Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும்

Featured Replies

‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும்
 
 

article_1486618141-jayasasikala-new.jpg- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கை அரசியலோடு ஒப்பிடும் போது, இந்திய அரசியல், மிகவும் சுவாரசியம் மிக்கது. அதிலும் தமிழ்நாட்டு அரசியல், இன்னுமின்னும் சுவாரசியம் வாய்ந்தது. அதுவும் அண்மைக்கால அரசியல், இன்னமும் சுவாரசியம் வாய்ந்ததாக மாறியுள்ளது.  

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா ஜெயராம் காலமானதைத் தொடர்ந்து, அவரின் நெருங்கிய தோழியாகப் பல ஆண்டுகள் காணப்பட்ட சசிகலா, புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி, தமிழக அரசியலை மேலும் குழப்பத்துக்கும் புதிய நாடகங்களுக்கும் வித்திட்டுள்ளது.  

இலங்கையின் தமிழ் அரசியலைப் போன்றே, தமிழ்நாட்டு அரசியலிலும் ஜெயலலிதாவின் பின்னால் ஒருவர் என்ற தலைமை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே, ஜெயலலிதாவின் மரணம், பாரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவேதான், ஜெயலலிதாவின் இறுதித் தருணங்கள் கூட, சர்ச்சைமிகுந்தவையாக அமைந்தன.  

ஜெயலலிதா என்ற ஆளுமையின் இழப்பு, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓர் இழப்பமாகவே, பலருக்கும் இருக்கிறது. அத்தோடு, அவரின் இடத்துக்கான போட்டியென்பதும், கிட்டத்தட்ட மும்முனைப் போட்டியாகவும் மாறியிருக்கிறது.  

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், அந்தப் பதவியில் சசிகலா பதவியேற்பதற்குப் பல நாட்கள் எடுக்காது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.  

ஆனால், அவ்வாறு எதிர்பார்த்தவர்களுக்குக் கூட ஆச்சரியமளிக்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக, சசிகலா தெரிவுசெய்யப்பட்டார்.

article_1486618198-sasikala-new.jpg

அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவரே, மாநிலத்தின் முதலமைச்சர் என்ற அடிப்படையில், ஓரிரு தினங்களில் அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், தனது பதவியை இராஜினாமாச் செய்தார். எனவே, சசிகலாவின் அரசியல் கனவுக்கு, எந்தத் தடையும் இருக்காது எனக் கருதப்பட்டது.  

என்றாலும் கூட, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 2ஆவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சசிகலா, ஜெயலிலதாவின் (முதலாவது பிரதிவாதி) மரணத்தைத் தொடர்ந்து, தற்போது முக்கியமான நபராக மாறியுள்ளார். அந்த வழக்கு, சென்னை உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. 

இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு வழக்குரைஞர் ஒருவர் ஞாபகமூட்டியபோது, அடுத்த வாரமளவில் வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சசிகலா சிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.  

இவற்றுக்கு மத்தியில், சசிகலாவின் பதவியேற்பு வைபவம் தள்ளிப்போய் வருவதோடு, நேற்று முன்தினம் பின்னிரவு, மாபெரும் திருப்பமொன்று உருவானது. 

இதுவரை காலமும் சாதுவானவராகவும் அமைதியானவராகவும் கருதப்பட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சில அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சசிகலாவுக்கும் எதிராகப் பொங்கியெழுந்தார்.

பதவியிலிருந்து விலகுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் விரும்பினால், தனது இராஜினாமைத் திரும்பப் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.  இந்தப் பின்னணிகளிலேயே, தமிழக அரசியலை ஆராய வேண்டியிருக்கிறது.  

முதலாவதாக, சசிகலா என்பவர், மிகவும் பிரபலமான ஒருவர் கிடையாது. மக்கள் அவரை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவரைத் தலைவராக விரும்பவில்லை என்பதையே, தமிழகத்திலிருந்து கிடைக்கும் உணர்வுவெளிப்பாடுகள் காட்டுகின்றன.

ஆனால் இதன் பின்னணியில், வர்க்கரீதியான வெறுப்புக் காணப்படுகின்றதா என்பதை ஆராய வேண்டிய தேவையும் உள்ளது.  

சமூக ஊடக வலையமைப்புகளில் “வேலைக்காரி”, “ஆயா”, “டி.வி.டி வித்தவள்” போன்ற வார்த்தைகளைக் கொண்டு, சசிகலா விளிக்கப்படுவதைகக் காணக்கூடியதாக உள்ளது.

சசிகலாவின் பதவியேற்புக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இணைய மனுவொன்றில், அதிக விருப்புகளைப் பெற்ற கருத்துகளில் “வேலைக்காரி” என்ற வார்த்தையைக் கொண்டவை அதிகம்.

இதன் அர்த்தம்தான் என்ன? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனங்களிலும், “தேநீர் விற்றவன் எல்லாம் பிரதமர் ஆகினால் இப்படித் தான்” என்ற விமர்சனத்தையும் அடிக்கடி காணக்கிடைப்பது வழக்கம்.  

வேலைக்காரியாகவோ அல்லது டி.வி.டி விற்பவராகவோ இருந்த ஒருவர், மாநிலத்தின் முதலமைச்சராக வரக்கூடாது என்ற சட்டம் உள்ளதா? அல்லது அவ்வாறான ஒருவர் வருவதால் பாரியளவு பிரச்சினைகள் உள்ளனவா? படித்தவர்கள் மாத்திரம், நாட்டையோ அல்லது மாநிலத்தையோ சிறப்பாக வழிநடத்துவார்கள் என்ற உறுதிப்பாடு உள்ளதா? தமிழகத்தின் திராவிடக் கட்சி ஆதரவாளர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒருவர். ஆகவே, அவரை ஏற்றுக் கொள்வார்களா?  

“வேலைக்காரி” என்ற வார்த்தையின் மூலம், வர்க்கரீதியான வெறுப்புக் காண்பிக்கப்படுகிறதே தவிர, வேறு எதுவுமில்லை. அத்தோடு, நாளாந்தம் தமது வயிற்றுப்பிழைப்புக்காக ஓடோடி உழைக்கும் தற்போதைய “வேலைக்காரி”களையும் “ஆயா”க்களையும், அது ஓரத்தில் ஒதுக்கிவைக்கிறது.

“என்ன செய்தாலும், நீங்கள் எப்போதும் இப்போது மாதிரியே கூலிக்கு வேலை செய்பவர்களாகவே இருக்க வேண்டும்” என, அது சொல்லாமல் சொல்கிறது.  

மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் ஒருவர் அல்லர் சசிகலா, எனவே அவர் பதவியேற்பது தவறானது என்பதும் தவறான வாதம். இந்தியாவின் சட்டங்களின்படி, மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படாத ஒருவர், முதலமைச்சராக முடியும்.

 

அவ்வாறு பதவியேற்று 6 மாதங்களுக்குள், இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் போதுமானது. எனவே, சட்ட அமைப்பின்படி, அவரது நியமனம் சரியானது.  

article_1486618232-sasikala1new.jpg

“அம்மாவுக்கே மக்கள் வாக்களித்தனர், சின்னமாவுக்கு அல்ல” என்பதும் தவறான ஒன்று. மாநிலத்தின் முதலமைச்சருக்கு, மக்கள் வாக்களிப்பதே கிடையாது. மாறாக, தங்களது தொகுதிகளுக்கான சட்டசபை உறுப்பினர்களுக்கே அவர்கள் வாக்களிப்பர்.

அவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவரை முதல்வராக மாற்றுவர். எனவே, முன்னரும் கூட, ஜெயலலிதா முதலமைச்சராக வேண்டுமென அவருக்கு வாக்களித்ததாக யாரும் கூற முடியாது.  

“சசிகலா, பெரும் ஊழல் பெருச்சாளி. அவருக்கெதிரான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்ற வாதமும், பலவீனமானது.

நிலுவையில் உள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதி, காலமான முதலமைச்சர் ஜெயலலிதாவே. அவரின் தோழியாக இருந்து, ஊழலில் பங்கெடுத்திருக்கலாம் என்ற அடிப்படையிலேயே, சசிகலா மீது குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை, அவர் நிரபராதியே. அந்தத் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டாலும் கூட, “அம்மாவின் இடத்துக்கு அவர் பொருத்தமற்றவர்” என்ற வாதம் பொருந்தாது.

ஏனென்றால், சசிகலா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அது ஜெயலலிதாவின் ஊழலையும் சேர்த்தே நிரூபிக்கும். எனவே அப்படிப் பார்ப்பதால், ஜெயலலிதாவின் இடத்துக்கு, சசிகலா மிகப்பொருத்தமானவராக மாறியிருப்பார். 

சசிகலாவுக்கு நேரடியான அரசியல் அனுபவம் இல்லை என்ற வாதம், ஓரளவு உறுதியான வாதம். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்று அழைக்கப்படுகின்ற போதிலும், அதைத் தாண்டி, தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தி, திரைக்குப் பின்னால் நிர்வாகம் செய்த அனுபவம், சசிகலாவுக்கு உண்டு. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால், அந்த அரசியலுக்கும் நேரடியாக முதலமைச்சராக இருந்து அரசியல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அதற்கான திறமையை அவர் கொண்டிருக்கிறாரா என்பது, இதுவரையிலும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.  

ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை, சசிகலா எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதில், அவரது அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், தானாக முன்வந்து, இந்த விமர்சனங்களை முன்வைத்தாரா, இல்லையெனில் மத்திய அரசாங்கமோ அல்லது வேறு சக்திகளோ அவருக்குப் பின்னால் காணப்படுகின்றனவா என்பது இதுவரை தெரியவில்லை.

ஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்ச்சி, சாதாரணமானது கிடையாது. எனவே, இதைச் சசிகலா எவ்வாறு எதிர்கொள்வார் என்பது, ஆழமாகக் கவனிக்கப்பட வேண்டியது.  

அத்தோடு, கட்சியில் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள பிளவைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவையும் உள்ளது. தற்போது சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் - தீபா (ஜெயலலிதாவின் அண்ணன் மகள்) என, அ.இ.அ.தி.மு.கவில் மூன்று பேர் காணப்படுகின்றனர்.

தற்போதுள்ள (இப்பத்தி எழுதப்படும் புதன்கிழமை மாலை) நிலைவரப்படி, சசிகலாவின் பக்கம் தான் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு காணப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் சில உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.

தீபாவின் தரப்பு, இதுவரை பிரதான போட்டியாளராக உருவாகவில்லை. தற்போது பன்னீர்செல்வத்தின் எழுச்சி காரணமாக, “சசிகலாவிடமிருந்து கட்சியைகக் காப்பாற்ற வேண்டும்” என்ற தீபா தரப்பின் பிரசாரமும் அடிபட்டுப்போக வாய்ப்புள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் நெருங்கிய சொந்தம் என்ற அனுகூலம், தீபாவுக்குக் காணப்படுகிறது.  

ஆனால் மறுபக்கமாக, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் தேசியக் கட்சிகளின் அரவணைப்புக் காணப்பட்டால், அக்கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றும் ஆபத்துக் காணப்படுகிறது.

குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது தமிழ்நாட்டில் பெருமளவில் காலூன்றுமாயின், ஓரளவு மதசார்பற்ற அரசாக உள்ள தமிழ்நாடு அரசு, மத அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

எனவே, அடுத்த முதலமைச்சராக யார் வருகிறார்களோ, அவர்களுக்கான பாரியளவிலான சவால், காத்துக்கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.    

- See more at: http://www.tamilmirror.lk/191262/-வ-ல-க-க-ர-சச-கல-வ-ம-தம-ழக-அரச-யல-ம-#sthash.7yTyQzeU.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.