Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி

Featured Replies

drawing8.jpg

“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...”

வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்தத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டார். பாளயக்கார நாயுடுங்கிற வகையறா கெஜட்டில் இல்லை, என்று சொந்தக்கார மாமா ஒருத்தருக்கு பொண்ணு பார்க்கப்போன இடத்தில் சமாதானம் செய்ய வந்தவர்.

மாயூரம் என்று சொல்லப்பட்ட மயிலாடுதுறையில் இருந்து இரண்டு மூன்று மணிநேர பயணத்தில் கண்ணங்குடி என்று சொல்லப்பட்ட எங்கள் கிராமத்திற்கு வந்துவிடலாம். அந்த கிராமத்தில் மொத்தம் பெரிய பண்ணை, சின்ன பண்ணைன்னு இரண்டு பங்காளிக் குடும்பங்கள், பிறகு அவர்களது சொந்தக்காரர்கள் அவ்வளவுதான். அந்தக் காலத்து மச்சுவீடு எங்களுடையது, இரண்டு பக்கம் திண்ணை வைச்சு, வாசலைத் தாண்டினா நாலுபக்கம் தாழ்வாரம் அதற்கடுத்து இடது பக்கம் கூடம் வலது பக்கம் பத்து ஆளு புலங்குகிற அளவிற்கு பெரிய சமையற்கட்டென்று நல்ல பெரிய வீடு பெரிய பண்ணையென்று சொல்லப்பட்ட எங்கவீடு.

முன்பக்கம் திண்ணையிலும் தாத்தாவின் விருப்பத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட மணிப்புறாக்கள் நிறைந்திருக்கும். பக், பக், பக் என்று ஒரு பக்க மீசையை நீவி விட்டுக்கொண்டு இன்னொரு கையால் அவர் அந்தப் புறாக்களுக்கு பொரி தூவும் அழகே அழகு. வீட்டு பாதுகாவலர்களாக ராஜபாளயத்து வஸ்தாதுகள் இரண்டு தாத்தாவின் முறுக்கிவிட்ட மீசையைப்போல வேறெதற்கும் உபயோகமில்லாமல் வெறும் பெருமைக்காக. அவ்வாவின் செல்லங்களாக மணப்பாறை வகையறாக்கள், ஆடு, கோழி இன்னபிற வீட்டின் பின்புறத்தில், பெரிய காடாய் மூங்கில் மரங்களும், பனை மரங்களும், புளிய மரங்களும் ஒன்றுடன் ஒன்று எங்கள் குடும்பத்தைப் பற்றிய கிசுகிசுக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் எப்பொழுதும் சப்தமாக இருக்கும், கொஞ்சம் உற்றுக்கேட்டால் ஒரு கிலோமீட்டருக்கப்பால் கடல் ஆர்ப்பரிக்கும் சப்தம் கூட கேட்கும்.

இவர்களெல்லாம் ஆந்திரத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து அங்கிருந்த கரிசல் நிலங்களை விளைநிலங்களாக மாற்றி தங்கள் வாழ்க்கையை அங்கிருந்த மண்ணுடனும் மனிதர்களுடனும் உருவாக்கிக் கொண்டவர்கள், கொஞ்சமேக் கொஞ்சமாக இன்னும் தெலுங்கு வாடை அடிக்கும் அந்தக் குடும்பங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியிருந்தக் காலம் உண்டு. பின்னர் வானம் பார்த்த பூமி பொய்த்துப்போய், சவூத் ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும் பிழைக்கப்போன மக்கள் பெரும் செல்வத்துடன் வந்து இங்கிருந்த மற்ற விவசாய மக்களையும் கெடுத்து விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த அவ்வா,

“டேய் குஞ்சான் அந்தக் காலத்தில தெலுங்கானாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தப்ப உங்க தாத்தாமாருங்கல்லாம் பெரிய பணக்காரங்க அவங்க கொண்டு வரும் சொத்தைப் பறிக்கிறதுக்காகக் கொள்ளைக்காரங்க வழிமறிப்பாங்களாம். அவங்கக்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுக்காக வழியில் பணம் நகையெல்லாம் மண்ணில் புதைச்சு வைத்து அடையாளத்திற்கு மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு வந்திருவாங்களாம். அந்த பணமெல்லாம் இருந்தா இந்த மெட்ராஸ் மெட்ராஸ்னு சொல்றாங்களே அதையே விலைக்கு வாங்கலாம் தெரியுமா?”

சொன்ன அன்றிரவு நான் மரங்களின் கீழிருந்த செல்வங்களையெல்லாம் எடுத்து மெட்ராஸை விலைக்கு வாங்குவதாக கனவுகண்டு கொண்டிருந்தேன். பாட்டிக்கு தன் மாமனாரோட பேரைச் சொல்வதில் என் குஷியிருக்குமோத் தெரியாது, எப்பப்பாரு குஞ்சான், குஞ்சாநாக்யருன்னு தான் கூப்பிடும். நான் அது என்னோட பேரில்லைன்னு சொன்னாலும் கேட்பதில்லைன்னு வைத்திருந்தது, தாத்தா இருந்த காலத்தில் அவ்வா தாத்தாவிடம் பேசி நான் கேட்டது கிடையாது.

“டேய் பொடியா நான் சொன்னேன்னு அவ்வாக்கிட்டப் போய் காபித்தண்ணி வாங்கியாடா.” அந்த மீசைக் கிழம் சொன்னது என் காதில் விழுந்திருக்குமோ என்னமோத் தெரியாது அவ்வாவின் காதில் விழுந்திருக்கும். ஐந்து நிமிடத்தில் குவளையில் காபித்தண்ணி என் கரங்களினால் தாத்தாவிற்கு அனுப்பப்படும். தாத்தா சாவுறவரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு அவ்வா, தாத்தா செத்ததுக்கப்புறம் நாட்டாமையை எங்கம்மா பேருக்கும் மாத்தி எழுதிவைச்சிட்டு நான் வாழ்ந்தது அந்த மீசைக்காரனகுக்காகத்தான் உங்களுக்காகயில்லைன்னு சொல்றமாதிரி கொஞ்ச காலத்தில் அதுவும் செத்துப் போச்சு, அன்னைலேரந்து அம்மாவோட அதிகாரம் தான் பண்ணையில் கொடிகட்டி பறந்தது தெய்வநாயகி என்ற ஆட்டக்காரியை நைனா வீட்டிற்கு கூட்டி வந்த நாள்வரை.

அப்ப எனக்கு ஒன்பது வயசிருக்கும். நைனா அரசியல்ல சேர்ந்த நேரம் அது எப்பப்பார்த்தாலும் வீட்டில் தங்காம புல்லட்டில் கட்சிக் கொடிகட்டிக்கிட்டு, இளையாங்குடி, முப்பேத்தங்குடி, செல்லலூர்னு பக்கத்துக் கிராமத்து ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருந்த காலம் அது. அட நம்ப பண்ணையே சொல்லுதுன்னு சொல்லி ஊர் ஊரா அந்தக் கட்சியில சேர்ந்துக்கிட்டிருந்தாங்க, நைனாவும் இந்த தடவை கொஞ்சம் முயற்சி பண்ணினா சீட்டு வாங்கிரலாம்னு நினைத்தார். நைனாவுக்கு ஐம்பது வயசிருக்கும்னு நினைக்கிறேன், அம்மாவிற்கு நாற்பத்தைந்து வயசான காலம். மூத்தவன் மாயூரம் ஏவிசியில் படிக்கப் போயிருந்தான், இரண்டாவது நானு, மூணாவது என் தங்கச்சி பேபி. பேரென்னமோ அகிலாண்டேஸ்வரிதான் ஆனால் எல்லாரும் பேபின்னு கூப்பிடுவதே பழக்கமாயிடுச்சு.

அந்த சின்ன வயதில் புரியவில்லை ஏன் நைனா வீட்டின் எதிர்ப்பக்கம் இருந்த தானியக்கிடங்கை சுத்தப்படுத்தி யாரோ ஒருவரை தங்க வைக்கிறார் என்று, ஐம்பதுகளிலும் அவர் தன் பண்ணைத்தனத்தை நிரூபிக்கும் ஆசையிலும், நாற்பத்தைந்துகளில் அம்மாவினால் அவர் இழுப்பிற்கு ஆடமுடியாததும் கூட காரணமாயிருந்திருக்கலாம் என்று இன்று நான் நினைக்கிறேன். அம்மாவின் நாட்டாமைத்தனத்தில் தெய்வநாயகியின் தலையீடு சுத்தமாக இல்லாத பொழுதும் தன் கட்டிலை பங்கு போட வந்துவிட்டதாலேயே அம்மாவின் கோபம் தலைக்கேறியிருந்த நாட்கள் அவை. எந்நேரமும் வீட்டில் சண்டை தான், எங்கள் வீட்டில் படுக்கையில்லாவிட்டாலும் சாப்பாடு இந்த வீட்டில் தான் என்பதால் நைனா சாப்பிட வரும் நேரத்தில் அம்மா தன் அத்தனை சாமர்த்தியத்தையும் காட்டி அப்பாவை கோபப்படவைப்பார். பெண்டாட்டியின் மீது கைநீட்டும் பழக்கம் இல்லாததால் பல இரவுகள் தட்டு விசிறியடிக்கப்படும் அதிகபட்சமாக.

இந்தக் காலகட்டத்தில் அப்பாவும் அண்ணாவும் ஏன் சந்தித்துக் கொள்ளவேயில்லை என்பது சிறுவயதில் நான் எப்போதும் யோசித்துக் கொண்டேயிருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. என்னைப் போலில்லாமல் அண்ணன் கல்லலூரியில் படித்துவந்ததால் அவன் நேராய் சில கேள்விகளைக் கேட்டுவிட முடியும் என்பதால் நைனாவும், நைனாக்களை கேள்வி கேட்கும் பழக்கம் பரம்பரையிலேயே இல்லாததால் அண்ணாவும் ஒருவரிடம் ஒருவர் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் எனக்குத்தான் கொண்டாட்டம், இரண்டு வீடுகளில் சாப்பாடு, கேட்ட பொழுதெல்லாம் தீனி என சந்தோஷமாயிருந்தேன் அதற்கு ஒரு காரணமிருக்கிறது.

நான், அண்ணா பேபி ஓடிவிளையாடிய வீட்டில் தான் அப்பா அந்த நாட்டியக்காரியை குடிவைத்திருந்தார் என்றாலும் என்னைத்தவிர யாரும் அந்த வீட்டிற்கு வருவது போவது கிடையாது. அண்ணா வயசுதான் இருக்கும் அந்த தெய்வநாயகிக்கு, அதனால் அவன் தலைவைத்துப் பார்க்கவில்லை, தங்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அம்மாவிற்கு எது சரியோ அதுதான் அவளுக்கு சரி அப்படித்தான் சரியில்லாததும். ஆனால் நானோ இரண்டும் கெட்டான் வயதில் இருந்ததால் விஷயத்தை என்னிடம் சொல்லவும் முடியாமல் அதே சமயத்தில் என்னை ஒரேயடியாக இழக்கவும் விரும்பமில்லாமல் இருந்ததால் அந்தக் காலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான். அதன் காரணம் பின்னால் தெரிந்தது, தெய்வநாயகி வந்த ஒன்றிரண்டு வருடங்கள் இருந்த சண்டை ஒரேயடியாக குறைந்திருந்த ஒரு வாரம் மட்டும் அம்மா தெய்வாவிற்கு சமைத்து என்மூலம் கொடுத்தனுப்பினாள். பின்னர் நேரடியான சண்டை தெய்வாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் நடந்ததேயில்லை.

பிற்காலங்களில் நான் தெரிந்து கொண்டேன், அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி தெய்வநாயகியின் கர்பப்பையை நீக்கிவிட்டதாகவும் அதனால் இனிமேல் அவளுக்கு தன் பண்ணையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது என்ற விஷயம் உண்மையானதும். அம்மா கொஞ்சம் அடங்கிவிட்டாள் இரவு நேரங்களில் தெய்வாவிற்கு செய்த துரோகத்தினால் குலதெய்வம் அகிலாண்டேஸ்வரி சூலாயுதத்துடன் துரத்துவதாக ஒன்றிரண்டு பூசாரிகளைப் பார்த்து பரிகாரம் செய்து கொண்டதுடன். அந்தக் காலம் இனிமையானது, நான் அந்த வீட்டிற்குப் போவதை அம்மா தடுக்காதக் காலம் இன்னும் சொல்லப்போனால், திருவிழா, தேர் போன்ற காலங்களில் வீட்டில் கரியஞ்சோறு சமைத்தால் தெய்வாவிற்கு நான் தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் தூதன் நான்தான், பெரும்பாலும் தெய்வாவின் வீட்டில்தான் இருப்பேன். அம்மாவைப் போல எப்பொழுது எண்ணை வழியும் முகமாக இல்லாமல் தெய்வா பவுடர் பூசி சிங்கப்பூர் சென்ட் அடித்து, அந்தச் சமயத்தில் நான் இருந்தாள் என்மீதும் அடித்துவிடுவாள், வாசனயாக இருப்பாள். பெரிய நடராஜர் போட்டோ இருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் எனக்கு அந்த கிராமத்தை விட்டு ஏதோ வேறுறொரு உலகிற்கு வந்துவிட்டதாகத் தோன்றும். அம்மாவைப் போலில்லாமல் தெய்வா அவளுடைய பாடல்களுடன் தான் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் மிகவும் சன்னமாகத்தான் பாடுவாள், ஒடிசலான தேகம், கண்ணுக்கு மையெழுதி, ஓரிடத்தில் நிற்காமல் எப்பொழுதும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருப்பவளாயிருந்தாள்.

வீட்டிற்குப் போனால் பிடித்திழுத்து மடியில் உட்கார வைத்து எப்பொழுதும் தயாராகவேயிருக்கும் ஏதாவதொறு பலகாரத்தை ஆசையுடன் ஊட்டிவிடுவாள். எங்கள் வீட்டில் நாங்கள் அம்மாவையோ இல்லை அவ்வாவையோக் கூட தொட்டுப் பேசி பழக்கமில்லாத காரணத்தால் கொஞ்சம் கூச்சமாகயிருக்கும்.

கொஞ்சக் காலத்தில் அந்தக் கூச்சசுபாவம் என்னிலிருந்து அடியோடு போயிருந்தது, நைனாவைப் போலவே நானும் அவளை தெய்வா தெய்வா என்றுதான் கூப்பிடுவேன், அவளுக்கு நான் எப்பொழுதும் ராசய்யாதான், பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் வாங்க ராசய்யா என்று சொல்லி பலகாரம் கொடுத்து, கன்னத்தில் முத்தா வாங்கிக்கொள்வாள். பிற்காலங்களில் எனக்குப் புரிந்தது, அவள் தனக்கே தனக்காய் ஒரு பிள்ளை இனிமேல் பிறக்காது என்பதால் என்னை அவள் பிள்ளையாய் வரித்துக்கொண்டு நான் அம்மாவிடம் மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தன் சாமர்த்தியங்களை பயன்படுத்தி வந்தது. ஏனென்றால் அவளுக்கு இருந்தது மிகச்சில ஆண்டுகாலமே, எனக்கு வைப்பாட்டி, நாட்டியக்காரி, பெண்டாட்டி போன்ற வார்த்தைகளுக்கான வித்தியாசம் தெரிய வருவதற்குள் தன் மீதான ஒரு பாசத்தை கொண்டு வரும் முயற்சிகள்.

அதை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் வலிமை அம்மாவிற்கு இல்லை, ஏனென்றால் அவள் தெய்வாவிற்கு ஒரு தவறைச் செய்திருந்தாள் அதனால் அவளும் என்னை ஓரளவிற்கு தெய்வாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டாள். ஆனால் ஊர்க்காரர்கள் அப்படியில்லையில்லையா.

“என்னடா அய்யாப்பிள்ளை எப்பப்பாரு உங்க சித்தி வீட்டிலேயேத்தான் இருக்கிறியாமே. ம்ஹும்.”

தனியாக அழைத்துக் காதில் “என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா” என்பார்கள்.

“ஆனாலும் உங்கம்மா பாவம்டா இப்பல்லாம் ராத்திரி உங்கப்பா வீடு தங்கறதேயில்லையாம்ல.”

“ஒருநாள் ராத்திரி உங்கப்பா உங்க சித்திக்கு முடியாத நாளில் உங்க வீட்டுக் கதவைத்தட்ட கதவைத் திறக்கவேயில்லையாம்ல.”

இதுபோல் அவரவர்களின் எங்கள் வீட்டின் மீதான கற்பனையை என்மீது திணித்தவாறு இருந்தனர். இதிலிருந்தெல்லாம் நான் தப்பியதற்கு ஒரே காரணம் தெய்வாதான். இரண்டும் கெட்டான் வயதின் இறுதி நாட்கள் அவை, தன் நாட்டியத்திறமை காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை மாலை நேரக் கதைகளாக அவள் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தாள், அவைகள் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி என் இரண்டும் கெட்டான் வயது சந்தேகங்களைத் தீர்ப்பதாகவேயிருக்கும். அவள் என்னுடன் பேசுவதற்கு எந்த நேரத்திலும் தயாராயிருந்தாள் கேள்வி எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதற்கான பதில் அவளிடம் இருந்தது. பெரும்பாலும் அவள் கோபப்பட்டு நான் பார்த்ததேகிடையாது, சிரித்துக்கொண்டே எல்லாக் கேள்விக்களுக்குமான பதிலை எனக்குப் புரியும் வகையில் சொல்ல அவளுக்குத் தெரிந்திருந்தது.

“தெய்வா உன்னைய பின்னின்னு வெளியில் சொன்னா ஏன் எல்லோரும் சிரிக்கிறாங்க...” போன்ற என் கேள்விகளுக்கான பதில் கூட அவளிடம் இருந்தது, எங்கள் பக்கத்தில் சித்தி என்று அழைக்கும் வழமைகிடையாது. அம்மாவின் தங்கை உறவில் வருபவர்களை பின்னி என்றுதான் இன்றும் அழைப்போம்.

நைனா என்ன தான் பண்ணையாராக இருந்தாலும், அரசியல் செய்யத் தெரியாததால் அரசியலில் நன்றாக அடிவாங்கினார். ஆனால் பரம்பரைச் சொத்தை அழித்துவிடும் அளவிற்கு அது போகாமல் இருந்ததற்கு தெய்வா ஒரு காரணம். பொறுமையாகப் பேசி அவருக்கு இந்த அரசியல் நமக்குத் தேவையில்லைன்னு சொல்லத் தெரிஞ்சிருந்தது. நைனாவும் அரசியலை விடுத்து மீண்டும் தான் நன்கறிந்த விவசாயத்தைப் பார்க்கத் தொடங்கினார். இதனால் தங்களுக்கு செலவு செய்யும் வழமையை நைனா நிறுத்திவிட்டதால் கோபமான அம்மாவின் அண்ணன் முறை உறவினர்கள் இதற்கெல்லாம் காரணம் தெய்வாதான் என இல்லாததும் பொல்லாததையும் அம்மாவிடம் வத்தி வைத்தனர்.

அப்பொழுது மீண்டும் தொடங்கியது என் உரிமையைப் பற்றிய போராட்டம் அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் இடையில், தெய்வா வீட்டில் அப்பாவிற்கு கூட அம்மாவைப் பற்றி தவறாகப் பேசும் உரிமை கிடையாது. அதும் என் எதிரில் நைனா ஏதாவது சொல்லிவிட கண்களாலேயே நான் இருப்பதையும் தொடர்ந்து பேசாதீர்கள் என்று தடுப்பதையும் பார்த்திருக்கிறேன். அம்மாவிற்கும் தான் தெய்வாவிற்கு செய்த தீங்கு நினைவில் வந்தாலும் தன் சொத்தில் தன் நாட்டாமையில் தெய்வாவின் பங்கு வந்தவிடவேக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வைப்பாட்டி கூட சொத்தில் பங்கு வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போடமுடியுமென்றும் அல்லது அவள் இறந்தபிறகு தெய்வாவின் உறவினர்கள் அவளுக்கு நானோ இல்லை நைனாவோ கொள்ளி போட்ட சாட்சியத்தை வைத்து சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமென்று புரளியைக் கிளப்பிவிட்டனர். அம்மாவிற்கோ எங்கள் குடும்பச்சொத்து யாருக்கும் போய்ச் சேருவதில் விருப்பம் கிடையாது. அதனால் ஒரு வார்த்தை தெய்வாவிடம் நேரில் கேட்டாள், அது நானோ இல்லை எனது நைனாவோ அவளுக்கு கொள்ளி போடமாட்டார்கள் என்பதைப் பற்றிய ஒன்று.

முதன் முதலில் தெய்வா கோபப்பட்டு பேசி நான் அன்றுதான் பார்த்தேன், கேட்ட அம்மாவை நோக்கி முதலில் கோபமாக ஆரம்பித்தவள் தன் இயலாமையால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தேம்பத் தொடங்கி பின்னர் அழுகையாக அம்மாவின் கால்களைப் பிடித்து உங்கள் சொத்தே வேண்டாம் நான் இவருக்கு வைப்பாட்டியா வந்து என்னத்தக் கண்டேன் கடைசியா கொள்ளி போடறதக்கூட தடுத்துறாதீங்கன்னு சொல்லி அழ. அம்மா ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டாள். ஆனால் அன்றிரவு நைனா தண்ணியடித்துவிட்டு என்னை அழைத்துப் பேசினார். அதுதான் முதன் முறை அம்மா இல்லாத ஒருவரிடம் நைனா தெய்வாவைப் பற்றி பேசியது.

“தம்பி நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியாது. தெய்வா ரொம்ப நல்லவ, அது உனக்குத் தெரியும் உங்கம்மா கடைசி சமயத்தில் ஏதாவது ஒன்னுக்கெடக்க ஒன்னைச் சொல்லி அவளுக்கு கொள்ளி போடுவதைக் கூட இல்லாமல் செய்துவிடுவாள் எனக்காக நீ அதைச் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்ன பொழுது தெய்வாவும் நைனாவும் இந்த விஷயத்தில் அம்மாவை தவறாக புரிந்து கொண்டதாகவே நினைத்தேன். ஆனால்,

நைனா ஒருநாள் அறுபது வயதில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட, அடுத்துவந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தெய்வாவும் கர்பப்பை எடுத்துவிட்டதால் வந்த ஏதோ ஒரு வியாதியில் இறந்துவிட்ட அன்று அம்மா என்னிடம் ‘நீ அவளுக்கு கொள்ளி போட்டா எனக்கு போடமுடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லிவிட, நைனா அத்தனை வருடங்கள் அம்மாவுடன் குப்பைக் கொட்டியதில் அவளை மிகச்சரியாக புரிந்து கொண்டதை நினைத்து நான் சிரிக்க, பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல அவள் என்னைப் பார்த்தாலும் நைனாவிற்காகவும் தெய்வாவிற்காகவும் நான் அவளுக்கு கொள்ளி போட்டு அம்மாவிற்கு கொள்ளி போடும் உரிமையை விட்டுக்கொடுத்தேன்.

ஆனால் கடைசி வரை தெய்வாவை அம்மா என்று அழைத்ததில்லை, வெளியில் சித்தி, பின்னி என்று அழைத்திருந்தாலும் அவள் முன்னிலையில் எப்பொழுதும் தெய்வா என்றே அழைத்து வந்ததை நினைக்கும் பொழுது அவள் உடலுக்கு எரியூட்டும் கணத்தில் மூச்சு முட்டியது. ஆனால் அவளுக்கு அது விருப்பமானதாகத்தான் இருந்ததாகப்பட்டது. கடைசி காலங்களில் அவளுடைய ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றி கேட்டிருக்கிறேன். தயங்காமல் சொல்லியிருக்கிறாள், நோய்வந்து கொள்ளிபோட ஆளில்லாம அநாதைப் பிணமாப் போயிருவேனோன்னு கவலைப்பட்டதாய், கவலைப்படாமல் என்னிடம் சொல்வாள். அம்மாவைப் பற்றி அவளிடம் எப்பொழுதும் ஒரு உயர்ந்த எண்ணம் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. தெய்வா ராசா உங்கப்பா உங்கம்மாவை உபயோகிக்கிற வரைக்கும் உபயோகிச்சிட்டு, அவரோட அன்பும் ஆதரவும் உங்கம்மாவிற்கு தேவையான நாட்களில் கழட்டிவிட்டுட்டார். ம்ம்ம் அதெல்லாம் ஆம்பளைப் புள்ளைங்களுக்குப் புரியாது, சொல்லியது நினைவில் வந்தது. ஆனாலும் கடைசிவரை அம்மா தன் கருத்தில் மாறாமலேயிருந்ததால் அண்ணா சுடுகாட்டிற்குக்கூட வரவில்லை. அம்மா வீட்டில் அழுததாக பேபி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். தெய்வா இல்லாத அந்த வீட்டை, அந்த கிராமத்தை ரசிக்கமுடியாமல் நான் கால்போன போக்கில் நடந்து இனிமேல் அந்தக் கிராமத்திற்கே வருவதில்லை என்ற எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன்.

http://www.blog.beingmohandoss.com/2006/08/blog-post_16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.