Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி

Featured Replies

 

 

 
Tamil_News_large_1729864_318_219.jpg
 
ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி

 

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஒரு பொறுப்பான பிரஜையாக, அந்த சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டும் என, உள்ளத்தில் குமைந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு, விடையளிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததால், அவருக்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து, அவர் பின்னால் நின்று அரசியல் செய்ய ஆசைப்பட்டு, அவர் தலைமையை ஏற்று செயல்பட முடிவெடுத்தேன் என்று, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி கூறினார்.
 

 

 

சிறப்புப் பேட்டி


தமிழக காவல்துறையில் 35 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும், மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்று நிறைய ஆசைப்படுவேன். தண்ணீர் பிரச்னை, பள்ளிக்கூடப் பிரச்னை, கால்வாய் பிரச்னை, சாக்கடைப் பிரச்னை என்று, மக்கள் அன்றாடம் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் பிரச்னைகள் என் கவனத்துக்கும் வரும். ஒரு அதிகாரியாக, கையில் இருக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அந்த பிரச்னைகளையெல்லாம், என்னால் முடிந்த மட்டும் செய்து கொடுத்து வந்தேன்.

இப்படி சமூகப் பிரச்னைகள் மீது ஆர்வத்துடன் செயல்பட்ட எனக்கு, ஓய்வு பெற்றதும், அவைகளையெல்லாம் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. அதற்கான வடிகாலாக அரசியல் மூலம் அதிகாரமே இருக்க முடியும் என நினைத்தேன். அரசியல் செய்ய வேண்டும் என்றால், எந்த கட்சியில் சேருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. பல கட்சிகள் பற்றியும் ஆராய்ந்தேன். எல்லா கட்சிகளிலும், சாதகத்தை விட, பாதகமே கூடுதலாக இருப்பதாக மனதில் பட்டது. இந்த சூழலில்தான், தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமை கொண்ட தலைவராக இருந்த, ஜெயலலிதாவின் மரணமும், அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் என்னை நிலைகுலைய வைத்தன.
 

 

 

பாராட்டு


இருந்த போதும், அந்த சமயத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தின் அமைதியான, அடக்கமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டேன். தமிழகத்தின் கலாச்சாரச் சின்னமாக, வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னெழுச்சியாக மெரினாவில் கூடி, தங்கள் உணர்வுகளைத் தெரியப்படுத்தினர். அவர்கள் போராட்டம் நியாயமானது. ஆனால், அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் எங்கு போய் முடியும்? மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று, சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு மனுஷியாக கவலை கொண்டேன். அந்த சமயத்தில், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை, உலகமே வியந்து பாராட்டியது.
 

 

 

செயல்பாடு


பிரதமருக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதி அனுப்பி விட்டு, வழக்கமான ஒரு முதல்வராக இல்லாமல், டில்லிக்குச் சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியது மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தேவையான எல்லாம் ஏற்பாடுகளையும் அங்கிருந்தபடியே செய்தார். ஒரே நாளில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தேவைப்படும், மூன்று துறை ஒப்புதல்களையும் பெற்றார். இதற்காக, மூன்று துறை மத்திய அமைச்சர்களையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசி, ஒப்புதல் பெற்று, இரண்டே நாளில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கும் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். அதை, பின், நிரந்தர சட்டமாகவும் ஆக்கி விட்டார்.

இப்படி அவர் செயல்பட்டவிதம், அற்புதம்; அருமை. அதேபோல, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்றதும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், கிருஷ்ணா நதி நீரை பெறுவதற்காக, ஆந்திரா சென்று, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசி, தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றார் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம். இந்த விஷயத்துக்கும் அவர் கடிதம் எழுதி விட்டு, அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அதை செய்யாமல், நேரில் சென்று பேசியதன் விளைவு - கிருஷ்ணா நதி நீர் வந்து சேர்ந்தது. ஆனால், இத்தனையையும் செய்து விட்டு, அமைதியே திரு உருவமாக இருந்தார். தமிழகத்தை வார்தா புயல் வாட்ட்டி எடுத்ததும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேரடியாக சென்று, அதிகாரிகளை முடுக்கிவிட்டு, மக்களை புயல் பாதிப்பில் இருந்து வேகமாக மீட்டெடுத்தவர் பன்னீர்செல்வம். அதிலும், தனது செயல்பாடுகளை அவர் பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. இப்படி தொடர்ச்சியான அவருடைய அரசுச் செயல்பாடுகள் அனைத்தும், மெச்சக்கூடிய அளவிலேயே இருந்தது.
 

 

 

குமுறல்


இப்படியெல்லாம் சிறப்பான முதல்வராக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வத்தை, சசிகலா, திட்டமிட்டு, பதவியில் இருந்து கீழிறக்கி, அதில் தான் அமர வேண்டும் என நினத்ததே, ஆணவத்தின் உச்சம். அதுவும் அவரை சங்கடப்படுத்தி, அதையெல்லாம் சாதித்துள்ளனர். அதையெல்லாம் விளக்கமாக அறிந்ததும், நெஞ்சுகுமுறியது. தமிழகத்தில், ஒரு முதல்வராக இருப்பவருக்கே இதுதான் நிலையா என, குமுறினேன். மனது ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்தது.

இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு போயஸ் தோட்டத்தில் இருந்த போது, அவருடைய நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, தைராய்டு பாதிப்பு, உடல் பருமன் பாதிப்பு என எல்லாவற்றுக்கும் என்னவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற கேள்விகளும், அது தொடர்பாக கிடைக்கும் தகவல்களும், அவரது மரணத்தில் எழுந்திருக்கும் ஆயிரம் ஆயிரம் சந்தேகங்களையும் உறுதிப்படுத்தின. தமிழக மக்கள் அனைவருக்கும், ஜெயலலிதா மரணத்தில் எழும் சந்தேகங்களுக்கு யாரிடம் இருந்தும் விளக்கம் இல்லாமல் தத்தளித்து வருகின்றனர்.

மரணத்தின் பின்னணியில் எழுந்துள்ள ஆயிரம் ஆயிரம் சந்தேகங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் உள்ள சசிகலா, சந்தேகங்களுக்கு இதுநாள் வரையில் விடை சொல்லவில்லை. ஆனால், கட்சிக்கே சம்பந்தமில்லாத மனிதராக கட்சிக்கு கொண்டு வரப்பட்டு, கட்சியின் துனைப் பொதுச் செயலர் ஆக்கப்பட்டிருக்கும் தினகரனும், சந்தேகங்களைப் போக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த சமயத்தில்தான், இனியும் பொறுப்பது, அந்த அம்மா ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று முடிவெடுத்து, ஜெயலலிதா சமாதி முன் சென்று, அவர்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார் பன்னீர்செல்வம்.
 

 

 

விமர்சனம்


அதன்பின், சசிகலா குடும்பத்துக்கு எதிராக வலுவான பாயிண்ட்களோடு, சசிகலா தலைமையிலான அ.தி.மு.க., அணியினரை தன்னிச்சையாக விமர்சிக்கத் துவங்கினார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைத்து பேசினார். இது மக்கள் மத்தியில், அ.தி.மு.க., சசிகலா தரப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றைக்கும், சசிகலாதான், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும். ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது முதல், ஏகப்பட்ட கருத்து முரண்பாடுகள் உள்ளன.

கேட்டால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும், தன்னுடைய இமேஜ் பற்றி கவலைப்படுகிறவர். அதனால், சிகிச்சையில் இருந்த நிலையில், அவரை போட்டோ எடுத்து வெளியிடவில்லை என்று சப்பைகட்டுக் கட்டி, பதிலளிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து, மாற்றி மாற்றி அறிக்கை விட்டது அப்பல்லோ நிர்வாகம். இப்போது, அப்பல்லோ அறிக்கை என்று, தமிழக சுகாதாரத் துறையும் முரண்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளது.
 

 

 

நினைவுஇல்லம்


ஜெயலலிதா இறந்ததும், அவருக்கு சொந்தமான போயஸ் தோட்டத்து, வேதா இல்லத்தை விட்டு, சசிகலா வெளியேறி இருக்க வேண்டும். அதையும் செய்யாமல், இன்னும் அதை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதேன்? அவர் வெளியேறி, அதை அரசு நினைவில்லமாக்க முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று முயற்சித்து, அதற்காக குரல் எழுப்பி வரும், பன்னீர்செல்வத்தின் அமைதியும், நேர்மையான செயல்பாடும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு, அவர் நடத்தும் தர்ம யுத்தமும் பிடித்திருந்தது. அவர் பின்னால் நின்று, அரசியல் செய்வது என முடிவெடுத்தேன். அவரை சந்தித்தேன். எண்ணத்தை சொன்னேன். சேர்ந்து செயல்படலாம் என்றவரிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவர் சார்பில் வேட்பாளராகும் எனது எண்ணத்தையும் சொன்னேன்.
 

 

 

போட்டி


அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். நான் மட்டுமே, வேட்பாளரை முடிவு செய்ய முடியாது. ஆட்சி மன்றக் குழுதான் முடிவெடுக்கும். ஏற்கனவே, மதுசூதனன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என, முடிவெடுத்துள்ளோம். உங்கள் பெயரை சேர்த்து, மூவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என சொன்னார். நான், ஆர்.கே.நகர் வேட்பாளர் ஆனால், கட்டாயம், தொகுதியில் வெற்றி பெறுவேன். ஒரு சிறந்த எம்.எல்.ஏ.,வாக என்னால், செயல்பட முடியும்.

ஜெயலலிதா மரணத்துக்கு, பன்னீர்செல்வம் முன் கூட்டியே ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று எல்லோரும் கேட்கின்றனர். அப்படி அவர் செய்து, கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவர் தயங்கினார். ஆனாலும், முதல்வர் பதவியில் இருந்து கொண்டே, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை அமைத்து விட வேண்டும் என்று நினைத்துத்தான் செயல்பட்டார். அவர் முதல்வராக தொடர்ந்து இருந்திருந்தால், அதை செய்திருப்பார். போயஸ் தோட்டமும், அரசு நினைவில்லமாக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் தெரிந்துதான், சசிகலா தரப்பு, அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து, முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து விட்டது.

முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு விடப்பட்டால், கட்டாயம், உண்மைகள் வெளி வந்து விடும். இத்தனை நாட்களும், பல விஷயங்களை மூடி மறைத்தவர்களின் முகமூடி கிழித்தெறியப்பட்டு விடும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1729864

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.