Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’

Featured Replies


கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’
 
 

article_1488181596-article_1480303869-kaதமிழக அரசியல் களம் இன்றைக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் 122 வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  

தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 234 இல் ஒரு பதவி காலியாக உள்ளது. மீதியுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் 122 வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது சசிகலா தலைமையிலான அ.தி.மு.கட்சி.   

அந்தக் கட்சிக்குள் முதல் முறையாக, மறைந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும் தவிர்த்து ஒரு முதலமைச்சர் தமிழகத்தின் மேற்கு மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார்.  

இந்த வெற்றிக்குப் பின்னால் நடைபெற்ற களேபரங்கள்தான் இன்றைக்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தை, இந்தக் காட்சிகளின் நடுநாயகனாக மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.   

பெப்ரவரி 18 ஆம் திகதி நிகழ்ந்த சட்டமன்ற வாக்கெடுப்பு, 1988 இல் நடைபெற்ற அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜானகி அணியின் வாக்கெடுப்புக்குச் சற்றும் சளைத்தது அல்ல.   

அதில் இரு வேறுபாடுகள் மட்டுமே தெரிகிறது. ஒன்று, அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஜானகி அணி தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்ததாகக் கருதி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார் அன்றைய ஆளுநர்.   

ஆனால், இப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதேபோல் 1988 இல் வன்முறை அ.தி.மு.கவுக்குள் வெடித்தது. மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொண்டது; மண்டையை உடைத்துக் கொண்டது எல்லாம் அ.தி.மு.க (ஜானகி அணி), அ.தி.மு.க (ஜெயலலிதா அணி) ஆகிய இரு அணிகளுக்குள்ளும் நடைபெற்றது.   

அன்று அவையில், தி.மு.க அணி அமைதியாக இருந்தது. இந்த வாக்கெடுப்பில் அ.தி.மு.கவுக்குள் அடிதடி இல்லை. சசிகலா அணியை எதிர்க்கும் ஓ.பி.எஸ் அணி எதிர்த்து வாக்களித்து விட்டு அமைதியாகி விட்டது.   

ஆனால், ஆட்சி அமைக்க முயற்சிக்காத தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டுச் சட்டமன்றத்தை கலவர பூமியாக ஆக்கி விட்டார்கள்.  

1988 இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் அன்றைய சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதா அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கியது களேபரத்துக்கு வித்திட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பின் போது தி.மு.கவின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காரை வழிமறித்துப் போலீஸார் சோதனை நடத்தியது சட்டமன்ற களேபரத்துக்கு வித்திட்டது.   

ஆனால், ஒரேயொரு ஒற்றுமை என்னவென்றால், இரு வாக்கெடுப்பின் போதும் சட்டமன்றத்துக்குள் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 1988 இல் சென்னை மாநகர பொலிஸ் கொமிஷனராக இருந்த வோல்ட்டர் தேவாரமே சட்டமன்றத்துக்குள் பொலிஸ் சீருடையில் உள்ளே நுழைந்தார்.  

ஆனால், இந்த வாக்கெடுப்பின் போது, பொலிஸ் கொமிஷனர் ஜோர்ஜ் அவைக்குள் வரவில்லை. ஆனால், வேறு சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் சட்டமன்ற அவைக்காவலர்கள் சீருடையில் உள்ளே நுழைத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்றார்கள்.   

இரு வாக்கெடுப்புகளுமே தமிழக சட்டமன்றத்தின் மாண்புகளை, கண்ணியத்தை கெடுத்து விட்டன என்பதுதான் நிச்சயமான உண்மை. அதனால்தானோ என்னவோ இன்னும் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தச் சட்டமன்ற களேபரத்துக்கு முதலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முறையிட்டார்கள். அதற்கு பலனில்லை என்ற நிலையில், இப்போது சென்னை நீதிமன்றத்தின் கதவையும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தையும் தி.மு.க தட்டியிருக்கிறது.  

குடியரசுத் தலைவரை 23 ஆம் திகதி சந்தித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை இரத்து செய்து விட்டு, புதிய வாக்கெடுப்பு, அதுவும் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.   

இதே கோரிக்கையை, தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைத்திருக்கிறது. இந்த இரண்டில் குடியரசுத் தலைவரிடமிருந்து ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பதே இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணமாக இருக்கிறது.  

ஆனால், தமிழக அரசியல் இதையெல்லாம் தாண்டி இப்போது திசை மாறி நிற்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் ‘சசிகலா அணி’, ‘தீபா அணி’ ‘ஓ.பி.எஸ் அணி’ என்றிருந்த நிலைமாறி, இப்போது கடைசியாக ‘தீபக்’ அணியும் உருவாகி விடுமோ என்று கருதும் நிலை உருவாகி விட்டது.  

 ‘தீபா’ மற்றும் ‘தீபக்’ அணி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் அணி என்பதால், அவர்கள் அ.தி.மு.க அரசியலுக்குள் நிகழ்த்தப்போகும் திடீர் திருப்பங்கள், அ.தி.மு.கவின் ஒட்டு மொத்த வாக்கு வங்கிக்கும் உலை வைக்கும் விதத்தில் அமைந்து விடும் என்றே தெரிகிறது.   

ஓ.பி.எஸ் அணியை ஆதரிக்க ஜெயலலிதாவின் சமாதிவரை சென்று ஆதரவு தெரிவித்து விட்டு, இப்போது புதிய கட்சி தொடங்குகிறார் தீபா. அதேபோல், சசிகலாவை ஆதரித்து விட்டு, இன்றைக்கு சசிகலா, பெங்களூரில் சிறைவாசம் அனுபவிக்கும்போது, அ.தி.மு.கவின் துணை பொதுச் செயலாளராக ஆகியிருக்கும் டி.டி.வி. தினகரனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார்.  

 அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள இந்த நால்வர் அணியில் எந்த அணிக்குச் செல்வாக்கு என்பது ஒரு வேளை வரப்போகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் தெரியலாம்; அல்லது தெரியாமலும் போகலாம்.   

ஆனால், அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலோ, அல்லது திடீரென்று சட்டமன்றத் தேர்தல் வந்தாலோ நிரூபிக்கப்படலாம் என்று தெரிகிறது. அந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் உண்மையான அ.தி.மு.க இந்த நால்வர் அணியில் எது என்பது தெரிய வரும்.   

என்றாலும், இப்போதைக்கு ‘ஓ.பி.எஸ்’ அணிக்கும், ‘தீபா’ அணிக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆகவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த அ.தி.மு.க இன்றைக்கு ஜெயலலிதா மறைவால் தடுமாறி நிற்கிறது.  

அ.தி.மு.க வெற்றிடத்தைக் கைப்பற்றிக் கொள்ள பாரதீய ஜனதா கட்சியும் முயற்சிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகமும் முயற்சிக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையும் மக்கள் நம்பவில்லை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது.   

அதற்கு ஏற்றால்போல், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சித்தார்த், நடிகர் சூர்யா போன்றவர்களின் அரசியல் சார்புள்ள கருத்துக்கள் ‘மாற்றுச் சக்தி’ ஒன்று உருவாகப் போடப்படும் அத்திவாரமோ என்று தமிழக அரசியல் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்துள்ளது.   

ஆனால், பா.ஜ.கவுக்குக் கட்சி உட்கட்டமைப்பு மாநிலத்தில் இல்லை என்பது இந்த முயற்சிக்கு எந்த அளவுக்குக் கை கொடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமா என்ற திசையை நோக்கி பா.ஜ.க அரசியல் காய் நகர்த்துகிறது என்பது மட்டும் இன்றைக்கு தெளிவு.  

அதேநேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் மர்ம மரணம் என்பதை முன்னிறுத்தியும் குற்றவாளி சசிகலாவின் ‘பினாமி’ ஆட்சி என்றும் முன்னிலைப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.  
 22ஆம் திகதி மாநிலம் முழுவதும் நடைபெற்ற அந்தக் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தப் பிரசாரத்தின் ஒரு கட்டம்தான்.

அதை திருச்சியில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினின் பேச்சில் தெரிந்தது. “சசிகலாவின் பினாமி ஆட்சியை அகற்றும் வரை தி.மு.கவின் போராட்டம் ஓயாது” என்ற ஸ்டாலினின் பேச்சு அதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.   

இதன் அடுத்த கட்டமாக, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சொற்பொழிவாளர்கள் கூட்டம் என்றெல்லாம் களை கட்டிக் களத்துக்கு வருகிறது தி.மு.க  இதுவரை தமிழக அரசியல் வேறு விதமாக இருந்தது. 1967 வரை காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் போட்டி. 1967 க்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் போட்டி. 1988 க்குப் பிறகு கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் போட்டி.   

2016 டிசெம்பர் ஐந்தாம் திகதிக்குப் பிறகு ஸ்டாலினுக்கும் சசிகலாவுக்கும் போட்டி என்று தொடங்கியது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்குக்குப் பிறகு இப்போது சசிகலா அணி என்பது நான்காக பிரிந்து நிற்கிறது. 

 ஆகவே, இன்றைக்கு பழைய போட்டி மறைந்து புதிய போட்டி பிறந்திருக்கிறது. அது, சசிகலாவுக்கு எதிரான அரசியல் போட்டி. இன்றைக்கு தி.மு.க, பா.ஜ.க மற்ற கட்சிகள் எல்லாமே ‘சசிகலா எதிர்ப்பு’ ஒன்றையே பிரதானமாக வைத்து அரசியல் செய்கின்றன.   

ஆகவே, இன்றைக்கு தமிழக அரசியல் வித்தியாசமான களத்துக்கு வந்து நிற்கிறது. ‘சசிகலா எதிர்ப்பை’ தங்களுக்கு சாதகமான வாக்காக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு மாநிலம் முழுவதும் அ.தி.மு.கவுக்குப் போட்டியாக கட்சியின் உட்கட்டமைப்பை வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது என்பதுதான் நிஜமான அரசியல் நிலவரம். 

 அந்தச் சாதகம், உடனே தேர்தல் வந்தால் மட்டுமே கிடைக்குமா அல்லது நான்கு வருடம் கழித்து தேர்தல் வந்தாலும் கிடைக்குமா என்பதைத்தான் இனி பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.    

- See more at: http://www.tamilmirror.lk/192237/கர-ண-ந-த-ஜ-யலல-த-அரச-யல-க-க-க-ட-ப-ய-#sthash.3RaYcdem.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.