Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!' -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும்

Featured Replies

' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!'  -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும் 

rajiv_assa_14280.jpg

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ' ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு ரங்கநாத்தை நன்றாகவே தெரியும். ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜீவ்காந்தியை படுகொலை செய்துவிட்டு, தப்பியோடிய சிவராசன், சுபா உள்ளிட்டவர்கள் ரங்கநாத்தின் வீட்டில்தான் அடைக்கலம் ஆனார்கள். நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்காக உதவி செய்யப் போன ரங்கநாத்துக்குக் கிடைத்தது எல்லாம், ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் உடலை வாட்டி வதைத்த நோய்களும்தான். ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்கு தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார். கொலைக்குப் பிறகான நாட்களை விரிவாகவே மேடைகளில் பேசி வந்தார் ரங்கநாத்.

ranga1_14451.jpg"பெங்களூருவில் பசவண்ணன் குடியில்தான் என்னுடைய வீடு இருந்தது. அப்போது புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நண்பர் ராஜன் செயல்பட்டு வந்தார். ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் முடிந்த பிறகு, 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, 'எனது நண்பர்களுக்கு வீடு வேண்டும்' என ராஜன் கேட்டார். நானும் சம்மதித்தேன். மறுநாள், ' சி.பி.ஐ நெருக்கடி அதிகமாகியிருக்கிறது. உடனே வீடு வேண்டும்' என அவசரப்படுத்தினார். டிரைவர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர், ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் 6 பேர் என் வீட்டுக்கு வந்தனர். அந்த நேரத்தில், இலங்கையில் நடந்த சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசிய சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், என் வீட்டை போலீஸார் நெருங்கிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், கோணன்னகுண்ட இடத்துக்கு வீடு மாறினோம். அவர்களோடு நானும் சென்றதுதான் மிகப் பெரிய தவறு" என விவரிக்கும் ரங்கநாத், 

கொலையாளிகளான சிவராசன் தலைக்கு பத்து லட்சமும் சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். அன்று ஆகஸ்ட் 17-ம் தேதி. வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தபோது அதிரடிப்படை வீரர்கள் என் வீட்டை வளைத்திருந்தனர். சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயனும் அங்கிருந்தார். சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர். பிறகு, என்ன உத்தரவு வந்ததோ, என் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துவிட்டனர். சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் உள்பட அனைவரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். அதன்பிறகு, என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர். சிவராசன், சுபா ஆகியோர் என்னுடன் தங்கியிருந்தபோது நடந்த பல விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இப்போது உள்ளது போல தொலைத்தொடர்பு வசதிகள் அப்போது கிடையாது. எஸ்.டி.டி. போன் பூத்துகளும் குறைவாகத்தான் இருந்தன. எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார் சிவராசன். நான்கு முறை அவர்களோடு சென்றிருக்கிறேன். ' சந்திராசாமிக்குத்தான் போன் பேசுகிறோம். அவருடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் மொழி பெயர்த்துச் சொல்வார். கொலை வெற்றிகரமாக முடிந்ததும் நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என்று சொன்னார்கள். 

chandraswami_14182.JPGசிவராசனோ, ' ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில் ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. ‘நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார் சந்திராசாமி என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை அப்படியே கார்த்திகேயனிடம் கூறினேன். அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தவர், ‘சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்?' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட்டை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. லத்தியை எடுத்து இரண்டு கால்களையும் அடித்து நொறுக்கினார். என் மனைவியையே எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க வைத்தார்கள். 98-ம் ஆண்டு மார்ச் மாதம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். 'என்னிடம் பேசுவதற்கு சோனியா காந்தி விரும்புகிறார்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர் மூலம் டெல்லி சென்றேன். அவர் என்னிடம் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தேன். அருகில் இருந்த பிங்கி என்பவர் மொழிபெயர்த்தார். அதிர்ச்சியோடு நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார் சோனியா. நான் குறிப்பிட்டுச் சொன்னவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகிவிட்டார். உண்மையை அறிந்தவன் என்ற அடிப்படையில், சிறைவாசத்தை அனுபவித்தேன்" எனக் குமுறலோடு பேசியிருந்தார் ரங்கநாத். அவருடைய வாக்குமூலம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளைக் கிளப்பினாலும், கால ஓட்டத்தில் கரைந்து போனது. 

" ராஜீவ் கொலை வழக்கில் சதித் தீட்டியதாக ரங்கநாத் மீது வழக்குப் பதியப்பட்டது. இதற்கு ஆதாரமாக அவர் மனைவி மிருதுளா தமிழில் எழுதிய ஐந்து பக்க கடிதத்தை தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். கன்னட மொழி பேசும் அவர் மனைவிக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற உண்மை, நீதிமன்றத்தில் எடுபடவில்லை. இந்த வழக்கில் சந்திராசாமிக்கு உள்ள தொடர்புகளைப் பற்றி விசாரணையின்போது, தெளிவாக எடுத்துச் சொன்னவர் அவர். அதற்கான அவர் அனுபவித்த சித்ரவதைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பின்னாளில் வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, ' உண்மைக் குற்றவாளிகளை வெளியில் காட்டாமல், சதி வேலைகளுக்கு கார்த்திகேயனும் உடந்தையாக இருந்தார்' என்பதை பல மேடைகளில் பேசினார். சோனியா காந்தியை நேரில் சந்தித்தும் விளக்கினார். இன்று வரையில் ரங்கநாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலையும் கார்த்திகேயன் அளிக்கவில்லை. இந்த வழக்கில் உள்ள சர்வதேச சதிப் பின்னலை சோனியா அறிவார். 'தன்னுடைய பிள்ளைகளுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது' என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறார். ஏழு ஆண்டு சிறைத் தண்டனையின் விளைவாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருந்தார் ரங்கநாத். சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக அவரால் செயல்பட முடியவில்லை. வழக்குக்கு சம்பந்தமே இல்லாதவருக்கு வாழ்நாள் முழுக்க தண்டனையைக் கொடுத்தது சி.பி.ஐ. ராஜீவ் மரணத்தோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்ட உண்மைகளை இதுநாள் வரையில் தாங்கி வந்த, ரங்கநாத்தும் மறைந்துவிட்டார். வேறு என்ன சொல்வது?" என வேதனைப்பட்டார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. 

http://www.vikatan.com/news/india/77657-sonia-gandhi-knows-who-killed-rajiv-gandhi.art

  • தொடங்கியவர்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிக்கிய ரங்கநாத் பெங்களூருவில் மரணம்

 

 
 
 
 
ranganath_3117185f.jpg
 
 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 9 ஆண்டு கள் தண்டனை அனுபவித்து விடு தலையான ரங்கநாத் பெங்களூரு வில் நேற்று காலமானார்.

பெங்களூருவில் உள்ள பசவண்ணகுடியை சேர்ந்தவர் ரங்கநாத் (60). இவர் வீடு, காலி மனை தரகு தொழில் செய்து வந்தார். 1991 மே 21-ம் தேதி இரவு பெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படு கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவராசன், சுபா உள்ளிட்டோர் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி வந்தனர்.

அப்போது சிவராசன், சுபா, ஓட்டுநர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேருக்கு ரங்கநாத் சில நாட்கள் தனது வீட்டில் அடைக் கலம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு இந்திைராநகர், கோனனே குன்டே உள்ளிட்ட இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார். இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ரங்கநாத் கைது செய்யப்பட்டு ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரங்கநாத் உள்ளிட்ட 27 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட‌ மேல்முறையீட்டில் ரங்கநாத்துக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையான இவர், பெங்களூருவில் வசித்து வந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் நேற்று அதிகாலை காலமானார். பசவண்ணகுடியில் உள்ள ரங்கநாத்தின் வீட்டில் வைக் கப்பட்டிருந்த அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது சமூக செயற்பாட்டாளர் பேட்ரிக், கர்நாடகத் தமிழ் அமைப்புகளை சேர்ந்த மணிவண்ணன், இல. பழனி உள்ளிட்டோரும் ரங்கநாத் தின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினர். பனசங்கரியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/ராஜீவ்-காந்தி-படுகொலை-வழக்கில்-சிக்கிய-ரங்கநாத்-பெங்களூருவில்-மரணம்/article9477557.ece?homepage=true

  • தொடங்கியவர்

இறுதிவரை விளங்காத சந்திராசாமி புதிர்

 

சந்திராசாமி
சந்திராசாமி
 
 

ரங்கநாத்துக்கு அவரது நண்பர் ராஜனின் மூலமாக விடுதலை புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, போலீஸார் சிவராசன் குழுவினரை நாடு முழு வதும் தேடினர். சிவராசன் தலைக்கு ரூ.10 ல‌ட்சம், சுபா தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி நிர்ணயித்தனர். அதே ஆண்டு ஜூலை 30-ல் சிவராசன், சுபா, ஓட்டுநர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூருவில் உள்ள ரங்கநாத்தின் வீட்டுக்கு சென்றனர்.

சிவராசன் குழுவினர் சில நாட்கள் த‌னது வீட்டில் தங்க ரங்கநாத் இடம் கொடுத்தார். இதனை மோப்பம் பிடித்த போலீஸார் ரங்கநாத்தின் வீட்டை நெருங்கினர். இரவோடு இரவாக சிவராசன், சுபா உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு கோனனே குன்டேவில் தனியாக இருந்த‌ வீட்டில் ரங்கநாத் குடியேறினார். சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் ஆகஸ்ட் 17-ல் கோனனே குன்டே வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன், ரங்கநாத் மூலமாக சிவராசனுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார். திடீரென மேலிட உத்தரவின்படி பேச்சு வார்த்தையை கைவிட்டு சிவராச னின் வீட்டை நோக்கி துப்பாக்கி யால் சுட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்தார். இதேபோல சுபா, ஓட்டுநர் கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட‌ அனைவரும் ச‌யனைடு குப்பியை விழுங்கி இறந்தனர்.

இது தொடர்பாக ரங்கநாத் திடன் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தியபோது, “எம்.ஜி. சாலையில் உள்ள அஜந்தா, காமதேனு விடுதிகளுக்கு சிவராசன் செல்வார். அங்கிருந்த எஸ்டிடி பூத்தில் இருந்து ஹரித் துவாரில் இருந்த சந்திரா சாமிக்கு போன் பேசுவார். அப்போது

‘கொலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. விரைவில் நேபாளத் துக்கு தப்பி செல்ல வேண்டும். நீங்கள் தான் உதவ வேண்டும்' என சந்திராசாமியுடன் சிவராசன் பேசினார்” என ரங்கநாத் தெரிவித்தார்.

இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சோனியா காந்தி, ரங்கநாத்தை சந்திக்க விரும்பினார். டெல்லி சென்ற ரங்கநாத்திடம் சோனியா காந்தி 7 கேள்விகளை கேட்டார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி உள்ளிட்டோருக்கு இருந்த தொடர்பை ரங்கநாத் விவரித்தார். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதுகூட ரங்கநாத்தின் புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை. ரங்கநாத் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து சயனைடு, மெட்ராஸ் கபே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த புதிர்களும் மர்மங்களும் மறையாத நிலையில் ரங்கநாத்தும் மறைந்துவிட்டார்.

http://tamil.thehindu.com/india/இறுதிவரை-விளங்காத-சந்திராசாமி-புதிர்/article9477467.ece

  • தொடங்கியவர்

"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?": வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்

ராஜீவ் காந்தி

றைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்தவர் ரங்கநாத். இதனால் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பிறகு இந்த வழக்கில் 1999-ல், 26 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் ரங்கநாத்தும் ஒருவர். 

ரங்கநாத் விடுதலை ஆன பிறகு பெங்களூருவில் உள்ள பசவனக்குடியில் தன் மனைவி மிர்துளாவோடு வசித்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு சரியாகப் பேச முடியாமல் தவித்தார். தலைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனதால், அடிக்கடி மயங்கி விழுந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.  இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்  ரங்கநாத் மரணமடைந்தார். அவரது உடல் பசவனக்குடியில் இருந்து பனசங்கரியில் தகனம் செய்யப்படுகிறது.

ரங்கநாத்தைச் சந்தித்தபோது அவரிடம் பல கேள்விகளை முன்வைத்து பேசி இருக்கிறோம். இத்தருணத்தில் அந்த கேள்விகளும், அவருடைய பதில்களும்....

"ராஜீவ் காந்தி கொலைக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?"

"விடுதலைப் புலிகள் பெங்களூருவுக்கு வருவதும், போவதும், வாடகை வீடு எடுத்துத் தங்குவதும் சர்வ சாதாரண விஷயம். அவர்களின்ranganath_10038.jpg தோழமைக் கழகம் கூட இங்குதான் இருந்தது. ராஜீவ் கொலை 1991 மே 21-ம் தேதி நடந்தது. 2 மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் 1-ம் தேதி என்னுடைய நண்பர் ராஜன் 8 பேரை பெங்களூருவில் புட்டனஹள்ளியில் உள்ள என் வீட்டிற்கு கூட்டி வந்து . ‘இவர்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள். ராஜீவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்ய மறுக்கிறார்களாம். அதனால் பெங்களூருவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடு’ என்று கேட்டார். 

ஒரு மாதத்திற்கெல்லாம் யாரும் வீடு கொடுக்க மாட்டாங்க. எங்க மாடி போர்ஷன் காலியாகத் தான் இருக்கு. தங்கி கொள்ளுங்கள் என்றேன். தங்கிக் கொண்டார்கள். அடுத்த நாள் ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவில் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அமான், கீர்த்தி, ரங்கன் என 7 பேர் வந்து அந்த 8 பேரோடு மாடியில் தங்கினார்கள். விடிந்ததும் புதிதாக வந்திருக்கிற இவர்கள் யார்? என்று சூரி என்பவரிடம் கேட்டேன். ‘இவங்கள் எங்கள் நண்பர்கள். அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிடுவாங்க என்றார். இது எனக்கும், என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. சுமார் நான்கு, ஐந்து நாட்கள் கழித்து டி.வி-யில் தேடப்படும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் என்று சிவராசன், சுபா, நேரு என இவர்கள் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எல்லோரையும் வீட்டை விட்டு காலி பண்ணச் சொன்னேன். மாறாக, எங்களை அவர்களின் கஸ்டடிக்கு உட்படுத்தி ‘வெளியில் ஏதாவது மூச்சு விட்டால் கொன்று விடுவதாக’ மிரட்டினார்கள். இதுதான் எங்களுக்கும் ராஜீவ் கொலைக்குமான தொடர்பு".

"ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அவர்களிடம் கேட்கவில்லையா?"

"முதல் இரண்டு நாட்கள் மிரட்டினார்கள். அப்புறம். சாதாரணமாக அன்பாகப் பேசினார்கள். அப்போது நானும், என் மனைவியும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோபமாக ஏன் எங்க தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றீர்கள்? என்று கேட்டோம், அதற்கு சிவராசனும், சுபாவும் கத்தை கத்தையாக போட்டோக்களையும் பேப்பர்களையும் எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப் படையால் எங்கள் இனம் அழிந்த கொடுமைகளைப் பாருங்கள். உங்க ஊர் பத்திரிகைகளில், இதையெல்லாம் எழுத மாட்டார்கள் என்று இன்டர்நேஷனல் ஹெரால் ட்ரிமினல் என்ற பத்திரிகையை காட்டினார்கள். பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை எழுதி இருந்தார்கள். இந்திய அமைதி படையால் 3,000 பேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், 5,000 பேர் காணாமல் போனதும், 12,000 பேர் இறந்து போனதும், 50,000 பேர் குடிபெயர்ந்து போனதையும் ஆதாரப்பூர்வமாக சொல்லி கண் கலங்கினார்கள். இவ்வளவு உயிர்கள், இறப்பதற்கு காரணமாக இருந்தவரை கொன்றது தப்பா? என்று எங்களிடமே கேள்வி கேட்டார்கள். இந்த நேரத்தில் ராகுலுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எல்லா உயிர்களையும் சமமாக மதிப்பவன்தான் தலைவன். பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிள் சொல்கிறது. ராஜீவ் தப்பு பண்ணினார், அனுபவித்தார். சிவராசன் தப்பு பண்ணினார் அனுபவித்தார். ஆனால், இந்த வழக்கில் தூக்கு தண்டனை வரை போன 26 பேரும் நிரபராதிகள். அவர்களை விடுவதுதான் நியாயம்".

"அப்புறம் என்ன நடந்தது?"

"அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அதனால். என் மூலமாகவே வேறு வீடு வாடகைக்கு எடுத்து தரச் சொன்னார்கள். கோனேகொண்டேவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன். அந்த வீட்டில் சிவராசன், சுபா, நான், என் மனைவி உட்பட 9 பேர் தங்கினோம். அடுத்து முத்தத்திக்காட்டில் உள்ள என்னுடைய நண்பர் வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். அதில் உடல் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்கினார்கள். அந்த இடம் வீரப்பன் ஏரியா என்பதால் வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு வந்த போலீஸை பார்த்து, 'நம்மைத்தான் பிடிக்க வருகிறார்கள்' என்று வீட்டின் கதவைப் பூட்டி குப்பியை நுகர்ந்து 12 பேர் இறந்தார்கள். காவல்துறை சத்தம் கேட்டு ஓடிவந்து சுற்றி வளைத்ததில், 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். இது ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது.

அடுத்த நாள் இரவே நாங்கள் தங்கி இருந்த கோனேகொண்டே வீட்டைச் சுற்றிவளைத்து ஆகஸ்ட் 19-ம் தேதி காலை துப்பாக்கியால் சூட்டார்கள். குப்பியை நுகர்ந்து வீட்டுக்குள்ளேயே 7 பேர் இறந்து விட்டனர். முத்தத்திக்காட்டில் 17-ம் தேதி சம்பவம் நடந்ததும் என் மனைவியை வீட்டை விட்டு கிளம்பிப் போக சொல்லி விடுகிறார்கள். அவரது தம்பி வீட்டுக்கு என் மனைவி போய் விட்டார். நானும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெளியே வந்து விட்டேன். மீண்டும் வீட்டிற்குப் போகும்போது என்னையும் அதன்பிறகு என் மனைவியையும் அரெஸ்ட் செய்தார்கள்".

"முதன் முதலில் முருகன், பேரறிவாளன், சாந்தனை எப்போது சந்தித்தீர்கள்? இதுபற்றி அவர்களிடம் கேட்டதுண்டா?"

"என்னைக் கைது செய்ததும், ஜெ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனார்கள். பிறகு கங்கா நகரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைத்தார்கள். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை ஆவடி மல்லிகை அரங்கம், பூந்தமல்லி சிறை, செங்கல்பட்டு சிறை என பல இடங்களில் மாற்றுகிறார்கள். செங்கல்பட்டு சிறைச்சாலையில்தான் இவர்களை சந்தித்திதேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் எல்லோருக்கும் 19, 20 வயது சின்னப் பசங்க விளையாட்டுத்தனமாக இருந்தார்கள். இரண்டு வருடம் கழித்து அவர்களிடம் நன்றாகப் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ‘‘ஏன் தம்பி இந்த செயல்களில் ஈடுபட்டீர்கள்?’’ என்று கேட்டேன். சத்தியமாக இந்த கொலையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவரவர் சூழ்நிலைக் கைதிகளான கதைகளைச் சொன்னார்கள். ஏன், எதற்கு என்று தெரியாமலேயே பேரறிவாளன் பேக்டரி வாங்கி கொடுத்ததும், சிவராசன் வந்த படகில் சாந்தனும் வந்த குற்றத்திற்காகவும், நளினியின் தம்பி இச்சம்பவத்தில் ஈடுபட்டதால் நனினி, முருகன் மாட்டியதும் தெரிய வந்தது. இவர்கள் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். இவர்களோடு 9 வருடம் நானும் சிறையில் இருந்தேன். பேரறிவாளன் தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவன். சாந்தன் சிறந்த சிந்தனையாளன். அற்புதமான கற்பனை நீதிக் கதைகளை எழுதக் கூடியவன். முருகன் தீவிர பக்திமான். இவர்கள் எல்லோரும் ஒரு எரும்புக்குக் கூட துன்பம் ஏற்படுத்தாதவர்கள்"

"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?"

ராஜீவ் காந்தி"26 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை 1999-ல் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனோம். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, உங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டு போனார். டெல்லியில் அர்ஜூன் சிங்கை சந்தித்து விட்டு தனி அறையில் சோனியாவோடு 45 நிமிடம் பேசினேன். அப்போது நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத் தான் அவுங்களும் கேட்டாங்க. 

ராஜீவ்காந்தியை எங்க வீட்டில் தங்கி இருப்பவர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள். என்று எங்களுக்குத் தெரிந்ததும் எங்களை அவர்கள் ஹோம் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதனால் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். ஓரிரு நாட்களில எங்களிடம் எல்லா தகவலும் சொன்னாங்க. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால் வெளியில் வந்து விட்டோம். இந்திய அமைதிப்படை செய்த கொடூரத்தால்தான் ராஜீவைக் கொன்றோம். அதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது சந்திரா சாமி. அவரின் உதவியால் ஓரிரு நாட்களுக்குள் நேபாளம் போயிடுவதாகவும் சொன்னாங்க. அது சம்பந்தமாக, அடிக்கடி சந்திரா சாமியிடம் போனில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். அவர்களுக்குள் சுப்பிரமணியசாமியைப் பற்றியும் பேசுவார்கள்’’ என்று சொல்லிவிட்டு... சந்திராசாமியை விசாரித்தால் எல்லாம் உண்மையும் தெரியும். அதுமட்டுமல்ல. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையாவதற்கு 2 மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை சந்திரா சாமியும், சுப்பிரமணியசாமியும் ஒன்றாகச் சென்று பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பதிலளித்த சுப்பிரமணியசாமி, ‘‘டெல்லி செல்லுவதற்காக நானும் சந்திராசாமியும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தோம். நேரடியாக டெல்லிக்கு பிளைட் இல்லாததால் இருவரும் காரில் பெங்களூருக்கு விமான நிலையத்திற்குச் சென்றோம். அப்போது அந்த இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினோம்’’ என்று சொல்லி இருப்பது ஜெயின் கமிஷனில் பதிவாகி இருக்கிறது. இதையெல்லாம் தெளிவாக விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்றேன். 
 
அதன்பிறகு. சோனியா காந்தி சொல்லி, எனக்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டார்கள். என்ன, ஏது என்று தெரியாமல் வீடு கொடுத்தவனுக்கும், பொருள் வாங்கிக் கொடுத்தவனுக்கும் அடி, உதை, சிறைக் கொடுமை, தூக்குத் தண்டனை. ஆனால் சிவராசன் இறக்கும் வரை சந்திரா சாமியிடமும், சுப்பிரமணியசாமியிடமும் தொடர்பில் இருந்தார்கள். அவர்களை விசாரிக்காததும், சிறையில் அடைக்காததும் ஏன்?" என்ற மர்மம் நிறைந்த கேள்விகளோடு நிறுத்தினார். 

இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட ரங்கநாத் இறந்து விட்டார். 

http://www.vikatan.com/news/coverstory/77781-interview-with-ranganath-an-accused-in-rajiv-gandhi-assassination.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.