Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரின் 'அபகரிப்பு' குறித்து குறைபாடு தெரிவிக்காத கிராமங்கள் எவையும் வடக்கில் இல்லை; முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை

Featured Replies

வடக்கின் எந்தவொரு கிராமத்துக்கு சென்றாலும் அங்கு படையினர் வீடுகளை, காணிகளை, கட்டிடங்களை அபகரித்து வைத்திருக்கின்றனர் என்று குறைபட்டுக்கொள்ளாத இடங்கள் இல்லை என்றும் இந்த நிலைமை குறித்து ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு எடுத்துக்கூறியும் உண்மை நிலை புரியவில்லையென தான் கருதுவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கவலை தெரிவித்திருக்கிறார்.


முசலி பிரதேச சபையின் சிலாபத்துறை பொதுநூலகத் திறப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;


முசலிப் பிரதேசசபையின் அலுவலக கட்டிடம் மற்றும் நூலகம் அமைந்துள்ள பிரதேசங்கள் தற்போது கடற்படையினரின் கைவசம் உள்ளதால் முசலிப் பிரதேசசபையின் அலுவல்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ADB நிதியில் ஒரு புதிய அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் இப் பிரதேசசபைக்கான நூலக கட்டிடம் ஒன்று இல்லை என்ற குறை பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் NELSIP திட்டத்தின் கீழ் 6.17 மில்லியன் ரூபா செலவில் இன்று இந்தக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


அரச படைகள் மூலம் எமது மக்கள் படுகின்ற இன்னல்கள் பற்றி நான் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கின்ற போது இங்கு நிலைகொண்டிருக்கும் படை அணியினருக்கு என்மீது கோபம் ஏற்படக்கூடும். எனினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடபகுதியின் முதற்குடிமகன் என்ற வகையில் இங்குள்ள மக்களின் மனக் குறைகள் பற்றி அரசுக்கு எடுத்துக்கூற வேண்டியது எனது கடமையாகும். 


வடபகுதியின் எந்தவொரு கிராமத்திற்குச் சென்றாலும் அங்கு படையினர் காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள், வீடுகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள், அலுவலக கட்டிடங்களை அபகரித்து வைத்திருக்கின்றார்கள், கடற்தொழில் புரியக்கூடிய கடற்பிரதேசங்களை கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள், விவ
சாய நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றார்கள் என்று குறைப்பட்டுக்கொள்ளாத கிராமங்களே இல்லை எனலாம்.

யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இப்பகுதிகள் மீளளிக்கப்படாமை எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. 
இவ் விடயம் பற்றி ஜனாதிபதி, பிரதம மந்திரி, மற்றும் பல மந்திரிமார்களுக்கும் எடுத்துக் கூறியும் அவர்களுக்கு அதன் உண்மை நிலை புரியவில்லை என்றே கருதுகின்றேன். படையினரின் வசமுள்ள காணிகள் அனைத்தும் அவர்களின் தேவைக்கு அவசியமானவை என்று அரசு நினைப்பதாகத் தெரிகின்றது.

ஆனால் வர்த்தக நோக்கங்களோடு  அவர்களால் விவசாயம் நடைபெறுகின்றது என்றால் கண்டு கொள்கின்றார்கள் இல்லை. பொதுமக்களால் எம்மண்ணில் வளர்க்கப்பட்ட தென்னைகளிலிருந்து கிடைக்கப்பெறும் தெங்கு உற்பத்திகளில் வர்த்தகம், பழ உற்பத்தியில் வர்த்தகம், கடல் உணவில் வர்த்தகம் என பல வர்த்தகங்களில் படைகள் ஈடுபட்டு வருவது அரசிற்கு தெரியாமலா இருக்கின்றது? அவர்களை வடக்கிற்கு அழைத்து வந்து ஒவ்வொரு கிராமங்களிலும் எவ்வளவு காணிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது என்பதை நேரடியாகக் காண்பித்தால் கூட படையினரை வாபஸ் பெறுவார்கள் என்பது சந்தேகமே. 


ஏனெனில் அரசியல்வாதிகள் இராணுவத்தினரையும் வேறு படையணியினரையும் இங்கு வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அல்ல. அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே. படையினரை வாபஸ் பெற்றால் எங்கே முன்னைய அரசாங்கத்தினர் அடுத்த தேர்தலில் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கும் வரையில் இவர்களை வெளியேற்றுவது சிரமமே.

ஆனால் நாம் தொடர்ந்து அவர்களை அகற்ற குரல் கொடுத்து வருவோம். இன்று மக்கள் விழித்துக் கொண்டுள்ளார்கள். ஜனநாயகம் என்ன என்பதைப் புரிந்து கொண்டுள்ளார்கள். வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு படையணியினரும் எங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று எம் மக்கள் கோஷமிடப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை! 


இது ஒரு புறம் இருக்க இந்த சிலாவத்துறைப் பகுதியில் இன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் எவ்வளவு தூரம் இப்பகுதி மக்களுக்கு உதவும் என்பது கேள்விக்குறியே. இளைய தலைமுறையினர் வாசிப்புப் பழக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில் கணினி, தொலைக்காட்சி, வானொலி, கையடக்கத் தொலைபேசி போன்ற இலத்திரனியல் உபகரணங்களுடனேயே தமது பொழுதைப் போக்குகின்றார்கள். நவீன கருவிகளைப் பயன்படுத்துதல் தவறென்று நான் கூறவில்லை. அவை இளைஞர், யுவதிகள் இடத்தில் ஏற்படுத்துகின்ற எதிர்மறையான தாக்கங்களை பார்க்கும் போது அவை எம்மை அச்சமடையச் செய்கின்றன. 


வாசிப்புப் பழக்கங்களை கைவிட்டதால் "ல' கர "ள' கர "ழ' கர வேறுபாடுகள் தெரியாது போய்விட்டது. தமில் என்கின்றார்கள். சில சினிமா நடிகர்கள்கூட அவ்வாறே உச்சரிப்பதால் தமிழ் தமிலாகவே வலம் வருகின்றது.

எமது மாணவ, மாணவியருக்கு ஒரு பந்தியை அறுத்துறுத்தி வாசிக்க முடியவில்லை. சொற்களுக்கு பொருள் புரியவில்லை. தூய்மையான தமிழை பேச முடியாது ஆங்கிலக் கலப்புடன் சேர்ந்த பேச்சுத் தமிழுக்கு பலர் மாறிவிட்டார்கள். இவ்வாறு பல தாக்கங்கள் இளைய தலைமுறையை ஆக்கிரமித்துள்ளன.


இவற்றில் இருந்து விடுபடுவதற்கு நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து மாணவ, மாணவியர் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்ய வேண்டும். எடுத்த எடுப்பிலேயே பெரிய நூல்களை வாசிக்கப் பொறுமையில்லாதவர்கள் சிறிய நூல்களை முதலில் வாசியுங்கள். காலப்போக்கில் உங்களை அறியாமலேயே பெரிய நூல்களை நாடிச் செல்லத் தொடங்கிவிடுவீர்கள். வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை முழுமையடையச் செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் மாணவர்களாக இருந்த போது எம்மைக் கொண்டு பல பந்திகளை வகுப்பில் உரக்க வாசிக்க வைப்பார்கள்.

ஏன் இந்தப் பகிரங்க வாசிப்பு நாமே நூல்களைப் படித்து விடலாமே என்று நாங்கள் எண்ணுவதுண்டு. ஆனால் அந்த நூல் வாசிப்பு பல நன்மைகளைக் கொண்டு வந்தன. எங்கள் உச்சரிப்பை ஆசிரியர்கள் திருத்தினார்கள். வாசிக்கும் மாணவனுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது. மற்றவர்கள் உரத்து வாசிக்கும் போது உடனே கேட்டுக் கொண்டிருக்கும் எம் மனதில் அவை படிந்து விடுவன. ஆகவே நூல் வாசிப்பு முக்கியமான ஒரு பயிற்சியாகும். 


சிலாவத்துறை பகுதியில் கற்றவர்கள் அதிகம் என்றும் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களும், புலவர்களும், அறிஞர்களும் வாழ்ந்த மண் இது என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட குழப்பங்கள் மக்களை திசை திருப்பியிருக்கலாம். முத்தரிப்புத்துறை, அல்லிராணிக்கோட்டை ஆகிய இடங்கள் எமது புராதன அடையாளங்கள். அல்லிராணிக்கோட்டை கடலரிப்பினால் மூழ்கக்கூடிய அபாயம் உள்ளதென தெரிவிக்கப்பட்டது.

இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் எமது வளங்களைச் சூறையாடிச் சென்றார்கள். இன்று எஞ்சிய சிறு பகுதிகளையும் எம்மவர்களே சூறையாடுகின்ற நிலை அவதரித்துள்ளது. எனினும் எமது வளங்களைப் பாதுகாக்க பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கூறியவாறு நாம் கூட்டாகப் பாடுபடவேண்டும் என்று கூறி வைக்கின்றேன். கல்வி தான் எம்மிடமிருந்து சூறையாடப்பட முடியாத சொத்து. ஆகவே எமது பிள்ளைகளைக் கல்வி அறிவுள்ளவர்களாக உருவாக்கப் பாடுபடுவோம். அதற்கு இந்த நூலகம் நற்றுணை புரியட்டும்.

http://www.thinakkural.lk/article.php?article/uw0ejqyupj3609649a066d418005ysfdl5bdda4ce2a7088292645e0ykuce#sthash.TVKcZABk.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.