Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னீர்செல்வம் அணி ஆலோசனை நிறைவு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு #LiveUpdate

Featured Replies

பன்னீர்செல்வம் அணி ஆலோசனை நிறைவு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு #LiveUpdate

 
 

நேரம் 9.00: பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த ஆலோசனை நிறைவு. விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நேரம் 8.45:  முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனையை முடித்துவிட்டு, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், அன்பழகன் ஆகியோர் புறப்பட்டனர்.

நேரம் 8.30: மெரினா கடற்கரையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா சமாதிக்கு இரண்டு பூங்கொத்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பூங்கொத்து

நேரம் 8.10:  பன்னீர்செல்வம் அணியினர் மூன்று நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் அமைச்சரவையில் இரண்டு துறைகள் வழங்குவதற்கு தயாராக உள்ள நிலையில், மூன்று துறைகள் வேண்டும் என்று கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. 

நேரம் 7.45: பன்னீர்செல்வம் அணிக்கு நிதி மற்றும் வீட்டுவசதி துறை வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்து. 

நேரம் 7.15: மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

நேரம் 7.12: திருவாரூரில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கலந்துகொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

நேரம் 7.07:  பன்னீர்செல்வம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

நேரம் 6.45: * அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செல்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

* அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

* மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சமாதி


ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதேபோல், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

 

 

 

இதனால், இரு அணிகள் விரைவில் இணைய உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பன்னீர்செல்வத்தை இன்று காலை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்தித்தனர். இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து, பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் திடீரென்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் சென்ற அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

விரைவில் இரு அணிகளும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/99550-jayalalithaas-memorial-place-decorated-with-flower.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘மத்தியில் இருவர்... மாநிலத்தில் இருவர்!’ அ.தி.மு.க. அணிகள் இணைப்பின் பின்னணி ஆதாயங்கள் #AIADMKMerger

 
 

ஓ.பி.எஸ்

 

“6 மாத காலத்துக்குப் பிறகு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இணைப்புக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்துதான் இரண்டு அணிகளிலும் இப்போது ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இழுபறியாகப் போய்க்கொண்டிருந்த இணைப்பு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்ததன் காரணம்... 'அ.தி.மு.க-வின் அதிகார மையமாக தினகரன் எப்படியும் வந்துவிடவேண்டும்' என்று ஒட்டுமொத்த மன்னார்குடி உறவுகளும் களத்தில் இறங்கியதுதான். தினகரன் சிறையில் இருக்கும் போதே, இணைப்பு வைபவத்தை நடத்திவிடலாம் என்று ஓ.பி.எஸ் அணிக்கும் ஈ.பி.எஸ் அணிக்கும் மத்தியஸ்தம் செய்தவர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.



தினகரன்

ஆனால், இரண்டு தரப்பிலுமே அதை கண்டுகொள்ளவில்லையாம். 'தினகரன், சிறையில் இருந்து மீண்டு வந்தாலும் அவர் பெரிதாகக் கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை' என்று இரண்டு தரப்பிலும் உறுதியாக நம்பியுள்ளார்கள். திகார் சிறையிலிருந்து திரும்பியவுடனே, கட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலையில் தினகரன் தரப்பு இறங்கியதுமே இரண்டு அணிகளும் கொஞ்சம் ஆட்டம் கண்டன. ஒரு மாதத்துக்கு முன்பே எடப்பாடி அணியைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் சென்னையின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது “நீங்கள் இணைப்பை காலதாமதம் செய்ய வேண்டாம். தினகரன் தரப்பு கட்சியைக் கைப்பற்றும் வேலையில் தீவிரமாக உள்ளது. முதலில் கட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்” என்று ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.

ஆனால், பன்னீர்செல்வம் தரப்பிலோ, “முதல்வர் பதவி வேண்டும். கட்சி நிர்வாகிகள் பட்டியலிலும் எங்கள் அணிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். சசிகலா குடும்பத்தை நீக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்று பிடிவாதத்துடன் கூறிவிட்டதால், அணிகள் இணைப்பு தள்ளிப்போனது. ஆனால், அதற்குள் தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் படையெடுக்க, இரண்டு அணிகளும் இணைந்தால் மட்டுமே தினகரனின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போடமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும், டெல்லியிலிருந்து பன்னீர்செல்வம் அணிக்கும், பழனிசாமி அணிக்கும் வந்த உத்தரவில், “இருவரும் இணைந்தால் மட்டுமே மத்திய அரசின் உதவி உங்களுக்கு கிடைக்கும்” என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். கடந்த வாரம் டெல்லியில், பிரதமர் மோடியை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாகச் சந்தித்தார்கள். அப்போது இருவரிடமுமே பிரதமர், “நீங்கள் இணையாமல் இருப்பது சசிகலா குடும்பத்துக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். நாங்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துதர தயாராக உள்ளோம். இணைப்புக்கான வேலையை இந்த மாதத்துக்குள் முடித்துவிடுங்கள்” என்று கடுமையாகவே சொல்லியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா ஆகியவற்றுக்காக எடப்பாடி தரப்பில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 'இரண்டு அணிகளும் இணைந்தபிறகு இந்த விழாவுக்கு நான் தேதி கொடுக்கின்றேன்' என்று சொல்லியுள்ளார் மோடி. இந்த நெருக்கடியால், பன்னீர்செல்வம் தரப்புடன் இணைந்தே ஆகவேண்டிய கட்டாயம் எடப்பாடி அணிக்கு ஏற்பட்டது. இரண்டு அணிகளுமே பிரதமரிடம் வைத்த மற்றொரு கோரிக்கை... 'பி.ஜே.பி கூட்டணியில், தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதுதான். அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர், ''இரண்டு அணிகளும் இணைந்து, கட்சியின் சின்னத்தை முதலில் மீட்டு வாருங்கள். அதன்பிறகு பார்க்கலாம்'' என்று கூறியுள்ளார். இதன்பிறகே எடப்பாடி அணி விறுவிறுப்பாக இணைப்பு பணியில் மும்முரம் காட்டியது. 'நாள்கள் கடப்பது ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லதல்ல' என சீனியர் சிலர் சொன்னதால், உடனடியாக ஓ.பி.எஸ் அணியை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.

இதையடுத்தே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையான 'ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக 'விசாரணைக் கமிஷன்' அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி. இரு அணிகளும் நல்லதொரு முடிவெடுத்தபின் மீண்டும் டெல்லி மேலிடத்தை தொடர்புகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஒருங்கிணைந்த அ.தி.மு.க மத்திய பி.ஜே.பி அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி கூட்டணி உருவானபின் இரு அணிகளின் இணைப்புக்குப் பலனாக ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து மாஃபா பாண்டியராஜன் மற்றும் செம்மலை ஆகியோருக்கு தமிழக அமைச்சரவையில் பதவி வழங்குவதாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. 'மத்திய அரசிலும் மைத்ரேயன் மற்றும் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/99556-the-benefit-for-rejoin-both-aiadmk-teams-aiadmk.html

  • தொடங்கியவர்

அணிகள் இணைப்பில் திடீர் முட்டுக்கட்டை: கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் எதிர்ப்பதாக தகவல்

 

அ.தி.மு.க.வின் பிரதான அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் நெருங்கி வந்த நிலையில், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அணிகள் இணைப்பில் திடீர் முட்டுக்கட்டை: கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் எதிர்ப்பதாக தகவல்
 
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான வாய்ப்புகள் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தினகரனுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானமும், ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மத்துக்கு விடை காண நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை நெருங்க செய்தது.

அணிகள் இணைப்பு தொடர்பாக இரு தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதேசமயம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டதால், அங்கு அணிகள் இணைப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. இதற்காக தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
201708182139595356_1_jayarain._L_styvpf.
இந்நிலையில், ஓபிஎஸ் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனையின்போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலாகா ஒதுக்கீடு மற்றும் நிர்வாக பொறுப்புகள் ஒதுக்கீட்டில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இணைப்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மழை பெய்ததாலும், இணைப்பு அறிவிப்பு தாமதம் ஆனதாலும் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலையத் தொடங்கினர்.
 
 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'இன்று இணைப்பு இல்லை'... ஓ.பி.எஸ் அணி அறிவிப்பு!: அ.தி.மு.க அணிகள் இணைப்பு #LiveUpdate

 

நேரம்: 9.45: "அணிகள் இணைவது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகாது. பன்னீர்செல்வத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று இல்லை. செய்தியாளர்கள் சந்திப்பு நாளை நடைபெறுவதாக இருந்தால் அறிவிக்கப்படும்" என்று ஓ.பி.எஸ் அணியின் கோவை சத்யா கூறியுள்ளார்.

நேரம் 9.12: பலத்த மழை காரணமாக மெரினாவில் கூடியிருந்த அ.தி.மு.க தொண்டர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்களும் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.

மெரினா

நேரம் 9.00: பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த ஆலோசனை நிறைவு. விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/99550-jayalalithaas-memorial-place-decorated-with-flower.html

  • தொடங்கியவர்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இன்று இல்லை: ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்

 
 
 

நீண்ட இழுபறிக்குப் பிறகு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இணைப்பு இன்று நடைபெறாது என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

 
 
 
 
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இன்று இல்லை: ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்
 
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான வாய்ப்புகள் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தினகரனுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானமும், ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மத்துக்கு விடை காண நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை நெருங்க செய்தது.

எடப்பாடி பழனிசாமியின் சாதகமான அறிவிப்புகளை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது ஓ.பி.எஸ். தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கைகளை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் முன்வந்துள்ளது.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது ஓ.பி.எஸ். தரப்பில் யார் யாருக்கு பதவி கொடுக்கலாம்? என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம், கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று மாலையில் அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. எனவே, நினைவிடத்தில் அணிகள் இணைப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. மாலை முதலே எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
201708182203051130_1_mnusamy._L_styvpf.j
ஆனால், ஓபிஎஸ் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. அணிகள் இணைப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இலாகா ஒதுக்கீடு மற்றும் நிர்வாக பொறுப்புகள் ஒதுக்கீட்டில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இணைப்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதனை உறுதி செய்யும் வகையில், ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை முடிந்ததும் தலைவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அணிகள் இணைப்பு குறித்த முடிவை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில், அணிகள் இணைப்பு இன்று இல்லை என ஓ.பி.எஸ். தரப்பு கூறிவிட்டது.

அதேசமயம், கடற்கரை பகுதியில் திடீரென கன மழை பெய்ததாலும், இணைப்பு அறிவிப்பு தாமதம் ஆனதாலும் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/18220258/1103102/admk-ops-factions-says-no-merger-announcement-today.vpf

  • தொடங்கியவர்

அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏன்?

 

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்பு இடையிலான இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

bbcபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்று அணிகளாக செயல்பட்டுவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடந்து வந்தன.

இந்த நிலையில், இணைப்பு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை மாலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க. தொண்டர்களும் செய்தியாளர்களும் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்தனர். 

ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன், பி.எச். பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள் ஐந்து மணியளவில் வந்து சேர்ந்தனர். இதையடுத்து இணைப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக செய்தியாளர்களிடம் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.

Arun Shankarபடத்தின் காப்புரிமைARUN SHANKAR

அதற்கேற்ப, ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கட்சியில் இருந்து விலகிச் சென்றார். அதே சமாதியில் அவர் விரைவில் இணையப் போகிறார்" என்று கூறினார்.

இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

ஆனால், ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த கூட்டத்தில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பதை அங்கிருந்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று இணைப்பு குறித்த அறிவிப்பு இருக்காது என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்தது. 

இதையடுத்து, முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமைச்சர்களும் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கூடியிருந்தவர்களும் கலைந்து சென்றனர். 

bbc

முன்னதாக, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகிய முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றாதவரை இணைப்புக்கு வாய்ப்பில்லை என்று பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வந்தனர்.

இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில், சசிகலாவால் டி.டி.வி.தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது "செல்லாது" என அறிவிக்கப்பட்டது. 

இதற்குப் பிறகு, வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மறைவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

இதையடுத்து பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைகளில் முக்கியமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இணைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் தாயாரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து வெள்ளிக்கிழமையன்று நலம் விசாரித்தனர்.

இன்றைய நிகழ்வுகள் குறித்து, பிபிசி செய்தியாளர் முரளிதரன் கூறுகையில், பன்னீர்செல்வம் அணியில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அல்லாதவர்களுக்கு கட்சியில் மீண்டும் இணையும்போது கிடைக்கக் கூடிய அங்கீகாரம், பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கக் கோருவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிரு்க்கலாம் என அதிமுகவினர் தரப்பில் பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான நிர்மலா பெரியசாமி, "சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைவரது கருத்துகளையும் தனித்தனியாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டார் என்றும், ஜனநாயக நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவர் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார் என்றும், முடிவு என்ன என்பதை அவரே நேரடியாக அறிவிப்பார்" என்றும் கூறினார். 

சனிக்கிழமையும் ஆலோசனைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.bbc.com/tamil/india-40977511

  • தொடங்கியவர்

எதிர்பார்ப்புடன் மெரினாவில் திரண்டவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி - அதிகாரப்பகிர்வில் உடன்பாடு ஏற்படாததால் அடுத்தடுத்து திருப்பங்கள்

admkcrisis

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டன. கட்சி, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், எதிர்பார்ப்புகளுடன் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்துசென்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2 அணிகள் உருவாகின. இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகனை ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்தனர். இதனால், இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரன் – முதல்வர் பழனிசாமி இடையே கருத்து மோதல்கள் வலுத்தன. இதையடுத்து, தினகரன் தலைமையில் 3-வது அணி உருவானது. தினகரனை சமாளிக்க, ஓபிஎஸ் உடன் இணைய முதல்வர் பழனிசாமி முடிவெடுத்தார். முதலில் தினகரன் நியமனம் செல்லாது என பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்,

ஓபிஎஸ் தரப்பினரின் 2 நிபந்தனைகளையும் பழனிசாமி தரப்பினர் ஏற்றுக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இரு அணிகள் இணைப்புக்கான முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக ஓபிஎஸ் நேற்று காலை சென்றார். அப்போது, முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ்-ன் தாயார் உடல்நிலை தொடர்பாக விசாரித்தனர்.

பின்னர், ஓபிஎஸ்ஸுடன் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பிய ஓபிஎஸ், ‘‘இரு அணிகள் இணைப்பு உறுதி. மாலை நடக்கும் கூட்டத்துக்குப்பின் முடிவை அறிவிப்பேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்மலை, பாண்டியராஜன் மற்றும் எம்எல்ஏக்கள், மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன், கே.சி.பழனிசாமி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணிகள் இணைப்பு தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.

அதேநேரத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இருவரின் வீட்டின் முன்பும் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.

இருதரப்பும் ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாலை 6 மணியளவில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். நினைவிடத்தை அலங்கரிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதல்வர் பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் வர உள்ளதால் ஏற்பாடுகளை செய்ய எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது’’ என்றனர்.

நினைவிடத்தில் இருந்து இருவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள் என்று தகவல் பரவியதால் அங்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இந்த 2 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள், வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், இரு அணிகளும் இணையப் போகிறது என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கோஷம் போட்டபடி இருந்தனர்.

முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் எப்போது ஜெயலலிதா நினைவிடத்துக்கு புறப்படுவார்கள் என நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இரவு 7 மணி ஆகியும் யாரும் புறப்படுவதாக தெரியவில்லை. 7.30 மணி, 8 மணி, 8.30 மணி, 9 மணி என ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் இப்போது வருவார்கள்... இப்போது வருவார்கள் என காத்திருந்தவர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இரவு 9 மணியைத் தாண்டியும் ஆலோசனை கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் யாரும் வெளியில் வரவில்லை.

கட்சி, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இரு அணிகளிலும் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மத்தியிலும் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, ஓபிஎஸ் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்த இ.மதுசூதனன், பொன்னையன் ஆகியோர் வெளியில் வந்தனர். மதுசூதனன் கூறும்போது, ‘‘அணிகள் இணைப்பு தொடர்பாக ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார்’’ என்றார். தற்போதைய எம்பி, எம்எல்ஏக்களுடனும் அதன்பின், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடனும் தனித்தனியாக 2 கட்டங்களாக ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பினர் எங்கும் வராததாலும் இரு இடங்களிலும் திரண்டிருந்த நிர்வாகிகள் கலையத்தொடங்கினர். 9.30 மணி அளவில் ஓபிஎஸ் அணி செய்தித் தொடர்பாளர் கோவை சத்யா, நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நாளை சந்திப்பதாக இருந்தால் அழைப்பு விடுப்போம்’’ என தெரிவித்தார். அதனால், இணைப்புக்காக காத்திருந்த அதிமுகவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அரசு அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19522655.ece?homepage=true

  • தொடங்கியவர்

அ.தி.மு.க. அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி விளக்கம்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என ஓ.பி.எஸ். ஆதரவு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

 
 
 
 
அ.தி.மு.க. அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி விளக்கம்
 
சென்னை:

அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி நீடிப்பதால் இணைப்பு மேலும் தாமதமாகி வருகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் 4 பேர் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் ஒருவர்.

ஆனால் இதை கே.பி.முனுசாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஓ.பி.எஸ். தலைமையில் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். தொண்டர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக நாங்கள் கட்டுப்படுவோம்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை.

எங்களது முக்கியமான கோரிக்கை சசிகலா குடும்பத்தை முற்றிலும் வெளியேற்றுவதுதான். தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை என்றால் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை.

தர்மயுத்ததின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை முழுமையாக வெளியேற்றுவதுதான். சசிகலா நீக்கப்படும் வரை இணைப்புக்கான சாத்தியம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/19124822/1103197/KP-Munusamy-says-he-is-not-barrier-for-ADMK-merger.vpf

  • தொடங்கியவர்

இணைப்பு எப்போது?- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

 

இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துகொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இடையே முடிவாகவில்லை என்பதால் அணிகள் இணைப்பில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘ இணைப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் வந்த அதிமுகவைக் காப்பாற்றும் நோக்கிலும், அவர்களின் அரசியல் பாதையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையிலும் நாங்கள் செயல்படுகிறோம். நாட்டு மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் படியே அணிகள் இணைப்பு இருக்கும்’ என்று அவர் தெரிவித்தார். இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/99626-admk-merger-commence-within-one-or-two-days-says-ops.html

  • தொடங்கியவர்

''அ.தி.மு.க அணிகள் இணைப்பு எப்போது..?'' சந்திப்பு முடங்கியதற்குக் காரணம் இதுதான்!

 

சசிகலா

அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு நேரம் குறித்து...ஜெயலலிதா சமாதிக்கு அழைத்த பின்னரும், இரு அணிகளின் நிர்வாகிகளுக்கிடையே நடக்கும் முட்டல் மோதல்களால், சந்திப்பு முடங்கிக்கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.

மதுரை மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், டி.டி.வி. தினகரன் தனது பலத்தைக் காட்டிய பிறகுதான், எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைய முன்வந்தனர். 'டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது' என்று தீர்மானம் போட்டதன்மூலம் சசிகலா குடும்பத்துக்கு 'ஷாக்' கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியைத் தன்பக்கம் இழுத்தார். "ஜெயலலிதா மரணம்குறித்து உண்மை அறிய விசாரணை கமிஷன், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், நினைவிடம் ஆக்கப்படும்" ஆகிய இரு அறிவிப்புகளைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். அணிகள் இணைப்பு உறுதி என்றார்கள். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு 7.30 மணியவில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சந்திக்க முடிவு எடுத்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாகச் செய்யப்பட்டன. இரு அணிகளின் தலைவர்களையும் வரவேற்க, ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.

ஆனால், இரவு 9.30 மணி வரை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா சமாதிக்கு வரவில்லை. "கடைசி நேரத்தில், அணித் தலைவர்களின் சந்திப்பு ரத்துசெய்யப்பட்டது ஏன்?" என்று இரு அணிகள் தரப்பிலும் விசாரித்தோம். 

தினகரன் பன்னீர்செல்வம் பழனிசாமி

இதுபற்றி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை அங்கு இருப்பவர்கள் அனைவரும் சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து வெளியேறியவர்கள். சசிகலாவுக்கு ஆதரவாக இருந்ததால், எடப்பாடியையும் அவர்கள் எதிர்த்தார்கள். இரு அணிகளுமே அப்படி ஒருவரை ஒருவர் எதிர்த்துதான் வேறுவேறு பாதையில் சென்றனர். பல கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு அணிகளும் இணையும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அணியில் இருப்பவர்களைவிடவும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் இரு அணிகளின் இணைப்புக்கு முன், அதிகாரப்பகிர்வுகுறித்துப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வேண்டும்; இல்லை என்றால், துணை முதல்வர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நிதித்துறை போன்ற முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும். செம்மலை, மாஃபா பாண்டியராஜன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வேண்டும். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கோவை கே.சி.பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களுக்கு கட்சியை வழிநடத்தும் வழிகாட்டுக் குழுவில் பதவி வேண்டும். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., என எந்தப் பதவியிலும் இல்லாதவர்களுக்கு வாரியத் தலைவர், அரசு ஆணையங்களில் தலைவர் பதவி கொடுக்க வேண்டும். ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களை மீண்டும் அதே பதவியில் அதிகாரத்துடன் செயல்பட அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் விருப்பத்தின்படி சீட் கொடுக்க, மாவட்ட அமைச்சர்கள் அனுமதிக்க வேண்டும்.  வர இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பதவி முடிவடையும் எம்.பி-க்களுக்கே மீண்டும் சீட் கொடுக்க வேண்டும். சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராகவும், டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி தரப்பு ஏற்கெனவே கொடுத்துள்ள பிரமாண உறுதிமொழியை வாபஸ் பெறவேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கோரிக்கைகள் ஏராளமாக இருப்பதாலும், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் அமைச்சரவை சகாக்களுடன் பேசித் தீர்த்த பிறகே முடிவுக்கு வர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அதன் காரணமாகவே, நேற்று சந்திப்பு நிகழவில்லை. இன்னும் சில நாள்களில், இரு அணியின் முக்கியத் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகே, எடப்பாடியும் பன்னீர்செல்வமும் சந்திக்க முடிவெடுத்துள்ளனர்" என்றார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலாவைச் சந்தித்துவிட்டு, பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பதவி ஆசை மற்றும் சுயநலத்தால், இரு அணிகளும் இணையவதாக அறிவித்துள்ளார்கள். இது, கட்சி நலனுக்கும் தொண்டர்களின் மனநிலைக்கும் விரோதமானது. சுயநலத்துக்காக அவர்கள் இணைவதால், இந்த இணைப்பு நிலைக்காது; நீடிக்காது. நீண்ட காலத்துக்கு அவர்களால் இணைந்திருக்க முடியாது. அவர்கள் எடுத்துள்ள முடிவால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; பின்னடைவும் கிடையாது. கட்சியில் செய்ய இருக்கும் ஆபரேஷன் குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினேன். விரைவில் ஆபரேஷன் இருக்கும்'' என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

 

இரு அணிகளும் பல தடைகளைத்தாண்டி இணைந்தாலும், டி.டி.வி.தினகரன் ரூபத்தில் எந்நேரமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து காத்திருக்கிறது!

http://www.vikatan.com/news/tamilnadu/99633-ops-eps-faction-merger-delay-reasons.html

  • கருத்துக்கள உறவுகள்

துணிவிருந்தால், ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலில் மக்களை சந்திக்கட்டுமே, இவர்களின் செல்வாக்கு எவ்வளவு என்று தெரிந்துவிடும்..!

  • தொடங்கியவர்

‘இரண்டு நாள் பொறுத்திரு!' தினகரனுக்கு சசிகலாவின் கட்டளை

 
 

சசிகலா, தினகரன்

சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘இரண்டு நாள் பொறுத்திரு’ என்று தினகரனிடம் சசிகலா சொன்னதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் பெங்களூருக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்தனர். கோயில் பிரசாதத்தை சசிகலாவிடம் கொடுத்தனர். சசிகலாவிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்கள் கலங்கின. உடனடியாக சசிகலா, யாரும் வருத்தப்பட வேண்டாம். எல்லாம் விதிப்படி நடக்கிறது. விரைவில் வெளியில் வந்துவிடுவேன் என்று ஆறுதலாகச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு தினகரனைத் தவிர மற்றவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பின்னர், சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க. உள்கட்சி நிலவரம் குறித்து நீண்ட நேரம் பேசினர்.

சசிகலா, கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக தினகரன் பதிலளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். அதன்பிறகு சென்னையிலிருந்து தினகரன் கொண்டுச் சென்ற ஃபைலை சசிகலாவிடம் கொடுத்துள்ளார். அதை முழுமையாகப் படித்த சசிகலா, இந்த பட்டியலை இப்போதைக்கு வெளியிட வேண்டாம். இரண்டு நாள் அமைதியாக இருப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, சசிகலாவிடம் விடைப்பெற்றுவிட்டு தினகரன் வெளியில் வந்தார். நிருபர்களைச் சந்தித்த தினகரன், ‘என் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் ஸிலிப்பர் செல்களைப் போல உள்ளனர். அ.தி.மு.க. உள்கட்சி நிலவரம் குறித்து ஆலோசித்ததாக’த் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூரிலிருந்து சென்னைக்கு தினகரன் திரும்பி வந்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஜெயலலிதா சமாதியில் இணையப்போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தற்போது, இரு அணிகளும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தினகரனிடம் தெரிவித்தனர். 

உடனே, 'கூட்டத்தில்  என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து உடனுக்குடன் எனக்கு தகவல் தெரிவியுங்கள்' என்று ஆதரவாளர்களிடம் தினகரன்தெரிவித்தார். அதன்படி, தினகரனுக்கு இரு அணிகளில் நடந்த ஆலோசனை விவரம் லைவ் ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா சமாதி நிலவரம் வரைக் கேட்டறிந்த தினகரனுக்கு சென்னை வந்திறங்கிய சமயத்தில் அணிகள் இன்று இணையவில்லை என்ற தகவல் சொல்லப்பட்டது. அணிகள் இணைப்பு குறித்து தினகரன் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அணிகள் இணையும்போது நமக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார். அடுத்து, சசிகலாவிடம் நடத்திய ஆலோசனைக்குறித்து ஆதரவாளர்களிடம் தினகரன் பகிர்ந்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம். இதுதொடர்பாக பெங்களூருவில் சசிகலாவும் தினகரனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, 'சீராய்வு மனு விசாரணையில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்தால்போதும். அதுவரை  அமைதியாக இருப்போம். அணிகள் இணைந்து நமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்குத்தான் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்படும். இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதையெல்லாம் நம்முடைய ஆதரவு இல்லாமல் தனியாக அவர்களால் எதிர்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'இரண்டு அணிகள் இணையும் போது கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, ஒன்மேன் ஆர்மியாக இருந்த அ.தி.மு.க.வில் அதிகார மையங்கள் உருவாகும். அதையெல்லாம் சமாளிக்க முடியாது. ஜெயலலிதாவால் அ.தி.மு.க, ராணுவ கட்டுப்பாட்டோடு செயல்பட்டது. ஆனால், இன்று நிலைமைப் அப்படியல்ல. கட்சியை கட்டுப்பாட்டோடு வழிநடத்த முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் இணைந்தாலும் அது நிரந்தரமல்ல. விரைவில் இரண்டு அணிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும்' என்று தினகரனிடம் சசிகலா விரிவாகச் சொல்லியிருக்கிறார். இதனால்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் தினகரன், அமைதியாக இருந்துவருகிறார்.

சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அறிவிப்பு வெளியாகினால் அதைச் சட்டப்படி எதிர்கொள்வோம். சீராய்வு மனு விசாரணைக்குப்பிறகு  எங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடங்கும். அதுவரை அமைதியாக இருப்போம்.தற்போது பதவியில் உள்ளவர்கள் அனைவரும் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். இந்த பதவியை வழங்கியது யார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். சசிகலாவும் தினகரனும் இல்லையென்றால் முதல்வரும், அமைச்சரும், கட்சிப்பதவிகளும் யாருக்கும் கிடைத்திருக்காது" என்றனர் ஆவேசமாக.

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.வான பழனியப்பன் கூறுகையில், “பொதுச் செயலாளர் சசிகலா உத்தரவின்பேரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க பேருந்தில் ஓட்டுநராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். தற்போது சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அ.தி.மு.க.வை சரியாக நடத்தவில்லை என்றால்  முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்" என்று எச்சரித்தார்.

 

சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக அ.தி.மு.க.வில் நடவடிக்கை  எடுக்கப்பட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தினகரனின் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்ட போது, “அ.தி.மு.கவுக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆட்சியை காப்பாற்ற துடிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க.விடம் நட்புடன் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், நிச்சயம் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒருநாள் துரோகம் செய்வார். எங்களால் இந்த ஆட்சிக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படாது. ஆனால் அவர்களை ஆட்சியை அழித்துவிடுவார்கள்” என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/99656-just-wait-for-two-days-sasikala-orders-dinakaran.html

  • தொடங்கியவர்

கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன: அதிமுக அணிகள் ஓரிரு நாளில் இணையும் - முதல்வர் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக அறிவிப்பு

 

 
edapadiops

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதையடுத்து பழனிசாமி - ஓபிஎஸ் அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்காக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து இரு அணிகள் இடையேயான இணைப்பு முயற்சிகள் தீவிரமடைந்தன.

 

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தை மூத்த அமைச்சர்கள் நேற்று முன்தினம் காலை சந்தித்து பேசினர். அன்று மாலையில் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பிறகு இணைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதே நேரத்தில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அணிகள் இணைப்பு பற்றி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது. இதனால், ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பூங்கொத்துகளுடன் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திலும் பலர் கூடினர்.

ஆனால் எதிர்பார்த்தபடி அணிகள் இணைப்பு நடக்கவில்லை. இதனால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதில் இரு அணிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்சிப் பொறுப்புகள், அமைச்சரவை இடங்களை பகிர்ந்து கொள்வதில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என ஓபிஎஸ் அணியின் சில தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

‘‘டிடிவி தினகரன் அணியினரின் செயல்பாடுகளால் முதல்வர் பழனிசாமி அணிக்குதான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், அணிகளை அவசரமாக இணைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். நமக்கு எந்த அவசரமோ, நெருக்கடியோ இல்லை. எனவே ஆட்சியிலும், கட்சியிலும் நமது அணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைத்த பிறகே அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரது அணியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதம் நீண்டுகொண்டே போனது. கட்சியின் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நள்ளிரவு வரை ஓபிஎஸ் கேட்டதால் நேற்று முன்தினம் இரவு அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை.

 

ஓரிரு நாளில் அறிவிப்பு

இந்நிலையில், அணிகள் இணைப்பில் 2 அணிகளுக்கும் இடையே தடையாக இருந்த பல அம்சங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எங்களால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. அணிகள் இணைப்புக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு எட்டப்படும்’’ என்றார்.

அதேபோல திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, ‘‘இரு அணிகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு நாளில் 2 அணிகளும் இணையும்’’ என்று தெரிவித்தார்.

 

நாளை அறிவிப்பு?

மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சிகள் வாசுதேவநல்லூரில் இன்று நடக்கின்றன. அதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னை திரும்பியவுடன் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. நாளை அமாவாசை என்பதால், இணைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷா 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அதற்கு முன்பாக அணிகள் இணைக்கப்பட வேண்டும் என தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அணிகள் இணைப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் அது அக்கட்சியின் உள்விவகாரம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19528311.ece?homepage=true

  • தொடங்கியவர்

இழுபறியில் இணைப்பு முயற்சி! உள்துறையை ஓ.பன்னீர்செல்வம் குறிவைப்பது ஏன்?

 

பழனிசாமி- பன்னீர் செல்வம்

“இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் இணைப்பு குறித்த அறிவிப்பு வந்துவிடும்” என்று பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் சமாதியில்  ஆரம்பித்த தர்ம யுத்தத்தை அதே சமாதியின் முன்பு முடித்துக் கொள்ள ஆசைபட்ட பன்னீர் தடாலடியாக பின்வாங்கி நிற்க என்ன காரணம்?...ஜெயலலிதாவின் சமாதி சீர்செய்யப்பட்டு போலீஸார் மெரீனா வீதியில் பாதுகாப்பு அணிவகுப்பும் நடத்திய பின் திட்டம் கடைசி நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைப்புதிட்டம் காலியானதற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது  கசியத் துவங்கியுள்ளன.

“அணிகள் இரண்டும் இணையவேண்டும். இனி டெல்லிக்கு தனித்தனியே வரக்கூடாது” என்று பெரிய அண்ணன்தனத்தை டெல்லி பி.ஜே.பி தரப்பு காட்டியது, இரண்டு அணிகளுக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் மேலுாரில் தினகரன் நடத்திய பொதுக்கூட்டமும், அதில் கணிசமான அளவில் எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதும் எடப்பாடி தரப்புக்கு  நெருக்கடியை ஏற்படுத்தியது. தினகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் சிலரை எடப்பாடி  தொடர்பு கொண்டு சில தினங்களுக்கு முன்பு பேசியுள்ளார். 

அவர்கள் “ ஆட்சியை கவிழ்க்கும் எண்ணத்துடன் நாங்கள் போகவில்லை். அன்பினால் போனோம், நீங்களும் அன்பாக அழையுங்கள், வருகின்றோம்” என்று தங்கள் தரப்பின் 'எதிர்பார்ப்பை' சொல்லியுள்ளார்கள். அதன்பிறகு தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை 'சரி செய்யும்' பணியை மூத்த அமைச்சர் ஒருவரிடம்  ஒப்படைத்தார் எடப்பாடி. அதே நேரம் 'பன்னீர் அணியின் இணைப்பை ஓருவாரத்திற்குள் முடித்துவிடவேண்டும்'  என்ற அஜென்டாவும் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்ட நான்கு மூத்த அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்களுடன் பன்னீர் தரப்பிலிருந்து ஆரம்பத்தில் மாஃபா.பாண்டியராஜன் தான் தொடர்ந்து பேசிவந்துள்ளார். பன்னீர் அணியின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இணைப்பு சாத்தியமில்லை என்ற தகவல் எடப்பாடிக்குச் சென்றது. அதன் பிறகு தான், அதிரடியாக தினகரன் பதவி செல்லாது என்று முதலில் அறிவித்தார்கள். அதன்பிறகு பன்னீர் அணியினர் இறங்கிவருவார்கள் என்று எடப்பாடி அணியினர் எதிர்பார்த்தனர். ஆனால், பன்னீர் அணியின் மைத்ரேயன், முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர்  நமது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினால் மட்டுமே இணைவோம்” என்று சொல்லி அப்போதே இணைப்புக்கு தடை ஏற்படுத்தினார்கள். 

ஆனால், அதன்பிறகு தினகரன் தரப்பின் செயல்பாடுகள் வேகமெடுத்தது. டெல்லி 'மேலிடம்' ஓ,பி.எஸ் தரப்பை தொடர்பு கொண்டு எதனால் இணைப்பு தள்ளிப்போகிறது என்று கேள்விமேல் கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். எடப்பாடி தரப்புக்கும் பிரஷர் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒருநாள் மாலை எடப்பாடி வீட்டில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இரவு நெடுநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அந்த ஆலோசனையில் தான் “ஓ.பி.எஸ். தரப்பு வைத்திருக்கும் நிபந்தனைகளால் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை.அதை நிறைவேற்றிவிட்டு அவர்களை இணைவதற்கு வழி ஏற்படுத்துவோம்” என்று பேசியுள்ளார்கள். கட்சியில் ஓ.பி.எஸ்-க்கு முக்கிய பொறுப்பினை வழங்கிவிடுவோம் என அப்போது  ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த தகவல் பாண்டியராஜன் மூலம் பன்னீருக்கு சென்றுள்ளது. 

பன்னீர்செல்வம்


கட்சியை நடத்த வழிகாட்டு குழு அமைக்கப்பட்டால், அதில் இரண்டு அணிகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கவேண்டும். அதே போல் அமைச்சரவையில் மூன்று பேருக்கு தங்கள் தரப்பில் இடம் தரவேண்டும் என்ற  நிபந்தனை பன்னீர் தரப்பிலிருந்து சென்றது. பன்னீருக்கும், பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி தருகின்றோம். முனுசாமிக்கு கட்சியில் முக்கிய பதவியை தருகின்றோம் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். இறுதியாக வெள்ளிக்கிழமை காலை அன்று பன்னீர் தரப்பு பொதுப்பணித் துறை, உள்துறை, நிதித்துறை, உள்ளிட்ட துறைகளை தர ஒப்புக்கொண்டால் இன்று இரவே இணைப்பை அறிவித்துவிடலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால், பழனிசாமி தரப்பில் 'பொதுப்பணித்துறையை விட்டு தரமுடியாது. நெடுஞ்சாலைத் துறையை தருகின்றோம். நிதித்துறையும், வீட்டுவசதித் துறையும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லியுள்ளார்கள். பழனிசாமி சொன்ன தகவலை வைத்து பன்னீர் வீட்டில்  வெள்ளிக்கிழமை மதியம் வரை ஆலோசனை செய்துள்ளார்கள். உள்துறையை விட்டுக்கொடுக்க வேண்டாம், என்று பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அவர்கள் கைக்குள் இருப்பதுபோல, காவல்துறை நம்கைக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் நமக்கு பலம் என்று பன்னீரிடம் சொல்லியுள்ளார்கள். வழிகாட்டுதல் குழுவில் முக்கிய பொறுப்பு முனுசாமிக்கு வேண்டும், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பதினோரு நபர்களுக்கும் பதவிகள் வேண்டும் என்பதையும் பழனிசாமி தரப்பிடம் சொல்லியுள்ளார்கள். பன்னீர் அணியினர் எப்படியும் இணைந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் முதல்வர் அலுவலகத்திலிருந்தே, ஜெயலலிதா சமாதியை  அலங்கரிக்கும் உத்தரவு வந்துள்ளது. 

ஆனால், மாலையில் பன்னீர் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. அதே நேரம் எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் ஆலோசனை நடைபெற்றது. இரண்டு தரப்பிலும் போனில் தகவல்களை பறிமாறிக்கொண்டார்கள். உள்துறையை மட்டும் கேட்க வேண்டாம் என்று எடப்பாடி அணியில் இருந்து வைத்த கோரிக்கை பன்னீர் அணியில் ஏற்றுக்கொள்ளவில்லலை. நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக பொதுப்பணித்துறையை தருகின்றோம் என்று பழனிசாமி தரப்பு இறங்கிவந்துள்ளார்கள். ஆனால், உள்துறையும் ஏனைய  பதவிகள் குறித்தும் எங்களுக்கு ஒப்புதல் வழங்கினால் தான் நாங்கள் வீட்டில் இருந்தே புறப்படுவோம் என்று பன்னீர் அணியினர் சொல்லிவிட்டார்கள். பன்னீர் அணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வேலுமணி ஒருகட்டத்தில் கடுப்பாகி, 'அவர்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களிடம் நாம் தனியாகவே பேசிக்கொள்ளலாம், பதவியில் இல்லாதவர்கள் தான் இப்போது இணைப்பை தள்ளிப்போடுகிறார்கள்' என்று புலம்பியுள்ளார்கள்.

ஜெயலலிதா சமாதி

 

 
சனிக்கிழமை காலை பன்னீர் செல்வம் “ இணைப்புக்கு நமது அணியிலே ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், டெல்லியில் இருந்து பிரஸர் வந்துகொண்டே இருக்கிறது. நாமும் கொஞ்சம் இறங்கி போவோம்” என்ற தனது ஆதரவாளர்களிடம் சொல்லியுள்ளார். அருகில் இருந்த மைத்ரேயன் “ பிரதமரிடம் நான் பேசுகின்றேன். நீங்கள் அவசரப்பட்டு இறங்கி செல்ல வேண்டாம்” என்று சொல்லியுள்ளார். “உள்துறையை வாங்காமல் நாம் இணைப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டாம். செம்மலைக்கும் மந்திரி பதவியை பெற்றுவிடவேண்டும்” என்ற முடிவில் பன்னீர் அணியில் சொல்லியுள்ளார்கள்.உள்துறையை விட்டுகொடுக்க பன்னீர் மறுப்பது ஏன் என்று எடப்பாடி அணிக்கு எச்சரிக்கை உணர்வு எட்டிபார்த்துள்ளது. இதனால் மீண்டும் இரு அணிக்குள் அடுத்த சுற்றுபேச்சுவார்த்தைகயில் இரண்டு முக்கிய நபர்கள் இறங்கியுள்ளார்கள். துறை மாற்றம் ஓ.கே.வானால் இணைப்பு அறிவிப்பு நாளை மறுதினமே வந்துவிடும் என்கிறார்கள். 

உள்துறையால் இப்போது இணைப்பு தள்ளிப் போகின்றது

 

 

http://www.vikatan.com/news/politics/99661-home-deparment-this-is-the-reason-behind-the-war-with-eps-and-ops.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.