Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் கண்

Featured Replies

நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன்  உணர்த்திய  கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு  உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது.

அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான  நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின்  நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும்  மெல்லிய குளிர் போல, எஞ்சிய நாட்கள் குறித்த அவஸ்தை உடலெங்கும் பரவி வளரத்தொடங்கியது.

எல்லைகள் நிர்ணயிக்கப்படாத   கண்காணிப்பு வளையமொன்றுக்குள் தன்னை அமிழ்த்தி வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டவன், அந்த வளையத்தை உடைப்பதற்காக  மோசமான வழிமுறைகளைக் கையாளத் தொடங்கினான். முதலில் அந்த நீலநிறக் கண்களை ஒரு  நீண்ட குத்தீட்டி கொண்டு குத்தினான்.  பின் கண்கள் இருந்த இடத்தில் இரண்டு சிவப்பு  கோளங்கள் பிதுங்கிக் கிடப்பதாகவும், அந்தப்  பிதுங்கிக்கிடக்கும்  சிவப்புக் கோளங்கள்  தகிக்கும் வெப்பத்தை உண்டாக்குவது போலவும் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். தனித்திருக்கும்போது பெருகும் இவ்வாறான நினைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, தன் குறியினைக் கசக்கியும்  மலவாசலில் விரல்களை நுழைத்தும்   வலிகளை உருவாக்குவதை  வழக்கப்படுத்திக் கொண்டான். பின்வந்த நாளொன்றில் நிலைக்கண்ணாடி ஒன்றின் முன்பாக நிர்வாணமாகத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டான்.

 

2)

 

நீலநிற விழியுடைய  அந்த மனிதன்,    ஃபாரில்  ஒதுக்கமாக இருக்கும் இடமொன்றினைத் தெரிவு செய்து  அமர்ந்துகொண்டான். தான்  வழமையாக அருந்தும் மென்மதுவினைத் தவிர்த்து அதிக போதை தரக்கூடிய மதுவினை வரவழைத்துக்கொண்டான்.  பரிஸியன் பத்திரிகையை  எடுத்துத் தன் நீலநிற விழிகளை அதன் மீது விழுத்தி நகர்த்தினான்.  ஒசாமா பின்லேடனின் மகன் இருபது வயதுகளில் இருக்கின்ற  ஹம்ஸா பின்லேடனைச் சர்வதேசத் தீவிரவாதியாக  அமெரிக்கா அறிவிருந்தமை பிரதான  செய்தியாக   வரையப்பட்டிருந்தது.  நீலக்கண்களில் ஹம்ஸாவினுடைய மெலிந்த உருவமும்,   கண்களில் வழிகின்ற முதிர்வின்மையும் அவனை உறுத்துவதாக  உணர்ந்து கொண்டான். பின்  தாளமுடியாத வெறுமையுடன்  பரிமாறுபவரை அழைத்து மீண்டும் மதுவினை வரவழைத்துக்கொண்டான். அது முதலில் அருந்திய மதுவாக இல்லாமலிருந்தது.

 

மழுங்கிய  ஒளிபட்டு தெறிக்கும் மேசையின் கண்ணாடியை  அழுத்தமாகத்  துடைத்து அதில் முகத்தினை உற்றுப் பார்த்தான். மெல்லிய நடுக்கமொன்றினை விழிகளில் உணர்ந்தவன் ஒரே தடவையில் மேசை  மீதிருந்த மதுவை அருந்தி முடித்தான். பின் வேகமாக வெளியேறி நீண்ட வீதியில் அசைந்துகொண்டிருக்கும் தொடர்புகளற்ற  சனத்திரளில் கலந்து தன்னைத் தொலைத்துவிட முழுதுமாக முயன்றான். அறிமுகமில்லாத   அந்தச் சனத்திரளின் தனியன்கள் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்ளும்போது எழுகின்ற மகிழ்வில் நீலநிற விழிகளில் இருந்த நடுக்கம் குறைவதை உணர்ந்துகொண்டான்.

எதுவுமற்றதான ஒருவித வெறுமை தன்னைச் சுற்றிக் கிடப்பதையும் கொண்டாட்டமான பழைய மனநிலைக்குத் திரும்ப முடியாதிருப்பதையும் உணர்ந்துகொண்ட போதில் உருவாக்கி வைத்திருந்த  பெருமிதம் சிதையத்தொடங்கியது.  ஏதேதோ வார்த்தைகளையெல்லாம் அவனையறியாமல் உதடுகள் உச்சரித்தன.  பாரிஸின் நெருக்கடி மிகுந்த அந்தத் தெருவில் அமைந்திருந்த  ஒரு நவீன குளிரூட்டப்பட்ட விற்பனை நிலையத்தில்  மூன்று யூரோவிற்கு ஒரு போத்தல் வைனை வாங்கினான். வெளியே வந்து ஒரு பாண் வேண்டுவதற்காக மிகுதிச் சில்லறையை எண்ணியபோது இருபது சதம் குறைந்திருந்தது. தன்னைச் சுற்றி மனதினை அலைவித்தான். வீதியின் ஓரங்களில் ஒருவர் இருவராக ஆங்காங்கு பெண்கள் கூடி நின்றனர். அவர்களின் உதடுகள் அசைந்து கொண்டிருந்தாலும் விழிகளாலும்  உடலாலும் அழைப்பு விடுத்துக்கொண்டிருப்பதை அவதானித்தவன், அந்த நிலத்தில் காறித்துப்பினான். தன் கன்னத்தில் அறைந்துகொண்டான்.  அலைகின்ற மனதினை கால்களுக்கு இறக்கிய போதில் அவன் நின்றிருந்த  இடம்  மெதுவாகப் பின்நோக்கி அசையத்தொடங்கியது.

உடல் அமைப்பையும், உடை பாவனைகளையும் வைத்து அவளை ஒரு   தென்னிந்திய  நாட்டவள் என்று உணர்ந்துகொண்ட அவன், நீல விழிகள் மின்ன அவளிடம் கையேந்தினான். சிவந்த உதடுகளை மென்மையாக அசைத்தான். அது அவளிடம்   இருபது சதம் தரும்படி  அதிர்வுகளை உருவாகியது.  அப்போது அவனது நீல விழிகளில் தெறித்த அதிகாரம் அவள் நிமிர்ந்து பார்த்த ஒவ்வொரு தலைகளிலும் ஒளிவளையம்போல மினுங்கியது. சரியாக எட்டு மாதங்களுக்கு முன்  பாரிஸின் சாள்ஸ் து கோல் விமான நிலையத்தில் தன்னை மணந்துகொண்டவனை எதிர்கொண்ட போதும் இதுபோன்ற ஒரு வளையத்தை உணர்ந்திருப்பதாகக் கண்டுகொண்டாள்.

3)

அவளது  போட்டோ கிடைத்த போது  எடுப்பான மார்பகங்களைத்தான் முதலில் கவனித்தான்.  பழுப்பு நிறமான அவளையே திருமணம் முடித்து ஃபிரான்சுக்கு அழைத்தும் கொண்டான். கர்ப்பிணியான  அவளை வேலைக்குச் செல்லும் படி ஆக்கினை செய்தான். அரசின் கொடுப்பனவுகளை நம்பியிருக்கும் அவனது வார்த்தைகளையும், செயல்களையும் புரிந்துகொள்ளச்  செய்துகொண்டிருக்கும் வேலை உதவியது. அவனை மட்டுமல்ல படாடோபமாக  இயங்குவதாக நம்பிக்கொண்டிருக்கும்  பாரிஸின் முகத்தினையும் அடையாளப்படுத்தியது.

பாடப்புத்தகத்தில் உலக அதிசயம் என வியந்து கற்று மூளைக்குள் ஏற்றிக்கொண்ட  ஈபிள் கோபுரம் இப்போதெல்லாம் இரும்புக்குவியல் போல் கிடந்தது. அந்தக் குவியலுக்குள் சிறை வைக்கப்பட்ட ஒரு சுதந்திரதேவியை நினைத்துப் பார்ப்பாள். அதனையே தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்வாள். தன் தலைக்குள்ளும் அதே போன்றதான  நரம்புக் குவியல் வெண் புழுக்கள் போல குவிந்திருப்பது  போலவும் அதிலிருந்து அன்பு ,பாசம் ,நேசம், குலப்பெருமை ,பண்பாடு எனப் பல கூக்குரல்கள் கேட்பதுபோலவும்,  அந்தக் குரல்கள்    சயனைட்வில்லை கட்டிய  கயிறுபோல  முறுகிக்  கிடப்பதாகவும்  தன்னுடன் வேலைசெய்யும் வியட்நாமிய நண்பிக்குத் தினமும் சொல்லுவாள். வியட்நாமிய நண்பி தான் அவளுக்குப்  பாரிஸிலிருக்கும் ஒரு உண்மையான நண்பி.

கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அவள் குறித்து ஒரு முறைப்பாட்டினை முதன்மையாளருக்குத்  தெரிவித்த நாளில், அவள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள். விசாரணைகளை நடத்திய தான் இப்படியானதொரு விசாரணைக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருந்ததில்லை என்று பின்னொருநாள் வியட்னாம் பெண், நண்பியாகிய பின்  சொல்லி இருந்தாள். அப்போது அவளின்  கண்களில் படர்ந்த ஒளி பிறகு எப்போதுமிருந்ததில்லை.  அந்த விசாரணையின் போது உதவி செய்தமைக்காக வியட்நாமிய நண்பிக்கு  நன்றி சொல்வாள். அப்படிச் சொல்லும் போதெல்லாம் வியட்நாமியப் பெண் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுவாள். பின் அந்த முத்தத்திற்காகவே அவள் அடிக்கடி நன்றி சொல்வதையும்  வழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள்.

தன்னைவிட இருபது வயது அதிகமான பிரெஞ்சு மனிதரைத்  திருமணம் செய்து இங்கு குடிவந்த அந்த வியட்நாமிய பெண், ஒவ்வொரு நாளையும் ஆனந்தமாகவே கொண்டாடுபவளாக காட்டிக்கொண்டாள். எப்போதாவது தன்னை மீறித் தன் கதைகளைச் சொல்லும் சில நாட்களில் கண் கலங்கி இருக்கிறாள்.தற்போது வரை, பாரிஸின் இருபதாவது வட்டாரத்தில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில்தான் தன் கணவருடன் வாழ்கிறாள்.  அவள் முதன்முதல் வியட்னாம் பெண்ணுடன் பேசியபோது தன்னைச் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர் என்று அறிமுகப்படுத்தினாள். உடனேயே அவளிடம் புத்தரின் நாடு தானே என்று குறுகிய கண்கள் விரியக் கேட்டாள். ‘ஓம்’ என்று தன்னையறியாமலேயே சொல்லியபின் ‘புத்தரின்  நாடு’ என்று மறுபடி சொல்லி மெதுவாகச் சிரித்துக்கொண்டாள்.

4)

தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க நூறு யூரோ பணமும், ஏதாவது ஒரு உணவுவிடுதியில் உணவும் வேண்டித்தந்தால் போதுமானது என்று, அறிமுகமாகி பத்தாவது நிமிடத்தில் எனக்குச் சொன்னவளை உற்றுப் பார்த்தேன். இருபத்தைந்துகளில் இருக்ககூடும். எங்காவது ஒரு கல்லூரியில் படிப்பவளாகவும் இருக்கக்கூடும். அன்று அவளின் தொலைபேசி இலக்கத்தை மட்டும் பெற்றுக்கொண்ட நான், அடுத்தநாள் இரவே அவளை அழைத்துக்கொண்டேன். இத்தாலியைச் சேர்ந்த அவள், வேலை செய்து படிக்கலாம் என்று இங்கு வந்ததாகவும் தற்சமயம் கல்வியை விட வேலைதான் முக்கியமாக இருப்பதாகவும் அந்த இரவில் கூறினாள். நூறு யூரோவை எண்ணி மேசையில் வைத்தேன்.

அவளது  அகன்ற தொடைகளில்  தலையினை  புதைத்துக்கொண்ட நான், நான் வேலை செய்யும்   ரெஸ்ரோரண்டில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக உறுதியளித்ததன் பின் அவள் உடல் கொஞ்சம் மென்மையானது. அவளது  சிறிய மார்பினில் முத்தமிட்டு முலையை வருடிய அந்தக் கணத்தில் என் இரண்டாவது வாழ்வு ஆரம்பமாகியது போல உணர்ந்தேன்.  அந்த நாளின் பின்  வாரத்தில் இரண்டு தடவைகளாவது அவளுடன் உணவருந்தவும் இரவைக் கழிக்கவும் ஆரம்பித்தேன். பின்னர் நான் வேலை செய்த அதே உணவகத்தில் அவளையும் வேலைக்குச் சேர்த்துவிட்டேன். அன்றிலிருந்து அவள் என்னிடம் பணத்தினை எதிர்பார்ப்பதில்லை. .

தாய், தனது தந்தையை விவாகரத்துச் செய்தபின் மணந்துகொண்டவன் தன்னுடன் படித்த நண்பன் என்றும்,  அவன் தன் தாயைவிட   இருபது  வயது இளையவன் என்றும், நேரகாலமின்றி  எந்த நேரமும்  இருவரும் ஒன்றாக  இருப்பதால்  தான் தாயிடமிருந்து பிரிந்து வந்துவிட்டதாகவும், ஆனாலும் தாயைத் தன்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றும் கூறினாள்.  இன்னும் தாய் மற்றும் தந்தையுடன்  தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை  எனக்கு அறிமுகம் செய்வதாகவும் கூறினாள்.  நான் எந்தத் தந்தை என்று கேட்கவில்லை.   என் குடும்ப விபரங்களைக் கேட்டாள். நான் ஒரு தனியன் என்றேன். அவளது வாயில் இருந்து வரும் சிகரெட் மணம் என்னைப் பலதடைகள் உச்சம் கொள்ள வைத்திருக்கிறது. புணர்ச்சியின் பின் அவள் தருகின்ற சூடான தேநீர் அற்புதமானது! இதை அவளிடம் பகிர்ந்துகொள்ளும் போது ... ‘நீ இலங்கைக்குப் போகும்போது என்னையும் அழைத்துச்செல்வாயா?’ என்று மட்டும் கேட்பாள்.

 

5)

அவனை நான் சந்தித்தது ஒரு எதிர்பாராத நேரத்தில்,  தமிழர்கள் மிக அதிகமாக  வந்துபோகும் லா சப்பலின் பிரதான  வீதியில் நின்றுகொண்டு  ‘டேய் நீங்கள்  எல்லாரும் கள்ளர். உங்கட பெண்டுகள் எல்லோரும் வேசிகள்’ என்று இடைவிடாது கூறிக்கொண்டிருந்தான். யாரும் அவனருகில் செல்லவில்லை எதிர்ப் புறமாகவிருந்த வீதியூடாக அவனைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தனர். அருகிலிருந்த ஒரு கடை உரிமையாளர்  வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டுவந்து அவன் மீது ஊற்றினார்.  ஒளி மழுங்கிய  அந்தவேளையில் பனி தூவத்தொடங்கி  இருந்தது. அவன் மீது ஊற்றிய தண்ணீர் அவனை நனைத்து கோடென ஓடிக் கடை உரிமையாளரின் காலடி வரை நீண்டு கண்ணீரைப் போல தழும்பு விழுத்தி உறைந்து போனது.

 

‘ஏன் தமிழர்கள் எல்லோரும் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று  அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை  தெரியவில்லை அல்லது தெரிந்து கொண்டும் தெரியாத மாதிரி இருக்கக் காட்டிக் கொண்டேன்.  அன்றிரவு அவளுடன் இருந்தபோது கேட்டாள்.  ‘அந்த மனிதரின் கண்களில் இருந்த நடுக்கத்தைப் பார்த்தாயா?’ என்று.

 

வியட்நாமிய பெண்  அவளது தொலைபேசிக்கு அழைத்த  நேரத்திலிருந்து அவள் மறுமுனையில் அழுது கொண்டே இருந்தாள். நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியபோது மட்டும் வேண்டாம் என்று  கூறினாள். தன் கணவரையும் அழைத்துக்கொண்டு அவளின் வீடு சென்றவளுக்கு அதன் பின் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கனவு போலவே  இருந்தது.

 

கணவரின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறைந்த வாடகைக்கு அவளைக் குடியேற்றும் வரை எதையுமே யோசிக்கவில்லை. வியட்நாமில் கூட இப்படியான கொடுமையைத் தான் கண்திடல்லை என்று அவளது முதுகைத் தடவியபடி அழுதாள். முதுகிலும் தொடைகளிலும் இருந்த  காயங்களைப் பார்த்த காவல்அதிகாரி அவளது கணவனைக் கைது செய்திருந்தனர். அவன் முதலில் எதையும் பேசவில்லை பின் மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான்  ‘இருந்து பார்! அந்த எளிய தோறையை எரிச்சுப்போட்டு நானும் சாவன்’.  

 

அவளை அந்தக் கடையில் பார்த்த மூன்றாவது தடவை    ‘‘என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?’’ என்று கேட்டேன். நிமிர்ந்து பார்த்தவள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றுவிட்டுத் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தாள். விரல்களின் ஊடாக கடந்த நடுக்கம் அவள் அடுக்கிக்கொண்டிருந்த பொருள்களில் விழுந்து வழிந்து அவள் நின்ற நிலத்தை நடுங்க வைப்பதாகக் கால்களால் உணர்ந்து கொண்டவள் மீண்டும் நிமிர்ந்து எனக்குக் கணவரும் இருக்கிறார். ‘தயவு செய்து பொறுப்பாளரிடம்  ஏதும் முறையிட்டுவிடாதீர்கள்!’ என்றாள். நீண்ட தலைமுடியும் பழுப்பு நிறமுடைய உடலும், உதடுகளின் ஒருங்கிய வளைவும் முதல்நாள்  இரவு பார்த்த நீலப்படத்தில் நடிக்கவைக்கப்பட லத்தீன்காரியை நினைவூட்டியது.

6)

பாரிஸின் அதிகபட்ச குளிர் நிலவிய நாளொன்றில் சனநெருக்கடி மிகுந்த அந்த வீதியில் சுருண்டு ஒடுங்கிப்  போர்வைக்குள் தன்னை அரைகுறையாக மூடிக்கொண்ட அந்த மனிதரை, நகர நிர்வாகப் பிரிவினர் காப்பகம் ஒன்றுக்கு அழைத்துச்சென்றனர். அம்மனிதரின் இரு விழிகளும் நீலநிறமாக இருந்தன.போர்வையும் உணவும் வழங்கி நீண்ட ஒரு மண்டபத்தினுள் அழைத்துச்சென்றார்கள்.  அந்நீலவிழி மனிதன் தனக்கு அருகில் இருந்தவனை  அருவருப்புடன் பார்த்தான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவனது கனவில்,  கொடிய மிருகம் தன்னைப் புணர முயற்சிப்பது போலவும் தான் நாயாக மாறி வாலை ஒடுங்கித் தன் குதத்தினைப் பாதுகாப்பது போலவும்  மெல்லிய பெருமூச்சுசுடன் மிகுந்த சுமையொன்று தன் மீதுவிழுந்து  அமிழ்த்துவது போலவும் கண்டான். சட்டென யாவும் மாறி வசந்தகால மரமொன்றின் சாம்பல்நிற இலைகளின் மறைவில் புணரும் அணில்களைக் கண்டான். அந்த மௌனத்தில் பாம்பு விடும் கொட்டாவியின் மணம் எழுந்தது.  விறைத்த குறியொன்று தும்பிக்கைபோல  நீண்டு வளர்ந்து வாயருகில் வருவதுபோல உணர்கையில் திடுக்கிட்டு எழுந்தவனுக்கு தன் முதுகோடு ஒட்டியபடி கிடந்த உடலையும் கன்னங்களுக்கு அருகில் நீலவிழிகளையும் கண்டான். அந்த மனிதனின்  தொடைகள் வரை இறக்கப்பட்டிருந்த  ஆடையையும்,  விறைத்த குறியைத் தன் மீது  திணிக்க முயன்று கொண்டிருப்பதையும் பார்த்தான்.

மறுநாள் அதிகாலையில் சிவந்து கிடந்த அந்த நீலவிழிகளைப் பார்த்தவன், அங்கிருந்து தப்பியோடி  லா சப்பலை வந்தடைந்தான்.  நெருங்கி வரும் நிழல்களைக் கண்டு அச்சமுற்று ஒதுங்கினான். எங்கிருந்தோ ஒரு கரம் வந்து ஆடைகளை உருவுவது போலவும், கண்களைப் பொத்தி விளையாடுவது போலவும் உணர்ந்தான். மூதாதையர் வழிபட்ட ஆதித்தெய்வமொன்று நிர்வாணமாகத் தன் முன் நிற்பதுபோலவும், வரமொன்று கேள் என்று  அருகில் வருவது போலவும் கண்டான். திடீரென அதுவொரு பேருந்தாக மாறி அவனருகில் நின்றது. பாய்ந்து சுவரோடு தோளை ஒட்டிக்கொண்டு எல்லோரையும் பேசத்தொடங்கினான்.

‘உன் வாழ்வைச் சிதைக்காதே!’ என்ற வியட்னாம் நண்பியின் முகத்தினைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். அவளின் கரங்களைத் தடவியபடியே அவளிடம், ‘உனக்குத்தெரியும் தானே எனது வாழ்வு எப்படிப்பட்டதென்று, ஆனாலும் நாமும் வாழத்தான் வேண்டும்!  எனது கணவன் கொஞ்சம் வயதானவனாக இருப்பதால் இப்போது துன்பமில்லை ஆனாலும் அவனும்  முதல் மனைவிக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல...’ என்று முடிக்க முடியாமல் தொடர்ந்தவளின் கரங்களை அழுத்தினாள்.

அந்த இரவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. எங்காவது அந்தப் பழுப்பு நிறத்தோல் தென்படுகிறதாவென நீலவிழிகளைத் தூர எறிந்து தேடினான். அவனது உடலில் இருந்து வந்த வியர்வை வாசம் அவன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் அந்தக் காப்பகத்தில் அவனால் தனித்திருக்க முடியாதென உணர்ந்துகொண்டான். அவர்கள் கொடுத்த பணத்துடன் அங்கிருந்து  வெளியேறி பழுப்பு நிறத்தோலுடைய அவனைத்தேடத் தொடங்கினான். இப்போதெல்லாம்  நெருக்கடி மிகுந்த அந்த வீதியில் அவனைக் கடக்கும் ஒவ்வொரு பழுப்பு நிறத் தோலுடையவர்களையும் உற்றுப்பார்த்துவிட்டு மௌனமாக ஒதுங்கித் தன்னுடலை வருடிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.

நான் அவளைத் தேடி அநேக நாட்கள்  அந்தக் கடைக்கு செல்லத்தொடங்கினேன்.  பின்னொருநாளில் அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டேன். பலி கொடுக்கப்பட்ட ஒரு ஆட்டின் கண்களை ஒத்திருந்தன அவளது கண்கள். பரந்த முதுகும் ஒடுங்கிப்பின் அகன்ற பின்புறங்களும் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தன. சிலநாட்களில் அவள் தொலைபேசி இலக்கத்தைத் தந்துவிடவும் கூடும்.

அவளது அறைக்குள் நுழைந்தபோதே “யார் வந்திருந்தார்கள்  என்று கேட்டேன்.” மனம் ஒரு ஆண்வாடையை  அந்த அறையில் தேடி முகர்ந்து தோற்றுக் கொண்டிருந்தது. முகம் தெரியாதவொரு  ஆணுரு கதிரையில் மேசையில் கட்டிலில் என நான் அவளைப் புணர்ந்த இடங்களிலெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருந்தது.  பதில்  சொல்லாமல் சிரித்துக்கொண்டே "இன்று உனக்கு பிறந்தநாள் அல்லவா வாழ்த்துக்கள் செல்லம்". என்றபடி உதடுகளில் முத்தமிட வந்தவளை விலக்கினேன். கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அவள் கைகளில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய கண்ணாடிக் குமிழ் கட்டிலருகில் விழுந்து சிதறியது.

திகைத்து நிமிர்ந்தவள் ‘போடா நாயே வெளியே’ என்று கத்தினாள். பொலீசுக்கு அடிக்க முதல் இங்கிருந்துபோய் விடு என்று எச்சரித்தாள். கட்டிலருகில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துகள்களை பார்த்தபடி  வெளியேறினேன். கதவை அறைந்து பூட்டினாள். திரும்பிக் கதவை எட்டி உதைந்துவிட்டு மிக வேகமாக இறங்கினேன்.  இறுதிப்படிகளை அண்மித்தபோது, எதிரில் இருந்த  சுவரில் யாரோ எப்பவோ  வரைந்திருந்த கண்களாலான குறியின் படம் என்னை நோக்கியிருந்தது.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பற்றுக்கோடின்றி வாழும் நபர்களின் அவல வாழ்க்கையை இயல்பாக சொல்லிக் கொண்டு நகர்கின்றது கதை......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.