Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்

Featured Replies

இன்றைய ஆளும் அதிகாரத்தரப்பில் பதவி வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் இந்நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை என்பதே தனது கணிப்பு என்று அண்மையில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. "இல்லை பிரச்சினைகள் பலவுள்ளன. தீர்க்கப்பட வேண்டிய அவை தீர்க்கப்பட்டாலேயே நாட்டில் சமத்துவம் கட்டிக்காக்கப்படும். தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முடிவுகட்டப்பட வேண்டும்' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டி, தமது நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கு உள்ளது. அது தமிழர் தரப்பால் உரியபடி ஆற்றப்படுவதாக இல்லை.

இலங்கையின் அரசியலரங்கை ஆராயும்போது, பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் தமிழரல்லாத மற்றைய சிறுபான்மையினத்து அரசியல்வாதிகளுக்கும் அரசியல் அதிகாரம் பெற்றுக்கொள்வதற்கான இறுதி ஆயுதமாக தமிழர் எதிர்ப்பு, தமிழர் விரோத கொள்கைகளே உள்ளமை மிகத் தெளிவான உண்மை.

இதுவே தொடர்ந்துவரும் எழுபது ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாறாகவும் உள்ளது. இதில் மாற்றம் செய்து தமிழரையும் அணைத்துச் செயற்பட்டால் நாட்டு மக்களிடம், தமிழரல்லாத மக்களிடம் எதைக் கூறி வாக்குக் கேட்பது என்ற சிக்கல் எற்படுகின்றது. இந்நாட்டின் அரசியலுக்கு அடித்தளமாக இருப்பதே தமிழர் விரோதக் கொள்கையே என்பது யதார்த்த நிலை. இந்நிலை மாறும்; மாற்றப்படும் என்று எதிர்பார்க்க முடியாத நிலைமையே இன்றும் காணப்படுகின்றுது.


நாட்டில் தமிழ் மொழிக்கும், சிங்கள மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்று 1955 அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரேரணை  கொண்டுவந்த அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி என்.எம். பெரேராவும் அதேபோல் 1956 ஜூன் 6 ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு மொழியென்றால் இரு நாடுகள். இரு மொழியென்றால் ஒரு நாடு என்றும் நாட்டில் தமிழ் மொழிப் புறக்கணிப்பால் பின்னாளில் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்றும் பாராளுமன்றத்தில் எச்சரித்த கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வாவும் தமது தமிழர் சார்பான கொள்கை மாறி, தமிழர் விரோதப் போக்கை முன்னிருத்தி அரசியல் செய்ய முற்பட்டமையும் இந்நாட்டில் சிந்திக்க வேண்டிய வரலாற்றுப் பாடமாகவுள்ளது.

இன்று பர்மா என்ற மியன்மார் நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நம்நாட்டிலும் இடம்பெறுகின்றது. அதே நிலை அன்று தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றபோது மௌனித்தும், ஆதரித்தும் இருந்தவர்கள் இன்று எங்கோ தொலைவிலுள்ள நாட்டில் அன்று தமிழர் அனுபவித்த அது போன்ற கொடுமைகள் மனிதத்துவத்துக்கு எதிரானவை என்று கூப்பாடு போடும் புதுமையான நிலைமையை நாகரிக சிந்தனையின் வெளிப்பாடு என்பதா? எதுவுமே புரியவில்லை.


நாட்டின் அரசியல் யதார்த்த நிலை இவ்வாறுள்ளபோது தமிழர் அரசியலின் இன்றைய நிலை ஆரோக்கியமாயுள்ளதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆராய வேண்டும் அது காலத்தின் தேவையாகவுமுள்ளது. நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது நாகரிகமானது, வரவேற்கத்தக்கது. இருப்பினும் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகளையும் தற்போதைய கள நிலையையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் நலன் பேணும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது நமது தமிழ் அரசியல்வாதிகளின் தவிர்க்கவொண்ணாப் பொறுப்பாகும். அதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.


உரிமைகளைக் கேட்டுக் குரல் கொடுப்பது இனவாதமுமல்ல. பிரிவினைவாதமுமல்ல. அதனை மறுப்பதே, அதற்கெதிராகச் செயற்படுவதே பிரிவினைவாதம். இதைப் புரிந்துகொள்ளாதது நம் நாட்டின் சாபக்கேடு. இதுவே இன்று சர்வதேச மட்டத்தில் விசாரணைக்குரிய நாடாக நம் நாட்டை ஆக்கிவிட்டமை உணரப்பட வேண்டும்.
எது எவ்வாறாயினும், இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் எவை என்பதைக் குறைந்தது நமது தமிழ் அரசியல்வாதிகளாவது புரிந்துகொண்டுள்ளனரா என்ற ஐயம் காணப்படுகின்றது.

நமது தமிழ் அரசியல்வாதிகளின் நாளாந்த செயற்பாடுகள், கருத்துக்கள் அதையே பகிரங்கப்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும். மக்களைத் தமது நலனுக்காகப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவது மன்னிக்க முடியாத, கீழ்த்தரமான செயற்பாடு என்பதையும் வரலாறு பதிவேற்றும்.


தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவமாக வாழ வேண்டுமானால் அவர்களுக்குரிய மொழியுரிமையைத் திருப்திகரமாக அனுபவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இன்று அரசியலமைப்பின் மூலம் மொழியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று நியாயம் கற்பிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது சாத்தியமற்றதாகவேயுள்ளது.

இந்நாட்டின் பெரும்பான்மை அரசியல்வாதிகளோ, மற்றைய சிறுபான்மை அரசியல்வாதிகளோ, சில அரச அதிகாரிகளும்கூட தமிழ் மொழிக்கு உரிமை வழங்கப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற தமிழ் மொழித் தின விழாவின்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட முன்வந்தபோது அதைத் தடுத்து சிங்களத்தில் பாடுமாறு கட்டளையிட்டவர் சிங்களவரல்லாத, தமிழரல்லாத ஒரு அரச அதிகாரியே என்பதும் பதிவிலுள்ளது.

இவ்வாறுள்ள நிலையில் இனவுறவு ஏற்பட வழியில்லை. சிந்திக்க வேண்டும் இவ்வாறான இனவெறி, மொழிவெறிப் பயங்கரவாத, பிரிவினைவாதிகளே இந்நாட்டில் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரத் தடையாயுள்ளமை தமிழர் தரப்பால் மட்டுல்ல, நல்லெண்ணம் கொண்ட பெரும்பான்மையினத்தவராலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.


தமிழ் மொழிக்கு நாட்டில் அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன என்பதை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் உரிய முறையில் அதிகாரத் தரப்பினரிடம் எடுத்துக்கூறி, நிவாரணம் கோரியதை அண்மைக்காலமாக காண முடியாதுள்ளது. மொழியென்பது இனத்தின் மூச்சு. மூச்சு விட முடியாதவன் பிணத்திற்குச் சமனானவன். தமிழ் மொழியின் பயன்பாட்டுரிமையை அனுபவிக்க முடியாத தமிழன் அல்லது தமிழினம் பிணத்திற்கு ஒப்பானது. இதை நமது தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பிலுள்ளதென்று திருப்தியடைய முடியாது. அது கூடவும் கூடாது.


நாட்டில் தமிழ்க் கல்வித்துறையில் பல பின்னடைவுகள் காணப்படுகின்றன. அவற்றில் சில, திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நமது தமிழ் அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லையா? தமிழர் கல்வியின் இன்றைய நிலை தொடர்பில்  அண்மைக்காலமாக பொறுப்புடன் அவதானித்து குறைகளைச் சுட்டிக்காட்டிய தமிழ் அரசியல்வாதிகளைச் சல்லடை போட்டுத் தேடியும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. நாட்டில் தமிழர் கல்வி நிலை முன்னோக்கி நகர முடியாதுள்ளது. பல தடைகள் உள்ளன.

கல்வியென்பது ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ள சொத்து. பதினாறு வயது வரை கட்டாயம் கல்வி, உரிய உயரிய சமத்துவக் கல்வியென்பது நாட்டின் தேசிய கல்விக் கோட்பாடு. இக்கோட்பாடு உரியபடி செயற்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது நமது தமிழ் மக்கள் பிரதிநிதிகளின், அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். இவை பற்றி ஆராயும் ஆற்றல் அற்றவர்களா  நமது தமிழ் அரசியல்வாதிகள் என்று வெதும்ப வேண்டியுள்ளது, வேதனைப்பட வேண்டியுள்ளது.  உண்மை சுடும். ஆனால் அதைக் கூறியேயாக வேண்டும். உரிய, உயரிய கல்வியைப் பெறும் வசதி வாய்ப்பு இல்லாத நிலையில் நமது எதிர்கால சந்ததியின் நிலைமை எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.


அதேபோல் தமிழர்கள் தொழில்துறையில், குறிப்பாக அரச தொழில்துறையில் புறக்கணிக்கப்பட்டு வருவது நமது தமிழ் அரசியல்வாதிகளுக்குப் புரியாதுள்ளதா? அண்மையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தெரிவான நூற்றுப் பதினெட்டுப் பேரில் தமிழர்கள் மூவர் மட்டுமே அடங்கியுள்ளமை வெளிப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஒருவரும் நுவரெலியாவில் இருவருமே அவர்கள். வடக்கு, கிழக்கு மாகாணத்திலோ நாட்டின் வேறெந்தப் பகுதியிலோ கல்வி நிர்வாக சேவைக்குத் தகைமையுடைய தமிழரெவரும் இல்லையா? யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பில் ஒருவர்கூட இல்லையா? தமிழர் கல்வியின் பின்னடைவுக்கு, புறக்கணிப்புக்கு இதை எடுத்துக்காட்டாகக் கொள்வதில் தவறில்லையல்லவா?


வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இடம்பெயர்வுகளாலும் இடம் பெயர்க்கப்பட்டமையாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்து அகதி வாழ்வு வாழ்பவர்களுக்கு உரிய குடியிருப்பு வசதிகள் செய்யப்படாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்யப்படுவது வெளிப்படுகின்றது. தமிழரல்லாத சமூகத்தவருக்கான குடியிருப்பு தேவைகள் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. தமிழர் தரப்பும் அது பற்றி குரலெழுப்புகின்றது.

ஆனால் வீடின்றி அவதிப்படும் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தமது சுயநல நோக்கிற்காகப் பயன்படுத்துகின்றார்கள். தமிழ் மக்களின் வேதனையில் தமது சுய செல்வாக்கை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றார்கள் நம் அரசியல்வாதிகள் என்று மக்கள் கூறுவதைப் புறக்கணிக்க முடியுமா?


 தமிழ் மக்கள் இது போன்ற இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தெரிந்தோ தெரியாமலோ, ஏனைய சமூகத்தின் அரசியல் வாதிகள் செயற்படுகின்றார்கள். கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இவற்றிற்குப் பதில் கூறும் தகைமை அற்றவர்களாக நம்மவர் இருப்பது வேதனைக்குரிய, வெட்கப்பட வேண்டியதாகவுமுள்ளது.


தற்போது தமிழர் தரப்பில் யாரின் காலை வாரிவிடுவதாகவும், எவரை எவ்வாறு கவிழ்ப்பது என்பனவே நோக்காகவுள்ளன. அவ்வாறே செயற்பட்டும் வருகின்றனர். இதை மறுப்பதற்கில்லை. கடந்த எழுபது ஆண்டுகளில் பறிக்கப்பட்ட உரிமைகளை எவ்வாறு மீளப் பெறுவது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய நமது தமிழினத்து மக்கள் பிரதிநிதிகளும்  அரசியல்வாதிகளும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயன்றி விமர்சன அரசியலிலும் எதிர்காலத்தில் எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றுவது?

மற்றத் தமிழனை எவ்வாறு அரசியலரங்கிலிருந்து அகற்றுவது என்று சிந்திப்பதை விடுத்து சமூக நலன் நோக்கி, தமிழர் தேவையறிந்து செயற்பட வேண்டும். அதுவே நாகரிகமாகும். அதைவிடுத்து, தற்போது கடைப்பிடித்து வரும், பயணிக்கும் வழியில் தொடர்ந்து சென்றால் தமிழர் வாழ்வு நலம் பெறாது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். சிந்திக்கும் ஆற்றல், புத்தியிருந்தால் இதை மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.

 

http://www.thinakkural.lk/article.php?article/crbge9jvlx64786a1a681b1613810fbepx826ba2e48fedb229db3b65thfnh

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.