Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினம் ஒரு திருப்பாவை #MargazhiSpecial

Featured Replies

  • தொடங்கியவர்

தினம் ஒரு திருப்பாவை-27 கிருஷ்ணனை பாடிப் பெறும் பரிசுகள் என்ன? #MargazhiSpecial

ஆண்டாள் பாடும் திருப்பாவை 

 


திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களில் மிகவும் விசேஷமான பாசுரம் 27-வது பாசுரம். இந்தப் பாசுரத்தின் அடிப்படையில் கூடாரவல்லி என்ற பெயரில் வைணவத் தலங்களில் ஒரு வைபவமே நடைபெறுகின்றது. மார்கழி நீராடி பாவை நோன்பு இருக்க விரும்பிய ஆண்டாள், நோன்பு இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை இரண்டாவது பாசுரத்தில், 'மையிட்டு நாம் எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் என்றெல்லாம் கூறும் ஆண்டாள், 27-வது பாசுரத்தில் விரதம் பூர்த்தியான மகிழ்ச்சியில் தங்களுடைய கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்று விவரிக்கிறாள்.


கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


கிருஷ்ணன் ஆண்டாள் கேட்கும் சங்குகள், பறைகள் அனைத்தையும் தந்துவிட்ட பிறகு, வேறு ஏதேனும் வேண்டுமா என்று கேட்கிறான்.
ஆண்டாளும் அவளுடைய தோழிகளும், கிருஷ்ணனைப் பலவாறாகப் புகழ்கிறார்கள். பின்னர் நோன்பை பூர்த்தி செய்த பிறகு தாங்கள் அனுபவிக்கப்போகும் சுக சௌகர்யங்களைப் பட்டியல் இடுகிறாள். அந்த சுக சௌகர்யங்களும்கூட கிருஷ்ணன்தான் அருளக்கூடியவன் என்றும் ஆண்டாள் கூறுகிறாள்.

 

கிருஷ்ணன்


'கூடாதாரை வெல்லும் சீர்கோவிந்தா' என்று ஆண்டாள் கிருஷ்ணனின் பிரபாவத்தைப் புகழ்கிறாள். கூடாரை என்பதற்கு பகைவர்கள் என்று அர்த்தம் இல்லை. பகைவர்களை வெல்வது என்பது கிருஷ்ணனுக்கு சர்வசகஜம் என்பதால், ஆண்டாள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. தன்னை விரும்பாதவர்களையும் விரும்பும்படி அவர்களுடைய மனதை வெற்றிகொண்டு விடுவானாம். ஆனால், அவனை விரும்பாதவர்கள் பரம உத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி உத்தமமான குணம் கொண்டவர்களின் மனங்களை கிருஷ்ணனே ஆட்கொண்டுவிடுவான். எனவேதான் அவன் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன் என்கிறாள் ஆண்டாள்.


தாங்கள் அவனைப் பாடித் துதிப்பதனால் பெறப்போகும் பயன்களை அடுத்தடுத்த வரிகளில் பட்டியல் இடுகிறாள் ஆண்டாள்.ஆண்டாள்
'கிருஷ்ணா, உன்னைப் புகழ்ந்து பாடி, உன்னுடைய அருளால் நாங்கள் பெற இருக்கும் பரிசுகள் என்னென்ன தெரியுமா? நாடே புகழும்படியாக நீ அருளும் கைவளைகளையும், தோள்களுக்குத் தகுந்த தோள்வளைகளையும் அணிந்துகொள்வோம். மேலும் உன்னுடைய புகழைப் பாடக்கேட்ட எங்கள் காதுகளுக்கு நீ அருளும் தங்க வைரத்தோடுகளையும் அணிந்துகொள்வோம். அதற்கு பிறகு வண்ணமயமான பட்டாடைகளை உடுத்திக்கொள்வோம். இத்தனையையும் நாங்களாக அணிந்துகொள்ளமாட்டோம். நீயும் நப்பின்னையும்தான் எங்களுக்கு அணிவிக்கவேண்டும். மேலும் எங்களுடன் நீயும் நப்பின்னையும் சேர்ந்து, பால் சோறு முழுகும்படி நெய் சேர்த்து, பாலும் நெய்யும் முழங்கை வரை வழிய வழிய உண்ணவேண்டும்' என்கிறாள்.


கிருஷ்ணனின் அனுக்கிரகத்தினால் அவனுடனே சேர்ந்துவிட்டதைக் குறிக்கும்படி கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் என்று கூடியிருந்து சுக சௌகர்யங்களை அனுபவிப்போம் என்கிறாள் ஆண்டாள். திருப்பாவையில் இந்த பாசுரமானது கூடிவராத நற்காரியங்களையும், கூடி வரச்செய்வது. அதன் காரணமாகவே இந்த பாசுரத்துக்கு உரிய நாளில் ஆலயங்களில் கூடாரவல்லி வைபவம் நடைபெறுகிறது.


திருப்பாவையில் மிகவும் விசேஷமான இந்தப் பாசுரத்தைப் பாராயணம் செய்தால், திருமணம் கூடி வராதவர்களுக்கு திருமணம் கூடி வருவதாக தொன்றுதொட்டு நிலவிவரும் பக்திபூர்வமான நம்பிக்கை. மேலும் நமக்கு எதிரிகள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.

http://www.vikatan.com/news/spirituality/77501-andal-thiruppavai-twenty-seventh-devotional-hymn.art

  • தொடங்கியவர்

தினம் ஒரு திருப்பாவை- 28 குறைவொன்றும் இல்லை யாருக்கு? #MargazhiSpecial

'கூடாரை வெல்லும்' பாசுரத்தில் கிருஷ்ணனின் அருளால் தாங்கள் பெற்ற பரிசுகளை பட்டியலிடும் ஆண்டாள், தாங்கள்  கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் கூடி இருந்து, நெய்கலந்த பால்சோற்றை சாப்பிடப்போவதாகச் சொல்கிறாள். பின்னர், இப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல், கிருஷ்ணனை ஆயர்குலச் சிறுவன் என்று நினைத்து, ஒருமையில் அழைத்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், மிக்க அன்புடனே வேண்டியதைத் தந்த கிருஷ்ணனின் அன்பைப் போற்றுகிறாள்.

 

கண்ணனின் புகழ்பாடும் திருப்பாவை பாடல்கள்



    கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,
    அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்,
    குறைவொன்று மில்லாத கோவிந்தா, உன்றன்னோடு
    உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது,
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால்,உன்றன்னைச்
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே,
    இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


'பசுக்களை மேய்வதற்காக காட்டுக்கு அழைத்துச் சென்று, பசுக்களை மேயவிட்டு, அங்கேயே மற்றவர்களுடன் கூடி உண்ணும் ஆயர்குலத்தில் பிறந்த அறியாத சிறுமிகள் நாங்கள். திருமாலின் அவதாரமான உன்னை நாங்கள் பெற்றது எங்களுடைய பூர்வபுண்ணியம்தான். நாங்கள் உன்னிடம் கேட்ட கைவளையும், தோள்வளையும், தோடும் எல்லாம் எங்களுக்குப் பெரிதல்ல. குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் நீ என்பதை நாங்கள்  புரிந்துகொண்டோம்' என்கிறாள். ஆண்டாள் திருப்பாவையின் அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் கோவிந்த நாமத்தைக் கூறுகிறாள்.

27-வது பாடலில் 'கூடாரை வெல்லும் சீர்  கோவிந்தா' என்றும்; இந்தப் பாசுரத்தில் 'குறைவொன்றும் இல்லாத கோவிந்தன்' என்றும்; அடுத்த பாடலில் 'இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா' என்றும் மூன்று பாசுரங்களில் தொடர்ந்து கோவிந்த நாமத்தைக் கூறுகிறாள்.  

கோவிந்தன் என்றால் பசுக்களைக் காப்பவன் என்று பொருள். இங்கே பசுக்கள் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களாகிய நம்மைத்தான். ஆக, பசுக்களாகிய நம்மையெல்லாம் கடைத்தேற்றுவதற்காகவே, பகவான் கிருஷ்ணனாக அவதரித்தான்

 

பாலகன் கிருஷ்ணன் 


'அப்படி ஆயர்குலத்தில் பிறந்த எங்களைக் காப்பாற்றுவதற்காக வைகுந்தத்தில் இருந்து இறங்கி எங்கள் கோகுலத்தில் எங்கள் மத்தியில் ஆடியும் பாடியும் திரிந்த உன்னை,  அறியாத சிறுவன் என்று நினைத்த நாங்கள், உன்னை ஒருமையில் அழைத்தும், நீ எங்களிடம் துவேஷம் கொள்ளாமல், எங்களிடம் அன்பு கொண்டு நாங்கள் கேட்டதையெல்லாம் அருள் செய்தாய். இப்படியான பிரேமையை எங்களிடம் வைத்திருக்கும் உன்னை நாங்கள் இந்த கோகுலத்தில் பெறுவதற்கு புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும். 


'ஆனால், நாங்கள் முன் பாசுரத்தில் உன் அருளால் பெற்ற பரிசுகள் எல்லாம் பரிசுகளே இல்லை' என்று சொல்லும் ஆண்டாள், மார்கழி நீராடி கிருஷ்ணனின் அருளால் பெறக்கூடிய மேன்மையான பரிசு என்று எதைச் சொல்கிறாள் என்றால், கிருஷ்ணனுடனே ஐக்கியமாகிவிடும் பேரானந்த நிலையைத்தான். 


இந்தப் பிறவி என்பது முடிந்துவிடக்கூடியது. கிருஷ்ணனும் அவதாரக் காலம் முடிந்ததும் உடலைத் துறந்து வைகுந்தத்துக்குச் செல்லவேண்டியவன்தான். அப்படி கிருஷ்ணன் வைகுந்தம் செல்லும்போது, அவனுடனே தாங்களும் வைகுந்தத்துக்குச் சென்று பகவானுடைய திருவடி நிழலிலேயே இருக்கவேண்டும் என்பதைத்தான் ஆண்டாள், மார்கழி நீராடி தாங்கள் கடைப்பிடிக்கும் பாவை நோன்புக்கு உரிய  பரிசு என்று கூறுகிறாள்.

ஆண்டாள் 


ஆண்டாளின் இந்தப் பாசுரத்தில் உள்ள குறைவொன்றும் இல்லாத கோவிந்தா என்ற வரிக்கு, அகோபிலம் மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் வெகு அழகாக ஒரு விளக்கம் அருளி இருக்கிறார்.

'கிருஷ்ணன் ஶ்ரீவைகுந்தத்தில் இருக்கும்போது குறைவொன்றும் இல்லாதவனாக இருந்தாயோ அப்படியே ஆயர்குலத்தில் உதித்தபோதும் குறைவொன்றும் இல்லாதவனாக இருக்கிறாய். உலகத்தில் உள்ள ஆயர்குலத்தைக் காட்டிலும், கோகுலத்தில் உள்ள ஆயர்குலம் மிகவும் மேன்மை பெற்றது. உன்னுடைய திருவடிகளில் சஞ்சலமற்ற பக்தியை உடைய ஆயர்குலப் பெண்களைப் பெற்றெடுத்த குலம் அல்லவா கோகுலத்து ஆயர்குலம்?! இந்த ஆயர்குலத்தில் வந்து தோன்றியதால் எந்த ஒரு குறைவும் உனக்கு வராது' என்று ஆண்டாள் கூறுகிறாள்.
ஆண்டாள் தன்னை கோகுலத்து ஆயர்குலப் பெண்ணாக பாவித்துக்கொண்டதால், கோகுலத்தைப் பெருமைப்படுத்திக் கூறுகிறாள்.

http://www.vikatan.com/news/spirituality/77598-andal-thiruppavai-twenty-eighth-devotional-hymn.art

  • தொடங்கியவர்

தினம் ஒரு திருப்பாவை- 29 கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்! #MargahiSpecial

கிருஷ்ணனின் அருள் பெற திருப்பாவை


கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்த பரமாத்மாவுடன் ஜீவாத்மாவாகிய தான் ஐக்கியமாகிவிடவேண்டும் என்று விரும்பிய ஆண்டாள், அதற்காக புனிதமான மார்கழி மாதத்தில் நீராடி, திருப்பாவை பாடி கிருஷ்ணனை வழிபட விரும்புகிறாள். அவன் அருள் இருந்தால்தானே அவன் தாள் பணியமுடியும். மார்கழி நீராடி அவனைப் பணிய வேண்டுமானால், அவனும் தங்களுக்கு அருகில் இருந்தால்தானே முடியும்? எனவே கிருஷ்ணனையும் எழுப்பி தங்களுடன் யமுனைக்கு வருமாறு அழைக்கிறாள். அதற்கும் முன்பாக தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர்களும் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடலாகப் பாடி அவர்களை எழுப்பி தன்னுடன் அழைத்து வருகிறாள். நிறைவாக கிருஷ்ணனையும் எழுப்பி விட்டாள். கிருஷ்ணனும் அவர்களுக்கு அருள்புரிந்துவிட்டான். மேலும் தன்னை விரும்பி வணங்குவதன் காரணம் என்ன என்றும் கேட்கிறான். அதற்கு ஆண்டாள் சொல்கிறாள்:


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநா மாட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.


விடிந்தும் விடியாத இந்தக் காலைப் பொழுதில் நாங்கள் உன்னை வந்து எழுப்பி, பொன்போல் பிரகாசிக்கும் உன்னுடைய திருவடிகளை எதற்குப் பணிந்து வணங்குகிறோம் தெரியுமா?

ஆண்டாள் 


கோகுலத்து பசுக்களை அவற்றின் பசி நீங்கும்வரை மேய்த்து, அதன் பிறகே உண்ணும் உயர்ந்த குணம் கொண்ட குலத்தில் பிறந்த நீ, எங்களை ஆட்கொள்ளவேண்டும். நாங்கள் உன் திருவடியில் இருந்து சதா காலமும் உன்னை பூஜித்துக் கொண்டு இருக்கவேண்டும்.
இன்று மட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்பதற்காக நாங்கள் மார்கழி நீராடி உன்னை வழிபடவில்லை; என்றென்றும் ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன்னுடனே இருக்கவேண்டும்; உனக்கே நாங்கள் ஆட்படவேண்டும். இதைத் தவிர வேறு எந்த விருப்பமும் எங்களுக்கு இல்லை. அப்படி உன்னில் இருந்து மாறுபட்ட ஒன்றின்மேல் எங்கள் விருப்பம் சென்றால், அந்த விருப்பதைப் போக்கி, என்றும் உன்னிடமே எங்கள் மனம் லயித்திருக்கும்படிச் செய்யவேண்டும் என்று ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.
கிருஷ்ணன் பரமாத்மா; பூமிதேவியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் ஜீவாத்மா. உலகத்தில் மனிதர்களாகப் பிறக்கும் நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள். நம்மை நம்முடைய புண்ணிய காரியங்களால் ஆட்கொண்டு, நமக்கு மீண்டும் பிறவாத வரம் அருளி, நம்மைத் தன்னுடனே சேர்த்துக்கொள்ளும் இறைவன் பரமாத்மா.


அந்த பரமாத்மாதான் நாமெல்லாம் உய்யும்படி கிருஷ்ணனாக அவதரித்தார். நம்மையெல்லாம் இறைவனிடம் ஆற்றுப்படுத்த விரும்பி பூமிதேவி ஆண்டாளாக திருவில்லிபுத்தூரில் அவதரித்து, தன்னுடைய பாசுரங்களால் நம்மை பகவானிடம் ஆற்றுப்படுத்துகிறாள்.
இப்படி ஆண்டாள் நமக்கு அருளிய இந்த திருப்பாவை பாசுரங்களை பக்தியுடன் பாராயணம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றியும் ஆண்டாள் திருப்பாவையின் நிறைவு பாசுரத்தில் அருளி இருக்கிறாள்.

 

கிருஷ்ணன் 
            
 

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி, 
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன,
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே,
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்,
எங்கும் திருவருள்பெற்று, இன்புறுவ ரெம்பாவாய்.


திருப்பாற்கடலை அமுதம் வேண்டி கடைந்தபோது, பகவான் நாராயணன்தான் மந்தரமலையைத் தாங்கும் கூர்மமாக அவதரித்தார். அதனால்தான் பகவானை வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறாள். அறிவு பிரகாசிக்கும்படியான முகத்தை உடைய கோகுலத்து சிறுமியர்கள், கிருஷ்ணனாக அவதரித்த கிருஷ்ணனிடம் சென்று, அவன் திருவருளைப் பெறவேண்டி, திருவில்லிபுத்தூரில் பட்டர்பிரான் (பெரியாழ்வார்) மகளாக துளசி வனத்தில் தோன்றிய கோதை (ஆண்டாள்) சொன்ன இந்தத் தமிழ்மாலை முப்பதையும் நாள் தவறாமல் பாராயணம் செய்பவர்கள்,  செல்வத்தின் இருப்பிடமான திருமகளைத் தன் மார்பில் குடியிருக்கப் பெற்ற திருமாலின் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்கிறாள். தேனினும் இனிய பாசுரங்களால் பரந்தாமனின் புகழ் பாடி நம்மையும் பகவானிடத்தே ஆற்றுப்படுத்திய சுடர்க்கொடி ஆண்டாளின் திருவடிகளைப் பணிவோம்.

http://www.vikatan.com/news/spirituality/77685-andal-thiruppavai-twenty-nineth-devotional-hymn.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.