Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருப்புடா திரை விமர்சனம்

Featured Replies

 
card-bg-img
 

விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அனைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள்.

ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபுவின் நண்பர் ஒருவரை ஒரு ரவுடி வம்புக்கு இழுக்க, அவர் அந்த ரவுடியை கீழே தள்ளிவிடுகின்றார்.

அந்த ரவுடி கீழே விழும் போது தலையில் அடிப்பட்டு இறந்துபோகின்றார். அதை தொடர்ந்து தான் தெரிய வருகின்றது அந்த ரவுடி சென்னையை கலக்கும் புலியத்தோப்பு ரவியின் நண்பர் என்று.

இதன் பிறகு விக்ரம் பிரபு அவருடைய நண்பர்கள் அந்த ரவுடியிடம் இருந்து தப்பித்தார்களா? தீயனைப்பு வீரர்கள் ஆனார்களா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் பிரபு வரவர கதைத்தேர்வில் மிகவும் கவனம் இழப்பது போல் தெரிகின்றது. தான் 10 பேரை அடிக்க வேண்டும் என்று சொன்னால் ஓகே சொல்லிவிடுவார் போல, இதுநாள் வரை கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என கதையின் நாயகனாக இவர் நடித்தது தான் வெற்றி பெற்றுள்ளது. அதை கொஞ்சம் அவர் மனதில் கொண்டு அடுத்த படத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்.

படம் ஆரம்பித்து 5 நிமிடம் நெருப்புடா செம்ம சூடாக செல்கின்றது, அதன் பின் நிக்கி கல்ராணியை பார்த்தவுடன் காதல், மொட்டை ராஜேந்திரனின் சிரிப்பே வராத காமெடி என படம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு வழியாக புலியத்தோப்பு ரவி தன் நண்பனை கொன்றவனை கொன்றே தீருவேன் என சபதம் எடுக்க, இனி படம் பட்டையை கிளப்பும் என இரண்டு காட்சிகள் நகர்ந்தால் மூன்றாவது காட்சி பழையப்படி புஸ் என்று ஆகின்றது.

படத்தின் டுவிஸ்ட் கொஞ்சம் கவனம் ஈர்க்கின்றது, ராஜசேகரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது, ஷான் ரோல்டன் பின்னணி இசை சூப்பர்.

க்ளாப்ஸ்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் ஒர்க்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

படத்தின் கதை ஓகே என்றாலும் திரைக்கதை நகர முடியாமல் மெதுவாகவே செல்கின்றது.

மொத்தத்தில் டைட்டிலில் உள்ள நெருப்பு படத்தின் திரைக்கதையில் இல்லவே இல்லை.

http://www.cineulagam.com/films/05/100860?ref=review_section

  • தொடங்கியவர்

தனியார் தீயணைப்பு படை தீயாக வேலை செய்திருக்கிறதா? - நெருப்புடா விமர்சனம்

 
 

`தீயணைப்பு வீரனாக வேண்டும்' என்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்ட ஐந்து இளைஞர்கள். அவர்களது லட்சியம் நிறைவேறியதா அல்லது தாறுமாறாகத் தடம் மாறியதா என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது `நெருப்புடா'.

நெருப்புடா

 

சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்களும். சிறுவயதிலேயே ஐவருக்கும் தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்ற ஆசை, மனதில் தீயாய்ப் பற்றி எரிகிறது. வளர்ந்து வாலிபர்களான பிறகு, தனியாகத் தீயணைப்பு வண்டிவைத்து தன்னார்வமாகத் தீயணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். தீயணைப்புத் துறை வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் திடீரென ஒரு `விபத்து' நடக்கிறது. எதிர்பாராத ஒரு கைகலப்பில் பிரபல ரௌடியான மதுசூதனன் ராவின்  நண்பன் வின்சென்ட் அசோகன் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு ரெளடி - நண்பர்கள் இடையிலான துரத்தல்கள்தான் கதை. 

விக்ரம்பிரவுக்கு, கதாநாயகனாக இது 10-வது படம். நடிப்பில் அதற்கேற்ற முதிர்ச்சியும் தெரிகிறது. `எங்க வேலை ஒரு உசுர எடுக்கிறது இல்லை; உசுர காப்பாத்துறது' என சில நேரங்களில் அடங்கிப்போவதும், தன் நண்பர்களின்மேல் யாரேனும் கை வைத்தால் முஷ்டியை முறுக்கிக்கொண்டு கிளம்புவதுமாக ரணகளப்படுத்தியிருக்கிறார். விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வரும் வருண், `கயல்' வின்சென்ட், ராஜ்குமார் ஆகியோர் வந்துபோகிறார்கள். 

`மாநகரம்', `பண்டிகை' வரிசையில் இந்தப் படத்திலும் அதே `தாதா' கதாபாத்திரம் மதுசூதனன் ராவுக்கு. சமயங்களில் தெலுங்குப் பட வில்லனைப்போல ஓவராக சவுண்டுவிடுகிறார். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வருவதைப்போல இரண்டு டூயட் ஆடி, க்ளைமாக்ஸில் ஹீரோ காப்பாற்றுவதற்காகக் கைகள் கட்டப்பட்டுக் காத்துக்கிடக்கிறார் நிக்கி கல்ராணி. துப்புரவுத் தொழிலாளியாகவும் விக்ரம்பிரபுவின் அப்பாகவும் பொன்வண்ணன் பாவமோ பாவம். `நான் கடவுள்' ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். `ஆடுகளம்' நரேன், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் படத்தில் `ஆஜர் சார்' சொல்கிறார்கள். 

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, பொதுவான கமர்ஷியல் பட ஃப்ளேவரிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம், காட்சிக்குக் காட்சி தீயாக வேலைசெய்திருக்கும் ராஜசேகரின் ஒளிப்பதிவுதான். தீப்பற்றி எரியும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், நண்பர்கள் ஐவரையும் ஒரே ஃப்ரேமில் அடக்க நினைத்து, ஒரே மாதிரியான ஆங்கிள்கள் ரிப்பீட் அடித்திருக்கின்றன. படத்தின் ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காதவண்ணம் வேலைபார்த்திருக்கிறது படத்தொகுப்பாளர் தியாகுவின் கத்தரி. சூப்பர் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. 

நெருப்புடா

எல்லா காட்சிகளும் வித்தியாசமாக ஆரம்பித்து, வேறுவிதமாகப் பயணித்து, தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால மரபுப்படியே ஏதேனும் ஒரு க்ளிஷேவில் முடிவது, தட் `ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு, ஃபினிஷிங் சரியில்லையே' மொமன்ட். படத்தின் வில்லன் புளியந்தோப்பு ரவி (மதுசூதனன் ராவ்)க்கு போலீஸ், ரௌடி என எல்லோரும் வசனம் பேசியே செம பில்டப் ஏற்றுகிறார்கள். ஆனால்  அவரோ, ஆவேசமாக காரைக் கிளப்பி, புளியமரத்தில் மோதுகிறார்; விக்ரம்பிரபுவின் ஒரே அடிக்குக் கீழே விழுகிறார்; எதிர்பாராத `வில்லன்' கதாபாத்திரத்தால் எதிர்பாராமல் தீர்த்துக்கட்டப்படுகிறார். என்னதான் ஆச்சு இந்த வில்லனுக்கு?

இதற்கிடையில், ``தலைமறைவாக இருக்கும் புளியந்தோப்பு ரவி வெளியே வரட்டும், என்கவுன்டர்ல போட்டுடுவோம்" என்று அடிக்கடி சொல்லும் போலீஸ் அதிகாரி நரேனோ, ரூமைவிட்டு வெளியே வரவேயில்லை. `புளியந்தோப்பு ரவி'யோ சென்னையின் பல இடங்களில் தாராளமாகச் சுற்றித் திரிவதோடு, மொட்டைமாடிக்கு வந்து நடுராத்திரி விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டும் போகிறார்.  தமாசு... தமாசு! வில்லனின் நண்பன் இறந்துவிடுவதால்தான் அவர் `வெளியே' வருவார் என்கிறார் போலீஸ் ஆபீஸர் நரேன். ஆனால், மதுசூதனனோ செத்த நண்பனுக்கே சுடுகாட்டில் கொள்ளி போடுகிறார். ஆனால், அங்கே போலீஸ் மிஸ்ஸிங், லாஜிக்கும்கூட. 

ஒட்டுமொத்த படத்துக்குள் குறைந்தது ஐந்து இடங்களிலாவது `சுபம்' போட்டு முடிக்கலாம். ஒரு கதைக்குள்ளேயே பல கதைகள் ஆரம்பித்து முடிகின்றன. எப்போது எழுந்து வந்தாலும் படம் முடிந்திருக்கும் ஃபீல்தான். அத்தனை க்ளைமாக்ஸ் படத்தில். ``எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு தெரிஞ்சு வெச்சு அடிச்சிருக்கான்டா", ``நான் சொல்லலை... இந்த ரிப்போர்ட் சொல்லுது'', ``என் இத்தனை வருஷ சர்வீஸ்ல..." என்று பழைய வசனங்களில் சுள்ளி கொளுத்தி விளையாடியிருக்கிறார்கள். 

விக்ரம்பிரபுவும் அவரது நண்பர்களும் தனியாக ஒரு தீயணைப்பு வண்டி வைத்து, யூனிஃபார்மும் போட்டுக்கொண்டு தீயணைக்கப்போவது எல்லாம் எந்த நாட்டில் சார் நடக்கும்? க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆனால், அதில் அர்த்தமும் இல்லை; அழுத்தமும் இல்லை. 

 

பரபரப் பட்டாசாக வெடிக்காமல் புஸ்வாணமாகப் போய்விடுவதால், நெருப்பு இல்லாமல் புகைய மட்டுமே செய்கிறது. 

http://cinema.vikatan.com/movie-review/101732-neruppuda-movie-review.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: நெருப்புடா

 

 
neruppudareviewjpg

சிறு வயதில் இருந்தே, தீயணைப்பு வீரர் ஆகும் கனவோடு வளர்கிறார் விக்ரம் பிரபு. அவரது 4 நண்பர்களும் அப்படியே. சொந்தமாக தீயணைப்பு வண்டியை வைத்துக்கொண்டு, எங்கு தீப்பிடித்ததாக தகவல் கிடைத்தாலும் உடனே ஓடிச்சென்று அணைக்கின்றனர். இதை வெகுவாகப் பாராட்டும் தீயணைப்பு அதிகாரி நாகிநீடு, இவர்களுக்கு தீயணைப்புத் துறையில் வேலை வாங்கித்தர விரும்புகிறார். கூடவே, நாகிநீடுவின் மகளான நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு மீது காதலும் மலர்கிறது. இந்நிலையில் விக்ரம் பிரபுவின் நண்பர் வருண், எதேச்சையாக ஒரு ரவுடியுடன் மோதுகிறார். அதில், ரவுடி இறக்க, விக்ரம் பிரபு அன் டீம் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அவர்களது கனவு, காதல் நிறைவேறியதா? என்பது கதை.

ஆக்சன் பின்னணியில் காதல், பாசம், சேவை மனப்பான்மை என்று சுழலும் திரைக்கதை. தீயணைப்பு வீரர்களின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை முதல் காட்சியில் அழகாகச் சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்குநர் அசோக் குமார். பற்றியெரியும் குடிசைகளில் இருந்து குழந்தைகள், முதியவர்களை விக்ரம் பிரபு காப்பாற்றும்போது பரபரப்பும், பதற்றமும் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. ஆனால், அந்தக் காட்சியோடு, பரபரப்பும், சுவாரசியமும் நம்மிடம் இருந்து விடைபெற்றுவிடுகின்றன.

தனது உயரம், ஆக்சனால் பாத்திர வார்ப்புக்குச் சரியாகப் பொருந்துகிறார் விக்ரம் பிரபு. நண்பர்களுக்காக வாழ்வது, ரவுடியுடன் நெஞ்சை நிமிர்த்தி மோதுவது, பார்த்தவுடன் காதல் நெருப்பு பற்றிக்கொள்வது என ஸ்கோர் செய்கிறார். மருத்துவ மாணவியாக வரும் நிக்கி கல்ராணிக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையை இயக்குநர் கொடுக்கவில்லை. விக்ரம் பிரபுவின் அப்பா பொன்வண்ணன், கழிவுநீர் அகற்றும் தொழிலாளியாக சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். அவர்கள் இடையிலான தந்தை – மகன் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.

படத்தின் க்ளைமாக்ஸில் திருநங்கையாக வந்து வெடிக்கிறார் சங்கீதா. தோற்றம், பாவனை, உடல்மொழியில் பாத்திரத்துக்கு நன்கு பொருந்தி நடித்திருக்கிறார். ஆனால், அத்தனை ரவுடிகளையும் ஓரே இடத்தில் கொலை செய்வது நம்பும்படி இல்லை. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இன்னும் எத்தனை காலத்துக்குதான் மொக்கை காமெடிகளை செய்யப்போகிறாரோ தெரியவில்லை. ‘ஆடுகளம்’ நரேன் விரைப்பான போலீஸ் கமிஷனராக வருகிறார். ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்யவேண்டும் என முடிவெடுக்கும் அவர், ஒரு அறைக்குள் அமர்ந்துகொண்டு வெறும் பேச்சளவிலேயே இதைப் பேசிக் கடத்துவது, படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. திடீர் மோதலில் இறக்கும் ரவுடி, அவருக்காக துடிதுடிக்கும் மற்றொரு ரவுடி என்று படத்தில் திருப்பம் கொடுக்க முயற்சித்து உள்ளே வரும் புதிய கதாபாத்திரங்கள் அனைத்தும் சுவாரசியமின்றி நகர்வது பெரிய பலவீனம்.

ஷான் ரோல்டனின் இசையில், ‘ஆலங்கிளியே..’ பாடல் தாளம் போட வைக்கிறது. தீ ஜுவாலையை உஷ்ணம் குறையாது படம்பிடித்துள்ளார்ஆர்.டி. ராஜசேகர். சிலேட்டர்புரம் ஏரியா பின்னணியில் ஆங்கிலேயர் கால மணிக்கூண்டு கோபுரத்தை வடிவமைத்த கலை இயக்குநர் எம்.பிரபாகரனின் உழைப்பும், ரசனையும் அழகு.

‘பற்றியெரிகிற நெருப்பு என்னத்த வேணாலும் எடுத்துட்டுப் போகலாம். ஆனா ஒரு உயிரைக்கூட எடுத்துக்கிட்டுப் போக விடமாட்டோம்’ என்று நெருப்போடு பயணிக்கும் இளைஞர்களின் வேகம், அரைமணி நேரத்துக்கு ஒருமுறை வலிய திணிக்கப்பட்ட ட்விஸ்ட்களால் வேகம் இழந்து நகர்கிறது. தலைப்பில் இருந்த ‘நெருப்பை’ திரைக்கதையே தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டது!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19654839.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.