Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“'மெஷின்கன்னால் சுட்டுவிடும் எண்ணம் வந்தால் அரசியலுக்கு வந்துவிடுவேன்!" கமல் மனசு என்ன சொல்லுது?

Featured Replies

“'மெஷின்கன்னால் சுட்டுவிடும் எண்ணம் வந்தால் அரசியலுக்கு வந்துவிடுவேன்!" கமல் மனசு என்ன சொல்லுது?

 

கமலஹனாசன்

மலஹாசனின் தசாவதாரம் துவங்கிவிட்டது என்றே சொல்கிறார்கள். அரசியல் பற்றி அப்படியும் இப்படியும் குழப்பிக்கொண்டிருந்தவர் அப்போது ஊழல் என்ற வார்த்தையை அதிகார வர்க்கத்தை நோக்கி வீசி அதிர்ச்சி அலைகளை படரவிட்டிருக்கிறார். முளையிலேயே கிள்ளி எறிய நினைத்து ஆளும்கட்சியினர் லேசாக பயமுறுத்தப் பார்த்தால் அது விபரீதத்தில் கொண்டு போய்விட்டது. பேச்சிலிருந்து அறிக்கைக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் கமலஹாசன் . 

கமல் அரசியலுக்கு வருவாரா என மக்களும் ஊடகங்களும் ஆருடம் பார்த்துக்கொண்டிருக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக தனது அறிக்கையில் தகவல் சொல்லியிருக்கிறார். 

உண்மையில் கமல் ஒரு சினிமாக்கலைஞர் என்றாலும் அரசியல்வாதிகளையும் அரசியலையும் ஒட்டியே அவரது சினிமாப் பயணம் இருந்திருக்கிறது. 60 களில் அவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் மிளிர்ந்தபோது அண்ணாவின் ஆகச் சிறந்த தம்பியாக எம்.ஜி.ஆரும் காமராஜரின் தளபதியாக  சிவாஜிகணேசனும், இரண்டு பெரிய கட்சிகளின் பிரசார பீரங்கிகளாக அரசியல் மேடைகளையும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். இந்த இருபெரும் அரசியல்வாதிகளுடனும்  நெருங்கியிருந்த கமலுக்கு அரசியல் எண்ணம் இயல்பாகவே இருந்திருக்கவேண்டும். 60களில் தமிழகத்தில் இந்திஎதிர்ப்பு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலகட்டத்தில் தன்னெழுச்சியாக அந்த போராட்டங்களில் திரண்டுவந்தவர்கள்தான் பின்னாளில் அரசியல் களத்தில் முன்னணி வீரர்களாகி நின்றனர். அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு அரசியல் களத்தை இட்டுநிரப்பியவர்கள் அந்த இளைஞர்கள்தான். 

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அமைப்பின் முடிவை கேள்விக்குள்ளாக்கும் அல்லது அந்த முடிவுக்கு பேச்சு செயல் அறிக்கை  என எந்த வடிவில் எதிர்வினை ஆற்றினாலும் அது அரசியல்தான். 

கமலின் அறிக்கையின்படி பார்த்தால் கமலின் அரசியலுக்கு வயது 50. இது சற்று மிகையானதாக இருந்தாலும் அரசியல் என்பதற்கான அர்த்தம் புரிந்தால் இதை நம்பியே ஆகவேண்டும். 80 களில் துவங்கி நேற்றைய அறிக்கை வரை கமல் அரசியல் குறித்த ஊடகங்களின் கேள்விகளை சங்கடங்களின்றி கடந்தே வந்திருக்கிறார். கதாநாயகனாக அவர் திரையுலகில் கோலோச்சிய 80 களில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் அரசியல் களத்தை அதிரவைத்துக்கொண்டிருந்தவர்கள். கலைஞர் குழுமத்தின் குங்குமத்தில் தொடர் கட்டுரை எழுதிக்கொண்டே, எம்.ஜி.ஆரை தன் நுாறாவது படத்தின் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்க முடிந்தது அவரால். எதிரும் புதிருமாக இருப்பது, அரசியல் களத்தில் ஏதாவது ஒரு இயக்கத்தில் சார்பு நிலை எடுப்பது என்ற நடப்பு அரசியலில் இருந்து மாறுபட்ட கமலின் இந்த அரசியல் அன்றுமுதல் இன்றுவரை தெளிவானது. 

கமலஹாசன்தன் நுாறாவது பட விழாவுக்கு எம்.ஜி.ஆரை அழைத்ததற்காக கருணாநிதி கட்டம் கட்டிவிடவில்லை. கருணாநிதியின் ஆதரவுக்கருத்துக்களுக்காக எம்.ஜி.ஆர் கஞ்சா வழக்கு போட்டுவிடவில்லை. ஆரோக்கியமான இந்த அரசியலைப் பார்த்துவளர்ந்தவர் கமலஹாசன். அதுவும் கூட கமலுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ஓஹோவென கடையில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கும்போது கடையை சாத்திவிட்டுக் கிளம்ப எந்த மனிதனுக்கு தோன்றும்?.... கமல் வெற்றிகரமான கதாநாயகனாக இருந்தவரை அவர் அரசியல் களத்திற்கு வரும் முடிவை எடுத்ததில்லை. 

அதேசமயம் அவர் படங்கள் அரசியலைப் பேசின. அவரது பேட்டிகள் தாராளமாக அரசியல் கேள்விகளை எதிர்கொண்டன. பதில் எத்தனை மழுப்பலானதாக இருந்தாலும் தனக்குத் தோன்றியதை அவர் பட்டவர்த்தனமாக அந்த பேட்டிகளில் தெரிவிப்பார். ஆனால் களத்தில் ஒரு அமைப்பாக அவர் திரண்டுநிற்க விரும்பியதில்லை அப்போது. நடிகரும் கமலின் ஆரம்ப கால நண்பருமான எஸ்வி. சேகர் ஒருமுறை தெரிவித்ததுபோல், கமலுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா இல்லையா என்பதைவிட  அவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று சாதித்தவர்களுடனேயே பழகியவர். அவரது திரையுலகின் சமகாலத்தில் அந்த ஜாம்பவான்கள் அரசியலில்
கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். இதுவும் கூட அவர் அரசியல் களத்தில் ஒதுங்கியிருந்து கவனிக்க காரணமாகியிருக்கலாம். தான் பெரிதும் மதிக்கும் தலைவர்களை சங்கடத்துக்குள்ளாக்காமல் இருக்க விரும்பியிருக்கலாம் அல்லது தான் கருத்து சொல்லும் அளவு விஷயம் எதுவும் விபரீதமாகிக்கிடக்கவில்லை என அவர் கருதியிருக்கலாம். 

ஆனாலும் இந்த காலகட்டத்தில்தான் அவர் தன் நிலைப்பாடுகள் சிலவற்றை ஆணித்தரமான சமூகத்தின் முன்வைத்தார்.  80 களில் தன் பிள்ளைகளின் பள்ளிப்பதிவேட்டில் சாதி இல்லை என்று குறிப்பிட்டதால் அவர் இருவேறு பள்ளிகளை மாற்றவேண்டியதானது. ஒரு வணிக சினிமாவில் இருந்தபடி அதை செயல்படுத்த முனைந்த அவரது துணிச்சல் ஆச்சர்யமானது. சாதி ஒழிப்புக்கொள்கை என்பது பெரியாரின் தீவிரமான கொள்கை என்பதையும் கமல் சார்ந்த சமூகத்தையும் இங்கே ஒப்பிட்டுப்பார்த்தால் கமலின் அரசியல் எத்தனை தீவிரமானது என்பது புலப்படும். மிகையாக தெரிந்தாலும், அது பாரதியோடு எடுத்த நிலைப்பாடு. 

கமல் கடைபிடித்த கடவுள் மறுப்பு கொள்கையும் பெரியாரின் கொள்கைளில் ஒன்று. “கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன்” என ஒரு படத்தில் அவர் வெளியிட்ட கருத்து, பெரியாரின் கரடுமுரடான நாத்திகப் பிரசாரத்திற்கு நேர் எதிரான தேன் தடவிய பாகற்காய் போன்றதொரு பிரசாரம். பக்கம் பக்கமாய் எழுதி வெளியிட்டாலும் புரியவைக்க முடியாத நாத்திகத்துக்கு திருக்குறள் போன்றதொரு சுருக்கமான வாசகம் அது.  

மருதநாயகம் படத்திற்கு அவர் சிறப்பு விருந்தினராக அழைத்து தன் சினிமா குரு சிவாஜியை அல்ல; இங்கிலாந்து ராணியை. அவ்வை சண்முகி வேடத்தைப்போட்டுக்கொண்டு நேரே போய்நின்ற இடம் முதல்வர் கருணாநிதியின் இல்லம். இப்படி அவரது விருப்பங்கள் எப்போதும் அரசியலையே சூழ்ந்திருந்தது.

கமலஹாசன்

தன் அளவில் நிறுத்திக்கொண்ட அரசியலை அவர் பொதுவெளியில் பேச நேர்ந்தது, விஸ்வரூபம் படத்தின்போது. அரசு இயந்திரமும்  சில அமைப்புகளும் வரிந்துகட்டி அந்த படத்திற்கு காட்டிய எதிர்ப்பு, அவரை சீற்றம் கொள்ளவைத்தது. காட்டமான பேட்டிகளால் தமிழக அரசை கோபப்படுத்தினார். தன் எல்லா சொத்துக்களையும் ஈடாக வைத்து தான் தயாரித்த படத்தின் வெற்றியில் அவர்கள் விளையாடியதற்கான கோபம் இல்லை அது; பொறுப்பற்ற ஒரு கலைஞனாக தன்னை  சித்தரித்ததால் எழுந்தது அது! 
|
எம்.ஜி.ஆர் கருணாநிதி போல் ஜெயலலிதாவுடன் கமலுக்கு அதிகம் நெருக்கமில்லை. நடன இயக்குனர் தங்கப்பன் மாஸ்டரின் உதவியாளர் என்ற முறையில் 70 களில் சில படங்களுக்கு ஜெயலலிதாவுக்கு நடனம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் கமலஹாசன். ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கிடையேயான மோதல் 80 களின் மத்தியில் உருவானது. கமலின் நுாறாவது பட விழாவுக்கு எம்.ஜி.ஆர் போகக்கூடாது என எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா 3 பக்க கடிதம் எழுதும் அளவு அந்த மோதல் இருந்தது.  பின்னாளில் ஜெயலலிதா முதல்வரானபின் நாகரீகம் கருதி இருவரும் நட்பு பாராட்டிக்கொண்டிருந்தனர்.  

ஆனாலும் 'விஸ்வரூபத்தில்' இது விஸ்வரூபம் எடுத்தது. படம் வெளியானபின்னரும் கோபம் அடங்காத கமல் முன் எப்போதும் இல்லாதபடி நேரிடையாக தன் கருத்துக்களை பொதுவெளியில் முன்வைத்தார். சென்னை வெள்ளத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்து ஜெயலலிதாவுக்கு சங்கடம் தந்தார்.

ஜெயலலிதாவின் காலத்திற்குப்பின்னும் ஜல்லிக்கட்டு, சசிகலா சிறைத்தண்டனை, ஸ்திரமற்ற தமிழகத்தின் சூழல் இவற்றை சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

கமலஹாசன்

விஸ்வரூபத்தில் துவங்கிய கமலஹாசனின் அரசியல் போர் இப்போது இன்னொரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில் வந்து முடிந்திருக்கிறது. தன் நெருங்கிய சகாக்கள் ஆடிமுடித்துவிட்டு அரசியல் களம் களை இழந்திருக்கிற இந்த நேரத்தில் கமலுக்கு அரசியல் ஆசை வந்திருக்கவில்லை; ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்கான தருணம் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 
தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக அவர் வெளியிட்ட ஒற்றை கருத்தால் பொறிகலங்கிக்கிடக்கிறது ஆளும்கட்சி. 'ஊழலை' சகித்துக்கொள்ள முடியாமல் அமைச்சர்களும் அவர்தம் கட்சியினரும் வார்த்தைகளில் வறுத்தெடுக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தபோது இது அரசியல் மேடை என கமலுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது, ஆனால் அவர் ஒரு ஆளே இல்லை என்று சொன்னபோது துரதிர்ஸ்டவசமாக அமைச்சர் பெருமக்களுக்கு 'கல்யாணராமன்' கமல்தான் நினைவில் வந்திருக்கிறார். இல்லையென்றால் அத்தனை துச்சமாக அப்படி பேசியிருக்கமாட்டார்கள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்ததுபோல் இப்போது கமலிடம் இருந்து கடிதத்தை பெற்றிருக்கிறார்கள் அமைச்சர்கள். 

நக்கல், நையாண்டி , எகத்தாளம் முத்தாய்ப்பாக தன்னை முதல்வர் என விளித்து அந்த அறிக்கையை எழுதியிருக்கும் கமலஹாசன், பிரச்னையை அத்துடன் முடிக்கவில்லை. ஊழலுக்கு என்னிடம் ஆதாரம் கேட்டீர்களே பாதிக்கப்பட்ட மக்களே அதை சொல்வார்கள் என அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகளை தந்திருக்கிறார் அதில். 

தட்டிக்கேட்க ஆளில்லாத தண்டப்பிரசன்டன் போல் கமலுக்கு இன்னும் சில தினங்களுக்கு எதிர்வினையாற்றப்போகிறார்கள் அமைச்சர்கள். அரசியலில் அடுத்த தலைமுறைக்கான ஆட்டம் இப்படித்தான் துவங்கப்போகிறது.  

பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடனுக்கு கமலஹாசன் மிக நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். தன் வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பகிர்ந்துகொண்ட அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்...

“பொதுவாகவே நீங்க ரொம்ப கால்குலேட்டிவ், எதையும் குள்ளநரித் தனத்தோட செய்யற Opportunist-ன்னு சினிமா ஃபீல்டிலே ஒரு பெயர் உண்டே...?”     

    “அப்படிப் பார்த்தால் யார் சந்தர்ப்பவாதி இல்லை? பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நான், நீங்கள்... யார்தான் ஒவ்வொரு விதத்தில் சந்தர்ப்பவாதி இல்லை? எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி அடைய, பிரச்னைகளைச் சமாளிக்க யோசனை செய்கிறார்கள்... திட்டம் போடுகிறார்கள்... நான் சற்று அதிகமாக யோசிப்பேன்... திட்டமிடுவேன்... சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பேன்... அது குள்ளநரித்தனமா? எனக்குக் குள்ளநரித்தனமிருந்தா, 1986-ல் பணச்சிக்கல் வந்திருக்காது. இன்னிக்கும்கூட வருமானம் தரக்கூடிய சொத்துக்களோ, வருமானமோ எனக்குக் கிடையாது. வீடு கூட இப்பதான் கட்டி முடிச்சேன். என் பர்சனல் லைஃப்ல எனக்குச் சிக்கல் வந்தப்ப எனக்கு நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னே தெரியலை. In Fact ஒருத்தர்கிட்ட நான் போன் பண்ணியே கேட்டேன். ‘ப்ளீஸ்... நீங்க எனக்கு ஃப்ரெண்டா, எதிரியான்னு சொல்லிடுங்க. நண்பனா இருந்தா மன்னிச்சுடறேன். எதிரியா இருந்தா என்னை நான் பாதுகாத்துப்பேன்’னு வெளிப்படையாவே கேட்டேன்!”

“உங்க ஆரம்ப நாட்கள்ல, உங்களுக்கு ஒரு ‘ப்ளே பாய்’ இமேஜ் இருந்தது. உங்களுடைய பேட்டிகளும் பகிரங்கமா இருக்கும். இதெல்லாம் திட்டமிட்டு நீங்களே ஏற்படுத்திக்கிட்ட 'இமேஜ்'தானே?”

    “அதைக்கூட 'திட்டமிட்டு'ன்னு சொல்ல மாட்டேன். ஒருவித காம்ப்ளெக்ஸ்ல பண்ணினதுன்னுகூடச் சொல்லலாம். அப்ப நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். என்னுடைய நடன அரங்கேற்றம் ஆர்.ஆர். சபாவில நடந்தது. விழாவுக்கு டி.கே. சண்முகம் வந்திருந்தார். அவர் பேசும்போது ‘ஆண், நாட்டியம் கத்துக்கும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். பெண்மைக்குண்டான நளினம் உடம்பில தங்கிடற வாய்ப்புண்டு’ன்னு சொன்னார். நான் சினிமாவில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்போ, டான்ஸ் தெரியும்கிறதனால ‘பொட்டை’ மாதிரி இருக்கான்னு சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காக, பெரிய மீசை, நிறைய தலைமுடி வெச்சுக்கிட்டேன். நிறைய பெண்களோடு தொடர்பு இருக்கிற மாதிரி நானே நிறைய சத்தம் போட்டேன். என்னுடைய அபரிமிதமான கற்பனைக்கு நானே நிஜ உருவம் கொடுக்க ஆரம்பிச்சேன். நான் ஏற்படுத்திக்கிட்ட ‘காஸனோவா’ இமேஜ்படி பார்த்தா, நான் தாசி வீடே கதின்னு இருந்திருக்கணும். ஆனால், இதுவரை அந்த மாதிரி போனதில்லை. நானும் எல்லாவித சலனங்களுக்கும் உட்பட்ட, தவறுகள் செய்த சராசரி மனிதன்தான். என் நண்பர் ஒருவர்கூட எங்கிட்ட கேட்டார். ‘கமல், உங்களுக்கு செக்ஸுங்கிறது பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டிபன், டின்னர் மாதிரிதானே?’ன்னார். நடக்கிற காரியமா இது? 

கமலஹாசன்

“இன்னமும் நீங்க, நாத்திகர்தானா?”

“கோயிலை இடிக்கணும்னு சொல்ற நாஸ்திகனுமில்லே... எல்லாத்துக்கும் கடவுளை இழுக்கிற ஆஸ்திகனுமில்லே. என்னால பக்தி விஷயத்துல உடன்பட முடியலே. அதுக்காக மத்தவங்க சென்டிமெண்ட்ஸ்ல நான் தலையிடறதும் இல்லே...”

 “உங்க குழந்தையுடைய பர்த் சர்டிபிகேட்ல மதம்கிற இடத்தில ‘Nil’னு போட்டதாகச் சொல்லியிருந்த ஞாபகம்...”

“ஆமாம்! நான் இந்தியன். அவ்வளவுதான். I don't believe in religion. என் இரண்டாவது மகளுக்கும் அப்படித்தான். எந்தக் காலகட்டத்திலேயும் என் குழந்தைகள் இந்த மதம்தான்னு சொல்லி குறுக்க மாட்டேன்.”

“நீங்கள் நிறைய படிக்கிறீர்கள்... ஆகவே இந்தக் கேள்வி... யாருமில்லாத தீவில் ஒரு மாதம் கழிக்க வேண்டுமென்றால், உங்களுடன் என்ன புத்தகங்கள் எடுத்துச் செல்வீர்கள்?”

    “மார்க்ஸின் Das Kapital புத்தகம் வாங்கிப் பல வருஷங்கள் ஆகின்றன. தீவிலேயாவது படிக்கலாமென்று எடுத்துச் செல்வேன்.
  
 ரசிகர் மன்றங்கள் பற்றிப் பேச்சு திரும்பியது. 

    “இப்போது என் பெயரில் ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவை நற்பணி இயக்கங்கள்தான். 1973-லிருந்து 1980 வரை நானும் ரசிகர் மன்றங்கள் இல்லாமத்தான் இருந்தேன். ஆனால், நாம வேண்டாம்னாலும் என் ரசிகர்கள் ரிலீஸ் அன்னிக்கு தியேட்டர் வாசல்ல போய், தோரணங்கள் கட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அவன் சொந்தக் காசைப் போட்டு தியேட்டர்ல கொடி கட்டப் போகும்போது, மற்ற நடிகர்களுடைய மன்றங்களோட மோதல்! நாம அவங்களை அங்கீகரிக்காட்டாலும் கமல் ரசிகர்கள் கலாட்டான்னுதான் பெயர் வரும். அதை ஒழுங்குபடுத்தத்தான் ரசிகர் மன்றங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்களோட நெருங்கிப் பழக ஆரம்பிச்சேன். எவ்வளவு Man power வேஸ்டா போகுதுன்னு உணர முடிஞ்சுது. ஆனால், அந்த மன்றங்களும் முதல் நாள் டிக்கெட் பிளாக்ல விக்கற அளவுக்குத்தான் இருந்தது. மேலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல, அதுக்குத் தலைமை தாங்கறவங்க அதை ‘மிஸ்யூஸ்’ பண்ண ஆரம்பிச்சாங்க. என்னையே பிளாக் மெயில் பண்ற அளவுக்கு வளர்ந்தது. ‘நாங்க கைதட்டி, விசில் அடிக்கலைன்னா உங்க படம் ஓடிடுமா?’ன்னு என்னையே கேக்க ஆரம்பிச்சாங்க. அப்படிப் பார்த்தா என்னுடைய எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்டாயிருக்கணுமே! இந்த பிளாக்மெயிலுக்கெல்லாம் பணியக்கூடாதுன்னு மன்றங்களைக் கலைச்சேன்.

அதே சமயம், அந்த இளைஞர்களுடைய பலத்தைச் சரியா பயன்படுத்த நினைச்சேன். நானே தலைமை ஏற்று, நற்பணி இயக்கங்கள் ஆரம்பிச்சேன். இதுக்கு சினிமா கலர் மட்டும் இருக்கக்கூடாதுன்னு பல அறிஞர்களை எங்கள் விழாவுக்குக் கூப்பிட ஆரம்பிச்சோம். முதல்ல சினிமா ரசிகர்கள் கூட்டம்னா வர்றத்துக்கே தயக்கம் காட்ட ஆரம்பிச்சவங்க, இப்ப எங்களுடைய பணிகளைப் பாத்து புரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சிருக்காங்க. ரத்த தானம், கண் தானமெல்லாம் பண்றோம். இதுவரைக்கும் பதினைந்தாயிரம் பேர் கண்தானம் பண்ணியிருக்காங்க. அதேமாதிரி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலேயும் லைப்ரரி ஆரம்பிக்கப் போறோம்.”

கமலஹாசன்

 

“நீங்கள் செயல்படுத்தும் விதம் ஆக்கப்பூர்வமா இருக்கலாம். ஆனால், ரசிகர் மன்றங்கள் ஆரோக்கியமான விஷயமா?”

“தமிழ்நாட்டுல அது தவிர்க்க முடியாத விஷயமாயிட்டுது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேருந்து இது தொடருது. அதுவும் இதன் மூலமா எம்.ஜி.ஆர். முதலமைச்சராவே ஆயிட்டார். அதனால ஒவ்வொரு நடிகருக்கும் இந்த மன்றங்கள் கூட்டத்தைப் பார்த்தவுடனே, உள்ளுக்குள்ளே நாமும் கோட்டையில போய் உட்கார மாட்டோமான்னு ஒரு ஆசை இருக்கு! கூட்டத்துக்குப் போனா ‘வருங்கால முதல்வரே’ன்னாங்க. 'தலைவரே'ன்னாங்க. அதெல்லாம் பார்த்தபோது, எனக்கேகூட ஆரம்பத்துல ஒரு ஒண்ணரை மாசம் அந்த மயக்கம் இருந்தது உண்மை! அதை எளிதில் தவிர்க்க முடியாது...”

“அப்ப எதிர்காலத்துல இந்த ரசிகர் மன்றங்களுடைய நிலைமை?”

“அதுக்கு முதல்ல, நடிகர்களைப் பார்த்து ‘தலைவா’ன்னு சொல்றது போகணும். இந்த ‘தலைவா’ கலாசாரம் அரசியல்லேருந்து வந்தது. எம்.ஜி.ஆரை, சிவாஜியை அப்படிச் சொன்னதுக்குக் காரணம் - அவங்களுக்குப் பலத்த அரசியல் பின்னணி இருந்தது. சிவாஜி சார் தி.மு.க-வுக்கு நிதி சேர்க்கத் தெரு முனையில நின்னு ‘பராசக்தி’ வசனம் பேசினாரு. அப்புறம் பகுத்தறிவோட உடன்படாம ஒதுங்கி, திருப்பதிக்குப் போயிட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் தீவிரக் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தாரு. அவங்களை மாதிரியே நாமும் என்று நினைச்சுக்கிட்டிருக்கற Myth போகணும்...”
 
“இந்த இளைஞர் சக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் அரசியலில் இறங்கலாமே?”

    “நிச்சயமா என்னால முடியாது. ‘அரசியலுக்குப் போனா நான் கொலைகாரனா ஆயிடுவேன்'னு ரஜினி சொன்னது ரொம்பவும் உண்மை. அவர் சொன்னதுக்குக் காரணம், அவர் Temperament! எனக்கும் அதே மனநிலைதான். இறங்கினா ‘மெஷின் கன்’னை எடுத்துக்கிட்டுப் போய், எல்லாரையும் சுடற எண்ணம் வந்தா ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம்! நான் ஒரு False Messiah-வாகத்தான் இருப்பேன். என்னால முடியாது...”


அதிரடியாக விமர்சனங்களை முன்வைக்கிறார். அரசுக்கு எதிராக துணிச்சலாக அறிக்கை விடுகிறார். கமல், 'மெஷின்கன்'னை துாக்கிச் சுடும் மனநிலைக்கு வந்துவிட்டாரோ என்னவோ!

http://www.vikatan.com/news/tamilnadu/96286-kamals-old-interview-about-entering-politics.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.