Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் - ஒரு பகுதி உங்களுக்காக!

Featured Replies

மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் - ஒரு பகுதி உங்களுக்காக!

 

வண்ணதாசன்

“வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்...” - இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டி கைதூக்கி விடும் வெள்ளந்திப் படைப்பாளி. மனதை மென்சிறகால்  வருடும் உன்னத எழுத்து அவருக்கு வாய்த்த வரம்.

ஆனந்த விகடன் இதழில் 7.11.2007 முதல் 4.6.2008 வரை ”அகம் புறம்” என்ற தலைப்பில் வண்ணதாசன் எழுதிய அனுபவத் தொடர் லட்சக்கணக்கான வாசகர்களை வசப்படுத்தியது. நெல்லை மண் வாசத்தோடு எழில் நடையில் கிராமியத்தமிழில் வண்ணதாசன் எழுதிய அந்தத் தொடரின் முதல் பகுதி....!

 

vanna_16237.jpgபிரமநாயகம் வருவது இதுதான் முதல் தடவை. வீட்டுக்குள் அவர் வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம்தான் இருக்கும். சரியாகக்கூட சாய்ந்து உட்கார்ந்திருக்கவில்லை. வந்தவுடன் கொடுத்த தண்ணீர், முதல் உபசாரத்தை ஏற்கிற பதற்றத்தில் சிந்தி, அப்படிச் சிந்தின தண்ணீர் முன்சட்டையால் உறிஞ்சப்பட்டுக்கொண்டு இருந்தது. கொல்லம் ஓடு உறிஞ்சுவது மாதிரி, செங்கல் கலரில் இருந்த சட்டை அற்புதமாக உலர்கிறபோதே, அவர் சிரித்தார்.

ஏதோ கேட்கப் போவதுபோல், அந்த அறையையும் தாண்டி உள்ளே பார்த்தார். எதையும் பார்க்காதது போன்றும் அல்லது எல்லாவற்றையும் பார்த்துவிட்டது போன்றும் சிரிப்பு இருந்தது. தலையைக் குனிந்து பிரமு அப்படிச் சிரிப்பது வடக்குவளவுத் தாத்தாவை ஞாபகப்படுத்தியது.

தாத்தா மேல்சட்டை போட மாட்டார். இப்படித்தான் இரண்டு பக்கமும் கைகளை ஊன்றிக் கீழே குனிந்தபடி சிரிப்பார். உட்கார்ந்திருக்கிற இடத்தைப் பொறுத்து, கால்களை மெதுவாகவோ வேகமாகவோ ஆட்டுவார்.

இப்போது வந்து உட்கார்ந்திருப்பவருக்கும் தாத்தாவுக்கும் தொடர்பே கிடையாது. வெளி ஊர், வெளி ஆள்; இரண்டு தலைமுறைகள் வேறு வித்தியாசம். ஆனால், இப்படி ஒவ்வொருத்தரும் வேறு யாரையோ ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டென்று அவர் எனக்கு நெருக்கமாகிவிட்டதாகத் தோன்றியது.

‘என்ன அப்படிச் சிரிக்கிறீங்க?’ என்று பிரமுவைப் பார்த்துக் கேட்கையில், கடகடவென்று பால் கேன்கள் பக்கவாட்டில் அடித்து மோத, சைக்கிள் நகர்கிற சத்தம் வெளியில். சிலரை நினைத்துக்-கொள்ளும்போது, இப்படி எதிர்பாராமல் சில சத்தங்கள் கேட்பது எப்படி என்று தெரியவில்லை.

வெட்கப்படுவது போல ஒரு முகத்துடன் என்னைப் பார்த்தவர், ‘‘உங்க வீட்டில் ஊஞ்சல் இருக்கா?’’ என்றார். இப்போது அவருடைய சிரிப்பு எனக்கு வந்திருந்தது. அவரை மாதிரியே சற்றுக் குனிந்த முகத்துடன் பேசினேன்... ‘‘இல்லையே. ஏன் அப்படிக் கேட்டீங்க?’’

வளைந்துகிடந்த ஒரு திருப்பத்துக்குள்ளிருந்து பிரதான சாலைக்குள் முன் விளக்குகளின் பிரகாசத்துடன் வாகனம் ஒன்று வருவது போல, அவர் என் கேள்வியிலிருந்து வெளியேறி, மேலும் ஒரு அழகான சிரிப்புடன் நன்றாகச் சாய்ந்துகொண்டார். மீசை முடியைப் பல்லால் கத்திரித்துக்கொள்கிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆசுவாசத்துக்காக, வெற்றுப் புரட்டலாகப் புரட்டியபடியிருந்த பத்திரிகையை பக்கத்தில் வைத்தார். ஏதோ ஒரு வழுவழுப்பான தீபாவளி விளம்பரம், அடர்ந்த கறுப்பில் மறுபடி மறுபடி புடவையை விசிறியது. ஒரு பூனைக் குட்டியைத் தடவுவதும் அவருடைய இடது கை புத்தகத்தைத் தடவுவதும் வேறு வேறு அல்ல.

‘‘என்னவோ தோணிச்சு... வீட்டில் ஊஞ்சல் இருக்கும்னு..!’’ - ஊஞ்சல் இருக்கிற வீடாக அவர் இதை நினைத்துக்கொண்டதில், எனக்குச் சந்தோஷமாக இருந்தது. கிருஷ்ணன் வைத்த வீடு, யானை வைத்த வீடு மாதிரி ஊஞ்சல் இருக்கிற வீடு.

‘‘எப்படி அப்படி உங்களுக்குத் தோணுச்சு, எங்க வீட்ல ஊஞ்சல் இருக்கும்னு?’ என்று நான் கேட்கவில்லை. அப்படியொரு கேள்வியை என்னிடம் எதிர்பார்த்தது போல அவரே சொன்னார்... ‘‘என்னமோ தெரியலை. செருப்பைக் கழற்றும்போது தன்னை-அறியாமல் கையை ஊனினேன் இல்லையா. அப்போ சுவருக்குள்ளே இருந்து கிர்கிர்னு ஒரு சத்தம் கைக்குள்ளே கேட்டுது!’’

‘கைக்குள்ள கேட்டது’ என்று பிரமு சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த வீட்டில், அடுத்த அறையில், தொட்டில் ஆடுகிற சத்தம், பழைய மின்விசிறி ஓடுகிற சத்தம், காலண்டர் ஆணி அடிக்கிற சத்தம் என எத்தனை தடவை இப்படிக் கையால் கேட்டிருக்கிறோம். காதால் கேட்காத-தால்-தானே அவையெல்லாம் இன்னும் உள்ளங்கைக்கு உள்ளேயே அப்பிக்கிடக்கின்றன.

நான் ஊஞ்சல் சத்தம் கேட்பதை என் உள்ளங்கைக்குள் பார்த்துக்கொண்டு இருந்தேன். எப்போதுமா உள்ளங்கையைப் பார்க்கிறோம்! எது என்ன மேடு, என்ன ரேகை என்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! சுட்டு விரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே குதித்துவிடுவது போல ரொம்ப காலமாக ஒரு ரேகை நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது.

அது ஒரு காட்டு ஓடை-போல, இதோ அரை மணி, ஒரு மணி நேரத்துக்கு முந்திய மழையில் புறப்பட்டு வருகிறது. இரண்டு விரற்கடைக்கு முன்னால் இருக்கிற புல்லையும் பூண்டையும் பிடித்து அது முன்னேறுகிறது. சீனிக்கல் மினுங்கல். சீம்புல் பளபளப்பு. ஓர் இலந்தம் புதர். நத்தைக் கூடு. எல்லாம் தாண்டி ஓடை நகர்ந்து, மண்புழு தேடுகிறது.

தும்பைச் செடிகளுக்கு மேல் தட்டான் பட்டாளம். ஒற்றையடிப் பாதையில் உருண்டு கிடக்கிற நுங்குக் குரும்பை. ராத்திரி வெருகுப் பூனை தின்றது போக, மிச்சம் மிஞ்சாடியாகக் காற்றில் அலைகிற பழுப்புச் சிறகு. எல்லாம் ஓடை மாதிரி கைரேகைக்குள் பாய்ந்துகொண்டே!

ரேகையை ஓடையென்று நினைத்தாயிற்று. அப்புறம் அது ஒரு மழை,  வெள்ளத்தோடா நிற்கும். ஓடை நதி ஆகாமலா? இந்த மாதிரி மனதுக்குள் ஓட ஆரம்பிக்கிற நதிகள் என்றைக்கு வற்றிற்று?

சிவனும் நானும் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருக்கிறோம். சிரித்துக்கொண்டே தான் கேட்டான் சிவன்... ‘‘அப்பா உட்கார்ந்து ஆடிக்கிட்டே இருப்பாங்களே ஒரு ஊஞ்சல், அதுக்கு என்னாச்சு தெரியுமா?’’ - என்னவாயிற்று என்று சொல்வதற்காகத்தானே, இப்படி என்ன ஆயிற்று தெரியுமா என்று கேட்பார்கள்!

சிவனின் அப்பா அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாடுகிற தேவாரம் கேட்டது. ‘சொற்றுணை வேதியன்’தான் அதிகம் மனதில் நிற்கிறது. கொழும்புவுக்கும் குலசேகரப்பட்டினத்துக்கும் இடையில் உள்ள அத்தனை கடலையும் திருநீற்று மரவையில் ஊற்றி வைத்துவிட்டு, அதிலிருந்து உப்புக் கரிக்கக் கரிக்க கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி நெற்றியில் பூசிக்கொள்வது போல, விபூதியும் விரலுமாகத்தான் என்னுடன் முதலில் பேசினார்.

வழுவழுப்பான சிறு படகு போன்ற அந்தத் திருநீற்று மரவையின் விளிம்பில் நுட்பமாக இழுக்கப்பட்டு இருக்கிற கோடுகளின் ஞாபகம் இன்னும் அழிந்து விடவில்லை.

‘‘ஜேஜேன்னு அப்பா போயாச்சு! அம்மையும் கிளம்பிட்டா. இனிமே சும்மா இருக்க முடியுமா எல்லாரும்? நீங்க சும்மா இருந்தாலும் மத்தவங்க இருக்க விடுவாங்களா? அதை எனக்குக் கொடு, இதை எனக்குக் கொடுன்னு நாலு பக்கமும் ஒரே சத்தம். கேட்கிறதுக்காகக் கொடுத்திரவும் முடியாது. கேட்கலை என்கிறதுக்காகக் கொடுக்காமலும் இருக்கிறதில்லை. ஒண்ணு கூடும்; ஒண்ணு குறையும். மேட்டுக்குப் பள்ளமும், பள்ளத்துக்கு மேடுமாப் பார்த்துக் கொடுத்தாச்சு. எல்லாத்துக்கும் பிறகு இவன் வந்து நிக்கான்!’’& சிவன் சொல்கிற போது, அவன் கை இடது பக்கமாக ஒரு இடத்தைக் காட்டுகிறது.

யார் நிற்கிறதாகச் சொல்கிறானோ, அவனே நிற்பது போன்ற காட்சியை அந்தக் கை அசைவு உண்டாக்கிவிட்டது.

சிவன் இப்போது சிரிக்கிறான். ‘‘அவன் அப்படி வந்து நிக்கும்போது மணி என்ன இருக்கும் தெரியுமா? விடியக்கூட இல்லை. வாசல் தெளிச்சு நிறைய வீட்டில் கோலம் போட்டிருக்க மாட்டாங்க. அடைக்கலாங் குருவிகூட இன்னும் முழிக்கலை. உத்தரத்துல அது கட்டின கூட்டில் இருந்து வைக்கோல் துரும்பு அசையாம தொங்கிட்டு இருக்கு. இவன் வந்து மொட்டுப் போல நிக்கான்!’’ & மறுபடியும் அதே திசையில் கையைக் காட்டுகிறான் சிவன்.

‘என்னடே?’

‘எல்லாத்துக்கும் என்னென்னமோ கொடுத்திருக்கீங்க. எங்களுக்கு ஒண்ணுமே தரலை.’

‘கேளு, தர முடிஞ்சா தாரேன்.’

‘இது வேணும்.’

‘இதுண்ணா?’

‘தாத்தாவோட இந்த ஊஞ்சல்.’

இந்த உரையாடல்களை எல்லாம் நிகழ்த்திவிட்டு, சிவன் என்னைப் பார்த்துச் சொல்கிறான்... ‘‘புள்ளிக்காரன் எதைக் கேட்கிறானோ, அதில் உட்-கார்ந்துதான் அவன்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்!’

மறுபடியும் உரையாடலைத் தொடர்கிறான்.

‘இதுவாடே?’ & சிவன் கை ஊஞ்சலைத் தட்டுகிறது.

‘ஆமா!’ தலை அசைந்து ஆமோதிக்கிறது எதிரில்.

‘இவ்வளவுதானா?’

மறுபடியும் எதிராளி தலையசைப்பு.

‘தாராளமா கழட்டி எடுத்துட்டுப் போ! இதைச் சாவகாசமா வெயில் வரவிட்டு, ரெண்டு ஆளைக் கையோடு கூட்டிக்கிட்டு வந்து கேட்டிருக்கலாம். நீயும் தூங்காம, என்னையும் தூங்கவிடாம இப்படி விடியக்காலம் வந்திருக்க வேண்டாம். மற்றபடி எனக்குச் சந்தோஷம்-தான்!’

மீண்டும் சிவன் என்னைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தான். ‘‘ஆகட்டும்னும் சொல்லலை. மாட்டேன்னும் சொல்லலை. முகத்தைக்கூடப் பார்க்காம மடமடன்னு படியிறங்கிப் போயிட்டான்!’’ & இப்படிச் சொன்னபிறகு, சிவனிடம் கொஞ்சநேரம் பேச்சில்லை. அமைதியாக இருந்தான். சிந்துபூந்துறை படித்துறையில் யாரோ துவைக்கிற சத்தம். எச்சில் முழுங்கினான். தொண்டை முடிச்சு மேலேறி வரச் சற்று நேரம் ஆயிற்று.

‘‘சொன்னாச் சொன்னபடி சாயந்திரத்துக்குள்ளே ஊஞ்சலைக் கழட்டி எடுத்துட்டுப் போயிட்டான். இந்தக் காலத்துப் பையங்க இல்லையா!’’

சிவன் இதையும் பாராட்டாகவேதான் சொன்னான். சிரிப்புதான் சிரிப்பாக இல்லை.

என் உள்ளங்கை ரேகையைப் பார்த்துக்-கொண்டு இருந்த நேரத்தில், பிரமு முன்னால் தண்ணீரும் தின்பண்டமும் வைக்கப்பட்டு இருந்தன. ‘எடுத்துக்கிடுங்க’ என்று அவரைக் கேட்டுக் கொண்டேன்.

‘‘முன்னால எல்லாம் சாப்பிடுங்கன்னு-தான் சொல்வோம். இப்போ ‘எடுத்துக்கிடுங்க’ன்னு ஆயிட்டுது. முறுக்குக்குப் பதிலா பிஸ்கட், ‘சாப்பிடுங்க’வுக்குப் பதிலா ‘எடுத்துக்கிடுங்க’ன்னு கணக்குச் சரியாப்போச்சு!’’ என்று பிஸ்கட்டின் செவ்வக விளிம்பில் விரலால் கட்டமிட்டுக்-கொண்டு இருந்தார். பூக்கள், நெளிவுகளுடன் விரல் வருடல் நகர்ந்தது.

‘‘நான் அப்போ விளாத்திகுளத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். பத்மநாபன் தெரியுமா... சுருட்டை சுருட்டையா முடி இருக்கும். உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. அவனும் நானும் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம். வீட்டுச் சொந்தக்காரருக்கு மூத்தது ரெண்டு பையன்க. மூணாவது பொம்பிளைப் பிள்ளை. அதுக்குப் பார்க்க வராது. பிறவியிலேயே அப்படி. ஒரு தடவை பெரிய பிஸ்கட் பாக்கெட் ஒண்ணு வாங்கிட்டுப் போய்க் கொடுத்தேன். அது அப்போ இப்படித்தான் பிஸ்கட்டை விரலால் தடவிக்கிட்டே இருந்தது. நான் இருந்தவரைக்கும் கடிச்சுச் சாப்பிடவே இல்லை. முழுசா அப்படியே வெச்சுக்கிட்டே இருந்தது.’’

பிரமுவும் இன்னும் பிஸ்கட்டைச் சாப்பிடத் தொடங்கியிருக்கவில்லை.

‘‘அந்தப் பொண்ணு வீட்ல ஊஞ்சல் இருந்துதா?’’ என்று கேட்கலாமா என்று தோன்றியது. நிச்சயமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நான் வந்திருந்தேன். கேள்விப்பட மட்டுமே செய்திருந்த அந்த ஊரையும், அதில் ஒரு தெருவையும் ஊஞ்சல் மாட்டியிருக்கிற ஒரு வீட்டையும் கற்பனை-செய்வதில் ஒரு சிரமமும் சுதந்திரமும் இருந்தது.

எதற்காக அதை ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய தெருவாக நினைத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. முந்திய தினம் கல்யாணம் நடந்த வீடாக இருக்க வேண்டும். வாசலில் கட்டிய வாழை மரப் பட்டையை ஒரு செவலை மாடு கடித்து இழுத்துக்கொண்டு இருந்தது.

அதைத்தாண்டி, நான்கு வீடுகள் தள்ளித்தான் அந்த ஊஞ்சல் வீடும், பெண்ணும். அந்த வீட்டில் ஒரு வாதா மரம் இருந்தது. காலி சிகரெட் டப்பாக்களால் செய்த நாய்க்குட்டி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.

மடி நிறைய கனகாம்பரப் பூக்களைப் பறித்துப்-போட்டுச் சரமாகக் கட்டியபடி உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணுடன் தெலுங்கில் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஊஞ்சலில் ஆடிக்-கொண்டு இருந்தது அந்த இன்னொரு பெண். அது முதல் பிஸ்கட்டை இன்னும் சாப்பிடவேயில்லை போல! 

இவ்வளவுமே என் கற்பனைதான்!

பிரமுவின் திசைகாட்டிகளின்றி இவ்வளவையும் நானாகவே கற்பனைசெய்து கொள்ள முடிந்தது சந்தோஷமாக இருந்தது. ஒரு சொல் அல்லது ஒரு சின்ன இடைவெளி மூலமாக எங்கெங்கோ நகர்ந்து போய்விட முடிகிற மாதிரிதானே இந்த மனம் இருக்கிறது. பின் ஏன் அடுத்தவரைப் பக்கத்-தில் உட்கார விட்டுவிடக் கூடாது என்கிற ஒரு வன்மத்துடன் இப்படி எப்போதும் நெருக்கியடித்துக்கொண்டு உட்காருகிறோம். களஞ்சியம் காலியாகிவிடப்-போவது போல் ஒவ்வொரு சொல்லையும் கவனமாக யாருக்கும் கொடுக்காமல் சேமித்துப் பாதுகாக்கிறோம்.

என் கற்பனையின் மாகாணிக் கொக்கிகளில் ஆடுகிற ஊஞ்சலின் சத்தம் பிரமுவும் நானும் உட்கார்ந்திருக்கிற இந்த அறையில் கீச்சிடுவது போல இருந்தது. பிரமு என்னுடைய பார்வையில் அந்த ஊஞ்சலின் ஆட்டத்தை உணர்ந்திருக்க வேண்டும்.  மிகவும் பரவசமுற்ற குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

vannadasan_16502.jpg‘‘உங்களைப் பார்க்கிறதுக்குத்தான் பஸ்ல வந்துக்கிட்டிருக்கேன். ஒண்ணு பஸ்ஸுக்கு உள்ளே பார்க்கணும். இல்லை வெளியே பார்க்கணும். நான் வெளியே பார்த்துக்கிட்டே வர்றேன். வாசல் கதவை ஒருச்சாய்ச்சு மூடின மாதிரி ரோட்டைவிட்டுக் கார் இறங்கி நிக்குது. வெள்ளையும் கறுப்புமா செஸ் கட்டம் போட்ட ஒரு ஆலமரம். சடை சடையா விழுது. ரெண்டு விழுதை ஒண்ணா முடிச்சுப் போட்டு உட்கார்ந்துக்கிட்டு ஏழெட்டு வயசுப் புள்ள ஒண்ணு ஊஞ்சல் ஆடுது. அது ஆடலை; அப்பன்காரன் ஆட்டுதான். அது ஆடுகிற ஸ்பீடைப் பார்த்தால் நமக்குத்தான் பயமா இருக்கு. அதுக்கு ஒண்ணுமில்லை. ஒரே சிரிப்பு. ஒரே கூப்பாடாக்கிடக்கு. நான் அவங்களுக்குக் கையைக் காட்டிக்கிட்டே வந்தேன். இனிமே அந்த இடத்தைத் தாண்டிப் போனால் அதே ஞாபகமாக இருக்கும்.’’

பிரமு அப்படிச் சொல்லிக்-கொண்டே போகும்போது, அநேகமாக எங்கள் வீட்டிலிருந்து மறைந்து-போயிருந்தார். அவர் அந்த ஏழெட்டு வயதுப் பிள்ளையாகவே ஆகியிருக்க வேண்டும். அல்லது, அதை ஆட்டுகிற அப்பாவாக! அந்த விழுது ஊஞ்சலாகக்கூட இருக்கலாம் அவர்.

என் பங்குக்கு நான் மின்சாரமற்ற அந்த இரவை நினைத்துக்-கொள்கிறேன். இரண்டாவது நிறுத்தத்தில் பைக் திரும்பும்போதுதான் மின்சாரம் போயிற்று. ஒதுங்கின குடியிருப்புகளுக்கே உரிய, போக்குவரத்தைத் தூரத்தில் விட்டு-விட்டு நகர்ந்துவந்துவிட்ட விலகல். வேப்ப மரங்களின் கிளை-களிலிருந்து கசப்பான அமைதி உதிர்ந்துகொண்டு இருந்தது.

டென்னிஸ் கோர்ட் தாண்டியதும் வழக்கம்போல நான் அந்த மாநகராட்சிப் பூங்காவைப் பார்க்கிறேன். ஒரு சீசா பலகை. ஒரு சறுக்கு. அறுகோணமாக அமைக்கப்பட்டு இருக்கிற ஊஞ்சல் பலகைகள். இந்த இரவில் மட்டுமல்ல. எத்தனையோ இரவுகளில் அசையாமல் தொங்குகிற அந்த ஊஞ்சல் சங்கிலிகளும் ஆளற்ற பலகைகளும் என்னவோ செய்யும்... என்னவோ சொல்லும்..!

இன்றைக்கு ஆட்கள் இருந்தார்கள். ஒன்றல்ல, இரண்டு ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டு இருந்தன. நடுத்தர வயது தாண்டிய ஆணும், பெண்ணும் எதிர் எதிரான ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டு இருந்தார்கள். எந்தப் பேச்சும் அவர்களுக்கு இடையில் இல்லை. தரையில் கால் ஊன்றி உந்துவதுகூடத் தெரியவில்லை. அவரவர் ஆடைகளின் சிறகுப் படபடப்பு மட்டும் இருந்தது. வீட்டுக்குத் திரும்புவதில்லை என்று முடிவெடுத்தது போல அவர்கள் காற்றுக்குள் வழி தேடிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்களுடைய வீட்டில் ஊஞ்சல் இருக்கிறதா, தெரியவில்லை.

வீட்டில் இல்லாவிட்டால் என்ன, மனதில் இருக்கிறது!

மனதில் என்ன மனதில்..?

மனம்தான் அந்த ஊஞ்சலே!

 

ழுத்தாளர் ஜெயமோகனின்  வாசகர்களால் நடத்தப்படும் ‘விஷ்ணுபுரம்’ இலக்கிய வட்டம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியத்தில் மூத்த ஆளுமை ஒருவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டு வருகிறது.  1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சிற்பம் அடங்கிய இந்த விருதை இந்தாண்டு பெற்றுக் கொண்டார்  எழுத்தாளர் வண்ணதாசன். 25.12.2016 அன்று கோவையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. ‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதையும் வண்ணதாசன் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.