன்ற முக்கிய நகர்களில் இருக்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகளின் நிலவரம் என்ன? இங்கும் வெளிநாட்டவர், க்யூபா தேசத்தவர் எனப் பாகுபாட்டை, ஓரவஞ்சனையை க்யூப அரசே ஏற்படுத்தியிருந்தது. காஸ்ட்ரோவின் புரட்சி சோஷலிசத்தின் இருண்ட பகுதி! அதாவது டெபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்கள், 3, 5 நட்சத்திர ஹோட்டல்கள், கடற்கரை  உல்லாச விடுதிகள் (beach resorts) ஆகியவற்றில் வெளிநாட்டினருக்கும், அங்கு வேலை செய்யும் க்யூபர்களுக்கு மட்டுமே அனுமதி. சாமானிய க்யூபர்கள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமுடியாது! பணமிருந்தாலும். அப்படியே தப்பித் தவறி அதற்குள் நுழைந்துவிட்டால், அரசாங்க ஏஜெண்ட் ஒருவர் அவரைத் தள்ளிக்கொண்டுபோய் விஜாரிப்பார். அந்த க்யூப ஆசாமி எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார் . ஹவானாவில் பால்கோ (Palco) என்கிற பெயரில் வெளிநாட்டவருக்கென்றே ஏற்படுத்தப்பட்ட அரசு டெபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. வெளியே கம்பீரம். உள்ளே? பெரும்பாலான ஷெல்ஃபுகள் சாமான்களின்றி காலியாகவே இருக்கும்.கேட்டால் அடுத்த வாரம் வரும் என்பார்கள்!

 

NSS_CUBA-advocado.JPG

 

ஹவானாவில் ஆஸ்பத்திரிகளின் கதையும் இதேதான். வெளிநாட்டவருக்கென (தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள்), சிர கார்சியா (Cira Garcia) என்றொரு மருத்துவமனை  க்யூப அரசினால் நடத்தப்படுகிறது. எந்த வலி, வேதனையாக இருந்தாலும், அவசரமாக இருந்தாலும், அங்குதான் வெளிநாட்டவர் செல்லவேண்டும். வேறு ஒரு மருத்துவமனை அருகிலிருக்கிறது என்று நீங்கள் முயற்சித்தாலும், அவர்கள் உங்களை சிர கார்சியாவுக்கு விரட்டிவிடுவார்கள். ஜாக்ரதை! ஒரு காலத்தில் (சோவியத் உதவிகாலத்தில் – எனப் படிக்கவும்), க்யூப மருத்துவத்திற்கு கொஞ்சம் பேர் இருந்தது. இப்போது பத்தோடு பதினொன்னு என்றாகிவிட்டது. ஆயினும் மருத்துவ வசதி இலவசமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பது உண்மை. அதன் தரம்தான்  குறைந்துவிட்டிருந்தது.

க்யூபா அரசமைப்பில், `குபால்சே`(Cubalse) என்கிற கார்ப்பரேஷன், அங்கு வசிக்கும் வெளிநாட்டவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. வாடகை வீடு, ஹோட்டல், வேலைக்காரி, கார்களை விற்றல்/வாங்கல், ஓட்டுநர் என்று வெளிநாட்டவருக்கு எது தேவைப்பட்டாலும் நேரடியாக க்யூபர்களிடம் பேச அனுமதி இல்லை. குபால்சே மூலமாகத்தான் எதனையும் செய்யமுடியும்.. சுருக்கமாக வெளிநாட்டவரின் தேவையை கவனிப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக்கொண்டு காலங்கழித்த அரசு கார்ப்பரேஷன் இது. வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகள் எதுவாயினும், ஆழமாகக் கவனிக்கும் ஒரு அரசு நிறுவனம். சராசரி க்யூபன் (க்யூப அழகி உட்பட)  தங்களோடு வசிக்கும், ஊர்சுற்றும் வெளிநாட்டவனைப்பற்றி தான் அறிந்த தகவல் எதுவாயினும் குபால்சேவுக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளான்/ உள்ளாள் என்பது இதன் தவிர்க்கமுடியாத உள்வரிசை – காஸ்ட்ரோ அரசின் இன்னொரு புரட்சி அம்சம்! ஹவானாவில் கொஞ்சநாள் பழகி, ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டபின், ஒரு டாக்ஸி ஓட்டுநர் பகிர்ந்துகொண்ட தகவல்: `ஹவானாவில் எந்த ஐந்து க்யூபர்களை நீங்கள் எடுத்துக்கொண்டாலும், அதில் இரண்டு பேர் அரசாங்கத்தின்/ஆளும்கட்சியின் ஏஜெண்ட்டுகள் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்களே ஏதாவது உளறிவிட்டாலும் உடனே கோழிச்சொல்லி, எங்களுக்கு வெடிவைப்பவர்கள் இவர்களே!` என்றார் அந்த மனிதர்.

க்யூப மக்களின் சமூக வாழ்க்கை: இலவச ரேஷனோடு, இலவசப்பள்ளிக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவை க்யூப அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் இவற்றின் தரம் பாதாளத்தில் விழுந்துவிட்டது என்பது வேறு விஷயம். 2006-ல் உடல் நலக்குறைவால் ஃபிடெல் காஸ்ட்ரோ பதவி விலகி, தன் சகோதரரான ராவ்ல் காஸ்ட்ரோவிடம் பதவியை ஒப்படைத்தார். ஃபிடெலின் ஆட்சியில், க்யூப மக்களுக்கு சாட்டலைட் டிவி, இண்டர்நெட் போன்றவைகளுக்கு அனுமதி தரப்படவில்லை. ராவ்ல் காஸ்ட்ரோ இத்தகைய தீவிரக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்த ஆரம்பித்திருந்தார் 2008-09-களில்.

 

rock-concert-at-the-karl-marx-theater

 

இத்தனை ஏழ்மை, அரசுக் கட்டுப்பாடுகள், தொல்லைகளுக்கு மத்தியிலும் க்யூப மக்கள் இயல்பாகவே ஜாலியானவர்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்போதும் பாட்டு, ஆட்டம்தான். நல்லவேளையாக, காஸ்ட்ரோவின் அரசு இவர்களது சமூக நிகழ்வுகளில், உரிமைகளில் அவ்வளவாகத் தலையிடவில்லை. க்யூபர்களின் கல்யாண வாழ்க்கை, விவாகரத்து போன்றவை எளிதானது. எப்படி? கல்யாணத்திற்கோ விவாகரத்துக்கோ கோர்ட் கெடுபிடிகளோ, பணத்தேவையோ இல்லை! எந்தவிதப் பீடிகை, அலட்டல் இல்லாமல், கல்யாண உறவில் இணையலாம். விலகலாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்பது போன்ற மனப்பான்மை க்யூப நாட்டவரிடம் உள்ளது. நன்றாகப் பழக்கமாகிவிட்ட க்யூப நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை “எனக்கு இரண்டு மகன்கள்!“ என்றார் சந்தோஷமாக. `ஒருநாள் கூட்டிக்கொண்டுவருவதுதானே` என்றேன். `மாதத்துக்கு ஒருமுறைதான் நான் அவர்களைப் போய்ப்பார்ப்பது வழக்கம்.` என்றார்.

`ஏன், ஹாஸ்டலில் இருக்கிறார்களா?

`இல்லையில்லை. என்னுடைய முந்தைய மனைவியோடு வசிக்கிறார்கள்!`

அவருடைய மனைவியை நான் ஒரு பார்ட்டியில் பார்த்திருக்கிறேன். `முந்தைய மனைவியா! இப்போது இருப்பது ?`

`என் இரண்டாவது! ` சாதாரணமாகச் சொன்னார் அந்த மனுஷன். இத்தனைக்கும் அவருக்கு 34-35 வயதுதானிருக்கும்.

`முதல் மனைவியோடு ஏதாவது ப்ராப்ளமாகிவிட்டதா?` என்றேன்.

`அவள் நல்லவள்தான். ஆனால், நான் இன்னொரு பெண்ணோடு நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள். நான் `சாரி` சொல்லியும், என்னிடமிருந்து விலகிக்கொண்டாள். பிரியும்போது என் மகன்களையும் கூட்டிச்சென்றுவிட்டாள்!`

`இப்போது அந்தப் பெண் தனியாகவா இருக்கிறார்?` கேட்டேன்.

`இல்லை. இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள்! `. அவர் குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது. முதல் மனைவியை இன்னும் விரும்புகிறாரோ!

`உங்கள் பையன்களைப் பார்க்க அவர்கள் வீட்டுக்குப் போகையில், புதுக்கணவரும் இருப்பாரே! ஏதாவது பிரச்னை வராதா?` என்று கேட்டேன்.

.`ஒரு பிரச்னையும் இல்லை. அவளது கணவரும் நானும் ஃப்ரெண்ட்ஸ்!` என்றார் இந்த ஆள்!

`முன்பே உங்களுடைய நண்பரா? தெரிந்தவரா?`

‘அப்படியில்லை. But we are OK!’

எப்படியிருக்கு கதை? நீ அவளோடு ஆடுகிறாயா, நல்லா ஆடு! நான் இவனைக் கோர்த்துக்கொண்டுவிட்டேன்.. போய் வருகிறேன்! –இதுதான். இதுதான் க்யூப மக்களின் சமூகவாழ்வின் சாராம்சம். இது விளையாட்டான விஷயம் என்று உடனே எண்ணிவிடாதீர்கள். காதல், கல்யாணம் போன்ற விஷயங்களில் ஆண்களோ, பெண்களோ சளசளத்து அடித்துக்கொண்டால், அது கவனிக்கப்பட்டு மேலிடத்துக்கு விஷயம் செல்லும். சமூக உறவுகளில் ஆத்திரம், அசூயை காண்பிப்பது, சமூக அமைதியைக் குலைப்பதாகும். அதனால் சட்டவிரோதம் க்யூபாவில். தண்டனை நிச்சயம். எதை அரசாங்கம் விரும்பாதோ, எதனை குற்றமாகக் கருதுகிறதோ, அந்தக் காரியங்களில் க்யூபர்கள் ஈடுபடமாட்டார்கள் என்பது உறுதி. அப்படி ஒரு கெடுபிடி, கட்டுக்கோப்பில் நாட்டை அரைநூற்றாண்டாக வைத்திருக்கிறார் காஸ்ட்ரோ. இப்போது ஆட்சியிலிருக்கும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் தம்பியான ராவ்ல் காஸ்ட்ரோவும்(Raul Castro) டிட்டோ. சட்டதிட்டங்களில் எந்த மாறுதலும் இல்லை.

வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள் க்யூபாவின் அழகான கடற்கரைகளை நோக்கி வருவதாகக் கூறப்பட்டாலும், பின்னணியில் வேறு  ஒரு விஷயமும் மறைவிலிருந்து வெளிப்பட்டது. கனடிய, ஐரோப்பிய மத்தியவயது ஆண்கள் சுற்றுலா என்கிற பெயரில், நிஜத்தில் க்யூபாவின் ஸ்பானிஷ் சாயலடிக்கும் அழகிய நங்கைகளை நாடியே வருகின்றனர் என்பதுதான் அது. இப்படிப்பட்டோர் வெளிப்படையாகவே பதின்மவயது க்யூப அழகிகளைத் தேடினார்கள். வெளிநாட்டவர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், விடுதிகளிலேயே இவர்களை காதும்காதும் வைத்தாற்போல் `அரேஞ்`செய்துகொடுக்கிறார்கள். பின்னே, டூரிஸ்ட்டுகளை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டாமா!  தாய்லாந்தைப்போல் இங்கும் அவர்கள் டூரிஸ்ட்டுகளுக்கு எளிதில் கிடைக்கிறார்கள். ஐரோப்பியக் கிழடுகள் இளம் நங்கைகளை காரில் உட்காரவைத்து, கடற்கரை சொகுசு பங்களாக்களுக்குத் தள்ளிப்போவதை ஜூலை- செப்டம்பர் மாதங்களில் நிறையவே காணலாம். டூரிஸ்ட்டுகளுக்கு துணையாக, தோழியாக, சொகுசு ஹோட்டல்களுக்குள் நுழைய, தங்க, இத்தகைய க்யூப இளம்பெண்களுக்கு மட்டும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது! பெயர் சொல்லப்படாத,  ஒருவகை `பாலியல் சுற்றுலா` என இதனை வகைப்படுத்தலாம். இத்தகைய பெண்களுக்கும், தங்களது வருமானத்திற்கு, குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கு இது ஒரு உத்தியாக, வழியாகவே தோன்றுகிறது.  பெற்றோர் தங்களின் பதின்மவயதுப் பெண்,  ஊர்பேர் தெரியாத வெளிநாட்டவனுடன் ஊர்சுற்றிக் களித்து, பணம் சேர்த்துவருவதை அமைதியாக அனுமதிக்கிறார்கள். அரசாங்கத்திடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதோடு, மறைமுக ஒத்துழைப்பும் கிடைக்கிறது இவர்களுக்கு என்பதனையும் சிலமாதங்களில் புரிந்துகொண்டேன். க்யூபாவின் கம்யூனிஸ்ட் அரசு இந்தப் பெண்களைப் பயன்படுத்தி, வந்து செல்லும் வெளிநாட்டவர்பற்றிய அரிய தகவல்களையும் சேகரிக்கிறது! க்யூபாவிலேயே எளிதில் கிடைக்காத,  விலையுயர்ந்த `கொஹிபா`(Cohiba) போன்ற க்யூபன் சிகார் வகைகளை, அரசு நிறுவனங்களில் சொல்லி, ப்ரிமியம் ரேட்டில் வெளிநாட்டவர்க்கு வாங்கித் தருவார்கள் இந்தப் பெண்கள். அரசுக்கேற்ற குடிமகன்கள்-இல்லை-குடிமகள்கள். ஜாடிக்கேத்த மூடி!

கல்வி, கலாச்சாரம்: க்யூப நாட்டவர் பகலெல்லாம் காஃபி குடித்துக்கொண்டு, புகைத்துக்கொண்டு, சிறுசிறு வேலைகள் கிடைத்தால் செய்துகொண்டு பொழுதுபோக்குவார்கள். இரவில் சிகார், க்யூபன் சால்ஸா நடனம், க்யூபன் மியூசிக். ஃப்ளாமெங்க்கோ, ஆட்டத்தினிடையே அருந்தி மகிழ ரம் அல்லது பீர். பாக்கெட்டிற்கு ஏற்ப, அல்லது உங்களை அழைத்துவந்திருக்கும் நண்பரின் தாராளத்துக்கு ஏற்ப! ராத்திரி 1 மணி, 2 மணி வரை குடித்து, ஆடி திரும்புவார்கள்.  குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறவன் க்யூபனாக இருக்கமுடியாது. நாகரீகமான நடத்தை ஸ்பானிஷ் கலாச்சாரத்தின் கொடை; க்யூப அரசின் கட்டுப்பாட்டுமுறையும் கூட.

மக்களிடையே தங்கள் க்யூபக் கலாச்சாரப் பெருமிதம் ரொம்பவே உண்டு, குறிப்பாக க்யூபாவின் ஆஃப்ரோ-க்யூபன் ஜாஸ்(Afro-Cuban Jazz),சால்ஸா (Salsa), ஃப்ளாமெங்க்கோ(Flamenco சங்கீதம், நாட்டியம் போன்றவற்றில் ஆர்வமும் பெருமையும் உண்டு. அதேபோலவே தங்கள் நாட்டின் உலகப்புகழ்பெற்ற படைப்புகளான க்யூபன் சிகார் என அழைக்கப்படும் க்யூபன் சுருட்டுகள், பிரத்தியேக ருசியோடு அந்த நாட்டில் தயாராகும் ரோன் (ரம்) வகைகள் மேலும். க்யூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சி ஹீரோவுமான  ஃபிடெல் காஸ்ட்ரோவுக்காக ஸ்பெஷலாகப் பதனிடப்பட்டு தயாரிக்கப்படும் சுருட்டுவகை, உலகப்புகழ்வாய்ந்த `கொஹிபா` (Cohiba).மேலும் வகைகள்: மாண்டெ க்றிஸ்த்தோ, பொலிவார் போன்றவகை சுருட்டுகள் (Monte Cristo, Bolivar). க்யூபாவின் ஹவானா க்ளப் ரம் வகைகள் (Havana Club Ron ), உலகக் குடிகார அரங்கில் மதிக்கப்படும் ஒரு ப்ராண்ட்! இதுதவிர, க்றிஸ்த்தால் (Crystal) மற்றும் புக்கனேரோ (Buccanero) என்பவை ப்ரபலமான க்யூப பீர்கள் (Cuban beers). தரமானவை.

ஹவானா பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மாணவரைவிடவும்  வெளிநாட்டவர் அதிகம்போல் தோன்றும். இங்கு மருத்துவம் படிக்க பக்கத்து நாடுகளிலிருந்தும், முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்தும் கட்டணச்சலுகை பெற்று மாணவர்கள் வருகிறார்கள். நமது நாட்டின் வடகிழக்கிலிருந்து ஒரு மாணவி ஹவானா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார் அப்போது. முதல் வருடம் ஸ்பானிஷ் மொழி, மற்ற வருடங்களில் மருத்துவம் என மொத்தம் 6 வருட மருத்துவப்படிப்பு அங்கே. ஹவானாவில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதிவகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு போலீஸ், டாக்ஸி ஓட்டுனர், ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் போன்ற சிறு பணிகளில் அமர்ந்துவிடுகிறார்கள். மெத்தப் படித்ததால் அதற்கேற்ப சம்பளம் தரும் உத்தியோகங்கள் க்யூபாவில் இல்லை. வெளிநாடு போக க்யூபர்களை காஸ்ட்ரோ அரசு அனுமதிப்பதில்லை. அதற்கான பணத்திற்கும் அவர்கள் எங்கே போவார்கள்?

க்யூப நாட்டவர்களில் பலர் நல்ல வாசகர்கள். ஸ்பானிஷில் புத்தகங்கள் கிடைத்தால் ஆசையோடு படிப்பவர்கள். கலாரசனை உடையவர்கள். தங்களுக்குப்பழக்கமில்லாத பிரதேசங்களின் மொழி,கலாச்சார, தத்துவ சிந்தனைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பதை அறிந்தேன். இந்திய அரசினால் க்யூப நாட்டவரின் பயன்பாட்டுக்கென ஸ்பானிஷ் மொழியில் India Perspectivas என்கிற இந்திய கலாச்சார மாதாந்திர இதழ் ஒன்றை வெளியிட்டது. க்யூப நாட்டவர் இந்திய தூதரக லைப்ரரிக்கு வந்து, இதழின் இலவச காப்பியை ஆர்வமாக வாங்கிச்செல்வதை பார்த்திருக்கிறேன். ஆங்கிலம் கற்றவர்கள் அங்கே மிகக் குறைவு. ஓரளவு ஆங்கிலம் கற்றவர்கள் – டாக்ஸி ஓட்டுநர்கள்கூட,  நிறையப் பொது அறிவு வைத்திருக்கிறார்கள். ஒருவர் என்னோடு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டுவருகையில் `நீங்கள் இந்தியரா?` என்றார். இவ்வளவு புரிந்துகொண்டாரே என்கிற ஆச்சரியத்தைக் காட்டாது சுருக்கமாக ‘ஆம்’ என்றேன். ‘மஹாத்மா காந்தியின் நாடு !’ என்று கூடவே ஒரு கமெண்ட் போட்டு அசத்தினார். சரி! இவரோடு கொஞ்சம் பேசலாம்! `காந்தியைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?` என்றேன். `அவரது வாழ்க்கைபற்றிய புத்தகங்களை நான் ஸ்பானிஷில் படித்திருக்கிறேன். I like him. He was a great man!’ என்றார். எனது தேசப்பிதாவை கடல்கடந்த தூரத்து நாடொன்றில் ஒருவன் தெரிந்துவைத்திருக்கிறான்; புகழ்கிறான். சிலிர்த்த நான், காலரை லேசாகத் தூக்கிவிட்டுக்கொண்டேன்!

2007-08 –வாக்கில், க்யூப நாட்டவரிடையே இந்திய பாலிவுட் சினிமா ப்ராபல்யம் அடைந்தது! அப்போது அக்டோபர் மாதம் ஹவானாவில் உள்ள ஒரு தியேட்டரில் இந்திய தூதரக முயற்சியால், பிரபல ஹிந்திப் படங்கள் திரையிடப்பட்டன. அமோக ஆதரவு. க்யூப தேசத்தவர் தியேட்டர்முன் அலைமோதினார்கள். இந்திய திரைப்பட விழா வாரம் முடிந்தபின்னும், சாமானிய க்யூபர்கள் தூதரகத்துக்கு வந்து அடுத்த படவிழா எப்போது என்று கேட்டுச்சென்றார்கள்.

இந்திய தூதரக லைப்ரரிக்கு வந்து புத்தகம் எடுக்கும் ஒரு மத்திமவயதான க்யூபப் பெண், ஆங்கிலம் பேசத்தெரிந்தவர் அறிமுகமாகி தோழியாகிவிட்டார். அவர் ஒருநாள், `இந்திய ஞானகுருக்களைப்பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆசை!` என்று ஒரு போடுபோட்டார். எனக்கோ இன்ப அதிர்ச்சி! இவருக்கு நமது ஆன்மீக குருக்களைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்குமா என சந்தேகித்து, லைப்ரரியில் விவேகானந்தர் புத்தகங்கள், பரமஹம்ச யோகானந்தாவின் ‘Autobiography of a Yogi’ போன்றவற்றைக் காட்டினேன். `படித்துவிட்டேன்` என்றார் சாதாரணமாக! நான் உஷாரானேன். இவர்களிடம் ஜாக்ரதையாக இருக்கவேண்டும்! மாலை சந்திப்பதாகக் கூறினேன். சந்தித்தேன். தவறாது வந்திருந்தார் அந்தப் பெண் தன் நண்பர் ஒருவருடன். பேச்சு மீண்டும் இந்திய குருக்களைப்பற்றியே சுற்றியது. அரவிந்தர், ரமண மகரிஷி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றி நான் கொஞ்சம் குறிப்பிட்டு, ஒரு தயக்கத்துடன் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி லேசாக சொன்னேன். அங்கேயும் அதிர்ச்சி காத்திருந்தது! ஜேகே-யின் அமெரிக்க பயணங்கள்பற்றித் தெரிந்துவைத்திருந்தார்கள் அந்தப் பெண்ணும் அவரது நண்பரும். மேலும் ஜேகே-பற்றி, அவரது வாசகங்களில் `தனக்குள்ளே சென்று ஆராய்த`லின் உட்கருத்தென்ன எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். 1984-ல் நான் டெல்லியில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கங்களுக்கு சென்றிருந்தேன் என்றதும், என்னை  மரியாதைகலந்த கவனிப்புடன் பார்த்தார்கள். அற்புதமான, ஆழமான மனிதர்கள். க்யூபாவில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவர்கள்.

பாராட்டத்தக்க சில அம்சங்கள்: ஃபிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் – (2006-லிருந்து சகோதரர் ராவ்ல் காஸ்ட்ரோ), சோஷலிச அரசமைப்பில் சில, பல நல்லவைகளும் நடந்துள்ளன என்பதையும் உணர்ந்தேன். தலைகொள்ளா பிரச்சினைகள் உள்ள ஒரு நாட்டு மக்களிடம்  தேசபக்தி, க்யூபன் என்கிற ஒற்றுமை, பெருமித உணர்வு, civic sense காணப்படுவது நல்ல விஷயம்.  ஒவ்வொரு க்யூபனும் தன் வீட்டை, வசிக்கும் தெருவை சுத்தமாக வைத்திருப்பான். தெருக்களில் குப்பையைக் காண்பது அபூர்வம். இன்னொரு மிக முக்கியமான, பாராட்டத்தக்க அம்சம் என நான் கருதுவது: நாட்டின் இயற்கை வளங்களை, அவை சாலையோர மரங்களாகட்டும், கிராமப்புற வாழைத்தோட்டங்கள், மாந்தோப்புகள், கோக்கோ, தென்னை, பனை மரவகைகளாகட்டும், நீர், நிலவளமாகட்டும், கடற்கரைகள், மலைப்பகுதிகளாகட்டும் – யாரும் அனாவசியமாக் கை வைக்க அரசின் அனுமதியில்லை. பொறுப்பில்லாமல் யாரும் மரங்களை வெட்டியதாக, காடுகளை, நீர்நிலைகளை சிதைத்ததாகக் கேட்கவில்லை. அருமையிலும் அருமை.

க்யூப நாட்டவரிடம் மற்ற லத்தீன் அமெரிக்க நாட்டவரோடு ஒப்பிடுகையில் வன்மம், வெறுப்பு போன்ற குணங்களின் கடுமைகளைக் காண்பதரிது. பெரும்பாலும் சரியான நடத்தை, நேர்மை இவற்றை க்யூபர்களிடம் எதிர்பார்க்கலாம். பின்னிரவில் தனியாக ஒரு வெளிநாட்டுப்பெண் பயணிக்க நேர்ந்தாலும், டாக்ஸிக்காரர் பாதுகாப்பாக சரியான இடத்தில் கொண்டுவந்துவிட்டு, சரியான கட்டணத்தை வாங்கிச்செல்வார். காஸ்ட்ரோ அரசின் தனிப்பட்ட, புகழத்தக்க சாதனையாக நான் இன்னொன்றையும் குறிப்பேன்: அண்டை நாடுகளான கொலம்பியா, மெக்சிகோ, பொலீவியா போன்ற நாடுகளைப்போல் அல்லாமல், க்யூபாவில் போதைப்பொருட்களின் வெறியாட்டம் துளியும் இல்லை எனலாம். பெருங்குற்றங்கள்பற்றி நான் ஏதும் கேட்டதில்லை. குற்றங்களை அழிப்பதில், கட்டுப்படுத்துவதில் க்யூபன் போலீஸ் திறமையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

 

Vintage postage stamp. Sports. Cuba.

 

விளையாட்டுக் கலாச்சாரம்

க்யூபாவின் விளையாட்டுக் கலாச்சாரம் சிறப்பானது. பாராட்டுக்குரியது. க்யூபர்களுக்கு பேஸ்பால் (Baseball) என்றால் உயிர். கூடவே, குத்துச்சண்டை (boxing), மல்யுத்தம் (Wrestling), ஜூடோ (Judo) போன்றவற்றில் ஒலிம்பிக் பதக்கங்களை அனாயாசமாகத் தட்டிச்செல்லும் நாடு. ஒலிம்பிக் கிராமத்தில் க்யூப வீரர்கள் திறமைமிகுந்த பயிற்சியாளர்களிடம் கடுமையாக, முறையான பயிற்சிக்குள்ளாகிறார்கள். கிராமத்தை விட்டு வெளியே ஊர்சுற்ற, ஏனைய க்யூபர்களைப்போல், பெண்களோடு அலைந்து திரிய அவர்களுக்கு அனுமதி இல்லை. மனதில் எப்போதும் அடுத்த ஒலிம்பிக்கிற்கான கடும் முயற்சிகள், ஏற்பாடுகள். பெரும்பாலும் கருப்பினத்தவரே க்யூபாவின் சார்பில் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. க்யூபாவின் விளையாட்டு அமைச்சரும் ஒரு கருப்பினத்தவரே. நான் க்யூபாவில் பணிபுரிந்த காலத்தில்தான், இந்தியா க்யூபாவுக்கிடையே விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. விளைவாக, க்யூபக் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் இந்தியா சென்று நம்மவர்களுக்கு, குறிப்பாக ஹரியானா வீரர்களுக்குப் பயிற்சி தந்தார்கள். க்யூபாவின் ஒத்துழைப்பினால்,  இந்தியா விஜேந்தர் சிங், யோகேஷ்வர் தத் போன்ற வீரர்களை சர்வதேசத்தரத்திற்கு உயர்த்தி பதக்கங்கள் வெல்லமுடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2016 க்யூபப் பயணத்துக்குப்பின், இதுகாறும் ஸ்தம்பித்துப்போயிருந்த, இருதரப்பு ராஜீய உறவுகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன. க்யூபாவுடனான வணிகம், சுற்றுலா போன்றவற்றில் இருந்த கடும் தடைகள் விலக்கப்படும் நிகழ்வுகள் ஆரம்பம் கண்டுள்ளன. ஜனாதிபதிகள் பாரக் ஒபாமா, ராவ்ல் காஸ்ட்ரோ தலைமையில் இரு நாட்டு மக்களிடையே வணிகம், சுற்று்லா, பொருளாதார, கலாச்சார ஒத்துழைப்பு என்று புதிய வசதிகள், வாய்ப்புகள் பெருகும் நாட்கள் இனி தொலைவிலில்லை. அமெரிக்க, ஐரோப்பிய, உலகவங்கி நிதி உதவிகள், வணிக ஒத்துழைப்பால், க்யூபாவின் பொருளாதாரம்  சீரான வளர்ச்சிப்பாதையில் செல்லும வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. அறுபது ஆண்டுகாலத்துக்கும் மேலாக கஷ்டத்துக்கு மேல் கஷ்டமாக அனுபவித்துவந்த க்யூப மக்களின் வாழ்வில் விடிவுகாலம் வந்துவிட்டது எனலாம்.

இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் தருணத்தில், கடந்த 10 வருடங்களாக உடல்நலம் குன்றியிருந்த,  க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் மறைவுச் செய்தி வந்திருக்கிறது. க்யூப, லத்தீன் அமெரிக்க சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சகாப்தம் காஸ்ட்ரோ. அவரது ஆட்சிவகை, தன்மை, அதன் நீண்டகால விளவுகள்  எதுவாயினும், ஏனைய லத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளின் மத்தியில், க்யூபாவை போதைப்பொருள் அபாயம் இல்லாத, பெருங்குற்றங்கள் காணப்படாத, மிகவும் அமைதியான நாடாக ஆக்கிய பெருமை காஸ்ட்ரோவுக்கு உண்டு. பனிப்போர் காலத்திய கூட்டுசேரா நாடுகள் அமைப்பின் (Non-Aligned Movement) நேரு, நாஸர், ஜூலியஸ் நைரேரே போன்ற உலகத் தலைவர்களின் வரிசையில் சத்தானவர், சத்தமானவர்  எனவும் சரித்திரம் அவரைப் பாடும்.

 

http://solvanam.com/?p=47689

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.