Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்?

Featured Replies

சம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்?
 

வெளிநாட்டு அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டு, கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றினார்.   

image_6f5956c0d6.jpg

அப்போது, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே சம்பந்தன், பிரச்சினையின் அரசியல் மற்றும் தார்மிக அம்சங்களை மறந்து, சட்ட அம்சத்தை மட்டும் கருத்தில் கொண்டு உரையாற்றியதனாலேயே, அந்த நிலைமை உருவாகியது.  

ரவி கருணாநாயக்க, நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கண்டு பிடிக்கும் வரை நிரபராதி எனச் சம்பந்தன் கூறினார். எல்லோருமாகக் கூடி, ஒருவரைத் தாக்கக் கூடாது என்ற, கனவான் அரசியல் சிந்தனையால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.  

 சட்டப்படி அது உண்மையும்தான். ஆனால், அது யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் கூற்றென்பதை அவர் விளங்கிக் கொள்ளவில்லைப் போலும்.  

ரவி ஏன் பதவி விலகினார்? மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ‘பேர்பெச்சுவல் டிரஷரீஸ்’ நிறுவனத்தின் அதிபராகக் கருதப்படும், அர்ஜூன் அலோசியஸினால் சொகுசு வீடொன்று குத்தகைக்கு வாங்கப்பட்டு, ரவியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.   

இது அந்த மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்சாட்சி ஒருவரினால் கூறப்பட்டது. அது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதனாலேயே, ரவி இராஜினாமாச் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டது. 

சட்டப்படி, ‘பேர்பெச்சுவல் டிரஷரீஸ்’ நிறுவனமோ அல்லது அலோசியஸோ எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவாளியாகவில்லைத்தான்.   

ஆனால், சம்பந்தன் உள்ளிட்ட, நாட்டில் எவருமே அந்நிறுவனமோ அல்லது அலோசியஸோ நிரபராதி என்பதையும் ஏற்றுக் கொள்வதில்லை.  

மத்திய வங்கியில், 2015 ஆம் ஆண்டு, பெப்ரவரி 27 ஆம் திகதி, இடம்பெற்ற பிணைமுறி விற்பனையானது, மாபெரும் ஊழல் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத்தின் ‘கோப்’ எனப்படும், அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான குழு விசாரணையொன்றின் பின் முடிவு செய்யப்பட்டது.

அது தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், வகை சொல்ல வேண்டும் எனவும் அக்குழு முடிவு செய்தது.  

அந்த மோசடியினால், மகேந்திரனின் மருமகனான அலோசியஸின் ‘பேர்பெச்சுவல் டிரஷரீஸ்’ நிறுவனம், உடனடியாக 500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.   

அந்த மோசடி இடம்பெற்ற காலத்தில், நிதி அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்கவுக்கு, அதே அலோசியஸ், மாத வாடகை 14 இலட்சம் ரூபாய்க்கு, சொகுசு வீடொன்றை, குத்தகைக்குப் பெற்றுக் கொடுப்பதாக இருந்தால், மக்கள் ரவி மீதும் சந்தேகம் கொள்வது நியாயமே.   

அவ்வாறு இருக்க, நீதிமன்றத்தால் குற்றவாளியாகும் வரை, ரவி நிரபராதி என்றெல்லாம் சம்பந்தன் சட்டம் பேசப் போகும்போது, நிலைமை அவருக்கு எதிராகவும் திரும்புவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.   

நீதிமன்றம் ஒன்றினால் ஒருவர் குற்றவாளியாகக் காணப்படும்வரை, ஒருவர் நிரபராதி என்ற சட்ட வாதத்தின்படி பார்த்தால், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ஊழல்களுக்கோ, வசீம் தாஜூதீனின் கொலைக்கோ, வெள்ளை வான் கடத்தல்களுக்கோ குற்றவாளிகளல்லர்; போர்க் குற்றங்களுக்கு இதுவரை எவரும் குற்றவாளியாகவில்லை.  

மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி, என்ன என்பதை இங்கு மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு, ரவியின் விடயத்துக்கு வருவது பொருத்தமாகும். பிணைமுறி விற்பனை என்றால், அரசாங்கம் மக்களிடம் கடன் பெறும் ஒரு வழிமுறையாகும்.  

 பிணைமுறி என்பது ஒருவித அடையாள உத்தரவாதப் பத்திரமாகும். அவற்றை வெளியாருக்கு விற்று, அரசாங்கம் பணம் பெறும். அவற்றைக் கொள்வனவு செய்வோர், தாம் செலுத்திய பணத்துக்கு வட்டியைப் பெறுவர்.   

2015 ஆம் ஆண்டு, ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்களில், மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கும்போது, அரசாங்கத்துக்கு 100 கோடி ரூபாய் கடன் பெறுவதற்காக, பிணைமுறி விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது.   

மத்திய வங்கியிலிருந்து எவரும் நேரடியாக அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாது. அதற்காக முதன்மைக் கொள்வனவாளர்கள் என்றழைக்கப்படும் அனுமதிப்பத்திரம் பெற்ற சில நிறுவனங்கள் இருக்கின்றன.   

கூடுதலாக வங்கிகளே அவ்வாறான முதன்மைக் கொள்வனவாளர்களாக இருக்கின்றன. அலோசியஸின் நிறுவனமும் முதன்மைக் கொள்வனவாளர் நிறுவனமாகும்.  

100 கோடி ரூபாய் பணம் பெறுவதற்காக, பிணைமுறி விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 1,000 கோடி ரூபாய்க்கான பிணைமுறி விற்பனை செய்வதாக மகேந்திரன் முடிவு செய்தார்.   

ஆனால், அதை அவரது மருமகனின் நிறுவனம் தவிர்ந்த, ஏனைய நிறுவனங்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, அந்த நிறுவனங்கள் 100 கோடி ரூபாய்க்கான பிணைமுறிகளுக்காகப் போட்டியிட்டன.   

ஆனால், அலோசியஸின் நிறுவனம் மட்டும், 1,500 கோடி ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளுக்காக விண்ணப்பம் செய்து, பெருமளவான பிணைமுறிகளைப் பெற்றுக் கொண்டது.   

போட்டியில்லாததால் பிணைமுறி விலையும் குறைந்து, அவற்றுக்கான வட்டியும் அதிகரித்ததனால், வெறும் 100 கோடி ரூபாய் கடன் பெற முற்பட்ட அரசாங்கத்துக்கு, உடனடியாக 500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.   

இந்தப் பிணைமுறிகளின் முதிர்ச்சிக் காலம் 30 வருடங்கள். எனவே, அந்த 30 வருடங்களிலும் அரசாங்கம் நட்டத்தை அடைய வேண்டிவரும். இது மகேந்திரனும் அவரது மருமகனும் கூட்டாகச் செய்த மோசடியாகவே கருதப்படுகிறது. இதுதான் ரவியின் பிரச்சினையின் பின்னணிக் கதை.   

இந்த மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அதன் முன்னிலையில் சாட்சியமளித்த, அனிகா விஜேசூரிய என்ற பெண், “தமக்குச் சொந்தமான சொகுசு வீடொன்றை, அலோசியஸ், மாதம் 14 இலட்சம் ரூபாய் வீதம் குத்தகைக்கு வாங்கி, ரவி கருணாநாயக்கவின் குடும்பத்துக்கு வழங்கினார்” எனக் கூறினார்.   

எனவே, ரவியும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டார். பிணைமுறி விவகாரத்தோடு, இந்த வீட்டு விவகாரம் நேரடியாகச் சம்பந்தமில்லாதிருந்த போதிலும் சர்ச்சைக்குரிய பிணை முறி விற்பனையில், அப்போது நிதி அமைச்சராக இருந்த ரவியும் பயன்பெற்றுள்ளார் என்று காட்டுவதே, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் நோக்கமாக இருந்திருக்கலாம்.   

அர்ஜூன் அலோசியஸ், நாட்டில் மிகப் பெரும் செல்வந்தர். அவர் தமது நண்பர்களுக்கு உதவி செய்யப் பிணைமுறித் தொழிலில் மோசடி செய்யத்தான் வேண்டும் என்றில்லை.   
அதேவேளை, சர்ச்சைக்குரிய பிணைமுறிக் கொள்வனவின் மூலம் பெற்ற இலாபத்தில்தான், அலோசியஸ், ரவிக்கு உதவினார் என்றும் கூற முடியாது. எனவே, சட்டப்படி, ரவி மோசடியில் சம்பந்தப்பட்டார் எனக் கூற முடியாது. அந்த வகையில் சம்பந்தன் கூறியது சரிதான்.  

ஆனால், அலோசியஸ் ஏன் மத்திய வங்கிப் பிணைமுறித் தொழிலில், மோசடியைச் செய்துவிட்டு, தம்மைப் போலவே பெரும் செல்வந்தரான, நிதி அமைச்சரின் வீட்டு வாடகையைச் செலுத்த வேண்டும் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.   

அதேவேளை, “தாம் தங்கியிருக்கும் வீட்டுக்குக் குத்தகைப் பணத்தைச் செலுத்துவது அலோசியஸ்தான் என்பதை, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, நாடாளுமன்றத்தில் கூறும் வரை, தமக்குத் தெரியாது” என்றும் “வீட்டைப் பற்றிய சகல விடயங்களையும் தமது மனைவியே கையாண்டார்” என்றும் ரவி, ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும்போது கூறினார். இது வெறும் சரடு என்பதைச் சிறுபிள்ளையும் விளங்கிக் கொண்டிருக்கும். அவர் ஏன் அதை மறைக்க வேண்டும்? 

அதேவேளை, இந்தப் பிணைமுறி மோசடியை, மூடி மறைக்க, ரவி உட்பட ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்திலிருந்தே பெரும் முயற்சியில் ஈடுபட்டது. அலோசியஸ் ஏன் நிதி அமைச்சரின் வீட்டுக்குக் குத்தகைப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்ற கேள்வியோடு, ரவி அதைத் தாம் அறிந்திருக்கவில்லை என ஏன் கூறினார் என்ற கேள்வியையும், ரவி உள்ளிட்ட ஐ.தே.க, பிணைமுறி மோசடியை மூடி மறைக்க முயற்சித்தனர் என்ற விடயத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், என்ன நடந்து இருக்கிறது என்பதை ஊகிக்கலாம்.   

தமது வீட்டுக்கு, குத்தகைப் பணத்தை செலுத்துவது தமது நண்பர் என்பதை, அந்த வீட்டில் ஒன்பது மாதங்களாகத் தங்கியிருக்கும் போது, மனைவி, கணவனிடம் கூறவில்லையா என்ற கேள்விக்கு, ரவி, “இல்லை” எனக் கூறுகிறார்.   

ஒரு வீட்டில் குடிபுகப் போகும்போது, அந்த வீடு எவ்வாறு கிடைத்தது எனக் கணவன் கேட்கவில்லையா என்ற கேள்விக்கும் அவர் “இல்லை” என்கிறார்.   

பயண ஆவணங்களை முன்வைத்து, “ நீங்கள் அலோசியஸூடன் 13 முறை சிங்கப்பூருக்குச் சென்றிருக்கிறீர்களல்லவா” என்று கேட்டதற்கு, “ஒரு முறை சென்றதாகவே ஞாபகம் இருக்கிறது” என்றார்.  

தாம் குடியிருக்கும் வீட்டுக்குக் குத்தகைப் பணத்தை, அலோசியஸ்தான் செலுத்துகிறார் என்பதைத்தாம் அறிந்திருக்கவில்லை என்றும் தமது மனைவியின் நிறுவனமே அந்த விடயத்தில் சகல கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட்டது என்றும் இந்த விடயத்தை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தால், தாம் அந்த வீட்டில் குடியிருக்கப் போவதில்லை எனவும் ரவி, ஆணைக்குழு முன் கூறினார்.   

அதாவது, நண்பராகவிருந்தாலும் அலோசியஸிடம் அவ்வாறான உதவி பெறுவது முறையல்ல என்றும், நாகரிகமற்றது என்றும், தாம் கருதுவதாகவே, ரவி கூறுகிறார்.   
அது ஏன்? ஒரு நண்பரிடம் உதவி பெறுவதில் என்ன தவறு இருக்கிறது? பிணைமுறி விவகாரத்தில், அலோசியஸ் சம்பந்தப்பட்டு இருந்ததனாலேயே, அலோசியஸிடம் தாம் எதையும் பெறவில்லை எனக் கூற ரவி முற்பட்டார்.   

மோசடி நடந்திருப்பதை, அந்த மோசடியை மூடிமறைக்க முற்பட்ட ஐ.தே.கவே இப்போது ஏற்றுக் கொள்கிறது என்பதையே அது காட்டுகிறது.   

ரவி கூறியது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், அவரது சாட்சியத்தை அடுத்து, பிணைமுறி மோசடிக்கு உதவி செய்து அல்லது அதில் பங்கேற்றுவிட்டு, மோசடியில் ஈடுபட்டவர்களிடம் பிரதியுபகாரம் பெற்றதான ஓர் அபிப்பிராயம், நாட்டில் உருவாகிவிட்டது. அதனாலேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற அபிப்பிராயமும் மக்கள் மத்தியில் உருவாகியது.   

ஆரம்பத்தில், கூட்டு எதிரணியினரும் மக்கள் விடுதலை முன்னணியும் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றஞ்சாட்டிய போது, ஐ.தே.க அதை மறுத்தது.   

பின்னர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டவே, அதை விசாரிக்க, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்தார். சம்பந்தப்பட்ட பிணைமுறி கொடுக்கல்வாங்கலில், முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை என அந்தக் குழு முடிவு செய்தது.   

ஆனால், தெற்கே உள்ள எதிர்க்கட்சிகள் விட்டுக் கொடுக்கவில்லை. எனவே, ‘கோப் குழு’ அதை விசாரித்தது. அதன்போது, முறைகேடு இடம்பெற்றிருப்பதாக ‘கோப்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.   

ஆனால், மோசடி நடைபெறவில்லை என்று நிரூபிப்பதற்காக, ‘கோப்’ குழுவுக்குள்ளும் ஐ.தே.க பெரும் போராட்டத்தை நடத்தியது. அது முடியாது போகவே, மத்திய வங்கி ஆளுநராகவிருந்த மகேந்திரனைக் காப்பாற்ற அக்கட்சி முயற்சித்தது. ஆனால், மக்கள் அபிப்பிராயம் பலமாக இருந்ததனால் அவர்களால் அது முடியாமல் போய்விட்டது.  

அந்த மக்கள் அபிப்பிராயத்தின் காரணமாகவே, ஜனாதிபதி இந்த மோசடியைப் பற்றி விசாரிக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அதில் கடந்த சில வாரங்களாக வெளிவரும் தகவல்களின் மூலம், இந்த மோசடிக்கு எதிராகவும் மகேந்திரன் மற்றும் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராகவும் பலத்த மக்கள் அபிப்பிராயம் உருவாகியிருந்த நிலையிலேயே ரவி அக்குழுவின் முன்சாட்சியமளிக்கச் சென்றார்.  

அவரது வீடு தொடர்பான தகவல், ஆணைக்குழு முன் தெரிவிக்கப்பட்டு இருந்தமையினால், அவர் சாட்சியமளிக்கப் போகும்போதே, அவருக்கு எதிராகவும் மக்கள் அபிப்பிராயம் உருவாகியிருந்தது.  

 அவர், அங்கு விட்ட சரடுகளின் காரணமாக, அவருக்கு எதிரான மக்கள் அபிப்பிராயம் பல மடங்காக அதிகரித்தது. இதனாலேயே ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.   

ஐ.தே.கவில் அனைவரும் பிணைமுறி மோசடியை மூடிமறைக்க முற்பட்டாலும் இந்த மக்கள் அபிப்பிராயத்தின் காரணமாக, அதே ஐ.தே.க தலைவர்களும் ரவிக்கு பதவி விலகுமாறு ஊடகங்கள் மூலம் கூறலாயினர்.   

அதேவேளை, அலோசியஸிடம் பயன் பெற்றவர் ரவி மட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. எனவேதான் “இவ்வளவு பெரிய அரசாங்கத்தில், எனது தந்தையை மட்டும் ஏன் குறைகூறுகிறார்கள்” என ரவியின் மூத்த மகள் ஒனெலா, தமது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.   

ஐ.தே.க காரர்கள் உள்ளிட்ட பலர், ரவி குற்றமிழைத்தார் என்ற அடிப்படையிலேயே அவரை இராஜினாமாச் செய்யுமாறு கூறினர். அவர், செய்த குற்றம் என்ன? 

அலோசியஸிடம் உதவி பெற்றமையே. அது எவ்வாறு குற்றமாகிறது? அலோசியஸ் மோசடியில் ஈடுபட்டதனாலேயே.   

அதை, மூடி மறைக்க முற்பட்டவர்கள் யார்? ஐ.தே.ககாரர்களே. அவ்வாறாயின் ரவியைப் பதவி விலகுமாறு கூறும், ஐ.தே.ககாரர்கள், தம்மையும்தான் குற்றஞ்காட்டிக் கொள்கிறார்கள்.  

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இது போன்ற மோசடிகள் நடைபெற்றன. ஆனால், அவற்றை விசாரிக்க மஹிந்தவின் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவோ, தகவல் திரட்டும் ஆணைக்குழுக்களை நியமிக்கவோ இல்லை.   

அக்காலத்தில் அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாதிருந்தது. அக்காலத்தில், இதுபோன்று, அமைச்சர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாதிருந்தது. எனவே, ஒப்பீட்டளவில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், ஓரளவுக்கு ‘நல்லாட்சி’ இருக்கிறது. 

அலோசியஸூடனான, ரவியின் தொடர்பு அம்பலமாகவே அவர் வெளிவிவகார அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரலாயினர்.   

அதேவேளை, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையும் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தால், அரசாங்கம் மட்டுமல்லாது கூட்டு எதிரணயினரும் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும்.  

இந்தப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தால், ரவியைப் பாதுகாக்க அரசாங்கத்தால் முடியாமல் போய்விடும். அதாவது, அவரை நியாயப்படுத்த முடியாமல் போய்விடும்.   

ஏனெனில், அவர் பிணைமுறி ஆணைக்குழு முன்னிலையில் சரடு விட்டார் என்பது நாடே அறிந்த விடயம். அதேவேளை, அவ்வாறு அவருக்கு ஆதரவாக, அரசாங்கத்தின் 
எம்.பிக்கள் வாக்களிக்காவிட்டால் பிரேரணை வெற்றி பெற்று அரசாங்கம் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.  

அதேபோல், பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், கொள்ளைகள், கடத்தல்கள், கொலைகள் ஆகியவற்றை மீண்டும் நினைவூட்டி, கூட்டு எதிரணியை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியிருப்பார்கள்.  

எனவே, ரவியின் இராஜினாமாவை அடுத்து, பிரேரணை செல்லுபடியற்றதாகி விட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தமை, இரு சாராருக்கும் ஆறுதலாகவே இருந்திருக்கும்.  

ரவிக்கு என்னதான் நடந்தாலும், அது நாட்டுக்கு முக்கியமல்ல. ஆனால், நாட்டு மக்களின் பணம் 500 கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதே; அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்களா, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அவர்களிடம் அறவிடுவார்களா? என்பதே முக்கியமான விடயம். இதுவரை, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இரண்டு வருடங்களாகியும் இன்னமும் தகவல் திரட்டும் நடவடிக்கைகள்தான் நடைபெற்று வருகின்றன.   

சட்டம், செல்வந்தர்களையும் அதிகாரம் உள்ளவர்களையும் கண்டு நடுங்கும் நிலை நாட்டில் இன்னமும் இருப்பதனால், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படும் வரை அவ்வாறு நடக்கும் என நம்ப முடியாது.  

ஊழல்களே, கடந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிய மக்களைத் தூண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாகியது. ஆனால், அந்த அரசாங்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, தெரிவு செய்ப்பட்ட இந்த அரசாங்கத்தில், மிகவும் உயர் மட்டத்திலேயே மிகப் பெரும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளது.  அவ்வாறாயின், மக்கள் என்ன செய்வது?

மீண்டும் மஹிந்தவுக்கு அதிகாரத்தை வழங்குவதா? நோயை குணப்படுத்த தேர்ந்தெடுத்த மருந்து மோசமாக இருக்கிறது என்று, மீண்டும் நோயையே தழுவுவதா? மக்கள் மூன்றாவது தீர்வுக்கும் தயாரில்லை. இது தான் இப்போது மக்கள் முன் உள்ள சவால்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தன்-ஏன்-ரவியை-பாதுகாக்க-போனார்/91-202443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.