Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா

Featured Replies

  • தொடங்கியவர்

“என் அம்மா: எனக்கு எவ்வளவு முக்கியமானவர்!” - ஜெயலலிதா எழுதிய கட்டுரை

 

ஜெயலலிதா அரசியலில் காலடி வைத்த புதிதில் டெல்லியில் தனக்கு நெருங்கிய தோழியாக இருந்தவர் பத்திரிக்கையாளர் வாசந்தி. இவர் கடந்த 2011-ம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். ஜெயலைதாவின் பால்ய காலத்தில் இருந்து தொடங்கும் இந்த நூலில் அவரது வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களாக ஜெயலலிதாவே குறிப்பிட்ட விஷயங்களை இதில் எழுதியிருந்தார். இந்த நூலை வெளியிட கூடாது என்று ஜெயலலிதா தடை வாங்கினார். பெங்குவின் நிறுவனம் வெளியிடக்கூடாது என்று வாங்கிய 5 ஆண்டுகள் தடை கடந்த நிலையில் கடந்த மே மாதம் ஈ-புத்தகமாக இந்த வாழ்க்கை வரலாறு வெளியானது. அதிலிருந்து சில குறிப்புகள்.. 

Jaya_2_11031.jpg

"மாலை மங்கும் இருட்டு வேளையில் தனது தந்தையைப் பிணமாகத் தூக்கி வந்த காட்சியை அம்மு மறக்கவேயில்லை. அப்போது அவருக்கு 2 வயதுதான். இருந்தாலும் அவர் அந்தக் காட்சியை அப்படியே விவரிக்கும் அளவிற்கு நினைவில் வைத்திருந்தார். அதன் பின்னரே அவரின் ஒவ்வொரு நாளும் மாற்றத்துடன் தான் இருந்தது." 

"கணவன் இறந்ததும் வேதா (சந்தியா) தனது இரண்டு பிள்ளைகளுடன் தனது தந்தை ரங்கசாமி அய்யங்கார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ரங்கசாமி அப்போதே பாரத் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேதா, அம்புஜா, பத்மா ஆகிய மூன்று மகள்கள் மற்றும் சினிவாசன் என்ற மகன் என நான்கு பிள்ளைகள் ரங்கசாமி அய்யங்கார்-கமலாம்மா தம்பதியருக்கு" .

"தன் தங்கை பத்மாவின் பொறுப்பில் அம்முவையும் மகன் பப்புவையும் பெங்களூரிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு நடிக்கப் போய்விட்டார் சந்தியா. பிஷப் காட்டன் ஸ்கூலில் கல்வியைத் தொடங்கிய ஜெயலலிதா ஒவ்வொரு வார விடுமுறையிலும் அம்மாவின் வருகைக்காக ஏக்கத்துடன் காத்திருப்பாராம். அப்படி வரும் சந்தியா மீண்டும் ஊருக்கு கிளம்பும் போது ஜெயலலிதா அழுவார் என்று அவருக்குப் புத்தகங்களைப் படிக்கத் தருவாராம். அப்படித் தொடங்கியது ஜெயலலிதாவின் வாசிப்புப் பழக்கம்". 

ஜெயலலிதா

"சித்தி பத்மாவிற்குத் திருமணம் ஆகியதும் வேறு வழியின்றிச் சந்தியா பிள்ளைகளைச் சென்னைக்கு அழைத்து வரவேண்டியிருந்தது. சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா சிலநாட்களிலேயே ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையானார். பள்ளியில் கிடைத்த உற்சாகம் வீட்டில் அம்முவுக்குக் கிடைக்கவேயில்லை. படிப்பில் வாங்கும் மதிப்பெண்களைப் பாராட்டக்கூட அவரது அம்மாவால் அப்போது முடியவில்லை. சினிமா சினிமா எனப் பறந்து கொண்டிருந்த சந்தியாவை ஜெயலலிதா சந்திப்பதே அரிதாக இருந்தது. அன்றைய அம்முவிற்கு மகிழ்ச்சியளித்த ஒரே விஷயம் பள்ளி மட்டுமே என்பதாக இருந்தது." 

"என் அம்மா: எனக்கு எவ்வளவு முக்கியமானவர்" என்கிற கட்டுரையை எழுதியதற்காக ஜெயலலிதாவுக்குப் பரிசு கிடைத்தது. அந்தக் கட்டுரையை அவரின் ஆசிரியர் பள்ளியின் ப்ரேயரில் படித்துக் காட்டி பாரட்டினார். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வீட்டுக்கு வந்த அம்முவுக்குச் சந்தியா இல்லாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. இரண்டு நாட்களாக வராத சந்தியாவிற்காகக் காத்திருந்த அம்மு அப்படியே அந்தக் கட்டுரை எழுதிய நோட்டை கட்டிப்பிடித்தபடி சோபாவில் தூங்கிவிட்டார். இரவில் வீட்டுக்கு வந்த சந்தியா அந்த நோட்டை எடுக்கப்போகப் படாரென விழித்த அம்மு அப்படி ஒரு அழுகை அழுதிருக்கிறார். இது அவரின் மனதில் அழியாத சோகமாய் பதிந்த ஒன்றாக மாறிவிட்டது" 

"தினமும் அம்மா லேட்டாக வீட்டுக்கு வருவதும். அவரைத்தேடி வீட்டுக்கு வரும் சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களும் அம்முவிற்குச் சினிமாவின் மேலேயே வெறுப்பை வரவழைத்தது. பள்ளி படித்து முடித்தபின் வழக்கறிஞராகவோ, டாக்டராகவோதான் ஆகவேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். வாய்ப்பிருந்தால் ஐ.ஏ.எஸ் எழுதி இந்திய ஆட்சித்துறைப்பணிக்குப் போகவேண்டும் என்றும் எண்ணினார். கனவிலும் சினிமாவை நினைக்கவில்லை" .

இவை எல்லாவற்றையும் விட ஜெயலலிதாவின் மனதில் அழியாத கறையாகவும், எதையுமே மறைக்காத தன் தாயிடம் கூட இறுதிவரை மறைத்த ஒரு செய்தி உண்டு. அது அம்மு தன் வாழ்வில் சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம். அவமானத்தால் கூசிக்குறுகி நின்ற அந்தக் கணம் தன்னால் எப்போதுமே மறக்க முடியாது என்று கூறுகிறார் ஜெயலலிதா. இதோ அவரின் வார்த்தைகளிலேயே.. 

"அப்போது தியாகராய நகர் சிவஞானம் தெருவில் குடியிருந்தோம். 13 வயது எனக்கு, விளையாட்டும், துடுக்குத்தனமுமாக இருந்த என்னை வீட்டுக்குள்ளேயே அம்மா இருக்கச் சொன்ன காலகட்டம். என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் நான் படித்த சர்ச் பார்க்கில் படிக்கும் என் சீனியர் வீடும் இருந்தது. மாலை வேளைகளில் மாடியில் இருந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பேன். அப்போது ஒரு ஜெயின் பையன் அந்த அக்காவை நோக்கி எதோ சைகை செய்வான். பதிலுக்கு அவரும் கையை ஆட்டுவார் . அப்படியே பேசிக்கொள்வார்கள். எனக்கு விவரம் புரியாத வயசு என்றாலும் இவர்களின் உறவு ஓரளவுக்குப் புரிய தொடங்கியது. அந்தப் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டபோது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், இதற்கு நான் உதவவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். கொஞ்சம் த்ரிலிங்காக இருந்ந்தாலும் அந்தப் பெண் மிகவும் வேண்டிக்கொண்டதால் சம்மதித்தேன்.

அந்தப் பையன் தெரு முனையில் வந்தால் தன்னிடம் சொல்ல வேண்டும் என்றும் தான் சொல்வதை அவரிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒரு நாள் அந்தப்பெண் வரவில்லை இதை அந்தப் பையனிடம் என வீட்டு மாடியிலிருந்து சொல்லிக்கொண்டிருந்ததை  பால்காரர் பார்த்துவிட்டார். அந்தப் பெண் வீட்டிலும் இதைச் சொல்லிவிட்டார். அதன் பின் அந்தப் பெண் ஜன்னல் பக்கமே வரவில்லை. இந்த விவரம் தெரியாமல் அந்தப் பெண்ணைத் தேடி அவரின் வீட்டுக்கு நான் போனேன். அவரின் வீட்டார் அனைவரும் என்னை அவமானமாகத் திட்டினார்கள். காரணம் அந்தப் பெண் நான்தான் அந்த ஜெயின் பையனை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் என்று தான் தப்பிபதற்காகச் சொல்லியிருந்திர்ருக்கிறார். என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் துரோகம் அது. என்றுமே மறக்கமுடியாத அவமானம் அது." 

http://www.vikatan.com/news/politics/74593-glimpses-from-the-banned-jayalalithaa-biography-book.art

  • Replies 56
  • Views 22.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

“எனக்கென்று யார் இருக்கிறார்கள்?”

 

p12a.jpg

dot.jpg ``எனக்குள்ளும் சோகம், கோபம், அழுகை... எல்லாம் உண்டு. ஆனால், ஒரு தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது.’’

dot.jpg ``என்னை இகழ்பவர்களுக்கு, என் வெற்றியின் மூலம் மட்டுமே பதில் சொல்வேன்.’’

dot.jpg ``என் அம்மாவுடன் நிறைய நேரத்தைச் செலவழித்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் எப்போதும் உண்டு.’’

dot.jpg ``என் அம்மா இறந்தபோதும், எம்.ஜி.ஆர் இறந்தபோதும் காட்டில் தொலைந்த குழந்தையாகப் பரிதவித்தேன்.’’

dot.jpg ``என் அரசியல் பாதையை எம்.ஜி.ஆர் மென்மையாக்கிவிட்டுச் செல்லவில்லை.’’

p12b.jpg

dot.jpg ``அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவெச்சு, சாதாரணமாக இருக்கிற நல்ல குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகியிருப்பேன்... ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்ல இருந்திருக்காது. வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாகப் போயிருக்கும்.’’

dot.jpg ``குடும்ப அரசியல் என்னும் நச்சு மரம் தமிழகத்தில் வேர்களையும் விழுதுகளையும் பலப்படுத்திக் கொள்ளுமேயானால், அது தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்தாக முடியும்.’’

dot.jpg ``எனக்கென்று யார் இருக்கிறார்கள்? நான் தவவாழ்க்கை வாழ்கிறேன்.’’

dot.jpg ``உயிரை விடவேண்டுமானால், கட்சிக்காக விடத் தயார்.’’

p12.jpg

p12e.jpg

p12d.jpg

dot.jpg``மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்கு அரசை எப்போதும் சார்ந்து இராமல், தங்களது சொந்தக் கால்களிலேயே நின்று தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு, அவர்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.’’p12j.jpg

dot.jpg``வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட சவால்களையும் போராட்டங்களையும், துணிவோடும் உறுதியோடும் திடமாகவும் சந்தித்திருக்கிறேன். பெண் என்பதாலேயே எந்தச் சாதகமும் அனுகூலமும் ஒருவருக்கு ஏற்பட்டுவிடாது. அதிலும் குறிப்பாக அரசியலில் அதற்கு வாய்ப்பே இல்லை.’’

dot.jpg``எனக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை; குடும்பம் இல்லை. நாட்டுக்காகப் பணியாற்றத்தான் நான் இங்கு இருக்கிறேன்.’’

dot.jpg``நான் மனஉறுதி படைத்தவள்; கடுமையாக உள்ளவள். இப்படி இல்லை என்றால், அரசியலில் எனக்கு ஏற்பட்ட கரடுமுரடான நிலையில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது. இந்த நிலைக்கும் நான் வந்திருக்க முடியாது.’’

p12c.jpg

dot.jpg``நான் மற்றவர்களை அனுசரிக்கும் திறன் வாய்ந்தவள்தான். ஆனால், எனக்கு என்று சில கொள்கைகள், எண்ணங்கள் உள்ளன. அதை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.’’

dot.jpg``நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட ஒரு நிர்வாகத்தை நான் கொடுப்பேன்.’’

dot.jpg``தமிழக மக்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்...

`வருந்தாதே ஏழை மனமே
வரும்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்'. ’’

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்த இட்லி கடை பெண்!

 

ஜெயலலிதா

ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் இழப்பை தாங்க முடியாமல் அவரது தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.போயஸ் கார்டன் பகுதியில் நுழைந்து விட்டால் பாதுகாப்புகள் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் போலீசார் கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள்.அதற்கு பயந்தே அந்த வழியாக பொதுமக்களும் போக மாட்டார்கள்.வாகன ஓட்டிகளும் செல்ல மாட்டார்கள்.அந்த பகுதி மட்டுமல்ல ஜெயலலிதாவின் மனதிற் குள்ளும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது.அப்படிப்பட்ட இரும்பு ( இதயம்)கோட்டைக்குள்ளும் ஒரு சாதாரண பெண்மணி இடம்பிடித்தார் என்றால் அவர்தான் சரஸ்வதி !

 

இரும்பு கோட்டைக்குள் இடம் பிடித்த இட்லி கடைக்காரப்பெண் !

பயத்தை ஏற்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட பகுதியாக காட்சி அளித்த அந்த பகுதியில் ஓட்டல் வைத்தார் சரஸ்வதி.கணவனை SARASWATHY_13215.jpgஇழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சரஸ்வதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.ஓட்டலை நடத்த விடாமல் காவல்துறையும்,மாநகராட்சியும் விரட்டிய நிலையில் சாப்பாட்டு கூடையை எடுத்துக்கொண்டு போயஸ் கார்டனை சுற்றி சுற்றி வந்துள்ளார்.முதல்வரை  பார்த்து வணங்குவதும், சிரிப்பதுமாக இருந்தவருக்கு ஒரு நாள் முதல்வரே காரை நிறுத்தி வணக்கம் தெரிவித்துள்ளார்.அதுவரை சாப்பாட்டு கூடையை எடுத்துக் கொண்டு அலைந்தவருக்கு அன்றில் இருந்ததுதான் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடி தளர்த்தப்பட்டுள்ளது.பின்னர் காவல்துறை அதிகாரிகாரிகளே அவருடைய ஓட்டலில் போய் சாப்பிடுவதுமாக , இருந்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் அவருடைய மனநிலை எப்படி உள்ளது ?என்று அவரிடம்  பேசினோம்.

ஏழையின் மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பு

"1991- ல் இருந்து இங்குதான் கடை வைத்துள்ளேன்.என்னுடைய கடையை கடந்து போகும் ஒவ்வொரு நாளும் என்னை பார்த்து  சிரிப்பார்.நான் கையெடுத்து கும்பிடுவேன்.அவரும் பதிலுக்கு கையெடுத்து கும்பிடுவார்.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கடையை எடுத்துவிட்டார்கள்.நான் மீண்டும் கூடையை தூக்கிகொண்டுஅலைந்து கொண்டு இருந்தேன்.2001 - ல் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.காவல்துறை அதிகாரிகளிடமும் ,மாநகராட்சி அதிகாரிகளிடமும் பாத்திரத்தை போய் கடையில் வைக்குமாறு  கூறியுள்ளார்.பின்னர் எடுத்துச் சென்ற பாத்திரங்களை அதிகாரிகளே கொண்டு வந்து வைத்தார்கள்.என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.இந்த ஏழையின் மீது அவருக்கு இருந்த எல்லையற்ற அன்பை கண்டு வியக்கிறேன்.

சரஸ்வதியிடம் கலகலவென சிரித்த ஜெயலலிதா !

ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கொஞ்ச நாள் கடையை திறக்கவில்லை.முதல்வர் அழைத்ததாக வந்து கூட்டிக் கொண்டு சென்றார்கள்.உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள். நலம் விசாரிக்கவே அழைத்தேன் என்றார்.இத்தனை நாள் உங்களை பார்க்கிறேன்.ஒரு முறை கூட  நீங்கள் என்னிடம் எந்த உதவியும் கேட்டதில்லை.உங்களுடைய கடின உழைப்பு எனக்கு பிடிக்கும் என்றார் முதல்வர் .

பிறகு அவருடைய டாக்டர் சசிகுமாரைஅழைத்து சிகிச்சைஅளிக்கும்படி கூறினார்.அதோடு நில்லாமல் வருமானம் இல்லாமல் தவிப்பதை கண்டு என் கஷ்டத்திற்கு ஏற்றவாறு பணத்தையும்கொடுத்து உதவினார்.அம்மா உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை என்றேன் சொல்லுங்கள் என்றார்.சாதாரண தொண்டர்களிடம்  நேர்காணுங்கள் அம்மா.கடையில் வந்துதொண்டர்கள் பேசுகிறார்கள் என்றேன்.இதை கேட்ட முதல்வர் ஜெயலலிதா கலகலவென சிரித்தார்.

அவருடைய புகழை பலரும் பாட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் சோறு சமைத்து ஏழைகளுக்கு கொடுத்து விட்டு வருகிறேன். என்னை வாழ வைத்த தெய்வம் அவர்.அந்த தெய்வம் செல்லாத இந்த சாலையில் கடையை திறக்க மனமில்லாமல் இருக்கிறேன்.என்னை கடந்து செல்லும் போது அவர் உதிர்த்து விட்டு செல்லும் அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் அப்படியே நிற்கிறது "என்று கலங்கினார் சரஸ்வதி .

http://www.vikatan.com/news/coverstory/74670-this-lady-who-is-an-idli-seller-remembers-her-good-memories-about-jayalalithaa.art

  • தொடங்கியவர்

ராதாவை கலங்க வைத்த ஜெயலலிதாவின் கேள்வி!

 


'முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க நானும் என் அக்காவும் காத்திருந்தோம். மனசுக்குள் ஒரு படபடப்பு, பயம். ஒரு மாநிலத்தின் முதல்வர், தைரியப்பெண்மணி. எப்படி அவரை சந்திக்கப் போகிறோம் என கை, கால் படபடப்புடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது 'அம்மா' புன்னகைத்தபடியே நடந்து வந்தார்...' ஜெயலலிதாவைச் சந்தித்த தருணத்தைப் பேசும் போதே சிலிர்க்கிறார் நடிகை ராதா. 

radha_07022.jpg

 



''எனக்கு ஒரு நடிகையாக அவரை ரொம்பப் பிடிக்கும். என்ன ஒரு அழகான நடிப்பு, உடை நேர்த்தி. அப்பப்பா.. அவங்களைப் புகழ்ந்து சொல்லிட்டேப் போகலாம். என்னுடைய ஹேர் ஸ்டைலிஷ்ட் பார்த்தசாரதி ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் படத்தில் பயன்படுத்திய விக் ஸ்டைல் பத்தி சிலாகிச்சி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே, இது போல ஒரு ஹேர் ஸ்டைல் செய்தால் என்ன... எனத் தோன்றியது. அடுத்து நான் நடித்தப் படத்தில் அதே போல ஒரு விக் ஸ்டைல் செய்து அணிந்து நடித்தேன். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பூக்களால் ஆன உடையை ஒருபாடலில் அணிந்திருப்பார். அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஆடைகளில் ஒன்று. அதே மாதிரி நானும் அணிந்து நடிக்க ஆசைப்பட்டேன். நிறைவேறவே இல்லை.

நாங்க நடிக்க வந்த காலத்தில் ஜெயலலிதா, சரோஜா தேவி, பத்மினி இவங்க எல்லோரும்தான் இன்ஸ்பிரேஷன். அப்போது எல்லாம் டி.வி, இன்டர்நெட் அதிக அளவு இல்லாத காலம். அவங்களுடைய ஒவ்வோர் அசைவையும் நான் ரசிச்சிருக்கேன்.

நான் சந்தித்த நபர்களிலேயே அவங்களைப் போல அழகான ஸ்கின் டோனுடன் இருந்தவங்களைப் பார்த்ததே இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பன்னீர் ரோஜா செடி இருக்கும். அந்தப் பூவின் நிறம்தான் அவங்களுடையது.

ஒரு முறை அவங்களுடைய தேர்தல் வேலை காரணமாக மூன்று நாட்கள் சென்னை வந்து வேலைகளில் மூழ்கியிருந்தேன். அதற்கு முன்பு அவரை நானும், என் அக்கா அம்பிகாவும் சந்தித்தோம். அந்த சந்திப்பின்போது தேர்தல் வேலை சம்பந்தமான பேச்சும் வந்தது. அப்போது அவர், 'குழந்தைகளை விட்டுட்டு வந்திருக்கீங்களே.. கணவர் ஒத்துப்பாரானு' கேட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வதென்றே தெரியல. அப்போதுதான் அவங்க மீதும், என் குடும்பத்து மீதும் எவ்வளவு அன்பும், அக்கறையும் வச்சிருந்தாங்கனு தெரிஞ்சது. அன்றைக்கு அவருடன் எடுத்துக் கொண்ட படத்தை பத்திரமாக வச்சிருக்கேன். அவங்க சந்திக்க வரும் அறையில் அவங்க சின்ன வயசுப் போட்டோ வச்சிருந்தாங்க. அதைப் பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து உட்கார்ந்திருந்தோம். அவங்க வந்ததுக்குப் பிறகு, அவங்க முன்னாடி ஒரு சிலை போல நிற்கிறோம். அவங்க மெஸ்மரிசம் செய்யக் கூடிய அழகு என்பதை நேரில் பார்த்தப் பின்பு உறுதியாக நம்பினேன். அப்படி ஒரு அழகு தேவதை அவங்க. நாங்க சந்திச்சப்போ கண்ணுக்கு ஒரு மை கூட வைக்கல. மேக்கப் சுத்தமாக் கிடையாது. அவங்கதான் உண்மையில், நேச்சுரல் பியூட்டி.   

அவங்க இறந்த அன்று இரவே மும்பையில் இருந்து சென்னைக்கு 2.15 மணி விமானத்துக்கு புக் செய்திருந்தேன். பிரதமர் மோடி, குடியரசு தலைவர், மற்ற மாநில முதலைச்சர்கள் என எல்லோருமே சென்னைக்கு வருவதால பல பிளைட் கேன்சல், டிலே எனப் பிரச்னைகள். எனக்கு அவங்களுக்கு அஞ்சலி செலுத்த வர முடியல என்பது ரொம்ப வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது'' என்றார் ராதா கனத்தக் குரலில்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/74774-actress-radha-shares-her-memories-about-jayalalithaa.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு நடந்த 11-ம் நாள் காரியம்! - கலங்கிய கார்டன் ஊழியர்கள்

sasikala_anjali_13405.jpg

 

ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல், எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் நிழலும், தோழியுமான சசிகலா இருக்கிறார். ஜெயலலிதா, அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சசிகலா, இளவரசி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு, போயஸ் கார்டனுக்கு வந்த தொண்டர்களை சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சசிகலாவை, பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி தொண்டர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.கவினரும், பொதுமக்களும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு படையெடுத்து வந்தனர்.

இந்நிலையில் சசிகலாவும், இளவரசி மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஜெயலலிதாவின் 11-ம் நாள் காரியத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக போயஸ் கார்டனில் நேற்று பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டைச் சுற்றி சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் காலையிலிருந்தே சொகுசு கார்கள் போர்டிகோ வரை சென்றன. காரிலிருந்து அதிகளவில் பெண்கள் பட்டாளம் இறங்கி வீட்டுக்குள் சென்றனர். தொடர்ந்து ஜெயலலிதாவின் போட்டோ மலர்களால் அலங்கரிங்கப்பட்டு இருந்தது. அவரது படத்துக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது. புரோகிதர்கள் மந்திரங்கள் சொல்ல காரியம் தொடங்கியது. போட்டோ அருகில் சசிகலா, இளவரசி மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டுமே இருந்தனர். சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது காரியம். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய காரியம் நடத்தியதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து வந்திருந்தவர்களுக்கு சைவ உணவு பரிமாறப்பட்டது. முன்பெல்லாம் போயஸ் கார்டன் போர்டிகோவில் ஜெயலலிதாவின் காருக்கு மட்டுமே அனுமதி. இப்போது அப்படியல்ல. போயஸ் கார்டன் வரும் அனைத்து கார்களும் போர்டிகோ வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த காரிய நிகழ்ச்சியில் தி.நகரைச் சேர்ந்த ஒரு தொழிலபதிர் பங்கேற்றுள்ளார். அவர், சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர். சொத்து குவிப்பு வழக்கின் போது சசிகலாவுக்கு அவர், தன்னுடைய சொந்த ஜாமீன் கொடுத்தார். காரியம் முடியும் வரை அந்த இடம் அமைதியாக இருந்தது. ஜெயலலிதாவின், படத்தை சசிகலா நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அவரது  கண்களில் நீர் கசிந்திருந்தது. கார்டனில் நீண்ட காலமாக விசுவாசமாக இருந்த ஊழியர்களும் கண் கலங்கினர். இந்த காரியத்துக்குப் பிறகு 16-ம் நாள் காரியம் நடத்தப்படவுள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.

போயஸ் கார்டனில் நடந்த காரிய நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் ஓரமாக அமைதியாகவே இருந்தனர். சடங்கு முடிந்தவுடன் அவர்கள் சசிகலாவிடம் சைகை மூலம் தகவல் தெரிவித்துவிட்டு கிளம்பி சென்று விட்டனர். ஆனால் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் வீட்டுக்குள் சென்று அவரிடம் பேசியுள்ளனர். ஜெயலலிதாவின் நினைவலைகள், கட்சி ரீதியாக நடந்ததாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். போயஸ் கார்டன் வீட்டுக்குள் ஜெயலலிதா பாடிய பாடல்களும் ஒலித்தன.

http://www.vikatan.com/news/tamilnadu/75186-poes-employees-become-emotional-on-jayalalithaas-11th-day-death-rituals.art

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

 

மறைந்த முன்னாள் முதல்வர் பன்முகத் திறமை கொண்டவர் என்பது அனைவருக்கம் தெரியும். நடிப்பில் மட்டுமல்ல படிப்பு விளையாட்டு என அனைத்திலும் மெடலிஸ்ட்தான். விளையாட்டைப் பொறுத்த வரை, டென்னிசில் இருந்து குதிரையேற்றம் வரை ஜெயலலிதாவுக்கு அத்துப்படி. நடிப்புக்காக பல விருதுகளையும் நிறைய பெற்றுள்ளார். ஆனால், அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரும்கூட என்பதுதான் பலரும் அறிந்திடாத விஷயம். 

ஜெயலலிதாதிரைத்துறையின் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த போதே, ஜெயலலிதா பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். 1980ம் ஆண்டு 'எண்ணங்கள் சில ' என்ற பெயரில் துக்ளக்கில் தொடர் எழுதியிருக்கிறார். அதுபோல் 'தாய்' வார இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 'எனக்குப் பிடித்தவை' என்ற தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை ஜெயலலிதா படைத்து வந்தார். பின்னர் இந்த கட்டுரைகள் 'மனதை தொட்ட மலர்கள்' என புத்தகமாக வெளியிடப்பட்டது. 

ஜெயலலிதாவுக்கு பிடித்த ஓவியர் லியார்னடோ டாவின்சி. 'தாய் ' வார இதழில் தனக்கு பிடித்த ஓவியர் என்ற பெயரில் லியார்னடோ பற்றி ஜெயலலிதா கட்டுரை வடித்திருக்கிறார். பிடித்த நாவல் என சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய 'டேவிட் காப்பர்பீல்ட்டைக் குறிப்பிட்டிருக்கிறார். அது குறித்தும் 'தாய்' வார இதழில் எழுதியுள்ளார் ஜெயலலிதா. 

ஜெயலலிதா எழுதிய இரு சிறுகதைகள் குமுதம், கல்கி இதழ்களில் வெளி வந்துள்ளன. கல்கியில் 'உறவின் கைதிகள் ' என்ற பெயரில் தொடர்கதை வெளிவந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஜெயலலிதா பொறுத்துக் கொண்டதே இல்லை. வெகுண்டெழும் குணம் அப்போதிருந்தே அவரிடம் இருந்தது. பெண் ஒருவரை காவல்துறையினரே சூறையாடியதை மையமாக வைத்தும் 'துக்ளக்' இதழில் கட்டுரை எழுதியிருக்கிறார். 

ஜெயலிலிதா எழுதும்  'நெஞ்சிலே ஒரு கனல்  தொடர் அடுத்த இதழில் இருந்து ஆரம்பம் என'  அந்த காலத்திலேயே வார இதழ்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. அது போல் 'நீயின்றி நான் இல்லை' என்ற நாவலையும் ஜெயலலிதா எழுதியிருக்கிறார். 

தமிழில் 4 முழு நீள நாவல்களை ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.. ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பல கட்டுரைகளை வடித்திருக்கிறார். ஒரு முறை ஜெயலலிதா பத்திரிகையாளராகவும் மாறியிருக்கிறார். செய்தியாளராக மாறி அவர் பேட்டி கண்டது அவரது குருவிடம்தான். 'பொம்மை' இதழுக்காக ஜெயலலிதா, எம்.ஜி.ஆரிடம் பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது கேள்விகளையும் அவரே தயார் செய்திருக்கிறார் என கூறுகிறார்கள். 

jeya2_10007.jpg

ஜெயலலிதா எழுதிய நாவல்களில், மிகச்சிறந்தததாக கருதப்படுவது 'உறவின் கைதிகள்'. இந்த கதையை மிக அற்புதமாக ஜெயலலிதா எழுதியிருப்பார். காதலும் அன்பும் நிறைந்த ஓர் இளம் பெண் பார்வையில் கதை ஓட்டம் செல்லும். பெண்களை துச்சமாக மதிக்கும் நடிக்கும் நடிகரின் வலையில், பெண் ஒருவர் விழுகிறார். இருவருமே காதலில் விழுகின்றனர்.   பெண் கர்ப்பமாகிறாள்.   அதிர்ச்சியூட்டுகிற ஒரு கிளைமாக்ஸ். அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு கதைக்களத்தை ஜெயலலிதா தேர்வு செய்திருக்கிறார் என்றால் எத்தனை தைரியம் இருக்க வேண்டும். அந்த நடிகர் அறிமுகமாகும் தருணத்தில் இருந்து இறப்பு வரை ஒரு மூச்சில் படித்து விட வேண்டுமென்ற ஆர்வத்தை அந்த கதையில் பார்க்க முடியும். அப்படி ஓர் எழுத்து நடை.  

jeya3_10282.jpg

அந்தக் கதையில் ஓர் அத்தியாயத்தில் மாணவிக்கும் நடிகருக்கும் தொலைபேசி உரையாடல் நடைபெறுகிறது. உரையாடல் என்றால் பேச்சு எல்லாம் அல்ல. தொலைபேசி உரையாடல் கூட மௌனமாக நகரும்விதத்தில் அந்த அத்தியாயம் செல்லும். எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம். ஆனால் அந்த அத்தியாயம் முழுவதுமே காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட   மிக அருமையாக எழுத்தில் வடித்திருப்பார் காட்டியிருப்பார் ஜெயலலிதா. 

மிகச்சிறந்த நடிகையாக,ஆளுமையாக, அரசியல்வாதியாக மட்டுமே நமக்குத் தெரிந்த ஜெயலலிதா, அரசியலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய பின், பணிச் சுமை காரணமாக எழுதுவதை நிறுத்தினார்.  ஆனாலும், அவரது அடி மனதில் தனது சுயசரிதையை எழுத வேண்டுமென்ற தீராத ஆசை இருந்தது. ஆனால் கடைசி வரை அது நிறைவேறவில்லை! 

http://www.vikatan.com/news/tamilnadu/76350-jayalalithaas-unfulfilled-wish.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை!

ஜெயலலிதா

நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். வதந்திகள் விஷயத்தில் மட்டும் அல்லாமல் தலைமுறை தலைமுறையாக நமக்கு வந்துள்ள பழைய கதைகளும் அப்படித்தான்.

பெரியவர்கள் நமது பிள்ளைப் பிராயத்தில் நமக்கு எத்தனையோ கதைகளைச் சொல்கிறார்கள். அந்த இளம் வயதில் கேட்டு அறியும் கதைகள் நம் நினைவை விட்டு அகலுவதே இல்லை. நாம் பெரியவர்கள் ஆன பிறகு நம் குழந்தைகளுக்கு அதே கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விக்கிறோம்.

பிரத்யேகமாக குழந்தைகளுக்கென்று பல கதைகள் இருக்கின்றன. இந்தக் குழந்தைகள் கதைகளை ஆங்கிலத்தில் ''FAIRY TALES''' - தேவலோக மாய ஜாலக் கதைகள் என்பார்கள். நூல்கள் தோன்றும் காலத்திற்கு முன்னர் தோன்றிய கதைகள் இவை. தலைமுறை தலைமுறையாக, செவி வழியாக வந்த கதைகள். பெரியவர்கள் சொல்லக் கேட்டு பலர் நினைவில் நிறுத்தி, பின்னர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்படி வழி வழியாக வந்து, நவீன காலத்தில் புத்தக வடிவில் சேகரிக்கப்பட்டு கிடைக்கின்றன இக்கதைகள்.

இந்தக் கதைகளைக் கேட்கும் பொழுது, ''இப்படியெல்லாம் கூட உலகில் நடக்க முடியுமா? சாத்தியமே இல்லை. இதெல்லாம் வெறும் கற்பனை" என்று நினைக்கத் தோன்றும்.

பெரும்பாலும் இந்தக் கதைகளின் பெரும்பகுதி கற்பனைதான் என்றாலும் ஆராய்ந்து பார்த்தோமானால், ஒவ்வொரு கதையின் மூலக் கருவும் ஏதோ ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டிருப்பது புலப்படும். அந்த மூலக் கருவைச் சுற்றி காலப்போக்கில் எத்தனையோ கற்பனை விவரங்கள் பின்னப்பட்டிருக்கலாம். ஆனால் மூலக் கரு உண்மையானதாகத்தான் இருக்கும்.

கேட்டுப் படித்துப் பழகிப் போன பழைய கதைகள் எல்லாமே இப்படித்தான். மூலம் உண்மையில் தான் இருக்கும்.

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை மகிழ்வித்து வருகிற கதை சிண்ட்ரெல்லா கதை. சிண்ட்ரெல்லா மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட கண்ணாடி செருப்பை அணிந்திருப்பாள். அதை இளவரசன் அரண்மனையில் விட்டுவிட்டு ஓடிப்போவாள். அவளுடைய பாதம் மிகவும் சிறியது. வேறு எவராலும் அந்தச் செருப்பை அணிந்து கொள்ள முடியாது. எனவே அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரி யார் என்று தேடி வரும்படி ஆணையிட்டு இளவரசன் ராஜ்யம் முழுவதும் ஆட்கள் அனுப்புவார். எந்தப் பெண்ணால் அந்தக் கண்ணாடி செருப்பை அணிய முடிகிறதோ, அந்தப் பெண்ணையே மணந்து கொள்ளப்போவதாக அறிவிப்பார். அதனால் இளவரசனை மணந்து கொள்ள நாட்டிலுள்ள பெண்களிடையே கடும் போட்டா போட்டி ஏற்படும். ராஜ்யத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும், ''நான் தான் அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரி" என்று கூறிக் கொண்டு முன் வருவார்கள். சிண்ட்ரெல்லாவின் மாற்றாந்தாய் பெற்றெடுத்த பெண்கள் அவளைக் கொடுமைப்படுத்தி மறைத்து வைப்பார்கள். தாங்களே இளவரசனை திருமணம் புரிய முயற்சி செய்வார்கள். ஆனால் அந்தச் செருப்பு வேறு யாருடைய காலுக்கும் சரியாக இராது. கடைசியில் உண்மையான சிண்ட்ரெல்லா வருகிறாள். செருப்பை அணிகிறாள். அதன் பின் இளவரசன் அவளை அடையாளம் கண்டு கொண்டு இருவரும் திருமணத்தில் இணைகிறார்கள். இது கதை.

உண்மையாகவே உலக வரலாற்றில் ஒரு சிண்ட்ரெல்லா உண்டு. ஆனால் அவளது உண்மைப் பெயர் ரோடோபிஸ்.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த இளம் மங்கை ரோடோபிஸ் ஓர் பேரழகி. ஒருநாள் அவள் நைல் நதியில் குளித்துக் கொண்டிருந்தாள். கரையோரமாக தனது ஆடைகளையும், செருப்புக்களையும் விட்டிருந்தாள்.

அப்பொழுது ஒரு கழுகு அவளுடைய செருப்பு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.

எகிப்திய மன்னர் (ஃபேரோ) மைசரினஸ் 500 மைல்களுக்கு அப்பால், மெம்பிஸ் என்ற நகரில் திறந்த வெளி தர்பாரில் அமர்ந்து நீதி வழங்கிக் கொண்டிருந்தார்.

அங்கே பறந்து வந்த அந்தக் கழுகு சரியாக மன்னர் மடியில் அந்தச் செருப்பைப் போட்டு விட்டது.

வானத்திலிருந்து தனது மடியில் விழுந்த செருப்பை எடுத்து ஃபேரோ உற்றுப் பார்த்தார். அதன் அழகும், சிறிய அளவும் அவரைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வளவு சிறிய பாதம் உடைய மங்கை எத்தகைய பேரழகியாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்த்தார். அவளைக் கண்டு பிடித்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தார்.

செருப்பு அவ்வளவு சிறியதாக இருந்ததால், ரோடோபிஸ்ஸைத் தவிர, வேறு எந்தப் பெண்மணியாலும் அதை அணிந்து கொள்ள முடியவில்லை.

பற்பல இன்னல்கள், இடையூறுகளையெல்லாம் சந்தித்து சமாளித்த பிறகு, இறுதியில் எகிப்திய மன்னர் அவளைக் கண்டுபிடித்து, அவளையே திருமணம் புரிந்து, அவளை எகிப்திய நாட்டின் ராணி ஆக்கினார்.

ஃபேரோ தான் காதலித்து மணந்து கொண்ட ராணி ரோடோ பிஸ்ஸை கவுரவிக்க வேண்டும் என்பதற்காகவே, அவள் நினைவாக கிசேயிலுள்ள மூன்றாம் சமாதியை எழுப்பினார்.
(THE THIRD PYRAMID OF GIZEH)

உலகமே வியக்கும் வண்ணம் ஷாஜகான் மும்தாஜ்க்காக எழுப்பிய காதல் நினைவு மண்டபம் தாஜ்மகால் இந்தியாவில் இன்றும் இருக்கிறது.

அதுபோல் எகிப்திய மன்னர் மைசரினஸ் அரசி ரோடோபிஸ்ஸுக்காக எழுப்பிய காதல் நினைவு மண்டபம் இன்றும் எகிப்தில் இருக்கிறது.

'உண்மைக் கதையில் காதலர்களை இணைத்து வைத்த செருப்பு மிருக ரோமத்தால் செய்யப்பட்டது. கண்ணாடியால் அல்ல.

இந்தக் கதை முதலில் பிரெஞ்சு மொழியில் இருந்தது. 'அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, மொழி பெயர்ப்பாளர் தவறு செய்து விட்டார்.

பிரெஞ்சில் ''Vaire" என்றால் மிருக ரோமம் (FUR), ''Verre" என்றால் கண்ணாடி (Glass). ''Vaire" என்ற வார்த்தையை ''Verre" என்று தவறாகப் புரிந்து கொண்டதால், ''கண்ணாடி செருப்பு" என்று எழுதிவிட்டார். அப்படித்தான் சிந்தரெல்லாம் கதை பிறந்தது.

- தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி.

http://www.vikatan.com/news/politics/76622-this-is-the-love-story-that-jayalalithaa-liked-the-most.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.