Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த 35 வயதிலும்... எதை நிரூபிக்க ஃபெடரர் இன்னும் போராடுகிறார்?

Featured Replies

இந்த 35 வயதிலும்... எதை நிரூபிக்க ஃபெடரர் இன்னும் போராடுகிறார்?

ஆஸ்திரேலிய ஓபன், இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன் என இந்த ஆண்டு மட்டுமே ரோஜர் ஃபெடரர் வென்றது மூன்று பட்டங்கள். கடந்த ஆண்டு ஆறு மாத இஞ்சுரியால் முடங்கிக் கிடந்த ஃபெடரருக்கு இது அமர்க்கள சீசன்.

ஃபெடரர்

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தோற்றதால், ‘வயசாயிடுச்சு, இனிமே இவரால ஜெயிக்கமுடியாது' என்று கழித்துக்கட்டப்பட்ட ஒருவருக்காக, சமீபத்தில் உலகமே பிரார்த்தனைசெய்தது. அவர் ஜெயித்துவிடமாட்டாரா என ஏங்கியது. ஜெயித்ததும் சத்தமாகக் கத்தவில்லை; கொண்டாடவில்லை; கண்ணீர்விட்டு அழுதது; மறுகணம், 'அண்ணனோட அடுத்தபோட்டி எப்போ?' என்று ஆவலுடன் எதிர்பார்க்கத்தொடங்கிவிட்டது.

இந்த அதிசயம் எப்படி நடந்தது? நாளுக்கு நாள் புதுப்புது நட்சத்திரங்கள் தோன்றுகிற இந்த அவசரயுகத்தில், 2012 முதல் 2016 வரை கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்த ஒருவர் மீது ரசிகர்களுக்கு இப்படியோர் அன்பா? அவருடைய வெற்றிக்காக இத்தனைபேர் ஆசையோடு காத்திருந்தார்களா? இந்த 'தானா சேர்ந்த கூட்டம்' எப்படி வந்தது? எப்படி நிலைத்தது? ஒருகாலத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரராகத் திகழ்ந்த அவர், இந்த ஐந்து வருடங்களை எப்படிச் சமாளித்தார்? நேற்று வந்த துண்டுதுக்கடா வீரர்களெல்லாம் அவரைத் தோற்கடித்து கோப்பைகளை அள்ளும்போது, முன்புபோல் உடல் ஒத்துழைக்க மறுக்கும்போது, இரண்டாமிடம், மூன்றாமிடம், ஐந்தாமிடம், பத்தாம் இடத்தையெல்லாம் எப்படி அவருடைய மனம் ஏற்றுக்கொண்டது? 'விளையாடினது போதும்' என விடைபெறாதது ஏன்?

இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உண்டு. ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து ஜெயித்தபோது அவரைக் கொண்டாடிய அதே ஆசையுடன், சொல்லப்போனால் அதைவிட அதிக ஆசையுடன் அவர் வெல்லத் தடுமாறிய ஆண்டுகளையும் மக்கள் ரசித்தனர், ‘நீ மறுபடி ஜெயிப்பேய்யா...’ என பொறுமை காத்தனர்.ஃபெடரர்

ரோஜர் ஃபெடரருக்கு வயது 35. டென்னிஸ் உலகைப் பொறுத்தவரை இது ஓய்வெடுக்கும் வயது. மற்ற பெருந்தலைகள் இந்த வயதில் ராக்கெட்டைக் கீழே போட்டுவிட்டனர். இவர் இன்னும் மைதானத்தில் போராடிக்கொண்டிருக்கிறார். உடல்தகுதி அவரைக் கீழ் இழுக்கப்பார்த்தாலும், வெற்றிகள் குவியாவிட்டாலும், தொடர்ந்து விளையாடுகிறார்.

இத்தனையும் எதற்காக? பணம் சம்பாதிக்கவா? டென்னிஸில் ஃபெடரர் அளவுக்குச் சம்பாதித்தவர்கள் யாருமில்லை. விளையாடி வென்றது ஒரு மடங்கென்றால், விளம்பரங்களின்மூலம் சம்பாதித்தது பல மடங்கு. இதற்கு மேலும்  ஊரூராகத் திரிந்து சம்பாதித்தால்தான்  வீட்டில்  அடுப்பெரியும் என்கிற நிலைமை இல்லை.

ஒருவேளை, புகழுக்காக இருக்குமோ?  'Greatest of all time', அதாவது டென்னிஸ் சரித்திரத்திலேயே மிகச்சிறந்த வீரர் என்கிற (அதிகாரப்பூர்வமற்ற) கிரீடம் ஏற்கெனவே ஃபெடரருக்குச் சூட்டப்பட்டுவிட்டது. அன்றைய டென்னிஸ் வீரர்களில் தொடங்கி, நேற்று விளையாட வந்த புதுப்பையன்கள் வரை ஃபெடரரின் மேதைமையை சிலாகித்து விட்டனர். இதற்குமேல் வென்று அவர் எதையும் நிரூபிக்கப்போவதில்லை.

ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தவிர, அவர் வெல்லாத கோப்பை எதுவுமில்லை. உலகம் முழுக்க அவர் ராஜ்யம் செய்யாத மைதானங்கள் இல்லை. வாங்காத பட்டங்கள் இல்லை. பிரெஞ்ச் ஓபன் தவிர்த்து மற்ற க்ராண்ட் ஸ்லாம் கோப்பைகளை ஐந்துமுறைக்குமேல் வென்றிருக்கிறார். ஒட்டுமொத்த டென்னிஸ் சாதனைகளைப் பட்டியலிட்டால், அதில் பெரும்பாலானவை ஃபெடரர் வசமிருக்கின்றன. அவருடைய சில சாதனைகளை யாரும் நெருங்கிட முடியாது. 

சுருக்கமாகச் சொன்னால், ஃபெடரர் இதற்குமேல் எதையும் சாதிக்கப்போவதில்லை. அது தெரிந்தும் அவர் விளையாடுகிறார், ரசிகர்களும் ரசிக்கிறார்கள்,  'இன்னும் கொஞ்சநாள் விளையாடுய்யா' என்று செல்லம்கொஞ்சுகிறார்கள், ஒவ்வொரு போட்டிக்குப்பிறகும் அவர் அவிழ்த்தெறியும் தலைப்பட்டை, கைப்பட்டைகளைக் கேட்ச் பிடிக்க ரசிகைகளிடையே போட்டாபோட்டி நடக்கிறது. அவர் ஜெயித்தாலும் தோற்றாலும் பத்திரிகையாளர்கூட்டத்தில் நிற்க இடமில்லாதபடி பன்னாட்டு நிருபர்களும் கேமராமேன்களும் குவிகிறார்கள். தரவரிசைப்பட்டியலில் எத்தனையாவது இடத்திலிருந்தாலும் ஃபெடரர்தான் டென்னிஸ் உலகின் ராஜா, சந்தேகமில்லை!

கோப்பைகளின் எண்ணிக்கை, சொத்து மதிப்பு, புள்ளிவிவரங்கள், அவர் விளையாடும் போட்டிகளின் வெற்றி, தோல்வியைப்பார்த்து ரசிகர்கள் ஃபெடரரை ரசிக்கவில்லை. அவருடைய விளையாட்டுக்காகமட்டுமே அவரைப் பின்பற்றுகிறார்கள், நிரந்தர ரசிகர்களாயிருக்கிறார்கள்.

முணுக்கென்றால் சர்ச்சை கிளம்பும் இன்றைய சூழலிலும், ஃபெடரரின் 'சமத்துப்பையன்' இமேஜ் அவரைச் சர்வதேச ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக்கிவிட்டது. இவர் கையிலிருப்பது டென்னிஸ் ராக்கெட்டா அல்லது மந்திரக்கோலா?  மைதானத்தில் விளையாடும்போதும் சரி, பத்திரிகையாளர்களின் கிடுக்குப்பிடிக் கேள்விகளுக்குப் பதில்சொல்லும்போதும் சரி, ஃபெடரர் அபாரமான Entertainer. அதனால்தான், அவர் விளையாடும்வரை லாபம் என்று ஊரே கண்கொட்டாமல் பார்க்கிறது.

சென்ற வருடம் ஃபெடரருக்கு அடுத்தடுத்து உடல்தகுதிப் பிரச்னைகள். அவர் இனிமேல் டென்னிஸ் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு என முடிவுரை எழுதினர். மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, டென்னிஸில் உடலுக்கு அழுத்தம் மிக அதிகம். கால்கள் வேகமாக ஓடவேண்டும், சட்டென்று திரும்பவேண்டும், விரைவாகச் சிந்திக்கவேண்டும், சரியான எதிர்வினையைத் தேர்ந்தெடுத்துக் கைகளைச் செலுத்தி ஆடவேண்டும். எதிராளி என்னசெய்வார் என முன்கூட்டியே தயாராகவேண்டும். இத்தனைக்கும் மேலாக, ஒரு போட்டியில் தோற்றால், அப்படியே வெளியேறவேண்டியதுதான். செகண்ட் சான்ஸ் எல்லாம் கிடைக்காது. 

ஃபெடரர்

ஃபெடரர் லைம் லைட்டுக்கு வரத்தொடங்கியபோது, டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பீட் சாம்ப்ரஸ் வெளியேறிக்கொண்டிருந்தார். இருவரும் ஒரே ஒருமுறைதான் மோதியிருக்கிறார்கள். அதில் ஃபெடரர் வெற்றி. அதன்பிறகு ஆண்ட்ரே அகாஸி, லேட்டன் ஹீவிட், மராட் சஃபின், டேவிட் நல்பாண்டியன், ஆண்டி ராடிக், ஆண்டி முர்ரே, முக்கியமாக ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச் என்று வரிசையாகப் பலர் வந்தார்கள். இவர்களில் ஓரிருவரைத்தவிர யாராலும் ஃபெடரரின் வேகத்துக்கும் திறமைக்கும் ஈடுகொடுக்கமுடியவில்லை. அவரை வென்றவர்கள்கூட, படாதபாடுபட வேண்டியிருந்தது. 

அபூர்வமான தோல்விகளும், ஃபெடரரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஒவ்வொரு தோல்விக்குப்பிறகும், 'அடுத்து என்ன?' என்று மீண்டுவிடுவார்.  அதனால்தான் உலகின் முதல்நிலைவீரர் என்கிற கௌரவம் அவரை ஒட்டிக்கொண்டிருந்தது. 
2012 விம்பிள்டனுக்குப் பிறகு, ஃபெடரருக்கு முக்கிய வெற்றிகள் சிக்க மறுத்தன. ஒவ்வொருமுறையும் அவர் எவ்வளவுதான் போராடினாலும், யாராவது அவரைத் தாண்டிச்சென்றுவிடுவார்கள். பல நேரங்களில் அரையிறுதி, இறுதிப்போட்டிவரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியிருந்தது. என்ன காரணம். வயதாகிவிட்டதா? அல்லது, மற்றவர்கள் ஃபெடரரின் வெற்றி ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா? அவரால் மறுபடியும் முக்கியப் போட்டிகளில் வெல்ல இயலுமா? அல்லது, கௌரவமாக ஒதுங்கிக்கொள்வது நல்லதா?

இந்த நேரத்தில்தான், அவருடைய உடல்தகுதி பெரிய தடையாக இருந்தது. சிகிச்சை, பயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. அப்போது, ஒரு முக்கிய முடிவெடுத்தார்.  சில மாதங்கள் போட்டிகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம். உடலுக்கு முழு ஓய்வு தரலாம். அதன்பிறகு, மெதுவாக வெளியே வந்து சில போட்டிகளில் பங்கேற்கலாம். டென்னிஸ் ஆடத் தொடங்கிய நாள் முதல் ஃபெடரர் இப்படியொரு ஓய்வைக் கற்பனையில்கூட நினைத்ததில்லை. ஆனால், இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடவேண்டுமென்றால், இந்தத் தியாகம் அவசியம் என உணர்ந்தார்.

ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஃபெடரர், சக டென்னிஸ் வீராங்கனை மிர்கா வாவ்ரினெக்கைக் காதலித்து மணந்தவர். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என இரண்டு இரட்டையர்கள். ஃபெடரரின் மகள்கள், அவருடைய வெற்றிகளைக் கண்குளிரப் பார்த்தாகிவிட்டது. மகன்களும் பார்க்கவேண்டாமா? அதற்காகவே தன் உடலுக்குத் தேவையான ஓய்வைத் தந்தார். பயிற்சியாளர்கள், உடல்தகுதி ஆலோசகர்கள் சொல்வதைக்கேட்டுக் காயங்களில் இருந்து மீண்டு, தன்னை வலுவாக்கினார்.

அதன்பிறகு வந்ததுதான் 2017 ஆஸ்திரேலிய ஓபன். ஃபைனலில் தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கைமுழுக்கத் தனக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்த நடாலை வீழ்த்தினார். 17-வது கிராண்ட் ஸ்லாமை வென்று ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, ஏகப்பட்ட எரிச்சல்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள், வேதனைகளுக்குப் பிறகு, 18-வது கிராண்ட் ஸ்லாம் கைக்கெட்டியது.

ஃபெடரர்

கோப்பையைவிட, அதனை ஃபெடரர் வென்றவிதம்தான் அற்புதம். ‘ஃபெடெக்ஸ்’ (ஃபெடரர் எக்ஸ்பிரஸ்) என்கிற செல்லப் பெயருக்கேற்ப, அவருடைய பழைய லாகவத்தையும் ஆவேசத்தையும் மைதானத்தில் பார்க்கமுடிந்தது. இதுவே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார், எத்தனை கோப்பைகளை வெல்வார் என்று யாருக்கும் தெரியாது. அடுத்து அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும், அனுபவத்துக்கும் இளமைக்குமான போட்டியாகவே இருக்கும் என்பது உறுதி. வெல்லவேண்டும், உயரத்துக்குச் செல்லவேண்டும் என்கிற துடிப்புடன் களமிறங்கும் இளம் வீரர்களை, இந்த 35 வயது ஜீனியஸ் எப்படிச் சமாப்பார் என்பதுதான் சுவாரஸ்யம்.

ஃபெடரர் இந்த சாவலை எதிர்நோக்கித்தான் இருக்கிறார். 'புதுப்புதுப் போட்டியாளர்கள், திறமைசாலிகள் வந்தால் நல்லதுதானே? இப்படிப்பட்டவர்களை ஜெயிக்கத்தானே ஆசைப்பட்டேன். ஒதுங்கி உட்கார முடியுமா? மோதிப்பார்த்துவிடவேண்டியதுதான்' - என்கிறார் ஃபெடரர்.

ஃபெடரர் ரெடி. வாங்க பசங்களா!

http://www.vikatan.com/news/sports/85366-35-and-never-old-what-does-he-strive-to-prove-the-name-is-federer.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.