Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவல் - சிறுகதை

Featured Replies

ஏவல் - சிறுகதை

நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’

சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கும் அல்லும் பகலும் அறுபது நாழியலும், ஆண்டுக்குப் பதின்மூன்று அமாவாசை பௌர்ணமிகளுமாக எப்படித்தான் சாகுமோ காலம்? காற்றாட உட்கார்ந்து கதைக்கலாம் என்பதே அவரது உத்தேசம்.

“என்ன மக்கா... பனங்கருக்கா? ரொம்ப நேரமாட்டுப் படுத்துக்கெடக்க? திரேகத்திலே வாட்டமா? இல்லே மனசிலேதான் சீணமா?” என்றார் பாலத்தடி மாடன்.

p64.jpg

அந்தப் பிராந்தியத்தில் கெதியாக நடமாடித் திரிந்த ஏவல் பண்ணைக்கு ஒருவன் பனங்கருக்கன். பனங்கருக்கு என்றால், பனைமரத்து மட்டையின் இருபுறங்களிலும் மரமறுக்கும் வாள்போல பற்களுடன் இருக்கும் விளிம்புகள். பனங்கருக்கன் என்கிற இந்த ஏவல், வட்டியூர்க்காவு மந்திரவாதியின் சேனையில் ஓர் உறுப்பு. அதன் வயது என்ன என்பது அதற்கும் தெரியாது; மந்திரவாதிக்கும் தெரியாது. பரம்பரைப் பரம்பரையாக மந்திரவாதக் குடும்பத்தின் சிப்பந்தி. ஏவிய இடத்துக்குப் போய் எதிரியின் மேல் இறங்க வேண்டும். வாய் கோணப்பண்ணுவதோ, கை கால் முடமாக்குவதோ, தீராத வயிற்றுநோவோ, ஆளையே வேக்காடு வைப்பதோ - சொன்னதைச் செய்துவிட்டுத் தாவளத்துக்கு மீண்டுவிட வேண்டும். எந்த ஏவலுக்கும் பசி, தாகம், காமம், பிணி, மூப்பு, சாவு இல்லை. பௌராணிகர்கள், தேவக் கன்னிகைகளை எச்சில்படுத்த நினைத்ததனால், பெற்ற சாபம் என்பார்கள்.

ஏவல்களுக்கு உருவம் இல்லை. உருவம் இல்லாதவர் கண்களுக்கும், எஜமானர்கள் கண்களுக்கு மட்டுமே தென்படுவார்கள். உருவமே இல்லாதபோது எங்கே ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகள் எல்லாம்? பிறகு எங்கே தேர்தல்களின்போது ஐயாயிரம், பத்தாயிரம் என வாக்குக்குப் பணம் பெறுவது? தனது தலைவருக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பதே ஏவலுக்குச் சுயதர்மம். ஊதியம் என்பது, ஆண்டுக்கு ஒருமுறை, ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் ஊட்டு. அதில் ரத்தப்பலி கொண்ட நிவேதனங்கள் இருக்கும்.

மந்திரவாதியின் சாந்நித்யத்தில் எந்த ஏவலுக்கும் இருக்கை கிடையாது. ஒற்றை மணையில் அவர் மட்டுமே இருப்பார். காட்சிப் பழகிக் கிடப்போருக்கு நான் சொல்வது அர்த்தமாகும். இன்னும் சொன்னால், நேருக்குநேர் நிற்காமல் பக்கவாட்டில்தான் நிற்கலாம். கண்ணொடுகண் நோக்குவது அறவே அனுமதிக்கப்படுவதில்லை. வாய்ச் சொற்களுக்கும் எந்தப் பயனும் இல்லை.

பனங்கருக்கன் ஆவலாதியுடன் வருத்தத்தைப் பாலத்தடி மாடனிடம் பகிர்ந்துகொண்டான்.

“நம்மள ஏவல்செய்து அனுப்பப்பட்ட முடிவான்கிட்டே நெருங்க முடியல்லவே. கவசம் மாதிரி நிக்கான் கனக்கன்ணு ஒரு காவலு. அவனும் நம்ம இனவன்தான். பொறுப்புன்னு ஏத்துக்கிட்டா, அவன் இடத்தை நமக்கு விட்டுக்குடுப்பானா? இத்தனைக்கும் முப்பது வருஷம் மிந்தி ரெண்டுபேரும் ஒரே மந்திரவாதிக்கிட்டே இருந்தவங்கதான். சின்னம் ஒண்ணு, கொடி ஒண்ணு, கீதம் ஒண்ணு, கோஷம் ஒண்ணு... ரெண்டு பேரும் சேர்ந்தே ஏகப்பட்ட நிர்த்தூளி பண்ணியிருக்கோம். இப்பம் அவன் அணி வேற, நம்ம அணி வேற. நம்ம ஏவலு; அவன் காவலு... பாத்துக்கிடும்.”

“ஏத்துப்பிடிச்ச ஏவலைக் கொண்டுக்கிட்டுப் போயி, ஏவப்பட்டவன் மேல இறங்காம திரும்பிப் போக முடியுமாடே?” என்றார் மாடன்.

“என்னன்னு சொல்ல என் கதைய? இட்ட அடி நோவுது, எடுத்த அடி கொப்பளிக்கு. அங்க போனா காவலு அண்ட விட மாட்டாங்கான். இங்க வந்தா மந்திரவாதி அக்கினிக் குண்டம் மாதிரி நிக்கான். இதென்ன கோர்ட் சம்மனா, வாங்க ஆளில்லாட்டா கதவுல ஒட்டீட்டு வர்றதுக்கு? நேரடியா அவன் மேல போயி இறங்கினாத்தான் சோலியைத் தொடங்க முடியும்? செய்வினை சுமந்த நம்ம ஆவித் தேகம் தீயாட்டுத் தகிக்கு. சவத்த, ஏவின வேலையைச் செய்து முடிச்சுட்டு வந்து நிம்மதியா இலுப்பாத்துல ஒரு முங்கலுபோட நீதமுண்டா?”

காலடியில் கிடந்த கூழாங்கல் ஒன்றைத் தூக்கி தண்ணீர்க் கயத்தில் வீசியது ஏவல். நாலைந்து கெளிறுகள் நீர்மட்டத்துக்கு மேல் எம்பிக் குதித்தன. ஏற்ற பணியை முடிக்கும் வரை எந்த ஏவலுக்கும் ஓய்வு இல்லை. இதென்ன அரசுப் பணியா? முடிஞ்சா செய்யி, இல்லேண்ணா கெடக்கும்!’ என்பதற்கு. சம்பளம் கிம்பளம் உண்டா, போனஸ், அகவிலைப்படி, பஞ்சப்படி, பயணப்படிதான் உண்டா? பணி ஏற்றுக்கொள்வது என்பது கிட்டத்தட்ட சுப்பாரி வாங்குவதற்கு சமம். உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு என்பதுபோல். செய் அல்லது செத்துச் சுண்ணாம்பாய்ப் போ!

ஏவலுக்கு சிறுவிடுப்பு, நோய்விடுப்பு, பெருவிடுப்பு, பிள்ளைப்பேற்று விடுப்பு என்பது எல்லாம் இல்லை. ஏவல்களின் நடமாட்டம் கண்காணிக்க GPS போன்ற ஒரு கருவியும் உண்டு மந்திரவாதியிடம். கண்ணுக்குத் தெரியாத மாந்தரீகச் சரடு அது.

மாடன் சின்னதாக ஒரு நூல் நுழைத்தார். அதை அவர் சாதிக் குசும்பு என்றும் கொள்ளலாம்.

“யாருக்கு மேலயாங்கும் ஏவலு? சொல்லலாம்ணா சொல்லுடே! நிர்பந்தம் இல்லை.”

“உம்மகிட்ட சொல்லுகதுக்கு என்னா?

உமக்கு நம்ம பட்டைச்சாமியைத் தெரியுமா? பழைய எம்.எல்.ஏ?”

“ஆமா... மூணு தலைமுறையா பட்டைச்சாராயம் ஊற்றுகிற குடும்பம். நமக்கு பங்குனி உத்திரத்துக்கு படுக்கை வெச்சுத் தரச்சிலேகூட அவன் சாராயம்தான் வாங்கி வைப்பானுக. சவம் ஒரே தொண்டைக் கமறலு! என்ன இழவைக் கலக்குவானுகளோ?”

“அவன்தான் நம்ம மந்திரவாதிக்குச் செல்லும் செலவுகுடுத்து எம்மை ஏவிவிடதுக்கு ஏற்பாடு செய்த ஆள்.”

“அவன் யாருக்கு மேலயாங்கும் இப்பம் ஏவல் அனுப்புகான்?

“அவுரும் உமக்குத் தெரிஞ்சவர்தான்! மணல்வாரி அப்பன்.”

“ஓ! அவனா? அவன் இப்பம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-தானே? ஊர்ல, ஆத்துல, ஓடையில பொடி மணலு இல்லாம தூத்து வாரப்பட்ட குடும்பம்லா?”

“ஆமாம் அவனேதான்...”

“சரிடே! அவனுக்கும் இவனுக்கும் என்ன? ரெண்டு பேரும் ஒரே தாலியறுப்புக் கட்சிதாலா? அஞ்சு வருசம் அவன் அடிச்சு மாத்தினான். இப்பம் இவன் அடிச்சு மாத்துகான். அம்பது, நூறு கோடி முன்னப் பின்ன இருக்கும்... அவனவன் சாமர்த்தியம்போல. இதுல இவனுகளுக்குள்ள செய்வினை வைக்க அளவுக்கு என்னடே வெட்டுப்பழி, குத்துப்பழி? ஒருத்தன் பொண்டாட்டித் தாலியை மத்தவன் அறுக்கணும்னு நிக்கானுகோ!”

p64a.jpg

சற்று நிதானமாக, சாதகப்பறவைபோலத் திங்களின் ஒளியை உண்டு திரும்பினான் பனங்கருக்கன்.

“இப்படிப் பாலத்துக்கு அடியிலே கெடந்து நீரு என்னத்தைக் கண்டேருவே? வழக்கு... எவன் கூடுதலா கொள்ளை அடிச்சான்ங்கிறதுல இல்ல பாத்துக்கிடும். Bone of Contention என்னன்னு கேட்டேருண்ணா, ஒரு தெலுங்குத் துணை நடிகை.”

“அதாருடே?”

“முன்னால எல்லாம் சினிமாவுல காதல் காட்சியில, கதாநாயகிக்கும் பொறத்த பத்துப்பேரு ஆடீட்டிருப்பா. இடுப்பை வெட்டி வெட்டி; மாரைக் குலுக்கிக் குலுக்கி.’’

“சே! என்ன பேச்சுடா பேசுகே... நேரங்கெட்ட நேரத்துலே?”

“சொல்லு கதை கேளும். இவ அந்தப் பத்துப் பேருலே ஒருத்தியாக்கும். அஞ்சாறு சினிமாவுல ஹீரோவுக்குத் தங்கச்சியா வந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டுச் செத்துப்போனா. பொறவு சீரியல்ல வர ஆரம்பிச்சா.”

“அதென்னப்பா வன்புணர்ச்சி?”

“வன்புணர்ச்சின்னா rape பார்த்துக்கிடும். பாலியல் வன்முறைன்னு சொன்னாத்தான் உமக்கு மனசிலாகும்னா அப்படியே வெச்சுக்கிடுவோம்.”

“சரிப்பா... தெலுங்குத் துணை நடிகைக்கும் முன்னாளும் இன்னாளுக்கும் என்ன பெந்தம்? தென்னை மரத்துக்குத் தேள் கொட்டுனா, பனை மரத்துக்கு நெறி கட்டுமா?”

“நீரு... பாலத்தடி மாடனா, இல்லாட்டா வெறுந்தடிமாடனா? பொம்பளைக்கான போட்டியில சாம்ராஜ்ஜியமே கவிழ்ந்திருக்கு. பத்து, முப்பது வருஷத்துக்கு மிந்தி, கோட்டை மாதிரி இருந்த பெரிய கட்சியே உடைஞ்சு ஆட்சி மாறியிருக்கு. ஓர்மை இல்லையா உமக்கு? அஞ்சு வருஷம் மிந்தி, ஒரு பிரபலத்தைக் கொண்ணு, சாமானத்தை அறுத்து, அவன் வாயில திணிச்சு வெச்சதை மறந்திட்டேரா?”

“இப்பம் இவனுகளுக்குள்ள அந்த நடிகைக்காகச் சுட்டித்தான் அடிவிடியா? அவ பேரு என்னடே?” என்றார் பாலத்தடி மாடன்.

“உமக்கு அவ கட்டுப்படியாகாது கேட்டேரா?’’

“நீ அவ பேரைச் சொல்லுடே!”

“விட்ட இடத்திலேயே நில்லும் என்னா? பூர்வீகப்பேரு சிலக்கலூரிப்பேட்டை சௌந்தரம்மா. மூணு தலைமுறையா துணை நடிகை. சினிமாவுக்கு வந்த பொறவு சுந்தரஸ்ரீ. கொஞ்ச நாள் மிந்தி அவளை முன்னாள் வெச்சிருந்தான்.”

“அவுனுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்டாட்டியும் ஒரு வைப்பாட்டியும் உண்டும்லாடே?”

“அதுக்கு நீரும் நானும் என்ன செய்ய முடியும்? அவனுக்கு மதன காம கஜ கேசரி யோகம்வே! போன மாசம் சுந்தரஸ்ரீயை இன்னாள் அடிச்சு மாத்திட்டான். சும்ம இல்லை. கீரிப்பாறை மலை மேல ஒரு எஸ்டேட். கொச்சியில ஒரு காம்ப்ளெக்ஸ். பிவாண்டியிலே ஒரு தறிப்பட்டறை எழுதிக் குடுத்திருக்கான்யா!”

“அவளுக்கு அப்பிடி ஒரு இடுப்பு பெலமாடே?”

“அதை எங்கிட்ட கேக்கேரு?”

“இப்பம் முன்னாள் இன்னாளை ஒழிச்சுக்கட்டணும்னு பாக்கான். அப்படிச் சொல்லும்! கைகால் வெளங்காமப் பண்ணினாத்தான் திண்ணசோறு செமிக்கும் போலயிருக்கு. அதுக்குத்தான் நீ ஏவலு!

ஒரு வகையிலே நீ செய்யது ஓர் அறம்தான் பாத்துக்கோ! ஆயிரம் கொலைகாரப் பாவிகள்ல ஒருத்தன் ஒழிஞ்சாக்கூட ஒருத்தன் குறைஞ்சிருவான்லா? மக்கள் தொண்டே மகேசன்  தொண்டு! சரி, பின்னே சட்டுப்புட்டுன்னு சோலியை ஆரம்பிடே மக்கா!”

“உமக்கு ஒண்ணும் லௌகீக ஞானம் இல்லியேவே! இதென்ன துணைவேந்தர் பதவியா, பத்துக் கோடி வீசி எறிஞ்சு பாஞ்சு பிடிக்கதுக்கு? நான் நினைச்ச நேரம் இன்னாள் மேல இறங்க முடியாதுல்லா! அட்டமி, நவமி, தேய்பிறை இருக்கப் பிடாது. ராகு காலம், எமகண்டம், கரிநாள், சூலம் எல்லாம் பாக்கணும்! மூந்திக்கருக்கல் நேரம் பாத்து, வெள்ளி செவ்வாய் பாத்து இறங்கணும்.”

“அதும் அப்பிடியா?” என்று சலித்தார் மாடன்.

“நீரு ஒரு சங்கதி தெளிவாட்டு மனசிலாக்கணும்! நூறு ஏக்கர் ஏலக்கா தோட்டம் முன்னாள்கிட்ட இருந்தா என்ன, இன்னாள்கிட்ட இருந்தா நமக்கு என்னவே? வாக்காளனுக்கு வாக்குறுதிங்கப்பட்டது, கை முட்டுலே தடவப்பட்ட தேன் மாதிரி. கொண்டுகிட்டு நடக்கலாம். ஆனா ஒரு காலமும் நக்க முடியாது! இதுல எவன் ஆளும் கட்சி, எவன் எதிர்க்கட்சி, எவன் முன்னாள், எவன் இன்னாள்னா நமக்கு என்ன போச்சு? அஞ்சு வருஷம் அவன் கொள்ளை; அஞ்சு வருஷம் இவன் கொள்ளை. வாக்காள சனம், எச்சிச்சோற்றுப் பருக்கைக்கு அடிச்சுக்கிட்டுச் சாவுது; கூவித் திரியுது... வாழ்க, ஒழிகன்னு. ரெண்டு பொண்டாட்டிகளும் ஒரு வைப்பாட்டியும் போராதாவே ஒருத்தனுக்கு? எம்புட்டு வெசம் சுரந்தாலும் கக்குகதுக்கு ஏதும் புத்திமுட்டு உண்டா? ஆசைவே... பழைய சோசலிஸ்ட் தலைவர், ராம்மனோகர் லோகியா சொன்னாருவே பார்லிமெண்ட்லே! ஜவஹர்லால் நேருவுக்கு எதிரா பேசச்சிலே! வெளக்கணச்சா எல்லா பொம்பளையும் ஒண்ணுதாம்னு, அவன்கிட்டே இருந்து இவன் அடிச்சு மாத்தினான். இப்பம் அவன் செய்வினை செய்து ஏவல் அனுப்புகான்.”

பாலத்தடி மாடன் யோசித்தார். தாங்கிக்கொள்ள முடியாதுதான் போலும்! ஒற்றை விதையைத் திருகி எறிந்து இன்னாளைத் தீ வைத்துக் கொளுத்தும் அளவுக்கு முன்னாளுக்குக் கோபம், சினம், ஆங்காரம், வெப்புராளம், எரிச்சல், கடுப்பு, விரோதம், குரோதம், பகை.

பனங்கருக்கனும் தனியாக யோசித்தான். செய்வினையைச் சுமந்து எரிவது என்பது ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதுபோல அல்ல. எவர் மீது ஏவப்பட்டதோ அவரைத் தவிர, மனைவி, துணைவி, வைப்பாட்டி, சின்ன வீடு என மாற்றி மற்றவர் மீதும் இறக்க இயலாது. கூரியர் டெலிவரி கொடுப்பது போன்றது அல்ல. பாஸ்போர்ட் டெலிவரி கொடுப்பதைப் போன்றது. ஏவல் அல்லது செய்வினை சம்பந்தப்பட்டவர் மீது இறங்கிவிட்டதற்கு கையொப்பமோ, பெருவிரல் ரேகையோ, முத்திரையோ போதாது. உடனடியாக நடவடிக்கை மூலம் நிரூபணமாக வேண்டும்.

பனங்கருக்கன் பல்லாண்டாகக் கட்சியின் எடுபிடி, கூவல், மோதல், சாதல் தொண்டன்போல அலைபாய்ந்தான். மொட்டை அடிப்பானா? அலகு குத்துவானா? காவடி சுமப்பானா? மண்சோறு தின்பானா? சமாதி முன்பு வடக்கிருந்து உயிர் நீப்பானா? தீப்பாய்வானா?

பாலத்தடி மாடன், பனங்கருக்கனின் பரிதவிப்பை உணர்ந்து இரங்கினார்.

 p64b.jpg

“சரி... போய்ப் படு மக்கா! ராத்திரி மூணாஞ்சாமம் இறங்கியாச்சு! கண்ணடச்சாதானே காலம்பற உள்ள சோலிகளைப் பார்க்க முடியும்?”

பாலத்தடி மாடன் மெதுவாக நடந்துபோய், தனது பீடத்தில் ஏறி, முக்கோணக் கருங்கல் குற்றியில் நுழைந்து வழக்கமான யோக முத்திரையில் அமர்ந்தார். ஏவல் பனங்கருக்கன், ஆற்றங்கரையின் அரசமரத்துக் கிளை ஒன்றில் ஔவால்போல தலைகீழாகத் தொங்கிக் கண்ணயர முனைந்தது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றும், ஊழையும் உப்பக்கம் காண்பார் என்றும் தமது மூதாதையர் அடிக்கடிச் சொல்லக் கேட்ட ஏவல் கண் விழித்ததும், கடமையில் கவனம் குவித்தது. கானக்கோழிகள் கூவின; செம்போத்து பாய்ந்தது; கீரிப்பிள்ளைகள் புதர் மாறிப் புரண்டன; நீர்ப்பாம்பு நீந்த ஆரம்பித்தது; மறுபடியும் முயன்றுபார்ப்பது என்ற உறுதியுடன் புறப்பட்டது ஏவல். கவனித்துக்கொண்டிருந்த பாலத்தடி மாடன், ‘`Happy Valentines Day” என்றது, எதற்கு என்ன வாழ்த்து என்பதறியாமல்.

ராகு காலம், எமகண்டம், மேற்கில் சூலம் எல்லாம் பார்த்து, சுபயோக சுபமுகூர்த்த நல்லோரையில், துர்முகி ஆண்டு, பங்குனி மாதம், நிறைந்த அமாவாசை நாளில் புறப்பட்டது. ஒன்று... இன்று எப்படியும் ஏவலை இறக்கிவிடுவது. அல்லால், மந்திரவாதியின் ஆட்சி செல்லும் தட்டகம் தாண்டிய ஒரு பிரதேசத்தில், ‘தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு, பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடி, ஏழிரண்டு ஆண்டில்’ வரலாம் எனத் தீர்மானித்தது.

செய்வினை, ஏவல், மந்திரப்பூட்டு, வசியம் யாவற்றுக்கும் பவர் பதினான்கு ஆண்டுகள் என்பது உலக நீதி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது கற்றுத்தரும் பாடம். அதன் பிறகு, சின்ன தோதில் சிப்பந்தி வேலைகள் செய்து சீவித்திருக்கலாம். அல்லது ஐந்து ஆண்டுகளில் முந்நூறு கோடி தேற்றிவிட்டு தொலைக்காட்சி வாதங்களில் பங்கேற்கப் போகும் சுயேச்சை எம்.எல்.ஏ போல ஏவல் சேனல்களில் அமரலாம்.

ணல்வாரி அப்பனின் தோட்ட பங்களாவை அடைந்த பனங்கருக்கன், வாசல் கேட் அருகே நின்ற பன்னீர்மரத்தடியில் கண்மூடி சின்ன தோதில் பிரார்த்தனை ஒன்று செய்தான். நிதானமாகத் தோட்டத்தினுள் எட்டிப் பார்த்தான். கனகனைக் கண் வெட்டத்தில் எங்கும் காணோம். ஒருக்கால் காவல் பதவிக்காலம் முடிந்து, பதவிக்காலத்தில் கொய்த பணம்கொண்டு வாங்கிய கீழாநெல்லிப் பங்களாவில் ஓய்வில் இருக்கிறானோ என்னவோ?

நேரம் இரவு பத்தரை இருக்கும். `மானாட மயிலாட’ முடிந்திருக்கும். பகல் முழுக்க ஆன்மிகமும் அறமும் அரசியல் நேர்மையும் தமிழ் வளர்ச்சியும் பேசும் யோக்கிய சேனல்கள் பலவும் செக்ஸ் மாத்திரை விற்கும் நேரம். ‘ஒண்ணுபோதும் நிண்ணு பேசும்’ என விளம்பர வாசகங்கள் ஓடும் நேரம்.

அத்தா பெரிய பண்ணைவீட்டில் முன் முகப்பு விளக்கு மட்டும் எரிந்தது. முதல் மாடியில், கன்னி மூலையில் இருந்த அறையில் வெட்டம் தெரிந்தது. எந்த மூலையிலிருந்தும் எந்த நேரத்திலும் சாவுபோல கனகன் எதிர்ப்பட்டுவிடுவானோ என்ற அச்சத்தில், செய்வினை சுமந்து தோளசைய நடந்தான் கருக்கன்.

படுக்கை அறைதான். பள்ளியறை, சோபன அறை, உறக்க முறி, சயனக்கிரகம், பெட்ரூம் என எந்தச் சொல்லும் பயன்படுத்தலாம். கருக்கன் தனது சக்தியால் நிலத்தில் இருந்து எழும்பி அறையில் சாளரம் பக்கம் போய் நின்றான். கருக்கனின் அரூப உடலின் அரூபக் கண்கள் படுக்கை அறைக்குள் உற்றுப் பார்த்தன; ஒற்றுப் பார்த்தன. குளிமுறிக் கதவு திறந்தே இருந்தது. கனகன் படுக்கை அறையில் இருந்து குளியலறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தான். கவனித்துப் பார்த்ததில் கனகன் கையில், 18 ஆண்டுகள் பழைய ஜேக் டேனியல்ஸ் சிங்கிள் மால்ட் டென்னஸி விஸ்கி, ஒரு லிட்டர் குப்பி ஒன்று இருந்ததைக் கண்டான். குளிமுறிக்குள் நுழைந்தவன், இருபது லிட்டர் பிளாஸ்டிக் வாளியில் விஸ்கியைத் திறந்து ஊற்றினான். பக்கெட் ஏற்கெனவே அரைப்பாகம் விஸ்கியில் நிறைந்திருந்தது. மறுபடியும் வந்து ஒரு குப்பி எடுத்துக்கொண்டு போனான். ஏதோ அபிஷேகம், ஆராதனை நடக்குமாக இருக்கும் என்று எண்ணினான் கருக்கன். வாளி விளிம்பு வரை நுரை பொங்கி நின்றது. கண்ணைக் கவரும் இளங்கார் நிறம். எங்கும் பரவிய வாசம். ஒரு குப்பியின் விலை, இந்திய மதிப்பீட்டில் ரூபாய் 24,000. இருபது லிட்டர் வாளி. அடப் பாவிகளா, கிட்டத்தட்ட அஞ்சு லட்சம் ரூபாய் விலையுள்ள சரக்கு எவனுக்கு அம்மைக்கு ஆமக்கனுக்கு முதல்?

அவனவன் பொறுப்பான தமிழ்நாட்டுக் குடிமகன்கள், 98 ரூபாய்க்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் வாங்கிக் குடித்து, குடல் வெந்து, கிட்னி நொந்து, விந்து முந்தக் கிடக்கிறான். இதென்ன ராத்திரி நேரப் பூசை என்று வியந்தான். வேலைக்காரன், சமையல்காரன், தோட்டக்காரன், காவல்காரன், வாகனம் ஓட்டி என்று அனக்கம் காணோம். யாவரும் அறிதுயில் நீத்து ஆழ்ந்த துயில் மேவியிருப்பார் போலும்!

வாளி நிறைந்ததும் கனகன் ஒதுங்கி நின்றான். இன்னாள் மாமன்ற உறுப்பினர், ‘வாராயோ தோழி வாராயோ...’ என்ற பாணியில் சுந்தரஸ்ரீயைக் கைப்பிடித்து, இடுப்பு அணைத்து அழைத்து வந்தார். திக்குகளையே ஆடையாக உடுத்தி, வண்ணச் சீறடி மண்மகள் அறியாதபடி மிதந்து நடந்தாள். ‘வாரிய தென்னை வரு குரும்பை வாய்த்தன போல்’ திண்ணமாக இருந்தன முகடுகள். வ.ஐ.ச.ஜெயபாலன் எனும் ஈழத்துக் கவிஞரின் உவமையைக் கையாண்டால், ‘அபினி மலர் மொட்டுகள்’. இந்தக் கதாசிரியனுக்கு எழுபது நடக்கிறது என்பதால், இதற்கு மேல் வர்ணிப்பது பீடன்று.

சுந்தரஸ்ரீயை குளியறையில் கொண்டு நிறுத்திய மணல்வாரி அப்பன், வெள்ளித் தம்ளரில் சிங்கிள் மால்ட் விஸ்கியை மொண்டு, அவள் தோளில் இருந்து ஊற்றத் தொடங்கினான். கூச்சத்தில் நெளிந்த சுந்தரஸ்ரீ, வெட்கத்தில் சிணுங்கிச் சிரித்தாள். நாலைந்து தம்ளர், இடது தோள், வலது தோள், நெஞ்சு, குவடுகள், இடுப்பு, அடி வயிறு, தொடை எனக் கோரி ஊற்றியவன், தேளின் கடுப்புப் போன்ற நாட்பட்ட தேறலை, ஒரு சில இடங்களில் வாய் வைத்துப் பருகினான்.

கனகன், புத்தம்புது செந்தெங்கு இளநீர் பறித்து, இருபதுக்குக் குறையாமல் சீவி வைத்திருந்தான். ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க, மணல்வாரி அப்பன் அப்படியே சொரிந்தான். அவன் குலதெய்வமே வந்து இறங்கியதுபோல் சுந்தரஸ்ரீ முகம் பொலிந்திருந்தது. இளநீர் முடிந்ததும் வெளிநாட்டு கம்பெனி ஒன்றின் மினரல் வாட்டர். பன்னீர் அபிஷேகம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் ஊகத்துக்கு விடை விடப்படுகிறது. பிறகு, வெள்ளைப் பிச்சிப்பூ நிற தேங்காய்ப்பூத் துவாலையால் அவளுடம்பை நோகாமல் ஒற்றி எடுத்தான். கோயில் கருவறைகளில் அழகிய முலையம்மை, செப்பு முலையம்மை, பெரிய முலையம்மை, வாடா முலையம்மை, உண்ணா முலையம்மை என அபிசேகம் செய்து தீப ஆராதனை காட்டுவதுபோல, மணல்வாரியப்பன் தீபம் காட்டுவான் என பனங்கருக்கன் காத்திருந்தது நடக்கவில்லை. அவள் உடலை ஈரம் போகத் துடைத்து, பாதம், பாதத்து விரல்கள், விரலிடுக்குகள் எல்லாம் நீரொற்றி, கைப்பிடித்துப் போய் கட்டிலில் உட்காரவைத்தான். திகம்பரக் கோலம்.

இத்தனை அழகுணர்ச்சியும் கலாரசனையும் மலரினும்மெல்லிய காமத்தின் செவ்வி தலைப்படுதலும் அறிந்திருந்த மணல்வாரியப்பன் எங்ஙனம் அரசியல்காரன் ஆனான் என்று கருக்கனுக்கு வியப்பாக இருந்தது. வள்ளுவன் சொன்னபடி, காமம் நோயும் அல்ல பேயும் அல்ல என்ற குறைந்தபட்ச தெளிவு இருக்கிறதே!

கனகன் இரண்டடி விட்டமுள்ள வட்டமான வெள்ளித் தட்டத்தில் மாலை அலர்ந்த மதுரை முல்லைமலர் மொக்குகளைக் கூம்பாரமாகக் கொணர்ந்துவைத்தான். எப்படியும் ஐந்து கிலோ இருக்கும். முகூர்த்த நாள் என்பதால் தோவாளை பூச்சந்தையில் கிலோ 1,600 ரூபாய் என விற்றது.

சுந்தரஸ்ரீயிடம் மணல்வாரியப்பன் தனது குலதெய்வத்தைக் கண்டிருக்கலாம். அல்லது குலதெய்வம் எனக் கருதிய மற்ற எவரையோ கண்டிருக்கலாம். திருமூலர் சொன்னார், ‘மரத்தில் மறைந்தது மாமத யானை, மரத்தை மறைத்தது மாமத யானை’ என்று. அவனது குலதெய்வத்தை நம்மால் யூகிக்க இயலாது. எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

கனகன் பூக்குவியலை ஒதுக்கிக் கொடுக்க, பூக்கள் சின்ன குன்றுபோல் பொலிந்தன. பூச்சொரிவது எப்படி என்று, சமீபகால தொலைக்காட்சி சேனல்களில் மணல்வாரியப்பன் கண்டிருப்பான். கண்கள் ஏதோவோர் அனுபூதியிலும் கருக்கன் கடுப்புடனும் நின்றனர்.

காற்றில் டென்னஸி விஸ்கியின், இளநீரின், முல்லை மலர்களின், பஞ்சாமிர்த வாசனை. பனம்பழத்தின் தூர் ஒத்த மணல்வாரியப்பன் மார்பு மயிரிலும் பெருத்த வயிற்றிலும்கூட முல்லை மலர் உதிரிகள் தங்கிக் கிடந்தன எனில், சுந்தரஸ்ரீ தோற்றம் பாடக் கம்பன் வர வேண்டும்.

அப்பனின் கண்கள் போதை வயப்பட்டிருந்தன. வள்ளுவர் சொன்னார், `நினைத்தாலே ஏறுகிற போதை கள்ளுக்கு இல்லை, காமத்துக்கு உண்டு’ என. அரூபியான கனகனுக்கே சுவாசித்த போதை காற்றினால் கண்கள் சிவக்கத் தொடங்கியிருந்தன. காவலேயானாலும் கனகனும் ஓர் ஆண்தானே! காமத்தால் அவன் கண்களும் சிவந்து ஆவியுடல் தீப்பிடித்து எரிவதுபோலிருந்தது.

பனங்கருக்கன் நிலையோ சொல்லத் தரமன்று. வந்த வேலையை மறந்து, கையும் காலும் ஓடாமல் தெய்வச்சிலைபோல் நின்றான் பனங்கருக்கன். மனம் காட்சிகளில் படிந்து கிடந்தது.

கனகனைப் பார்த்துக் கடைக்கண் காட்டினான் மணல்வாரியப்பன். `வெளியே போய்க் காத்திரு...’ என அதற்குப் பொருள் போலும்.

மணல்வாரியப்பன் ஊட்டு எடுக்கத் தயாராகிறான் எனப் பலகாலம் காவல் தொழில் செய்யும் ஏவல் கனகன் அறிய மாட்டானா? கதவை நோக்கி நடந்தான். ‘இது தக்க தருணம் அம்மா’ என்ற கர்னாடக இசைக் கீர்த்தனை ஒன்று ஓடியது. பனங்கருக்கன் மனதில் கனகன் இல்லையால் கவலையும் இல்லை. எந்தக் கோணத்தில், உடலில் எந்தப் பாகத்தில் இறங்குவது என்று கருக்கன் யோசித்தான் வக்கிரமான சிந்தனை ஒன்றும் அவன் மனதில் குறுக்கு வெட்டியது.

பனங்கருக்கனின் சீர்த்த ராசியில் வேற்று மாந்த வாடைகள் வந்து உரசின. சுந்தரஸ்ரீ அம்மனின் நிர்மால்ய தரிசனம் காண தோட்டக்காரன், வேலைக்காரன், காவல்காரன், சமையல்காரன், வாகன ஓட்டி வந்து விட்டார்களோ என்று பாதி மூடியிருந்த அறைக்கதவை நோக்கினான். பாதி மூடியது என்றால் பாதி திறந்திருந்தது என்பதுதானே!

கனகன் காலாற சற்று நடந்து வரலாம் என்று போயிருப்பான். கருக்கனின் மூக்கு உணர்ந்த மனித வாடைக்குக் காரணம் இன்னாள் மாமன்ற உறுப்பினரின் வேலைக்காரர்கள் அல்ல என்பதைச் சுழன்ற கருக்கனின் கண்கள் கண்டன. முந்திக்கொண்டு, தோளில் ஏற்றிய படப்பிடிப்புக் கருவியுடன் ஒருவர் நின்றிருந்தார்; மற்றொருவர் கையில் பிடித்த ஒலி வாங்கியுடன். ஒலிவாங்கியில் அவர் வேலைபார்க்கும் சேனலின் பெயர் இருந்தது. அதைச் சொல்ல இந்தக் கதாசிரியனுக்குத் தைரியம் இல்லை. நாட்டில் பேய்போல் அலையும் இருபது, முப்பது சேனல்களில் ஏதேனும் ஒன்றின் பெயரை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.

நடப்பது என்ன என்று அனுமானிக்கப் பனங்கருக்கனுக்கு மேலும் சில கனங்கள் ஆயின. தோட்ட பங்களாவின் பணியாளர்கள் எவரேனும் துப்புக் கொடுத்திருக்கலாம். அல்லது அறத்தின் கையொன்று செயல்படலாம். கோணங்கள் மாற்றி மாற்றி, படப்பிடிப்புக் கருவி சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தது. மணல்வாரியப்பனும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாக ஆடை களைந்து திசைகளையே ஆடையாக அணிந்து நின்றிருந்தான். நெற்றியில் பட்டைவிபூதியும், அம்மன் குங்குமமும், கழுத்தில் 24 பவுன் வேங்கை நகச் சங்கிலியும், கையில் 16 பவுன் பிரேஸ்லெட்டும் மாத்திரமே உடம்பில் இருந்தன.

மந்திரவாதி மூலம் ஏகச் செலவுசெய்து பட்டைச்சாமி அனுப்பிய ஏவலான பனங்கருக்கன் செய்யவேண்டிய வேலையை, நிர்மூலத்தை, தொலைக்காட்சி சேனல் இன்னும் முப்பது நிமிடங்களில் செய்துவிடும். இனியென்ன வெட்டிவேலை என வெளியே இறங்கிக் காற்றில் கரைந்தது ஏவல். கனகனை எங்கும் காணோம். அவனும் வாழ்க்கை வெறுத்துப்போய் தலைமைச் செயலகம் திரும்பிவிட்டானோ என்னவோ? சேனல்காரர்கள் அத்துடன் முடித்துக் கொள்வார்களோ அல்லது காட்சி முடிவது வரை காத்திருப்பார்களோ என்பது பனங்கருக்கனின் அங்கலாய்ப்பு!

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.