Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நதியின் மூன்றாவது கரை

Featured Replies

rosa.jpg

நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா

ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார்

கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள்.

ஒரு நாள் அப்பா ஒரு படகுக்கு ஆர்டர் கொடுத்தார். அப்பா அது குறித்து மிகவும் தீவிரமான அக்கறையோடு இருந்தார். அந்தப் படகு பிரத்யேகமான அவருக்கு மட்டும் துவரை இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் கட்டைகளால் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், ஒரு ஆளுக்கான இடவசதி உடையதாகவும் அது இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அம்மா அது பற்றி மிகவும் புலம்பிக் கொண்டேயிருந்தாள். திடீரென்று அவளுடைய கணவன் மீனவனாகப் போகிறானா? அல்லது ஒரு வேட்டைக்காரனாக? அப்பா எதுவும் சொல்லவில்லை.

எங்கள் வீடு நதியிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. அந்த நிதி ஆழமானது; அமைதியானது; நதியின் அந்தக் கரையைப் பார்க்க முடியாத அளவுக்கு அகலமாகவும் இருந்தது.

அந்தத் துடுப்புப் படகு அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா மகிழ்ச்சியையோ அல்லது வேறு எந்த உணர்ச்சியையோ வெளிக் காண்பிக்கவில்லை. எப்போதும் செய்வது போன்று தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு, எங்கள் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். உணவையோஅல்லது வேறு எந்தப் பொருளையுமோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மா ஆர்ப்பாட்டம் செய்து கத்துவாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் அப்படி ஒன்றும் செய்யவில்லை.

அவள் வெளிறிப் போயிருந்தாள்; உதட்டைக் கடித்துக் கொண்டாள். ‘நீங்கள் வெளியே போவதானால் அங்கேயே தங்கி விடுங்கள். எப்போதும் திரும்பி வர வேண்டாம்’ என்று மட்டுமே அம்மா சொன்னாள்.

அப்பா பதிலொன்றும் பேசவில்லை. என்னை மென்மையாகப் பார்த்துத் தன்னுடன் வரும்படி சைகை செய்தார். அம்மாவின் கோபத்திற்கு நான் பயந்தாலும், அப்பா சொன்னதை ஆர்வத்துடன் செய்தேன். இருவரும் ஒன்றாக நதியை நோக்கி நடந்தோம். ‘அப்பா, என்னையும் உங்கள் படகில் அழைத்துப் போகிறீர்களா?’ என்று கேட்குமளவிற்கு

நான் தைரியமும் கிளர்ச்சியும் அடைந்திருக்கிறேன்.

அப்பா என்னை ஒரு கணம் வெறுமனே பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து, ஒரு சைகையின் மூலம் திரும்பிப் போகச் சொன்னார். அவர் சொன்ன மாதிரி செய்வதாகப் போக்குக் காட்டிவிட்டு, அவர் திரும்பியதும், சில புதர்களுக்குப் பின்னால் குனிந்து என்னை மறைத்துக்கொண்டு அவரைக் கவனித்தேன். அப்பா படகில் ஏறி உட்கார்ந்து துடுப்பு

போட்டுக்கொண்டு போய்விட்டார். படகின் நீளமான அமைதியான நிழல் ஒரு முதலையைப் போல நீரின் குறுக்காக நழுவிச் சென்றது.

அப்பா திரும்பி வரவில்லை. அதேசமயம் வேறெங்கும் போய்விடவுமில்லை. நதியின் குறுக்காகவும், சுற்றியும் துடுப்பு போட்டுக்கொண்டும் மிதந்து கொண்டுமிருந்தார். எல்லோரும் திகைத்துப் போனார்கள். எது எப்போதும் நடந்ததில்லையோ, எது அநேகமாக நடக்க முடியாததோ அது நடந்துகொண்டிருந்தது. எங்கள் உறவினர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் இந்த முக்கிய நிகழ்வை விவாதிக்க வந்தனர்.

அம்மா அவமானமடைந்தாள். கொஞ்சமாகவே பேசினாள்; மிகுந்த அமைதியுடன் நடந்து கொண்டாள். அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் இதை வெளியே சொல்லவில்லை. கடவுளுக்கோ அல்லது யாரோ ஒரு புனிதருக்கோ கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத்தான் அப்பா இப்படிச் செய்வதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். அல்லது அவருக்குத் தொழுநோய் போன்ற ஏதோ ஒருநோய் இருந்ததனால், குடும்ப நன்மை கருதி வெளியேற முடிவு செய்து அதே சமயம் குடும்பத்திற்கு அருகிலேயும் இருக்கத்தான் அப்பா அப்படிச் செய்தார் என்றும் சிலர் சொன்னார்கள்.

இரவிலும் சரி, பகலிலும் சரி அப்பா நிலத்தில் கால் வைப்பதே கிடையாது என்று நதியில் பயணம் செய்பவர்களும், நதியின் இரண்டு கரைகளில் வசிப்பவர்களும் சொன்னார்கள். ஒரு கைவிடப்பட்டவர் மாதிரி தனியாக எந்த இலக்கும் இன்றி அவர் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டே இருந்தார். படகில் அப்பா மறைத்து வைத்திருக்கும் உணவு நிச்சயம்

சீக்கிரம் தீர்ந்துவிடும்; அதன் பிறகு நதியை விட்டு நீக்க வேறெங்காவது சென்று விடுவார்; அல்லது செய்த தவறுக்கு வருந்தி வீடு திரும்புவார் என்று அம்மாவும் உறவினர்களும் நம்பினார்கள். அவர் வேறெங்காவது சென்றுவிடுவது வீடு திரும்புவதை விடவும் கொஞ்சம் கெüரவமானது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

உண்மைக்கும் அவர்கள் நினைத்ததற்கும் எவ்வளவு தூரம்! அப்பாவுக்கு உணவு கிடைப்பதற்கு ஒரு ரகசிய வழி இருந்தது: அது நான்தான். ஒவ்வொரு நாளும் உணவைத் திருடி அதை அவருக்குக் கொண்டு சென்றேன். அவர் சென்றுவிட்ட முதல் இரவு நாங்கள் அனைவரும் கரையில் தீமூட்டி வழிபட்டு அவரை அழைத்தோம். நான் ஆழ்ந்தவேதனையுற்றேன். மேலும் ஏதாவது செய்யவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். சோள ரொட்டித்துண்டு ஒன்று, ஒரு சீப்பு வாழைப்பழம், பழுப்புச் சர்க்கரைக் கட்டிகள் ஆகியவற்றுடன் அடுத்த நாள் நதிக்கரைக்குச் சென்றேன்.

நீண்ட நேரம் பொறுமையுடன் காத்திருந்தேன். பிறகு, தூரத்தில் தனியாக நதியின் இழைவான போக்கில், அநேகமாக பார்க்க முடியாத அளவுக்கு மெல்ல நகர்ந்து வரும் படகைக் கண்டேன். அப்பா படகின் ஒரு கோடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்ட பிறகும், என்னை நோக்கி படகைச் செலுத்தவோ அல்லது சைகை செய்யவோ இல்லை. அவரிடம் உணவைக் காண்பித்துவிட்டு, நதிக்கரையிலிருந்த ஒரு பாறையின் இடுக்கில் அதை வைத்தேன். மிருகங்கள், மழை, பனி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் உணவு அந்த இடத்தில்பாதுகாப்பாக இருக்கும். நான் இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்தேன். நான் செய்து கொண்டிருந்தது அம்மாவுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் எளிதாகத் திருடக்கூடிய இடத்தில் அவள் உணவை வைத்தாள். வெளிக் காண்பிக்கப்படாத பல உணர்ச்சிகள் அவளுக்கு இருந்தன.

பண்ணையையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ள அம்மா தன் சகோதரனைக் கூப்பிட்டுக் கொண்டாள். ஆசிரியரை வீட்டிற்கே அழைத்து வந்து நாங்கள் இழந்து விட்ட பாடங்களை சொல்லித்தரச் செய்தாள். ஒரு நாள் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, பாதிரியார் சமய உருப்புக்களை அணிந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று அப்பாவின் உடம்பில் நுழைந்துவிட்ட பேய்களை விரட்ட முயற்சி செய்தார். புனிதமற்ற பிடிவாதத்தை அப்பா கைவிடவேண்டுமென்று பாதிரியார் கத்தினார். வேறொரு நாள் அம்மா இரண்டு சிப்பாய்களுக்கு ஏற்பாடு செய்து அவரை பயமுறுத்த முயற்சி செய்தாள். எதுவும் பயனளிக்கவில்லை. அப்பா தூரமாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய்விடுவார்; சில சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாத தூரத்திற்குச் சென்றுவிடுவார்.

அவர் யாருக்கும் பதில் சொல்லவில்லை; யாரும் அவர் அருகில் போகவும் இல்லை. ஒரு சமயம் ஒரு பத்திரிகையாளர்கள் அவரைப் படம்பிடிக்க விசைப்படகில் சென்றபோது, அப்பா படகை நதியின் அடுத்த கரைக்கு இயக்கிச்சென்று சில சதுப்பு நிலப்பகுதிகளில் மறைந்து கொண்டார். தன்னுடைய உள்ளங்கையை அவருக்கு எப்படித் தெரியுமோ அந்த அளவுக்கு அவருக்கு அந்த இடங்களைத் தெரியும்; ஆனால் மற்றவர்கள் அந்த இடங்களில் எளிதில் வழிதவறி விடுவார்கள். பல மைல் நீளத்திற்கு விரிந்திருந்த அந்த குழப்பமான இடம் அவருக்கே சொந்தமானது. தலைக்கு மேலே அடர்த்தியான சிலைகளுடன் கூடிய செடிகளுடனும், நாலா பக்கமும் நாணற்புதர்களும் மண்டியிருந்த அந்த இடத்தில் அவர் பாதுகாப்பாக இருந்தார்.

அப்பா நதியிலேயே வாழ்ந்து வருவது என்கிற கருத்துக்கு எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது – ஆனால் எங்களால் அது முடியவில்லை. எப்போதும் முடியவும் முடியாது. அப்பா எதை விரும்பினார், எதை விரும்பவில்லை என்று நான் ஒருவன் மட்டும்தான் ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தான் அனுபவித்த துன்பத்தை அவர் எப்படி தாங்கிக்கொண்டார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ளவேமுடியவில்லை. வாரக்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக, தலையில் ஒரு பழைய தொப்பியோடு, குறைச்சலான ஆடையோடு, வீணாகவும் வெறுமையாகவும் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படித்தான் இரவிலும் பகலிலும், வெய்யிலிலும் மழையிலும், பயங்கர குளிரிலும் அவர் வாழ்ந்து வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிலத்திலோ புல்தரையிலோ, தீவிலோ, கரையிலோஅவர் கால் பதிக்கவே இல்லை. ஆனால் சில சமயங்களில், ஒரு ரகசிய இடத்தில், ஏதோ ஒரு தீவின் முனையில் படகைக்கட்டி விட்டுத் தூங்கினார். எப்போதும் அவர் தீ உண்டாக்கியதே இல்லை; ஒரு நெருப்புக்குச்சியைக் கூடக் கிழித்ததில்லை. அவரிடம் ஒரு டார்ச் விளக்குகூட இல்லை. பாறை இடுக்கில் நான் வைக்கும் உணவில் கொஞ்சம் மட்டுமே அவர் எடுத்துக்கொண்டார்.

அது, அவர் உயிரோடு இருக்கத் தேவையான அளவாக எனக்குத்தோன்றவில்லை. அவர் உடல்நலம் எப்படி இருந்திருக்கும்? படகைக் கட்டுப்படுத்த துடுப்புகளைத் தள்ளியும் இழுத்தும் அவருடைய சக்தி எப்படி வடிந்து போயிருக்கும்? வருடாந்திர வெள்ளத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து ஆபத்தான பொருள்களான மரக்கிளைகளையும் இறந்த மிருகங்களின் உடல்களையும் நதி அடித்துச் சென்றபோதுஅவற்றை எப்படிச் சமாளித்தார்? அவை அவருடைய படகின் மீது திடீரென்று மோதினால் என்னவாகியிருக்கும்?

யாருடனும் அவர் பேசவில்லை; நாங்களும் அவரைப் பற்றிப் பேசவே இல்லை. அவரைப் பற்றி நினைத்துக்கொண்டு மட்டுமே இருந்தோம். அப்பாவை மனதிலிருந்து எங்களால் எப்போதும் நீக்கவே முடியவில்லை. எப்போதாவது நாங்கள் அவரைப் பற்றி கொஞ்ச நேரம் நினைக்காமலிருப்பதாகத் தோன்றினால் அது ஒரு சிறு இடைவெளிதான். அப்பா இருக்கும் அச்சுறுத்தும் சூழலைப் பற்றிய உணர்தல் திடீரென்று எங்களை அந்த இடைவெளியிலிருந்துகூர்மையாக விடுபடச் செய்யும்.

என் சகோதரிக்குத் திருமணம் நடந்தது; ஆனால் அம்மா திருமண விருந்து வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அது ஒரு சோகமான நிகழ்வாகப் போயிருக்கும். ஏனென்றால் நல்ல உணவைச் சாப்பிடும் போதெல்லாம் நாங்கள் அப்பாவை நினைத்துக் கொண்டோம். குளிரும் கடும் மழையும் நிறைந்த இரவில் படகில் சேரும் நீரை தன் கைகளாலும் ஒரு சுரைக் குடுக்கை மூலமாகவும் மட்டுமே வாரி வெளியே இறைத்துக் கொண்டிருக்கும் அப்பாவைஎங்களுடைய செüகரியமான படுக்கைகளில் படுத்துக் கொண்டு நினைத்துக் கொள்வோம். அவ்வப்போது யாராவது ஒருவர் நான் அப்பா மாதிரியே தோற்றம் கொண்டு வளர்ந்து வருவதாகச் சொல்வார். அந்த நேரத்தில் அப்பாவின் தலைமுடியும் தாடியும் பறட்டையாக மாறியும், நகங்கள் நீண்டும் வளர்ந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். முடியாலும் சூரிய வெப்பத்தாலும் கறுத்துப்போய் ஒல்லியாகவும் நோய்வாய் பட்டவராகவும் தோற்றமளிக்கும்

அப்பாவை, நான் எப்போதாவது அவருக்காக உடைகளை விட்டுச் சென்றும்கூட அநேகமாக நிர்வாணமாகவே இருக்கும் அப்பாவை நான் கற்பனை செய்து கொள்வேன்.

அவர் எங்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. நான் ஏதாவது நல்லது செய்ததனால் பாராட்டப்படும்போது, என்னுடைய அப்பாதான் அப்படி நடந்துகொள்ள எனக்குச் சொல்லிக்கொடுத்தார் என்று கூறிக்கொண்டேன். நான் அப்படிச் சொன்னது முற்றிலும் சரியல்ல; ஆனால் அது மாதிரியான உண்மை சார்ந்த பொய் நான் முன்பே சொன்ன மாதிரி அப்பா எங்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. பின் ஏன் அவர் அங்கேயே தங்கிவிட்டார்? நாங்கள் அவரைப் பார்க்க முடியாத மாதிரியும் நதியின் மேல் எல்லைக்கோ அல்லது கீழ் எல்லைக்கோ ஏன் அவர் செல்லவில்லை? அவருக்கு மட்டுமே இதற்கான விடை தெரிந்திருக்கும்.

என் சகோதரிக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அப்பாவுக்கு அவருடைய பேரனைக் காட்ட வேண்டுமென்று அவள் மிகவும் வற்புறுத்தினாள். ஓர் இனிமையான நாளில் நாங்கள் அனைவரும் நதிக்கரைக்குச் சென்றோம்; என் சகோதரி அவளுடைய வெண்மை நிற திருமண உடையில் இருந்தாள். அவள் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள், அவள்கணவன் அவர்கள் இரண்டு பேருக்கும் மேலே ஒரு குடை பிடித்தார். நாங்கள் அப்பாவைக் கத்தி அழைத்து விட்டுக் காத்திருந்தோம். அவர் வரவே இல்லை. என் சகோதரி அழுதாள்; நாங்கள் அனைவரும் ஒவ்வொருவரின் கைகளப் பிடித்துக் கொண்டு அழுதோம். என் சகோதரியும் அவளுடைய கணவனும் தொலைவான இடத்துக்குச் சென்றுவிட்டனர். என் சகோதரன் ஒரு நகரத்துக்கு வசிக்கச் சென்றுவிட்டான்.

காலங்கள், அவற்றின் வழக்கமானசூட்சும வேகத்தோடு மாறிவிட்டன. கடைசியாக அம்மாவும் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள், வயதாகிவிட்டதால் தன் மகளோடு அவள் வாழச் சென்றுவிட்டாள். நான் மட்டுமே மிச்சமாக அங்கேயே தங்கிவிட்டேன். திருமணம் செய்து கொள்வது பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையின் இடர்ப்பாட்டோடு நான் அங்கேயே தங்கிவிட்டேன். துணையற்று தனியாக நதியில் அலைந்து கொண்டிருந்த அப்பாவுக்கு நான் தேவைப்பட்டேன். அவர் ஏன் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார் என்று என்னிடம் எப்போதும்

சொன்னதில்லையாயினும் அவருக்கு நான் தேவைப்பட்டேன். அப்பா ஏன் அப்படிச் செய்கிறார் என்று வலியுறுத்தியும் மழுப்பலின்றியும் சிலரிடம் நான் கேட்டபோது, படகைச் செய்து கொடுத்தவரிடம் எல்லாவற்றையும் அவர் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த ஆள் இறந்துவிட்டதால் யாருக்கும் எதுவும் தெரியுமில்லை; நினைவிலுமில்லை. மழை தொடர்ந்தும் கடுமையாகவும் பெய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு முட்டாள்தனமான பேச்சு பரவியது. அதாவது, நோவாவைப் போல அறிவுக்கூர்மையோடு அப்பா ஒரு பெரும் வெள்ளத்தை எதிர்பார்த்து ஒரு படகைச் செய்துகொண்டிருந்தார் என்றார்கள். மக்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு மங்கலாக நினைவில் உள்ளது. எப்படியிருப்பினும், அவர் செய்து கொண்டிருந்ததை நான் கண்டிக்கவில்லை. என் தலைமுடி நரைக்க ஆரம்பித்தது.

சோகமான விஷயங்கள் மட்டுமே எனக்குச் சொல்ல இருக்கின்றன. நான் எந்தத் தீங்கைச் செய்தேன்? என் மிகப் பெரிய குற்றம் எது? அப்பா எப்போதும் தொலைவிலும் அவருடைய இராமை எப்போதும் என்னுடனும். அந்த நதி, முடிவேயில்லாமல் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த நதி. எப்போதும் அந்த நதியேதான். அரை உயிரோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்த முதுமையின் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்தேன். நோயும் கவலையும் என்னைத் தாக்கின. ஓயாது தொல்லைப்படுத்தும் கீல்வாதமும் எனக்கு வந்தது. அவர், ஏன், ஏன் அதைச் செய்துகொண்டிருக்கிறார்? மிக வயதானால் அவர் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்திருப்பார். வலிமை குறைந்து கொண்டிருப்பதால் ஒரு நாளைக்கு படகை அவர் கவிழ்த்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போக விட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போகவிட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம்.

இந்த நினைவு என் இதயத்தை அழுத்தியது. அங்கே வெளியே அவர்; அமைதியைப் பறிகொடுத்துவிட்டு நான். என்னவென்று தெரியாத குற்றமொன்றைச் செய்துவிட்ட உணர்வு எனக்கு; என் துயரம் எனக்குள்ளே ஒரு ரத்தம் கசியும் காயம். சூழ்நிலைகள் வேறாக இருப்பின், ஒருவேளை இந்தச் சிக்கலை நான் புரிந்து கொள்ளலாம். என்ன தவறு நடந்ததென்று நான் யூகிக்க ஆரம்பித்தேன்.

அப்பா வெளியேறியதின் காரணமாக தெரிந்தே ஆக வேண்டும். நான் பைத்தியமாகிப் போனேனா? இல்லை. இத்தனை ஆண்டுகளாகவும் அந்த வார்த்தை எங்கள் வீட்டில் உச்சரிக்கப்பட்டதேயில்லை. யாரும் யாரையும் பைத்தியம் என்று கூப்பிட்டதேயில்லை; காரணம் யாரும் பைத்தியமில்லை. அல்லது ஒருவேளை எல்லோருமே பைத்தியமாக இருந்திருக்கலாம். நதிக்கரைக்குச் சென்று, அவர் என்னைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு கைக்குட்டையை அசைத்தேன். நான் செய்ததெல்லாம் இதுதான். என் உணர்ச்சிகளை முழுக்க அடக்கிக்கொண்டு காத்திருந்தேன். கடைசியாக தொலைவில், மறுகரையில், படகின் பின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த தெளிவற்ற உருவம் ஒன்று தோன்றியது. அவரை நோக்கி சிலமுறை கூப்பிட்டேன். முறையாகவும் ஆர்வத்தோடும் ஒரு சபதம் போன்று நான் சொல்ல விரும்பியதைச் சொன்னேன். எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு

உரக்கச் சொன்னேன், “அப்பா நீங்கள் நெடுங்காலம் அங்கே இருந்து விட்டீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டது… திரும்ப வாருங்கள்; இனிமேலும் நீங்கள் அங்கே இருக்க வேண்டாம்…. நீங்கள் திரும்ப வாருங்கள்; உங்களுக்குப் பதிலாக நான் போகிறேன்; நீங்கள் விரும்பினால் இப்போதே. எப்போது வேண்டுமானாலும் சரி, நான் படகில் ஏறிக்கொள்கிறேன்; நான் இதைச் சொல்லி முடித்ததும் என் இதயம் மேலும் உறுதியுடன் துடித்தது. நான் சொன்னதை

அவர் கேட்டார். எழுந்து நின்றார். என்னை நோக்கி படகைச் செலுத்தினார். என் விருப்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார். திடீரென்று நான் உடல் முழுக்க நடுங்கினேன். ஏனெனில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அவர் கையைத் தூக்கி அசைத்தார். நான் நிலையிழந்தேன். திகிலில் மயிர்க்கூச்செறிய நான் ஓடினேன். மூர்க்கத்தனமாக ஓடினேன். ஏனென்றால் வேறொரு உலகத்திலிருந்து அவர் வருவதாகத் தோன்றியது. நான் மனமார மன்னிப்பை வேண்டிக்கொண்டே, வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.

கொடிய பயத்தில் பிறக்கும் அந்தப் பயங்கரக் குளிர் உணர்வை நான் அனுபவித்தேன். என் உடல் நலங்கெட்டது. யாரும் அவரை மீண்டும் பார்க்கவோ அவரைப் பற்றிக் கேள்விப்படவோ இல்லை. அத்தகைய ஒரு தோல்விக்குப் பின் நான் ஒரு மனிதன்தானா? எப்போதும் இருந்திருக்கக் கூடாத ஒன்றாக நான் இருக்கிறேன். அமைதியாக எதுஇருக்க வேண்டுமோ அதுவாக நான் இருக்கிறேன்.

காலங்கடந்து விட்டதென்று எனக்குத் தெரியும் என் வாழ்க்கையின் எல்லையிடப்படாத சமவெளிகளிலும் பாழ்நிலங்களிலும் நான் தங்க வேண்டும். இந்தத் தங்குதலை நான் குறுக்கிக் கொள்வேன் என்று பயப்படுகிறேன். ஆனால் சாவு எனக்கு நேரும்போது, இரு நீண்ட கரைகளுக்கிடையே இடையறாமல் ஓடும் இந்த நீரில் ஒரு சிறிய படகில் நான் வைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். நான் நதியில் ஆழத்தில், நதியில் மறைந்து போய், நதியின் உள்ளே…. நதி.

http://www.sramakrishnan.com/?p=4686

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.